ஞாயிறு, 27 நவம்பர், 2016

உத்தேசிக்கப்பட்டுள்ள தீருவில் நீச்சல் குளமும், நாங்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த தோட்டக்கிணறுகளும்,குளங்களும்


இந்த வருடத்தின்(2016) பதினோராம் மாத ஆரம்பத்தில் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் போது வல்வெட்டித்துறையில் அமையவுள்ள நீச்சல் குளத்திற்கு 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை செய்திப்பத்திரிகையில் பார்த்தபோது எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன. அவை என்ன ஞாபகங்கள் என்று இந்தக் கட்டுரையின் தலையங்கத்தைப் பார்த்தால் தெரியும்.அந்த ஞாபகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு நீச்சல் குளம் சம்பந்தமான தகவல்களைப் பார்ப்போம்.

இந்தச் செய்தியானது valvettithurai.org  இணையத் தளத்தின் மூலம் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டு வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த மாதம் 13ம் திகதி கூட (அதாவது வரவு செலவுத் திட்டத்தின் பின்) இதைப் பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. தெரியாதவர்களுக்கு அந்தச் செய்தி பற்றிச் சுருக்கமாக...........

வல்வெட்டித்துறை நகர சபைக்குச் சொந்தமான இந்தக் காணியில்  சர்வதேசத் தரத்தில் ஒரு நீச்சல் குளத்தை அமைத்துத் தருமாறு முதலில் வேண்டுகோள் விடுத்தது வட மாகாண பாராளுமன்ற உறுப்பினரான திரு சிவாஜிலிங்கம் தான். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த  மற்றும் வேறும் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆழிக்குமரன் ஆனந்தனின் ஞாபகார்த்தமாகவே இதனை அமைத்துத் தருமாறு அவர் முன்பு பதவியிலிருந்த அரச அதிபரான திரு வேதநாயகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் இருவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாக விளையாட்டுத்துறையின் பணிப்பாளரும் வேறு சில அங்கத்தவர்களும்  வந்து தீருவிலைப் பார்வையிட்டுத் தமது சம்மதத்தை வழங்கியிருந்தனர். அதன் பின்னர்  திரு சிவாஜிலிங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் எழுத்து மூலமான சம்மதம் கிடைத்த பின் இதன் பூர்வாங்க வேலைகளை ஆரம்பிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இது தான் அந்தச் செய்தியின் சாராம்சம்.
தீருவில் குளம்....எதிர்காலத்தில் சர்வதேசத் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ள இடம்.
சுற்று வட்டாரத்தில், இயற்கையாகவே அமைந்த, கோவில்களைச்  சாராத, சுற்ற வரக் கட்டுக்கள் இல்லாத குளம் என்றால் அது தீருவில் குளம் என்று தான் நினைக்கிறேன். சிலருக்குக் கெருடாவிலிலுள்ள  விறாய்ச்சிக் குளம் ஞாபகத்துக்கு வருமென்று நினைக்கிறேன். ஆனால் அது அதனுடைய விசாலத்தன்மை காரணமாக அதனை ஒரு சிறிய உள்ளூர் ஏரியாகக் கருத இடமுண்டு.
அதனை நாகரீகமாகத் தீருவில் குளம் என்று சொன்னாலும் ஊர் மக்கள் மத்தியில் அது வேறொரு பெயரில் தான் அழைக்கப்படுகிறது. என்னதான் இப்போது இலங்கை அரசாங்கம் வேறொரு நாட்டிடம் கடன் வாங்கி சர்வதேச தரத்திலான நீசசல் குளத்தைக் கட்டி, அந்தக் கடனை எவ்வாறு கழிக்கப் போகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாலும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அதனை இயற்கைக் கடனைக் கழிக்கத் தான் பயன்படுத்தினார்கள், பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அந்தக் கசப்பான உண்மையே தீருவில் குளம் இன்னொரு பெயரில் அழைக்கப்படுவதற்குரிய காரணமாகும்.
நெடியகாட்டுக் குளத்தின் தற்போதைய தோற்றம்
1988 முதல் 1994 வரை  ஊர் நண்பர்களுடன் பிரதானமாகக் கடலில் நீந்தி வந்தாலும் கூட உபரியாக அல்லது மேலதிகமாக பூச்சிபுத்தான், வேலாகாட், நெற்கொழு, கெருடாவில், கம்பர்மலை போன்ற இடங்களில் அந்தந்த இடங்களைச் நண்பர்களுடன் தோட்டக் கிணறுகளில் குதித்துக் குளித்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. அப்போது சில நண்பர்கள் கடலை, மனைவிக்கும் தோட்டக்கிணறுகளை, சின்ன வீடுகளுக்கும் ஒப்பிட்டுக் கதைத்த கதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஒரு விதத்தில் உண்மை தான்.  வயதான காலத்தில் சின்ன வீடுகளை எல்லாம் விட்டுவிட்டு மனைவியோடு மட்டும் தொடர்பில் இருப்பது போல இப்போது கடலோடு மட்டும் தான் தொடர்பு.
தோட்டக் கிணறுகளில் குதித்துக் குளிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று சிலர் யோசிக்கக்கூடும். நீச்சலில் ஆர்வமுள்ள சிலருக்குக் கடலிலும்,குளங்களிலும் இறங்கப் பயமாக இருந்திருந்ததால் இந்தப் பழக்கம் ஆரம்பித்திருக்கக் கூடும் அல்லது பாய்தல், கரணமடித்தல் போன்ற இன்னபிற சாகசச் செயல்களுக்கு கிணறே ஏற்றது என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நீர்நிலைகளும் ஒவ்வொரு விதமான பரவசத்தைத் தரக் கூடியன.
தோட்டக் கிணறுகளிலுள்ள இன்னுமொரு சாதகம், தனிப்பட்ட தன்மை. அதாவது கடலில், குளங்களில் நாங்கள் நீந்தப் போனால் அங்கு வேறு பல குழுக்களும் நீந்திக் கொண்டிருக்கும். ஆனால் தோட்டக் கிணறுகளில் நாங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கான வாய்ப்பு அதிகம். அத்துடன் தனியே எங்கள் நண்பர்களுடன் இருக்கும் போது தான் புதுப்புது முறைகளில் தயக்கமில்லாமல் பாய்ந்து பழகலாம். மூன்றாம் நபர்களுடன் இருக்கும் போது புதிய முயற்சிகளில் ஈடுபட்டுப் பிழைத்து விட்டால் கோமாளித்தனமாகப் போய் விடும் என்ற தயக்கம் இருக்கும்.
சிவன் கோயில் குளத்தில் இடமிருந்து வலமாக சதீஷ், தீபன், ராஜநந்தன் (எனது தம்பியின் நண்பர்கள்)
இங்கே நாங்கள் பலவிதமான போட்டிகளில் ஈடுபடுவோம். யார் கிணற்றில் குதித்து விரைவாக அடியில் இருக்கும் பெரிய கல்லைத் தூக்கி கிணற்று மேல்மட்டத்துக்குக் கொண்டு வருவது, யார் நீருக்குள் அதிக நேரம் மூச்சடக்கி இருப்பது, யார் கிணற்றை விட்டு அதிக அதிக தூரம் தள்ளி நின்று கிணற்றுக்குள் பாய்வது என்றெல்லாம் பலவிதமான போட்டிகள் நடக்கும். இதை விட, ஒவ்வொருத்தரம் ஒவ்வொரு விதமான முறைகளில் பாய மற்றவர்களும் அதே போல் பாய முயற்சிப்போம். கிணற்றுக்கட்டைக் பிடித்துக் கரணமடித்துப் பாய்தல்,பின் கரணமடித்தல், செத்த வீட்டுப் பாய்ச்சல் முறை,(ஒப்பாரி வைப்பது போல் இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு பாய்தல்), கிணற்றுக் கட்டில் பத்மாசன முறையில் அமர்ந்தவாறு தலைகீழாகப் பாய்தல், இரண்டு கைகளையும் வணங்கியவாறு தலைக்கு மேலே உயரத் தூக்கி, ஒரு காலைத் தூக்கி மற்றக் காலின் தொடையில் வைத்து  விருட்சாசன முறையில் பாய்தல் என்றெல்லாம் விதம் விதமாகச் செய்து பார்போம்.
  சாதாரணமாக நின்று, முன் கரணமடித்துப் பாயும் முறையில் எங்கள் நண்பன் குமரன் பாய்வதைப் பார்க்க எனக்கு மிகவும் விருப்பம். ஆஜானுபாகுவான உடலைக் கொண்டிருந்தாலும் ஒரு முழு வட்டம் சுழன்று கால்கள் கனகச்சிதமாகத் நீருக்குள் இறங்கும் காட்சி அற்புதமாக இருக்கும். நாங்கள் அதைப் பார்த்து மூக்கில் விரல் வைப்போம். நாங்கள் மட்டுமல்ல. குமரனும் கூட. அதாவது ஒரு முழு வட்டம் சுழன்று நீருக்குள் இறங்க முன்பு எப்படியோ குமரனின் கையொன்று மூக்கைப் பொத்திக் கொண்டு விடும். அதே போல் எங்கள் நண்பன் சந்திரகுமாருக்கும் மற்றவர்களால் பாய முடியாத, கண்ணுக்கு விருந்து தரும் கவர்ச்சியான, அருமையான பாய்ச்சல் முறையொன்று இருந்தது. நின்ற இடத்திலிருந்து கால்களால் துள்ளி உயரக் கிளம்பி, சடாரென தலைகீழாகத் தொண்ணூறு பாகையில் திரும்பி தலைகீழாகப் பாயும் முறையை சந்திரகுமார் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது. எங்கள் நண்பன் சேது தலையை இரு பக்கமும் வேகமாகத் திருப்பியவாறு நீந்துவதைப் பார்க்க அழகாக இருக்கும். எங்கள் நண்பன் ராசியின் நீச்சல் இன்னொரு அழகு. நீரை மிகக் குறைவாகச் சிதறச் செய்து பாயும் முறையும் கையை நீருக்குள் வீசும் போது நீரை மிகக் குறைவாக வெளியேற்றும் முறையும் பார்க்க அருமையாக இருக்கும். இந்த இருவரும் அதிகத் தூரம் நீந்தக் கூடியவர்கள். இவர்களோடு கிணற்றில் குதித்த ஞாபகம் இல்லை. ஆனால் கடலில் நீந்திய அனுபவங்கள் ஏராளம் உண்டு .92 முதல் 94 வரையான காலப்பகுதியில் எங்கள் நண்பன் வாசனோடு அதிகத் தடவைகள் கடலில் நீந்திய ஞாபகங்கள் இருக்கின்றன. நாயோடு சேர்ந்தால் குரைக்கத் தானே வேண்டும் என்ற ரீதியில் வாசன் என்னோடு நீந்த வருவதை இப்போது நினைத்துப் பார்க்கச் சிரிப்பாக இருக்கிறது.



ரேவடி வெள்ளை கடற்பகுதியில் இடமிருந்து வலமாக பரணீதரன், தீபன், சேகர், அரவிந்தன்








எத்தனையோ தோட்டக்கிணறுகளில் குதித்திருந்தாலும் விறாய்ச்சிக் குளத்துக்கு அருகிலிருந்த சதுரக் கிணற்றிலும், நெற்கொழு  வைரவர் குளத்துக்கு  அருகிலிருந்த ஜம்புலிங்கம் (நண்பன் ஸ்ரீ வைத்த பெயர்) கிணற்றிலும் குதித்து நீந்தியதை மறக்க முடியாது.அதிலும் சதுரக்கிணற்றுத் தண்ணீரின் குளிர்ச்சி மிகவும் அருமையாக இருக்கும்.  
நெற்கொழு வைரவர் கோயிலுக்கு அருகிலுள்ள ஜம்புலிங்கம் கிணற்றில் இடமிருந்து வலமாக குமார், ஸ்ரீ, தீபன், நகுலன், ரவி, தவச்செல்வன், கண்ணன், மற்றும் சேட்டை விடக்கூடாது என்று அம்மா சொன்னதை உறுதியாகக் கடைப்பிடித்த சுதாகரன்


ஒரு முறை ஜம்புலிங்கம் கிணற்றில் நாங்கள் பாயத் தயாரான போது தோட்டக்காரன் செம்மொழியால் திட்டியவாறு ஓடிவர நாங்கள்  கல்லுக்குள்ளும் முள்ளுக்குள்ளும் துவிச்சக்கர வண்டியை உருட்டிக்கொண்டு பதறியடித்து ஓடிவந்ததை நினைக்கும் போது எப்படியிருந்த நாங்கள் இன்று எப்படி இருக்கிறோம் என்று தோன்றுகிறது.
ஒரு தடவை நெற்கொழுவில் பிடித்துக் கொண்டு ஏறுவதற்குப் பிடிமானம் இல்லாத கிணறொன்றில் ஆர்வக்கோளாறு காரணமாக யோசிக்காமல் குதித்து விட்டேன். எப்படியும் என் நண்பர்கள் என்னை வெளியில் எடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன். ஆனால் உள்ளே ஒரு ஆபத்து காத்திருந்தது. இரண்டு நீர்ப்பாம்புகள் (என்று நண்பர்கள் சொன்னது ஞாபகமிருக்கிறது) பிணைந்தவாறு இருந்தன. ஒரு பாம்பு என்னை நோக்கி வர, அதற்குள் கிணற்றின் வெளியிலிருந்த நண்பர்கள் நீளமான தென்னோலை ஒன்றை சரியான நேரத்தில் கீழே நீட்ட அதைப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் ஏறி வந்து விட்டேன். எனது நண்பர்கள் சற்குணபாலனும், ரவீந்திரராசாவும்  அந்நேரத்தில் என்னுடன் இருந்ததாக ஞாபகம்.  
ஒரு முறை இவ்வாறு  தோட்டக்கிணறு ஒன்றில் நீந்தி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் தீருவில் குளத்தில் இறங்க முயற்சித்த போது “ நீ இறங்குவதானால் இறங்கு. ஆனால் நாங்கள் ஓடி விடுவோம் என்று நண்பர்கள் சொல்ல நான் மனமில்லாமல் நண்பர்களுடன் திரும்பினேன். அந்த நண்பர்களுள் பாலன், ரவீந்திரன், மனோகர், கஜேந்திரபதி, பிரகாஷ், ரவீந்திரராசா ஆகியோர் இருந்த ஞாபகம். அப்போது இந்த இடத்தில் ஒரு அழகான நீச்சல் குளம் வந்தால்.....?’ என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்திருக்கிறேன். இப்போது எனது அந்த சிறுபிள்ளைத்தனமான  நினைப்பு, உண்மை ஆவதற்கான பேச்சுவார்த்தைகள்  வல்வெட்டித்துறையின் நகர சபை, இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். அரச அதிபர், இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர்  என்ற ரீதியில் உயர்மட்டத்தில்  பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதோடு இலங்கையின் வரவு செலவுத் திட்ட உரை வரை சென்றிருப்பதனை  நினைத்தால் மகிழ்ச்சி தான். இனி வெளிநாடுகளிலிருந்து நண்பர்கள் வரும் போது  அங்கும் போய் நீந்தலாம் என்று நினைத்தாலும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கப் போகிறதோ தெரியாது. அத்துடன் சர்வதேசத் தரத்திலான நீச்சல் குளம் என்று சொல்லப்பட்டிருப்பதனால் நாங்கள் தோட்டக் கிணறுகளில் விழுவதைப் போல் விழ முடியாதென்றும் அதற்கெனக் கட்டுப்பாடுகள் இருக்குமென்றும் நினைக்கிறேன். எப்படியாயினும், எங்கள் காலத்தில் வருமென்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.






2 கருத்துகள்:

  1. நெடியகாட்டு குளத்தின் படம் அருமை அந்த குளத்தின் jumping board அருகில் இருக்கும் தென்னை மரம் அதை படத்தில் மறைத்து விட்டிர்கள் .

    பதிலளிநீக்கு
  2. நன்னீர் நிலைகளை (குளம், கேணி , தோட்ட கிணறு ) நவீன முறையில் நீச்சல் தடாகமாக மாற்றும் போது எமது நிலக்கீழ் நீர்நிலைகள் பாதிப்படைந்து கிணற்று நீர் உவர்நீராக மாறும் வாய்ப்பு மிக அதிகம் .கிராமத்தின் நீர்நிலைகளை முறையாக பேணுவதுடன் வேறு தரவையான நிலப்பரப்பில் நவீன நீச்சல் தடாகம் அமைப்பது மிகவும் சாலச்சிறந்தது.

    பதிலளிநீக்கு