ஞாயிறு, 27 நவம்பர், 2016

மறைந்த லயன் எயார் விமானத்தின் எஞ்சியுள்ள மர்மம்


1998ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 28ஆம் திகதி 48 பயணிகளுடனும் 5 விமான சிப்பந்திகளுடனும் 2 விமானிகளுடனும் தனது வழமையான நேர அட்டவணையின் படி மதியம் 1:40 க்குக் கொழும்பு நோக்கிப் புறப்பட்ட லயன் எயார் விமானத்திற்கு அது இறுதிப் பறப்பாக அமைந்த துன்பியல் நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?. மறந்தவர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துவதும் மறக்காதவர்களுக்கு அது சம்பந்தமாக மேலதிகமான தகவல்கள் மற்றும் அதன் மறைவைச் சூழ்ந்திருந்த மர்மம், அதைப் பற்றி வெளியான பரபரப்பான கட்டுக்கதைகள், செய்திப்பத்திரிகையில் வெளியான தகவல்கள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மங்களும் என்ற கட்டுரையை எழுதி முடிக்கும் போது தான் லயன் எயார் விமானத்துக்கு நேர்ந்தது ஞாபகத்துக்கு வந்தது.எங்கோ நடந்த ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். இங்கு நடந்ததைப் பற்றி தகவல்களைத் தேடி எழுதினால் என்ன தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்தக் கட்டுரை.
இலங்கையின் வட பகுதிக்கும் ஏனைய பகுதிகளுக்குமான தரைவழிப் போக்குவரத்து முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டு ரீதியில் நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட கப்பற்போக்குவரத்தை விட தனியார் விமான சேவை நிறுவனத்தினரால் பலாலிக்கும் ரத்மலானைக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்த விமான சேவையை அனேகமான மக்கள் விரும்பியிருந்த காலப்பகுதியில் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
அந்த 48 பயணிகளுக்கும் கொழும்பில் என்னென்ன முக்கியமான அலுவல்கள் இருந்ததோ, என்னென்ன எண்ணங்களுடன், என்னென்ன கனவுகளுடன் விமானம் ஏறினார்களோ அவ்வளவும் அந்த அன்ரநோவ்-AN 24RV  விமானத்துடன் சேர்த்து காணாமல் போயின. எங்கள் ஊரைச் (வல்வெட்டித்துறை)  சேர்ந்த பரமசிவம் என்ற வைத்தியரும் கூட அந்த விபத்தின் போது காணாமற்போயிருந்தார்.

சாதாரணப் பயணிகளுடன் கூடவே சில உயர் இராணுவ அதிகாரிகளுடன் பிற்பகல் 1:40 க்குப் புறப்பட்ட அந்த விமானம்  கிளம்பிப் பத்து நிமிடங்களில் விமானத்தில் அழுத்தம் குறைவதாக பலாலி கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானத்தின்  விமானியிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்ற சிறிது நேரத்தில் விமானத்தின் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டன. இவ்விமானமானது பெலாரஸ் நாட்டின் விமானியையும் (Matochko Anatoli), உப  விமானியையும் (Lysaivanov Siarhei) வழித்தட அவதானிப்பாளரையும் (Kozlov Sergei), விமானப் பொறியியலாளரையும் (Anapryienka Siarhei) மற்றும் லயன் எயார் விமான நிறுவனத்தின் விமானப் பணிப் பெண்ணையும் (Dharshini Gunasekera),சிப்பந்தியையும் ( Chrishan Nelson),கடை நிலை ஊழியரையும் (Vijitha) விமானப் பணியாளர்களாகக் கொண்டிருந்தது.      
ஆரம்ப கட்ட அறிக்கைகளின்படி விடுதலைப் புலிகள் தோளில் வைத்து இயக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையான  மான்பாட்(Manpad) என்றழைக்கப்படும் Man Portable Air Defense System அல்லது Sam என்றழைக்கப்படும் Surface to Air Missile  என்ற தோளில் வைத்து இயக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தியே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இராணு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனாலும் விடுதலைப்புலிகள் இதற்கு உரிமை கோரவில்லை. அவர்கள் பொதுமக்களை நிச்சயம் இலக்கு வைத்திருக்க மாட்டார்கள். அப்படி இலக்கு வைத்திருந்தாலும் கூட விமானத்தில் யாரேனும் இராணுவ உயரதிகாரிகள் இருந்திருப்பார்கள் என்று மக்கள் நம்பும் அளவுக்கு, அதாவது விடுதலைப்புலிகள் விடும் தவறுகளை நியாயப்படுத்தும் அளவுக்கு மக்களைக் கொண்டிருந்தது அவர்களின் படைபலத்தை விட மிகப்பெரும் பலமாகக் குறிப்பிடலாம்.
கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கு முன் இதே போல் தாக்குதல் முறையைப் பயன்படுத்தி இரண்டு அவ்ரோ 748 ரக விமானங்களை விடுதலைப் புலிகள் தாக்கியிருந்த போதிலும் அதற்கு உரிமை கோரியிருந்தனர். இந்நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 28ஆம் திகதியும் 29ஆம் திகதியுமாக அடுத்தடுத்த நாட்களில்  இடம்பெற்று,  இலங்கை இராணுவ மற்றும் விமானப் படையினருக்குக் கிலியை ஏற்படுத்தி, இனி இராணுவம் சார்ந்த விமானங்கள் பறக்க முடியுமா என்றதொரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தன.
விமானம் காணாமல் போவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு லயன் எயார் விமான நிறுவனத்துக்கு தமிழீழ நிர்வாக சேவை என முத்திரையிடப்பட்ட எச்சரிக்கைக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது. இராணுவத்தினரை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்ற தங்களின் வேண்டுதல் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவதாகவும், அது தொடர்ந்து இடம்பெற்றால் ஒன்பதாம் மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னர் விமானம் தாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  லயன் எயார் நிறுவனம் அது தன்னுடைய போட்டி நிறுவனத்தின்செயல் எனக் கருதி அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியிருந்தது. (அப்போது லயன் எயார்   நிறுவனத்துக்குப் போட்டியாக இயங்கிய செரண்டிப் எயார் லைன்ஸ் பின்னர் ஏரோலங்கா  என்றும் பெயர் மாற்றம் பெற்று இயங்கியது என்பதும் அதன்  நிர்வாக முகாமையாளராக 2005, 2006 காலப்பகுதியில் நான் பணி புரிந்தேன் என்பதும் உதிரியான விடயங்கள்) 
காணாமற்போன லயன் எயார் விமானம் சம்பந்தமாக செய்திப்பத்திரிகையில்  தேடல்களை மேற்கொண்ட போது 2012 ஆம் ஆண்டு நான்காம் மாதம் 6ஆம் திகதி ரிவிர என்ற சிங்களப் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது. இது  உறுதிப்படுத்தப்படாத செய்தியெனினும் சில சுவாரசியமான விடயங்கள் உள்ளதனால் இதனையும் சேர்த்துக் கொண்டேன். இதன் தலைப்பு “ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான லயன் எயார் விமானத்தின் ரகசியம்”
இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது “ அதன் பின்பு லயன் எயார் விமான விபத்தைப் பற்றி நிறைய வதந்திகள் பரவின. 24 வயதான இளைஞன் ஒருவன் விமானத்தைக் கடத்தி, இந்தியாவில் தரையிறக்கினான்  என்று கூறப்பட்டது.
இன்னுமொரு வதந்தியாக அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபரின் உறவினர்களுக்கு வவுனியாவில் செஞ்சிலுவைச் சங்கத்தின் நோயாளர் ஊர்தியின் ஓட்டுனர் ஒருவர்  பயப்பட வேண்டாமென்றும் புலிகள் விமானத்தை இரணைமடுவில் தரையிறக்கி விட்டார்கள் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது..
அதன் பின்னர் இந்த விமானம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவியபோதும்  ஒன்றுக்கும் ஆதாரங்கள் இல்லை. எல்லாமே கட்டுக்கதைகள் அல்லது அனுமானங்கள் என்று பெரும்பாலும் எல்லோரும் நினைக்குமளவுக்கு நம்பகத்தன்மை அற்றவையாக இருந்தன.
ஆனால் 2011 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 13ஆம் திகதி மானிப்பாயில் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான அருண் என்றொருவரின் கைதைத் தொடர்ந்து சில திடுக்கிடும் தகவல்கள் செய்திப்பத்திரிகையில் வரத் தொடங்கின. அருணை மேலதிக விசாரணை செய்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இந்தத் தாக்குதலுக்கு அருண், கடற்புலிகளின் மிலிந்தன் மாஸ்ரரினால் நியமிக்கப்பட்டதாகவும் தாக்குதல் நடந்த அன்று காலை மிலிந்தன் மாஸ்ரர் அருணைப் படகு மூலம் இரணைதீவில் கொண்டு சென்று விட்டதாகவும் பின்னர் அருண் சாம் ஏவுகணை மூலம் விமானத்தைத் தாக்கி விழுத்திய பின், தாக்குதலை உறுதிப்படுத்துவதற்காக விமானம் விழுந்த இடத்துக்குச் சென்ற மிலிந்தன் மாஸ்ரர், அங்கு மிதந்து கொண்டிருந்த பயணிகளின் சில பொதிகள் மற்றும் சிறிய பணப்பை ஆகியவற்றை மீட்டுக்கொண்டு வந்து பணத்தை அருணுடன் பகிர்ந்து கொண்டதாகவும், பின்னர் இருவரையும் கௌரவிப்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இரவு உணவுக்கு அழைத்ததாகவும்  ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். மேலும் இன்னொரு விமானத் தாக்குதலுக்கு அருணை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும் ஆனால் குறி தவறியதனால் தண்டனைக்குட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் 2005 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு விலகி தொழில் நிமித்தம் டோஹா கட்டாருக்குச் சென்று விட்டதாகவும், 2011இல் விடுமுறையில் வந்து நின்ற போதே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் அருண் கூறியதாகத் தெரிவித்தனர்.       
அதன் பின்னர் இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் மூலம் இவ்விமானத்தின் சிறு சிதைவுகள் இரணைதீவில் 2012ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் மீட்கப்பட்டது. அதன்பின்பு இடைக்கிடை இங்கு தேடுதல் நடத்திய இலங்கைக் கட்ற்படையினரின் சுழியோடிகள் ஏழு மாதங்களின் பின்பு 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 5ஆம் திகதி இந்த விமானத்தின் இயந்திரம் அடங்கலான பாரிய சிதைவை இரணைதீவிலிருந்து ஒன்றரை கடல் மைல் தூரத்தில் 25 அடி ஆழத்தில் மீட்டனர்.  
மேலும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இரணைதீவுக் கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்களால்  கண்டெடுக்கப்பட்ட 33 சடலங்கள் உரிய முறைப்படி  செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல் கௌதாரிமுனையில் தகனம் செய்யப்பட்டன என்று அப்பகுதியில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய திருநாவுக்கரசு சுப்பிரமணியம்  என்பவரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தனர். 

அத்துடன் லயன் எயார் விபத்தின் மர்மம் முடிவுக்கு வந்ததாகவே கருதப்பட்டது. ஆனாலும் பதினான்கு வருடங்களாகக் கடலுக்கு அடியில் கிடந்த விமானத்தின் சிதைவுகளுக்கு மத்தியில் கண்டெடுத்ததாகக் கூறப்பட்ட சில ஆடைகள், கடிதங்கள், நகைகள், மற்றும் ஒரு தேசிய அடையாள அட்டை( இந்த அடையாள அட்டைக்குரிய பெண்ணான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  திருமதி குணமணி பாலசுப்பிரமணியம் தான் இந்த விமானத்தில் பயணம் செய்யவில்லையென்றும்  தன்னிடம் அடையாள அட்டையைச் சேர்த்து விடுவதற்காக அந்த விமானத்தில் பயணித்த ஒருவரிடம் தன்னுடைய உறவினர் கொடுத்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.)    என்பன நல்ல நிலைமையில், காணாமற் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு எல்லோர் மத்தியிலும் இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்குறியை எழுப்பியிருந்தாலும்  அந்தக் கேள்விக்குறி ஆச்சரியக்குறி ஆனதோடு நின்று விட்டது. அதனை முற்றுப்புள்ளியாக்கும் முயற்சிகள்..... ஏன் குறைந்தபட்சம் கமாவாக்கும் முயற்சிகள் ஊடகத்துறையினரால் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியதே.
(இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான சில தகவல்களும்,படங்களும்  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்திலிருந்தும், சூரியன் F.M இணையத் தளத்திலிருந்தும், ரிவிர செய்திப்பத்திரிகையிலிருந்தும் மற்றும் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக