வியாழன், 26 ஜனவரி, 2012

வல்வை நகரபிதா திரு வல்வை ந.அனந்தராஜ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

வல்வை நகரபிதா திரு வல்வை ந.அனந்தராஜ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

 
1.வல்வை இராணுவ முகாமை அகற்றக் கோரி ஒரு விண்ணப்பம் ஒன்றை இராணுவ அதிகாரியிடம் கையளித்திருப்பதாகவும் அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருப்பதாகாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது உண்மை தானா?அது உண்மையாயின்  அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அதே போல் காவல் நிலையமும் அகற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வல்வெட்டித்துறை நகரத்தின் இத்தயப் பகுதியாகசந்தி ,கடைத் தொகுதி மற்றும் குடியிருப்புக்கள் யாவும் இராணுவ முகாம்களாகவும்,காவல் நிலையமாகவும் மாற்றப்பட்டுள்ளதால் சுமார் அறுபது வீடுகளும்,பத்திற்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் பாதுகாப்புப் படையினரதும்,காவல் துறையினரதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதனால் வல்வெட்டித்துறை நகரம் பாலைவனம் போல சோபை இழந்து காணப்படுகிறது.இந்த நிலையில் இந்நகரத்தைக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் கடினமானதொரு பணியாகத் தான் இருக்கும்.இதனால் பிற்பகல் 6 மணிக்குப் பிறகு வல்வெட்டித்துறை  நகரப்பகுதி ஆள்நடமாட்டம்  குறைந்து களை இழந்து போய் விடுகிறது. உண்மையில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்படாத ஒரு உயர் பாதுகாப்பு வலயமாகவே விளங்குகிறது என்பது வெளியுலகத்திற்குத் தெரியாது.எனவே தான் வல்வை நகரத்தை மீளக் கட்டியெழுப்புதல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சந்தியைச் சூழவுள்ள இராணுவ முகாமை அகற்றி அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று எமது சபை தீர்மானத்தைக் கொண்டு வந்தது.இது தொடர்பாக வடமாகாண கௌரவ ஆளுநர் மேஜர் சந்திரசிறி,அரச அதிபர், இராணுவத்தளபதி,ஆகியோருக்குக் கடிதங்கள் அனுபப்பட்டதுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் என்னால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவில் இராணுவ முகாமை அகற்றுவதாக கௌரவ ஆளுநரும்,அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்தே வாக்குறுதி அளித்திருந்தனர்.அவர்களுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறோம்.ஆனால் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.எமது மக்களின் நிம்மதியானதும்,சுபீட்சமானதுமான வாழ்வில் அக்கறை இருக்குமாயின் இராணுவ முகாமை அகற்றுவதற்கு நாள் குறிக்கத் தேவையில்லை.
        இந்த வினாவுக்கான பதிலை உங்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது, அரச அதிபர், அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ ஆளுநர்  ஆகியோருக்கு நான் எழுதிய கடிதம் சார்பாக, ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகக் கடந்த  வெள்ளிக்கிழமை(30ம் திகதி) பிரதிப் போலீஸ் மா அதிபர்  என்னுடன் தொடர்பு கொண்டு காவல் நிலையம் அமைந்துள்ள வீடுகள்,கடைகள் போன்றவற்றில் இருந்து தாம் வெளியேறுவது தொடர்பாக உரையாடியதில் எனக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.அவர்களால் பொறுப்பேற்கப்பட்ட வீடுகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வாடகை செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டதுடன்,வீட்டு உரிமையாளர்கள் தம்மை வெளியேறுமாறு கேட்பதற்குப் பதிலாக வாடகையை உயர்த்தித் தருமாறு கேட்பதாகவும் கூறினார்.அவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் யாழ் வீதியின் கிழக்குப் புறமாக உள்ள கடைத்தொகுதிகளையும் வீடுகளையும் விட்டு வெளியேறுவதாக வாக்குறுதி அளித்தார்..அதே போன்று இராணுவ முகாம் சூழல் வல்வெட்டித்துறை நகர அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பதைத் தாம் உணர்வதாகவும்,பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறு எனக்குக் கூறினார், தானும் இதனைத் தெரியப்படுத்துவதாகவும் கூறியது எனக்கொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
2.வல்வை நகர சபைப்  பகுதியில் முன்னாள் போராளிகள் எத்தனை பேர் உள்ளார்கள்? முன்னாள் போராளிகள் எல்லா வழிகளாலும் புறக்கணிக்கப் படுகிறார்கள், மனவுளைச்சலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்றதொரு பொதுவான கருத்து நிலவுகின்ற நிலையில் அவர்களுக்கு உதவும் திட்டங்கள் ஏதேனும் கைவசம் இருக்கின்றனவா?
 வல்வை நகராட்சி மன்றப் பிரதேசங்களில் முன்னாள் போராளிகள் பலர் தமது இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விபரத்தை உங்களுக்கு வழங்க முடியாது இருக்கின்றது.ஆனால் அவர்களுடைய சந்தோஷமான வாழ்வுக்கும் ஏதாவது செய்தேயாக வேண்டும்.எமது மக்களின் வாழ்வுக்காகத்  தம்மை அர்ப்பணித்த அந்தப் போராளிகளை நாம் புறக்கணித்து விட முடியாது.அவர்கள் தற்போது மனவுளைச்சலுக்கும்,மகிழ்ச்சியற்றதுமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது  உண்மை தான்.அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை ஏற்படுத்தி,நிறைவானவர்களாக இந்த மண்ணில் வாழ வைக்க வேண்டும்.அதே வேளை மற்றவர்களைப் போல கௌரவமானவர்களாகவும் வாழ வைக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.அதற்கான திட்டங்களை அடுத்த ஆண்டிலாவது  நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்.இதன் முக்கியத்துவத்தை நினைவூட்டியதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3.இந்தப் பகுதி மக்கள் கோவிலுக்குச் செலவழிக்கும் பணம் அதிகம் என்று ஏனைய இடங்களைச் சேர்ந்த மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?அப்படியாயின் அந்தச் செலவுகளைக் குறைத்து அந்தப் பணத்தைக் கல்விக்காகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பயன்படுத்துவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  எவ்வாறு அதனை நடைமுறைப் படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள்? (இதற்கான பதிலை நகர சபைத் தலைவர் என்ற ரீதியில் இல்லாமல் பொது மகன் என்ற ரீதியிலும் பதிலளிக்கலாம்)
      ஒரு நகரத்திற்கு அல்லது கிராமத்திற்கு அழகூட்டுவதும்,பண்பாட்டை எடுத்துக்காட்டும் சின்னங்களாகவும் விளங்குவது அந்த ஊரின் ஆலயங்களாகும் .இதனையே ஒளவையார் கூட “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.” என்று கூறியுள்ளதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.இலங்கை,இந்திய இராணுவங்களால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும்,அழுத்தங்களுக்கும் ஆளான போது எமது மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்ற எமது ஊரின் ஆலயங்களே துணை புரிந்தன என்பதை இன்றும் எமது மக்கள் நம்புகின்றனர்.ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று  ஆலயங்களுக்காகச் செலவு செய்யப்படும் தொகையில் ஒரு பகுதியை நகர மக்களின் வாழ்வுக்காகவும் செலவழிக்க முன் வரும் போது எமது மக்களின் வாழ்க்கையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும்.பெரிய ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஆலய வளர்ச்சியுடன் மக்களின் ஆன்மீக வளர்ச்சி,சில தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல்,அறநெறி வகுப்புக்கள்,கலை கலாச்சார விழுமியங்கள் போன்ற செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கும் ஆலயங்களின் அறங்காவல் குழுக்கள் முன்வர வேண்டும்.ஆலய அறங்காவல் குழுக்களால் முன்னெடுக்கப்படும் இவை போன்ற அபிவிருத்தித் திட்டங்களில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.       
4. பருத்தித்துறை-காங்கேசன்துறை வீதி அகலிப்பு வேலைகள் 2012 தை மாதமளவில் ஆரம்பிக்கப்படவிருப்பதான தகவல் உண்மையா? பிரதான வீதி எத்தனை அடி அகலமாக்கப் படப்போகிறது? பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வாறு நட்டஈடு வழங்கப்படவிருக்கிறது? பணம் வழங்கப்படுமா? அல்லது சுவர் கட்டிக் கொடுக்கப்படுமா?
பருத்தித்துறை-காங்கேசன்துறை வீதி அகலிப்பு வேலைகள் 2012 தை மாதத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.வீதி அகலிப்பு வேலைகள் முடிவடைந்தால் எமது நகரம் அழகூட்டப்படும்.வீதியின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நாட்டி அழகூட்டுவதற்காக எமது நகராட்சி மன்றம் திட்டமிட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் மையப் பகுதியிலிருந்து இருபுறமும் 50 அடி விட்டே கட்டிட அனுமதியை வழங்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் எமது நகரத்தைப் பொறுத்த வரையில் நெடியகாட்டுப் பகுதியிலிருந்து ஆதி கோவில் சந்தி வரையுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதிக்கப்படலாம்.ஆனால் தற்போதைக்கு 7 மீற்றர் தூரத்திற்கே பாதை அமைக்கும்  வேலைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகிறது.ஒரு நகர அபிவிருத்தியில் வீதி அகலிப்பும்,மர நடுகையும் முக்கியமான வகிபாகத்தை வகிப்பதால் எமது மக்களும் இதற்கான ஒத்துழைப்பையும்,ஆதரவையும் வழங்க முன் வர வேண்டும்..வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மதில்களை உள்நோக்கி நகர்த்துபவர்களுக்கு நட்டஈடாக மதில்களை அமைத்துக் கொடுக்கின்றனர்.ஆனால் பெரிய அளவில் நட்டஈட்டினை அவர்கள் வழங்க முன்வர மாட்டார்கள்.

5.நகரசபைப் பணியாளர் ஒருவர் மீன் சந்தை கேள்விப் பத்திர ஊழலொன்றில் சம்பந்தப் பட்டிருப்பதாக ஒரு இணையப் பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது அது  சம்பந்தமாக ஏதேனும் மக்களுக்குச் சொல்ல விரும்புகிறீர்களா?
 சில ஊடகங்கள் சிறிய விடயத்தைக் கூடப் பூதாகரமாகக் காட்டித் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களிடையே குழப்பத்தையும்,அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.தாங்கள் குறிப்பிட்டது போன்று கடந்த ஒன்பது வருடங்களாகக் குறித்த ஒரு நபரே மாட்டிறைச்சிக் கடையைக் குத்தகை மூலம் எடுத்து நடத்தி வருகிறார்.அவர் வழமையாகவே இந்தக் குத்தகையை எடுப்பதற்காக,முதலாவதாக எடுப்பவரையோ,அல்லது எடுக்க வருபவரையோ பணத்தைக் கொடுத்து அவர்களை எடுக்க விடாது செய்து வருபவர்.அதே போன்று இந்த வருடமும் முதலாவது குத்தகைக்காரருக்கும் இரண்டாவதாக எடுத்தவருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களோடு சம்பந்தப்பட்ட உறுப்பினர் தொடர்பு கொண்டுள்ளதாக எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.இது தொடர்பாக சபை அமர்வில் சரியான தீர்மானம் எடுக்கப்பட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இதனைப் பெரிதுபடுத்தி ஒரு சிலர், குறிப்பாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ,குறுக்கு வழி மூலம் சபை உறுப்பினராக உள்நுழைவதற்கான  வாய்ப்பாகப் பயன்படுத்தி வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை,முடங்கச் செய்து,எதிரிகளின் பலத்தை ஓங்கச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தி,மற்றும் கல்வி,கலாச்சாரம்,விளையாட்டுத்துறை ஆகியவற்றில் மேலோங்கி நிற்கும் வகையில் வல்வெட்டித்துறையைக் கட்டி வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்துடன்,பல சவால்களைச் சந்தித்து,தர்மத்தின் வழி நின்று ஆட்சி செய்யும் எங்களால் அவர்களது தீய எண்ணங்களையும் வெற்றி கொள்ள முடியும்.அவர்களது சதி வலையில் சிக்காது,எமது மக்கள் தம்மையும், எமது நகரையும் காத்துக் கொள்ள, மிகவும் நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுமாறு இந்த இணையத்தினூடாகக் கேட்டுக் கொள்கிறேன். 
6.எத்தனையோ  இழுபறிகளுக்குப் பின் உபதலைவர்  பதவியை ஏற்றுக் கொண்ட திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் அதன் பின் தனது உபதலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை மக்களுக்குத் தெளிவு படுத்த விரும்புகிறீர்களா?
   அரசியல் வாழ்க்கையிலும்,பொது வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்தி வரும் முதிர்ந்த அனுபவமுடைய திரு.க.சிவாஜிலிங்கம் அவர்கள்,எமது நகராட்சி மன்றத்தின் உப தலைவராக வரும் வாய்ப்பை  இளைய தலைமுறையைச் சேர்ந்த திரு க.சதீஸ் அவர்களுக்கு வழங்குவதற்காக மிகவும் பெருந்தன்மையுடன் தனது பதவியை விட்டுக் கொடுத்து இன்று ஒரு உறுப்பினராக இருந்து எனக்குப் பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கிறார்.ஒரு சிலர் எதிர்பார்ப்பது போல் எமது சபை எந்தக் குழப்பமும் இன்றி மிகவும் சுமூகமான முறையில் இயங்குகின்றது.குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இரு உறுப்பினர்களும் கூட முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதும் எமக்குப் பக்க பலமாக உள்ளது.  
7.ஒரு காலப் பகுதியில் வல்வையின் சிறப்புக்களில் ஒன்றாக பொது நூலகம் விளங்கியது.இது எந்த அளவுக்கு மக்களுக்கான சேவையை வழங்கி வருகின்றது?
வல்வெட்டித்துறைக்கான மிகவும் சிறப்பு வாய்ந்த பொது நூலகம் எமது நகராட்சி மன்றத்தின் கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.அதில் சுமார் 10000 இற்கும் அதிகமான அரிய நூல்கள் உள்ளன.இதனை மிக அதிகளவிலான மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆண்டு மாணவர்களினதும்,பொதுமக்களினதும் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலக சேவை,மற்றும் வாசிப்பு முகாம் போன்றவற்றையும் நடத்த உத்தேசித்திருக்கின்றோம்.அதே வேளை இவ்வளவு அரிய பெறுமதி வாய்ந்த நூல்கள் மற்றும் உசாத்துணைப்பிரிவு,இரவல் வழங்கும் பிரிவு,வாசகர் சேவை போன்ற பல்வேறு நூலகப் பிரிவுகள் இருந்த போதும் எமக்கென நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட பொது நூலகக் கட்டிடம் இல்லாதது பெரிய குறையாக இருக்கின்றது.இதற்கென ஒரு காணி எமக்குக் கிடைக்குமாயின் பொது நூலகக் கட்டிடத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.எமது வரவு செலவுத் திட்டத்தினூடாகவும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஊடாகவும் நூலக வளர்ச்சிக்கான  நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
8.நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர் பற்றாக் குறை உள்ளது என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இப் பற்றாக்குறையானது 2012 இல் தீர்க்கப்படுமா?
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் பெரும் சவாலாக விளங்குவது திண்மக் கழிவகற்றலாகும்.அவற்றை அகற்றுவதிலும் நகரைச் சுத்திகரிப்பதிலும் எமது நகராட்சி மன்றத்தின் சுகாதாரத் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எமது நகரத்திற்கான அனுமதிக்கப்பட்ட ஆளணியை விட சுமார் நான்கு பேருக்கான வெற்றிடமுள்ளது.அதனை நிரப்புவதற்கான அதிகாரம் தற்போது பொது நிர்வாக அமைச்சிடமே உள்ளது.
    திண்மக் கழிவகற்றலில் நகர சபை ஊழியர்களின்  எண்ணிக்கை என்பதை விட மக்களின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுவதே முக்கியமானது.இன்று குப்பைகளை எமது மக்களின் வீடுகள்,மற்றும் பொது இடங்களிலிருந்து எடுத்துச் சென்று அவற்றைப் போடுவதற்கான இடம் தான் பிரச்சனையாக இருக்கிறது.நாங்கள் இவற்றைக் கொண்டு கூட்டுரம் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்குவதற்கும் கூட  அவற்றைத் தரம் பிரிப்பதற்கும் போதிய இடவசதி வேண்டும்.இதற்கு சுமார் முப்பது பரப்பு நிலமாவது தேவைப்படுகிறது.
அதே வேளை பொது மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்.உக்கல் அடையக் கூடியவற்றை ஒரு பையிலும்,பிளாஸ்டிக்,பொலித்தீன்  போன்றவற்றை வேறொரு பையிலும் போட்டு வைத்தால் குப்பைகளை எடுத்துச் சென்று புதைப்பதற்கும் வசதியாக இருக்கும்.அல்லது வீடுகளிலேயே இடமுள்ளவர்கள் சிறிய குழிகளை வெட்டி அவற்றில் குப்பைகளைப் போட்டு வந்தால் ஆறு மாதங்களில் அவை கூட்டுரமாக மாறும்.அவற்றை வீட்டுத் தோட்டங்களுக்கோ,பூமரங்களுக்கோ    பயன்படுத்தலாம்.அவை மிகச் சிறந்த பசளையாக இருக்கும்.இந்த விடயத்தில் எல்லாவற்றிக்கும் நகரசபைத் தொழிலாளர்களை எதிர்பார்ப்பதை விட,எமது வீடுகளையும் எமது வீட்டின் முன்னால் உள்ள இடங்களையும் நாமே சுத்தம் செய்து வந்தால் வேறு எவரையும் நம்பியிருக்கத் தேவையில்லை.
9.வல்வை நகர மக்களுக்கு நன்னீர் வழங்கும் திட்டம் பற்றி மாநகர சபைத் தேர்தலின் போது குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த வேலைகள் தொண்டைமானாற்றில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது என்பது அனேகர் அறிந்ததே. அதில் நகர சபையின் பங்கு என்ன? தற்போது அதற்கான செயற்பாடுகள் எந்த அளவில் உள்ளன? இதற்கான நீரானது எந்த இடத்திலிருந்து கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருக்கிறது? இத் திட்டம் நிறைவேற இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? இதில் மக்களுக்கான நீர் விநியோகம் எவ்வாறு இடம் பெறவிருக்கிறது? வீடுகளுக்குத் தனித் தனியாகவா? அல்லது போது இடங்கள் மூலமாகவா?
நன்னீர் விநியோகத் திட்டம் ENREP செயற்திட்டத்தின்  மூலம் தொண்டைமனாற்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டுமானப் பணிகள் 2013 க்குள் பூர்த்தியாக்கப்பட்டதும்,குடிநீர் விநியோகம் இடம்பெறும்.நகர சபையுடன் இணைந்தே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கான நீரைத் தற்போது மணற்காட்டிலிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீண்ட நோக்கில் இரணைமடுவிலிருந்து நீர் பெறப்படும்.இவ்வாறு பெறப்படும் நீர் பொதுக் குழாய்கள் மூலமாகவும் வீட்டு உரிமையாளர்கள் விரும்பினால் தனித்தனியாக வீடுகளுக்கும் வழங்கப்படும்.2012 தை மாதத்தில் குழாய்களைப் பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.2013 இலேயே நீர் விநியோகம் இடம்பெறும்.

10.வல்வையில் உள்ள பாடசாலைகளின்  தரத்தை உயர்த்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? நீங்கள் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிப் பிரிவுக்கும்,நூலக அபிவிருத்திப் பிரிவுக்கும் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக விளங்கிய போது உங்களால் வட பகுதிப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பாக வல்வைப் பாடசாலைகளுக்கு வழங்கப் பட்ட பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிடுவீர்களா?
ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது அந்த நகரத்தின் கல்வி அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது.ஏமது நகராட்சி மன்றத்திற்குள் உள்ள எட்டுப் பாடசாலைகளிலும் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வைத்திருக்கின்றோம்.2012 இலிருந்து அவற்றைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
       நான் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிப் பிரிவுக்கும்,நூலக அபிவிருத்திப் பிரிவுக்கும் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய போது பல முன்னேற்றகரமான அபிவிருத்திகளை மேற்கொண்டிருக்கின்றேன்.வடக்குக் கிழக்கில் 286 புதிய நூலகங்களையும்,பல மில்லியன் ரூபா பெறுமதியான நூல்களையும் பெற்றுக் கொடுத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன்.அதே வேளை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குள் இயங்கும் கம்பர்மலை வித்தியாலயம்,சிதம்பராக் கல்லூரி,வல்வை மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் புதிய நூலகக் கட்டிடங்களையும் பல லட்சம் ரூபா பெறுமதியான வாசிப்பு நூல்களையும்  வழங்கியிருக்கின்றேன்.அதை விட ஏனைய பாடசாலைகளுக்குப் பல பெறுமதி வாய்ந்த வாசிப்புத் துணை நூல்களையும் வழங்கியிருக்கின்றேன்.
இது வரை என்னுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வல்வெட்டித்துறை மண்ணிலும் புலம் பெயர்ந்தும் வாழும் எனது  எனது உறவுகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.2012 ஆம் ஆண்டு சுபீட்சமான வாழ்வை உங்கள் ஒவ்வொருத்தருக்கும் வழங்க வேண்டுமென்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..