ஞாயிறு, 27 நவம்பர், 2016

யாழ்ப்பாணக் கோட்டை


யாழ்ப்பாணக் கோட்டை என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்? எங்கள் மண்ணுக்குப் பெருமை தேடித்தரும் ஞாபகார்த்தச் சின்னமா அல்லது எங்கள் மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை நினைவுறுத்தும் அவமானச் சின்னமா? எனக்கென்னவோ போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மட்டுமல்ல அதன் பின்பு இலங்கை இராணுவம், அதற்கு அடுத்ததாக இந்திய இராணுவம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததானால் அதனை ஆதிக்க சின்னமாகத் தான் நினைக்கத் தூண்டியது. அவ்வாறு நினைத்ததனாலென்னவோ அதைப் பற்றி அறிய ஆர்வம் வரவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் (2016 எட்டாம் மாதம்)நான் கற்பிக்கும் Lifco கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஒரு கல்விச் சுற்றுலா சென்ற போது யாழ்ப்பாணக் கோட்டைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்த சுற்றுலாவின் போது அந்நிய ஆதிக்க சின்னம் என்ற எண்ணம் மறையவில்லை என்ற போதும், அதன் பிரமாண்டம், பாவிக்கப்பட்ட தொழில்நுட்பம்,அதன் கட்டுமான அமைப்புக்கள் என்பன என்னுள் பிரமிப்பை ஏற்படுத்தின என்றால் அது நிச்சயமாக அது மிகையில்லை. என்னுள் ஏற்பட்ட பிரமிப்பானது வல்வை அலையோசை மூலமாக யாழ்ப்பாணக் கோட்டை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆனாலும் அதன் வரலாறு பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதனால் அது சம்பந்தமாக சில தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்ற போது அங்கே யாழ் கோட்டை பற்றிய பல அரிய தகவல்களை கலாநிதி க. குணராசா எழுதிய “யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு” என்றதொரு அருமையான நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அப்படியொரு அருமையான நூலைப் படிக்கும் வாய்ப்பு உங்கள் எல்லோருக்கும் கிடைப்பது அரிது என்பதனால் அதில் குறிப்பெடுத்த விடயங்களையும், கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து எடுத்த விடயங்களையும் தொகுத்துத் தருகிறேன்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட போர்த்துக்கேயர்கள் 1619 ஆம் ஆண்டு தங்களது அரசை நல்லூரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றிய போது தான் இந்தக் கோட்டையை முதன் முதலாக யாழ்ப்பாணம் குடாக்கடலை அண்டிச் சதுர வடிவில் கட்டினார்கள். அதன் போது அதற்குள்ளே ஒரு தேவாலயமொன்றும், வைத்தியசாலையொன்றும், இராணுவ உயரதிகாரிக்குரிய வீடொன்றும் இதனுள்ளே அமைந்திருந்தன.

1658 இல் போர்த்துக்கேயர்களிடமிருந்து இதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தருக்கு இதனுடைய அமைவிடம் பிடித்திருந்த போதிலும் இதனுடைய அமைப்பு பிடிக்கவில்லை.  இதனால் இந்தக் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டிய போது இதனை ஐங்கோண வடிவில் கட்டினர். இந்தக் புனர்நிர்மாணமானது மெல்ல மெல்ல நூற்றுக் கணக்கான வருடங்கள் நடைபெற்றதாக அறிய முடிகிறது. இந்தக் கோட்டையின் பிரதான அமைப்பாக ஐந்து கொத்தளங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் இரண்டு யாழ்ப்பாண நீரேரியின் பக்கமும் மூன்று யாழ்ப்பாண நகரப் பக்கமும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கொத்தளங்களும் கிட்டத்தட்ட 550 அடிக்கு மேற்பட்ட நீண்ட நெடிதுயர்ந்த மதில்களால் இணைக்கப் பட்டிருந்தன. கொத்தளங்களின் சுற்றளவைத் தவிர்த்து கோட்டையின் நீளம் 3960 அடிகளாகும். கோட்டையின் மேற்பக்கம் 20 அடிகளாகக் காணப்படினும் அதனது அடித்தளமானது 40 அடிகள் வரை அகன்று செல்லும் ஒரு அற்புத அமைப்பில் இந்தக் கோட்டையானது கட்டப்பட்டுள்ளது. மதிலின் வெளிப்பக்கம் 6 அடிகளாகவும் உட்பக்கம் 4 அடிகளாகவும் முருகைக்கற்களால் கட்டப்பட்டிருப்பதுடன் இடைப்பட்ட இந்தப் பகுதி மண்ணால் நிரப்பப்பட்டிருப்பதுடன் இந்த மதில்கள் அகழி மட்டத்திலிருந்து 30 அடிகள் உயர்ந்து நிற்கும் இம்மதில்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இதனால் தான் 1990 இல் இக்கோட்டையில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை விரட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது.

உட்கோட்டையைச் சுற்றியுள்ள அகழி இந்தக் கோட்டையின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குகிறது. 3960 அடிகள் நீளமான இந்தக் கோட்டையின் சுற்றுமதிலைச் சுற்றி 6400 அடிகள் கொண்ட இந்த அகழியின் வெளிச் சாய் சுவர் அமைந்திருக்கிறது. மதிலின் நடுவிலிருந்து 158 அடிகளாகவும், உயர் கொத்தளப் பகுதியிலிருந்து  132 அடிகளாகவும் இருப்பதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அகழியின் வெளிச் சாய் சுவரோடு சின்னக்கோட்டைகள் என்று அழைக்கப்படும் நான்கு தாழ்கொத்தளங்கள் அமைந்துள்ளன. ஒன்று முற்றவேலியின் முனியப்பர் கோயிலை நோக்கியவாறும், இன்னொன்று வீரசிங்கம் மண்டபத்தை நோக்கியவாறும் அடுத்தது பண்ணை காவல்துறை விடுதியை நோக்கியவாறும் இருப்பதைக் காணலாம். இன்னொரு தாழ் கொத்தளம் பிரதான நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. முருகைக் கற்களினால் கட்டப்பட்ட இவற்றின் கூரைகளும் கூட முருகைக்கற்களினாலேயே கட்டப்பட்டுள்ளன. இந்தத் தாழ் கொத்தளங்களில் ஒவ்வொரு காவலரண் கூடுகளும் உண்டு.
நிலமட்டத்தோடு அமைந்த பாதுகாப்புக் குறைவான இந்தத் தாழ் கொத்தளங்களே எதிரிகளின் வருகையை முதலில் தடுக்கும் நிலைகளாகக் கருதப்பட்டன. அவற்றினால் இயலாமற் போனால் தான் அடுத்ததாக அகழிக்கு அப்பால் முப்பதடி உயரத்தில் மிகப் பாதுகாப்பாகக் கட்டப்பட்ட உயர் கொத்தளங்களுக்கு எதிரியின் வருகையைத் தடுக்கும் பணி போய்ச்சேரும். அத்தோடு உயர் கொத்தளங்களுக்கு இடையில் பத்தடிக்கு ஒரு பீரங்கி பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
அக்காலத்தில் கோட்டைகளின் கதவைத் தகர்ப்பதற்கு பெரிய மரக்குற்றிகளும் யானைகளும் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக கோட்டை வாசலில் பொருத்தப்பட்ட மரக்கதவு ஆறு அங்குலம் தடிப்பானதாக இருந்ததோடு  அவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கூரான ஈட்டி முனைகளும் கதவில் பொருத்தப்பட்டிருந்தன.
வாசல் சுவரருகில் கட்டப்பட்ட மணிக்கோபுரம் காண்டாமணியுடன் கட்டப்பட்டு இருந்தது. இது கோட்டையிலிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் கோட்டையைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கும் நேரத்தையும் தேவாலய வழிபாட்டு நேரத்தையும் அறிவித்திருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்தக் கோட்டைக்குள் ஆளுநர்களின் மாளிகை , போர்த்துக்கேயர்களின் புதுப்பிக்கப்பட்ட தேவாலயம், அதிகாரிகளின் நிர்வாக அலுவலகங்கள், சிறைக்கூடங்கள், கைதிகளைத் தூக்கிலிடும் இடம், சமவளவான பக்கங்களைக் கொண்ட கிரேக்கச் சின்னம் வடிவிலான குரூய்ஸ் கேர்க்(Kruys Kerk) தேவாலயம்  என்பன காணப்பட்டன. இந்த குரூய்ஸ் கேர்க் தேவாலயத்தில் 1660 ஆண்டுக்குரிய கல்லறைக்கற்கள் காணப்படுவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும். நான்கு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கோட்டையின் மையப்பகுதி படையினரின் பயிற்சிகளுக்கும், நடை பவனிக்கும் உதவியது.

கோட்டையின் பிரதான நிலவழி தொங்கு பாலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது  இதை விட, உள் மதிலுடன் இணைக்கப்பட்டிருந்த பாலத்தைத் தேவையான போது இறக்கிக் கொள்ளவும்  மீண்டும் ஏற்றிக் கொள்ளவும் வசதியான விதத்தில் கட்டப்பட்டிருந்தது.    
இந்தக் கோட்டைக்கு நில வழியைத் தவிர தெற்குப் பக்கம் அமைந்துள்ள சுவரில் நீர் வழியும்  இருப்பது ஒரு சுவாரசியமான விடயமாகும். அகழியுடன் யாழ்ப்பாணம் கடனீரேரி இணைக்கப்பட்டு இதற்கான வழி உருவாக்கப் பட்டிருந்தது. ஆயினும் படகு மூலம் வருவதாயின் கோட்டைக் காவலரின் அனுமதியைப் பெற்று வருவதற்கேற்ற முறையில் மேலே இழுக்கக்கூடிய கதவுடன் இந்த வாசல் அமைக்கப்பட்டிருந்தது.( இந்த வாசல் வழியாகத் தான் 1990 களில்  விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உக்கிரம் காரணமாக இராணுவத்தினர் வெளியேறி மண்டைதீவுப் பக்கம் பின்வாங்கினர்)
இப்படி ஒரு சிறப்பான சின்னத்தை (அது எத்தகைய சின்னம் என்று யோசிக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்) நீங்கள் பார்த்திருந்தால் சரி. பார்க்காதிருந்தால் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அப்படி எண்ணம் உங்களுக்கு உண்டாகியிருந்தால் கலாநிதி க. குணராசா அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.   



 















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக