ஞாயிறு, 27 நவம்பர், 2016

வணக்கம்


                                                         வல்வை அலையோசை
வணக்கம். நீண்ட காலத்தின் பின் வல்வை அலையோசையின் மூலம் உங்களைச் சந்திக்கிறேன்.. இந்த முறை இடைவெளி மிக………வும் நீண்டு விட்டது. (கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்) நேரமில்லை என்றெல்லாம் இல்லை. கிடைத்த நேரங்களை வல்வை அலையோசைக்கெனப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
இந்த முறை வல்வை அலையோசை வெளிவருவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்தது WhatsApp மூலம் எனது வகுப்புத் தோழர்களுடன் எனக்குக் கிடைத்த தொடர்பு தான். என்ன தான்  எனக்கு எழுத்திலும் மொழியிலும் ஆர்வம் இருந்தாலும் தொழில்நுட்பம், இலக்கியம், போராட்டம், சினிமா நகைச்சுவை, கவிதைப் புலமை என்று எனது நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பல்துறை சார்ந்த எழுத்துத் திறமையோடு ஒப்பிடும் போது நான் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.
தனியே எனது எழுத்து ஆக்கங்கள் வந்து கொண்டிருக்கும் வல்வை அலையோசையில் இவ்வளவு திறமையுடைய எனது நண்பர்களின் ஆக்கங்களும் வர வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனையவர்களின் ஆக்கங்களும் இதில் இடம்பெற வேண்டுமென்பது இதற்கு முதல் வந்த இணைய இதழில் ஏற்கனவே கூறிய விடயம் தான். ஆனால் உங்கள் ஆக்கங்கள் வெளிவருவதற்குரிய ஏற்ற, தரமான இணைய சஞ்சிகையாகக் கருதினால் உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம் என்று வாசகர்கள்(?) எல்லோருக்கும் பொதுவாகக் கூறியிருந்தேன். அது தான் தவறாய்ப் போய்விட்டது. தரமான சஞ்சிகையாக இருந்தால் தானே அனுப்புவதற்கு  என்று எல்லோரும் பேசாமல் இருந்து விட்டார்கள். அதனால் நண்பர்களிடம் அப்படிக் கேட்கக் போவதில்லை.
ஆக்கங்களைப் போல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளம்பரங்களும் பிரசுரிக்கப்படும். இந்த சஞ்சிகையில் எனது தம்பி ஜயனுடைய, எனது நண்பன் ஜெயலிங்கத்தினுடைய, மற்றும் எனது வியாபார விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  
இப்போது எங்களுடன் இல்லாத நண்பர்களுக்குச் சமர்ப்பணமாக எழுத ஆரம்பித்த கட்டுரையொன்று  தவிர்க்க முடியாத காரணங்களால் அரைகுறையாக நின்று விட்டது. இந்தக் கட்டுரை சம்பந்தமாக ஆவலை ஏற்படுத்தி எதிர்பார்க்க வைத்ததற்காக நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் கூட இது மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் போய் விட்டது. அந்த ஏமாற்றத்தைக் கொஞ்சமாவது தவிர்த்துக் கொள்வதற்காக, குறையில் நின்ற கட்டுரை சார்ந்த வேறு மூன்று விடயங்களை எழுதியிருக்கிறேன். அவை என்னென்னவென்று உள்ளடக்கத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குப் புரியும்.
வேறென்ன, நான் வழமையாக எனது வாசகர்களிடம் கேட்டுக் கொள்வதைத் தான் மீண்டும் கேட்கிறேன். ஒரு கலைஞனுக்குக் கைதட்டலைப் போல் வேறொன்றும் தேவையில்லை என்று சொல்வார்கள். அதனை விட, எனது ஆக்கங்களிலுள்ள குறைகள், தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டுவதையும், உங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன்.
மொழியின் மேல், எழுத்தின் மேல் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. திறமையும் வேண்டும் தானே. இல்லாத எழுத்துத் திறமையை, மொழி வளத்தை, வார்த்தைச் சரளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகத் தான் வல்வை அலையோசையை ஆரம்பித்தேன். எனது ஆக்கங்களில் உள்ள குறைகளையும், தவறுகளையும் நீங்கள் சுட்டிக் காட்டினால் எனது நோக்கம் நிறைவேறுவதற்குப் பேருதவியாக இருக்கும்.
ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 12,200 தடவைகள் இந்த இணையத்தளம் பார்வையிடப்பட்டிருக்கின்றது. சராசரியாக வருடத்திற்கு 2440 தடவைகள். என்னைப் பொறுத்த வரை இது திருப்தியான பெறுபேறு இல்லைதான். தனிப்பட்ட இணைய சஞ்சிகை என்பதும் இதற்குரிய ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த முறை நண்பர்கள் பக்கபலமாக இருப்பதனால் இந்த எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், என்னை அறிந்தவர்கள் எல்லோருக்கும் இன்னொரு வேண்டுகோள். வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வல்வை அலையோசையை அறிமுகப்படுத்துவீர்களா?( வாசிப்பில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இதை வாசித்தால் போய் விடும் என்று நினைத்தால்.....வேண்டாம்) நான் செய்த சுய கணிப்பின் அடிப்படையில் எனது எழுத்து 'கனதி'யானதல்ல என்பதனை உணர்கிறேன். அதை எனது எழுத்தின் குறையாகக் கருதுகிறேன். எனது எழுத்தில் 'கனதி'யான தன்மை எப்போது வருமென்று தெரியாது. அல்லது வராமலே போய் விடுமோ என்றும் தெரியாது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எழுதிய கடிதங்களைத் தவிர, எனது எழுத்து அனுபவம் முழுவதும் 'வல்வை அலையோசை'க்குள்ளேயே அடக்கி விடலாம் என்பதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.  
பேட்டியெனக் கேட்டதும் சற்றும் தயக்கமில்லாமல் சம்மதித்ததும் அதற்கென நேரம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல் அதற்கான படங்களையும் தந்துதவிய தற்காப்புக்கலை வீராங்கனை மாலதிக்கு வல்வை அலையோசையின் நன்றிகள்.
                                                             உள்ளடக்கம்

1. ரோசிக்குட்டி
2. யாழ்ப்பாணக் கோட்டை
3. தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி. மாலதி முரளியோடு ஒரு நேர்காணல்  
4. சேது பந்த சர்வாங்காசனம்
5. சுனாமி-2004 (தொடர்கதை)
6. மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மமும்
7. மறைந்த லயன் எயார் விமானத்தின் எஞ்சியுள்ள மர்மம்
8. உயிரோடு (Alive) ஆங்கிலத் திரைப்படம்
9. யானைகளின் இடுகாடு
10. உத்தேசிக்கப்பட்டுள்ள தீருவில் நீச்சல் குளமும், நாங்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த தோட்டக் கிணறுகளும்           





ரோசிக்குட்டி


ரோசிக்குட்டி என்று அழைக்கப்படும் ரோசி எங்களை விட்டுப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டன.. அவள் எங்களிடம் வந்து சேர்ந்து பதின்மூன்று  வருடங்களாகின்றன. நாய்களைப் பொறுத்தவரை பதின்மூன்று என்பது முதிர்ந்த வயதாக இருந்த போதும் கூட அவள் தோற்றத்தில் சிறியவளாக இருந்ததானால் என்னவோ எனக்கு அவள் மீது கோபம் வரும் நேரங்களைத் தவிர அவள் என்றுமே எனக்கு ரோசிக்குட்டி ஆகத் தான் இருந்தாள். சாதாரண நாய்க்கு இப்படியொரு இரங்கலா என்று உங்களில் பலர் நினைத்தாலும் வளர்ப்புப் பிராணியின் அருமையும் பிரிவும் தெரிந்தவர்கள் உங்களில் சிலராவது இருப்பீர்கள்.

அவள் இறந்து இந்த மூன்று மாதங்களில்  நாட்களில் மூன்று நாட்கள் அவள் கனவில் வந்து விட்டாள். அவள் இறந்து சில நாட்களாகி விட்ட பின்பும் கூட அவள் படுத்திருக்கும் இடங்களைக் கடந்து போகும் போது ரோசி இருக்கிறாளா என்று திரும்பிப் பார்க்குமளவுக்கு அவளது பிரிவு என்னைப் பாதித்திருந்தது.
ரோசிக்குட்டி சில சமயங்களில் இப்படியும் தூங்குவாள்.
நாங்கள் கொழும்பிலிருந்து இங்கிருக்க வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. 2002 இன் கடைசிப் பகுதியில் நாங்கள் இங்கு வந்தோம்.  2003 இன் ஆரம்பத்தில் ரோசி எங்களிடம் வந்து சேர்ந்து விட்டாள்........சித்திரை மாதமென்று நினைக்கிறேன். பானு (மைத்துனனின் மனைவி) அவளைத் தலைக்கவசத்துக்குள் வைத்துக் கொண்டு வந்தது ஞாபகமிருக்கிறது.  சுனாமி தாக்கிய போது இரண்டு நாட்கள் அவளையும் டிக்ஸனையும்(அவனும் இப்போது இல்லை. இப்போது இருப்பது டிக்ஸன் 2 ) அம்மா வீட்டில் வைத்திருந்தோம். அது தவிர அவள் முழு நாட்களும் இங்கு, எங்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறாள்.
எங்களிடம் வந்து சேர்ந்து நான்கைந்து மாதங்களிலேயே அவளின் பின்கால்கள் இரண்டும் பலமிழந்து, செயலிழந்து  போய் விட்டன. பின்பு நாங்கள் உடுப்பிட்டியிலுள்ள மிருக வைத்தியரிடம்  தொடர்ச்சியாகச் சென்று ஊசி ஏற்றியதில் ஒரு மாதிரி சற்று நடக்கக் கூடியதாக வந்து விட்டாள்.. ஆனாலும் ஓடவோ அல்லது தொடர்ச்சியாக நடக்கவோ அவளால் முடியாது. சற்றுத் தூரம் நடந்தால் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டுத் தான் நடப்பாள். அவளது நிறை முழுக்க முன் கால்களிலேயே பொறுத்ததால் அவளது முன் கால்கள் வேறு வளைந்து விட்டன.


எனது மருமகள் வக் ஷினி, டிக்ஸன் மற்றும் ரோசியுடன் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடற்கரையில்
எங்களுக்கு எங்களுடைய மகள் ஓவியா கிடைத்தது எங்களுக்குத் திருமணமாகி  எட்டு வருடங்களின் பின்பு.  ரோசியின் உடல் ஊனத்தால் ஏற்பட்ட பரிதாபமும், எங்களுக்கு நீண்ட காலம் பிள்ளை இல்லாமலிருந்த குறையும் தான் அவளை நாங்கள் செல்லமாகக் கருதியற்குக் காரணமென்று நினைக்கிறேன்.
ரோசிக்குட்டியின் கால் சுகயீனமாக இருந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவள் மலசலம் கழிக்கக் கூட எங்கள் உதவியை நாடியிருக்கிறாள். அவளிடமிருந்து வித்தியாசமாக ஒலி வந்தால் அவளைத் தூக்கிச் சென்று ஓரமாக ஒதுங்கச் செய்ய வேண்டும். சில வேளைகளில் நான் வேலையால் வரும் வரை காத்திருந்து விட்டு அவள் எழுப்பும் ஒலி இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில சமயங்களில் குட்டியாக இருக்கும் நாட்களில் சாமங்களில் அவள் சத்தமிட்டால் அருகில் சென்று கதைத்து, தடவிக் கொடுத்து  விட்டு வர வேண்டும்.


வேலையிலிருந்து வந்து ரோசியோடு சற்று நேரம்
கவி(என் மனைவி) ரோசியைத் திமிர் பிடித்தவள் என்று சொல்வது வழக்கம். அதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. அவளை அடித்தாலோ அல்லது ஏசினாலோ கோபித்துக் கொண்டு பக்கத்து வீடுகளுக்கோ அல்லது கடற்கரைக்கோ போய் விடுவாள். அழைத்தால் வர மாட்டாள். போய் அவளைத் தூக்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு. அது தவிரவும் அவளுக்குப் பிடிக்காத உணவு வைத்தால் தனது மூக்கால் மண்ணைக் கிண்டிக் கிண்டியே அந்த உணவு வைத்த கோப்பையை மூடி விடுவாள். தான் நினைத்தால் டிக்ஸனின் முதுகில் தலை வைத்துப் படுப்பாள். ஆனால் டிக்ஸன் அருகில் வந்தாலோ உறுமியே அவனை விரட்டி விடுவாள். இதை விடவும் இன்னொரு முக்கிய காரணம் உண்டு. பல மாதங்களின் பின்  கவி இந்தியாவால் திரும்பி வந்த போது ரோசிக்குட்டி கவியைக் கண்டு கொள்ளவேயில்லை.
2004 என்று நினைக்கிறேன். இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாக இருந்த காலம் அது. ஒரு நாள் இரவு டிக்சனும் ரோசியும் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தன. அடுத்த நாள் அதிகாலையிலேயே நான் வேலைக்குப் போய் விட்டேன். அடுத்த நாள் “என்னடி, இரவெல்லாம் ஒரே சத்தம்? என்ன நடந்தது?” என்று கேட்க என்னை சற்றுத் தொலைவில் கடற்கரையிலிருந்த இராணுவக் காப்பரணை நோக்கி சிணுங்கியவாறு அழைத்துச் சென்றது இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அழைத்துச் சென்றதா?’ என்று நீங்கள் சிரிக்கலாம். ஆனால்.......... என் முகத்தைப் பார்ப்பது, சிணுங்குவது, சற்றுத் தூரம் செல்வது, அமர்ந்தவாறு என்னைப் பார்ப்பது, சிணுங்குவது, நான் அருகில் சென்றதும், மீண்டும் சிணுங்கியவாறு சற்றுத் தூரம் செல்வது......... இதற்கு என்ன அர்த்தமென்று நினைக்கிறீர்கள்.?
ஒரு நாள், கவி இந்தியாவிலிருந்த போது(2008 இல்) இரவு நான் குளித்து கொண்டிருக்கும் போது கயிறு கப்பியில் மாட்டிக் கொள்ள, மாட்டிக் கொண்டதை எடுக்க நான் கிணற்றுக் கட்டில் ஏறி மாட்டிக் கொண்ட கயிற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து விட்டேன்.. மாரி காலமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படியே நீந்திக் குளித்து விட்டு ஏறி வந்திருக்கலாம். ஆனால் அது கோடை காலம். நீர் வற்றிப் போய் ஒன்றரையடி. இரண்டடி ஆழம் தான் இருந்தது. நான் தரையிறங்கிய வேகத்தில் குதிக்கால்கள் இரண்டிலும் பலத்த அடி. நான் மாமாவை அழைக்க, மாமாவோ வீட்டினுள்ளே ஆழ்ந்த நித்திரை. நான் கிணற்றினுள்ளே இருந்து அழைத்ததைக் கேட்டு விட்டு டிக்சனும், ரோசியும் பலமாக ஊளையிட்டதில்  மாமா எழுந்து கொண்டு வந்து பார்த்து விட்டு  ஏணியொன்றைக் கீழே கிணற்றில் போட, நான் அடிபட்ட காலுடன் சிரமப்பட்டு ஏணியில் ஏறி வந்து மிகுதித் தூரத்தை கயிற்றைப் பிடித்துக் கொண்டும் ஏறி கிணற்றை விட்டு வெளியில் வந்ததும் டிக்ஸனும், ரோசியும் என்னைப் பலத்த வரவேற்புடன் சந்தோஷச் சத்தமிட்டு வாலாட்டி வரவேற்று நக்கியதும் என்னால் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.  
பெரும்பாலும் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை எங்கள் நாயகனையும் நாயகியையும் குளிப்பாட்டுவது வழக்கம். குளிப்பாட்டுவதற்கு இரண்டு டிக்சன்களையும் (இப்போது எங்களுடன் இல்லாத டிக்சன் 1, மற்றும் இப்போது எங்களுடன் இருக்கும் டிக்சன் 2 ) கட்டி இழுத்துக் கொண்டு தான் போயிருக்கிறேன். ஆனால் ரோசியை, அழைத்தாலே போதும். மிகச் சில சமயங்களைத் தவிர, பெரும்பாலான நேரங்களில் பின்னங்கால்களையும் இழுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்து, நகர்ந்து இடைக்கிடை நின்று ஓய்வெடுத்துக் கொண்டு, சற்று நேரத்தின் பின் கடற்கரைக்கு வந்து சேர்ந்து விடுவாள். என்னைத் தவிர வேறு யாரும் அழைத்தாலும் அவ்வாறு வர மாட்டாள். பின்பு  கடலில் அவளை, எனது  இடுப்பளவு அல்லது நெஞ்சளவு ஆழத்திற்கு தூக்கிச் சென்று விட்டு வர அவள் நீந்தி வருவதைப் பார்க்க அழகாக இருக்கும்.  ஆனால் நீந்திய பின்பு களைத்து விடுவாள். மதியம் குளிப்பாட்டினால் அவள் வீட்டுக்கு வந்து சேர மாலை, அல்லது இரவு நேரமாகும். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரோசியைக் கடலில் குளிப்பாட்டினேன். ஆனாலும் அவள் நீந்தும் போது அவள் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவளது இறுதிக்காலம் நெருங்கி விட்டதையும் வேதனையுடன் உணர்ந்தேன்.
அவளின் நினைவுகள் ஏற்படும் போது சற்று நேரத்துக்கு நான் செய்து கொண்டிருக்கும் வேலைகளில் கவனம் சிதறிப் போகுமளவுக்கு அவளின் பிரிவு என்னைப் பாதித்திருக்கிறது. இதைத் தட்டச்சிய  பின் மனதில் உள்ள கவலை சற்றுக் குறைந்தது போன்றதொரு எண்ணம் ஏற்படுகிறது.






















 







யாழ்ப்பாணக் கோட்டை


யாழ்ப்பாணக் கோட்டை என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்? எங்கள் மண்ணுக்குப் பெருமை தேடித்தரும் ஞாபகார்த்தச் சின்னமா அல்லது எங்கள் மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை நினைவுறுத்தும் அவமானச் சின்னமா? எனக்கென்னவோ போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மட்டுமல்ல அதன் பின்பு இலங்கை இராணுவம், அதற்கு அடுத்ததாக இந்திய இராணுவம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததானால் அதனை ஆதிக்க சின்னமாகத் தான் நினைக்கத் தூண்டியது. அவ்வாறு நினைத்ததனாலென்னவோ அதைப் பற்றி அறிய ஆர்வம் வரவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் (2016 எட்டாம் மாதம்)நான் கற்பிக்கும் Lifco கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஒரு கல்விச் சுற்றுலா சென்ற போது யாழ்ப்பாணக் கோட்டைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்த சுற்றுலாவின் போது அந்நிய ஆதிக்க சின்னம் என்ற எண்ணம் மறையவில்லை என்ற போதும், அதன் பிரமாண்டம், பாவிக்கப்பட்ட தொழில்நுட்பம்,அதன் கட்டுமான அமைப்புக்கள் என்பன என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தின என்றால் அது நிச்சயமாக அது மிகையில்லை. என்னுள் ஏற்பட்ட பிரமிப்பானது வல்வை அலையோசை மூலமாக யாழ்ப்பாணக் கோட்டை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆனாலும் அதன் வரலாறு பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதனால் அது சம்பந்தமாக சில தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்ற போது அங்கே யாழ் கோட்டை பற்றிய பல அரிய தகவல்களை கலாநிதி க. குணராசா எழுதிய “யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு” என்றதொரு அருமையான நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படியொரு அருமையான நூலைப் படிக்கும் வாய்ப்பு உங்கள் எல்லோருக்கும் கிடைப்பது அரிது என்பதனால் அதில் குறிப்பெடுத்த விடயங்களையும், கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து எடுத்த விடயங்களையும் தொகுத்துத் தருகிறேன்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட போர்த்துக்கேயர்கள் 1619 ஆம் ஆண்டு தங்களது அரசை நல்லூரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றிய போது தான் இந்தக் கோட்டையை முதன் முதலாக யாழ்ப்பாணம் குடாக்கடலை அண்டிச் சதுர வடிவில் கட்டினார்கள். அதன் போது அதற்குள்ளே ஒரு தேவாலயமொன்றும், வைத்தியசாலையொன்றும், இராணுவ உயரதிகாரிக்குரிய வீடொன்றும் இதனுள்ளே அமைந்திருந்தன.

1658 இல் போர்த்துக்கேயர்களிடமிருந்து இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தருக்கு இதனுடைய அமைவிடம் பிடித்திருந்த போதிலும் இதனுடைய அமைப்பு பிடிக்கவில்லை.  இதனால் இந்தக் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டிய போது இதனை ஐங்கோண வடிவில் கட்டினர். இந்தக் புனர்நிர்மாணமானது மெல்ல மெல்ல நூற்றுக் கணக்கான வருடங்கள் நடைபெற்றதாக அறிய முடிகிறது. இந்தக் கோட்டையின் பிரதான அமைப்பாக ஐந்து கொத்தளங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் இரண்டு யாழ்ப்பாண நீரேரியின் பக்கமும் மூன்று யாழ்ப்பாண நகரப் பக்கமும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கொத்தளங்களும் கிட்டத்தட்ட 550 அடிக்கு மேற்பட்ட நீண்ட நெடிதுயர்ந்த மதில்களால் இணைக்கப் பட்டிருந்தன. கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து கோட்டையின் நீளம் 3960 அடிகளாகும். கோட்டையின் மேற்பக்கம் 20 அடிகளாகக் காணப்படினும் அதனது அடித்தளமானது 40 அடிகள் வரை அகன்று செல்லும் ஒரு அற்புத அமைப்பில் இந்தக் கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. மதிலின் வெளிப்பக்கம் 6 அடிகளாகவும் உட்பக்கம் 4 அடிகளாகவும் முருகைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதுடன் இடைப்பட்ட இந்தப் பகுதி மண்ணால் நிரப்பப்பட்டிருப்பதுடன் இந்த மதில்கள் அகழி மட்டத்திலிருந்து 30 அடிகள் உயர்ந்து நிற்கும் இம்மதில்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இதனால் தான் 1990 இல் இக்கோட்டையில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை விரட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது.

உட்கோட்டையைச் சுற்றியுள்ள அகழி இந்தக் கோட்டையின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குகிறது. 3960 அடிகள் நீளமான இந்தக் கோட்டையின் சுற்றுமதிலைச் சுற்றி 6400 அடிகள் கொண்ட இந்த அகழியின் வெளிச் சாய் சுவர் அமைந்திருக்கிறது. மதிலின் நடுவிலிருந்து 158 அடிகளாகவும், உயர் கொத்தளப் பகுதியிலிருந்து  132 அடிகளாகவும் இருப்பதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அகழியின் வெளிச் சாய் சுவரோடு சின்னக்கோட்டைகள் என்று அழைக்கப்படும் நான்கு தாழ்கொத்தளங்கள் அமைந்துள்ளன. ஒன்று முற்றவேலியின் முனியப்பர் கோயிலை நோக்கியவாறும், இன்னொன்று வீரசிங்கம் மண்டபத்தை நோக்கியவாறும் அடுத்தது பண்ணை காவல்துறை விடுதியை நோக்கியவாறும் இருப்பதைக் காணலாம். இன்னொரு தாழ் கொத்தளம் பிரதான நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முருகைக் கற்களினால் கட்டப்பட்ட இவற்றின் கூரைகளும் கூட முருகைக்கற்களினாலேயே கட்டப்பட்டுள்ளன. இந்தத் தாழ் கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகளும் உண்டு.
நிலமட்டத்தோடு அமைந்த பாதுகாப்புக் குறைவான இந்தத் தாழ் கொத்தளங்களே எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகக் கருதப்பட்டன. அவற்றினால் இயலாமற் போனால் தான் அடுத்ததாக அகழிக்கு அப்பால் முப்பதடி உயரத்தில் மிகப் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட உயர் கொத்தளங்களுக்கு எதிரியின் வருகையைத் தடுக்கும் பணி போய்ச்சேரும். அத்தோடு உயர் கொத்தளங்களுக்கு இடையில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
அக்காலத்தில் கோட்டைகளின் கதவைத் தகர்ப்பதற்கு பெரிய மரக்குற்றிகளும் யானைகளும் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக கோட்டை வாசலில் பொருத்தப்பட்ட மரக்கதவு ஆறு அங்குலம் தடிப்பானதாக இருந்ததோடு  அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கூரான ஈட்டி முனைகளும் கதவில் பொருத்தப்பட்டிருந்தன.
வாசல் சுவரருகில் கட்டப்பட்ட மணிக்கோபுரம் காண்டாமணியுடன் கட்டப்பட்டு இருந்தது. இது கோட்டையிலிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கும் நேரத்தையும் தேவாலய வழிபாட்டு நேரத்தையும் அறிவித்திருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்தக் கோட்டைக்குள் ஆளுநர்களின் மாளிகை , போர்த்துக்கேயர்களின் புதுப்பிக்கப்பட்ட தேவாலயம், அதிகாரிகளின் நிர்வாக அலுவலகங்கள், சிறைக்கூடங்கள், கைதிகளைத் தூக்கிலிடும் இடம், சமவளவான பக்கங்களைக் கொண்ட கிரேக்கச் சின்னம் வடிவிலான குரூய்ஸ் கேர்க்(Kruys Kerk) தேவாலயம்  என்பன காணப்பட்டன. இந்த குரூய்ஸ் கேர்க் தேவாலயத்தில் 1660 ஆண்டுக்குரிய கல்லறைக்கற்கள் காணப்படுவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். நான்கு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கோட்டையின் மையப்பகுதி படையினரின் பயிற்சிகளுக்கும், நடை பவனிக்கும் உதவியது.

கோட்டையின் பிரதான நிலவழி தொங்கு பாலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது  இதை விட, உள் மதிலுடன் இணைக்கப்பட்டிருந்த பாலத்தைத் தேவையான போது இறக்கிக் கொள்ளவும்  மீண்டும் ஏற்றிக் கொள்ளவும் வசதியான விதத்தில் கட்டப்பட்டிருந்தது.    
இந்தக் கோட்டைக்கு நில வழியைத் தவிர தெற்குப் பக்கம் அமைந்துள்ள சுவரில் நீர் வழியும்  இருப்பது ஒரு சுவாரசியமான விடயமாகும். அகழியுடன் யாழ்ப்பாணம் கடனீரேரி இணைக்கப்பட்டு இதற்கான வழி உருவாக்கப் பட்டிருந்தது. ஆயினும் படகு மூலம் வருவதாயின் கோட்டைக் காவலரின் அனுமதியைப் பெற்று வருவதற்கேற்ற முறையில் மேலே இழுக்கக்கூடிய கதவுடன் இந்த வாசல் அமைக்கப்பட்டிருந்தது.( இந்த வாசல் வழியாகத் தான் 1990 களில்  விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உக்கிரம் காரணமாக இராணுவத்தினர் வெளியேறி மண்டைதீவுப் பக்கம் பின்வாங்கினர்)
இப்படி ஒரு சிறப்பான சின்னத்தை (அது எத்தகைய சின்னம் என்று யோசிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்) நீங்கள் பார்த்திருந்தால் சரி. பார்க்காதிருந்தால் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அப்படி எண்ணம் உங்களுக்கு உண்டாகியிருந்தால் கலாநிதி க. குணராசா அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.   



 















தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி மாலதி முரளியோடு ஒரு நேர்காணல்

வல்வையின் முதலாவது சாண்டோ குழு வீரர்களுள் ஒருவரான முரளி,(இவரோடு சேர்ந்து ராஜாராம் மற்றும் செல்வக்குமார் ஆகியோரும் சாண்டோ பயிற்சி பெற்று, சாதனைகள் புரிந்தது குறிப்பிடக்கூடியது) வல்வையின் முதலாவது கராத்தே தேசிய மட்டப் போட்டியில் தங்கம் வென்ற  திபாகர்(மூத்த மகன்), வல்வையின் முதலாவது குறைந்த வயது கராத்தே போட்டியாளரான பரிதியன்(இளைய மகன்)  இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட குடும்பத்தில், இன்னுமொரு சிறப்பாக வல்வையிலிருந்து சென்று தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற, வடமாகாணத்தின்   முதலாவது பெண்ணாக திருமதி மாலதி முரளி. அவரது பேட்டியைப் பெற்ற முதலாவது சஞ்சிகையாக வல்வை அலையோசை. இனி அவரோடு ஒரு நேர்காணல்.




கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் சண்டையில் மாலதி இரண்டாம் இடம் பெற்ற போது
1. .உங்களுக்குக் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமைந்தது என்ன?
இதற்கு தூண்டுகோலாக இருந்தது எனது தந்தை தான். எனது தந்தை குட்டிமணி, ஜெகன் ஆகியோருடன் செயற்பட்ட ஒரு ஆரம்ப காலப் போராட்ட வீரர். ஞானலிங்கம் என்ற பெயரில் அவரைத் தெரியாவிடினும் ஜீப் பிரட்டி ஞானலிங்கம் என்று சொன்னால் பழைய ஆட்களுக்கு அவரைத் தெரியும். ஒரு குண்டுவெடிப்பில் காயமுற்ற அவரைக் காவல்துறை பிடித்து யாழ்பாணம் கோட்டைக்குப் கொண்டு போகும் போது வல்லை வெளியில் அவரைக் கொண்டு சென்ற ஜீப் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் தப்பியதால் தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.  அவருடன் எனக்கு இருக்கக் கிடைத்தது கொஞ்சக் காலம் தான். அந்தக் கொஞ்சக் காலத்திலும் அவர் “யோகாசனம் மனதுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். அதே போல் கராத்தே உடலுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். இரண்டையும் கற்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் யோகாசனத்தை முறையாகப் பயின்றவர். கராத்தேயை பழகுவதற்கு விருப்பமிருந்த போதிலும் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அப்பாவுக்கு விருப்பமான, கற்க முடியாமற் போன கலை என்ற எண்ணம் மனதில் பதிந்திருந்ததானால் எனக்கும் இயற்கையாகவே அதனில் ஆர்வமும், அதனைப் பழக வேண்டுமென்ற எண்ணமும் உண்டாகி விட்டது.
2. எத்தனையாம் ஆண்டிலிருந்து இந்த தற்பாதுகாப்புக் கலையைக் கற்று வருகிறீர்கள்? உங்களுக்கு இந்தக் கலையின்  குரு யார்?
2014 ஆம் ஆண்டிலிருந்து கற்று வருகிறேன். எனது குரு திரு. இரத்தினசோதி மாஸ்ரர் அவர்கள் ஆவார்.






மாலதியின் மூத்த மகனும் கராத்தே தேசிய மட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான திபாகர் 2010 இல் ஊரணி வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டபோது
3. எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக இந்தக் கலையை நீங்கள் தெரிவு செய்தது எதற்காக என்று கூற முடியுமா?

கராத்தே என்றால் வெறுங்கை என்று அர்த்தம். இது ஆயுதமின்றித் தற்காத்துக் கொள்ளும் முறை. எல்லா வேளைகளிலும் எம்மிடம் ஆயுதம் இருப்பதில்லை. எப்போதும் எம்மிடம் இருப்பது எமது கைகள் என்பதனால் தான். அத்துடன் நான் ஏற்கனவே கூறியது போல் இது எனது அப்பாவுக்கு விருப்பமான கலை என்பதானாலும் தான்.

 4. இவ்வாறான தற்காப்புப் பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஓட்டம், நீச்சல், கயிறடித்தல், மற்றும் யோகாசனப் பயிற்சிகள் செய்வதாக அறிந்திருக்கிறேன்? உங்களுக்கு அவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றில் ஈடுபடுவதுண்டா?

நிச்சயமாக, ஆனால் நான் ஒரு குடும்பத்தலைவியாக இருப்பதனால் என்னால் இவற்றிற்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். எனினும் இவை எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது யோகாசனமே என்பது எனது கருத்தாகும்.





கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் காட்டாவில் மாலதி மூன்றாம் இடத்தை இன்னொருவருடன் இணைந்து பெற்ற போது
5. போட்டிகளுக்காக நீங்கள் முதலில் மேடையேறியது எங்கே, எப்போது?

முதலாவது மேடை 2015.10.04  அன்று எமது தற்காப்புக் கலையகத்தால் சிகான் பொன் ரொபேர்ட் மாஸ்ரர் அவர்களின் நினைவாக தும்பளை பருத்தித்துறையில் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

6. உங்களை, இந்தக் கலையில் ஈடுபட உங்கள் கணவர் முழுமனதோடு அனுமதிக்கிறாரா? இது சம்பந்தமாக அவருடைய கருத்தென்ன?

முழு மனதோடு அனுமதிக்கிறார். அவரும் ஒரு சாண்டோ வீரர். அவருக்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆரவம் உள்ளது. அத்தோடு அவருக்கும் கராத்தேயில் விருப்பமுள்ளது. ஆனால் அவர் அதனை முழுமையாகக் கற்கவில்லை. ஆனால் எமது மகன்கள் இருவரையும் அதில் தேர்ச்சி மிக்கவராக உருவாக்க வேண்டும் என்பது எமது அவா. அவ்வேளையில் எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது அவருக்கும் மகிழ்ச்சி.

 7. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை அதிகரித்துள்ள இக்காலத்தில் இது சம்பந்தமாக அவர்களுக்குக் கூற விரும்பும் அறிவுரை என்ன?

தற்காப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. பெண்களுக்கு அத்தியாவசியமானது. சிறுவயதிலிருந்து கற்பது என்பது இக்கலையில் மிகவும் தேர்ச்சி உள்ளவராகவும், மனோபலமுள்ளவர்களாகவும் உருவாக்கும் என்பது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.



மாலதியின் இளைய மகனும் இளம் கராத்தே வீரருமான பரிதியன் தனது தாயுடனும் பயிற்சியாளரான திரு.இரட்ணசோதி அவர்களுடனும்

8. இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், உடல் மற்றும் மன ரீதியில் எத்தகையவர்களாக  இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
உறுதியுள்ளவர்களாகவும், மனோதிடமுள்ளவர்களாகவும் இருப்பது நல்லது. முடியாதென்று எதுவுமில்லை. முயற்சி செய்.இல்லையெனில் பயிற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும், அது எதுவாக இருந்தாலும்.
9. இந்நிலைமையை அடைவதற்கு நீங்கள் எதிர்கொண்ட தடைகள், முகம் கொடுத்த சவால்கள் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?
என்னைப் பொறுத்தவரை நீங்கள் குறிப்பிடும் தடைகள், சவால்கள் எல்லாவற்றையும் இனரீதியான புறக்கணிப்பு என்ற ஒரேயொரு விடயத்தில் அடக்கி விடலாம்  காட்டாவின் (கராத்தே தற்பாதுகாப்புக் கலையில் கை கால்களுடன் கூடிய உடல் அசைவுகளைத் தனியாகச் செய்து காட்டல்) போது நடுவர்களாகப் பெரும்பாலும்   பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே  இருப்பார்கள். என்ன தான் அசைவுகளைத் திறமையாகச் செய்து காட்டினாலும் அவர்கள்,  சிறுபான்மையினத்தவர்களுக்கு பெரும்பான்மைமையினத்தவர்களோடு ஒப்பிடும் போது குறைவான புள்ளிகளையே வழங்குவார்கள். ஆனால் சண்டையின் போது நாங்கள் எதிராளிக்குக் கொடுக்கும் அடிகளுக்கேற்பப் புள்ளிகள் கிடைக்கும். இதில் நாங்கள் ஏமாற்றமுறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.  
 10. இந்தத் தற்பாதுகாப்புக் கலைக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்கனவே இது சம்பந்தமாக யோசித்துள்ளீர்களா?
பயிற்சி நிலையம் ஆரம்பிப்பது நல்ல விடயம் தான். ஆனால் அதனை சிறப்பாக நடத்துவது மிகவும் கடினம். காரணம்.
  1. இன்னமும் எமது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு குறைவு.
  2. சிறந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை.
  3. மாணவர்களிடம், முழுமையாகக் கற்று முடிக்க வேண்டும் என்ற மனோதிடமின்மை.
  4. ஒழுக்கமின்மை
போன்ற காரணிகள் இதற்குத் தடையாக இருக்கின்றன.






சேது பந்த சர்வாங்காசனம்


சேது என்றால் அணை அல்லது பாலம். பந்தம் என்றால் தொடர்பு. பாரதியாரின் “சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலில் சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற வரிகள் ஞாபகத்துக்கு வருகிறதா? கழுத்தையும் முழங்காலையும் இடைப்பட்ட பகுதிகளான நெஞ்சு, வயிறு, இடுப்பு ஆகியவற்றின் பாலத்தை நினைவூட்டுவதனால் இந்த ஆசனத்துக்கு இப்படியொரு பெயர் வந்திருக்கலாம். இதனை அரைச்சக்கர ஆசனமென்றும் அழைப்பர்.( ஆனால் காற் சக்கரத்தின் தோற்றத்தைத் தான் ஒத்திருக்கிறது)  மேலே படத்திலுள்ள முறையை விட இன்னும் இரண்டு விதமாக சேது பந்த சர்வாங்காசனத்தைச் செய்யலாம். இதே முறையில் கைகளைக் கோர்த்துக் கொள்ளலாம். அல்லது கைகளைத் தாங்கியாகப் பாவித்து இடுப்பைப் பிடித்துக் கொள்ளலாம். இந்த நிலையிலிருந்து சற்று மாறி இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு  இரு கால்களையும் மேலே வானத்தை நோக்கி உயர்த்தினால் அது  சர்வாங்காசனமாகும்.


சரி, இனி இதனைச் செய்யும் முறையைப் பார்ப்போம். சாதாரணமாக மேல்நோக்கியவாறே  படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முழங்கால்களை மடித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தலையை அப்படியே வைத்துக் கொண்டு நெஞ்சு, வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளை நிலத்தை விட்டுத் தூக்க வேண்டும். இறுதியாக கைகளை அப்படியே கால்கள் இருக்கும் பக்கம் தரைக்குச் சமாந்திரமாக நீட்டி, சாதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது கைகளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கைகளைத் தாங்கியாகப் பாவித்து இடுப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தான். சிலருக்குக் கழுத்துக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தூக்குவது பெரும்பாடாக இருக்கும். அப்படியானவர்கள் யாராவது ஒரு ஆளை வைத்துத் தூக்கச் சொன்னால் என்ன என்று நினைக்கக் கூடும்.. கொஞ்சமாவது நீங்கள் அந்த நபருக்கு உங்கள் உடலை உயர்த்திக் கொடுக்கா விட்டால் அந்த நபர் முகம் குப்புற உங்கள் மேல் விழ வேண்டி வரும் விழுந்தால் நீங்கள் தரையோடு தரையாக நசுங்க வேண்டி வரும். நிலைமை சற்றுத் தீவிரமானால் அடுத்த கட்டம் சவாசனம் தான். ஆகையால் தனித்துச் செய்வதே உசிதம்.(சும்மா உங்களைப் பயமுறுத்தினேன்.) உண்மையில் இது மிகவும் இலகுவான ஆசனமாகும். நீங்கள் நித்திரையிலிருந்து எழும் போதே இதைச் செய்து கொண்டே எழும்பலாம்.( செய்யலாம் ..... சரி. எழும்பலாமா?’ என்று கேட்டால், உங்கள் உடல் நிலையைப் பொறுத்துத் தான் என்று தான் பதில் சொல்ல வேண்டும்)
இந்த ஆசனத்தைச் செய்தால் இடுப்புப் பிடிப்பு நீங்கும். (மற்றவர்களின் இடுப்பின் மீது உள்ள பிடிப்பைச் சொல்லவில்லை) இடுப்புப் பலம் பெறும். மேலும் முள்ளந்தண்டின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கும், கேடயச் சுரப்பியைத் தூண்டுவதற்கும் இந்த ஆசனம் உதவி செய்கிறது என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். கேடயச் சுரப்பியின்(Thyroid gland) தொழிற்பாடுகள் என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில் எங்கள் உடலின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நெறிப்படுத்துவதுடன் கல்சியம் சமநிலையைப் பேண உதவும் என்று இருக்கிறது.      



சுனாமி 2004( 7ஆம் பாகம்)


அந்தக் குரலைக் கேட்டதும் வேறொன்றும் யோசிக்காமல் நளினியின் வீட்டுக்குள் நுழைந்தேன். இரண்டாம் வகுப்பில் என்னைப் பின்னால் நுள்ளி விட்டு, நான் நுள்ளியதாக குமாரசாமி வாத்தியாரிடம் மாட்டி விட்ட நளினி இப்போது பெயருக்கேற்றபடி நளினமாக இருப்பதாகத் தோன்றியது. “அம்மாக்கள் யாழ்ப்பாணம் போயிருக்கினம். வர்ரதுக்குக் குறைஞ்சது இன்னும் ஒரு மணித்தியாலமெண்டாலும் ஆகும். நான் ஒருக்கா பக்கத்தில இடியப்பம் வாங்கிக் கொண்டு வாறன். நீங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருங்கோ” என்று சொல்லியவாறு நளினம் உள்ளவள் மட்டுமல்ல இங்கிதமும் அறிந்தவள் என்று நினைக்க வைத்து விட்டுப் புறப்பட்டாள்.

பிரியாவின் முகத்தைப் பார்க்கு முன் அவளது கால்களைப் பார்த்தேன். அவள் மேல்  முதலில் ஏற்பட்ட ஈர்ப்பு அவள் ஓடும் அழகைப் பார்த்து வந்தது தான். அந்த அழகான ஓட்டத்தை வழங்கும் அந்தக் கால்களுக்குத் தான் முதல் மரியாதை. “என்ன சங்ககால பெண்கள் போலக் காலப் பாக்கிறீங்கள்?” என்ற பிரியாவின் முகத்தைப் பார்த்தேன். அங்கு கவலையின் சாயல் தெரியவில்லை. மகிழ்ச்சியின் துள்ளல் தான் தெரிந்தது. அந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்ள “சந்தோஷமா இருக்கிறீங்கள் போல” என்றேன். “உங்கட விளையாட்டப் பாத்த சந்தோஷம் தான்,நல்லா விளையாடுறீங்கள்” என்றாள். உண்மையாச் சொல்லுங்கோ, கடைசி வாய்ப்ப சரியாப் பயன்படுத்தினனானேயொழிய மற்றபடி சுமாருக்கும் கீழான விளையாட்டுத் தானே” என்றேன். “எப்படியோ,நீங்க அந்த வாய்ப்பச் சரியாப் பயன்படுத்தினதால தானே உங்கட அணிக்கு வெற்றி.” என்று உரையாடலை முடித்து வைத்தாள்.

“அண்டைக்கு நீங்க வீட்ட இருந்து போன மன நிலைக்கு,உங்கள இண்டைக்கு இப்பிடி சந்தோஷமாப் பாப்பன் எண்டு நான் நினைக்கேல்ல.” என்று நான் எங்கள் விடயத்துக்குள் வர “அண்டைக்கு உங்கட அம்மாந்த கதையக் கேக்க மனது நான் வேதனப் பட்டது உண்மை தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. நிலமை ஒண்டும் கை மிஞ்சிப் போகல்ல.நாங்க ரெண்டு பேரும் சரியா நடந்தா நிலமை எங்கட கட்டுக்குள்ள தான். நான் மனம் மாறாம உறுதியா இருக்க வேணும். நீங்க உங்கள ஸ்திரப்படுத்திக்கொள்ள வேணும். அவ்வளவு தான். அதுக்குப் பிறகு நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்” என்ற பிரியாவை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். “இப்பிடி யதார்த்தமா,உறுதியா,அலட்டிக் கொள்ளாம ஒரு பாட்டி போலக் கதைக்க எங்க பழகினீங்கள்?” என்று நான் கேட்க “எல்லாம் உங்கட நினைப்பு தந்த மாற்றம் தான். இன்னும் நிறைய மாற்றங்கள நீங்க ஏற்படுத்துவீங்கள். அந்த மாற்றம் எல்லாம் நல்லா மாற்றமா இருக்க வேணும்” என்ற பிரியா திடீரென்று நான் எதிர் பார்க்காமல் ஒன்று செய்தாள். “உங்கட அணிக்கு வெற்றி தேடித் தந்த இந்த நெத்திக்கு என்ட அன்புப்பரிசு” என்று என் தலையைக் கீழே குனிய வைத்து நெற்றியில்முத்தமிட்டாள். அவளின் கைகளின் தொடுகையும் ,அவளது வாசமும், அவளது இதழ்களின் ஸ்பரிசமும் என்னை நிலை தடுமாற வைத்து ஏதோவெல்லாம் நினைக்க வைத்தது. ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொண்டு “இது முதலே தெரிஞ்சிருந்தா, நான் உதட்டாலேயே பந்த அடிச்சிருப்பன்” என்று நான் சொன்னது அவளது முதிர்ச்சியை நீக்கி வெட்கப்பட வைத்தது. “ நீங்க என்ன இப்பிடிக் கதைக்கிறீங்கள்.” என்று லேசாகச் சிணுங்கியவாறு “ உங்கட கை நோ எப்படி?” என்று கேட்டு விட்டு இன் கையைத் தொட்டுப் பார்க்கக் கையை நீட்டினாள்.

சரியாக அப்போது கதவை இலேசாகத் தட்டி விட்டு நளினி  உள்ளே நுழைந்தாள். “சொறிடி, வேளைக்கு வந்துட்டனா” என்று நளினி கேட்க “இல்லடி, கதைக்க வேண்டியதெல்லாம் கதைச்சிட்டம். நீ வந்ததும் நல்லதுக்குத் தான். இல்லாட்டி நேரம் போறதும் தெரியாது.” என்றாள் பிரியா. இன்னும் சற்று நேரம் பிரியாவுடன் கதைக்கத் தோன்றினாலும் எல்லாமே அளவோடு இருந்தால் நல்லதென்று தோன்றியது. “நாங்க சந்திக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சதுக்கு thanks  நளினி. கொஞ்சம் பயந்து கொண்டு தான் உங்கட வீட்டுக்குள்ள வந்தனான். ரெண்டாம் வகுப்பில நீங்க தந்த நுள்ளு இன்னும் ஞாபகம் இருக்கு” என்றேன். “ இனி, உங்கள நுள்ளுறதெண்டா இந்த மேடத்திண்ட அனுமதி எடுக்காம முடியுமா? அதோட இனி அதெல்லாம் வேறொருத்தர் தர வேண்டிய அவசியமேயில்ல. இனி அதெல்லாம் உங்களுக்குத் தாராளமாக் கிடைக்கும். இவ்வளவு நாள் நானும்,தமிழினியும்,மதுமதியும் தான் வாங்கிக் கொண்டிருந்தனாங்கள்” என்று நளினி பயமுறுத்தினாள். “சரி, அப்ப, இனி நான்....” என்று தொடங்கி விட்டு “உங்கள எப்ப, எங்க பார்க்கிறது? என்று கேட்போமா அல்லது வேண்டாமா என்று யோசித்தேன். “உங்களுக்கு ஏதாவது தகவல் சொல்லோனும் எண்டா அது எப்படியெண்டாலும் வந்து சேரும். நீங்க யோசிக்காமப் போங்கோ” என்று பிரியா சொன்னதும் “நான் ஒண்டும் யோசிக்கல்ல. நீங்க யோசிக்காட்டி சரி தான்” என்று கொஞ்சம் வீறாப்பாகச் சொல்லி விட்டு துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.

போகும் வழியில் எங்கள் காதலைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அனேகமான காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எங்களுக்கு ஏற்படவில்லை. “நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று கேட்கும் சங்கடம்  இருவருக்கும் ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டதால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. இரண்டு, மூன்று வருடங்களாக அவள் மேல் எனக்கு இருந்த ஈர்ப்பும், என் மேல் அவளுக்கு இருந்த விருப்பமும் காதலாக மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருந்திருக்கிறது. அந்த சந்தர்ப்பம் பிரியாவின் குடிகார மாமா மூலமாக ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கு...... இல்லையில்லை  அவருக்கு எங்கள் ஊரிலுள்ள தவறணைக்கு அழைத்துச் சென்று ஒரு போத்தல் வாங்கிக் கொடுத்தாலென்ன என்று தோன்றிய நினைப்பு யாரும் குடித்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதற்கு நான் காரணமாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுந்ததும் அந்த எண்ணம் மாறியது. 

என்னைக் கண்டதும் அம்மா “ என்னடா, முகத்தில சந்தோஷம் வழியுது? என்றாள். அவளின் மருமகளைப் பற்றிச் சொல்லத் தோன்றினாலும் கூட அதனை மறைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் என்னால் எங்கள் அணி வென்றது பற்றி சந்தோஷமாகச் சொன்னேன். “அதெல்லாம் சரிதாண்டா, இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போற A.L  results, campus க்குப் போற மாதிரி வராட்டாலும் அத வச்சு, நீ ஏதும் மேல படிக்கக் கூடியதா வந்து விடோணும் என்று அம்மா சொன்னதும் அந்த யோசனை என்னையும் தொற்றிக் கொண்டது.

கணக்கியல் எனக்கு விருப்பமான பாடம். ‘B’ அல்லது சில சமயங்களில் ‘A’ நிச்சயம் என நினைத்திருக்க இந்த முறை வந்த பங்குடமை கணக்கும் தொங்கல் கணக்கும் அந்த நினைப்பில் சங்கூதி விட்டன. ஏனைய பாடங்களான பொருளியல் வர்த்தகமும் நிதியியலும் அளவையியல்   எல்லாப் பாடங்களுமே சுமாராக ‘C” வருமளவுக்குத் தான் செய்திருக்கிறேன். அதுவும் அளவையியலில் சில நேரங்களில் ‘S’ கூட வரலாம். அப்படியிருக்க பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பேயில்லை. ஆனாலும் சில சமயங்களில் .....என்று நான் நிச்சயமாக நடக்காது என்று தோன்றும் விடயத்தை விடயத்தை நினைத்துப் பார்ப்பது போல அம்மாவுக்கும் நப்பாசை இருக்கும் தானே என்றெல்லாம் ஆரம்பித்த என் யோசனை கட்டுக்கடங்காமல், நான் வேலைக்குப் போவது, எனக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடப்பது,  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வரை நீண்டது. அதற்கு மேலும் நீள விடாமல் எனது யோசனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு சற்று நேரம் வானொலியில் பாட்டுக்கள் கேட்டு விட்டு படுக்கப் போனேன்.

                                (தொடரும்)       

மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மங்களும்

இரண்டரை வருடங்களுக்கு முன்பு (2014) மூன்றாம் மாதம் எட்டாம் திகதி மலேசியாவில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற  மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH370 என்ற விமானம் மாயமாகி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் அதற்கு என்ன நேர்ந்தது என்பது  இன்னும் உலக மக்கள் அனைவரையும் உலுக்கி வரும் கேள்வி. ஆதாரமாக ஒன்றும் கிடைக்காத போதும் அனுமானங்களுக்குக் குறைவில்லை. அத்தகைய சில அனுமானங்கள்,
அந்தமான்

அந்த விமானத்தின் வழமையான பறப்புப் பாதையையும்,அதிலிருந்து கடைசியாகக் கிடைத்த சமிக்ஞையையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். அந்த நாடுகள் நட்பு நாடுகள் ஆதலால் அவற்றிற்கிடையே ராடார் கருவிகளின் அவதானம் மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. இதனை வாய்ப்பாகக் கொண்டு அந்தமான் தீவொன்றினுள் விமானத்தை இறக்கியிருக்கலாம். இங்கு விமானங்கள் ஏறிஇறங்கும் ஒடுபாதைகள் நான்கு இருந்தாலும் கூட இந்திய இராணுவத்தின் கண்ணில் படாமல் இறக்குவது என்பது மிகக் கடினமான பணியாகவே இருக்கும். கடினமான பணியே தவிர சாத்தியமில்லாத ஒன்றல்ல.ஏனெனில் 570 க்கு மேற்பட்ட அந்தமான் தீவுகளில் 36 தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர். இந்த மாதிரியான இடங்களில் விமானத்தின் சக்கரங்களை வெளிப்படுத்தி இறக்கும் போது கடற்கரை மணல் பகுதிகளில் விமானத்தின் கீழ்ப்பகுதி புதைந்து அழுத்தம் மற்றும் வேகம் காரணமாக கிழிந்து கொண்டு விட வாய்ப்புண்டு. சக்கரங்களை வெளிப்படுத்தா விட்டால் மோதலோடு கூடிய இறக்கத்தின் போது விமானத்தின் வால்ப்பகுதி சேதமடைந்து அதில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் காரணமாக விமானம் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மீறி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும் கூட மீள அதைக் கிளப்புவது என்பது சாத்தியமில்லாத விடயம்.
கசகஸ்தான்   


இந்த விமானத்தின் தேடுதல் வடக்குப் பக்கமாக கசகஸ்தான் வரை விஸ்தரிக்கப்பட்டதால் பாலைவனப்பகுதிகள் நிரம்பிய இந்த நாட்டில் தரை இறக்கப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க இடமுண்டு.விமானத்தை இறக்குவதற்கு கடற்கரைப் பகுதிகளை விட பாலைவனப்பகுதிகள் பாதுகாப்பானவையே என்று பெரும்பாலான விமானிகள் கருதுகின்றனர். ஆள் நடமாடமில்லாத இடத்தில் விமானத்தை இறக்க வேண்டுமென்று யாரும் கருதியிருந்தால் அவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறப்பான தெரிவாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் இறக்க வேண்டுமாயின் ராடார் கருவிகளின் நோட்டமும்,இராணுவ அழுத்தமும் அதிகமுள்ள இந்தியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலால் பறந்திருக்க வேண்டும். ஆயினும் என்ன தான் ராடார் கருவிகளின் நோட்டம் இருந்தாலும் ஆசிய நாடுகளின் ராடார் கருவிகளில் ஏற்படும் வழமையான  சிறு தவறுகள் அல்லது கோளாறுகள் இங்கேயும் ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு பெரிய பறவைகள் கூட்டத்தை விமானம் என்று கருதும் ராடார்கள் இருக்கும் பட்சத்தில் இந்த விமானத்தை  பறவைக்கூட்டம் என்று கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ‘Manifest’ என்று அழைக்கப்படும் விமானத்திலுள்ள பொருட்களின் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாததற்கு விமானத்தில் ஏதேனும் மனித குலத்திற்கு ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு ஒரு விஞஞானியாலோ அல்லது ஒரு விலையுயர்ந்த ஒரு பொருள் ஒரு செல்வந்தராலோ எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும். இதனை மோப்பம் பிடித்த யாரும் விமானத்தைக் கடத்தியிருக்கலாம்.
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்கக் கடல்
செயற்கைக்கோள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற தகவலிலிருந்து மலேசிய ராடார் கருவிகளிருந்து நீங்கிய பின் 5 முதல் 6 மணித்தியாலங்களுக்கு இந்த விமானம் பறந்திருக்கிறது.இதனை வைத்துப் பார்க்கும் போதும் ஏனைய நாட்டு ராடார் கருவிகளில் இதனை அவதானித்திருக்க முடியவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போதும் இது பெரும்பாலும் தெற்கு நோக்கி அதாவது அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்க கடலுக்கு மேலாக எரிபொருள் தீரும் வரை பறந்து பின்பு கடலில் மூழ்கியிருக்கலாம்.
வட மேற்கு சீனாவிலுள்ள டக்லமகான் பாலைவனம்
239 பயணிகளில் 153 பேர் சீனர்களாக இருந்தது இன்னொரு அனுமானத்திற்கு வழிகோலியிருக்கிறது. அதாவது சீனாவில் பிரிவினை கோரும் உய்குர் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி சீனா, கிருகிஸ்தான் எல்லையிலுள்ள உலகத்திலேயே மணல் நிரம்பிய பாலைவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும்  டக்லமகான் பாலைவனத்தில் தரையிறக்கியிருக்கலாம் என்பதே அது. ஆனாலும் எத்தனையோ நாடுகளின் ராடார் கருவிகளின் அவதானத்திற்குத் தப்புவதும் சாத்தியக்குறைவான விடயம் தான்.
தீ அல்லது வேறு ஏதேனும் விமானக் கோளாறுகளிலிருந்து தப்புவதற்கு லங்காவி தீவை நோக்கி   
அப்படி ஏதேனும் ஏற்பட்டிருந்தால், போக வேண்டிய பாதையிலிருந்து விலகி இடப்பக்கமாகத் திருப்பி அருகே உள்ள விமான நிலையத்தை அடைய எடுத்த முயற்சி சரியான செயலென்றே அனேகமான விமானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சரி,அப்படி ஏதும் ஏற்பட்டிருந்தால் கோலாலம்பூருக்கே திரும்பியிருக்கலாமே என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அப்படித் திரும்பி வரும் போது 8000 அடி உயரமான மலைத்தொடர்களை எதிர் கொள்ள வேண்டிய ஆபத்து உண்டு.  ஆகவே இரவு நேரத்தில் அவ்வாறான ஆபத்தைத் தவிர்த்து பரிச்சயமான, தடைகளற்ற கடற்பரப்பின் மேலே லங்காவி தீவை நோக்கிப் பறப்பது ஒப்பீட்டு ரீதியில் ஆபத்துக் குறைவானது என்று விமானிகள் கருதியிருந்தால் அது சரியானது தான். ஆனாலும் துரதிஷ்டவசமாக போய்ச் சேர நினைத்த இடத்தை அடைவதற்கு முன்னமே அனர்த்தம் நிகழ்ந்து விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம்.
ஆனாலும் இந்த அனுமானத்தில் உள்ள முரண்பாடு என்னவெனில், அப்படியான ஆபத்துக்கள் நேரும் போது விமானிகள் பெரும்பாலும் தானியங்கி மற்றும் கணனிக்  கட்டுப்பாட்டை விடுத்து விமானத்தைக் கைகளால் தான் செலுத்த விரும்புவார்கள். ஆயினும் இங்கே தலைமை விமானிக்கும் முதல் அதிகாரிக்கும் இடையே முழங்கால் அளவு உயரத்தில் இருந்த கணனியின் விசைப்பலகையில் ஏழு அல்லது எட்டு எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்பட்டு அந்தக் கணனி உத்தரவின் மூலமே விமானத்தின் போக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே இதனை ஒரு சதிச்செயலாகக் கருதவும் இடமுண்டு.
பாகிஸ்தான்
இதுவரை விமானங்கள் கடத்தப்படாமல் விபத்துக்காகாமல் மர்மமாக மறைந்த சம்பவங்கள் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. என்றாலும் பெரும் எண்ணிக்கையில் பயணிகள் மறைந்த சம்பவம் இதனைப்போல் மிகச்சில தான். பின் லாடன் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்த வடக்குப் பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு இலேசான அனுமானம், கடத்தப்பட்டிருந்தால் இவ்வளவு காலம் கோரிக்கை எழாமல் இருந்திருக்காது என்ற வாதத்தாலும் இது அதிகூடிய இராணுவ ராடார்களின் அவதானம் இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை என்பதால் அந்த ராடார்களின் நோட்டத்திற்குத் தப்பி விமானத்தை இறக்கியிருக்க முடியாது என்ற வாதத்தாலும் அடிபட்டுப்போகிறது.
இன்னொரு விமானத்தின் நிழலில்
சாத்தியம் மிகக் குறைந்த அனுமானம். அதாவது சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட SIA68 விமானம் மற்றும் MH370 விமானத்தின் பாதையையும்,நேரத்தையும் அவதானிக்கும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஒரே நேரத்தில் ஒரே  திசையில் பறந்த அபூர்வமான நிகழ்வைக் அவதானிக்க முடிகிறது. ராடார் கருவியில் இலகுவாக தனது உருவத்தை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் டிரான்ஸ்பொண்டர் கருவியை இயக்காமல் MH370 பறந்திருக்குமாயின்  இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலாக இந்த இரு விமானங்களும் பறக்கும் போது இரு பீப் ஒலி கேட்காமல் ஒரு பீப் ஒலியுடன் விமானம் ஒன்று பறப்பதாக இனங்காணப்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் இரு விமானங்களின் பறப்புப் பாதையும் வேறுபட்ட பின் MH370 சீனாவின் சின்சியாங் அல்லது கிருகிஸ்தான் நாடுகளில் இறக்கப்பட்டிருக்கலாம்.
இதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட சாதாரண பொதுவான ராடார் கருவிகளிலேயே இந்தத் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் அதியுயர் பாதுகாப்புக்காகப் பாவிக்கப்படும் இராணுவ ராடார் கருவிகள் டிரான்ஸ்பொண்டர் கருவிகளை இயக்காமலே விமானத்தை அடையாளம் கண்டு கொள்ளக்கூடியன.1000 மீற்றருக்கும் குறைவான இடைவெளியில் இரு விமானங்களும் பறந்திருக்குமாயின் மட்டுமே இராணுவ ராடார் கருவிகளில் இனங்காணத் தவறியிருக்கலாம்.1000 மீற்றர் என்பது எங்களுக்குப் பெரிதாகத் தோன்றினாலும் விமானங்களைப் பொருத்த வரை இது ஒரு மிகக் குறுகிய தூரமே.  விமானத்தைக் கடத்துபவர்கள் இவ்வளவு கச்சிதமாதத் திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் கூட இப்படியானதொரு ஆபத்தை எதிர் கொள்ளத் துணிந்திருப்பார்களா என்பது மெய் சிலிர்க்க வைக்கும் கேள்வி தான்.
விமானத்தினுள்ளே  கலவரம்.....?  
எப்படிப் பார்த்தாலும் ஒரு விதமான இடையூறுகளும் அல்லது சதித்திட்டமும் இன்றி விமானம் காணாமல் போயிருக்கக்கூடிய சாத்தியம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் பறக்கக் கூடிய அதியுயர் எல்லையையும் மீறி 13700 மீற்றர்(45,000 அடி) பறந்த விமானம் இன்னொரு கட்டத்தில் மிகத் தாழ்வாகப் பறந்தது கோலாலம்பூரின் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பதிவாகியிருக்கிறது. விமானிகளின் அறை வெளியே இருந்து திறக்க முடியாதபடி இருந்தாலும் கூட கடத்தல்காரர்கள் வன்முறையைப் பாவித்து உள்ளே நுழைந்ததைத் தொடர்ந்து அவர்களை நிலைகுலையச் செய்ய இந்த உபாயம் கைக்கொள்ளப்பாட்டிருக்கலாம். 45,000 அடி உயரத்தில் பறந்த போது பயணிகளுக்கு உயிர்வாயு தேவைப்பட்டு, உயிர்வாயு முகமூடி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இவை 12 முதல் 15 நிமிடங்கள் வரை தான் பயன்படுத்தப்படலாம்.அத்துடன் மிக அதிக உயரத்துக்கும், மிகக் குறைவான உயரத்துக்கும் குறுகிய நேரத்தில் போய் வரும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழுத்தமும் பயணிகளின் உயிரைக் காவு கொண்டிருக்கலாம்.
9/11 ஒத்த தாக்குதலை நடத்துவதற்குத் திட்டம்...?
 இதுவும் மக்கள் மத்தியில் பரபரப்பாகக் கதைக்கப்பட்ட அனுமானம் தான். அதாவது 2001 ஆம் ஆண்டு அல் குவைதா தீவிரவாதிகள் மூலம்  நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது போல் இன்னொரு இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கு ஏதாவதொரு தீவிரவாத இயக்கத்தால் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் தான் அது. விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதையும் அதனை மறைத்து வைப்பதையும் சாத்தியக் குறைவான விடயங்கள் என்று கருதினாலும் கூட நடக்க முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் அதே சமயம் விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் பறப்பதென்பது சாத்தியமே இல்லாத விடயம் என்று விமானிகளும் விமானத்துறை சார்ந்த வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள்.
இராணுவம் சுட்டு விழுத்தியதா...?      
 விமானத்தில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமையைத் தொடர்ந்து அல்லது கடத்தல்காரர்களால் விமானம் கடத்திச் செல்லப்பட்டு பாதை மாறிச் செல்லும் வழியில்  ஏதேனும் ஒரு நாட்டு இராணுவம் சுட்டு விழுத்தியிருக்கலாம்.. இது மற்ற அனுமானங்களைப் போல் சாத்தியக் குறைவான விடயம் அல்ல. தவறுதலாக என்றாலும் பயணிகள் நிறைந்த விமானத்தைச் சுட்டு விழுத்தியிருந்தால் எந்த ஒரு நாட்டு இராணுவமும் பெருமையுடன் உரிமை கோரப் போவதில்லை. ஆனாலும் அப்படிச் செய்திருந்தால் கூட அது ஒருத்தர் மட்டும் சார்ந்த தாக்குதலாக இருக்காது என்பதால் இவ்வளவு காலம் அதனை மறைத்து வைத்தல் சாத்தியமா என்பது ஒரு நியாயமான கேள்வி தான். ஒருவேளை ஏதாவது ஒரு நாடு அப்படித் தாக்குதல் நடத்தியிருந்து பின்பு ஒரு காலத்தில் தெரிய வந்தால் தாக்குதல் நடத்தியதை விட இவ்வளவு காலம் மறைத்து வைத்தது தான் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அந்த நாடு கடும் கண்டனங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.       
(இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான தகவல்களும் படங்களும் பி.பி.சி இணையத் தளத்திலிருந்தும், டெலிகிராஃப் இணையத் தளத்திலிருந்தும்,விக்கிபீடியா கலைக்களஞ்சியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.)