செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உள்ளடக்கம்

                                                   "வல்வை அலையோசை"     
                                               உள்ளடக்கம்

1. வணக்கம்-வாழ்த்துக்களும்,கருத்துக்களும்,அறிவுரைகளும்
2. நண்பனின் பிரிவு
3. ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகாமையாளருடன் ஒரு நேர்காணல்  
4. சர்மா என்றால் சும்மாவா?
5. சுனாமி 2004 -(தொடர்கதை-இரண்டாம் பகுதி)
6. நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்
7. நாஸ்கா வரைகோடுகள் கூறும் செய்தி என்ன?
8. மூடப்பட்ட ஆவரங்கால் கிணறு
9. அட்வகேட் வீதியின் அவலம்
10. நிலாவறைக் கிணறு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

வாழ்த்துக்களும்,கருத்துக்களும்,அறிவுரைகளும்

                                    வாழ்த்துக்களும்,கருத்துக்களும்,அறிவுரைகளும்
 
வணக்கம்-வல்வை அலையோசையின் இரண்டாவது இதழில் உங்களைச் சந்திக்கிறேன்.2012 தை மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வல்வை அலையோசை  காதலர் தினமான இன்று வரை அதாவது மாசி மாதம் 15ஆம் திகதியில் சற்று முன் வரை 2320 page view ஐக் காட்டி நிற்கிறது.உள்ளடக்கம் உள்ளடங்கலாக 11 ஆக்கங்கள் வெளியிடப்பட்டிருந்தன.ஒருவர் எல்லா ஆக்கங்களையும் படித்தார் என்று வைத்துக் கொண்டாலே வாசகர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டுகிறது.ஆனால் நிச்சயமாக எல்லோரும் எல்லா ஆக்கங்களையும் படித்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது அதற்குச் சற்று அதிகமாகவோ இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.இதை நான் எதிர்பார்க்கவில்லை.ஆகக் கூடுதலாக 50 பேரளவில் படிக்கக் கூடும் என்று நினைத்தேன்.எனது எதிர்பார்ப்பை அதிகமாகப் பூர்த்தி செய்ததன் பங்கு உங்களுக்கும் இருக்குமாயின் உங்களுக்கு எனது நன்றிகள்.
இனி,எனக்குக் கிடைத்த வாழ்த்துக்கள்,கருத்துக்கள்,சுட்டிக் காட்டப்பட்ட பிழைகள்,அறிவுரைகள் என்பவற்றை முடிந்த வரை சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
சிவானந்தா இவ்வலைத்தளத்தை எல்லோரோடும் பகிந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து, நீண்ட காலத்தின் பின் எனது தமிழ் எழுத்துக்களைப் படித்ததாகவும், அப்பாவின் கடைசி நாள் மனதைத் தொடும் வகையில் இருந்ததாகவும், எல்லா ஆக்கங்களுமே தரமானதாக இருந்ததாகவும், எனது எழுத்தானது,நேரடியாக ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொள்பவர்களையும்  விட வாசிப்பவர்கள் அதிகமாகக் கிரகித்துக் கொள்ளக் கூடிய தன்மையைத் தருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். "Enable the reader to visualize the content better than being in the situation."இதை மொழி பெயர்ப்பதற்குள் எனக்கு முழி பெயர்ந்து விட்டது.
வல்வை அலையோசைக்கு நான் அர்ப்பணித்த நேரத்தை நினைக்கும் போது ஆச்சரியமாக இருப்பதாக வாசனும், எனது மனத்தில் இடம் பிடித்த எழுத்துக்களுள் தனது கிறுக்கலும் இருப்பதை நினைக்க ஆச்சரியமாக இருப்பதாகவும்,எனது வலைத் தளத்தைத் தொடர்ந்து பார்வையிடுவதாகவும்,நகர பிதாவிடம் முன் வைத்த கேள்விகள் நல்ல தரமானதாக இருந்ததாகவும் பாலனும்  தெரிவித்திருந்தனர்.. தமிழில் எழுதாததற்கு மன்னிப்புக் கோரி,நாங்கள் சாதாரணமாகக் கதைத்துக் கொள்வதைப் போல் எனது எழுத்து நடை அமைந்திருப்பதாகவும்,அந்த நடை  எனது எழுத்துக்கு ஒரு தனி அழகைத் தருவதாகவும்,எனது முயற்சி வானம்பாடிகள் வெளியிட்ட கையெழுத்துச் சஞ்சிகையை ஞாபகப்படுத்துவதாகவும் முகுந்தன் குறிப்பிட்டிருந்தார்.அந்தந்த ஆக்கங்களுக்கு அந்தந்த இடத்திலேயே கருத்துத் தெரிவிக்க முடியுமா என்று கேட்டிருந்தார்.நிச்சயமாக...ஆக்கத்தின் இறுதியில்Add a comment” என்ற button click செய்து உங்கள் கருத்தினைத் தட்டச்சுக் கொள்ளலாம்.இந்த முறை இந்த முறை உங்களது கருத்தைத் தெரிவிக்க நினைப்பவர்கள் அப்படித் தெரிவித்தாலென்ன? அதோடு எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை வல்வை அலையோசை வெளியாகப் போகிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.மாதாந்தம் என்று தான் நினைத்திருந்தேன்.ஆனால் இனி சிரமமாக இருக்கும் போல் தெரிகிறது.பெரும்பாலானோர் blog ஐப் பாவிப்பது போல் கருத்துக்களையும், எண்ணங்களையும் பதிவதானால் மாதாந்தமென்ன, வாராந்தமென்ன....நாளாந்தம் கூட பதிவுகளை வெளியிடலாம்.இதை ஒரு சஞ்சிகையாக வெளியிட வேண்டுமென்ற எனது எண்ணம் தான் அதற்குத் தடை போடுகிறது.அதோடு நிருபர்,ஆசிரியர்,படப்பிடிப்பாளர்,எழுத்தாளர்,தட்டச்சாளர் என்று எல்லாப் பொறுப்புமே என் தலையில் தானே.(ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியாம் என்றொரு பழமொழி ஏனோ ஞாபகம் வருகிறது.
 குமரன் ஒரு முக்கியமான தவறைச் சுட்டிக் காட்டியிருந்தார் “.வல்வை நண்பர்களைப் பற்றிய தகவல்கள்,படங்கள் அடங்கிய வலைத் தளத்தின் ஸ்தாபகர் என்ற பெருமையும் குமரனுக்குப் போய்ச் சேர வேண்டியதே.”என்று போன இதழில் சொல்லியிருந்தேன்..அவ்வலைத் தளம் முழுக்க முழுக்க P.K யின் முயற்சியால் உருவானதென்றும்.சிறிது காலத்தின் பின் அவ்வலைத்தளத்தைத் தான் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்..அதனை வாசித்த போது P.Kயின் மனதை நோகடித்திருப்பேனோ என்ற மன வருத்தம் ஏற்பட்டது.உடனே அந்த வலைத்தளம் மூலமாகவே மன்னிப்புக் கோரியிருந்தேன்..மீண்டும் “வல்வை அலையோசை” மூலமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.அது தவிர 90 காலப்பகுதியிலிருந்தே என்னைத் தெரியுமாதலால் எனது எழுத்து மற்றவர்களைப் போல் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறி எனது ஆக்கங்களுக்குள் மண்டபக்கிடங்குபிடித்திருந்ததாகவும்,வல்வையின் பழைய  விளையாட்டு வீரர்களின்,மற்றும் பிரபலமானவர்களின் பேட்டிகளையும்பிரசுரிக்குமாறும் அதோடு விளையாட்டு மைதானங்கள் பற்றிய செய்திகளையும் படங்களியும் பிரசுரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.பிரபலமானவர்களின் பேட்டி ஏற்கனவே என் மனதிலுள்ளதாகவும், விளையாட்டு மைதானங்கள் பற்றிய செய்திகள் நல்ல யோசனை  என்றும் கருத்துத் தெரிவித்திருந்தேன்.அது எல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த அறிவுரை ஒன்றையும் வழங்கியிருந்தார்..குடும்பத்திற்காகவும்,எனது  தனிப்பட்ட விருப்பங்களான ஓட்டம்,நீச்சல் போன்றவற்றிற்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.அந்த அறிவுரையை நடைமுறைப்படுத்துவது சிரமமாகத் தான் இருக்கும் என்று உணர்கிறேன்.
எனது வலைத்தளத்தை தகவல்கள் அடங்கிய தளமாகக் கருதுவதாகவும்,அதன் மூலம் தான் இருபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றதாகவும்,அப்படியொரு அனுபவத்தைத் தந்ததற்கு நன்றி என்றும் பவானி தெரிவித்திருந்தார்.மேலும் அப்பாவின்  கடைசி நாள் touching ஆக இருந்தது என்று  திருமதி புஷ்பராணியும் (புஷ்பா Aunty),எனது சஞ்சிகை நன்றாக இருந்ததென்றும்,அறிமுகவுரை மனதைத் தொடும் வகையில் இருந்ததென்றும்,தனது அப்பாவிடம்(வல்வை நகர பிதா) கேட்கப்பட்ட கேள்விகள் நல்ல தரமானதாக இருந்ததென்றும்,இன்னும் என்னென்னவெல்லாம் எழுதப் போகிறீர்கள் என்றறிய ஆவலாக இருப்பதாகவும்,எழுத்து சம்பந்தமாக என்ன உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியது மட்டுமன்றி, valvai council என்ற வலைத்தளத்தில் வல்வை சம்பந்தமாக வெளிவரும் இணையத் தளங்களின்  பட்டியலில் வல்வை அலையோசையையும் கல்யாணி சேர்த்திருந்தார்.அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கல்யாணியிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் எனது முயற்சி பிடித்திருப்பதாகவும்,இதற்காக ஒரு web domain ஐப் பதிவு செய்து அதற்கான முழுச் செலவுகளையும் தனது நிறுவனமான ‘Tamilbizcard’ பொறுப்பேற்கத் தயார் என்று நவஜீவன் தெரிவித்திருந்தார்.Blog என்றாள் விளையாட்டாகச் செய்யலாம்.Web domain என்றால் சுமையும் பொறுப்பும் அதிகமாகி விடும் எனது மறுப்பைத் தன்மையாகத் தெரிவித்திருந்தேன்.நவஜீக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
திடீரென்று எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள்.நல்ல விடயம்.ஆனால் அதிலுள்ளவற்றை நேரப்பிரச்சனை காரணமாகப் படிக்க முடியவில்லை என்று பரணீதரன் தெரிவித்திருந்தார்.
திரு.யோகசபாபதிப்பிள்ளை (தங்காச் சித்தப்பா) என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகவும்,சிறிய வயதில் எனது கடிதமொன்றைப் படித்திருப்பதால் ஓரளவு எனது எழுத்தைப் பற்றித் தெரியும் என்றும்,இப்போது எனது எழுத்து மேலும் பட்டை தீட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறி, bing என்ற search engine bingo  என்று மாறி அடித்திருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவருக்கு ஒரு ஓ போட்டேன். ஒரு கருத்துப் பிழையையும் சுட்டிக் காட்டியிருந்தார்.கொல்லன் பட்டறையில் ஊசி விற்பதும்,ஆட்டிக் பிரதேசத்தில் ஐஸ் கட்டி விற்பதும் சிரமமான வேலை என்றும்,ஆனால் முதலைக் குஞ்சுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது வீணான வேலை என்றும் எடுத்துக் காட்டிய தங்காச்  சித்தப்பாவுக்கு எனது நன்றிகள்.
    அழகான தமிழ்ச் செடி ஒன்று துளிர்த்திருக்கின்றது . எங்கள் ஆதரவினையும் கவனத்தையும் பெரு மழையாக இல்லாவிடினும் சிறு துளிகளாய்த் தருகின்றோம். நம்பிக்கை கொள்கின்றேன் சமுத்திரமாய் பெருகி நிற்கும் 'வல்வை அலை' என்று. வாழ்த்துக்கள்  என்று  ராகசுதன் கவிதையாய் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.ஆனால் எனது அறிமுகவுரை தான் சற்று நீளமாகப் போய்விட்டது என்றும் சொல்லியிருந்தார்.அது என்னமோ உண்மை தான்.ஆனால் இந்த வல்வை அலையோசைக்கு அடித்தளமாக அமைந்ததே என்னைக் கவர்ந்த,என்னைப் பாதித்த இந்த எழுத்துக்கள் தான் என்றிருக்கும் போது இதை விடச் சுருக்கமாக என்னால் எழுத முடியவில்லை என்று அவருக்குக் கூறியிருந்தேன்.
சாரூபன், நகரபிதாவுடனான எனது பேட்டி தரமானதாகவும்,நேர்த்தியாகவும் இருந்ததாகவும், கூறி ஒரு உபயோகமான யோசனையையும் தெரிவித்திருந்தார்.சஞ்சிகை என்ற பெயரில் ஒரேயடியாக நிறைய ஆக்கங்கள் வெளியிடாமல்,சாதாரணமாகப் பதிவு என்ற ரீதியில் ஒன்றிரண்டு ஆக்கங்கள் வெளியிட்டால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பது தான் அவரது ஆலோசனை.ஏனென்றால் நேரப்பிரச்சனை என்ற ஒரு முக்கியமான காரணி இவ்விடயத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.சரியான ஆலோசனை தான்.ஆனாலும் நான் ஏற்கனவே கூறியது போல் சாதாரண பதிவாக இல்லாமல் சஞ்சிகையாக வெளியிட வேண்டுமென்ற எனது ஆவல் அதற்குத் தடை போடுகிறது.
என்னைக் கவர்ந்த,மறக்க முடியாத எழுத்துக்களில் ஒன்ரிரண்டை விட்டு விட்டதாகப் போன முறை வல்வை அலையோசையை வெளியிட்டு ஒன்றிரண்டு மணித்தியாலங்களிலேயே நினைத்தும் கூட அடுத்த இதழிலேயே அதனைத் தெரிவிப்போம் என்றிருந்து விட்டேன்.
 ராமநாதன் alias ராமு alias ராம்:உடுப்பிட்டியில் உயர்தர வகுப்புக்குப் போன போது அறிமுகமானவன்.கவிதைகள்,கதைகள் எல்லாம் எழுதுவான். என்ன, கொஞ்சம் புத்திஜீவித்தனமானவன் என்பதால் அவனது எழுத்து சட்டெனப் புரியாது.எழுத்து மட்டுமல்ல.சில பகிடிகளை அவனே சொல்லி அவனே சிரித்துக் கொள்ளுவான்.பகிடி என்று அவன் சொன்னால் மட்டும் நாங்களும் சேர்ந்து சிரிப்போம்.நான் வகுப்புக்கு  மட்டம் போடும் போதெல்லாம் அவனது கொப்பியை வாங்கித் தான் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதால் அவனது எழுத்து என்றுமே மறக்காது.எழுத்துகளும் அவனை மாதிரியே உயரமாக இருக்கும்.பொருளியல் பாடத்தின் மேலுள்ள ஆர்வம் காரணமாக இப்போது கொழும்பில் பொருளியலில் ஒரு பிரபல ஆசானாகத் திகழ்கிறான்.
வசந்தா Aunty.....சர்மா என்றால் சும்மாவா என்ற பகுதியில் வரும் Aunty தான்.வசந்தா Aunty யின் எழுத்தை மறக்க முடியாமற் போனதற்கு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தைச் சொல்லியாக வேண்டும்.90 அல்லது 91 இல் (சரியான காலப்பகுதி ஞாபகமில்லை)எனது நண்பர்கள் சேர்ந்து  நெடியகாட்டில் ஏதோ ஒரு கலைவிழாவுக்காக ஒரு நாடகம் போட்டிருந்தார்கள்.நாடகத்தின் இறுதியில் எனது நண்பன் சேது இந்த நாடகத்திற்கான விமர்சனங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தான்.நானும் ஒரு விமர்சனத்தை கொஞ்சம் கிண்டலாகக் கொஞ்சம் கடியாக ஒரு பெண் பிள்ளை எழுதியது போல் மனோபாவத்தை உண்டாக்கி  எழுதியிருந்தேன்.எனது எழுத்து அடையாளம் காணப்படும் வாய்ப்புள்ளது என்று யோசித்தேன்.எழுத்து அடையாளத்தைத் தவிர மற்றபடி நான் தான் செய்தேன் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள் என்றொரு நிலைமையில் தான் நான் இருந்தேன்.அதாவது நல்ல பெடியன் சோலி சுழட்டுக்குப் போகாதவன் என்ற பெயர் எனக்கு இருந்தது.அதனால் எனது கடிதத்தை தனது முதலாவது பிரசவத்திற்காக எங்கள் வீட்டில் தங்கி நின்ற வசந்தா Aunty மூலமாக  எழுதுவித்து நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன்..அந்த வயதில் ஒரு பெண் பிள்ளை எழுதிய கடிதம் எனது நண்பர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்திருக்கும் என்ற கற்பனையை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.கடைசியாக ஏழெட்டு வருடங்களின் பின் நான் தான் செய்தேன் என்று ஒப்புக் கொள்ளும் வரை ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு பெண் பிள்ளையை மனதில் நினைத்திருந்தார்கள்.(ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பெண் பிள்ளையை நினைத்திருந்தது ஒன்றும் சொல்லித் தெரிய வேண்டிய விஷயம் இல்லை தான்.நான் சொல்லுவது....... அந்தக் கடிதத்தை எழுதியதாக)
இப்படியாகக் கால ஓட்டத்தின் காரணமாக  என்னால் மறக்கடிக்கப்பட்ட என்னைக் கவர்ந்த,பாதித்த,மறக்க முடியாத (மறக்கடிக்கப்பட்ட... மறக்க முடியாத என்பது கொஞ்சம் முரணாகத் தான் இருக்கிறது) எழுத்துக்கள் பற்றி அவ்வப்போது எழுதுவேன் என்று இந்த இடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.    
இனி வல்வை அலையோசையின் முதலாவது இதழில் வெளிவந்த ஆக்கங்கள் சம்பந்தமான  சுருக்கமான ஒரு சுய கண்ணோட்டம்.
வணக்கம்(அறிமுகம்):நான் நினைத்ததற்கு மாறாக அதிகமானவர்களால் பார்வையிடப்பட்ட பக்கம்.கொஞ்சம் நீளமாகப் போய் விட்டது என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட “வல்வை அலையோசைக்கு அடித்தளமாக அமைந்த எழுத்துக்கள் பற்றி இதை விடச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்க முடியாது.இந்த முறை கூட இருவரின் எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.
அப்பாவின் கடைசி நாள்:எனது உறவினர்களால் அதிகமாகப் பார்வையிடப்பட்ட பக்கம்.நடந்ததை அப்படியே எழுதியதால் .....அதாவது யோசித்துக் கற்பனை செய்வதற்கு ஒன்றுமில்லாததால் மற்ற ஆக்கங்களை விடக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டேன்.ஆனால் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை கனத்த மனதுடன்... 
வல்வை நகர பிதாவுடன் ஒரு நேர்காணல்:எனக்கு அறிமுகம் இல்லாதவர்களாலும் அதிகமாகப் பார்வையிடப்பட்ட பக்கம்.எனது ஆக்கங்களுள் மிகக் கடைசியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதாவது புது வருடத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆக்கம்.இந்த ஆக்கத்தின் மூலம் தான் “வல்வை அலையோசை”க்கு நல்லதொரு விளம்பரம் கிடைத்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.Valvai council எனும் இணையத் தளத்தில் இப்பக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.Valvai.com இலும் இது பிரசுரிக்கப்பட்டு எனக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.கேள்விகள் தரமானதாக இருந்ததாக அனேகர் தெரிவித்து, எனக்குள் இருந்த நிருபரைத் தட்டிக் கொடுத்திருந்தார்கள். 
வானம்,மேகம்,நிலா,நட்சத்திரம்:மிகக் குறைவானவர்களால் பார்வையிடப்பட்ட பக்கம்.அதாவது ஊத்திக்கிட்ட பக்கம் என்பதால் எனக்குள் தயங்கித் தயங்கி லேசாக எழுந்து வந்த கவிஞனை தள்ளி  குழியில் விழுத்தி மண் போட்டு மூடியாகி விட்டது.
மும்மொழியிலும் ஒத்த பழமொழிகள்:இதுவும் அதிகமாக வரவேற்பைப் பெறாத பக்கம் தான்.அதோடு நான் விட்ட பிழை ஒன்றும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது  பற்றியும் சொல்லியிருந்தேன்.தமிழிலும் சிங்களத்திலும் தெரிந்தால் ஆங்கிலத்தில் தெரியவில்லை.ஆங்கிலத்திலும் தமிழிலும் தெரிந்தால் சிங்களத்தில் தெரியவில்லை என்பதால் இந்தமுறை அதையும் விட்டு விட்டேன்.என்னை ஆங்கிலமும்,சிங்களமும் படிப்பிக்கக் கேட்டிருப்பதால்(தமிழே ததிங்ககிணதோம்.அதற்குள்....)இதைத் தொடர்ந்து செய்தால் எனக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்.
சுனாமி 2004 :எழுத்தாளனாக எனக்கு அங்கீகாரம் கிடைக்கக் காரணமான பக்கம்.இந்த ஆக்கத்தில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்று அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கிறோம் என்று ஏழெட்டுப் பேர் வேறு சொல்லியிருந்தது சந்தோஷமாக இருந்தது.எனது ஆக்கங்களின் முதல் வாசகி அதை வாசிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமன்றி 15, 20 வருடங்களுக்கு முன் எள்ளுருண்டை ,புண்ணாக்கு என்பன எங்கெங்கு விற்கப்பட்டன என்று அறிந்த கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதை இங்கு சொல்லியாக வேண்டும்.
நிறுவனங்களில் பாவிக்கப்படும் சில விசேட சொற்றொடர்கள்:நாளாந்த வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் இன்று நினைக்கும் ஆக்கம்.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு கொப்பியில் குறித்து வைத்துச் சேகரிப்பதால் இதற்கு நான் பெரிதாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப்படாத மர்மம்:அதிகமாக நேரம் எடுத்துக் கொண்ட ஆக்கம்.எல்லாம் உள்ளூர் சரக்காக இருந்தால் விலை போகாது என்பதால் ஒரு சர்வதேச சரக்கையும் சேர்த்துக் கொண்டிருந்தேன்.திரைப்படங்களை ஓட வைப்பதற்காக  ஒரு கவர்ச்சிப் பாட்டைச் சேர்ப்பது போல்.சுட்ட சரக்கு என்று சுலபமாகச் சொல்லி விட முடியாது. சில இணையத் தளங்களுக்குப் போய் சுவையான, முக்கியமான தகவல்களைத் திரட்டி,அவற்றைக் கோர்வைப்படுத்தி, மொழிபெயர்த்து, பொருத்தமான இடங்களில் சில படங்களையும் போட்டு..... சுருக்கமாகச் சொல்லப்போனால் நான் மினக்கெட்ட ஆக்கம்.அதே போல் இந்த முறை நாஸ்கா வரைகோடுகள் மேலோட்டமாக நீங்கள் அறிந்த விடயங்களாக இருந்தாலும் ஒன்றிரண்டு தகவல்கள் உங்களுக்குப் புதிதாக இருந்தால் எனக்குச் சந்தோஷம்.
ஆளை விழுங்க ஆவலுடன் காத்திருக்கும் ஆவரங்கால் கிணறு: “வல்வை அலையோசை மூலமாக சமூகத்திற்கு ஏதாவதொரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் உருவான ஆக்கம்.இந்த முறை “அட்வகேட் வீதி”  இதைப் பிரசுரிப்பதன் மூலம் பயன் கிட்டினால் சந்தோஷம் தான்.எனது நண்பர்களின் கண்ணோட்டத்தில் இந்த ஆக்கம் ஒரு ஆச்சரியமாகத் தான் இருக்கும் என்பது எனது கருத்து.அதோடு இந்த ஆக்கத்திற்கு கொஞ்சமாக risk எடுத்தாக வேண்டும்.
மண்டபக்கிடங்கு:யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பெருமையை வெளிக்கொணரும் முயற்சியாக இந்தப் பக்கம்.வெளியக வேலையோடு உள்ளக வேலையும் சம்பந்தப்படும் ஆக்கம்.ஆனாலும் போன முறையும் சரி,இந்த முறை நிலாவறைக் கிணறும் சரி.நான் சேகரித்த தகவல்கள் எனக்குப் போதுமானதாக திருப்தியாக இல்லை.
இனி ஆக்கங்களைப் படித்து  முடியுமானால் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். வல்வை அலையோசை ஆர்ப்பரிப்பதும் அடங்கிப் போவதும் உங்கள் கையில் இருக்கிறது.
.........................தீபன்  

"வல்வை அலையோசை"

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நண்பனின் பிரிவு

                                                   நண்பனின் பிரிவு

அன்பின் நண்பன் சுரேஷ்,
இது நான் உனக்கு வரையும் முதலாவதும் கடைசியுமான மடல்.ஆனாலும் இதைப் படிக்க, நீ இப்போது எங்களோடு இல்லை.திரும்பி வர முடியாத இடத்திற்குப் போய் விட்ட உனக்கு நான் ஏன் மடல் வரைகிறேன் என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.
உனது சிரிப்பையும் கலகலப்பான கதைகளையும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் இனி மேல் காண முடியாது என்ற உண்மையை மூளை ஏற்றுக் கொண்டாலும் இதயம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.ஆனாலும் இதயத்தில் ஏற்பட்டுள்ள வலி இது தவிர்க்க முடியாத உண்மை என்று வலியுறுத்துகிறது.மறைவு என்பது மனிதனால் தவிர்க்கப்படக் கூடியதல்ல.மனதளவில் தெரிந்த உண்மை தான்.ஆனாலும் உன் விடயத்தில் இவ்வுண்மையை ஜீரணிக்க முடியவில்லை.
    உனக்குத் தெரிந்தவர்கள்,நண்பர்கள்,சக பணியாளர்கள் எல்லோரது கஷ்டங்களைத் தீர்க்கவும் முன்னின்று தோளோடு தோள் நின்று நேரக் காலம் பார்க்காமல் உதவி செய்வாய்.அவையெல்லாம் நீ மனமறிந்து செய்த உதவிகள்.பிறருக்குதவும் உன் பிறவிக்குணம் உன் மறைவின் போதும் உன்னையறியாமல் வெளிப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சு நெகிழ்கிறது.பாவிகள் உன்னை துப்பாக்கியால் சல்லடை போட்ட பொது ஏற்பட்ட சத்தம் ,ஏனைய பணியாளர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உதவியிருக்கிறது.”உயிர் காப்பான் தோழன்” என்பதை உன் உயிர் கொடுத்து உண்மையாக்கியிருக்கிறாய்.
          “உதயனே என்னுயிர்” என்று நீ அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஆனால் அப்போதெல்லாம் நீ உதயனுக்காக  உயிரையே கொடுப்பாய் என்று சற்றேனும் நினைத்திருக்கவில்லை.
       எனது அலுவலக விடயங்கள் காரணமாக உன்னைச் சில நாட்கள் மறந்திருந்தால் அல்லது பார்க்காதிருந்தால் என்னைத் தேடி வருவாய் “என்ன பார்க்கவே முடிவதில்லை இப்போதெல்லாம்” என்றவாறே.இனி அவ்வாறு என்னைத் தேடி வரப் போவதில்லை என்று நினைக்கும் போது  இதயத்தின் ஆழம் வரை வலி சென்று தாக்குகிறது.
      லீவு எடுப்பதற்கு ஒரு காரணம் கிடைக்காதா என்று நாங்களிருக்க,தேடி வந்த லீவுகளையே ஒதுக்கி வைத்து விட்டு,வேலைக்கு வந்து நிற்கும் உன்னைப் பார்க்க எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்திருக்கிறது. நீ ஓரிடத்தில் சற்று நேரம் தரித்திருந்து நான் பார்த்ததில்லை.உனது வேலையும் அப்படி.இறுதிக் கிரியைகளுக்காக உன்னை  இரண்டு  நாட்கள் வைத்திருந்தார்கள்.அன்று தான் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டாய்.அந்த இரண்டு நாட்களும் மூச்சு விடாமல் ஓரிடத்திலேயே அமைதியாக நீ துயின்றதைப் பார்த்த போது ஏற்படும் வேதனையை விபரிக்க முடியவில்லை.
          உன்னை,சக பணியாளர்களிடம் வேலை வாங்கும்,உன் ஆளுமையை,மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னிற்கும் உன் குணத்தை,உன் கலகலப்பான பேச்சுக்களை நான் எவ்வளவு நேசித்தேன் என்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.பொதுவாக நண்பர்களுக்குள்  அப்படி ஒரு பழக்கம் இல்லை.ஆனாலும் உன்னைச் சந்தோஷப்பட வைத்த சில குணங்கள் என்னிடமும் இருந்தன என்று மற்றவர்கள் மூலம் அறிந்த போது  பெருமையாக இருந்திருக்கிறது.நான் வசித்த ஊரில் ,நான் படித்த பாடசாலையில் எனக்குக் கிடைத்த உற்ற நண்பர்கள் எல்லாம் நாட்டுப் பிரச்சனை காரணமாக நாடு விட்டு நாடு சென்றிருக்க எனக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்வதற்கு நீ மட்டும் தான் இருந்ததாலோ என்னவோ உன்னை அதிகமாக நேசித்தேன்.  
      கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின்பு  சிறிது வித்தியாசத்துடன் உன்னை மீண்டும் பார்த்தேன் மைனா படத்தில் நேர்மையான, இரக்கமுள்ள காவல் அதிகாரியாக.நேர்மையும் இரக்கமும் சரி தான்.ஆனாலும் உனது கலகலப்பு அவரிடம் இல்லையென்றாலும் கூட தோற்றத்தில் என்ன ஒரு ஒற்றுமை.அந்தப் பாத்திரத்தில் உன்னை நினைத்தவாறே மனம் நெகிழ,கண்கள் கலங்க மைனா படத்தைப் பார்த்தேன்.அவுஸ்திரேலியாவில் உன் மனைவி சுவேந்தினியும் உன் பிள்ளைகள் அல்ரினும் சேஷாவும் கூட அந்தப் படத்தைப் கண்கள் கலங்கப் பார்த்திருப்பார்கள்.    
    உன் பிரிவு என்னை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்........மறு பிறவி உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது.ஆனால் அப்படி ஒன்றிருந்தால் அடுத்த பிறவியில் நாமிருவரும் ஏதாவதொரு விதத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும்;பழைய பிறவி ஞாபகம் வர வேண்டும் என்று முட்டாள்தனமாக ஏங்கும் அளவுக்கு......     

ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகாமையாளருடன் ஒரு நேர்காணல்

ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகாமையாளருடன் ஒரு நேர்காணல்
 ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகப்புத் தோற்றம்

 
உங்களில் அனேகம் பேர் இந்த சிறுவர்,முதியோர் இல்லம் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.இது மாலு சந்திக்கும் நெல்லியடிச் சந்திக்கும் இடையில் வதிரி,கரவெட்டிப் பகுதியில்  Telecom நிறுவனத்தை ஒட்டியதாக உள்ள வீதியில் கிட்டத்தட்ட 80 m உள்ளே இந்த இல்லம் அமைந்திருக்கிறது. இதன் முகாமையாளரான திரு க.திருநாவுக்கரசுடன் ஒரு நேர்காணல்....
1.ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்லம்  எத்தனையாம் ஆண்டு ,யாரால், ஸ்தாபிக்கப்பட்டது?இதற்கான காணி ஸ்தாபகரினதா அல்லது யாரும் கொடுத்துதவினார்களா?
1969ஆம் ஆண்டு சுவாமி பரமானந்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.சுவாமிக்குச் சொந்தமான சிறிய நிலப்பரப்புக் கொண்ட காணியில்,சிறிய குடிசையில் 25 சிறுவர்களுடன் ஆரம்பமானது.சுவாமியின் முயற்சியினாலும் மக்களின் அன்பளிப்புக்களினாலும் மேலும் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு பரந்த நிலப்பரப்பில் பல கட்டிடங்களுடன் சிறுவர்,முதியோர்களைப் பராமரித்து வரும் ஒரு இல்லமாக விளங்கி  வருகின்றது.இவ்வில்லம் 30.10.1970 இல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு (பதிவிலக்கம் 14930) இயங்கி வரும் நிறுவனமாகும். 
2.இதற்கான பிரதான நிதி எவ்வாறு கிடைக்கின்றது?
சேவை நோக்கம் கொண்ட பொது மக்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்புக்கள் மூலம் தான் இந்த இல்லம் இயங்குவதற்குரிய நிதியைப் பெற்றுக் கொள்கிறோம்.
3.இந்த ஆச்சிரமத்திலுள்ள முதியோர்,ஆண்பிள்ளை,பெண்பிள்ளைகளின் எண்ணிக்கை என்ன?
முதியவர்களின் எண்ணிக்கை: பெண்கள் 10,ஆண்கள் 06
சிறுவர்களின் எண்ணிக்கை  : பெண்கள் 35,ஆண்கள் 16
ஆக மொத்தம் 67 பேர் இவ்வில்லத்தில் வைத்துப் பராமரிக்கப்படுகிறார்கள்.
4.இந்த இல்லத்திலிருந்து இது வரை யாராவது தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்களா?
இது வரை எந்தப் பிள்ளையும் தத்துக் கொடுக்கப்படவில்லை.8 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளே இங்கு வைத்துப் பராமரிக்கப்படுவதால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.பொதுவாக அவ்வளவு வளர்ந்த பிள்ளைகளை தத்தெடுக்க ஒருவரும் முன்வருவதில்லை.
5.இறுதி வன்னி யுத்தத்தின் போது அனாதைகள் ஆக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்  இங்கு உண்டா?
வன்னி இறுதி யுத்தத்தில் அனாதைகள் ஆக்கப்பட்ட சிலர் புலோலியிலுள்ள ஒரு சிறுவர்,முதியோர் இல்லத்திலிருந்து இங்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட போதும் சிறிது காலத்தின் பின் மீண்டும் அவ்வில்லத்திற்கே மாற்றப்பட்டு விட்டார்கள். 
இவ்வில்லத்தின் பெண் பிள்ளைகளில் சிலருடன் எனது மகள் ஓவியா,  தனது இரண்டாவது பிறந்தநாளின் போது    

6.பிள்ளைகளை எத்தனை வயது வரை ஆச்சிரமத்தில் வைத்துப் பராமரிப்பீர்கள்? அந்த வயதின் பின் அவர்களைச் சுதந்திரமாக விடுவீர்களா அல்லது யாரின் பொறுப்பிலாவது விடுவீர்களா?
18 வயது வரை இந்த இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்படுவார்கள்.அதன் பின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக அவர்களின் உறவினரிடம் கையளிக்கப்படுவார்கள்.அல்லது அவர்களால் பணிக்கப்படும் முறையில் வழி நடத்தப்படுவார்கள்.மாணவர்கள் 18 வயது கடந்து க.பொ.த உயர்தரம் கற்பவர்களாயின் கல்வி முடியும் வரை இல்லத்தில் வைத்துப் பராமரிப்போம்.
7.இங்கு ஆச்சிரமத்தில் வளரும் பிள்ளைகள் எந்தெந்தப் பாடசாலைகளில் என்னென்ன எண்ணிக்கையில் கல்வி கற்கிறார்கள் என்ற விபரங்களைத் தர முடியுமா?
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி   : 07
அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம் : 44
8.உங்கள் ஆச்சிரமத்தில் முதியோரை எவ்வாறு இணைத்துக் கொள்கிறீர்கள்?
சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசின் பிரகாரம் இணைத்துக் கொள்வோம்.
9.இந்த இல்லத்திலுள்ளவர்களை சிறுவர்களை  விட வெளியே உள்ள யாருக்காவது கல்விக்கான உதவிகள் வழங்கப்படுகின்றனவா?
வடமராட்சியில்  வறுமைக்கோட்டின் கீழேயுள்ள,பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு  பிரதேச செயலரின் சிபாரிசுடன் மாதாந்தம் 1,000  ரூபா அவர்கள் கல்வி கற்று முடியும் வரை அன்பளிப்புச் செய்து வருகிறோம்.அவர்களின் பெயர் வருமாறு,
1.S.பிரசாந்த் கரவெட்டி
2.S.பிரதீபா –கிளிநொச்சி
3.S.தாரகன் –பருத்தித்துறை
4.T.கிரிதரன்-கரவெட்டி
5.S.ரகுவரன்-கரவெட்டி
6.A.கோவர்த்தனன்-பருத்தித்துறை
7.N.வினோதா-குடத்தனை
இவ்வாண்டும் 12 பேரைத் தெரிவு செய்து அன்பளிப்புச் செய்யவுள்ளோம்.
   இவ்வில்லத்தின் ஆண் பிள்ளைகளில் சிலருடன் எனது மகள் ஓவியா,  தனது இரண்டாவது பிறந்த நாளின் போது    

10.அண்மையில் வட பகுதியில் அடிப்படை வசதிகளின்றி,சரியான பராமரிப்பின்றி இயங்கிய சில சிறுவர் இல்லங்கள் மூடப்பட்டதாகவும்,இன்னும் சில வெகு விரைவில் மூடப்படவிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.அந்த மாதிரி செய்திகளால் உங்களுக்குப் பாதிப்புண்டா?இங்கு உள்ளவர்களுக்கு என்னென்ன வசதிகளை உருவாக்க வேண்டுமென்று,அல்லது ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?இதற்காக நன்கொடை உதவிகளை எதிர்பார்க்கிறீர்களா? 
இது வரை எமது இல்லம் சரியான வழி நடத்தல் மூலமே இயங்கி வருவதால் எந்தப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
நாங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வசதிகளை மேம்படுத்த விரும்புகிறோம்.
1.எமது இல்லம் ஆண்,பெண் சிறுவர்களை ஒன்றாக வைத்தே பராமரித்து வருகிறோம்.இட நெருக்கடியை நீக்கும் பொருட்டு புதிய காணியைக் கொள்வனவு செய்து ஆண் சிறுவர்களை வேறாகப் பராமரித்து வர விரும்புகிறோம்.
2.எமது நூல் நிலையம் சிறுவர் தங்கும் மண்டபத்திலேயே இருக்கிறது.அதனால் இங்கேயுள்ள பழைய மேல் மாடிக்கட்டிடத்தைத் திருத்தியமைத்து அங்கே நூல் நிலையத்தை மாற்ற விரும்புகிறோம்.
3.இங்கே உள்ள மாணவர்கள் வளர்ந்து கொண்டே போகும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கணனிக் கல்வியைக் கற்க வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.ஆகையால் கணனிக்கான தனியறைகள் அமைக்கவும்,கணனிகளைக் கொள்வனவு செய்யவும் நினைத்துள்ளோம்.
இவற்றுக்கான நிதியுதவியை எதிர்பார்க்கிறோம்.இது தவிர  எமது இல்ல மாணவர்கள் கல்வி கற்கச் செல்வதற்காக தனியார் வாகனம் ஒன்றை(van) வாடகைக்கு அமர்த்தி மாதாந்தம் 15,000 ரூபா செலுத்துகிறோம்.இச்செலவைக் குறைப்பதற்காகவும்,மாணவர்களின் வேறு கல்வி முயற்சிகளுக்காகவும் யாராவது van ஒன்றை அன்பளிப்புச் செய்வார்களென எதிர்பார்க்கிறோம்.
பேட்டி :ஆ.தீபன்

நன்கொடை வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள்
வங்கிக் கணக்குகள் மூலமோ,காசோலை மூலமோ அல்லது காசுக் கட்டளை மூலமோ பணத்தினைச் செலுத்தலாம்.
இல்லத்தின் பெயர்              :ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்லம்
இல்லத்தின் முகவரி            :வதிரி,கரவெட்டி
இல்லத்தின் தொ.பே இலக்கம்   : 021 226 3136
இல்லத்தின் வங்கிக் கணக்குகள் :
மக்கள் வங்கி,நெல்லியடி –நடைமுறைக் கணக்கு இலக்கம் 106100190000166
                        SWIFT CODE -P.S.BKLKLX-023  
இலங்கை வங்கி,நெல்லியடி-–நடைமுறைக் கணக்கு இலக்கம் 7380870
                         SWIFT CODE –BCEYLKLX-638
Commercial Bank .நெல்லியடி –சேமிப்புக் கணக்கு இலக்கம் 8108032942
                          SWIFT CODE –CCEYLKLX
Hatton National Bank,நெல்லியடி- சேமிப்புக் கணக்கு இலக்கம் 118020104852
தேசிய சேமிப்பு வங்கி பருத்தித்துறை- சேமிப்புக் கணக்கு இலக்கம் 100320254509
                            SWIFT CODE –NSBALKLX-32                    
காசோலை மூலம் பணம் செலுத்துவதாயின் “பெறுநர் கணக்கு”(A/C Payee) என குறுக்குக் கோடிடவும்.
காசுக் கட்டளை மூலம் பணம் செலுத்துவதாயின் தபாற் கந்தோர் வதிரி அல்லது கரவெட்டியாக இருந்தால் மாற்றுவது இலகுவாக இருக்கும்.
நேரடியாக வங்கியில் வைப்பிலிடும் போது எமக்கும் விபரங்களை அனுப்பினால் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு இலகுவாக இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பும் போது மேற்குறிப்பிட்ட  SWIFT CODE இலக்கத்தை உபயோகிக்கவும்,