அந்தக் குரலைக் கேட்டதும் வேறொன்றும்
யோசிக்காமல் நளினியின் வீட்டுக்குள் நுழைந்தேன். இரண்டாம் வகுப்பில் என்னைப்
பின்னால் நுள்ளி விட்டு, நான் நுள்ளியதாக குமாரசாமி
வாத்தியாரிடம் மாட்டி விட்ட நளினி இப்போது பெயருக்கேற்றபடி நளினமாக இருப்பதாகத்
தோன்றியது. “அம்மாக்கள் யாழ்ப்பாணம் போயிருக்கினம். வர்ரதுக்குக் குறைஞ்சது
இன்னும் ஒரு மணித்தியாலமெண்டாலும் ஆகும். நான் ஒருக்கா
பக்கத்தில இடியப்பம் வாங்கிக் கொண்டு வாறன். நீங்க ரெண்டு பேரும் கதைச்சுக்
கொண்டிருங்கோ” என்று சொல்லியவாறு நளினம் உள்ளவள் மட்டுமல்ல இங்கிதமும் அறிந்தவள்
என்று நினைக்க வைத்து விட்டுப் புறப்பட்டாள்.
பிரியாவின் முகத்தைப் பார்க்கு முன் அவளது
கால்களைப் பார்த்தேன். அவள் மேல் முதலில்
ஏற்பட்ட ஈர்ப்பு அவள் ஓடும் அழகைப் பார்த்து வந்தது தான். அந்த அழகான ஓட்டத்தை
வழங்கும் அந்தக் கால்களுக்குத் தான் முதல் மரியாதை. “என்ன சங்ககால பெண்கள் போலக்
காலப் பாக்கிறீங்கள்?” என்ற பிரியாவின் முகத்தைப்
பார்த்தேன். அங்கு கவலையின் சாயல் தெரியவில்லை. மகிழ்ச்சியின் துள்ளல் தான்
தெரிந்தது. அந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்ள “சந்தோஷமா இருக்கிறீங்கள்
போல” என்றேன். “உங்கட விளையாட்டப் பாத்த சந்தோஷம் தான்,நல்லா
விளையாடுறீங்கள்” என்றாள். “உண்மையாச் சொல்லுங்கோ, கடைசி வாய்ப்ப சரியாப் பயன்படுத்தினனானேயொழிய மற்றபடி சுமாருக்கும் கீழான
விளையாட்டுத் தானே” என்றேன். “எப்படியோ,நீங்க அந்த வாய்ப்பச்
சரியாப் பயன்படுத்தினதால தானே உங்கட அணிக்கு வெற்றி.” என்று உரையாடலை முடித்து
வைத்தாள்.
“அண்டைக்கு நீங்க வீட்ட இருந்து போன மன
நிலைக்கு,உங்கள இண்டைக்கு இப்பிடி சந்தோஷமாப் பாப்பன் எண்டு நான் நினைக்கேல்ல.” என்று
நான் எங்கள் விடயத்துக்குள் வர “அண்டைக்கு உங்கட அம்மாந்த கதையக் கேக்க மனது நான்
வேதனப் பட்டது உண்மை தான். ஆனா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. நிலமை ஒண்டும் கை
மிஞ்சிப் போகல்ல.நாங்க ரெண்டு பேரும் சரியா நடந்தா நிலமை எங்கட கட்டுக்குள்ள தான்.
நான் மனம் மாறாம உறுதியா இருக்க வேணும். நீங்க உங்கள ஸ்திரப்படுத்திக்கொள்ள வேணும்.
அவ்வளவு தான். அதுக்குப் பிறகு நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்” என்ற
பிரியாவை நான் ஆச்சரியமாகப் பார்த்தேன். “இப்பிடி யதார்த்தமா,உறுதியா,அலட்டிக் கொள்ளாம ஒரு பாட்டி போலக் கதைக்க
எங்க பழகினீங்கள்?” என்று நான் கேட்க “எல்லாம் உங்கட
நினைப்பு தந்த மாற்றம் தான். இன்னும் நிறைய மாற்றங்கள நீங்க ஏற்படுத்துவீங்கள்.
அந்த மாற்றம் எல்லாம் நல்லா மாற்றமா இருக்க வேணும்” என்ற பிரியா திடீரென்று நான்
எதிர் பார்க்காமல் ஒன்று செய்தாள். “உங்கட அணிக்கு வெற்றி தேடித் தந்த இந்த
நெத்திக்கு என்ட அன்புப்பரிசு” என்று என் தலையைக் கீழே குனிய வைத்து நெற்றியில்முத்தமிட்டாள்.
அவளின் கைகளின் தொடுகையும் ,அவளது வாசமும், அவளது இதழ்களின் ஸ்பரிசமும் என்னை நிலை தடுமாற வைத்து ஏதோவெல்லாம்
நினைக்க வைத்தது. ஒருவாறு என்னைச் சமாளித்துக் கொண்டு “இது முதலே தெரிஞ்சிருந்தா, நான் உதட்டாலேயே பந்த அடிச்சிருப்பன்” என்று நான் சொன்னது அவளது
முதிர்ச்சியை நீக்கி வெட்கப்பட வைத்தது. “ நீங்க என்ன இப்பிடிக் கதைக்கிறீங்கள்.”
என்று லேசாகச் சிணுங்கியவாறு “ உங்கட கை நோ எப்படி?” என்று
கேட்டு விட்டு இன் கையைத் தொட்டுப் பார்க்கக் கையை நீட்டினாள்.
சரியாக அப்போது கதவை இலேசாகத் தட்டி விட்டு
நளினி உள்ளே நுழைந்தாள். “சொறிடி, வேளைக்கு வந்துட்டனா” என்று நளினி கேட்க “இல்லடி, கதைக்க
வேண்டியதெல்லாம் கதைச்சிட்டம். நீ வந்ததும் நல்லதுக்குத் தான். இல்லாட்டி நேரம்
போறதும் தெரியாது.” என்றாள் பிரியா. இன்னும் சற்று நேரம் பிரியாவுடன் கதைக்கத்
தோன்றினாலும் எல்லாமே அளவோடு இருந்தால் நல்லதென்று தோன்றியது. “நாங்க
சந்திக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சதுக்கு thanks நளினி. கொஞ்சம் பயந்து கொண்டு தான் உங்கட
வீட்டுக்குள்ள வந்தனான். ரெண்டாம் வகுப்பில நீங்க தந்த நுள்ளு இன்னும் ஞாபகம்
இருக்கு” என்றேன். “ இனி, உங்கள நுள்ளுறதெண்டா இந்த
மேடத்திண்ட அனுமதி எடுக்காம முடியுமா? அதோட இனி அதெல்லாம்
வேறொருத்தர் தர வேண்டிய அவசியமேயில்ல. இனி அதெல்லாம் உங்களுக்குத் தாராளமாக்
கிடைக்கும். இவ்வளவு நாள் நானும்,தமிழினியும்,மதுமதியும் தான் வாங்கிக் கொண்டிருந்தனாங்கள்” என்று நளினி பயமுறுத்தினாள்.
“சரி, அப்ப, இனி நான்....” என்று
தொடங்கி விட்டு “உங்கள எப்ப, எங்க பார்க்கிறது? என்று கேட்போமா அல்லது வேண்டாமா என்று யோசித்தேன். “உங்களுக்கு ஏதாவது
தகவல் சொல்லோனும் எண்டா அது எப்படியெண்டாலும் வந்து சேரும். நீங்க யோசிக்காமப்
போங்கோ” என்று பிரியா சொன்னதும் “நான் ஒண்டும் யோசிக்கல்ல. நீங்க யோசிக்காட்டி சரி
தான்” என்று கொஞ்சம் வீறாப்பாகச் சொல்லி விட்டு துவிச்சக்கர வண்டியை எடுத்துக்
கொண்டு புறப்பட்டேன்.
போகும் வழியில் எங்கள் காதலைப் பற்றி
நினைத்துப் பார்த்தேன். அனேகமான காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் எங்களுக்கு
ஏற்படவில்லை. “நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா?’ என்று கேட்கும் சங்கடம் இருவருக்கும்
ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டதால் அதற்கு அவசியம்
ஏற்படவில்லை. இரண்டு, மூன்று வருடங்களாக அவள் மேல் எனக்கு
இருந்த ஈர்ப்பும், என் மேல் அவளுக்கு இருந்த விருப்பமும்
காதலாக மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருந்திருக்கிறது. அந்த சந்தர்ப்பம்
பிரியாவின் குடிகார மாமா மூலமாக ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கு......
இல்லையில்லை அவருக்கு எங்கள் ஊரிலுள்ள
தவறணைக்கு அழைத்துச் சென்று ஒரு போத்தல் வாங்கிக் கொடுத்தாலென்ன என்று தோன்றிய
நினைப்பு யாரும் குடித்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்வதற்கு நான் காரணமாக
இருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுந்ததும் அந்த எண்ணம் மாறியது.
என்னைக் கண்டதும் அம்மா “ என்னடா, முகத்தில சந்தோஷம் வழியுது? என்றாள். அவளின்
மருமகளைப் பற்றிச் சொல்லத் தோன்றினாலும் கூட அதனை மறைத்துக் கொண்டு கடைசி
நேரத்தில் என்னால் எங்கள் அணி வென்றது பற்றி சந்தோஷமாகச் சொன்னேன். “அதெல்லாம்
சரிதாண்டா, இன்னும் கொஞ்ச நாள்ல வரப்போற A.L results, campus
க்குப் போற மாதிரி வராட்டாலும் அத வச்சு, நீ
ஏதும் மேல படிக்கக் கூடியதா வந்து விடோணும்” என்று அம்மா
சொன்னதும் அந்த யோசனை என்னையும் தொற்றிக் கொண்டது.
கணக்கியல் எனக்கு விருப்பமான பாடம். ‘B’ அல்லது சில சமயங்களில் ‘A’ நிச்சயம் என
நினைத்திருக்க இந்த முறை வந்த ‘பங்குடமை’ கணக்கும் தொங்கல் கணக்கும் அந்த நினைப்பில் சங்கூதி விட்டன. ஏனைய
பாடங்களான ‘பொருளியல்’ வர்த்தகமும்
நிதியியலும்’ ‘அளவையியல்’ எல்லாப் பாடங்களுமே சுமாராக ‘C” வருமளவுக்குத் தான் செய்திருக்கிறேன். அதுவும் அளவையியலில் சில
நேரங்களில் ‘S’ கூட வரலாம். அப்படியிருக்க பல்கலைக்கழகம்
செல்வதற்கான வாய்ப்பேயில்லை. ஆனாலும் சில சமயங்களில் .....என்று நான் நிச்சயமாக
நடக்காது என்று தோன்றும் விடயத்தை விடயத்தை நினைத்துப் பார்ப்பது போல
அம்மாவுக்கும் நப்பாசை இருக்கும் தானே என்றெல்லாம் ஆரம்பித்த என் யோசனை கட்டுக்கடங்காமல், நான் வேலைக்குப் போவது, எனக்கும் பிரியாவுக்கும்
திருமணம் நடப்பது,
எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வரை நீண்டது. அதற்கு மேலும் நீள
விடாமல் எனது யோசனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு
சற்று நேரம் வானொலியில் பாட்டுக்கள் கேட்டு விட்டு படுக்கப் போனேன்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக