சனி, 31 டிசம்பர், 2011

உள்ளடக்கம்

உள்ளடக்கம்
1.வணக்கம்(அறிமுகம்)
2.அப்பாவின் கடைசி நாள்
3.வல்வை நகரபிதாவுடன் ஒரு நேர்காணல்
4.வானம்,மேகம்,நிலா,நட்சத்திரம்……….. உவமான,உவமேயங்கள்
5.மும்மொழியிலும் ஒத்த பழமொழிகள்
6.தொடர்கதை –சுனாமி 2004
7. நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்
8. பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப் படாத மர்மம்  
9.ஆளை விழுங்க ஆவலுடன் காத்திருக்கும் ஆவரங்கால் கிணறு
10. மண்டபக்கிடங்கு/மண்டபக்காடு

வணக்கம்

வணக்கம்,
ஒரு வித்தியாசமான புதிய முயற்சி.முழுக்க முழுக்கப் புதிய முயற்சி என்று சொல்ல முடியாது.என்றாலும் அறிந்த தெரிந்த வட்டத்திற்குள் அவ்வாறு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.அப்படி இல்லை என்றால் கூட பரவாயில்லை.இணைய சஞ்சிகை(online magazine’ க்கு தமிழ் சரியா?) ஆரம்பிக்க நினைத்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும்.Solo வாக single ஆக ஆரம்பிப்பதில் உள்ள முக்கிய பிரச்சனை இது தான். கண்ணுங்களா,சிங்கம் மட்டுமில்ல,இந்தப் பன்னி  கூடத் தனியாத் தான் வரும் என்று நான் சொல்லிக் கொள்ளத் தயாராக இல்லை.இந்த முயற்சிக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவும் வரவேற்பும் கிடைத்து இது தொடர்ந்து வெளி வருமாக இருந்தால் ஏனையோரின் ஆக்கங்களையும்  சேர்க்கலாம்.......... பார்க்கலாம்.எனக்கு என்ன அனுபவம் என்று கேட்க நினைப்பீர்கள்.பக்கம் பக்கமாக கடிதங்கள் எழுதியதைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக அனுபவம்  ஒன்றும் இல்லை.கடிதங்கள் எழுதியவனெல்லாம் இணைய சஞ்சிகை ஆரம்பித்தால்,எங்கள் கதி....... என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஏலக்காய் இருக்கிறதென்று லட்டு பிடிக்கப் (செய்யப்) புறப்பட்டவனின் நிலையும் எனது நிலையும் ஒன்று தான் என்று உணர்ந்தாலும் கூட துணிந்து இறங்கி விட்டேன்.இனி எனது ஆக்கங்களைப் படிக்க நீங்கள் துணிந்தால் சரி. அது தவிர ஒன்றிரண்டு ஆங்கிலக் கதை,கட்டுரைகளை மொ(மு)ழி  பெயர்ப்புக்களும் செய்திருக்கிறேன்.அத்தோடு இப்போது ஒரு கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.அது தொடர் கதையாக வலைச் சஞ்சிகையில் வரும்.
           சரி,Blogger என்பது பொதுவாக தனிப்பட்ட கருத்துகளை பதிவு செய்யும் நாட்குறிப்பு  போன்றதொரு வலைத் தளம் தானே! ஏன் இத்தளத்தில் எனது வலைச் சஞ்சிகையை ஆரம்பிக்க நினைத்தேன் என்று நீங்கள் கேட்க நினைக்கக் கூடும்.(நீங்கள் கேட்க நினைக்கவில்லை என்றாலும் கூட நான் சொல்லத் போகிறேன்).Blogger சாராத தனியாக ஒரு பெயரில் (Domain) ஆரம்பிப்பதில் சிக்கல் என்னவென்றால்.... நிதிப் பிரச்சனை தான்.எனக்கு ஆர்வம் இருந்தாலும் கூட அனுபவமில்லை. சிறு பிள்ளை வேளாண்மை வீடு போய்ச் சேராது என்பார்கள்.இதில் காசை வேறு செலவழிக்க வேண்டுமா என்றொரு எண்ணம்.அப்படித் தனியான பெயரில் வலைச் சஞ்சிகை ஆரம்பித்தால் நன்மைகளும் இருக்கின்றன.முக்கியமானது எனது வலைத்தளத்திற்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதாவது இறங்கு வரிசைப்படி  Google,Yahoo,Bingo ஆகிய தேடல் இயந்திரங்களில் எனது வலைத்தளம் பட்டியல்படுத்தப்பட்டு பிரபல்யம் ஆகும்  வாய்ப்புக் கிடைக்கும்.வருகைகள் அதிகமானால் Adsense இல் விளம்பரங்கள் மூலமாக உழைத்துக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டும்.ஆனால் அதற்கு ஆங்கிலத்தில் எழுதுவதும் அவசியம் என்று நினைக்கிறேன்.இவ்வலைச் சஞ்சிகையில் பதியப்படும் விடயங்களில் ஏதும் திருத்தங்கள் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலோ,அல்லது கருத்துத் தெரிவிக்க நினைத்தாலோ தயவு செய்து முன் வாருங்கள்.
    சரி,இனி எனது இம் முயற்சிக்கு உந்துகோலாக அமைந்த என்னைக்  கவர்ந்த,என்னைப் பாதித்த,என்னைப் பிரமிக்க வைத்த,என்னால் மறக்க முடியாத  எழுத்துக்களைப்  பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.
    அப்பா.........அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தனது தொழில் சம்பந்தமான கோர்வைகளுடன் எழுத்து வேலைகளைத் தொடங்கு முன்னர் அப்பா அம்மாவுக்குக் கடிதம் எழுதுவதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.(அநேகமாக 2 வாரங்களுக்கு ஒரு தடவை)சற்றே சரிந்த, ஆனால் தெளிவான, தனது குடும்பத்தின் மேல் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் எழுத்து.எங்கள் அப்பா எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து இரண்டு கிழமைகளாக்கி விட்டது.எனது இந்த முயற்சியை அப்பாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
                  அம்மா......நான் அம்மாவைப் பிரிந்து பதுளையில் ,கொழும்பில் இருந்த நாட்களில் அம்மாவிடம் இருந்து வரும் குண்டு குண்டான எழுத்துக்களுடன் கூடிய 15, 20 பக்கக் கடிதங்கள் தான் என்னை  முதலில் பாதித்த எழுத்தாகக் கொள்ள முடியும்.மிகவும் விலாவாரியாக உற்றார்,உறவினர்,அயலவர் விடயங்களையும்,ஊர் நிலவரங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் அம்மாவின் கடிதங்கள் என்னைக் குட்டிக் குட்டி வைக்கவில்லை என்பது கவியின்(எனது மனைவியின்) ஆதங்கம்.
        அப்பாச்சி......வயதானவர்களுக்கே உரிய சிடுசிடுப்புச் சற்று இருந்தாலும் கூட    உன்னால் தான் தனது கால் முடமானது என்று சக்கர நாட்காலியில் வாழ்ந்த கிட்டத்தட்ட 10 வருடங்களில் ஒரு முறை கூட என்னைக் கடிந்து எழுதாமல் அதற்கு மாறாக கடைசிக்  காலத்தில் என் மேல் இன்னும் அதிக அன்பை வெளிப்படுத்திய அப்பாச்சியின் கடிதங்களும் என்னுள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.(மின்சாரமே இல்லாமல் நாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் ஒரு நாள் அதிகாலையில் நான் படிப்பதற்கு விளக்கேந்தி வந்த அப்பாச்சி,காற்றினால் விளக்கு அணைந்து விட,அத்துடன் எண்ணெயும் சற்றுச் சிந்தி விட,திரும்பிப் போய் மீண்டும் விளக்கேற்றி வரும் போது சிந்திய எண்ணெயில் வழுக்கி விழுந்து கால் முறிந்து அதன் பின் சிகிச்சைக்காக  மாமியுடன் U.K போனதும் அதன் பின் பத்து  வருடங்களுக்கு மேல் அப்பாச்சி மறையும் வரை எங்களுக்கிடையிலான தொடர்பு இருந்தது கடிதம் மூலம் என்பதும் உங்களுக்கு ஒரு உதிரித் தகவல்.)
       கவி.....(எனது முன்னாள் காதலி. இந்நாள் மனைவி) நான் மிகவும் விரும்பிய எழுத்து.அதென்ன,விரும்பிய....... என்று இறந்த காலத்தில் சொல்வதால் போட்டுக் கொடுத்து மாட்டிக் கொடுத்து விடுவோம் என்று நீங்கள் நினைப்பீர்களானால் அது தவறு.இப்போது கவியின் எழுத்து உச்ச பட்சமாக புளி ¼ கிலோ,வெங்காயம் 1 கிலோ என்ற ரீதியில்   அமைவதால் தான் அப்படிச் சொன்னேன்.(இவன் பொழச்சுக்குவான் என்று நினைக்கிறீர்களா?)அந்த நாட்களில் கவிதை வேறு அவவுக்கு சரளமாக வரும்.கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை வர்ணிப்பதாக அமையும்.
       செல்வம் மாமி........அப்பாவின் தங்கை.புவியியல் ரீதியாக மிகத் தொலைவில் இருந்த போதும் மனதளவில் மிகவும் நெருங்கிய சொந்தங்களில் ஒன்று.கடிதங்களில் மட்டுமல்ல.எனது ஒரு வயதில் இருந்து என் திருமணத்தின் பின்பும் கூட அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துக்களிலும் மாமியின் அன்பு வெளிப்பட்டிருக்கிறது.
    வதனிச்சித்தி.....சித்தியாக நினைத்ததை விட சகோதரியாகவும்,சினேகிதியாகவும் நினைத்தது அதிகமென்பதால் சண்டைகள்,மனஸ்தாபங்கள்,குறைகள் போன்றவை தான் கடிதங்களில் அதிகம் பரிமாறப்பட்டன.ஆனாலும் அடிப்படைக் காரணம் அன்பு தான்.
        சத்யா.........அனேகமான எனது நண்பர்களின் மனைவிமார்கள் மற்றும் எனது மனைவியின் சினேகிதிகள் எல்லோருமே என்னை அன்பாக  அண்ணா என்று அழைத்த போதிலும்,கடிதங்கள் எழுதிய போதிலும் எல்லோருமே மரியாதையின் நிமித்தம் சற்றுத் தள்ளியே நின்று கொண்டார்கள்.என்னை நெருங்கி என்னில் உரிமையும் கண்டிப்பும் காட்டக் கூடிய அக்கா தங்கையின் அன்புக்காக நான் ஏங்கிய நாட்களும் இருக்கின்றன.முழுக்க முழுக்க எனது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப் படாத போதிலும் ஓரளவேனும் பூர்த்தி செய்த நான்கைந்து  பேர் இருக்கிறார்கள்.அவர்களுள் கடிதத் தொடர்பு இருந்தது சத்யாவுடன் தான்.இப்போது நீண்ட நாட்களாகத் தொடர்பு  இல்லை என்றாலும் கூட மறக்க முடியாத உறவு;மறக்க முடியாத எழுத்து.
   குயிலன் அப்பாச்சி........அந்தத் தள்ளாத வயதிலும் கூட நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருந்த எங்களுக்காகப், பிரார்த்தனை செய்து வரும் கடிதங்களையும் கடிதங்களுடன் இலவச இணைப்பாக வரும் விபூதிப் பொட்டலங்களையும்  மறக்கவே முடியாது.ஆனாலும் கூட எங்களுக்கு மகள் பிறந்த செய்தியைக் கேட்க குயிலன் அப்பாச்சி இல்லாதது கவலை தான்.
     ஓவியா(எங்களின் மகள்).....மிகவும் அழுத்தமான எழுத்து......80 ஒற்றைக்  கொப்பியில் முதலாவது பக்கத்தில் எழுதினால் கடைசிப் பக்கத்தில் பதியும் அளவுக்கு அளவுக்கு ரொம்பவே அழுத்தம்.
   குமார்....இந்த ஊரில் எனக்குக் கிடைத்த முதல் நண்பன்.என்றாலும் கூட எங்கள் நட்புக் கோட்டைக்கு நல்லதொரு அத்திவாரம் போடப்பட்டது அவன் என்னை விட்டுப் பிரிந்து வெளிநாடு போன பின்பு, எங்களுக்கிடையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் மூலமாகத் தான் என்று சொன்னால் மிகையில்லை.சொல்ல வேண்டியதை நேர்த்தியாக அலட்டல் இல்லாமல் எழுதும் விதம் அலாதியானது.
          பாலன்,நான் பார்த்ததிலே பாலனின் எழுத்தைத் தான் நல்ல கிறுக்கல் என்பேன். நல்ல கிறுக்கல் என்பேன்.ஆனாலும் எந்த நேரமும் உதவத் தயாராக இருக்கும் குணம் அனேகமாக எல்லாக் கடிதங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது.கடிதம் எழுத ஆரம்பித்ததும் சீக்கிரமாக எழுதி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எழுத்து அப்படி ஒரு போக்குப் போகும் என்று நினைக்கிறேன்....விபத்து நடப்பதற்கு முன்பு வேகமாக வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாகனத்தில் பயணிப்பதைப் போல்.
                 வாசன்…..எனது நண்பர்களிலே கலைஞன் என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவன்.கதை,கவிதை,கட்டுரை,நாடகம்,சித்திரம்,கல்யாண வீட்டு அலங்காரம் போன்ற எல்லாவற்றையுமே திறமையாகச் செய்யக் கூடியவன்.(கல்யாண வீட்டு அலங்காரங்களுக்கு வாசன் தலைமையில் போகும் குழுவில் நானும் இன்னும் ஒரு சில நண்பர்களும் மிக்சர் சாப்பிட்டு தேநீர் குடிப்பதற்கு மாத்திரம் போவதுண்டு)அவனது திறமைகளில் என்னை அதிகம் கவர்ந்தது அவனது எழுத்துத் தான்.அதனால் தான் அவன் எழுதிய நாடகத்தில் ஒரு கொரில்லாவாக நடிக்கச் சம்மதித்தேன்.
        P.K alias பிரேம்குமார்....P.K Australia போய்ச் சேர்ந்ததும் எழுதிய ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று எழுதிய கடிதமும் மறக்க முடியாதது.ஒவ்வொரு நண்பர்களுக்கும் தனிப் பக்கம் ஒதுக்கி, எங்களுக்குப் பொருத்தமான மிருகங்களின் படத்தையும் போட்டு மறக்க முடியாமற் பண்ணி விட்டான்.எனக்குரிய பக்கத்தில் ஒரு தேவாங்கின் படம் போட்டிருந்தது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தாலும் கூட முகச் சாயல் இருக்கவே செய்தது.
    குமரன்.....மிகவும் சுருக்கமாக,உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல்,லேசான தீர்க்கதரிசனத்தோடு வெளிப்படும் எழுத்து.உதாரணத்திற்கு 2002 இல் சமாதானம் வந்தது பற்றி குமரன் எழுதியிருந்ததை உதாரணமாகக் கொள்ளலாம். “இது நீண்ட காலத்திற்கு நிலைக்கப் போவதில்லை.2 அல்லது 3 வருடங்களில் மீண்டும் சண்டை தொடங்கும்.சண்டை முடிந்தாலும் கூட தீர்வுத் திட்டம் அது இது என்று இழுபடவே செய்யும்”..........ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.அதோடு நான் நண்பர்களைப் பற்றிக் குறைப்பட்டுக்கொண்டால்,இதையெல்லாம் குறையாக எடுக்கக் கூடாது.அதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று அருமையாக அறிவுரை கூறி(எழுதி) மனதில் உள்ள மனஸ்தாபத்தை நீக்குவதற்கு குமரனின் எழுத்துக்கள் உதவியிருக்கின்றன.வல்வை நண்பர்களைப் பற்றிய தகவல்கள்,படங்கள் அடங்கிய வலைத் தளத்தின் ஸ்தாபகர் என்ற பெருமையும் குமரனுக்குப் போய்ச் சேர வேண்டியதே.எல்லோராலும் முடியாத காரியம் அது.நிறையப் பேருக்கு எண்ணம் இருந்தாலும் செயற்படுத்தியது குமரன் தான்.
       சேதுவின் படிப்பில் தெரிந்த புத்திசாலித்தனம் சேது எழுதிய கடிதங்களிலும் இடைக்கிடை வெளிப்பட்டு ரசிக்கும்படியாகவே இருந்ததிருக்கிறது.அது தவிர பொதுவாக சேதுவின் எழுத்து மிகவும் simple ஆக சேது மாதிரியே இருக்கும்.
     டொப்பன் alias பரணீதரன்........நான் இது வரை என்னைக் கவர்ந்த,என்னைப் பாதித்த,என்னால் மறக்க முடியாத எழுத்துகளைப் பற்றித் தான் சொன்னேன்.என்னைப் பிரமிக்க வைத்த என்ற எழுத்து என்ற வகையில் அடங்குவது பரணீதரனின் எழுத்து மட்டும் தான்.எங்களுடன் ஒன்றாகச் சுற்றித் திரிந்த டொப்பனா இப்படி எல்லாம் இணையத் தளங்களில் இவ்வளவு விஷய ஞானத்துடன் எழுதுகிறான் என்ற பிரமிப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை.என்றாலும் பரந்துபட்ட அறிவுடன்,புத்திஜீவித்தனமான சொற்களையும், வசனங்களையும்  பரணீதரன் பிரயோகிப்பதால் சொல்ல வரும் விடயத்தைக் கிரகிப்பதில் என்னைப் போன்ற பாமரனுக்குச் சிக்கலாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.(பரணீதரனின் சார்பில் இந்தக் குற்றச் சாட்டுக்கும் நானே பதிலைத் தெரிவித்துக் கொள்கிறேன். “அறிவில்லாத பாமரனுக்கு இணையத் தளங்களில் என்ன வேலை?”)
       விக்கி……தொழில் புரியும் இடத்தில் கிடைத்த நட்பு.ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்பது போல் உள்ளேயேயிருந்து ஒன்று,வெளியேயிருந்து ஒன்று ...மொத்தமாக இரண்டே கடிதங்கள் தான்.இந்த நாட்டின் நிலைமையை அறிந்தவர்களுக்கு உள்ளே என்றால் என்னவென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.எனக்கு எழுதப்பட்ட கடிதங்களுள் மிகவும் வித்தியாசமான சூழலிருந்து எழுதப்பட்ட கடிதம் என்ற வகையில் மனதைப் பாதித்த எழுத்து.
     என் மனங் கவர்ந்த  இனிய நண்பர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒரு நாவல் எழுதும் அளவுக்குச் சுவாரசியமானவர்கள்.ஆனாலும் இதில் நான் குறிப்பிடுவது அவர்களின் எழுத்தைப் பற்றித் தான் என்பதால் அவர்கள் விடுபடக் கூடும்.ஏனெனில் அவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நண்பர்களாக இருப்பார்கள்.ஆனாலும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றியும் குறிப்பிடுவேன்.இது தவிர இன்னும் மூன்று பேர் இருக்கிறார்கள்.
          மகேஷ் அண்ணா.....பெரியப்பாவின் மகன்.தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஏதாவது  சொல்லிச் சிரிக்க வைப்பவர்..நான் பதுளையில் இருந்த போது அவர் எனக்கு எழுதிய முதலாவதும் கடைசியுமான கடிதமும், அவர் இறந்து  விட்ட செய்தியைத் தாங்கி வந்த அம்மாவின்  கடிதமும்  அவர் விமானக் குண்டு வீச்சால் இறந்து இரண்டு கிழமைகளின் பின் எனக்குக் கிடைத்ததும், முதலில் நான் அவரின் கடிதத்தைப் படித்து விட்டு  அவருக்கு என்னென்ன எழுத வேண்டும் என்ற எண்ணியவாறே அம்மாவின் கடிதத்தைப் படித்ததும் நான் வாழ்நாளில் மறக்க முடியாத கடிதமாக அமைவதற்குக் காரணமாக அமைந்து விட்டன.அதுவொரு காலம்.....தந்தி,தொலைபேசி உரையாடல்,sms,e.mail,skype போன்ற ஒரு விதமான தொடர்பாடல் சாதனங்களும் இல்லாமல்,தகவல் பரிமாறுவதற்குக் கடிதம் ஒன்றையே நம்பியிருந்த காலம்.இதைப் படிக்கும் எத்தனையோ பேருக்கு அப்படியொரு காலத்தைக் கற்பனை செய்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.
     சபேஷ். alias குகன் .....(எனது ஒன்று விட்ட தம்பி)Blogger இல் சபேஷின் இணையத் தளத்திற்குப் போய் அவர் எழுதியவற்றை வாசித்த போது, அமைதியாக இருக்கும் சபேஷ் மனதில் இவ்வளவு நகைச்சுவை உணர்வா என்று தோன்றியது.தொடர்ந்து எழுதினால் இன்னும் சிறப்பாக மிளிரக் கூடும்.ஆனாலும் பொறியியலாளராக இருப்பதால் அதற்கெல்லாம் நேரம் கிடைப்பது கடினமாக இருக்கும்.
       Last, but not least..ஜயன்....எனது தம்பி....ஊரில் உள்ள பாடசாலைகள்,கோவில்கள்,வர்த்தக நிலையங்கள்,வங்கிகள் போன்றவற்றின் விபரங்கள்,751 வழித்தட பேரூந்து,சிற்றூர்தி சேவைகள் எங்கள் ஊரால் போய் வரும் நேரங்கள்  போன்றதொரு தகவல் களஞ்சியத்தைச் சேகரித்து  ஜயன் எழுதி வைத்திருப்பதைப் பார்த்த போது வியப்பாக இருந்தது.ஜயனின் அனுமதியுடன் அதிலிருந்து சில பகுதிகளையும் இவ்வலைச் சஞ்சிகையில் பிரசுரிக்க நினைக்கிறேன்.
     கடைசியாக இந்த இணைய சஞ்சிகைக்கு ஏன் 'வல்வை அலையோசை' என்ற வைத்தேன் என்று..........ஊர் பெயரும்,கடல் சம்பந்தப்பட்ட பெயரும் வர வேண்டுமென்று விரும்பினேன்.வல்வை……. அலை........நான் இந்த இணையத்தின் மூலம் ஏதாவதொரு செய்தியை உங்களுக்கெல்லாம் சொல்கிறேன் தானே.அதை 'ஓசை' எனக் கொள்ளலாம் தானே. "வல்வை அலையோசை".இந்தப் பெயரைத் தெரிவு செய்த எனது அண்ணாவுக்கு எனது நன்றி.

……………………………..தீபன்

அப்பாவின் கடைசி நாள்

       
                                                     அப்பாவின் கடைசி நாள்
         கட்டிலின் விளிம்பில் கை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த நான் அப்பாவின் இருமல் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன்.நேரம் மு.ப 4.20. இடம் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் ward.அப்பாவின் உடலிலுள்ள கலங்களில் ஒட்சிசனின் அளவைக் காட்டும் திரை 95 ஐக் காட்டிக் கொண்டிருந்தது. 3 மணியளவில் தான் அப்பாவின் இருமல் நின்று அப்பா,நான் இருவருமே உறங்கக் கூடியதாக இருந்தது. இப்போது மீண்டும் தொடங்கி  விட்டது.D –Protin எனப்படும் சத்துப் பானத்தை மூக்கின் குழாய் மூலமாக 280 ml விட்டு விட்டு அப்பாவின் நெஞ்சை நீவியவாறே அப்பாவின் கண்ணில் தெரிந்த வேதனையைப் பார்க்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டேன்.எவ்வளவு நாட்களுக்கு இது தொடரப்  போகிறது?
         அப்பாவின் இருமலைப் பற்றி  இரண்டு  junior doctors இடம் முறையிட்டு  விட்டேன்.இருவருமே ஒரே மாதிரித் தான்  சொன்னார்கள்.அப்பாவின் நிலைமைக்கு உச்ச பட்சமாகச் கொடுக்கக் கூடிய மருந்தைத் தான்(anti biotic) இப்போது பன்னிரண்டாவது நாளாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள்.அப்பா அவஸ்தைப் படுவதைப் பார்க்கச் சகிக்காமல் Sucker (சளி இழுக்கும் இயந்திரம்) பாவித்து சளி அகற்ற முடியாதா  என்று கேட்டேன்.அப்பாவின் தற்போதைய நிலைமைக்கு இது பாவிப்பது உகந்ததல்ல அத்தோடு ,வாயில் இருக்கும் சளியைத் தான் sucker அகற்றுமே தவிர நுரையீரலில் இருக்கும் சளியை அல்ல என்று கை விரித்து விட்டார்கள்.அப்பா இருமும் போது வாயில் சளி இருப்பதாகத் தெரிந்தால் விரலை விட்டு சளி அகற்றலாமா என்று கேட்ட போதும் அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும் என்றும் சொல்லி விட்டார்கள்.அவர்களைப் பற்றித் தவறாக நினைக்க மனம் இடம் தரவில்லை.என்றாலும் கூட இன்று காலை ward rounds வரும் senior doctor இடமும் சொல்லிப் பார்ப்போம்  என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.வரும் இருமலை அடக்கவும் முடியாமல்,இருமவும் முடியாமல் ஏற்பட்ட வேதனை முகத்தில் பரவி அப்படியே நிலைத்து விட்டதாகத் தோன்றியது..அப்பாவின் கடைசிக் காலம் வந்து விட்டதோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.என்றாலும் அந்த எண்ணத்தைத் தொடர்ந்து என்ன சளி தானே.எங்கள் குடும்பம் முழுவதற்குமே சளிப் பிரச்சனை இருக்கிறது தானே,சிறு நீரகத்தின் செயற்பாட்டிலேயே எவ்வளவோ முன்னேற்றம் வந்து விட்டதாக சொல்லியிருக்கும் போது சாதாரண சளி என்ன செய்து விடும் என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டேன்.எவ்வளவு சுயநலமான மனது.படுக்கையில் இருந்து சிரமப் படுவதை விட போய் விடுவது எவ்வளவோ மேல்.அவர்களுக்கும் வேதனை.அவர்களைப் பார்ப்பவர்களுக்கும் வேதனை  என்று பொதுவாக எத்தனையோ பேரோடு கதைத்திருந்தாலும் கூட எங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என்று வந்து விட்டால் அப்படி நினைக்க முடிவதில்லையே.
     வெதுவெதுப்பான தண்ணீரில் துணியை ஒத்தி அப்பாவின் உடல் முழுவதும் துடைத்தேன்.நான் குழந்தையாக இருக்கும் போது என்னையும் அப்பா இப்படித் துடைத்திருக்கும் என்று நினைத்த போது என்னையறியாமல் கண்ணீர் பெருகியது. குழந்தையாக  என்று நினைத்ததும் என்னிடம் உள்ள புகைப் படங்களில் ஒன்றில் என்னைக் கைக் குழந்தையாக அப்பா ஏந்திய வண்ணம் நிற்கும் நிலை ஞாபகத்துக்கு வந்தது.அதைத் தொடர்ந்து என்னிடம் உள்ள ஆல்பம் ஒவ்வொரு பக்கமாக மனதிலே தட்டுப்பட,அப்பா இளம் வயதில் கம்பீரமாக நிற்கும் நிலையிலிருந்து முதுமையடைந்து நிற்க முடியாமல் இருக்கும் நிலை,பின்பு இருக்க முடியாமல் படுத்திருக்கும் நிலை வரைக்கும் எனது கற்பனையிலேயே அப்பாவின் தோற்றம் எனது மனத் திரையில் ஓடி முடிந்தது.
          நேரத்தைப் பார்த்தேன்.ஐந்தரை ஆகிக் கொண்டிருந்தது.கண்ணைத் துடைத்துக் கொண்டேன்.இனி தள்ளு வண்டியில் மருந்துகளும்,அதைத் தொடர்ந்து nurse மாரும் அதைத் தொடர்ந்து junior டாக்டர் உம் வரும் நேரம்.அப்பாவின் நிலைமையைப் பார்த்து விட்டு ஏதாவது  செய்ய யோசிக்கிறார்களோ தெரியவில்லை.
     இன்றும் அப்பாவுக்குக் குளுசைகள் இல்லை.கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் ஊசியாலேயே கொடுக்கிறார்கள்.நெஞ்சுச் சளி உண்டான பின் வாயால் கொடுக்கும் ஆகாரத்தை நிறுத்தி,மூக்கின் மூலமாக ஒரு சிறிய குழாய் விட்டு அதன் மூலமாகத் தான் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள்.Junior doctor வந்து அப்பாவைப் பரிசோதித்தார்.அப்பாவின் உடலிலுள்ள கலங்களின் ஒட்சிசனின் அளவு திரையில் 96 காட்டியது.காய்ச்சல் இல்லை.மூக்கின் குழாய் மூலமாக செலுத்திய நீராகாரம் 1790 ml.ஆனால் சிறுநீராக 700ml  தான் வெளியேறியிருந்தது.அப்பாவுக்கு Peritonal dialysis சிகிச்சை செய்த பின் உள்ளே போகும்,வெளியே வரும் அளவுகள் எல்லாம் கிட்டத்தட்ட சரிக்குச் சரியாகவே இருந்தன.சில வேளைகளில் வெளியேறும் அளவு அதிகமாகக் கூட இருந்திருக்கிறது.அதற்கான காரணம் கேட்ட போது மழை நாட்களில் பொதுவாக வெளியேறும் அளவு அதிகம் தான்.அத்தோடு சேலைன் மூலமாக உட்செலுத்தப்படும் திரவத்தையும் கணக்கெடுத்தால் சரியாகவே வரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.அப்படியானால் இன்று ஏன் இவ்வளவு குறைந்திருக்கிறது என்று கேட்டதற்கு உடல் பலவீனமாக இருக்கும் போது,அதுவும் திண்ம ஆகாரம் ஒன்றும் இல்லாமல் இருக்கும் போது,கூடுதலான திரவத்தைக் கிரகித்துக் கொள்ளும்.அது மட்டுமில்லாமல் நெஞ்சுச் சளி காரணமாக சிறுநீரகத்தின் செயற்பாடும் சற்றே குறைந்திருக்கலாம்.ஆனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்.கூடவே இரண்டு நாட்களுக்கு முன் முள்ளந்தண்டுப் பகுதியில் ஊசி மூலம் பெறப்பட்ட திரவத்தின் மாதிரியைப் பரிசோதித்ததில் கிடைத்த பெறுபேறும் திருப்தியாகவே அதாவது அமுக்கம் சாதாரணமாகவும்,கிருமித் தொற்று இல்லையென்றும் தெரிய வந்ததையும் ஞாபகப்படுத்தினார்.இருமலாலும்,சளியாலும் அப்பா நேற்றிரவு முழுவதும் வேதனைப்பட்டதையும்,நித்திரை கொள்ளாமல் சிரமப்பட்டதையும் கூறி,sucker உபயோகப் படுத்தவே கூடாதா என்று மீண்டும் கேட்டேன்.அதைப் பற்றி senior doctor  இடம் ஆலோசனை கேட்பதாகக் கூறி அப்பாவுக்குரிய file இல் குறித்துக் கொண்டார்.
        முன் கட்டிலில்  உள்ள நோயாளியைப் பார்த்துக்  கொள்வதற்கு  இருந்தவரிடம் அப்பாவின் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு கூறி விட்டு சுடு தண்ணீருக்காகவும்,காலை உணவுக்காகவும் உணவுச் சாலைக்குப் போனேன்.நேற்றிரவு சாப்பிடாதது ஞாபகத்திற்கு வந்தாலும் சாப்பிட மனமில்லை.இரண்டு ரோல்ஸ் சாப்பிட்டு டீ குடிக்கவே வயிறு நிரம்பி விட்டது போன்ற உணர்வு.
       7:40 போல் மூக்கின் குழாய் மூலமாக அப்பாவுக்கு விருப்பமான  Marmite 250 ml விட்டேன்.விருப்பமான என்றாலும் கூட அந்தக் குழாய் நேரடியாக வயிற்றுக்குச் செல்வதால்  அதன் சுவையை உணரும் நிலையில் அப்பா இல்லை.
           9 மணி போல் senior doctor  வந்தார். அவர் முதலாவதாகப்  பார்த்தது அப்பாவைத் தான்.அப்பாவின் நிலைமை காரணமாக அப்பாவை மிகவும் முன்னுக்கு அதாவது doctors, nurses  உள்ள இடத்திட்கு மிக அருகில் நகர்த்திருந்தார்கள்.நானும் முன்பு வந்த junior doctor  உம் அப்பாவின் நிலைமையைத் தெளிவாக எடுத்துரைத்தோம்.Junior doctor sucker பாவிப்பது சம்பந்தமாகவும் கேள்வி எழுப்பினார்.ஆனால் senior doctor நெஞ்சை ஒரு முறை x –ray எடுத்து விட்டு பின்பு செய்ய வேண்டியதைத் தீர்மானிப்போம் என்று கூறினார்.
       Senior doctor மற்ற நோயாளிகளைப் பார்வையிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த  எனக்குக் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன் அப்பா பதுளையில் கல உட வைத்தியசாலையில்  நோயாளிகளைப் பார்வையிடுவது ஞாபகத்திற்கு வந்தது.அப்பாவுக்கு அங்கு உள்ள மக்கள் செலுத்தும் மரியாதையைப் பார்த்து நான் வியந்ததுண்டு.அங்கு அப்பா ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை.நான் அங்கு இருந்த போது அப்பாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி நான் ஒரு இளவரசனாக நடந்து கொண்டேன் என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஒன்றிரண்டு அல்ல 19 வருடங்கள்.பொதுவாக எல்லோருமே தவிர்க்க முடியாமல் ஒன்றிரண்டு வருடங்கள் வெளி மாவட்டங்களில் வேலை செய்து விட்டு தங்கள் மாவட்டங்களில் வேலை செய்யத் தான் விரும்புவார்கள்.ஆனால் அப்பாவுக்கோ  கல உடவும்,அதில் உள்ள ஆட்களும் மனதுக்குப் பிடித்து விட தொடர்ந்து ஓய்வூதீயம் எடுக்கும் வரை அங்கேயே வேலை செய்தது.தன்னிடம் மருந்து எடுக்க வரும் நோயாளிகளை மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகள் பெயர்களைக் கூட ஞாபகம் வைத்து அவர்களிடம் அன்பாக விசாரிக்கும் அப்பா, இப்போது தனது பிள்ளைகளின் பெயர்களை மட்டுமல்ல அவர்களையே அடையாளம் காண முடியாமல்..............நோயாளிகள்,அவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள்,doctors,nurses என எல்லோருமே கவனிக்கிறார்கள் என்று தெரிந்த போதும் எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த  முடியவில்லை.
         ஒருவாறு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம்பி தந்து விட்டுப் போன headphone ஐயும் MP3 ப்ளேயர் ஐயும் on பண்ணி விட்டு காதில் வைத்துக் கேட்டுப் பார்த்தேன். “வளர்ந்த கதை மறந்து விட்டாய்,ஏனடா கண்ணா”போய்க் கொண்டிருந்தது.அப்பாவின் காதில் headphone ஐ மாட்டி விட்டு “என்ன பாட்டு போய்க் கொண்டிருக்கிறது,தெரியுமா அப்பா?” என்று கேட்டேன்.அப்பா மிகுந்த சிரமப்பட்டு ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்தாலும் கூட இருமலும்,கண்ணில் கண்ணீரும் தான் வந்தது. “சரி அப்பா,ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று அப்பாவின் நெஞ்சை நீவி விட்டேன். “அப்பாவோடு  கதையுங்கள்.பழைய ஞாபகங்களைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.”என்று சில நாட்களுக்கு முன் senior doctor சொல்லியிருந்தார்.ஆனால் பழைய ஞாபகங்கள் சம்பந்தமாக என்ன கேள்வி கேட்டாலும் தெரியாது என்ற  பதிலே கிடைத்தது.அதனால் தான் ஜயனுக்கு இந்த யோசனை உதயமானது.இசை நோய்களைக் குணமாக்கும் என்பதன் அடிப்படையில் இசை பழைய ஞாபகங்களைக் கூடத் தூண்டலாம் என்ற நம்பிக்கையில் உதயமான யோசனை தான் அது.பழைய ஞாபகங்களைக் கொண்டு வந்ததா என்று தெரியாமல் போனாலும் அப்பா கையை ஆட்டி தாளம் தட்டுவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டாலும் அனேகமாகப் பாட்டின் ஒன்றிரண்டு வரிகளைச் சொல்வதைக் கேட்க இன்னும் சந்தோஷமாக இருக்கும்.இன்று அப்பாவுக்கு முடியவில்லை.    
       அதன் பின்பு 10:15 போல் அப்பாவுக்கு D-Protin  270 ml கொடுத்து விட்டுக் அதைக் கொப்பியில் குறித்துக் கொண்டேன்.அப்பாவுக்கு இருமல் வரும் போதெல்லாம் நெஞ்சை நீவுவதும்,இடைக்கிடை வீக்கமாக உள்ள அப்பாவின் கையைச் சற்று அழுத்தித் தடவுவதுமாக நேரம் கழிந்தது.12 மணி போல் எனது தம்பி ஜயன் வர அப்பாவைப் பற்றி doctors சொன்னதைச் சொல்லி விட்டு,அவற்றைக் கொப்பியிலும் குறித்துக் விட்டு,இருவருமாகச் சேர்ந்து அப்பாவின் உடலைச் சுடுதண்ணீர் ஒற்றிய துணி மூலம்  துடைத்து விட்டு இனி அப்பாவை உயிரோடு பார்க்கப் போவதில்லை என்று தெரியாமல் கிளம்பினேன்.

மும்மொழியில் ஒத்த பழமொழிகள்

மும்மொழியில் ஒத்த பழமொழிகள் (சிங்களத்தில் உள்ள பழமொழிகள் தமிழில் மொழி பெயர்த்துத் தரப்பட்டிருக்கின்றன )
1. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
All are not saints that go to church.
இலங்கையில் பிறந்தவர்கள் எல்லாம் ராவணர்கள் அல்ல.
2. கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது போல.
Selling ice cubes in Artic.
முதலைக் குஞ்சுக்கு நீச்சல் பழக்குவது போல.
3. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
Do not rob Peter to pay Paul.
ஆற்றில் நீர் குடித்து விட்டு கடலுக்கு நன்றி கூறுவது போல
4. அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
Christmas comes but once a year.
வெசாக் சாப்பாடு ஒவ்வொரு நாளும் இல்லை.
5. பிள்ளை பெறு முன் பெயர் வைக்காதே.
Count not your chickens before they hatched.
வியாபாரம் தொடங்கு முன் லாபநட்டம் பார்க்காதே.

சுனாமி 2004

  
                                      சுனாமி 2004
   2004 டிசம்பர் 26ம் திகதியை உங்கள் ஒருத்தராலும் மறக்க முடியாது.உங்களில் சிலர் கொடூரமான அந்த நாளின் நேரடிச் சாட்சிகளாய்,உடலில் காயங்களின் வடுக்களோடும்,உள்ளத்தில் உற்றார் உறவினர் நண்பர்களைப் பிரிந்த துயரத்தோடும் இருப்பீர்கள்.உங்கள் நினைவுகளைக் கிளறி உங்களை வேதனைக்குள்ளாக்கும் எண்ணமில்லை. எனக்கு நிகழ்ந்த ஒரு பயங்கரமான சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ளவே இதனைத் தட்டச்சுகிறேன்.
           எதிர்ப் பக்கமாகக் கடந்து சென்ற புகையிரதத்தின்  கட கட சத்ததிலும்,முகத்தில் அறைந்த காற்றினாலும் திடுக்கிட்டு நித்திரையால் விழித்துக் கொண்டேன்.நான் திடுக்கிட்டதனால்,என் தோளில் சாய்ந்திருந்த  ப்ரியாவும், என் மடியில் உறக்கத்தில் இருந்த சுவாதியும் கூட விழித்துக் கொண்டனர். “நீங்கள் படுங்கள்” என்று கூறியவாறே புகையிரதத்தின் வேகத்தினால் கலைந்திருந்த ப்ரியாவின் தலை முடியைச் சீர் செய்து அவளது காதிற்கும்  தலைக்கும் இடையே செருகி விட்டு சுவாதியின் தலையை வருட முயன்ற போது திடீரென்று  புகையிரதத்தின் வேகம் குறைந்து காதுக்கு அசெளகரியத்தை அளிக்கக் கூடிய “கிறீச்” என்ற கூர்மையான ஒலியுடன் புகையிரதம் தனது வேகத்தை மட்டுப் படுத்திக் கொள்ள  எனது வலது கை ஜன்னலின் விளிம்பில் மோதிக் கொள்ள “ஆ” என்று வேதனையோடு முனகினேன்.எனது வருடலில் மீண்டும் உறங்கத் தொடங்கியிருந்த ப்ரியா சட்டென எழுந்து “என்ன?” என்று என்னை நோக்கியவள் வேதனை நிறைந்த என் முகத்தைப் பார்த்து விட்டு தனது பார்வையைத் திருப்பியவள் என் கையைக் கவனித்து விட்டாள்.சுற்றிக்  கட்டியிருந்த துணியையும் மீறிக் கொண்டு ரத்தம் கசியத் தொடங்கியிருந்தது. “சுவாதிக் குட்டி எழும்படி “ என்று கூறியவாறே அவளை மென்மையாக என் மடியிலிருந்து தூக்கி இருக்கையில் இருத்தியவாறே “என்ன,நல்லா நோகிறதா?” என்று கூறிக் கொண்டே என் கையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தாள்.நகங்கள் எதுவுமே அற்ற தீப்புண்களின்  தளும்புகளோடும்,காயங்களின் வடுக்களோடும் இரத்தம் கன்றியிருந்த எனது கையைப் பார்க்க எனக்கே அசிங்கமாக இருந்தது.அவிழ்த்த துணியை ஒரு கடதாசியில் சுற்றி ஒரு மூலையில் வைத்து விட்டு தனது கைப்பையைத் திறந்து ஒரு குட்டிப் போத்தலில் இருந்த டெட்டோலை பஞ்சினால் தொட்டு கசியும் ரத்தத்ததை ஒத்தியெடுத்து புதுத் துணியினால் கட்டுப் போட்டு விட்டாள்.
          “அம்மா ஏ மாமட்ட மொனவாத வுனே?”(அந்த மாமாவுக்கு என்ன நடந்தது?) என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆண் குழந்தை (4 வயதிருக்கும்) தானது தாயைப் பார்த்துக் கேட்டது.அதை நான் கவனித்து விட்டதைக் கண்ட தை எங்களைப் பார்த்து தர்மசங்கடமான புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு “துவாலவெலா,ஓயா நிதாகன்ன”(காயம் பட்டு விட்டது.நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்.) என்று கூறியவாறே அந்தக் குழந்தையை உறங்க வைக்க முயன்றாள்.
       நீண்ட “கூ” என்ற ஒலியுடன் புகையிரதம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது.சுவாதியை ப்ரியா தனது மடியில்  தூக்கி வைத்துக் கொள்ள புகையிரதத்தின் தாள லயத்தோடு கூடிய ஆட்டத்திட்கு உடனே உறங்கிப் போனாள்.
     பார்வையைத் திருப்பி வெளியே கடலை அவதானித்தவாறே  மெல்லக் கண்களை மூடத் தொடங்கிய எனக்கு ஏதோ வித்தியாசமாயிருக்கிறதே என்று மூளையின் செல்கள் தந்தியடிக்க கண்களைத் திறந்து கடலைக் கவனித்த பொது தான் அந்த வினோதம் தெரிந்தது.கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்குக் கடல் நீர் உள்வாங்கியிருந்தது.எனது வாழ் நாளில் கடல் நீர் அவ்வளவு தூரம் உள்வாங்கி நான் கண்டதே இல்லை.இயற்கையில் ஏனிந்த மாற்றம்?இப்படியே வற்றிக் கொண்டு போனால் இந்தியாவுக்குக் கால்நடையாகப் போகக் கூடியதாக  வந்து விடுமோ என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்த மனம் இப்போது நாம் இலங்கையின் தென் பகுதியில் அல்லவா இருக்கிறோம் .அப்படியானால் மாலைத்தீவுக்குத் தான் போகலாம் என்று எண்ணத் தொடங்கியது.ஊரில் இருந்தால் இந்தியாவுக்கு நடந்து போகலாம் தான் எண்ணத் தொடங்கியதும் ஊர் ஞாபகங்கள் அலை மோதத் தொடங்கியது.ஞாபகங்களைக் கட்டுப்படுத்துவதற்காகத் தலையை ஆட்டிக் கொண்டேன் .
      “என்ன,கேசவன்  தலையை மோதிக் கொண்டு வீட்டீர்களா?” என்ற ப்ரியாவின் குரல் என்னை மீண்டும் நனவுலகத்திற்குக் கொண்டு வந்தது.”ஒன்றும் இல்லை” என்றவாறே பார்வையைத் தாழ்த்த, ப்ரியாவின் அழகான விரல்கள் எனது அசிங்கமான கையைத் தடவுவதைக் கண்டேன்.என் வாழ்வில் ப்ரியா இணைந்து கொள்வதற்கு அடிகோலிய சந்தர்ப்பங்களை மனம் அசை போடத் தொடங்கியது.
      எங்கள் இருவருக்கும் இடையிலான ஆரம்ப கட்ட இணைப்பை ஏற்படுத்தியது கோட்ட மட்டத்தில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் தான்.நான் பங்கு பற்றும் விளையாட்டுக்களான 400 மீட்டர்,800 மீட்டர் ஓட்டப் போட்டிகளே அவளும் பங்கு பற்றும் விளையாட்டுக்களாய் இருந்ததால் எங்களுக்கிடையில் மெல்லிய புரிந்துணர்வுடன் கூடிய நட்பு இயல்பாகவே உருவானது.வென்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவிப்பதும்,தவறும் வேளைகளில்,அதற்கான காரணத்தை விவாதித்து திருத்திக் கொள்ள அறிவுரை கூறுவதுமாக எங்கள் நட்பு ஆரம்பமானது.ஒரு தடவை,400மீட்டர் ஓட்டப் போட்டியின் போது கடந்த இரு வருடங்களில் நான் முதலாம் இடத்தைக் கோட்டை விடக் காரணமாக இருந்தவனை நான் முந்திக் கொண்டு வந்தாலும் கடைசி வினாடிக்கும் குறைவான நேரத்தில் நெஞ்சை முன்னகர்த்தி அவன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட சம்பவம் என்னை விட அவளைப் பெரிதும் பாதித்தது.”சே .கடைசி நேரத்தில் விட்டுட்டீங்களே!நெஞ்சைக் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் தானே” என்று அவள் உண்மையான வருத்தத்துடன்  சொல்ல,நான் “நெஞ்சை நீட்டுறதா?அதெப்படி? ?உங்களுக்கெண்டா பிரச்சனையில்ல”என்று கொஞ்சம் இடக்காகச் சொல்லி விட வில்லங்கமாகி விட்டது.சட்டென முறைத்துப் பார்த்து வீடு எழுந்து போய் வீட்டாள்.நானும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின்பு எங்கள் ஊர் அம்மன் கோவில் இந்திர விழாவின் போது தோழிகளோடு ப்ரியாவைக் கண்டு விட்டு புன்னகை செய்ய எனக்குக் கிடைத்தது சுடும் பார்வை தான்.போதாதற்கு “ஓ ப்ரியா ப்ரியா,உன் ப்ரியா ப்ரியா”,”கல்யாணந் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?இல்ல ஓடிப் போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா” என்றெல்லாம் பாடி எனது நண்பர்கள் இன்னும் கடுப்பேற்றி விட்டார்கள்.
           அதன் பின்பு நாமிருவரும் எதேச்சையாகச் சந்தித்துக் கொண்ட போதெல்லாம் ஒருவரையொருவர் காணாதது போல் பாசாங்கு செய்வதிலும் அப்படித் தற்செயலாக முகத்துக்கு முகம் சந்திக்க வேண்டி வந்தாலும் முகத்தைச் சட்டென திருப்பிக் கொள்வதிலும் அல்லது முகத்தைச் சுளிப்பதிலும் முனைப்பாக இருந்தோம்.
      ஒரு நாள் சந்தர்ப்பவசமாக ப்ரியா வீட்டுக்குப் போக நேரிட்டது எள்ளுருண்டை வாங்குவதற்காக.அவளின் அம்மா வீட்டில் எள்ளுருண்டை செய்து கொடுப்பதில் பிரபலமாக இருந்தாள்.முதலில் அம்மா பனங்கட்டி எள்ளுருண்டை வாங்கி  வருமாறு சொன்ன போது ஆங்காரமாக மறுத்தேன். ஏனென்று கேட்ட போது “அங்கே எனது கோபக்காரப் பெட்டை இருக்குது” என்று சொன்னேன்.”ஏண்டா,அது அப்படிக் கோபப்படுவதட்கு நீ என்ன சொன்னனீ அல்லது செய்தனீ?” என்று அம்மா விசாரித்ததும் வில்லங்கமாகி விட்டது எனக்கு.இன்னும் இருந்தால் இந்த மனுசி நோண்டி நுங்கெடுத்து விடுவாள் என்று கறுவியவாறே பனங்கட்டியை அம்மாவிடம்  வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.தனியாகப் போக விருப்பம் இல்லாமல் விமலன் வீட்டுக்குப் போய்  தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கிளம்பினேன்.”டேய்,ஏண்டா இந்த   வெயிலில கூட்டிக் கொண்டு போற?கறுத்துப்  போடுவண்டா” என்று புலம்பிய அவனை ‘’Fair & Lovely’ வாங்கித் தருவதாக சமாதானப்படுத்தினேன்.ப்ரியா வீட்டுக்குப் போகிறோம் என்றதும் மனதில் இனம் புரியாத சந்தோஷம்.குண்டு விமலனை ஏற்றி வந்தது கூடத் தெரியவில்லை.ஒரே மூச்சில் ப்ரியா வீட்டை அடைந்தது போல் ஒரு உணர்வு.விமலன் வீட்டுக் கதவைத் தட்டி “அம்மா” என்று மாடு போல் கத்தினான்.”டேய்,மனுஷன் மாதிரி கூப்பிடடா “ என்று அவனை அடக்கிக் கொண்டே “வீட்டுக்காரர்” என்று கதவைத் தட்டி  விட்டுக் காத்திருக்க மெல்லத் திறந்தது கதவு.
        கீழே குனித்திருந்ததால் முதலில் பாதங்களே தென்பட்டன.பரிச்சயமான பாதங்கள்.போட்டிகளின் போது புழுதியைக் கிளப்பியவாறே புயலென விரையும் பாதங்கள்.இப்போது புதிதாக வெள்ளிக் கொலுசும் அவள் பாதங்களில் அரங்கேறியிருந்தது.இவ்வாறாக நான் அவள் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் குரல் ஒலித்தது.”பழைய சாப்பாடு ஒண்டும் இல்ல.போய் பிறகு வாங்கோ”.விமலனுக்குக் கடுப்பாகி விட்டது.”என்ன நக்கலா?நாங்க எள்ளுருண்டை வாங்க வந்தனாங்கள்.” என்று அவன் கத்த,பதிலுக்கு அவள் அமைதியாக “எள்ளுருண்டை இல்ல.மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கு.வேணுமா?”என்று கேட்டாள்.ஏன் இண்டைக்கு நீங்க விரதமா?”என்று விமலனும் விடாமல் பதிலடி கொடுத்தான்.ப்ரியா ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்த போது “என்ன ப்ரியா யார் வாசல்ல?”என்றொரு குரல் கேட்டது. “இல்லயம்மா.அது வந்து...”என்று ப்ரியா தடுமாற நான் முந்திக் கொண்டு “ஆன்டி,நாங்க எள்ளுருண்டை செய்றதுக்கு பனங்கட்டி குடுத்துட்டுப் போக வந்தனாங்கள்.உங்கட மகள் எங்கள வெருட்டிக் கலைக்கப் பாக்கிறா” என்று சத்தமாகக் கூறினேன். “என்ன சேட்டை இது ப்ரியா?” என்று கேட்டவாறே ப்ரியாவின் அம்மா வந்தாள்.இன்னும் இருபது வருடங்களுக்குப் பின் ப்ரியா எப்படி இருப்பாளோ.... அப்படியொரு தோற்றம். “இருபது பனங்கட்டி  எள்ளுருண்டை.நாளைக்குக் காலையில வந்து எடுக்கவா ஆன்டி?” என்று கேட்க ஓம் தம்பி.ஒரு பத்து மணி போல வாங்கோ.”என்று அமைதியான பதில் கிடைத்தது.வரும் போது விமலன் “என்ன ஆன்டி,உங்கட மகள் இப்படி இருந்தா எப்படி வியாபாரம் ஓடும்?” என்று மாட்டி விட்டு வரத் தவறவில்லை. “ஆனா,அவ நல்லா ஓடுவா” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டேன்.
   அடுத்த நாள் காலை பத்தரை மணி போல் ப்ரியா வீட்டுக்கு நாதனுடன் போனேன்.இந்த முறை விமலனைக் காய் வெட்டியாயிற்று.அவன் வந்தால் பிரியாவுக்கு ஏன் மேலுள்ள கோபம் இன்னும் அதிகமாகும்.பழைய ப்ரியாவாக மாறி என்னோடு சாதாரணமாகக் கதைக்க மாட்டாளா என்ற ஏக்கம் சில நாட்களாகவே என்னை வாட்டத் தொடங்கியிருந்தது.அதனால் இந்த முறை நாதனை அழைத்துப் போனேன்.அவன் சாது..மூக்கைப் பிடித்தால் வாயால் மூச்சு விடத் தெரியாத அப்பாவி. “வீட்டுக்காரர்,வீட்டுக்காரர்”என்று சத்தமாக அழைக்க நாதன் வெருண்டு போயி “என்னடா,இவ்வளவு சத்தமாக் கூப்பிடுற?பக்கத்து வீட்டுச் சனமும் வரப் போகுது” என்று சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “ப்ரியா” என்றும் சத்தமாக அழைக்க..பிடித்தது வில்லங்கம். “யாரடா,….....மகன்.பிரியாவைக் கூப்பிடுறவன்”:என்றொரு முரட்டுக் குரலும்,படாரென்று யாரோ எதிலோ மோதி தொம்மென்று விழுந்து  வரும் சத்தமும் கேட்டது. “டேய்,நாதன் என்னடா செய்வது?” என்று கேட்டவாறே நாதனைத் திரும்பிப் பார்க்க அவனைக் காணவில்லை.தூரத்தில் ஒரு சைக்கிள் புழுதியைக் கிளப்பியவாறே விரைவது தெரிந்தது. அடேங்கப்பா என்ன ஒரு வேகம். என்று நினைத்தவாறே திரும்ப ஒரு முரட்டுக்கை எனது சட்டையைப் பிடித்தது.நான் சுதாரிப்பதற்குள் பளாரென்று முகத்தில் விழுந்த அறையால் நிலை தடுமாறி சைக்கிளின் மேலே விழுந்து சைக்கிளோடு சேர்ந்து கீழே விழுந்தேன்.
                           (தொடரும்)

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்

நிறுவனங்களில் பாவிக்கப் படும் சில விசேட சொற்றொடர்கள்
ஆங்கில மொழி இன்றைய நவீன உலகில்  தவிர்க்க முடியாததாகி  விட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.இணையத்தில் கூட எங்களது தாய் மொழியிலேயே இணையங்களைப் பார்வையிடக் கூடியதாக இருப்பதுடன்,எங்கள் தாய் மொழியிலேயே எமது ஆக்கங்களைப் பிரசுரம் செய்யக் கூடியதாக இருந்தாலும் பொதுவாக மின்னஞ்சல்,விண்ணப்பப் படிவங்கள்,மின் வணிகம் போன்றவற்றில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.அத்தோடு எங்கள் நடைமுறை வாழ்க்கையில் தொழில் புரியும் இடங்களிலும் வியாபார   நிறுவனங்களிலும் ஆங்கிலத்தில் சில சொற்றொடர்கள் சாதாரணமாகப் பாவிக்கப் படுகின்றது.அச்சொற்றொடர்களைப் பாவிக்கும் சந்தர்ப்பங்களைச் செயற்கையாக வரவழைக்காமல் உரிய சந்தர்ப்பங்களில் அவற்றைப் பிரயோகிப்பது புத்திசாலித்தனமாக இருப்பது மட்டுமன்றி  திரைப்படங்களில் கதாநாயகன் punch dialog  கதைப்பது போன்று நச்சென்றும் அல்லது நறுக்கென்றும் அத்தோடு உங்கள் மேலதிகாரியால் பெரிதும் விரும்பப்படுவதாகவும் இருக்கும்.இவற்றுக்கான விளக்கங்கள் தமிழில் கொடுக்கப்படக் கூடியதாக இருந்தாலும் இவற்றில் பெரும்பாலானவை நேரடியாக மொழி பெயர்க்க முடியாததாகவே இருக்கும்.அப்படிச் செய்ய முயற்சித்தாலும் அது முழி பெயர்ப்பாகவே இருக்கும். இவ்வளவு build up கொடுக்கிறானே,அப்படி என்ன தான் சொல்லப் போகிறான் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடும். என்றாலும் இவற்றில் சில சொற்றொடர்களை நீங்கள் ஏற்கனவே பயன் படுத்தியிருப்பீர்கள் என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த சொற்றொடர்களை அனுப்புவதற்குத் தயங்க வேண்டாம்.சரியான விளக்கங்களுடன் கூடிய தரமானவை பிரசுரிக்கப்படும்.
1. Mean business: (மீன் பிசினஸ் அல்ல) ஏதாவதொரு இலக்கை அடைவதற்கு                                                           மும்முரமாக இருத்தல்.
2. Breakeven: இலாபமும் நட்டமும் இல்லாத நிலைமை.
3. Blue collar: உடல் ரீதியான உழைப்பை நிறுவனத்துக்கு வழங்கும் தொழிலாளர்கள்.
4. White collar: மனம்,மூளை சம்பந்தப்பட்ட உழைப்பை நிறுவனத்துக்கு வழங்கும் தொழிலாளர்கள்.
5. Pink collar: மிகவும் குறைந்த வருமானத்திற்கு தங்கள் உழைப்பை வழங்கும் பெண்கள்.
6. Red tape: பொதுவாக அரச அலுவலகங்களில் பின்பற்றப் படும் அவசியமில்லாத,கால தாமதத்திற்கு வழி வகுக்கும் நடைமுறைகள்.
7. Growing pain: புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனம் சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் நிலைமை.
8. Golden handshake: ஒரு நிறுவனம் தனது செயற்பாடுகளை  முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அல்லது தனது அலுவலகத்தை வேறோர் தூர இடத்திற்கு மாற்றுவதற்காக அல்லது வேறேதும் காரணங்களுக்காகத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்காக அவர்களுக்காகக் கொடுக்கப் படும் பெருந்தொகைப் பணம்.
9. Grave yard shift: இரவு நேரப் பணிகளில்(உ+ம்: வைத்தியசாலை) ஈடுபடும் தொழிலாளர்கள்.
10. Big fish in the small pond:முக்கியத்துவம்  வாய்ந்த நபர் ஒருவர் சிறிய நிறுவனத்தில் வேலை செய்தல் .