ஞாயிறு, 27 நவம்பர், 2016

உயிரோடு (ALIVE)- ஆங்கிலத் திரைப்படக் கதை

பீரிஸ் போல் ரீட் என்பவர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய ‘Andees Survivors’ (அந்தீஸ் மலையில் உயிர் பிழைத்தவர்கள்) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட இந்தத் திரைப்படத்தை கத்லீன் கென்னடி, ரொபேர்ட் வாட்ஸ் ஆகியோர் தயாரிக்க, ஃபிராங்க் மார்ஷல் இயக்க முக்கிய பாத்திரங்களில் ஏதேன் ஹக்,வின்சென்ட் ஸ்பனோ,  ஜோஸ் ஹாமில்டன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் ஒரு கல்லூரியின் ரக்பி அணி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைப் பற்றி விபரிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது.1972 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 13ஆம் திகதிக்கு கதை பின்னோக்கி நகர்கிறது. உருகுவே நாட்டின் விமானப்படையினரின் விமானமொன்றில் அந்நாட்டின் ரக்பி அணியும் அணி வீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் அடங்கலாக தென்னமெரிக்காவின் சிலி நாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தீஸ் மலைத்தொடரின் அழகை ரசித்தவாறும், இன்னும் இருபது நிமிடங்களில் தரை இறங்கப் போவதையும் நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்க அந்த மகிழ்ச்சியான நிலைமையைத் தலைகீழாக்குகிறது திடீரென எதிர்ப்படும் ஒரு புயல். அந்தப் புயலின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் விமானம் ஒரு மலையுடன் மோதுகிறது. மோதலின் போது விமானத்தின் வாற்பகுதி, இறக்கைகள் என்பன தனித்தனியாகின்றன. அத்துடன் மோதிய விமானம் சரிவொன்றில் வேகமாகக் கீழிறங்கி வரும் போது  இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி செயற்பட ஆறு பயணிகளும், ஒரு விமான சிப்பந்தியும் விமானத்துக்கு வெளியே தூக்கியெறிந்து கொல்லப்படுகிறார்கள்.அதிர்ச்சியிலிருந்து ஒருவாறு மீண்ட ஏனைய பயணிகள் ரக்பி அணித்தலைவன் அன்ரானியோவின் தலைமையின் கீழ் இரு மருத்துவ மாணவர்களின் உதவியோடு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் சற்று நேரத்துக்குள்ளாகவே தலையில் கடுமையான காயங்களுக்குள்ளான இன்னும் ஆறு பேரின் உயிர் பிரிகிறது. தலையில் கடுமையாகக் காயமடைந்த நந்தோவின் உடல் ஆழ்மயக்க நிலையை (கோமா) நிலையை அடைகிறது.  
சூரிய அஸ்தமனம் நெருங்க மிஞ்சியுள்ள பயணிகள் இரவுக்கான தயார்படுத்தலில் இறங்குகிறார்கள். இருக்கைகளின் மேலுறைகளைக் கழற்றிப் போர்வைகளாகப் பாவிக்கலாம் என்று அறிந்து கொள்கிறார்கள். விமானத்தின் உடைந்த பகுதிகளைப் பொதிகளைக் கொண்டு அடைத்து, உறைய வைக்கும் பனிக்குளிரிலிருந்து தப்புவதற்காக ஒருவரோடொருவர் ஒட்டிப் படுத்துக் கொள்கிறார்கள். பனிக்குளிரின் தீவிரத்தன்மை காரணமாகவும், காயங்களின் கடுமை காரணமாகவும் இன்னும் இரண்டு பேர் அன்றிரவு இறந்து போகிறார்கள்.

அந்தப் பனி மலையில் உணவாகத் தேடி கொள்வதற்கோ, அல்லது வேட்டையாடுவதற்கோ ஒன்றும் இல்லாததால் விமானத்தில் என்ன உணவு அல்லது குடிபானம் கிடைக்கிறதோ அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்ரானியோ கூறுகிறான். அப்போது தாழப்பறந்து செல்லும் ஒரு விமானத்தைக் கண்ட எல்லோரும், விரைவில் எல்லோரும் காப்பாற்றப்பட்டு விடுவோம் என்று  குதூகலிக்கிறார்கள். இதன் காரணமாக அன்ரானியோவும் இன்னும் இரண்டு பேர்களையும் தவிர ஏனையோர் மீதமிருக்கும் இனிப்புக்களை உண்டு விடுகிறார்கள்.

அடுத்த நாள் தங்களைக் காப்பாற்றும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு கடுமையான பனிப்புயலின் காரணமாக அந்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிந்து கடும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார்கள். ஏமாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட விரக்தியினால், இனிப்புக்களை உண்டு முடித்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதற்கிடையில் ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற நந்தோ அவனுடைய இரண்டு நண்பர்களது கவனிப்பின் காரணமாக சுயநிலைக்குத் திரும்புகிறான். தனது தாயின் இறப்பை அறிந்து கவலையடையும் அவன் கடுமையான காயத்துக்குள்ளாகியிருக்கும் தனது தங்கையைக் பத்திரமாகக் கவனித்துக் கொள்கிறான். தனது தங்கை விரைவில் இறந்து விடுவாள் என்பதை உணர்ந்து கொள்ளும் நந்தோ எப்படியாவது இந்த மலையை விட்டு வெளியேற உறுதிகொள்கிறான். அதற்கு உணவு தேவை என்று அவனது சகா ஒருவன் நினைவூட்ட நந்தோ ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறான்.  அதாவது இறந்த சக பயணிகளின் உடல் சதையை உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தே அது. இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுச் சிறிது நேரத்துக்குள் அவனுடைய தங்கையும் இறக்கிறாள்.
கடுமையான வாதப்பிரதி வாதங்களுக்கு உள்ளாகும் அந்த சர்ச்சைக்குரிய கருத்து இறுதியில் பயணிகள் மத்தியில் வேறு வழியில்லாமல் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்படுக்கிறது. அதன் பின்னர் செர்பினோ, ராஃபில், மார்டினோ ஆகிய பயணிகள் விமானத்தின் வாற்பகுதியைத் தேடிப் புறப்படுகிறார்கள். அதனைத் தேடி கண்டுபிடித்து அங்குள்ள மின்கலங்களைத் தேடி எடுத்து செயலிழந்திருக்கும் தங்களுடைய  வானொலியை இயங்க வைத்து தங்களுடைய இருப்பிடத்தை அறிவதற்கு சமிக்ஞைகள் அனுப்புவதே அவர்களுடைய நோக்கம். அவர்கள் தேடிச் சென்ற இடத்தில் ஏனைய சக பயணிகளின் உடல் கிடைக்கிறதே தவிர அவர்கள் தேடிச் சென்ற மின்கலங்கள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துக்குள்ளாகி அவர்கள் திரும்பி வந்து சிறிது நேரத்தில் கடுமையான பனிச்சரிவு அந்தப் பிரதேசத்தைத் தாக்குகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருந்த விமானத்தின் பகுதி பனியினால் நிறைய, அனேகமானவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தப்ப சிலர் பனியில் சிக்கி உறைந்து இறந்து விடுகிறார்கள்.




இழப்பின் காரணமாகச் சோர்ந்து விடாமல் மீண்டும் நந்தோ, அன்ரானியோ, கனேசா, டின்டின்  ஆகியோர் மீண்டும் விமானத்தின் வாற்பகுதியைத் தேடிப் புறப்படுகிறார்கள். அவர்கள் அந்த வாற்பகுதியைத் தேடிக் கண்டுபிடித்தும் அந்த மின்கலங்களைக் கழற்ற முடியாமல் திரும்பி வந்து தொழில்நுட்ப விடயங்களில் அறிவுள்ளவனாகக் கருதப்பட்ட ரோய் என்ற ஒருவனை மீண்டும் அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் ரோயாலும் மின்கலங்களைக் கழற்றியெடுக்க முடியாமற் போக தோல்வியுடனும் மனவேதனையுடனும் திரும்புகிறார்கள்       

அதன் பின்பு இன்னும் சிலர் இறந்து போக மீண்டும் நந்தோ, ராஃபில், டின்டின் ஆகியோர் வெளியேறும் வழி தேடிப் புறப்படுகிறார்கள். இரண்டு நாட்கள் பயணத்தின் பின்னர் அவர்கள் உணவுக்காகக் கொண்டு சென்ற சக பயணிகளின் இறைச்சி மூன்று பேருக்குப் போதாது என்று கருதியதால் டின்டின்னை மீண்டும் அனுப்புகிறார்கள். பன்னிரெண்டு நாட்கள் கடுமையான பயணத்தின் பின் மலைகளைத் தாண்டி ஒரு நகரப் பகுதியை அடைந்து உயிரோடு எஞ்சியுள்ள தங்கள் சக பயணிகள் பற்றி அறிவிக்கிறார்கள். ஒரு உலங்கு வானூர்தி அந்தக் குறிப்பிட்ட பனி மலையை அடைந்து எஞ்சியிருந்த 14 பேரை மீட்கிறது.

அந்த 14 பேரும் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து இறந்த தங்களின் சகாக்களின் உடல்களை கற்குவியல்களுக்கு மத்தியில்  ஒரு சிலுவை அடையாளத்துடன் புதைக்கிறார்கள்.



உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படம் அந்த விபத்தில் இறந்த 29 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே எடுக்கப்பட்டது.      
































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக