ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வணக்கம்

வல்வை அலையோசை      

வணக்கம்,
ஒரு பெரிய சஞ்சிகை ஆசிரியரைப் போல,அல்லது பத்திரிகை ஆசிரியரைப் போல, அல்லது ஏதோ ஒரு பெரிய கூட்டம் எனது கதையை வாசிப்பது போல ஆசிரியர் பக்கத்தில் அல்லது ஆசிரியர் தலையங்கத்தில் உங்கள் எல்லோருடனும் அளவளாவுவதில் ஒரு சந்தோஷம். வைரமுத்து எழுதிய “காதலித்துப்பார்” எனும் கவிதையின் ஒரு பகுதி ஞாபகத்துக்கு வருகிறது.
“காக்கை கூட உன்னைக் கவனிக்காது. ஆனால் இந்த உலகமே உன்னைக் கவனிப்பதாய் உணர்வாய்.”
ஆனாலும் எழுதுவதற்குத் தேவையான எண்ணத்தைப் பெறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணி.
“வல்வை அலையோசை”யின் மூன்றாவது இதழ் வெளிவந்து சரியாக நான்கு மாதங்களாகின்றன. தனியே blog business என்றாள் இந்த இடைவெளி வந்திருக்காது. Blog business உடன் block business உம் ஆரம்பித்தது, அதன் பின் ஏற்றுக் கொண்ட புது வேலை, அதன் மூலம் கிடைத்த பொறுப்புக்கள், அதோடு சேர்ந்து வந்த கற்பித்தல் தொழில் என்பன இந்த இடைவெளிக்குக் காரணமாகி விட்டன.
நண்பனொருவன் எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை “வல்வை அலையோசை” வெளியாகவிருக்கிறது என்ற கேள்விக்கு நேரம் அனுமதித்தால் ஒரு மாதத்துக்கு ஒரு தடவை என்று கூறியிருந்தேன். அது சாத்தியமில்லை என்று புரிந்து விட்டது. ஆனால் இனியும் கூட எவ்வளவு காலத்துக்கு ஒரு தடவை என்று திட்டமிட்டுக் கூற முடியாதிருக்கிறது. இதை வெளி விடும்போது வாசிக்கும் ஒன்றிரண்டு பேர்களுக்கும் எப்படியாவது அறிவித்து விடுகிறேனே. இனி தொடர்ந்து வாசியுங்கள்.
1.       முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்
2.       தொலைந்த நகரம்-அட்லாண்டிஸ்
3.       தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்
4.       இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்
5.       வல்வையின் வரலாற்று ஆவணக் காப்பகம்
6.       சில விசேட சொற்றொடர்கள்-தொடர்ச்சி
7.       சுனாமி 2004-நான்காவது இதழ் தொடர்ச்சி
8.       பஸ்சிமோத்தாசனம்
9.       ஊரணி தீர்த்தம்
10. வல்வை மக்களை ஒன்றிணைத்து உருவாகவிருக்கும் ஒரு புதிய அமைப்புக்கான அபிப்பிராயம் அறிந்த கூட்டம்
 

முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்

    
                           முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்
1.   போராட்டத்திற்காகவும், அதன் பின்பு அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் புனர்வாழ்வு முகாமிலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்திருக்கிறது. நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அந்த நோக்கம் எய்தப்படாமல் வலுக்கட்டாயமாக வல்லரசுகளின் துணையோடு இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களது மற்றும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?
ஆண் போராளி: இல்லை. நிச்சயமாக இல்லை. கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டமே தமிழர்களுக்கென்று ஒரு தனி நிலம் தேவை என்ற யதார்த்தத்தை  உலகிற்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளது. ஆனால் தமிழர்களின் போராட்டமானது வேறு வடிவங்களில் முனைப்புப் பெற்று வளர்ந்து செல்கின்றது. எனவே போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றுமே வீணாகிப் போய் விடாது. ஆயுதப் போராட்டத்தினது நீட்சியும் அவ்வளவு தான். இது மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக முடிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளுக்கே இது இப்போது தான் ஓரளவு புலப்படத் தொடங்கியிருக்கிறது என்றாள் மற்றவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது? விளங்கி ஏற்றுக் கொள்ளும் நிலையோ பக்குவமோ அவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது.
பெண் போராளி: நிச்சயமாக இல்லை.எந்தவொரு செயற்பாடும் வீணானது என்று இல்லை. ஏனெனில் ஒவ்வொரு செயற்பாடுகளும் வெற்றியடைந்திருந்தால் அது மென்மேலும் வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியடைந்திருந்தால் அது வெற்றி என்னும் விருட்சத்திற்கு விதையாக அமையும். இதையே முன்னோர்கள் “தோல்வியே வெற்றியின் முதல்படி என்று கூறியுள்ளனர். அது போலவே எமது தமிழ் மக்களின் தாயகப் போராட்டமும் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே தமது வாழ்க்கையின் ஒரு பகுதியை போராட்டத்திற்காக அர்ப்பணித்த வீரச் சாவடைந்த மாவீரர்களினதும் முன்னாள் போராளிகளினதும், தேசப்பற்றுள்ள சாவடைந்த மக்களினதும் அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பன வீணாகிப் போனதாய் நான் நினைக்கவில்லை.

2.    புனர்வாழ்வில் இருந்து வெளிவந்து சமூக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று செய்திப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அது உண்மையாயின் புறக்கணிப்புக்கு உள்ளாகி மனமுடைந்து போயிருக்கும் போராளிகளுக்கு ஒரு சக போராளி என்ற வகையில் நீங்கள் கூறும் ஆறுதல், அறிவுரை என்ன?
ஆண் : செய்தித் தாளிலும்,நேரிலும் நாம் வாசிக்கின்ற, அறிகின்ற செய்திகள் முற்றிலும் உண்மையே. அறிந்தோ அறியாமலோ உருவாகியிருந்த (முன்னாள்) போராளிகள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுவதை நான் பெரிய பிழையெனக் கருதவில்லை. ஏனெனில் தமிழர்களைப் போல் பல விடயங்களுக்கும் பயந்தவர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒருவன் பிறக்கும் போது எச்சமயத்தில் அவனுடைய பெற்றோர் இருக்கின்றனரோ அச்சமயமாகவே அவனும் கொள்ளப்படுகின்றான். ஆனால் எச்சூழ்நிலையிலும் அவன் சமயமோ மதமோ மாறக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள். இதைப் பெரிய அறிஞர்களே கூறியிருக்கிறார்கள். இதே போலத்தான் முன்னாள் போராளிகளைப் புறக்கணிப்பவர்களையும் நான் பார்க்கிறேன். இவர்கள் பலர் மத்தியில் தங்களைக் கதாநாயகன் போலக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் கோழைகளே. சொல்பவன் சொல்லட்டும். கேட்பவர்களுக்கு எங்கே மதி? இந்தப் புறக்கணிப்புக்களையெல்லாம் முன்னாள் போராளிகள் உடைத்தெறிய வேண்டும். புறக்கணித்தவர்களே உங்களைக் கண்டு வியக்கும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அதற்காக நீங்கள் பயந்தோ மனம் தளர்ந்தோ போய் விடக்கூடாது. உங்களைப் புறக்கணித்தவர்களையே உங்களை நாடி வரச் செய்யும் மனோ தைரியம் உங்களிடம் நிறையவே உண்டு.வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டுங்கள்.
பெண் :ஆமாம்.அது உண்மை தான் அவ்வாறான புறக்கணிப்புக்கு நானும் உள்ளாகியிருக்கிறேன். ஆனாலும் மனம் தளரவில்லை.. அவ்வாறே ஏனைய முன்னாள் போராளிகளும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். அவ்வாறு மனமுடையும் ஒவ்வொருவரும் ஒரு கணம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். நாமாள் முடியாதது என்று எதுவும் இல்லை. சமூகத்தில் வாழும் எம்மை ஒத்தவர்களிடம் காணப்படும் திறமை, அனுபவம், ஆற்றல், வலிமை என்பவற்றில் நாம் அவர்களை விட மேலானவர்களாகத் திகழ முடியும். ஏனெனில் பல துன்பங்கள், தடைகள் என்பனவற்றை நேரடியாகக் கண்டறிந்து புடம் போடப்பட்டவர்கள்  தான் நாம். எமது சமூகம் எம்மை ஒருபோதும் புறக்கணிக்காது என நான் நம்புகிறேன். தற்போது நிகழும் புறக்கணிப்புகள் யாவும் நிலவும்  அசாதாரண சூழ்நிலையின் கீழ் மேற்கொள்ளப்படுபவையாகும்.
3.   அரசினால் வழங்கப்பட புனர்வாழ்வு இப்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் சமூக வாழ்வுக்கு உபயோகமாக இருக்கிறதா? அப்படியாயின் எவ்வாறு?
ஆண்: புனர்வாழ்வு நிலையம், தொழிற்பயிற்சி என்றெல்லாம் நாளாந்தம் செய்திகளில் அடிபடுவதென்னவோ உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை சமூக வாழ்வுக்கு உதவவில்லை; உதவாது; ஆனால் உதவும். எப்படியென்றால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொழிற்பயிற்சி எதுவுமின்றி தொடங்கும் தொடங்குமென எதிர் பார்த்திருந்த எங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கற்றுத் தந்திருப்பதோடு எதிர் பார்த்திருந்தால் ஏமாறுவோம் என்பதையும் உணர வைத்திருக்கிறது. இவையெல்லாம் சமூக வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதவை தானே. அதோடு தொழிற்பயிற்சி இல்லாமலிருந்த நீண்ட மாதங்களில் எங்களுக்குள்ளே இருந்த திறன்களை, அனுபவங்களை எங்களுக்குள்ளேயே பரிமாறிக் கற்றுக் கொண்டவை தான் என்னைப் பொறுத்தவரை நான் எடுத்துக்கொண்ட( வழங்கப்பட என்று வாய் தவறியும் சொல்லக்கூடாது) மிகச்சிறந்த புனர்வாழ்வுப் பயிற்சியாகும். ஆனால் பல பேர் நிறையத் தொழிற்பயிற்சிகளைக் குறுகிய காலத்தில் பயின்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவுகிறதா என்று தெரியாது.
பெண்: நிச்சயமாக இல்லை. புனர்வாழ்வுப் பயிற்சிகள் எனப்படுவது 2 மாத காலமோ அல்லது 3 மாத காலமோ வழங்கப்படும்  பயிற்சிகள் தான். இந்த நவீன கால கட்டத்தில் இக்கால அவகாச துறைசார் பயிற்சிகள் எவ்வாறு பயனளிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? மனதளவில் சோர்ந்த நிலையில் இருக்கும் போது நாம் சிறப்பான கற்றலில் ஈடுபட்டிருக்க முடியும் என்று உங்களால் கருத முடிகிறதா?

4.   உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறுவீர்களா?
ஆண்: இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் நிலைமைகள் தான். ஏனெனில் அந்த நிலை உலகே இதுவரை கண்டிராத இயக்கமொன்றின் வீழ்ச்சியை, எந்தவொரு தமிழருமே ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வீழ்ச்சியைப் பறைசாற்றியிருக்கிறது. போராளிகள், பொதுமக்களின் சாவுகள், காயங்கள், உணவு, குடிநீர், பால்மா என்பன இல்லாத நிலைமை, நிர்வாகச்சிதைவு, அடுத்து என்ன நடக்குமென்ற தெரியாத திகைப்பு…….. ஆனால் இவையெல்லாம் நடக்குமென்று ஒருவருக்கு  முன்பே நன்கு தெரிந்திருக்கிறது. அவற்றை அவர் திட்டமிட்டு நேர்த்தியாகப் பதற்றமின்றி  கனகச்சிதமாக இம்மியளவும் பிசகாது செய்துள்ளார். இந்நிலைமைகளையெல்லாம்  நாமே ஏற்படுத்தினோம் என்று மகிழ்ச்சித் துள்ளளலுடன் சொன்னவர்கள் இன்று கலங்கிப் போயுள்ளனர். இன்றும் அன்று சொன்னவற்றையே சில வேளைகளில் சில இடங்களில் சொல்ல நேரிட்டாலும் மகிழ்ச்சிக் களை  இன்றி சப்பென்று கூறுகின்றனர்.
பெண்: உங்களின் இவ்வினாவுக்குப் பதிலளிப்பது என்பது மிக மிகக் கடினமாகும். ஏனெனில் விடுதலைப் போராட்ட காலம் முழுவதுமே எனது உயிருள்ளவரை மறக்க முடியாத காலப்பகுதி தான். எனினும் என் மனதில் கடைத்தெரு தேங்காய்க் குவியலைப் போல் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் சிதைக்கப்பட்ட எமது மக்களின் உயிரற்ற உடலங்களின் குவியலை நேரில் பார்த்ததை எக்கணத்திலும் மறக்க முடியாது.  
5.   உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத, மனதைக் கவர்ந்த தளபதி யார்? என்னென்ன சிறப்பியல்புகள் அவரிடம் இருந்ததாகக் கருதுகிறீர்கள்?
ஆண்: எல்லாத் தளபதிகளுமே  வெவ்வேறு சிறந்த குணவியல்புகளையும் திறன்களையும் கொண்டிருந்தவர்களே. எனக்கு திருமலையைச் சேர்ந்த அத்தளபதியைப் பிடிக்கும்.அவர் மிகவும் கண்டிப்பானவராகவும், முரட்டு  முரட்டு ஆசாமியாக இருந்தாலும் தலைமை மீது மிகுந்த விசுவாசமாக இறுதிவரை இருந்து மடிந்தவர். எங்கள் பொறுப்பாளர் “அவர் ஒருவர் தான் பிழையென்றாலும் அதை நூறு வீதம் சரியாகச் செய்வார்.” என்று அவரைப் பற்றிக் கூறுவார். இது ஒரு தத்துவம் போல் இருந்தாலும் அவரது இப்போக்கிலமைந்த போர்க்குணத்தினால் சண்டைகளில்  நிறைய வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. இதைவிட அவரது அந்தக் குணத்தினால் இயக்கம் மிகவும் இக்கட்டாக இருந்த மூன்று சந்தர்ப்பங்கள் உடைத்தெறியப்பட்டிருக்கின்றன. ஆனால் இவரிடம் மற்ற மூத்த தளபதிகளிடம் இருந்த ஒருசில பண்புகள் இருக்கவில்லை. இவரை எமது போராளிகள் ஜெனரல் பற்றனுடன் ஒப்பிட்டுப் பேசினர்.

பெண்: கேணல் ராயு. (முன்னாள் சிறுத்தைப்படைத் தளபதி )இவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் என் போன்ற பெண் போராளிகளுக்கும், அறிவுப் பசியோடு போராட்டவாழ்வில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளுக்கும் இவரை மிகவும் பிடிக்கும்.இயல்பான வாழ்வில் ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடை நிறுத்திய மாணவனை எதிர்காலத்தில் பொறியியலாளராக எதிர்பார்க்க முடியாது. ஆனால் போராட்ட வாழ்வில் அதைச் சாத்தியமாக்கிய தளபதி இவர். அடுப்படியில் உறைந்த பெண்களை போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தியதோடு அறிவியலிலும் ஆண்களுக்கு நிகரான ஆற்றலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பதற்கு உதவிய தளபதிகளில் ஒருவர். ஒரு காலத்தில் இவரையும் இவரது படையணியின் பெயரையும் கேட்டு இந்திய இராணுவமும் நடுங்கியது. புல் கூடப் பல் குத்த உதவும் என்பதைப் பல ஆயுதக் கண்டுபிடிப்புக்கள் மூலம் உணர்த்தியவர். எமது போராளிகளுக்கு முதன் முதலாக ஆட்டிலரி பீரங்கியின் இயக்கம், பயன்படுத்தும் முறை, தொழில்நுட்ப ரீதியான விளக்கம் என்பன பற்றிய புத்தகங்கள், சுயசிந்திப்பு,கற்பனை மூலம் தெளிவு படுத்திய பெருமை இவரையே சாரும்.
6.   இறுதிச் சமரில் பங்கு பற்றிய போராளிகளின் மனவுறுதி குலைவதற்குக் குலைவதற்குக் காரணமாக இருந்தவை எவை?
ஆண்: இக்கேள்விக்கு மீண்டும் நான் சொன்ன ஓரிரு விடயங்களைத் தொடுகிறேன். போராளிகள் அதாவது தளபதிகள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கீழ்நிலை வீரர்கள் என எவருக்குமே தலைமையின் உள்நோக்கங்களோ நூறு வருடங்கள் முன்னதான தமிழீழம் மீதான அவர் கொண்டிருந்த தீர்க்கதரிசனமான தொலைநோக்குப் பார்வையோ, சிந்தனைகளோ, அவரின் இலக்கினை இலட்சியத்தை நோக்கியே செல்லுகின்ற ஆனால் அடிக்கடி மாறுகின்ற தந்திரோபாயங்களோ, உத்திகளோ என அவரது வைராக்கியமான மனநிலை பற்றி முற்று முழுதாகத் தெரியாது. இவ்விடயம் மிக முக்கியமானது.இதனை விளங்கிக் கொள்ளாதனாலேயே பலர் மனவுறுதி குலைந்திருக்கிறார்கள். ஏனைய விடயங்கள் எல்லாம் அடுத்த பட்சமே.

பெண்: அடிப்படைக் காரணம் பிறநாட்டு அரசியல் ரீதியான வதந்திகள் அவர்களிடையே உலா வந்தமையும் அதனை அவர்கள் நம்பியமையும் மற்றும் மக்களுக்காக இவர்கள் போராடும் போது அவர்கள் படையினரின் சகல வழிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில்  மிக மோசமாகக் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு எவ்வாறு போராட முடியும்?அவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லையே. அத்துடன் எட்டப்பர் கூட்டங்கள் மூலம் ஏற்பட்ட தளபதிகளின் இழப்புக்கள் என்பனவும் போராளிகளின் மனங்களைச்  சுக்குநூறாக உடைத்தன.
7.   வன்னியில் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட கட்டாய ஆள்ச் சேர்ப்புப் பற்றியும், மக்களை வெளியேற விடாமல் கேடயமாகப் பாவித்தது பற்றியும் கண்டனங்கள் பரவலாக எழுந்தது நீங்கள் அறிந்ததே. ஒரு முன்னாள் போராளி  என்ற வகையில் இந்தக் குற்றச் சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
ஆண்: அந்நேரம் அது தவிர்க்கப்படமுடியாததாக இருந்தது. இரண்டாவது உலகப்போரில் பல உலகநாடுகள் இதைச் செய்திருக்கின்றன. முக்கியமாக ரஷ்யா. அதாவது ஸ்டாலின் ஆட்சி, வன்னியில் செய்யப்பட்டதை விட ஆயிரம் மடங்கு மோசமாகச் செய்தது. ஆனால் போரினால் ஏற்பட்ட எழுச்சியால் ரஷ்யர்கள் ஜெர்மானியப் படைகளை வென்றனர். இதனால் மக்கள் ஸ்டாலினையும் ஏனைய கொடுங்கோலர்களையும் மறந்து மன்னித்துப் போற்றினர். இது வரலாறு. ஏன்,இன்று அரசின் அமைச்சராக இருப்பவர் தானே கட்டாய ஆட்சேர்ப்பை வெற்றிகரமாகத் தொடங்கிக் கோலோச்சியிருந்தார். அப்போது மக்கள் தங்களைக் கட்டுப்படுத்தி அவரை மன்னித்தனர். ஏனெனில் அப்போது சமாதான காலம். வன்னியில் இது நடந்த போது சண்டை நடந்து கொண்டிருந்தது.
பெண்: ஒரு போராளியாக இருந்து நோக்குமிடத்து வீட்டுக்கு ஒருவரோ அல்லது இருவரோ போராடுவதில் தவறில்லை என நினைக்கிறேன். யாராவது போராடி உயிரிழக்கட்டும். நாம் சுகமாக வாழ்வோம் என்று நினைக்கும் தனி மனிதனோ அல்லது ஒரு குடும்பமோ ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்வதாகவே அதாவது தேசப்பற்றற்று வாழ்வதாகவே நான் நினைக்கிறேன்.
இன்று போராட்டம் இல்லை.கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை. ஆனால் நீங்கள் என்ன நிம்மதியைக் காண்டீர்கள்? தினம், தினம் உங்கள் பிள்ளைகள் கைது செய்யப்பட்டோ, கொலை செய்யப்பட்டோ, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, அல்லது தீய பழக்கங்களுக்கு அடிமையாகியோ ஏதோ ஒரு வகையில் தமிழனாய்ப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் அழிக்கப்பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ வருவது தெளிவாகப் புலப்படுகிறது. உங்களால் நியாயமான ஒரு கருத்தைச் சொல்லவோ அல்லது நியாயமான ஒரு செயலைச் செய்யவோ முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
நான் யுத்தத்தில் அகப்பட்ட மக்களில் ஒருத்தியாக இருந்து நோக்குமிடத்து கட்டாய ஆட்சேர்ப்பு தவறாகவே படுகிறது. இராணுவத்தின் தாக்குதல்கள் ஒரு பக்கம்; உட்கார இடமில்லை; உண்ண உணவில்லை; காயத்திற்கு மருந்தில்லை; ஒட்டுமொத்தமாக நிம்மதியில்லை. இப்படி இன்னல்பட்ட மக்களிடம் உங்கள் பிள்ளைகளின் உயிரைப் போராட்டத்திற்காகத் தாருங்கள் என்று கேட்டால் எப்படித்தான் சந்தோஷமாகத்  தர முடியும்? இவ்வாறான கஷ்டங்கள் இல்லாமலிருந்தால் எம்மை நேசித்த எம்மக்கள் நிச்சயமாக உதவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தோடு வன்னியில் எமது கட்டுப்பாட்டினுள் கிட்டத்தட்ட 13 வருடங்களாக  எச்சந்தர்ப்பத்திலும் எங்களோடு தோளோடு தோள் நின்ற மக்களைக் கட்டாயப்படுத்தியது தவறு என்றே நான் நினைக்கிறேன்.
8.   புலம் பெயர் தமிழர்களின் நாடு கடந்த தமிழீழம்” பற்றி உங்கள் கருத்து என்ன? இது நடைமுறைக்குச் சாத்தியமாகும் என்று கருதுகிறீர்களா? அவர்களால்  இங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ஆண்: உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.நான் அது பற்றி அலட்டிக்கொள்ளப் போவதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்கள் உணர்ச்சி பொங்க தம்மாலானவற்றை அஹிம்சை வழியில் செய்யத் தயாராக இருக்கின்றனர். இவர்களை வழிநடத்த கட்டுக்கோப்பான தலைமைத்துவமும், சீரிய எண்ணங்களும், நேர்மையும் வாய்மையும் வாய்ந்த பொறுப்பாளர்கள் எவரும் இல்லை. பொறுப்பாளர் என்ற தகுதியையே கொண்டிருக்காதவர்களெல்லாம் தான் தான் தலைவர் என்று ஆளாளுக்குப் பீற்றி கொண்டு, மக்களின் பணங்களையும்,அழிந்து போன தலைமையின் கீழிருந்த புனிதமான இயக்கத்தின் திறைசேரிகளையும், சொத்துக்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பவர்களாகத் தான் இருக்க முடியும். இதை விட முன்னாள் கையாலாகாத்தன்மை கொண்ட இயக்கங்களின் தலையீடுகளும் அட்டகாசங்களும் இருக்கவே செய்யும். வெளிநாடுகளிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் (அவர்கள் ஆயுதம் தூக்கியவர்களாகவே  இருந்தாலும் கூட இனி அஹிம்சையைத் தான் கையில் எடுக்க வேண்டும்.ஏனெனில் பிரபாகரனும் அவரது இயக்கமும் ஆயுத வழியில் சாதித்ததில் இலட்சத்தில் ஒரு பங்கு கூட அவர்களால் இனி மேல் சாதிக்க முடியாது. இது தான் யதார்த்கம்.) ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஒரு தெளிவான நோக்குடன் புலம்பெயர் தமிழர்களை வழிநடத்தினால் மட்டுமே.....ஏதேனும் என்ற பேச்சே தேவையில்லை. தீர்வு கிட்டியே ஆகும்.

பெண்: இது ஓரளவு சிறந்த பணி என்றே கருதுகிறேன். இதன் மூலம் 30 வருட கால போராட்ட வரலாறு அழியாது பாதுகாக்கப்படுவதுடன், சர்வதேசத்திலிருந்து ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
எந்தவொரு நடவடிக்கை பற்றியும் ஆரம்ப கட்டத்திலேயே வெற்றியா தோல்வியா என்று கூற முடியாது. எந்தவொரு உண்மையான நியாயமான நடவடிக்கையும் இடையறாத முயற்சியால் வெற்றி காண முடியும்  என்றே நான் நம்புகிறேன்.இதுவும் எம்மின விடுதலைக்கு உறுதுணையளிக்கும் என்றே எண்ணுகிறேன்.
நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் எமக்குத் தீர்வு கிடைப்பதற்கு அவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இங்கு இடம்பெறும் பாரதூரமான சம்பவங்கள் பற்றி வெளியுலகத்திற்குத் தெட்டத் தெளிவாகக் கூறும் தைரியம் இங்கு வாழ்பவர்களிடம் இருந்தாலும் அடுத்த கணம் என்ன நடக்கும் என்ற பயம் காரணமாகக் கூற முன்வர மாட்டார்கள். ஆனால் புலம் பெயர் மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சம்பவங்களைப் உடனுக்குடன் படம் பிடித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதன் மூலமே எம்மினத்திற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகம் அறிந்து கொள்ள முடியும்.
9.    நெடுங்காலமாக விசாரணைகள் இன்றி, அரசியல் கைதிகளாக  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் விடுதலை பற்றி தற்போது அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு  வருகிறது. அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு யார் யாரால் என்னென்ன செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ஆண்: உண்மையில் இவர்களை விடுவிக்கத் தமிழ் உணர்வு மிக்க அனைவரும் ஒன்றிணைந்து உண்மையுடன் உறுதியுடன் செயலாற்ற வேண்டும். ஏனெனில் விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற  பெரும்பான்மையினத்தவரே இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் போது நாங்கள் வாளாவிருப்பது வெட்கக்கேடானது…. கீழ்த்தரமானது.
பெண்: இதை யார் எடுத்துரைத்தாலும் இனவாதிகள் இரங்கப் போவதுமில்லை. தமிழின அழிப்புக் கொள்கையிலிருந்து மாறப்போவதுமில்லை என்பது தெளிவான உண்மை. இதற்கு உண்மையாய் ஒரு இனவழிப்பைத் தடுக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு அமைப்பினதோ அல்லது பல நாடுகளின் கூட்டணியினதோ தலையீடே அவசியமாகும். இவ்வாறு செயற்பட்டால் தான் கைதிகளுக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்கவில்லையெனில் சில ஆண்டுகளின் பின்னர் முன்னைய போராட்டம் போலல்லாத ஓர் பயங்கரமான பழிதீர்க்கும் போராட்டம் ஆரம்பமாகலாம்.
10.  விடுதலைப் புலிகளது தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி பல இடங்களில் சிலாகித்துப் பேசப்பட்டிருக்கிறது. அவரது தீர்க்கதரிசனம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பிழைத்தது எப்போது என்று கூறுவீர்களா? அவர் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஆண்: அவரது தீர்க்கதரிசனம் என்பது ஒரு விடயத்தில் மட்டுமல்ல. ஏராளமான விடயங்களில் பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அவரைப்போல் தீர்க்கதரிசனம் மிக்க மானிடர் உலகில் இதுவரை தோன்றவில்லை என்று தற்போது சில மேற்கத்தேய அறிவியலாளர்கள் சிலர் ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றனர். பலர் பிரபாகரன் இதைச் செய்யவில்லையே, அதை யோசிக்கவில்லையே, இப்படித் தோற்று விட்டாரே, அவரது இயக்கம் அழிந்து போய் விட்டதே என்றெல்லாம் இடக்காகக்  கதைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது. சொன்னாலும் தங்கள் வாதத்திலேயே அவர்கள் ஊறியிருப்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது எல்லாமே பின்னாளைய.......அது நூறு வருடங்களின் பின்னராகக் கூட இருக்கலாம்..சுபீட்சமான, தலைநிமிர்வான ,சுதந்திரமான பொற்காலத்திற்கானதே. அவர் உயிருடன் இல்லை. அவர் ஏன் உயிருடன் இருந்து தோல்வி நிலைக்குச் செல்ல வேண்டும்?
பெண்: தலைவரைப் பற்றிக் கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. தலைவரின் சிந்தனைகள் எண்ணற்றவை. இவை யாவும் மலரப் போகும் தமிழீழத்திற்கு இறந்த காலத்தில் நாம் என்ன செய்திருக்க வேண்டும், நிகழ்காலம், எதிர் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், உலகிலுள்ள நாடுகளில் நம் தமிழீழம் எவ்வாறெல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியுமே. உதாரணமாக மலரவிருக்கும்  தமிழீழத்தின் கட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உருவாக்கி உலகப் பிரதிநிதிகளை  ஆச்சரியத்துக்குள்ளாக்கியமையைக் கூறலாம்.
அவரது தீர்க்கதரிசனம் பற்றிப் பலராலும் பேசப்பட்டது உண்மை தான். ஆனாலும் அது இறுதி யுத்தத்தின் பொது பிழைத்து விட்டதாக அனேகர் கருதுகிறார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை. இவ்வாறானதொரு இடைவெளி எமது இளைஞர் சமூகத்திற்குத் தேவையெனக் கருதுகிறேன். அப்போது தான் எமக்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியும்.
நிச்சயமாக அவர் உயிருடனிருப்பார் என்று நான் நம்புகிறேன். அவரது நலத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
30 வருடங்களாக அரசியல் யுத்த நெருக்கடி கொடுத்த ஒருவரை அதுவும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவரின் உடலை உடனே அழித்து விட்டோம் என்று கூறுவது அவ்வளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தங்கள் வீரப் பிரதாபங்களை வாய் வார்த்தையாக அள்ளி வீசும் இவர்கள், சாட்சியமாகக் கிடைத்த உயிரற்ற உடலை உலகிற்குக் காட்சிப்படுத்தாமல் ஒரு புகைப்படம் மூலம் மட்டும் வெளிப்படுத்தியது ஏன்? சிந்தித்தால் தெளிவான விடை கிடைக்கும்.
                       -பேட்டி:ஆ.தீபன்
                    வல்வை அலையோசை      

தொலைந்த நகரம்- அட்லாண்டிஸ்

                                                        தொலைந்த நகரம்- அட்லாண்டிஸ் 
அட்லாண்டிசின் சகாப்தம் மிகப் பழமையானதும்,உலகின் வெளிப்படுத்தப்படாத மர்மங்களுள்  மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவதுமாகும். இதன் புதிர், இதனை நம்புபவர்களையும் சரி நம்பாதவர்களையும் சரி குழப்பத்தில் ஆழ்த்தத் தவறியதில்லை.உண்மையில் இந்தத் தொலைந்த நகரம் எங்கே இருந்தது? இப்போது எங்கே இருக்கிறது? இதன் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்ன? உண்மையில் அங்கே (எங்களோடு ஒப்பிடும் போது) சற்று முன்னேற்றமான மனித இனம் வாழ்ந்துள்ளதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்றாவது ஒரு நாள் ஒரு நிச்சயமான பதில் கிடைக்கத் தான் போகிறது.
கி.மு 428- கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த  தத்துவ அறிஞரான சோக்ரடீசின் மாணாக்கனாக இருந்த பிளேட்டோ தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டார். சோக்ரடீசிடம் தனது கல்வியை முடித்துக் கொண்டு தத்துவப் பள்ளியை ஆரம்பித்த பிளேட்டோ சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்றாக  அட்லாண்டிசின் கட்டிடக்கலை, பொறியியல் துறை, அங்கு கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இது பிளேட்டோவின் கற்பனைக் கதை என்றே ஏனையோர் இதைக் கருதிய போதும் இது உண்மை எனக் குறிப்பிட்ட பிளேட்டோ யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு சிறந்த இடமாக  அட்லான்டிஸ் விளங்கியது என்று தெரிவித்தார்.
அட்லாண்டிசில் ஏற்பட்ட மிகப்பெரும் வெள்ளம் அங்கு வாழ்ந்த மனித இனம் முழுவதையும் அழித்தது என்ற கதை பொதுவாக எங்கள் மத்தியில் கூறப்படும் ஒன்று. இவ்வாறாக அழிக்கப்பட்ட ஒரு ராஜ்ஜியம் அல்லது ஒரு நாகரீகத்தின் பெயரானது சற்றே வெவ்வேறுபட்ட உச்சரிப்புக்களுடன் உலகம் முழுவதுமே பரந்து காணப்பட்டது எவ்வாறு என்பது இன்னுமே புரியாத ஒன்று. கனரி தீவுகளில் அடாலயா என்றொரு புராணம் உண்டு. வட ஸ்பெயினில் அட்லாண்டிகா என்றொரு இடமுண்டு. வைக்கிங்குகள் அட்லி எனப்படும் கதையொன்றைக் கூறுவார்கள். அதையே வட ஆபிரிக்காவில் ஆட்டாலா என்று கூறுவர். அஸ்டெக் நாகரீகத்தவர்கள் அஸ்ட்லான் என்ற சொல்லைப் பாவித்தார்கள். வட அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் தங்களை அசட்லான் என்றழைத்துக் கொண்டார்கள்.
பிளேட்டோ  புவியியல் ரீதியாக அட்லாண்டிசின் இருப்பிடம் பற்றிக் குறிப்பிடுகையில், இந்தக் கண்டம் (கிட்டத்தட்ட  லிபியாவையும் ஆசியாவையும் ஒன்று சேர்த்தால் வரும் அளவுக்கு அதாவது 5 முதல் 10 மில்லியன் சதுர கிலோ மீட்டர்)  அட்லாண்டிக் கடலில் ஜிப்ரால்டர் பாறைக்கு (இங்கிலாந்தின் முடிக்குரிய சொத்தாகக் கருதப்படும் ஜிப்ரால்டர் பாறை ஸ்பெயினின் எல்லைக்கருகே அமைந்துள்ளது) அருகே இருந்தது என்று கூறியிருந்தார். இவரின் இந்த விளக்கம் அட்லான்டிஸ் தீவானது எரிமலையின் சீற்றம் காரணமாகக் கடலில் மூழ்கிய ஏஜியன் தீவுகளில் ஒன்றான சன்டோரிணி என்றே பெரும்பாலோனோரை நினைக்க வைத்தது. சிலர் இதனை அட்லாண்டிக் கடலையும் பசுபிக் கடலையும் இணைக்கும் பாலம் போல் நேர்கோட்டில் அமைந்திருந்த தீவுகளில் ஒன்றாகக் கருதினார். சிலர் ஸ்பெயினில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றாக இதனை நினைத்தார்கள். இன்னும் சிலர் பெர்முடா முக்கோணப் பிரதேசத்தில் விமானங்களும் கப்பல்களும் மறையத் தொடங்கிய மர்மம் ஆரம்பித்தது அட்லாண்டிசின் அழிவோடு தான் என்று  இரண்டு மர்மங்களையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தார்கள். இன்னும் சிலர் இன்னும் ஒன்றிரண்டு படி மேலே போய் அட்லான்டிஸ் பூமியிலேயே இல்லை, வேறொரு கிரகத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
கண்டங்கள் நகரும் கொள்கைக்கு ஏற்ப உலகின் அனைத்துக் கண்டங்களுமே  சிறுவர்கள் பொருத்தி விளையாடும் ‘jigsaw puzzle’ போல் பொருந்தினாலும் வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக அட்லாண்டிஸ் விளங்கியிருக்கலாம் என்றும் சில புவியியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பிளேட்டோ அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிடுகையில் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில்  மையப் பகுதியில் சுற்றுச் சுவரோடு மூன்று கால்வாய்களை  ஊடறுத்து அமைந்திருந்த அதன் தலைநகர் பற்றிக் குறிப்பிடுகிறார். அட்லாண்டிசை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசனும் தனக்கு முன்பு ஆட்சி செய்த அரசனை மிஞ்சும் வகையில் அந்த நகரை அழகுபடுத்தும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினான். அந்த இடத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் தகரத்தால், பித்தளையால், செம்பால்  செய்யப்பட்ட சுவர்களைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது. அத்துடன் கறுப்பு, வெள்ளை, சிவப்புக் கற்களும் இடையிடையே பொருத்தப்பட்டு அதன் அழகுக்கு இன்னும் மெருகூட்டின. மேலும் பிளேட்டோ அட்லாண்டிஸின் செல்வச் செழிப்புப் பற்றிக் குறிப்பிடுகையில்  வேறு எந்த ராஜ மாளிகையிலும் காண முடியாத அளவிட முடியாத  அளப்பரிய செல்வம் அங்குள்ள ராஜ மாளிகையில் குவிந்து கிடந்தது எனவும் அதுவே அட்லாண்டிஸின் அழிவுக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் ஏனைய மனிதர்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு அழகாலும் அறிவாலும் செல்வத்தாலும் மேம்பட்டிருந்தாலும், இறையால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவர்கள் சேர்த்த செல்வம் அவர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கியது. அளவு கடந்த செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் அவர்கள் ஆசைப்படத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் சேர்த்த செல்வம் இறையிடமுள்ள செல்வத்தை விட மேலானது என்று கருதினார்கள். அதுவே அவர்களின் அழிவுக்கு வித்திட்டது என்று கூறினார். அவர்களிடமிருந்த இறை  நம்பிக்கை மங்கத் தொடங்க இறப்பவர் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நில நடுக்கம், பூகம்பம், சூறாவளி, வெள்ளம், எரிமலைச் சீற்றம்  என்று பல விதத்தாலும் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஒரு துக்ககரமான நாளில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் அட்லாண்டிஸ் முழுவதுமே கடலால் விழுங்கப்பட்டது.  அதோடு அந்த இடமும் ஒருவராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாத, ஒருவராலும் கடக்க முடியாத இடமாக ஆகி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரின் கூற்றை ஆதாரமாக வைத்துத் தான்  பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் மர்மம் இதிலிருந்தே ஆரம்பித்திருக்கலாம் என்று சில  ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறாக மூழ்கிய அட்லாண்டிசிலிருந்து  ஒருவரும் தப்பவில்லை என்று தான் நம்பப்பட்டது. ஆனாலும்  ஒரு வித மயக்கத்தில் ஆழ்ந்ததும் என்ன கேட்டாலும் பதிலளிக்கக் கூடிய எட்கர் கேய்ஸீ என்பவர் அட்லாண்டிஸ் பற்றிக் கேள்வியெழுப்பப் பட்ட போது அட்லாண்டிஸ் நீரில் மூழ்கிய போது அதிலிருந்து பறக்கும் இயந்திரம் மூலம் தப்பி வெளியேறிய  அட்லாண்டிஸ்  தேசத்தவர்களே  இப்போது யுகட்டான் நாகரீகம் என அழைக்கப்படும் மாயா நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்று தெரிவித்தார்.
தூங்கும் தீர்க்கதரிசியாகக் கருதப்பட்ட எட்கர் கேய்ஸீ தன்னையே ஒரு அட்லாண்டிஸ் தேசத்தவன் என்றும், தான் தூங்கும் போது தன்னுடன் ஆவிகள் பேசுகின்றன என்றும் தன்னுடைய இந்த அளப்பரிய தீர்க்கதரிசனத்தின்  வெளிப்பாட்டுக்குக் காரணம் அட்லாண்டிஸ் தெய்வங்களும் ஆவிகளும் தான் என்றும் உறுதியாக நம்பினார். சில விடயங்களில் இவரது தீர்க்கதரிசனம் வெளிப்பட்டாலும் கூட அட்லாண்டிஸ் விடயத்தில் இவரது தீர்க்கதரிசனம் சரி வரவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் 1968 இல் அல்லது 1969 இல் அட்லாண்டிஸ் தேசம்  பெர்முடா தீவுகளில் ஒன்றான பிமினி தீவுக்கு அருகில் கடலிலிருந்து வெளிப்படும் என்று இவர் கூறியிருந்தார்.
ஈஸ்டர் தீவிலுள்ள மிகப்பெரும் சிலைகள், மற்றும் எகிப்திலுள்ள பிரமிட்டுக்களில் என்பனவும் கூட அட்லாண்டிசின் அடையாளங்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அட்லாண்டிசின் இராணுவம்  ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்ட  நபர்களைக் கொண்டிருந்தது என்று பிளேட்டோ நம்பினார். வீரர்களைச் சுமந்து செல்லும் ரதங்களும் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டன என்றும், காட்டு மிருகங்களான குதிரைகளை வீட்டு மிருகங்கள் ஆக்கிய  நாகரீகம் இங்கிருந்தே ஆரம்பித்திருக்கலாம்  என்றும் அவர் தெரிவித்தார். இது எந்த காலப்பகுதியில்  நிகழ்ந்தது என்று என்று இது வரை தெரியாததால் அட்லாண்டிஸின் காலப்பகுதியும் தெரியவில்லை. மமோத் என்று அழைக்கப்பட்ட இப்போதுள்ள யானகளை விட அளவில் பெரிய யானைகளும் அட்லாண்டிஸில் இருந்தன என்றும் அட்லாண்டிஸின் அழிவுடனே அவைகளும் அழிவடைந்திருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது  ஒரு குறை தான். என்றாலும் அந்தக் குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே  கருதுவது  ஏற்புடையதாகாது என்று புவிச்சரிதவியலாளர்கள்  கருதுகின்றனர். அட்லாண்டிஸ் மர்மத்தில் ஈடுபாடு உடையவர்களின் மனதில் உள்ள முக்கியமான கேள்வி இது தான் எப்போதாவது, எங்கிருந்தாவது, எப்படியாவது அட்லாண்டிஸ் மீண்டும் தோற்றம் பெறுமா?
 

தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்

   தொண்டைமானாறு அச்சுவேலி பாதையின் அவலம்

தொண்டைமானாறு, அச்சுவேலி பாதை திறந்து எத்தனையோ மாசம்.
ஆனால் பாதையோ ரொம்ப மோசம்.
அதில் போகும் வாகனங்கள் எல்லாம் நாசம்.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மக்களிடம் இல்லையா பாசம்?
1990 களின் ஆரம்பப் பகுதியில் தொண்டைமானாறுப் பாலம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. ஆனாலும் 2007 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினர் பாலத்தைத் தற்காலிகமாகத் திருத்தியமைத்து பலாலியிலிருந்து தமது விநியோகத்திற்கான பாதையாகப் பாவித்து வந்தனர்.
10.08.2010 அன்று ஆரம்பமாகவிருந்த சந்நிதி வருடாந்த ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு 07.08.2010 அன்று இப்பாலம் மக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்போதைய யாழ் கட்டளையிடும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சு நடத்தியதன் பலனாக இப்பாதை திறக்கப்பட்டதாகப் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
வலிகாமம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதிகளை நோக்கிப் பயணிக்கும் / பகுதிகளிலிருந்து வரும் தொண்டைமானாறு கெருடாவில் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகத் தான் இருக்கும் என்று கருதப்பட்டாலும் வீதியின் நிலையைப் பார்க்கும் பொது இது ஒரு சாபமோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அச்சுவேலி, பத்தைமேனிச்சந்தி, கதிரிப்பாய்ச்சந்தி என்று அங்கிருந்து வரும் போது “நல்லாத்தானே போய்கிட்டிருக்கு” என்று தோன்றினாலும் அதன் பின் தம்பாலைச் சந்தி, காத்தாடிச்சந்தி என்று தொண்டைமானாற்றுப் பாலத்தில் ஏறும் வரை “ஆத்தாடி, ரொம்ப terror ல்ல இருக்கு” என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையின் ஒரு பிரதி பிரதேச செயலருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. நான் எனது மட்டத்தில் முயற்சித்தது போல் அவர்களும் தங்கள் தங்கள் மட்டத்தில் முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.         
 

இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்

                    இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்
ஒருவரின் அதியுயர் தியாகமாக எதைக் கருதலாம் என்று நினைக்கிறீர்கள்? தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை விட்டுக் கொடுத்தல், நட்பை விட்டுக் கொடுத்தல், பதவியை விட்டுக் கொடுத்தல், காணி நிலத்தை விட்டுக் கொடுத்தல், மனைவி பிள்ளைகளை விட்டுக் கொடுத்தல்......இவற்றில் ஏதாவது ஒன்றை நினைக்கிறீர்களா? தற்கொலைப் போராளிகளை மறந்து விட்டீர்களா? ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் தாய் நாட்டின் விடிவுக்காக எதிரிகளோடு சேர்த்து தன்னையும் அழித்துக் கொண்ட வீர நிகழ்வுகளை மறந்து விட்டீர்களா? “கண்ணே, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்று வசனம் பேசுபவர்களைப் போலல்லாது, உண்மையாகவே உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள். என்ன தான் உலகத்திலேயே அது உயர்ந்தது, இது உயர்ந்தது என்றெல்லாம் கதைத்துக் கொண்டாலும் ஒருவனுக்குத் தனது உயிரை விடப் பெறுமதியானது ஏதாவது இருக்க முடியுமா? அப்படிபட்ட உயிரைக் கொடுக்கத் துணிவதை விட உயர்ந்த தியாகம் இருக்க முடியுமா? தாய் நாட்டிற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்த இரு பாலஸ்தீனப் போராளிகளின் கதை தான் இது.
சையத், காலத் இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். கார்கள் திருத்தும் கடையில் இயந்திர தொழில் நிபுணர்களாக வேலை செய்கிறார்கள்.அவர்கள் பகுதி நேரமாக அந்த வேலை செய்தாலும் உண்மையில் அவர்கள் பாலஸ்தீனப் போராளிகள். ஒரு நாள் அவர்களைத் தேடி அவர்களது இயக்கத்திலிருந்து ஜமால் என்று ஒருவன் வருகிறான். அடுத்த நாள் அவர்களிருவரையும் வைத்து ஒரு தற்கொலைத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அதற்காக இருவரையும் அனுப்பும் வரை சையத் வீட்டில் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்து அவனோடு வருகிறான். அவரை இஸ்ரேலில் வேலை எடுத்துத் தரும் நபராக சையத் அவரைத் தனது தாயிடம் அறிமுகப்படுத்துகிறான். அன்றிரவு அவனுக்கு தூக்கமில்லாமல் கழிகின்றது.
மறுநாள் தாய்,தங்கை,தம்பியிடம் விடை பெற்றுக் கொண்டு ஜமாலோடு கிளம்புகிறான். இருவரும் போராளிகள் இரகசியமாகத் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள்.அங்கு சையத்தின் நண்பன் காலத் ஏற்கனவே  வந்திருக்கிறான்.இருவரும் கட்டிக் கொள்கிறார்கள்.தற்கொலைப் படையாக மாறப்போகும் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதை ஏனைய போராளிகள்  புகைப்படம் எடுக்கிறார்கள். ஒளிப்பதிவும் செய்கிறார்கள். அதன் பின் இருவரின் முடியையும் ஒட்ட வெட்டி, மீசை தாடியைச் சவரம் செய்து குளிப்பாட்டுகிறார்கள். குரான் ஓதி இருவருக்கும் கோட்சூட் அணிவித்து கடைசியாக சக்தி வாய்ந்த வெடிகுண்டைப் பொறுத்துகிறார்கள். அவர்கள் கிளம்பு முன் போராளிகளின் தலைவர் வந்து அவர்களைச் சந்திக்கிறார்.
“வெகு சிலருக்குக் கிடைக்கும் கெளரவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் தியாக உணர்வும் வீரமும் பாராட்டுதலுக்குரியது.உங்களுக்கு ஏதாவது எங்களால் ஆக வேண்டியிருக்கிறதா?” என்று கேட்கிறார். “எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது.எங்களது சுவரொட்டிகள் இந்த நகரம் முழுவதும் இருக்க வேண்டும்” என்று சையத்தும் காலித்தும் சொல்ல போராளிகளின் தலைவர் ஏற்றுக் கொள்கிறார். “மிகப்  பெரிய தாக்குதல் திட்டம் இது. முழு உலகமுமே இதைக் கண்டு பிரமிக்கப் போகிறது.” என்று கூறி இருவரையும் கட்டிப் பிடித்து வாழ்த்தி விட்டுக் கிளம்புகிறார்.அவர் போனதும் அருகில் வரும் ஜமால் “இந்த வெடிகுண்டை உடம்பில் பொருத்தி இயக்கிய பின் நாங்கள் தான் அதை எடுக்க முடியும்.நீங்கள் எடுக்க முயற்சி செய்தால் வெடித்து விடும்” என்று எச்சரிக்கிறான்.
இருவரையும் ஏற்றிக் கொண்டு ஒரு கார் கிளம்புகிறது. “எல்லைக்கு உள்ளே அபு சபாப் என்றொருவர் உங்களைச் சந்தித்து சரியான இடத்துக்கு அழைத்துப் போவார். ஒருவர் முதலிலும் அடுத்தவர் 15 நிமிடங்களுக்குப் பின்னரும் குண்டுகளை வெடிக்க வையுங்கள். அப்போது தான் இராணுவம், காவல்துறைக்கு நிறைய இழப்புக்கள் ஏற்படும்.” என்று கூறுகிறார்.பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடைப்பட்ட யாருமற்ற மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் கார் நிற்கிறது.அவர்களை நிற்கச் சொல்லி விட்டு வேவு பார்ப்பதற்காக ஜமால் போகிறான். “நாம் சரியானதைத் தான் செய்கிறோமா?” என்று சையத் கேட்க, “ அதிலென்ன சந்தேகம்,இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் சரித்திரம் படைக்கப் போகிறோம்.ஏன் பயமாக இருக்கிறதா? என்று காலத் கேட்க சையத் “இல்லை” என்று சொல்கிறான்.
சற்று நேரத்தில் ஜமால் திரும்பி வந்து “கிளம்பலாம்.உறுதியாய் இருங்கள்.பலவீனமாக இருந்தால் குரான் எடுத்துப் படியுங்கள்.” என்று கூற இருவரும் புறப்படுகிறார்கள்.எல்லையை கடந்து அவர்களுக்காகக் காத்திருக்கும் காரை நோக்கி நடக்கையில் வேறோர் திசையிலிருந்து இன்னொரு கார் வருகின்றது. துப்பாக்கிகள் வெடிக்கின்றன.இருவரும் ஆளுக்கொரு திசையில் ஓடுகின்றனர்.காலத் வேகமாக ஓடி எல்லையைத் தாண்டி தனது நாட்டுக்குள் ஓடி வருகிறான்.ஹெலிகாப்டர் சத்தமும் கேட்க நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜமால், சையத் இல்லாமலே காரைக் கிளப்புகிறான்.சற்றுத் தாமதமாக அங்கு வந்த சையத் அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.
ஜமாலும் காலத்தும் போராளிகளின் இடத்திற்கு வருகிறார்கள். காலத்தின் உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டு அகற்றப்படுகிறது. திட்டம் தோல்வியடைந்ததால் போராளிகள் இடத்தை மாற்றுகிறார்கள். காலத் சையத்தைத் தேடி காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.
தனியே இஸ்ரேலுக்குள் நுழையும் சையத் ஒரு இடத்தில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முனையும் பொது ஒரு குழந்தையைக் கண்டு மனம் மாறுகிறான்.மீண்டும் பாலஸ்தீனத்திற்குள் நுழைகிறான். போராளிகள் அங்கிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் சையத் அவர்களைத் தேடி அந்த இடத்திற்கு வந்து, அவர்களைக் காணாமல் கோபமடைந்து காலத்தைத் தேடி கார்கள் திருத்தும் கடைக்குப் போகிறான். அங்கு தற்செயலாக காரைத் திருத்துவதற்கு வந்த அவனின் காதலி சுஹாவைச் சந்திக்கிறான்.அவன் அணிந்திருக்கும் ஆடை, சவரம் செய்யப்பட்ட முகம்,வாடிய முகத்தோற்றம் எல்லாவற்றுக்கும் காரணம் கேட்கிறாள். சையத் “ஒன்றுமில்லை” என்று சமாளிக்கிறான். அவனையும் ஏற்றிக் கொண்டு சுஹா காரில் கிளம்புகிறாள்.  சுஹாவை முத்தமிட்டு விட்டு ஒரு இடத்தில் இறங்கிக் கொள்கிறான்.

சுஹா வீட்டை அடைந்ததும் தனக்காக காலத் காத்துக் கொண்டு நிற்பதைக் காண்கிறாள். “சையத்தைக் கண்டாயா?” என்று வினாவுகிறான். அவனின் ஒருசில கதைகளிலிருந்து நடக்கவிருப்பதைத் தெரிந்து கொண்டு ஆவேசமாகிறாள். சையத்தைத் தேடி இருவரும் கிளம்புகிறார்கள். “ஏன் இப்படியெல்லாம் செய்ய நினைக்கிறீர்கள்?” என்று சுஹா கேட்க “அநீதிக்கு எதிராக யாராவது தியாகியாகத் தான் வேண்டும்” என்று காலத் சொல்கிறான். “நம்மை நாமே அழித்துக் கொண்டு மற்றவர்களைப் பழி வாங்குவதை விட இதை நாம் ஏன் ஒரு நீதிப்போராக மாற்றக்கூடாது?” என்று சுஹா மீண்டும் கேட்க “ஒரு நீதியும் இல்லாத இஸ்ரேலுக்கு எதிராக அது எவ்வாறு சாத்தியம்?” என்று காலத் கேட்கிறான்.
இருட்டான ஒரு இடத்தில் சையத் படுத்திருப்பதைப் பார்த்து விட்டு  காரை நிறுத்திவிட்டு அவனை நோக்கி ஓடி வருகிறார்கள். காலத் சையத்தை இறுகக் கட்டிக் கொள்கிறான்.மனம் வெறுத்துப் போன நிலையில் இருக்கும் சையத் காலத்தைத் தள்ளி விட்டு ஓடத் தொடங்குகிறான்.அவனை விரட்டிப் பிடிக்கும் காலத் போராளிகளின் இடத்திற்கு அழைத்து வருகிறான்.
திட்டத்தைப் பாழடித்து விட்டதாகப் போராளிகளின் தலைவர் குற்றம் சாட்டுகிறார். அதை ஏற்றுக் கொள்ளும் சையத் “ஆக்கிரமிப்புக் காரணமாக மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அந்தப் பலவீனம் காரணமாகத் தான் எனது அப்பா காட்டிக் கொடுத்தார். அதற்காக நீங்கள் அவருக்கு மரண தண்டனை கொடுத்த போது எனக்குப் பத்து வயது. அவர் அப்படிச் செய்ததற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர் செய்ததற்குப் பிராயச்சித்தமாக நான் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவேன்.” என்று கூறுகிறான்.
அடுத்த நாள் மீண்டும் தாக்குதலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்பவன் இஸ்ரேலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டு  ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னை அழைக்குமாறு கூறி ஒரு கைத்தொலைபேசியைக் கொடுக்கிறான். இருவரும் இறங்கி நடக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கையில் சுஹா சொன்னதை நினைக்கும் காலத் மனம் மாறுகின்றான். “ இந்த வழியில் அழிவு தான் அதிகரிக்குமே தவிர எங்களுக்கு வெற்றி கிடைக்காது. நாங்கள் திரும்பிப் போவோம்.” என்று காலத் சொல்ல “நாங்கள் செய்ய நினைத்ததைச் செய்து முடிப்போம். மற்றதைக் கடவுள் தீர்மானிக்கட்டும்” என்று சையத் சொல்கிறான்.அதைக் கேட்காமல் கைத்தொலைபேசி மூலம், அந்த இடத்தில் விட்டு விட்டுப் போனவனை அழைக்கிறான். யோசித்துக் கூறுமாறு அவன் சொல்ல “இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.உடனே வந்து எங்களை அழைத்துப் போ” என்று காலத் சொல்கிறான்.
கார் வந்து நிற்கக் காலத் முதலில் ஏறுகிறான்.அவன் ஏறியதும் கதவைச் சாத்தும் சையத் “கிளம்புங்கள்” என்று சத்தமாகக் கூற கார் கிளம்பி விடுகிறது. காலத் காரின் பின் கண்ணாடி வழியே பார்த்து “ சையத், சையத் “ என்று கத்துகிறான். சையத் உறுதியுடன் திரும்பி நடக்கிறான்.காலத் காருக்குள் அழுகிறான்.
பாலஸ்தீனத்தில் சுஹா சையத்தின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சையத்தின் அம்மாவும் அவனைக் காணாமல் சோகத்துடன் அமர்ந்திருக்கிறாள்.போராளிகள் ஒருபுறம் தாக்குதல் செய்தியறிய ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலில் ராணுவ வீரர்களும் பொது மக்களும் நிரம்பிய பேரூந்து.அந்தக் கூட்டத்தினுள் சையத் கோட் சூட்டுடன் அசைவற்றுத் தீர்க்கமான பார்வையுடன் அமர்ந்திருக்கிறான்.ஆழ்ந்த மெளனத்துடன் திரை வெண்ணிறமாக மாறி இருள்கிறது.
ஒரு நாடு விமானம், கப்பல், பீரங்கி மூலம் தன் மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. அதில் தனது குடும்பத்தை இழந்த ஒருவன் தனது உடலில் குண்டைக் கட்டித்  தன்னையும் மாய்த்துக் கொண்டு சிலரைக் கொல்கிறான். முன்னதை அமைதிக்கான முயற்சி என்கிறார்கள். பின்னதைத் தீவிரவாதம் என்கிறார்கள். உயிரைக் கொல்லும் எதுவுமே தீவிரவாதம் தானே. அது ஆரம்பிப்பது ஆட்சியாளர்களின் ஆணவத்திலும் அலட்சியத்திலும், பிடிவாதத்திலும் என்பதற்கு மாற்றுக் கருத்து உங்களிடம்  உண்டா?