புதன், 16 ஏப்ரல், 2014

வணக்கம்

                                                   வல்வை அலையோசை


வல்வை அலையோசையை ஆர்வமாகப் படிப்பவர்கள், நான் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள், குட்டித் திருத்துபவர்கள், அதிலுள்ள நல்ல விடயங்களுக்காக தட்டிக் கொடுப்பவர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்.

வல்வை அலையோசைக்கு ஓய்வு கொடுத்து விட்டு அக்கடா என்றிருப்போம் என்று இடைக்கிடை யோசித்தாலும் கூட எழுத்தின் மேலுள்ள ஆர்வம் என்னை ஓய விடாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு  இன்னொரு விடயத்திலுள்ள ஆர்வம் இந்த ஆறாவது இணைய சஞ்சிகையில் பரவலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு ஆக்கங்களைத் தவிர ஏனைய எல்லாவற்றுக்கும் மையப்பொருள், கருப்பொருள், ஆய்வுப்பொருள் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். அது என்னவென்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

ஐந்தாவது அலையோசைக்கும் ஆறாவது அலையோசைக்கும் இடையில் 10 மாத இடைவெளி. அதாவது குழந்தை உண்டாகியிருந்தால் அது பிறந்துமிருக்கும். ரொம்பவும் வேலை மும்முரத்தில் நான் இல்லை தான். இவ்வளவு பெரிய இடைவெளிக்கு சோம்பல் தான் காரணம். அதோடு இதை வெறும் blog  ஆக இல்லாமல் இணைய சஞ்சிகையாக (குறைந்தது பத்து ஆக்கங்களுடன்) வெளியிட வேண்டுமென்ற எனது ஆர்வமும் இவ்வளவு பெரிய இடைவெளிக்குக் காரணம். இதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்..

இவ்வளவு பெரிய இடைவெளி வராமல் இருப்பதற்கு வல்வை அலையோசையின் வாசகியும், விமர்சகியுமான திருமதி தனுஜா முகுந்தன் வழங்கிய யோசனையைச் செயற்படுத்த நினைக்கிறேன். தனித்தவில் வாசிக்காமல் ஏனைய தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களையும் வாசிக்க விடுவது தான் அவர் கூறிய யோசனை. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு ஊக்கம் வழங்குவது சிறப்பான எண்ணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதோடு தொடர்ந்து எனது எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்புக்கு மருந்தாகவும் இருக்கும் ஆனால்...... யார் வல்வை அலையோசையை  நம்பி ஆக்கங்கள் வழங்கப்போகிறார்கள்? நான் வல்வை அலையோசையை ஓட்டைக்கப்பலாக வர்ணித்து ஓட்டைக்கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் அவசியமா?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ஒட்டைக்கப்பலுக்குத் தான் ஒன்பது மாலுமிகள் அவசியம், அதனைத் திருத்திச் செப்பனிட்டுப் பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு. என்று அவர் அடித்த நெற்றியடி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வேறு ஒருத்தரும் ஆக்கங்கள் வழங்கா விட்டாலும் அவரிடமிருந்தாவது ஆக்கங்களைப் பெறலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆக, எழுத்தில் ஆர்வமுள்ள வாசக வாசகிகளுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவெனில், உங்கள் ஆக்கங்களைப் பிரசுரிப்பதற்கு வல்வை அலையோசை ஓரளவேணும் பரவாயில்லை என்று நீங்கள் கருதுவீர்களாயின் நீங்கள் உங்கள் ஆக்கங்களைத் தாராளமாக அனுப்பலாம்.

இப்போது நான் உங்களை எழுதக்கேட்பது போல், எல்லா வல்வை  மக்களாலும்   விரும்பிப் பார்க்கப்படும் valvettithurai.org இணையத் தளத்துக்கும் ஏதாவது எழுதுமாறு திரு ரஞ்சித், திரு ஆதவன் ஆகியோர் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்னரே என்னைக் கேட்டிருந்தார்கள். அதை எனக்குக் கிடைத்த கெளரவமாக நான் கருதிய போதும் எனது எழுத்திலிருந்த நம்பிக்கையீனம் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. அதாவது வல்வை மக்களால் நேசிக்கப்படும், விரும்பிப் பார்க்கப்படும் ஒரு பொதுவான இணையத்தளத்தில் எழுதுமளவுக்கு எனது எழுத்தில் தரமும் கனமும் இல்லை  என்று நான் கருதியது ஒரு முக்கியமான காரணம். அது தவிர என்ன எழுதுவது என்ற குழப்பம் அடுத்த காரணம்.

எனது எழுத்தில் எனக்கு நம்பிக்கை ஊட்டியதற்கும், இன்று (14/04/2014) அக்கரை மக்கள் மீது அக்கறை வேண்டாமா? என்று எனது ஆக்கத்தை ‘valvettithurai.org’ இல் பிரசுரித்ததற்கும் ஆதவன் அண்ணாவுக்கு எனது நன்றியை வல்வை அலையோசை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அவர் நம்பிக்கையூட்டிக் கதைத்தபோது ‘valvettithurai.org’ இனை ஆரம்பிப்பதற்கு வல்வை அலையோசையும் ஒரு விதத்தில் தூண்டுகோலாக இருந்தது என்று குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உள்ளடக்கம்.

1.   பத்மா Aunty க்கு எழுதிய கடைசிக்கடிதம்.

2.   அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா?

3.   கடல் சம்பந்தமான விசேட சொற்றொடர்கள்.

4.   கடல் நீச்சல்.   

5.   சுனாமி 2004(தொடர்கதை)

6.   கடலின் கருந்துவாரங்கள்

7.   சுப்த வஜ்ராசனம்

8.   பையின் வாழ்க்கை –Life Of Pi

9.   தொண்டைமானாற்றுக் கழிமுகப்பகுதி

10.  சதுரங்கத்தை ஒரு குழுவாக விளையாடுதல் சாத்தியமா?           



திங்கள், 14 ஏப்ரல், 2014

பத்மா Aunty க்கு எழுதிய கடைசிக்கடிதம்



Thanks for your message;   I'm feeling a little bit better for the past few days. Going for chemotherapy tomorrow.

 Love Pathma Aunty


அன்புள்ள பத்மா Aunty, தவம் சித்தப்பா,

மேலே உள்ள ஒன்றிரண்டு வசனங்களும் நீங்கள் எனக்குக் கடைசியாக Facebook மூலமாக அனுப்பிய தகவல். நீங்கள் மறைந்து விட்ட செய்தி அறிந்து நான் அழுது ஓய்ந்ததும் Facebook இற்குப் போய் இதை எடுத்துப் பார்த்தால் கவலை சற்றுக் குறையும் என்று நினைத்து எடுத்துப் பார்த்தேன். இதைக் கணனியில் அடித்து அனுப்பிய விரல்கள் ஓய்ந்து விட்டன என்று நினைத்த போது வேதனை இன்னும் அதிகமானதே தவிர குறையவில்லை.

உங்களிடமிருந்து வந்த  தகவலைப் பார்த்ததும் முதலில் உங்களுக்கு அனுப்பிய நீண்ட கடிதத்தைப் போல் இன்னுமொரு நீண்ட கடிதம் அனுப்பினேன். அதை நீங்கள் வாசித்தீர்களா இல்லையா என்று கூடத் தெரியாது. உங்களுக்குச் சொல்ல நினைத்ததை, உங்களுக்குச் சொல்ல நினைப்பதை இந்தக் கடிதம் மூலமாக சொல்லி விட நினைக்கிறேன். இது முட்டாள்தனமென்று புத்தி சொன்னாலும்  மனதுக்குத் தெரியவில்லை.

உங்களது தகவலைப் படித்ததும் மனதில் மிகுந்த சந்தோஷமும் நம்பிக்கையும் தோன்றியது. அப்போது தோன்றிய நம்பிக்கை நீங்கள் தவம் சித்தப்பா, அபியுடன் கடைத்தெருவுக்குப் போனதை, நீண்ட நாட்களாக நீராகாரத்துடன் இருந்த நீங்கள் இடியப்பம் சாப்பிட்டதை, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் 2 மணித்தியாலங்கள் வேலை செய்ததை, அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்ததை எல்லாம் அறிந்து கொண்ட போது மனதிலிருந்த நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. போதாததற்கு புற்று நோய் வந்த பின்னரும் சிகிச்சையின் பின்  பத்து, இருபது வருடங்களுக்கும் மேலாக சுகமாக வாழ்ந்து வருபவர்களின் கதையைக் கேட்ட பின்னர் இன்னும் கொஞ்ச நாட்களில் எங்கள் பத்மா Aunty வழமைக்குத் திரும்பி விடுவா என்றே உறுதியாக நம்பத் தொடங்கி விட்டேன்.

 அப்படியிருந்த போது இந்த மாதத் தொடக்கத்தில் நீங்கள் கடும் சுகவீனமாக இருப்பதாக செய்தி வந்த போது மனம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது. நீங்கள் மறைந்து விட்டதாகத் தகவல் வந்த போது கூட இந்தத் தகவல் பொய்யாக இருந்து விடக் கூடாதா என்று என்று ஏற்பட்ட எண்ணம் இன்னுமே மனதை விட்டு அகல மறுக்கிறது. மரணம் என்பது எல்லோருக்கும் சர்வ நிச்சயம். அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்புடன் இருந்தாலும் கூட எங்களுக்கு நெருக்கமானவர்களின், எங்களுக்குப் பிரியமானவர்களின் மரணங்களின் போது அந்த நினைப்பு செல்லுபடியாவதில்லை
நீங்கள் சுகவீனமாக இருந்த போது உங்களுடன் கதைக்க வேண்டும், உங்களது மென்மையான குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால் ஆவலை அடக்கிக் கொண்டு கடிதம் அனுப்பி விட்டு இருந்து விட்டேன். ஆனால் நேற்று இந்திரா மாமி கதைத்த போது, இன்று செல்வம் மாமி கதைத்த போது தங்களுடன் நீங்கள் நீண்ட நேரம் கதைத்ததாக அவர்கள் சொன்ன போது கடைசி நாட்களில் உங்கள் குரலைக் கேட்காமல் போய் விட்டேனே என்ற எண்ணம் என்னை வாட்டுகிறது.

அப்பாவின்  மரணச் செய்தி அறிந்ததும், இரண்டு நாட்களிலேயே இங்கே  வந்து சேர்ந்து, எங்கள் துயரத்தில் பங்கு கொண்டீர்கள். உங்கள் மரணத்தின் போது அங்கே போய் தவம் சித்தப்பா, ஹரன் தரனுக்கு  ஆறுதல் சொல்ல எங்களால் முடியவில்லை. எங்களுக்குப் பதிலாக அம்மா இருப்பதாகத் திருப்திப்பட்டாலும், அம்மாவுக்கும் கடைசி நேரம் உங்களை உயிருடன் பார்க்க முடியாமற் போனது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

உங்கள் உயிர் பிரிந்த அன்று காலை, வைத்தியர் தவம் சித்தப்பாவை அழைத்து நீங்கள் எங்களை விட்டு மீள முடியாத தூரத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், விரைவிலேயே உங்கள் உயிர் பிரிந்து விட்டால் நல்லது என்று சொன்னதாகவும் அறிந்த போது அந்த நேரம் உங்கள் உடல் அடைந்த வேதனையையும், தவம் சித்தப்பாவின் உள்ளம் அடைந்த வேதனையையும் நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் அடைத்துக் கொள்கிறது.


அப்பா எங்களை விட்டுப் பிரிந்த போது நீங்கள் எங்களுடன் வந்திருந்த நாட்களில் நீங்கள்  இனிமையாக நல்ல இசையுடன் ஓதிய சிவபுராணம், கடைசியாக ஊரிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட போது தவம் சித்தப்பா சொன்ன பகிடிக்கு நீங்கள் சிரித்த சிரிப்பு, ஓவியாவுடன் கதைத்த கதைகள் எல்லாம் என் காதுக்குள் கேட்டுக் கொண்டேயிருப்பது போல் ஒரு பிரமை.

  நீங்கள் எங்களோடு வந்து நிற்கும் நாட்களில் நாங்கள் எல்லோருமே எங்களின் ஏதாவதொரு மருத்துவப் பிரச்சனையைச் சொல்லிக்  கொண்டு உங்கள் முன் வரிசையாகப் போய் நிற்கும் நாட்கள் ஞாபகத்துக்கு வருகையில், இனி எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ல நீங்கள் வரப் போவதில்லை என்ற உண்மை உறைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது.

நாங்கள் சாதாரணமாக எங்கள் வழமையான கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். என்றாலும் உங்கள் நினைவு வந்ததும் மனம் இடிந்து போய் விடுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு உங்கள் நினைவுகள் மனதைப் பாதித்திருக்கின்றன. சற்று நாட்களில் நாங்கள் எங்களைச் சமாளித்துக் கொண்டு விடுவோம். ஆனால் தங்கள் மனைவியில் எங்கே குற்றம் காணலாம் என்று அனேகமான ஆண்கள் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும்  இப்போதைய நாட்களில், எப்போதுமே உங்களை உயர்வாகச் சொல்லிப்பெருமைப்பட்டுக் கொண்ட (உண்மையிலே நீங்கள் அப்படித்தான் என்பது ஒருபுறமிருக்க) தவம் சித்தப்பா எப்படி உங்கள் பிரிவைத் தாங்கிக் போகிறார் என்பது எங்கள் எல்லோருக்கும் உள்ள கேள்வி. அதற்கான  மனதைரியத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
 

தவம் சித்தப்பாவுக்கு அடுத்ததாக, நீங்கள் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை என்ற உண்மையை வேதனையோடு மனதில் சுமந்து கொண்டு உங்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட கமலா Aunty க்கும்  காலம் தான் மருந்தாக வேண்டும்.
 பத்மா Aunty, நான் உங்களுடன் கதைக்க நினைத்ததெல்லாம் எழுதி முடித்து விட்டேன். போய் வாருங்கள் பத்மா Aunty. ஒருத்தருக்கும் உங்களுக்கு விடை கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் மனம் நிறைந்த வேதனையுடனும், விழிகள் நிறைந்த கண்ணீருடனும்  உங்களுக்கு விடை தருகிறோம். உங்கள் ஞாபகங்கள்  என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.  
அன்புடன்
தீபன்







அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா?


அக்கரை என்பது தொண்டைமானாறு பாலத்தைத் தாண்டி அச்சுவேலி நோக்கிச்செல்லும்போது வலப்பக்கத்தில், பிரதான வீதியிலிருந்து  கிட்டத்தட்ட 250 மீற்றர் தொலைவில் மண்பாதையின் முடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இரண்டு மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியிலிருந்து இராணுவம் வெளியேறிய பின்பு தான் அவர்களின் குடியேற்றம் பற்றி ஏனையவர்கள் அறியக்கூடியதாக இருந்ததெனினும் 2013 ஆடியிலேயே அந்தக்கிராமம் அவர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிக மிக அடிப்படையான வசதிகள் எதுவுமற்ற நிலையிலேயே அவர்கள் அந்தப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.



அக்கரையின் சூழலிலேயே அவர்களின் பூர்வீக வாழ்க்கை ஆரம்பமானதெனினும் இப்போது இந்த மக்கள் வாழ்ந்து வரும் இடம் ஒரு வீட்டுத்திட்டம் மூலமாக  1978 இலேயே அவர்களிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். 1978 இல் வல்வெட்டித்துறை சிவன் கோவிலுக்குச் சொந்தமாக இந்தப்பகுதியில் இருந்த 16 ஏக்கரில் 9 ஏக்கர் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு 1983 இல் 50 வீடுகள் அந்தக் கிராமத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

1986 மாசி மாதம் 19ஆம் திகதி. அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள். இராணுவத்திற்கு உதவியதாக இந்தக்கிராமத்தவர்கள் இருவர் சுடப்பட்ட சம்பவமே அவர்கள் முதன்முதலில் அந்தக்கிராமத்தை விட்டு வெளியேற்றியதாகவும் . ஆனாலும் அந்த நாட்களில், தாம் அடிக்கடி வந்து தங்கள் இருப்பிடங்களை பார்த்துச்சென்றதாகவும் அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

அதன் பின்பு வடமராட்சியில் இடம்பெற்ற “Operation Liberation” இராணுவ நடவடிக்கையின் பின், இவர்களின் இருப்பிடங்களை இந்தியா இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. அதன் போது இவர்களின் இருப்பிடங்களைப் பார்த்துச்செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் 1989 இன் இறுதிப்பகுதியில் இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, 1990 தை மாதம் முதல் ஆனி மாதம் வரை 10 குடும்பங்கள் வரை தற்காலிகமாகக் குடியேறியதாகவும், ஆனி மாதம் பலாயிலிருந்து இராணுவம் முன்னேறியபோதே தாங்கள் அந்த இடத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதன் போது இவர்கள் தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி, அச்சுவேலி ஆகிய இடங்களில் குடியேறியிருக்கிறார்கள்.


சொந்த இடத்தை விட்டு வெளியேறி இன்னொரு இடத்தில் இருக்கும் போது எத்தனை வகையான இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை  இலங்கையின் வடபகுதியிலுள்ள சில விதிவிலக்கானவர்களைத் தவிர ஏனையோர் அறிந்திருந்தாலும் கூட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சொந்த இடத்தைப் பார்க்கக்கூட  முடியாமல் இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமை தான்.அந்தக் கொடுமையை இந்த மக்கள் தாராளமாகவே அனுபவித்திருக்கிறார்கள்.
2011 கார்த்திகை இறுதிப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடக்கப்பட்டிருந்த வளலாய் பகுதியில் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட போது தான் மீண்டும் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனே அந்த இடத்தில் முழுமையாகக் குடியேற முடியாதவாறு மிதிவெடிகள் அவர்களை அச்சுறுத்தியபோதும் தங்கள் இடத்தின் மேலுள்ள பற்று காரணமாக உயிரைப் பணயம் வைத்து அங்கு திருத்தவேலைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளின் பின் அந்தப் பிரதேசம் 2012 ஆவணியில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக ‘Halo Trust’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனப் பணியாளர்களின்  தொடர்ச்சியான அர்ப்பணிப்பான சேவையின் மூலம் 2013 தை 13 ஆம் திகதி தைப்பொங்கலுக்கு முதல் நாள் (சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு) இந்த இடம் மிதிவெடிகள் இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடம் உத்தியோகபூர்வமாக வைபவரீதியாக இந்த மக்களிடம் கையளிக்கப்பட்டது 2013 ஆடி மாதம் 11ஆம் திகதி தான். அந்த நிகழ்வின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,வட மாகாண ஆளுனர் சந்திரசிறி, வடமாகாண கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள்.
1986 இல் அந்த வீட்டுத்திட்டத்திலுள்ள 50 குடும்பங்களும், அது தவிர அந்த சூழலில் தங்கள் சொந்த இடத்தில் வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுமாக மொத்தமாக 76 குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்கின்றன. பின்னர் அந்தக்குடும்பங்களில் நிகழ்ந்த பிறப்பு , இறப்புக்களின் அடிப்படையில்  96 குடும்பங்கள்  மீண்டும் குடியேறியிருக்கின்றன. ஆண்கள் 175 பேரும், பெண்கள் 181 பேருமாக  மொத்தமாக 356 பேர்.  96 குடும்பங்கள் குடியேறியிருக்கின்றன என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் கூட  அவர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோர் மாலை நேரத்தில் தாங்கள் வசித்து வந்த தற்காலிக இடங்களுக்குச்சென்று காலை நேரத்தில் திரும்புபவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடிநீர் சந்நிதியிலிருந்து உழவியந்திரம் மூலம் கொண்டுவரப்படுகிறது  கழிப்பிடம் ஒன்றுமே இல்லை. 96 குடும்பங்களும் கை, கால் கழுவுவதற்கும், துணி தோய்ப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரேயொரு கிணறு இவர்களின் குடியிருப்பிற்கும் கடற்கரைக்குமிடையில் 50 மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது.   மிக மிக அடிப்படை வசதிகளான குடிநீர், கிணறு, கழிப்பிடம் என்பன இல்லாத நிலையில் எப்படித்தான்      இவர்கள் நிரந்தரமாகக் குடியேறுவது?

இது போக, 50 குடும்பங்கள் இந்த வீட்டுத்திட்டத்திலும் அதாவது வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம் அரசாங்கத்தால் வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 9 ஏக்கரிலும்,  16 குடும்பங்கள் அயலில் தங்கள் சொந்தக்காணியிலும் வசிக்க, எஞ்சியுள்ள 30 குடும்பங்களும் மிதிவெடிகள் அகற்றப்பட்டதாக இன்னும் அறிவிக்கப்படாத, அத்துடன் வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம் அரசாங்கத்தால் வாங்கப்படாத காணியில் பற்றைகளைத்துப்பரவு செய்து, குப்பைகளை எரித்து  குடியேறியிருக்கிறார்கள். ‘Halo Trust’ பணியாளர்கள் அந்தக் குறிக்கப்பட்ட 9 ஏக்கர் காணியில் மிதிவெடிகளை அகற்றிய போது இந்த 6 ஏக்கர் காணியிலும்    3 இடங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டுமென்று குறித்து வைத்திருப்பதாகத் தெரிவித்ததோடு இப்போது அவர்களுக்குத் தாங்கள் தாங்கள் அதில் குடியேறியிருப்பதாக அறிவித்திருப்பதாகவும் விரைவில் அந்த 3 மிதிவெடிகளும் அகற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மக்கள் தெரிவித்தார்கள்.அதோடு அந்தக்காணி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் இன்னும் நிறைவு செய்யப்படாததால் அதன் காரணமாகவும் ஏதேனும் பிரச்னைகள் உண்டாகுமோ என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்கள்.

அக்கரை மக்களின் கிராமசேவகர் பிரிவு J/283. கிராமசேவகரின் பெயர் திரு சாந்தரூபன். அச்சுவேலி வடக்கு, வளலாய், இடைக்காடு ஆகிய 3 பகுதிகள் அவர் பொறுப்பில் இருப்பதாகவும், இடைக்காடு என்ற பிரிவிலேயே அக்கரை அடங்குவதாகத் தெரிவித்த மக்கள்  அவர் மூலம் கோப்பாய் பிரதேச செயலரிடமும், பிரதேச செயலர் மூலம் யாழ். அரசாங்க அதிபரிடமும் தங்கள் பிரச்சனைகள் பற்றிக் கதைத்ததாகவும் அவர்கள் தங்களுக்கு மூன்றாவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் தெரிவித்ததோடு தற்போது இரண்டாம் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்கள். அத்துடன்  தொண்டைமானாற்றின் பிரதான நீர்த்தாங்கியிலிருந்து குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக குழாய்கள் பொருத்தும் வேலைக்காகவும், அக்கரைக்கு மின்சாரம் பெற்றுக்கொடுப்பதற்காகவும் பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவர்களிடம் கூறியிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம்(UNHCR) கடந்த வருடம் மார்கழி மாத இறுதிப்பகுதியில் தங்கள் யாழ்ப்பாண அலுவலகத்தை மூடிக்கொண்டு கிளிநொச்சிக்கு தங்கள் அலுவலகத்தை மாற்றுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் இருக்கும்போது அக்கரை மக்களுக்கு பாத்திரம்,குவளை, பாய், படுக்கை விரிப்பு, துவாய், கத்தி, அலவாங்கு, குப்பைவாரி, சுத்தியல் முதலானவற்றை வழங்கியிருக்கிறார்கள். இது தவிர மீள்குடியேற்ற அமைச்சினால் ஒரு வீட்டுக்கு 12 தகரங்கள், 8 சீமெந்துப்பைகள், மற்றும் 50 வீடுகளுக்குமாக 5 நிலையிடும் சாதனத்துடன் கூடிய நீர்த்தாங்கிகளையும் விநியோகித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அக்கரையில் குடியேறுவதற்கு முன்னர்,அதனை  மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும், அக்கரை இவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட போது ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்திற்கும் அவர்கள் தான் செலவுகளைப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். 
இந்த மக்களின் வாழ்வாதாரங்களாக மீன்பிடித்தொழில், விவசாயம் கட்டுவேலை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்கூறலாம். என்ன தான் இவர்கள் அக்கறையில் குடியேறினாலும் தொழில் நிமித்தம் அதாவது மீன்பிடி, விவசாயம், கட்டுவேலை எல்லாவற்றுக்கும் இவர்கள் தொண்டைமானாற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் உழவியந்திரம் வைத்திருக்கும் திரு ஸ்ரீஸ்‌கந்தராசா என்பவரின் சொந்த செலவிலேயே இவர்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.


இந்த 356 பேரில் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள் ஏறத்தாழ 60 முதல் 70 பேரளவில் இருப்பதாகவும், அவர்களில் அனேகமானவர்கள் தனியார் வகுப்புக்களும் செல்வதாகவும்,சிலர் தனியார் வகுப்புக்களுக்குச் செல்வதற்கு ஆர்வமிருந்தும் வசதியில்லாத காரணத்தால் செல்வதில்லை என்றும் அறியக்கூடியதாக இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்பு தொண்டைமானாற்று ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடத்திய சிறுவர்களுக்கான  மரதன் ஓட்டப்போட்டியில் முதலாவது இடமும் ஏழாவது இடமும் பெண்களுக்கான மரதன் ஒட்டப்போட்டியில் முதலாவது இடமும் நான்காவது இடமும்  கிடைக்கப்பெற்றிருக்கிறது. இவ்வளவு இடர்களுக்கு மத்தியிலும் விளையாட்டுக்களில் இவ்வளவு ஊக்கம் இருப்பது பாராட்டுதற்குரியது. அது தவிர இனிமேல் நடைபெறவிருக்கும் கயிரிழுத்தல், கட்டுமரம் வலித்தல், நீச்சல் ஆகிய போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்  என்றும் அக்கரை மக்கள் தெரிவித்தார்கள்.
புத்தூர் பிரதேச சபையால் தொண்டைமானாற்றுப் பாலத்தின்  மின்சாரச்செலவுகள் பொறுப்பேற்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு, விளக்குகள், ஆளிகள் என்பன பொருத்தப்பட்ட நிலையிலும் இன்னும் இதற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதும் இவர்களுக்கு ஒரு குறை தான். பாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகின்றன  என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 
பாலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டால் பாலம் ஒளிமயமாகும். பிறக்கவிருக்கும் வருடத்தில் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகாவிட்டாலும்,    தங்கள் வாழ்வைப் பீடித்துள்ள இருள் சற்றேனும் விலகாதா  என்பதே இங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
......ஆ.தீபன்
 
 

கடல் சம்பந்தமான சில விசேட சொற்றொடர்கள்.




51. Sea legs: கடலில் கப்பலின் ஆட்டத்துக்குப் பழக்கப்பட்டு விட்ட கால்கள்.

52. At sea: மிகவும் குழம்பிய நிலையில் இருத்தல்.

53. Between the devil and the deep blue sea: ஒரே சமயத்தில் இரண்டு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தல்.

54. Sea change: மிகப்பெரிய மாற்றம்.

55. Son of a sea biscuit: ஆங்கிலேயர்கள் திட்டுவதற்கு அடிக்கடி பாவிக்கும் “பெண் நாயின் மகன்” என்பதற்குப் பதிலீடாகப் பாவிக்கப்படும் சற்றுக் கடுமை குறைந்த சொற்றொடர்.

56. There are plenty of (other) fish in the sea: ஏதாவது ஒரு விடயத்தில் ஏராளமான தெரிவுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் வாக்கியம்.

57. From sea to shining sea: கடற்கரையோரப் பிரதேசங்களில் ஏதாவது ஒரு செய்தி அல்லது வேறு ஏதாவது ஒரு விடயம் பரவுதல் இந்தச் சொற்றொடர் மூலம் குறிக்கப்படுகிறது.

58. Go to sea: மீனவன் ஆதல் அல்லது மாலுமியாதல் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் கடலுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்தல்.

59. Sea level: கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் அமைந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தும் சொல்.
60. Go to sea for pleasure, would go to hell for a pastime: கடலுக்குப் பொழுதுபோக்கிற்காகப் போகும் மனிதர்கள் நிச்சயம் பைத்தியக்காரர்களாகத் தான் இருப்பார்கள் (கடல் வாழ்க்கையிலுள்ள சிரமத்தை எடுத்துக் காட்டுகிறது) என்று நகைச்சுவையாக யதார்த்தத்தை எடுத்துக் காட்டும் வாக்கியம்.

கடல் நீச்சல்




கடல் நீச்சல் என்றதும் நீச்சல் தெரிந்தவர்களின் மனதில் கூட  இலேசாக அச்சம் தோன்றுவது இயற்கையானதே. இதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் நீச்சல் பழகுவது பாதுகாப்பான நீச்சல் குளங்களிலும்  மற்றும் ஆழம் குறைந்த குளங்களிலும் தான். அதுவும் நீச்சல் குளங்களில் மட்டும் நீந்தியிருந்தால் அச்சம் இன்னும் சற்று அதிகமாகவே தோன்றக்கூடும். ஏனெனில் சுற்றிவர சுவர்கள், கடமையிலுள்ள உயிர்க்காவலர் (நீச்சல் குளங்களில் நீந்துபவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் பாய்ந்து காப்பாற்றுபவர்), அனேகமான நீச்சல் குளங்களில் காணப்படும் கயிறு போன்ற மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், அடிப்பகுதி துல்லியமாகத் தெரியும் தெளிவான நீர், முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பகுதி நெஞ்சளவுக்கும் கீழான நீர் மட்டம், நீந்திக்கொண்டிருக்கும் போது பயம் தோன்றினால் பக்கத்திலுள்ள சுவரைப் பிடித்துக் கொள்ளக் கூடிய தன்மை  போன்ற பல்வேறு காரணிகளால் நீச்சல் பழகுபவருக்கும் கூட  நீச்சல் குளம் மிக மிகப் பாதுகாப்பாகத் தோன்றக்கூடும். இந்த வசதிகள் எல்லாமே கடல் நீச்சலில் இல்லை.


தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், உயிர்ப்பாதுகாவலர் ஒருவருமே இல்லாத நிலைமை, களைத்துப் போனால் கப்பென்று பிடித்துக்கொள்ள தோதாக  ஒன்றுமே இல்லாமை, சில நேரங்களில் எவ்வளவு ஆழமென்றே தெரியாத தன்மை, நாங்கள் நீந்திக் கொண்டிருக்கும் இடத்தின் நீரினடியில் என்ன இருக்கிறது என்று வெளிக்காட்டாத நீரின் நிறம், (அப்படியே சிரமப்பட்டுப் பார்த்தாலும், ஏதாவது கறுப்பாகத் தெரிந்தால் முதலையாகவோ சுறாமீனாகவோ,குட்டித் திமிங்கிலமாகவோ கற்பனை பண்ணிக்கொண்டு பதறியடித்துக் கொண்டு நீந்திய அனுபவம் எனக்கு உண்டு.  அது சரி, கடலில் முதலை இல்லையென்று உனக்குத் தெரியாதா என்று நீங்கள் நினைக்கக் கூடும்.  எனக்குத் தெரியும்.ஆனால் முதலைக்குத் தெரியுமா? ) போன்ற எல்லாமே கடல் நீச்சல் என்றால் மனதில் பீதியை உண்டாக்கும் காரணிகள். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு  நீந்தி விளையாடுபவர்கள் எனக்குக் கடலென்றால் பயமே இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவன் பாவி, ஏற்கனவே எங்களுக்கு உள்ள பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறான் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல என் நோக்கம். அதற்காக கடல் நீச்சல் என்றால் அல்வா சாப்பிடுவது போல். மிகவும் சுலபம். பயப்படவே தேவையில்லை என்றெல்லாம் பொய் சொல்லப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அலாதியான அனுபவம். ஆனால் அப்படியானதொரு அனுபவத்தை நீங்கள் பெறுவதற்கு நீங்கள் தகுதியாக இருப்பதோடு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்பது அவசியமல்லவா? அதற்காக உங்களுக்குச் சில யோசனைகள்.

 
எல்லாவற்றுக்கும் முதலில், மிக மிக அவசியமானது பயிற்சி தான். உங்களுக்கு எட்டும் கடல் நீரில் நின்று கொண்டு நீந்திப்பழகி,  நீர் அச்சம் உங்களுக்கு இருந்தால் அதைப்படிப்படியாகப் போக்கிக் கொள்ள வேண்டும். நீச்சல் குளத்தில் அடிப்பகுதியில் இருப்பது போல் தடிப்பான கறுப்புக்கோடு, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று வழி காட்டாது. ஆகையால் எங்கே போகிறீர்கள் என்ற அவதானம் தேவை. தலையைத்தூக்கி வைத்துக்கொண்டு நீந்துபவர்கள்(இரண்டு கைகளால் தலையைத் தூக்குவது போல் கற்பனை செய்ய வேண்டாம். நான் சொன்னது நீர் மட்டத்திற்கு மேல் தலை தெரியுமாறு நீந்துபவர்கள்)  என்றால் பிரச்சனையில்லை.ஆனால் தலையை தண்ணீருக்குள் அமிழ்த்தியவாறு நீந்துபவர்களுக்கு சற்றுக்கூடிய அவதானம் தேவை.
 
 
நீச்சல் நன்கு கை வரும் முன்பு உங்களை மூழ்கடிக்கக்கூடிய அளவு இடத்திற்குப் போக வேண்டாம். கடலில் நிகழ்ந்த அனேக அவச்சாவுகளுக்கு இதுவே பிரதான காரணம். விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும். உங்கள் நீச்சலுக்குத் தக்க ஆழத்தில் நீந்திப் பழகுங்கள்.உதாரணமாக நீங்கள் கிட்டட்டதட்ட 20 மீற்றர் களைக்காமல் நீந்தப் பழகி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.கடலில் உயரப்போக விரும்பினால் 10 மீற்றரை விடக் குறைவாகத்தான் போக வேண்டும்.ஏனென்றால் திரும்பி வர வேண்டுமல்லவா?


 
என்ன தான் கடல் நீர் உங்களுக்குப் பரிச்சயமாகி விட்டாலும், அபரிதமான தன்னம்பிக்கை இருந்தாலும்  உங்களோடு ஒரு படகோ அல்லது கட்டுமரமோ வந்தாலேயொழிய தனியே நீந்த வேண்டாம். அதாவது உங்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை மூட்டை கட்டி கரையில் வைத்து விட்டுத்தான் கடலில் இறங்க வேண்டும். உங்களோடு எப்போதுமே ஓரிருவராவது நீந்துவது அவசியம்.ஆனால் அப்படி வருபவர்கள் “ டேய், முதலையிண்ட வால் மாதிரி ஏதோ என்ட கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குது” என்றோ அல்லது “ஏண்டா, தூரத்தில ஏதோ கறுப்பாத்தெரியுது. சுறாமீனா இருக்குமோ?” என்று பேதியைக் கிளப்பாதவர்களாக இருப்பது அவசியம். உங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் உங்களை ஒரு கையில் ஏந்தியவாறு ஒரு கையால் நீந்துமளவிற்கு அவர்கள் மிகுந்த பலசாலிகளாகவோ நீச்சலில் படு சூரர்களாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மனதுக்குத் தெம்பூட்டுபவர்களாக இருந்தாலே போதுமானது. “என்ட கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குதடா” என்று நீங்களே வெருண்டாலும் கூட “ சும்மா இருடா கோமாளி. அது என்ட கால் தாண்டா” என்று சொல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.


 

கடலில் காற்று கடுமையாக அடித்து அலைகள் ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் போது நீந்த வேண்டாம். கடலன்னைக்கு நாங்கள் எப்போதுமே ஒரு அற்பத்தூசு  என்பதை மறக்க வேண்டாம். உங்கள் அம்மா கோபமாக இருக்கும் போது நீங்களும் கோபமாக எதிர்த்து வாக்குவாதம் செய்வீர்களா அல்லது அந்த நேரம் பேசாமல் இருந்து விட்டு அம்மா சாந்தமாக இருக்கும் போது கதைப்பீர்களா? நான் உவமான உவமேயத்துக்கு எடுத்துக்கொண்ட விடயம் பொருத்தமானதில்லை என நினைக்கிறேன். ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத்தவிர அனேகமானவர்கள் அம்மா சத்தம் போட்டால் அதற்கு மேலால் சத்தம் போடுபவர்களாகத்தான் தான் இருப்பார்கள். ஆனால் கடலன்னையுடன் அந்த விளையாட்டு வேண்டாமே. சின்னமலையில், அராபிய நாடொன்றில் வேலை செய்து விட்டு விடுமுறையில் வந்த இளைஞன் ஒருவன் 2009 மார்கழி மாதக் காற்றுக்கடலில் நீந்தப்போய் அவனது உடல் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான கடலில் நீந்துவது நீச்சலில் உங்களைப் படுசூரனாக்கும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம். நீச்சல் போட்டிக்குப் பயிற்சி எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட அப்படியான சந்தர்ப்பங்களில் யாருமே நீச்சல் போட்டிகள் வைப்பதில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் சிறந்ததொரு குடிமகனாக இருப்பது அவசியம் தான். ஆனால் அதற்காக குடிமகனாகக் கடலில் இறங்க வேண்டாம். அதாவது தண்ணியில் இருக்கும் போது தண்ணியில் இருப்பது கூடாது என்கிறேன். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படியொரு பழக்கம் இருப்பதை அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் குளிர்க்கடலில் இறங்குவதற்கு முன்னர் அப்படியான குடி வகைகள் மூலம் உடலைச்சூடேற்றுவது ( உண்மையில் சூடேறுமா என்று அனுபவபூர்வமாக அறிந்ததில்லை)  ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் எங்கள் ஊரைப்போன்ற ஒரு வெப்பபூமிக்கு அது தேவையில்லை. குடித்து விட்டு நிதானம் தவறி, அவதானமில்லாமல்  நடந்து கொள்ளும் நிறையப்பேரைப்பார்த்திருக்கிறேன். நீச்சலுக்கு, அதுவும் கடல் நீச்சலுக்கு நிதானம் மற்றும் அவதானம் நிரம்பவே தேவை. “வீதிகளில் ‘Drink and drive’ செய்தால் போக்குவரத்துப்பிரிவு காவல்துறையிடம் மாட்டுவோம்.ஆனால் ‘Drink and swim’ செய்தால் ஒருவரிடமும் மாட்டிக்கொள்ள மாட்டோம் தானே” என்று நினைக்க வேண்டாம். யமதர்ம ராஜனின் எருமைமாடு நீரிலும் நீந்தி வரும் ஆற்றல் படைத்தது.

இனி வரும் பகுதிகள் நீச்சல் கை வந்து(அத்துடன் கால் வந்து) நீந்தத் தொடங்கியவர்களுக்கானது. உங்களுக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு நான் இல்லை என்றாலும் கூட அவை சில வேளைகளில் நீங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்களாக இருக்கக்கூடும். சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் தானே.
கரையிலிருந்து விலகி சற்றுத்தூரம் நீந்துவதில் பரிச்சயமாகி விட்டீர்களா?  மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் நீந்தத் தொடங்கும் போது கரையில் ஏதாவது ஒரு தெளிவான அடையாளம் ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ஏதாவதொரு கோபுரத்துக்கு நேரே நீங்கள் நீந்தத்தொடங்குகிறீர்கள் என்றால் நீரோட்டத்தின் காரணமாக நீங்கள் சற்று விலகிப்போயிருந்தாலும் திரும்பி வரும் போது அதை நோக்கியவாறே நீந்தி வரலாம்.

 
 
கறுப்பாக ஏதாவது பார்த்து விட்டு அதை இலக்காகக் கொண்டு நீந்தும் போது என்ன தான் நீந்தினாலும் அந்தக்கறுப்பு தள்ளிப் போகிறதே,ஒருவேளை நீரோட்டம் என்னை இழுத்துப்போகிறதோ என்று பதற வேண்டாம். அந்த கறுப்பு  ஒரு மாடாக இருக்கக்கூடும். அது அதன் பாட்டுக்கு புல் மேய்ந்து கொண்டிருக்கக்கூடும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அசையும் பொருட்களை அடையாளமாகக் கொண்டு நீந்த வேண்டாம்.இதை நான் தட்டச்சும் போது 1992 இல் ஒரு முறை எனது நண்பர்களுடன் கடலில் நீந்திய ஞாபகம் வருகிறது. நாங்கள் கடலில் கட்டுமரத்துடன் இறங்கியது வல்வெட்டித்துறை சுங்க வீதிக்கு நேரே. அப்போது சுங்க வீதிக்கு நேரே தான் நவீன சந்தைக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் கலைச்சோலை புத்தகக்கடை இயங்கி வந்தது. நாங்கள் கட்டுமரத்தில் போய் குதித்து விளையாடி நீந்தி விட்டு திரும்பி வரும் போது, கலைச்சோலையை இலக்காகக்கொண்டு தான் துடுப்பை வலித்தோம். ஆனால் நீரோட்டத்தின் அதிக வேகம் காரணமாக அடிக்கடி கலைச்சோலை தெரிவதும் மறைவதுமாக இருந்தது. வலிப்பதுஎன்பதன் சரியான அர்த்தம் அப்போது தான் புரிந்தது. துடுப்பு வலிப்பதில் அனுபவம் இல்லாததால் எல்லோருக்கும் கைகள் முழுவதும் வலி. அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் வாசன், சின்னன், டொப்பன், கருணா, அரவிந்தன், சேகர் என்று ஞாபகம்.
மழை காலங்களில், குளிர்காலங்களில் கடலில் இறங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படியில்லாமல் இறங்கத்தான் போகிறீர்கள் என்று தீர்மானித்து விட்டால் இலேசாக உடற்பயிற்சி செய்து,உடலின் வெப்பநிலையை சற்று அதிகரித்து விட்டு இறங்குங்கள். இது உடலின் வெப்பநிலை குறைவடைந்து நீங்கள் பாதிக்கப்படுவதைத் தடை செய்யும்.உடல் வெப்ப நிலை குறைவடைந்து பலவீனமடைவதை ஹய்போதேமியா(hypothermia) என்று சொல்வார்கள். எங்களது வெப்ப நாட்டில் அதற்கான சாத்தியம் இல்லையென்றாலும் கூட இலேசான உடற்பயிற்சியோடு இறங்குதல் சிறப்பாகும். அதற்காகக் கடும் உடற்பயிற்சி நிச்சயமாகச் செய்யக்கூடாது.

சிலர் என்ன தான் நீந்தத்தெரிந்தவர்களாக இருந்த போதும் தலையை நீர் மட்டத்திற்கு மேல் உயர்த்தியே வைத்திருப்பார்கள். இதில் சக்தி சற்று அதிகமாக விரையமாகி விரைவில் நாங்கள் களைப்புக்குள்ளாவது சில வேளைகளில் நீங்கள் அறிந்திராத விடயமாக இருக்கக்கூடும். அதற்குப் பதிலாக உங்களால் மூச்சுப்பிடிக்கக்கூடிய அளவுக்கு அதாவது தம் பிடிக்கக்கூடிய அளவுக்கு  தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு துடுப்பு போட்டு…… சுவாசிப்பதற்குத் தலையைத்தூக்கி..... பின்பு மீண்டும் தலையை நீருக்குள் அமிழ்த்தி......இவ்வாறே மாறி மாறிச்செய்து கைகளால் வலித்து நீந்திப்பார்த்தால் உங்கள் வேகம் சற்று அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள். நீச்சல் போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு இது அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. என்றாலும் இதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றன.  அதைல் பிரதான பிரச்சனை தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைத்திருப்பதால் எங்கு போய் முட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயம் எழக்கூடும். கடல் போன்ற பரந்த இடத்தில் எங்கேயும் போய் முட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயம் தேவையில்லை. என்ன தான் பக்கத்தில் ஆட்கள் இருந்தாலும் எவ்வாறு அவர்களை விலக்கிக்கொண்டு நீந்துவது எப்படியென்று சில நாட்கள் பயிற்சியின் போதே உங்களுக்குத் தெரிய வந்துவிடும். அது தவிர தண்ணீருக்குள் மூச்சடைத்துக்கொண்டு நீந்துவதில் சிரமம், மற்றும் கண் எரிவு என்பன இருக்கக்கூடும். இது தவிர சிலர் இதனை முயற்சி செய்து பார்க்கும் போது கடல் தண்ணீரை மடக்குமடக்கென்று குடித்து விட்டு அவஸ்தைப்படக்கூடும்.இந்த நீச்சலின் போது வாய் மூடியிருக்க வேண்டுமென்பது இதன் பாலபாடம். ஆனால் கண் எரிவு  மற்றும் தம் பிடிப்பதில் உள்ள சிரமங்களை போக்கிக்கொள்ள முடியாது. ஆனால் பழகிக்கொள்ள முடியும்....தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம். இந்த நீச்சல் உங்களுக்குக் கை வந்து விட்டால் உங்கள் வேகம் இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரித்திருப்பதைக் காண்பீர்கள் அதன் பின்பு நீங்கள் தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு ஐந்து முதல் ஏழு துடுப்புகள் வரை போடக்கூடியதாக இருக்கும். நீச்சல் போட்டிகளின் போது இதை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு துடுப்புப்போடுவதைக் கண்டிருபீர்கள்.அதற்குக் காரணம் தீவிர பயிற்சி தான்.

சிலர் குறுந்தூரமாயின் தலையைத் தண்ணீருக்குள் அமிழ்த்தாமல் ஒவ்வொரு துடுப்புக்கும் முகத்தில் நீர் மோதுவதைத்தவிர்க்க தலையை இரு பக்கமும் வெடுக்குவெடுக்கென்று திருப்பியவாறு நீந்துவதைக் கண்டிருப்பீர்கள். குறுந்தூரத்திற்கு இது ஏற்புடையதாயினும் சிலர் ஏதாவது ஒரு பக்கம் தலையைத் திருப்பும் போது மட்டுமே சுவாசித்துக் கொள்வார்கள். இது சில வசதியீனங்களை ஏற்படுத்தும் என்பதால் இரண்டு பக்கமும் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது தவிர இந்த நீச்சல் நீந்தும் போது கழுத்துப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதனால் நீங்கள் ஒரு பக்கம் திருப்பிய தலை, மீண்டும் அடுத்த பக்கம் கொண்டு வருவதற்கு அல்லது சாதாரணமாக நடுப்பகுதிக்குக் கொண்டு வருவதற்குச் சிரமமாகலாம்.  

 
இனி நீச்சல் போட்டிகளின் போது நீந்துபவர்களுக்கு ஒரு இணையத்தளத்தில் ‘Swimming Tips To Triatletes’ என்ற பகுதியில் கொடுக்கப்பட்ட சில அறிவுரைகளைத் தருகிறேன். Triathlon என்பது முப்போட்டியாகும். அதாவது நீச்சல், ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம்  என்பன அடங்கிய போட்டியாகும். அதில் ஈடுபடுபவர்களைத்தான் டிரயத்லெட்டீஸ் (Triatletes) என்று அழைப்பார்கள். வல்வெட்டித்துறையில்  கடந்த வருடம் உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு  நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் முதன்முறையாக இந்த விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.   
நீங்கள் சற்றுக்கூடிய தூரம்  தலையை அமிழ்த்தியவாறு நீந்தப் பழகி விட்டீர்களெனில் நீங்கள் கூட்டமாக நீந்தும் வேளைகளில்..... முக்கியமாக நீச்சல் போட்டிகளில், முன்னே செல்லும் நீச்சல் வீரனின் மூச்சுக்குமிழ்களைப் பின் தொடர்ந்து சற்றுத்தூரம் தலையைத் தூக்காமலே நீந்திச்செல்லலாம். அதாவது போகும் திசை பற்றிய கவலை தேவையில்லை. ஆனால் அதற்கு நீங்கள் அந்தக்கூட்டத்தில் முன்னுக்குச் செல்லும் நீச்சல் வீரனாய் இல்லாமலிருத்தல் அவசியம். ஆனாலும் ஒரு சின்ன அறிவுரை. முழுக்க முழுக்க அவர்களை நம்பியிராது போட்டிகளின் போது கடலில் போடப்பட்டிருக்கும் மிதவைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் முன்னால் நீந்துபவர்கள் திசை மாறினால் நீங்களும் திசை மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

 
 

நீச்சல் போட்டிகளின் போது முன்னே போகும் நீச்சல் வீரர்களைத் தொடரும் போது  மூச்சுக்குமிழ்களைப் பின் தொடர்ந்து சிரமப்படாமல் திசையறிந்து போகும் நன்மையை விட இன்னொரு முக்கியமான நன்மை இருக்கிறது. அதாவது நல்ல வேகமாக நீந்தும் ஒரு நீச்சல் வீரனுக்குப் பின்னால் நீந்துபவர் அதிக சிரமப்படாமல் நீந்தலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது முன்னால் நீந்துபவரின் துடுப்பு வலிப்பின் போது நீர் முன்னுக்கு இழுக்கப்படுவதால்  பின்னால் நீந்துபவரின் உடலும் சற்று இழுக்கப்படுவதால்(pulling effect) அவர் அதிகச் சிரமப்படத் தேவையில்லை கடலில் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கும் போது ஒரு வேகப்படகு உங்களுக்கு அருகால் சென்றால்  நீங்கள் அதனை நோக்கி இழுக்கப்படுவதை இன்னும் தெளிவாக உணரலாம். நீங்கள் கடைசியாகச் சொல்லப்பட்ட இரண்டு விடயங்களையும் நான் அனுபவபூர்வமாக அறிந்ததில்லை. ஆரம்பத்தில் ஒன்றாக நீந்தினாலும் சற்று நேரத்தின் பின், நல்ல நீச்சல் வீரர்கள் எல்லோருமே வேகமெடுத்து இந்த இரண்டு நன்மைகளையுமே நான் பெற முடியாத தொலைவுக்குச் சென்று விடுவது இதன் காரணமாக இருக்கலாம்.   
கடல் நீச்சல்..... என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அலாதியான அனுபவம். ஏற்கனவே அதில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு இந்தக்கட்டுரைஒரு தூண்டுகோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி.