சனி, 2 ஜனவரி, 2021

வணக்கம்.

                  


வணக்கம். 

ஏழாவது வெளியீட்டுக்கும் எட்டாவது வெளியீட்டுக்கும் இடைவெளி கூடி விட்டது. அதாவது  நான்கு  வருடங்களும் ஒரு மாதமும் ஆகிறது கொரோனாவா ல் இந்த வருடத்தின் மூன்றாம் நான்காம் மாதங்களில்  விடுமுறை கிடைத்தும் அதனை வல்வை அலையோசைக்கு  சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த விடுமுறை என்ற மகிழ்ச்சியில் வீண் பொழுதாகவே கழிந்து விட்டது.

எழுதுவதற்கான கற்பனைகளும்,எண்ணங்களும், கருத்துக்களும்  மனதில் ஏராளமாக ஊற்றெடுத்தாலும் உட்கார்ந்து அவற்றைத்  தட்டச்சி எழுத்து  வடிவம் கொடுப்பதற்குத் தான் சோம்பலாக இருக்கிறது. குணா திரைப்படத்தில் கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலில் “உன்ன நெனச்சிப் பார்க்கும் போது, கவிதை மனசில அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனும்ணு உட்கார்ந்தா, இந்த எழுத்துத் தான்....வார்த்த...”என்று சொன்னது மனதில் ஞாபகத்துக்கு வருகிறது. எதிர் காலத்தில் அதற்கும் ஒரு தீர்வைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

பத்தாவதாக வெளியிடவிருக்கும்  வல்வை அலையோசை யில்  கொஞ்சம் விசேஷமாக, நண்பர்களின் ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அந்த விருப்பம் நண்பர்களுக்கு இடைக்கிடை தெரியப்படுத்தப்பட்டும் இருக்கிறது. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.

 

இனி ஆக்கங்களுக்குப் போகலாம்.

முதலாவது ஆக்கம் எங்களது வளர்ப்பு நாயைப் பற்றியது. இப்போது அது இல்லை. என்னதான் நாங்கள் போட்ட மிச்சம் மீதியைப் உண்டு விட்டு வீட்டுக்கு வெளியே இருந்தாலும் கூட, பொதுவாகவே இயந்திரமயமாக நகர்ந்து கொண்டு இருக்கும் எங்களது வாழ்க்கையில்  விதிவிலக்காக இருக்கும் சில விடயங்களில்   அவற்றுடன் பேசுவது, விளையாடுவது எல்லாமே அடங்கும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா,மாட்டீர்களா? ஆட்களுக்கு மட்டும் தான்  நினைவஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டுமா? அது வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கும், மகிழ்ச்சிக்கும்,மன நிம்மதிக்குமாக   நன்றியுள்ள அந்த ஜீவனுக்கு எங்களது நன்றி உணர்ச்சியை  வெளிப்படுத்துவதற்காக இந்தக் கட்டுரை.

 

இரண்டாவது ஆக்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான  யோகா பயிற்சியாளர் யோகரத்தினாதிருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல். ஒரு உன்னதமான, எல்லோருக்கும் அவசியமான ஒரு கலையை இலவசமாகக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு அரிய சேவையைச் செய்கின்ற  அவரது நேர்காணல், யோகா சம்பந்தமான, உங்களில் சிலருக்கு இருக்கின்ற சில சந்தேகங்களைத் தீர்த்து, இதுவரை யோகாவில் ஈடுபடாதவர்களுக்கு ஒரு உந்துதலை வழங்குமா?

 

மூன்றாவது ஆக்கம்  இரண்டாவது ஆக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு வகை ஆசனம்.. வல்வை அலையோசை யின் ஒவ்வொரு வெளியீட்டிலும் ஒவ்வொரு ஆசனம், அதைச் செய்யும் முறை, அவற்றின் நன்மைகள் ஆகியவற்றை யோகாவில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த முறை கோமுகாசனம்

 

நான்காவது சுனாமி-2004 தொடர்கதையின் எட்டாவது பாகம். என்ன தான் இப்போது நடுத்தர வயதைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாலும் கூட, அடிமனதில் உள்ள  நண்பர்களுடன் பழகிய ஞாபகங்கள்,அவர்களுடன் கதைத்த கதைகள், வயிற்றுக்கும் தொண்டைக்கும்இடையில் உருளுகின்ற  உருவமில்லாத உணர்ச்சி (நன்றி கவிஞர் வைரமுத்து) தந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்ற போது   வயது மறந்து போய் விடுகிறது. அதற்காகவே, அந்த இனிய அனுபவங்களோடு கொஞ்சம் கொஞ்சம் கற்பனையையும் கலந்து ஒரு உண்மைச்சம்பவத்துடன்  கதையை இணைத்து   எழுதப்படுகின்ற தொடர்கதை தான் இது. என்ன தான் உண்மையில் நாங்கள் நகைச்சுவைக்  கதாபாத்திரமாகவோ, குணச்சித்திரக் கதாபாத்திரமாகவோ  அல்லது வில்லன்/வில்லிக்  கதாபாத்திரமாகவோ  இருந்தாலும் கூட அடிமனதில் நாங்கள் ஒவ்வொருத்தரும் எங்களைக் கதாநாயகனாகவோ,\ கதாநாயகியாகவோ நினைத்துக் கொள்ளத் தானே எங்களுக்கு விருப்பம். அந்த விருப்பம் தான் இந்தக் கதையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்கு வைக்கப்பட்ட தலைப்புக்கும் கதை செல்கின்ற போக்கையும் வைத்து எப்படியானதொரு உச்சக்கட்டத்தை (climax) நோக்கி நகர்கிறது என்பதை உங்களுக்கு இலகுவாக ஊகித்துக் கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

 

ஐந்தாவது ஆக்கம்-முன்பு கி.மு, கி.பி என்று காலத்தைப் பிரித்தது போல் இப்போது கொ.மு, கொ.பி என்று பிரிக்கலாம் என்று நினைக்குமளவுக்கு அந்தக் கிருமி எங்கள் வாழ்க்கையில் ஏதோ  ஒரு விதத்தில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மரியாதை (?) செலுத்தும் முகமாகவும் அது எவ்வாறு தோன்றியது என்பதை அனுமானித்துக் கொள்வதற்குமான கட்டுரை. இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் த காடியன் (The Guardian)  இணயத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

 

ஆறாவது  ஆக்கம், ஐந்தாவது  ஆக்கத்துடன் தொடர்புடையது தான். தற்போது உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு ஒத்த நிலைமை 2011 இலேயே அமெரிக்காவின் ஸ்டீவன் சொடெர்பெர்க் (ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற பெயர் சாதாரணமாக எங்களுக்குப் பரிச்சயம் )என்ற திரைப்பட இயக்குனரால்  ‘Contagion’(தொற்றுநோய்) என்ற திரைப்படம் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது தீர்க்க தரிசனத்தை மெச்சுவதற்காகவும், அந்தக் கதையை நீங்கள்  அறிந்து கொள்வதற்குமாக  அந்தத்  திரைப்படத்தின் கதை  ஆறாவது ஆக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வழமையாக வல்வை அலையோசையின் ஒவ்வொரு வெளியீட்டிலும்   உலகளாவிய ரீதியிலான ஒரு மர்மம், அல்லது ஒரு வினோதமான விடயம் பற்றி ஒரு ஆக்கம் வருவதுண்டு.   பெர்முடா முக்கோணப் பிரதேசம், நாஸ்கா வரைகோடுகள், இறப்பின் பின் வாழ்வு, அட்லாண்டிஸ், பிரமிட்டுக்கள், கடலின் கருந்துவாரங்கள், யானைகளின் இடுகாடு ஆகிய கட்டுரைகள் கடந்த வெளியீடுகளில் இடம்பெற்றிருந்தன. இந்த முறை  ஏழாவது ஆக்கமாக இடம் பெற்றிருப்பது புராதன எகிப்தின் மர்மங்கள் இந்தக் கட்டுரை “லிஸ்ட்வெர்ஸ்(Listverse) எனும் இணையத்தளத்தில்  மார்க் ஒலிவர் (Mark Oliver) என்பவரால் 16/05/2018 அன்று  பதிவிடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும்.

 

இலங்கை வடபகுதியில் உள்ள ஏதாவது சரித்திரப் பின்ணணியுள்ள அல்லது சுவாரசியமான இடம் பற்றி எழுதுகின்ற விதத்தில் இந்த முறை எட்டாவது ஆக்கமாகத் தெரிவு செய்யப்பட்டது  பருத்தித்துறைக் கலங்கரை  விளக்கம் ஆனாலும் ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் கனதியான விடயங்களைச் சேகரிக்க முடியவில்லையாகையால் பொதுவாகக் கலங்கரை வெளிச்சம் உருவான வரலாறு, என்னென்ன விடயங்களுக்கு அவை உதவியாக இருந்தன, அவற்றின் பயன்பாடு குறைந்த விதம், இலங்கையிலுள்ள கலங்கரை விளக்கங்கள் என்று என்று சுற்றி வந்த கட்டுரை கடைசியாகத்தான்   பருத்தித்துறை  வெளிச்ச வீட்டைத் தொட்டுச் சென்றிருக்கிறது. இந்தக் கட்டுரைக்கான சில தகவல்கள் நிகழ்நிலை (online)கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவிலிருந்து  அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

வெளிநாடுகளிலுள்ள எங்களது நண்பர்கள், குறிப்பாகச் சொல்வதானால் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் கருணைநிதி (charity)அதாவது வறிய மக்களுக்கு அடிப்படை மற்றும் வாழ்வாதார  உதவிகளைச் செய்து வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் தெரிவு செய்த பயனாளிக்கு இரணைதீவில் கடலட்டைப்பண்ணை  ஒன்றை வைத்துக் கொடுப்பதற்கான உதவியை வழங்கத்  தீர்மானிக்க, அது சம்பந்தமாகக் குறித்த பயனாளியைக் கண்டு கதைக்கவும், அந்த இடத்தைப் பார்வையிடுவதற்குமாக இரணைதீவுக்கு ஒரு பயணம் செய்ய வேண்டி வந்தது. அந்தப் பயணக் கட்டுரை தான் ஒன்பதாவது ஆக்கம்.

 

இறுதியாக ஆனால் முக்கியத்துவத்தில் இறுதி அல்லாத, பத்தாவது ஆக்கமாக விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல்கள்’.  போராளிகள் தரையிலும், கடலிலும் மேற்கொண்ட தாக்குதல்கள் சம்பந்தமாக பொதுவாக அந்த விடயங்களில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து வைத்திருந்தாலும் விமானத்தாக்குதல்கள் சம்பந்தமாக அவர்கள் அறிந்து வைத்திருப்பது ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவே இருக்கும் என்பதாலும், எங்கள் மாவீர நண்பர்களுக்குச் சமர்ப்பணமாகவும் இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது. இந்தக் கட்டுரைக்கான  சில திகதிகளை மற்றும் நிகழ்வுகளை  அறிவதற்காக  விக்கிபீடியா தமிழ்நெட்   ஆகிய இணையத்தளங்கள்  பயன்படுத்தப்பட்டிருந்தாலும்  கூட வசனங்கள் சுயமாக எழுதப்பட்டவை தான்.

 

 

                                                        

வல்வை அலையோசை -8

1. எங்கள்  டிக்ஸன்

2. யோகாசனப் பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

3. கோமுகாசனம்

4. சுனாமி 2004 தொடர்கதை –பாகம் 8

5.  கொரோனா கிருமியின் ஆதிமூலம்

6. Contagion (தொற்றுநோய்) ஆங்கிலத் திரைப்படக் கதை

7.புராதன எகிப்தின் மர்மங்கள்

8.பருத்தித்துறைக் கலங்கரை  விளக்கம்

9. இரணை தீவுக்கொரு இரகசியப் பயணம்

10. விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்கள்

எங்கள் டிக்ஸன்

 எங்கள்  டிக்ஸன்

“டிக்ஸன்” என்றொரு பெயரை வைத்து விட்ட போதிலும் உன்னை நாங்கள் பெரும்பாலும் அழைப்பது டிச்சு”,”டிச்சுப்பயல்”,டிச்சுக்குட்டி” என்று தான்.

நீ வீட்டுக்கு வந்து சேர்ந்த நாள் கூட நன்றாக ஞாபகமிருக்கிறது. பக்கத்து வீட்டிலிருந்த கண்ணு Aunty சுவர் மேலாக, ஒரு மாதக் குட்டியொன்றைத்  தூக்கித்தர வாங்கிக் கொண்டு, “ “அட, இவனும் ஒரு கறுவாப்பயல் தான்” என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். (இதற்கு முன்பு நாங்கள் இரண்டு தரம் வைத்திருந்த நாய்களின் பெயரும் கூட டிக்ஸன் தான். இரண்டாவதாக வைத்திருந்த நாயைப் போல இதுவும் முழுக் கறுப்புத் தான். ஆக.......  டிக்ஸன் 3



டிக்ஸன் வந்து சேர்ந்த ஒரு சில நாட்களில் தான் நாங்கள் ஆரம்பித்திருந்த புது வியாபாரத்துக்குத் தேவையான கொன்கிரீட் கற்களை உற்பத்தி செய்யும் இயந்திரமும் வந்து சேர்ந்தது (2012 பங்குனி மாதம்) கூட ஞாபகமிருக்கிறது.

அப்போது எங்கள் மகள் ஓவியாவுக்கு இரண்டரை வயது. டிக்ஸனை ஆசையோடு தூக்கி நசுக்குகின்ற ஓவியாவிடமிருந்து டிக்ஸனை காப்பாற்றப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆனாலும் கூட சில நாட்களில் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட டிக்ஸன், ஓவியா வாசல் படியை விட்டு இறங்கியதும் எங்காவது ஓவியாவின் பார்வைக்கு அகப்படாமல் சொய்ங் என்று ஓடி விடுவான்.   

                                                                   டிக்ஸனுடன் எங்கள் மகள் ஓவியா



“கட்ட வா. போவம்” என்று அழைத்ததும் சற்றுக் கூடத் தயக்கமின்றி பின்னால் வந்து, அல்லது நான் சொல்லி விட்டுப் போனாலும் கட்டும் இடத்திற்குச் சென்று  கட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அருமையான பண்பு டிக்ஸனுக்கே உரியது.

பொதுவாக எல்லா நாய்களும்,வாசல் கதவைத் திறந்ததும் தெருவுக்குச் செல்லத்தான் முனைப்புக் காட்டும். ஆனால் எங்கள் டிக்ஸன் அப்படியல்ல. எங்களுடனே சேர்ந்து நின்று தெருவை எட்டிப் பார்ப்பதோடு சரி. சரி, அப்படியே ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வெளியே வந்தாலும் கூட “சரி டிக்ஸன் உள்ளே போவம்”என்ற எங்கள் குரலுக்குக் கட்டுப்பட்டு உள்ளே வந்து விடுவான்.

வளர்ந்து பெரியவன் ஆகி விட்ட பின்பு கூட விளையாட்டுப்புத்தி விட்டுப்போகவில்லை. அவனுக்கு விளையாட வேண்டும் போலிருந்தால் அருகில் வந்து தன்னுடைய காலால் என்னுடைய காலைச் சுரண்டுவது அவனுடைய பழக்கம். அந்த நேரம், ஒன்று அவனைக்  கடற்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது அவன் கவ்விக் கொண்டோடும் பொருளை அவனது வாயிலிருந்து பறிக்க வேண்டும்.  

அவன் வந்து சேர்ந்த நாட்களில் எங்களோடு (இன்னொரு நாயான)  ரோசிக்குட்டியும் இருந்தாள். (அவளைப் பற்றி இதற்கு முதல் வெளியான “வல்வை அலையோசை”யில் எழுதியிருக்கிறேன். சிலருக்கு ஞாபகமிருக்கலாம்) டிக்ஸன் குட்டியாக இருக்கும் போது அவனோடு விளையாடினாலும் கூட பின்பு அவன் அருகில் வரும் போது சற்றே உறுமி அவனைத் துரத்தி விடுவாள். ஒழுங்காக நடக்க முடியாத அவளது வளைந்த பின்னங்கால்கள் தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்.

என்ன தான், தானாகவே போய், கடலில் இறங்கி நீந்துபவனாக இருந்தாலும் கூட அவனைக் குளிப்பாட்ட வேண்டுமென்று  அழைத்தால் வர மாட்டான்.சங்கிலியால் கட்டி தரதர வென்று இழுத்துச் செல்ல வேண்டும். (ஆனால் ரோசி அவனுக்கு நேர்மாறு. “குளிப்பம், வா” என்று அழைத்து விட்டு டிக்ஸனை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போய் பத்து நிமிடங்களில் ஒருவாறு ஏழெட்டு இடங்களில் இருந்திருந்து வந்து சேர்ந்து விடுவாள்.)

எங்கள் வீட்டுக்கு சற்றுத் தள்ளி இருந்த அப்புக்குட்டி அண்ணா ஆட்கள் டொங்க்லீ என்றொரு முரட்டு நாயை இந்த நாட்களில் வளர்த்து வந்தார்கள். அதற்கும் டிக்ஸனுக்கும் சிறு வயதிலிருந்தே ஒத்து வராது. வாசல் கதவுக்கு இந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இருந்து பயங்கரமாகக் குரைத்துக் கொண்டதைத் தவிர நாங்கள் அறிந்தவரை மூன்று தடவைகள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் திகிலடைத்து போகுமளவுக்கு கொடூரமாக சண்டை போட்டும் இருக்கின்றன. இரண்டு பெரும் மாறி மாறி சண்டை பிடித்துக் கொண்டாலும் கூட அந்த சந்தர்ப்பங்களில் டொங்லீயின் கை (கால்?) ஓங்கியிருந்ததை மறுக்க முடியாது. டொங்லீ டிக்சனின் கழுத்தில் வாயால் கவ்விப் பிடித்தால் அதன் பிடியிலிருந்து டிக்ஸனைக் காப்பாற்றுவது ஒரு சிரமமான காரியம். தடியால் அதனை அடித்தாலும் கூட தான் மேற்கொண்ட காரியத்தில் கண்ணாக இருப்பதில் டொங்லீ கெட்டிக்காரன். 

டிக்ஸன் இறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டுக் காணிக்கு டொங்லீ வந்து டிக்சனுடன் சண்டை பிடிக்க, அதனை பலத்த சிரமத்துக்கு மத்தியில் துரத்தியது ஒரு மறக்க முடியாத சம்பவம்.

2018 மார்கழி மாதம் இரண்டாம் திகதி இரவு. முன்பக்கக் கதவைப் பூட்டப் போன போது அருகில் வந்து நின்ற டிக்ஸனைப் பார்க்க, உடலின் சில பகுதிகளில் காயங்கள் இருப்பதைப் பார்த்து விட்டு மருந்து போட்டுத் தடவி விட்டு “கொஞ்ச நாளைக்கு வெளியில் போகாம வீட்டுக்குள்ளேயே இரு” என்று சொன்னதும் எழுந்து நின்று வாலாட்டினான் பின்பு  கவி (என் மனைவி) டிக்ஸனை சாப்பிட அழைக்கவும், சாப்பிடப் போகாமல் கடற்கரைக்குப் போன போது தான் டிக்ஸனைக் கடைசியாக உயிருடன் பார்த்தது.

நான்காம் திகதி ஆகியும் டிக்ஸனைக் காணாமல் கடற்கரையில் அவனைத் தேடிக் கொண்டு போக அவனுடைய பிணத்தைத் தான் பார்க்க முடிந்தது. நாங்கள் செல்லமாக வளர்த்த டிக்ஸன்  தண்ணீரில் கிடந்து ஊறி, தோல் உரிந்து இறந்து கிடந்தது வாழ்நாளில் மறக்க முடியாத கோரமான காட்சி. அழுது, அழுதவாறே அவனுக்குக் கிடங்கு கிண்டி அவனைக் கிடங்கில் போட்டு மூடியதை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.

டிக்ஸனைக் கொன்றது பெரும்பாலும் டொங்லீயாகத் தான் இருக்க வேண்டுமென்று அனுமானித்தாலும் கூட அதற்கு ஆதாரம் இல்லாததால், டொங்க்லீயின் தலையில் பெரிய கல்லைப் போடுவதற்கும், உந்தூர்தியால் அதனை மோதித் தள்ளுவதற்கும் வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த மனம் வரவில்லை.         

டிக்ஸன், உனக்கு மிகவும் பிடித்த இடம் எங்கள் வீட்டோடு உள்ள கடற்கரை தான். குளிரான நாட்களாயின் என்னோடு சேர்ந்து கடற்கரையில் ஓடுவதும், வெப்பமான நாட்களாயின் நான் ஓடிக்கொண்டிருக்கும் போது கடலில் இறங்கி, குரைத்துக் குரைத்து என்னையும் கடலுக்கு இறங்குமாறு அழைப்பதைக் கற்பனை செய்ய முடிந்தாலும் கூட நிஜத்தில் இனிமேல் நாங்கள் உன்னைப் பார்க்கவோ, உன் குரலைக் கேட்கவோ போவதில்லை என்ற உண்மை மனதை சுடுகிறது.

யோகாசனப் பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

 யோகாசனப் பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

உடலை நெறிப்படுத்தி அதன் மூலமாக மனதையும் நெறிப்படுத்தும்  உன்னதக் கலையான யோகாசனம் பற்றி அனேகமானவர்கள் கொஞ்சமேனும் அறிந்திருப்பீர்கள். இந்த நேர்காணல், அது சம்பந்தமான  சில சந்தேகங்களை நீக்கி மேலதிகத் தகவல்களையும்  வழங்கி, இதுவரை யோகாவில் ஈடுபடாதவர்களுக்கு அதில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தையும், ஏற்கனவே ஈடுபட்டவர்களுக்கு மேலதிகத் தூண்டுதலையும் வழங்குமாக இருந்தால் மகிழ்ச்சி. 



மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான யோகாசன வகுப்புக்களை வல்வெட்டித்துறையில் நடத்தி வரும் யோகாசனப் பயிற்சியாளரான திருமதி சியாமளா சிவனேசனுக்கு யோகக்கலையில் பல சிறப்புக்கள் உண்டு. “யோகரத்தினா” பட்டம் பெற்ற இவர் “ஆனந்தயோகாலயா”அமைப்பின் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் பொதுச்செயலாளர் மற்றும் ஆசிரியர், இந்தியாவிலுள்ள “உலக தெய்வநெறி மன்றம்” என்ற அமைப்பின்  அண்ணாநகர் கிளையில் சிவானந்தா முறைப்படி திரு சூர்யா சந்திரானந்தா அவர்களிடம் யோகம் பயின்று பட்டயம் பெற்றவர்.  அதே இடத்தில் மகளிருக்கான யோகாசனப் பயிற்சியை 2015 வரை அளித்து சேவை புரிந்தவர். கடந்த நான்காண்டு காலமாக வல்வெட்டித்துறையில் யோகாசனப் பயிற்சிகளை இலவசமாக வழங்கி சேவை புரிந்து வருகிறார். இவரது பயிற்சியில் சில மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் யோகாசனப் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரிடம் சில கேள்விகள்.

1.‘யோகா என்றால் ஆகா’, ஓகோ” என்கிறார்கள். அப்படி என்ன அதன் சிறப்பு என்று சுருக்கமாகச் சொல்வீர்களா?

யோகா என்பது ஓர் வாழ்வியல் கலை. இது வெறும் உடம்பு மட்டும் செய்யும் பயிற்சி அல்ல. மனதும் சேர்ந்து அனுபவித்து செய்யும் ஓர் உணர்வு. அத்தோடு மூச்சுக் காற்றையும் சரியான முறையில் உள்ளே, வெளியே விடுவதால் யோகப்பயிற்சியை முறையாகச் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே இலேசாவதை நன்கு உணர முடியும். இந்தச் சிறப்பு யோகாசனத்துக்கு மட்டுமே உரியது.

 

2.யோகக்கலையைப் பயிற்றுவிப்பதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?

சரியாகச் சொல்வதானால் நான் கற்றுக் கொள்ள மட்டும் தான் யோகா வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். காலப்போக்கில் கற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்புத் தானாகவே அமைந்தது. 2007இல் அந்த வருடத்திற்கான  சான்றிதழ் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் எனக்கான செய்முறைத்தேர்வைச் செய்து முடித்து விட்டு அடுத்துத் தேர்வினைச் செய்பவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு விளக்கங்களையும் செயல்முறைகளையும் அவர்களுக்குச் சொல்லியும் செய்தும் காட்டிக் கொண்டிருந்தேன். எங்கள் நிலையத்தில் பயிற்றுவிப்பாளராக  இருந்த் ஒருவர் அதைக் கவனித்து விட்டு மிக விரைவிலேயே அடுத்தடுத்த வகுப்புக்களில் என்னை முன்னே நிறுத்தி  வகுப்பு எடுக்கும்படி உற்சாகப்படுத்தினார்.

மிகுந்த தயக்கத்துடன் ஆரம்பித்த பயிற்றுவிப்பு வகுப்பு பின்னர் வெகு இயல்பாக சரளமாக  ஒவ்வொருவரின் உடலின் இயல்பு, அதன் நெகிழ்வுத்தன்மை இவற்றுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்தும் முறை என ஓர் ஆசிரியரின் பொறுப்பைப் புரிய வைத்தது. அந்தப் புரிதலை நானே ரசிக்க ஆரம்பித்தேன். முழு மனதோடும் ஆர்வத்தோடும் செயல்பட ஆரம்பித்தேன்.

     

3.இதற்காக நீங்கள் பெற்ற ஆசிரியப் பயிற்சிகள் பற்றி வாசகர்களுக்குக் கொஞ்சம் சொல்வீர்களா?

ஆசிரியருக்கான பயிற்சி என்று தனியாகச் சொல்லிக் கொள்ள முடியாது. எங்கள் உலகத் தெய்வநெறி மன்றத்தைப் பொறுத்தளவில் வழக்கமாக மூன்றாம் நிலைத் தேர்வான யோகரத்னாவில் சித்தி பெற்ற பின்னரே ஆசிரியராகக் கடமையாற்றுவார்கள். ஆனால் முதலாம் நிலைச் சித்தியான யோகவல்லபா கிடைத்தபோதே எனக்கு அந்த வாய்ப்பு அமைந்து விட்டது. யோகரத்னா தேர்வை பின்னர் செய்து முடித்தேன். நல்ல நட்புகளும் முன்னேறிச் செல்வதற்கான அறிமுகங்களும் கிடைத்ததால் என்னுடைய யோகப்பயணம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் முறையாக ஒரு வருடம் பயின்று, யோகா & இயற்கையியல் என்ற சான்றிதழ் பெறும் வரையில் நீண்டது. (C.Y.N Certificate of Yoga & Naturopathy) முறையான பல்கலைக் கழகச் சான்றிதழோடு ஆசிரியர் பணியைச் செய்கிறேன் என்பதும் திருப்தியான விடயம்.

 

4.யோகக்கலையை எவ்வாறு நீங்கள் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்துகிறீர்கள்?

சமீபத்தில் யோகி. சாண்டில்யன் என்பவரின் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன். அதிலோன்றில் அவர் குறிப்பிட்டிருந்த விடயம், இந்தக் கேள்விக்குச் சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். உடல் ஒரு அற்புதமான அமைப்பு. ஆண்டவன் அதனைப் படைக்கும் போதே  சில பொறிமுறைகளை, சில இயக்கங்களை, சில அசைவுகளை இயல்பாக தினமும் பல தடவைகள் செய்யக்கூடிய விதமாகத் தான் நெறிப்படுத்தியுள்ளான்.  சுழற்றுதல், மடக்குதல், நீட்டுதல், சாய்த்தல், திருப்புதல், வளைத்தல், உயர்த்துதல் இந்த ஏழு இயக்கங்களும் சரியாக நடந்து கொண்டிருக்குமானால்  உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய வாழ்க்கை முறையில் பல இடங்களில், பல விதங்களில் இவை தடைப்படுகின்றன. நடைமுறையில் அவை செய்யப்படாமல் போவதாலேயே நாம் பயிற்சியாக அதனைத் தனியே செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த இயக்கங்கள் இயல்பாக நடைபெறுகின்றனவா என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே போதும். உதாரணமாகக் காலை எழுந்தவுடன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி, விரல்களைக் கோர்த்து, உள்ளங்கை மேலே இருக்கும்படியாக மூச்சை இழுத்து விட்டபடி, உடலை மேல்நோக்கி இழுத்துச் சோம்பல் முறிப்போம். அத்துடன் உடல் சுறுசுறுப்பாகி விடும். இது இயல்பானது. யோகாசனத்தில்  இதற்குப் பெயர் தடாசனம். இதனால் தான் யோகாவை வாழ்வியல் கலை என்கிறோம்.

  

5.வயது முதிர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள், சில நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோர்களுக்கு யோகாவில் ஈடுபடுவதற்கு மனதளவில் ஆர்வம் இருந்தாலும் கூடவே தயக்கமும் இருக்கும் . இவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரைகள் என்ன?

இங்கே அறிவுரைகள் என்பதை விட சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். யோகாசனம் என்பது உடலை வருத்திச் செய்யும் விடயமல்ல. ஒவ்வொருவரும் அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப, உடல் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு ஏற்ப,அதன் பிரச்சனைகளுக்கு ஏற்பச் செய்வதே போதுமானதாக இருக்கும். முறையாகத் தொடர்ந்து பயிற்சிகளைச் செய்யும் போது உடல் இலேசாகி ஆசனங்களை முழுமையான அளவில் செய்யக் கூடியதாகத் தன்னாலேயே வந்துவிடும். அறிவுரை என்று சொல்வதானால் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. சரியாகச் செய்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று கணக்குப் பார்க்கக் கூடாது. இயல்பாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வளவு தான். இது எல்லோருக்குமே பொருந்தும். ஆகவே தயக்கத்தை விடுத்து  பயிற்சியில் மெதுமெதுவாக ஈடுபடுங்கள்.  

 

6.அகில இலங்கை ரீதியில் யோகாசனப் போட்டிகளில் பங்கு பற்றி திறமையை வெளிப்படுத்திய உங்கள் மாணவர்கள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

நல்ல ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். அதே நேரம் .... நல்ல மாணவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது என் கருத்து. 2019 இல் முதன்முதலில்  அகில இலங்கை ரீதியில் யோகாசனப்போட்டியில் ஆனந்த யோகாலயாமாணவர்கள் பங்குபற்றியபோது எங்கள் நிலையம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தது. உயர்நிலை ஆசனங்களில் பெரியளவில் பரிச்சயம்  இருக்கவில்லை. அடிப்படையான ஆசனங்களில் மட்டுமே தேர்ச்சி  பெற்றிருந்தார்கள். போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் மிகக் குறுகிய காலத்தில் முழு ஈடுபாட்டுடன் தினமும் பயிற்சி வகுப்புக்களுக்கு வந்து உயர்நிலை ஆசனங்கள் கற்று 7 பேர் கலந்து கொண்ட போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 4  பதக்கங்களைப் பெற்றார்கள். போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்  கேட்ட தாய்”என்ற குறளின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தேன்.

2020இல் அகில இலங்கை ரீதியிலான போட்டிகள் இணைய தளத்தினூடாகக் காணொளி முறையில்   நடைபெற்றது. பல இடையூறுகள் இருந்த போதும் 17 பேர் பயிற்சி வகுப்புக்கு வந்து ஆசனங்களைக் கற்றுக் கொண்டு போட்டியில் பங்கு பற்றினார்கள் இம்முறை போட்டியானது மிகவும் சவாலானதாக இருந்தது. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து  450 பேருக்கு மேல் கலந்து கொண்ட போட்டியில்  ஒரு தங்கப் பதக்கம் உட்பட 4 பதக்கங்களை  மீண்டும் பெற்றுக் கொண்டார்கள்.

பாடசாலைப்பருவத்தைத்  தாண்டிய வயதில் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர்  குடும்பத் தலைவிகள் எனப் பல தரப்பினரும் தாமாகவே முன் வந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தியமை மனதை நெகிழ வைத்தது.

2019, 2020 ஆகிய இரண்டு போட்டிகளிலுமே 28-34 வயதுப்பிரிவில் முதற்பரிசை வென்ற மதுமினா, அதே போல் இரண்டு போட்டிகளிலுமே 51 வயதுக்கு  மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற 73 வயது பத்மலோசனா அதிரூபசிங்கம் இருவரையும்  எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்னும் 2019 போட்டியில் 21-27 வயதுப்பிரிவில் முதற் பரிசை வென்ற ரம்யா, அதே போட்டியில் 51 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்  இரண்டாம் பரிசை வென்ற விமலாதேவி, 2020 போட்டியில் 8-13 வயதுப்பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற ஜெயந்தினி, அதே போட்டியில்  42-50 வயதுப்பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற தீபன் எல்லோரையும் அவர்களது உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றிக்காகப்  பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரம் பதக்கம் பெறா விட்டாலும்  முழு அர்ப்பணிப்போடு பயிற்சியில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களையும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

   

2020 இல் யோகாசனப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் 


7.சிலர் இதனை உடலுக்கான பயிற்சியாக மட்டும்தான் கருதுகிறார்கள். இது மனதை நெறிப்படுத்தும் பயிற்சியும் கூட என்று எவ்வாறு  வாசகர்களுக்கு விளக்குவீர்கள்?

ஆசனப் பயிற்சியில் உடலின் அசைவுகளோடு மூச்சையும் கவனிப்பது முக்கியமாக விளங்குகிறது. ...ஸ்திரம்... சுகம்....ஆசனம் என்ற வாக்கியத்துக்கு ஏற்ப சுகமான ஒரு நிலையில் உடலை நிறுத்தும் போது மனமானது உடலில் இழுக்கப்படும் பாகங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறது. இயல்பான மூச்சில் மனதின் இந்தக் கவனிப்பானது எண்ணங்களை வேறு இடத்திற்குச் செல்ல விடாமல் இந்த இடத்திலேயே குவிக்கிறது. பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற ஆசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது எண்ணங்கள் குறைந்து மனது இலேசாகி வருவதை அனுபவபூர்வமாக உணர முடியும். காலப்போக்கில் தெளிவான மனம் நிச்சயம் கிடைக்கும்.

 

8.உங்களுக்குப் பிடித்த யோகாசனம் என்ன? அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

ஆசனங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொருத்தரின் உடல்வாகுக்கு ஏற்ப சில ஆசனங்களைச் சுலபமாக,செளகரியமாகச் சிரமமின்றி செய்ய வரும். அவ்வாறாக  எனக்குச் செய்வதற்கு எளிதான ஆசனங்களை எனக்குப் பிடித்த ஆசனங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரையில் ஆரம்ப நாட்களிலேயே விபரீதகரணி, சர்வாங்காசனம் ஆகியவற்றை இலகுவாகச் செய்ய முடிந்தது. சிரமமின்றி நீண்ட நேரம் நிற்கவும் பின்னாளில் பயிற்சி பெற்றேன். சர்வம் +அங்கம் +ஆசனம். உடலின் எல்லா உறுப்புக்களும் தூண்டப்படும் ஓர் அற்புதமான ஆசனமே சர்வாங்காசனம். இது தோள்ப்பட்டையில் உடலை நிறுத்தி, கால்களை மேலே செங்குத்தாகத் தூக்கி நிறுத்தும் இந்த ஆசனத்தின் மூலம்  உடலின் சகல பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. முதுமையைக் கட்டுப்படுத்தி அதன் அடையாளங்கலான நரை,திரை ஏற்படுவதைக் குறைக்கிறது. சூர்ய நமஸ்காரத்துடன் இந்த ஒரு ஆசனத்தையும் மாற்று ஆசனமான மச்சாசனத்தையும் செய்து வந்தாலே ஆரோக்கியம் நிலைக்கும் என்பார்கள். 

    


9.உங்களுக்கு யோகக்கலையைப் பயிற்றுவித்த யோகக்குருக்கள்  பற்றி வாசகர்களுக்குக் கொஞ்சம் சொல்வீர்களா?

நான் யோகாசனப்பயிற்சியை ஆரம்பித்த நாட்களில் ஒரு குடும்பத்தலைவிக்கே உரிய நடைமுறைச்சிக்கல்கள் எனக்கும் இருந்தது. அதனால் வகுப்புக்களுக்குத் தொடர்ந்து போவது இயலாத காரியமாக இருந்தது. 5-6 வருடங்களின் பின்னர் குடும்பப் பொறுப்புக்கள் குறைந்து விட்ட நிலையில், அப்போது நான் வசித்து வந்த சென்னை அண்ணாநகரில் என் வீட்டுக்கு அருகிலிருந்த உலகத் தெய்வ நெறி மன்றத்தில் அங்கத்தவராகச் சேர்ந்தேன்.  அதன் நிறுவனர், சூர்ய சந்திரானந்தா என்று அழைப்பப்படுகின்ற திரு. வெ. ராமச்சந்திரன் யோகக்கலையின் முதலிரண்டு படிகளான இயமம், நியமம் என்பதை இப்போதும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆசிகள் என்னுடன் எப்போது இருப்பதாகவே உணர்கிறேன். இன்றளவும் அந்த நிலையத்துடன் தொடர்பில் இருக்கிறேன்.

அங்கே தான் இன்றைய ஆனந்த யோகாலயாவுக்கு வித்திட்ட திரு மணிகண்டன் வாசுதேவன் அறிமுகமானார். அவர் ஒரு இளைஞர். ஆனால் யோகமகாரத்னா’, யோகக்கலாநிதி’, யோகக்கலைமாமணிஇன்னும் பல பட்டங்களைப் பெற்றவர். அவர் ஆசனங்களை அற்புதமாகவும் இலகுவாகவும்  செய்வதை நாங்கள் பிரமிப்புடன் பார்ப்போம். யோகக் கலையை எல்லா இடமும் பரப்ப வேண்டும் என்ற அவரது நீண்ட தொலைநோக்கு சிந்தனை அவரைப் பின்பற்றத் தூண்டியது. இன்று இந்த ஆசிரியை உருவாக அவர் தான் காரணம். அவர் கொடுத்த பயிற்சிகளும், விளக்கங்களும் இப்போதும் என் மனதில் அழியாமல் இருக்கிறது.  திரு. மணிகண்டன் அவர்கள் என்னை முறையான பல்கலைக்கழக சான்றிதழ் பெறும் வகையில் தன்னுடைய குருவான யோகி. தி.ஆ.கிருஷ்ணன் அவர்களிடமும் ஒரு வருடம் பயிற்சி பெற வைத்தார். யோகி கிருஷ்ணன் அவர்கள் யோகக் கலைக்காகத் திருமணமே செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. இயற்கை உணவு முறையில் 50 வருடங்களுக்கு மேல் வாழும் ஓர் மகத்தான மனிதர்.

இவர்களிடம் எல்லாம் யோகக்கலையின் ஒரு துளியையாவது கற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன்.  

    

10.யோகக்கலையை இன்னும் விஸ்தரிப்பது சம்பந்தமாக நீங்கள் மனதில் கொண்டிருக்கும் திட்டங்கள், அதற்கு முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசனப்பயிற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,யோகக்கலையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட தருணத்தில் நான் மறுபடியும் இலங்கைக்குத் திரும்புவேனா என்று கூடத் தெரியாத நிலையில்,மனதில் என்றாவது ஒரு நாள் நான் மறுபடியும் ஊருக்குத் திரும்பினால் இந்தக் கலையை என் மக்களிடம் இலவசமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆண்டவனுக்கு நன்றி!

மிகச் சாதாரணமாக 2017இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக்கள் 4 ஆண்டுகளில் திரு மணிகண்டன், அவரது பிரதான சிஷ்யை செல்வி ஷாலினி  பாலசுப்ரமணியம் ஆகியோருடைய ஆலோசனைகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் இப்போது ஆனந்த யோகாலயா என்ற பெயருடன் நான்கு தரங்களாக வகுக்கப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள்,தேர்வுகள், சான்றிதழ்கள் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன் சென்னையின் முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் இங்கு வருகை தந்து விசேட வகுப்புக்களும் நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட திட்டமிடப்பட்ட ஒரு யோகா பாடசாலையாக எங்கள் ஆனந்த யோகாலயா உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு படியாக மேலே ஏறிய நிலையில் அடுத்த படியாக இந்த யோகா பயிற்சிக் கூடத்துக்கு ஓர் இடம், கட்டிடம் வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்துள்ளது. தற்போது வல்வை றோமன்  கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் மாலை நேரங்களில் எங்கள் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமக்கான சொந்த இடத்தில் ஆனந்த யோகாலயாமேலும் பல ஆசிரியர்களுடன், யோகக்கலையை  ஆர்வத்துடன் கற்கும் மானவர்களுடன் முழு அளவில் மிளிர வேண்டும் என்பது என் அவா. நியாயமான ஆசைகள் தாமதமாகலாம்.ஆனால் தடைப்படாது என்பது என் நம்பிக்கை. காலமும் கடவுளும் கருணை புரிந்தால் இது நிச்சயம் நடக்கும்.

 

11.இந்த நேர்காணலின் இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது.......

இளைஞர்களே!யுவதிகளே!யோகப்பயிற்சியை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள்.

உடல் பிரச்சனை உள்ளவர்களே!உங்களால் முடிந்தவரை முயற்சியுங்கள்.

முதியவர்களே!மூச்சுப் பயிற்சியை எளிமையான உடற்பயிற்சிகளோடு செய்யுங்கள். 



கோமுகாசனம்

 

                                                                           கோமுகாசனம்



 

 கோமுகாசனம் செய்முறை

1.விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும்.

2.இடக்காலின் முழங்காலை மடித்து பின்புறமாகக் கொண்டு சென்று இடக்காலின் 

மீது அமரவும்.முழங்கால் தரைமீது இருப்பது போல வைக்கவும்.

3.வலக்காலை வளைத்து இடக்காலுக்கு மறுபுறம் கொண்டு செல்லவும், அப்போது 

வலது பக்க முழங்கால்,இடது பக்க முழங்காலுக்கு மேலாக இருக்க வேண்டும்.வலது பாதத்தை இடது புட்டத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும்.

4.வலது பக்க முழங்கையை மடித்துகீழ்ப் புறமாக வளைத்து,முதுகுப்புறம் கொண்டுவரவும்இடக்கையை   வளைத்துத் தலைக்கு மேலாகப் பின்புறம் கொண்டு செல்லவும்.

5.மூச்சை உள்ளிழுத்து கைகளின் விரல்களை ஒற்றை ஒன்று பிடிக்க வேண்டும்.சுவாசம் இயல்பாக 

 இருக்கட்டும் இந்த நிலையில் நன்றாக மூச்சினை நன்றாக இழுத்து விடவும்.

6.மூச்சை வெளியில் விட்டு பிடித்த விரல்களை விட வேண்டும்.

7.பின்புறம் கைகளை மெதுவாக எடுத்து முன்புறம் கொண்டு செல்லவும்.மேலே உள்ளவலக்காலை மெதுவாக நீட்டவும்.

8.இடக்காலை நீட்டி ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவும்வலக்காலை முதலில்
மடக்கியும் இதனைச் செய்யலாம்.

கோமுகாசனத்தின் பயன்கள்

மனம் மற்றும் உடலுக்கு அமைதியை கொடுக்கும்.

குறுகிய மார்பு விரிவாகும்.

கால்களுக்கு வலிமையை கொடுக்கும்.

மூட்டுவலி வராமல் காக்கும்.

முதுகுப் பகுதியை வலுப்படுத்தும்.

 

சுனாமி 2004 தொடர்கதை –பாகம் 8

சுனாமி 2004( 8ஆம் பாகம்)

நினைவுலகத்தில் இருந்த நான் புகையிரத்தத்தின் “கூ” என்ற சத்தத்துடன்  மீண்டும் நனவுலகத்துக்குத் திரும்பினேன். புகையிரதம் ஒரு இடத்தில் நின்றது. வெளியே எட்டிப் பார்த்தேன். அங்குலானை! எனது அசைவுகள், என் தோளில் சாய்ந்திருந்த ப்ரியாவையும், ப்ரியாவின் மடியில் படுத்திருந்த சுவாதியையும் கூட எழுப்பி விட்டன. “வடே.வடே”,டீ, கோப்பி, டீ, கோப்பி”,”ரட்ட கஜூ, ரட்ட கஜூ” (கச்சான்) “தம்பப்பு இருங்கு, தம்பப்பு இருங்கு”(அவித்த சோளன்) “கறி பனிஸ்,கறி பனிஸ்” மற்றும் இன்ன பிற சத்தங்கள் எங்கள் காதுகளை நிறைத்தன. நேரத்தைப் பார்க்க 7:55 ஆகியிருந்தது . புறப்பட்டு ஒரு மணித்தியாலம் தான் ஆகியிருக்கிறது.

“சுவாதிக்குட்டி பனிஸ் சாப்பிறீங்களோ?” என்று சுவாதியைக் கேட்க அவள் வடையைக் காட்டினாள். ப்ரியாக்குட்டி என்ன சாப்பிர்றீங்கள்?” என்று ப்ரியாவிடம் கேட்க அவள் வெட்கப்பட்டுக் கொண்டே”என்ன, நீங்க, ஆக்கள் பாத்துக் கொண்டிருக்கினம்.நீங்க வாங்குறதையே எனக்கும் ஒண்டு வாங்குங்கோ” என்று சொல்ல நான், “பின்னால சாராயம் வருகுது. எனக்கொரு போத்தல் வாங்குவம்” எண்டு நினச்சன்”   என்று சொல்ல ப்ரியா செல்லமாக முதுகில் ஒரு அடி அடித்தாள் . “ம்‌ம், உங்களுக்கெண்டே டிரெயினில இல சாராயம் எல்லாம் விப்பாங்கள் என்ன?” என்று கேட்டுக்கொண்டே.

வடை மற்றும் பனிஸ் வியாபாரிகளிடம் வடையையும் பணிஸ்சையும்  வாங்கிக் கொண்டு “மாத்தர.... வெலாவ(நேரம்) கீயத (எவ்வளவு)?” என்றுஎனக்குத் தெரிந்த சிங்களத்தில் பனிஸ் வியாபாரியிடம் கேட்டேன். மாத்தறைக்குப் போக எத்தனை மணியாகும் என்பதே அதன் பொருள்.அவரும் அதை புரிந்து கொண்டு பத்து விரல்களையும் காட்டி மேலதிகமாக இன்னொரு விரலைக் காட்டினார். “எனக்கும் சிங்களம் தெரியும், பாத்தீங்களோ ப்ரியா?பதினொரு மணிக்கு மாத்தறைக்குப் போயிருவமாம் என்று சட்டையின் கழுத்துப்பட்டையைத் தூக்கிக்கொள்ள ப்ரியா “அப்பிடித்தான் சொன்னவரோ இல்ல,’இப்படி உடஞ்ச சிங்களத்தில கதச்சியோ இரண்டு கையாலயும் அடிச்சு, ஒண்டுக்குப் போக வச்சிருவன் எண்டு சொன்னாரோ தெரியல்ல”  என்று வாரினாள்.

“நான் சினேகிதர்மாரோட கதைக்கிற கதையக் கேட்டுக், கேட்டு நல்லாக் கதைக்கத் தொடங்கிட்டீங்கள், என்ன?” என்று நான் சொன்னதற்கு “அது சரி, அதுக்கு முதல் நான் கதைக்கத் தெரியாமத்தானே இருந்தனான்!” என்று உடனே பதில் வந்தது.

சரியாக அப்போது புகையிரதம் புறப்பட,இறங்கும் அவசரத்தில் கூடையுடன் ஓடி வந்த சோள வியாபாரியின் கூடை எனது வலது கையில் இடித்துக் கொள்ள “ஆ!” என்று என்னையுமறியாமல் கத்தினேன். “என்ன, உங்களுக்குக் கண் தெரியேல்லையோ?” என்று ப்ரியா அவரைப் பார்த்துச் சத்தம் போட்டதற்கு “சொறி மல்லி(தம்பி)” என்று திரும்பிப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டு ஓடிப்போய் இறங்கி விட்டார்.

“குரங்கு, கழுதை” என்று அவரைத் திட்டிக் கொண்டு “கைய ஒருக்காத் தாங்கோ என்று வாங்கிப் பார்த்தாள். கையில் கட்டியிருந்த துணிக்கட்டையும் மீறிக்கொண்டு மீண்டும் இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது. ப்ரியா துணிக்கட்டையை கழற்ற முயற்சிக்க “இல்ல, வேணாம் விடுங்கோ. இறங்குறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால மாத்தி விடுங்கோ” என்று சொன்னேன். “மாமா,நல்லா நோகுதோ?நான் தடவி விடவோ?” என்று சுவாதி மழலையாகக் கேட்டுக் கொண்டே  தடவ முயற்சிக்க “இல்ல, சுவாதிக்குட்டி, வேணாம் மாமாண்ட கை ஊத்த” என்று நான் மறுக்க அவள் அதை கேளாமல் ப்ரியாவிடமிருந்து இறங்கி வந்து என்னருகில் அமர்ந்து எனது கையைத் தனது மடியில் வைத்துத் தடவ எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

எங்களது இருக்கைக்குப் பின்னாலிருந்த இருக்கையில் இருந்து ஒரு தமிழ்ப்பாடல் ஒலிப்பது கேட்டது. இசையை வைத்துத் தமிழ்ப்பாடல் என்று கண்டு பிடித்தாலும் கூட புகையிரத்தத்தின் சத்தத்தில் என்ன பாடல் என்று சற்று நேரம் புரியாமலிருந்தது. வேகமெடுக்க ஆரம்பித்திருந்த புகையிரதம் திடீரென்று “கிறீச்ச்” என்ற ஒலியுடன் நிறுத்தப்பட (நிறுத்துமாறு சமிக்ஞை கிடைத்திருக்கலாம்)பாடல் தெளிவாகக் கேட்டது. உடுக்கு ஒலியைத் தொடர்ந்து “பாடாப் படுத்தும் காடா, கறுப்பா! வாடா நீயும் இறங்கி வாடா. வந்திடு வந்திடு, தானா வந்திடு, வந்திடு வந்திடு, தானா வந்திடு. இல்லேன்னா , பாட்டுப் படிப்பேன், உடுக்கை அடிப்பேன். சாத்தானோட கூட்டில் அடைப்பேன். வந்திடு வந்திடு, வந்திடு வந்திடு”  என்று கேட்டதும் ஒரு நாள், நாதன் சைக்கிளில்  வந்து இறங்க முன்பு, ரவி இந்தப் பாட்டப் பாடினவன் தானே என்று நினைத்ததும் எனது நினைவுகள் மீண்டும் பின்னோக்கி நகர்ந்தன.     

ஒரு நாள் காலை பத்துமணியளவில்  நாங்கள் வழமையாகக் கடல் குளிக்கும் இடத்தில் ஒன்று கூடினோம். மற்ற எல்லோரும் வந்து சேர்ந்து விட்டாலும் நாதனுக்காக மட்டும் கிட்டத்தட்டக் கால் மணித்தியாலமளவில் காத்திருக்க வேண்டி வந்தது. “என்னங்கடா டேய்! நேத்து அவனுக்கு பத்து மணிக்கெண்டு கடல் குளிக்கப் போறமெண்டு சொன்னீங்கள் தானே?” என்று நான் கேட்க உதயன் “நேத்தென்ன, இப்ப ஒரு அரை மணித்தியாலத்துக்கு முன்னுக்குக் கூட அந்த படிப்பாளிக்கு ஞாபகப்படுத்திப் போட்டுத் தான் வந்தனான்.ஆனா கடல் குளிக்க எண்டு சொல்லேல்ல. கடல்ல நீந்தப் போறம் எண்டு தான் சொன்னனான்” என்று சொல்ல விமலன் “ஓ.....கோ” என்று கேலியாகக் கூச்சலிட்டான். ரவி “டேய், அது நீ மட்டும் தானே, நாங்களெல்லாம் குளிக்கத்தானே வந்தனாங்கள்” என்று சொல்ல “இவர் பெரிய ஆழிக்குமரன் ஆனந்தன்  . போடா டேய்” என்று நான் உதயனை வார, அவனும் பதிலுக்கு “ஆழிக்குமரன் ஆனந்தனில்லடா, குற்றாலீஸ்வரன்!” என்று திருத்தினான். “நினைப்புத் தாண்டா பிழைப்பக் கெடுக்கும். உந்த பிழைப்பே நினைப்பில தாண்டா” என்று வினோத்தும் தன்னுடைய பங்குக்கு உதயனை வாரினான். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூ விழி நோகுதடி” என்று சந்தர்ப்பத்திற்கேற்ப பாட்டெடுத்து விடுவதில் கெட்டிக்காரனான மகேஷ் பாட நானும்,விமலனும்  அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த படகில்  தாளம் போட்டோம். நாதன் துவிச்சக்கர வண்டியில் வருவதைப் பார்த்து விட்டு சாதாரணமாக அமைதியாக இருக்கும் ரவி அன்று குஷியில்” “பாடாப் படுத்தும் காடா, கறுப்பா! வாடா நீயும் இறங்கி வாடா. வந்திடு வந்திடு, தானா வந்திடு, வந்திடு வந்திடு, தானா வந்திடு. இல்லேன்னா , பாட்டுப் படிப்பேன், உடுக்கை அடிப்பேன். சாத்தானோட கூட்டில் அடைப்பேன். வந்திடு வந்திடு, வந்திடு வந்திடு” என்று பாட கடற்கரைத் தெருவில் உள்ள தனது வீட்டிலிருந்து இறங்கி வந்த கடற்றொழில்சங்கத் தலைவரான விநாயகமூர்த்தி ஐயா “டேய், சாத்தானோடே கூட்டில அடைக்க வேண்டியது நாதன இல்லையடா. உங்கள எல்லாரையும் பிடிச்சுத் தான் அடைக்கோணும். படிக்கிற பிள்ளைய படிக்கவும் விடாம.........அது சரி, உங்களுக்குத் தாளம் தட்டுறதுக்கு என்ட போட்டோ (படகு)கிடைச்சுது ,நீங்க பண்ணுற கூத்து! ” என்று சொன்னார். விமலன் “இல்ல ஐயா, எங்கட ரவி நாதனுக்கு இந்தப் பாட்டப் பாடேல்ல. நீங்க வீட்டில இருந்து இறங்கி வாறதப் பாத்துட்டுத் தான் படிச்சவன்” என்று அவர் கையில் அகப்படாமல் ஓடிப்போய் சற்றுத்த் தொலைவில் நின்று கொண்டு சொன்னான். “கிட்ட வாவென், உனக்கு இருக்கு, இனி யாரும் என்ட போட்டத் தொட்டீங்களோ, தோட்ட கைய முறிச்சு அடுப்பில போட்டிடுவன் “ என்று கடுப்போடு சொன்னார்.  

இதமான வெயிலுக்குக் கடலில் இறங்க நன்றாகத் தான் இருந்தது.கிட்டத்தட்ட 75 மீற்றர் தூரத்தில் நங்கூரமிடப்பட்டு இருந்த வள்ளத்தை நோக்கி உதயன் நீந்தத் தொட்ங்கினான். டேய், கொஞ்சம் மெதுவாப் போடா, நானும் வாறன் என்றபடி ரவியும் நாய் நீச்சல் (கையை நீர் மட்டத்துக்கு வெளியே எடுக்காமல் நீருக்குள்ளேயே வலித்து நீந்துதல்) நீந்திக் கொண்டு அவனுக்குப் பின்னால் போக ஆரம்பித்தான். நானும் இதுவரை இவ்வளவு தூரம் போனதில்லை தான்.   ஆனாலும் போக வேண்டும் என்ற ஆவலும், இயற்கையாகவே நீரைக் கண்டால் ஏற்படும் பயமும் போட்டிபோட்டு  பயத்தை ஆவல் ஜெயிக்க நானும் ரவியின் பின்னால் நீண்ட ஆரம்பித்தேன். விமலன் “கேசவா,நீ இது வர இவ்வளவு தூரம் நீந்தினது இல்லடா.கவனம்!” என்றான். “சரிதாண்டா, எதுக்குமே ஒரு தொடக்கம் இருக்கத்தானே வேண்டும்” என்று நான் சொல்ல வினோத் “தத்துவம் நம்பர் வன்.கரை ஏறுற வர எத்தின தத்துவம் சொல்றியோ எண்டு பாப்பம்” என்றான். “ரவி, கேசவன், ரெண்டு பேரும் தலைய உள்ள விட்டுத் தண்ணிக்குள்ள பார்க்க வேண்டாம். இப்பிடியே நாய் நீச்சல்லயே நீந்துங்கோ” என்றபடி வேகமாகப் போன உதயன் சற்றுப் பின் தங்கி எங்களுடனே நீந்தினான். அவன் அருகில் நீந்தும் தைரியத்தில் ஒரு மாதிரி நீந்தி வள்ளத்தை அடைந்து விட்டோம். வள்ளத்தில் ஏறிப் பார்க்க அட இவ்வளவு தூரம் நீந்தி வந்து விட்டோமா என்று நினைக்குமளவுக்கு மற்ற நண்பர்கள் நான்கு பேரும் தூரத்தில் தெரிந்தார்கள். ஆசைதீர வள்ளத்தில் இருந்து பல்டி அடித்தோம். ரவி பல்டியில் கெட்டிக்காரன். உதயனும் நானும் முக்கால் பல்டி அடித்து முதுகு நீரில் அடிபடத்தான் விழுந்தோம். ஆனால் ரவி மிக அழகாக ஒரு முழு வட்டமிட்டுக் காலால் குதிப்பது போல் விழுந்தான்.

பல்டி தந்த பரவசத்தில் ரவி வள்ளத்தின் மேலேறி “டேய். நல்லா இருக்கடா! நீங்களும் வாங்கோவெண்டா.” என்று கத்த பதிலுக்கு “போடா எரும,எங்களக் கொல்லுற பிளானோ?”என்று மகேஷ்  கத்தினான். “இல்லடா, இந்த விஷயத்தில ஒருத்தரையும் வற்புறுத்தக் கூடாது. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு நீங்க ரெண்டு பெரும் என்னோட வந்ததே பெரிய நெஞ்சிடியா இருந்துது.” என்று உதயன் சொன்னான். “டேய் ரவி, எங்களாலேயே நல்ல நீந்த முடியாது, இதில அவங்கள வேற கூப்பிடுற.கடலம்மா, தன்ன நோக்கி வர்ற ஆக்களை வர விடுவாவாம். ஆனா தன்ன விட்டுப் போற ஆக்கள அதாவது கரைய நோக்கிப் போற ஆக்கள லேசில விட மாட்டாவாம்.” என்று நான் சொல்ல, உதயன் “அதெண்டா உண்ம தான். என்ன தான் கரைய நோக்கி அலையடிச்சாலும், உள்ளுக்குள்ளால நீர் விசையொண்டு கடல நோக்கி இழுக்கும்.: என்றான். “டேய், துலைவாங்களே, ஏண்டா பேதியக் கிளப்புறீங்கள்?” என்று ரவி இருவரையும் முதுகில் அறைந்தான். கரையைப் பார்த்த உதயன் “வேறையும் யாரோ வந்திருக்காங்களடா. எங்கட ஆக்களத் தவிர இன்னும் நாலு தல எக்ஸ்ட்ராவாத் தெரியுது.சரி போவம். போய் அவங்களோட பம்பல் அடிப்பம், நீங்க ரெண்டு பேரும் முன்னுக்குப் போங்கோ. நான் பின்னால வாறன்” என்று  உதயன் சொல்ல “என்னடா, ரெண்டு கன்(gun)  போட்டுக்கு ஒரு தாய்க்கப்பல் பாதுகாப்போ” என்று சொன்னவாறு ரவி குதிக்க, அவனைத் தொடர்ந்து நான் குதித்தேன்.  

கையை நீருக்கு வெளியே அடித்து நீந்திய ரவி சற்று நேரத்திலேயே “கேசவன், நல்லாக் களைக்குதடா, போய்ச் சேருவனோ எண்டு பயமா இருக்குதடா” என்று சொல்ல  எனக்குத் திகிலாக இருந்தது. ஆனால் உதயன் “நாய் நீச்சல் நீந்தடா நாயே, கைய அடிச்சு நீந்தினாக் களைக்கும் தானே, பயப்படாத, உன்ட ரெண்டு பக்கதிலயும்  நாங்க ரெண்டு பெரும் வாறம் இன்னும் கொஞ்சத்தூரம் தான், போயிரலாம்.” என்று தைரியம் கொடுத்தான். நாங்க இரண்டு பெரும் அவனுக்கு இரு பக்கத்திலுமாக நீந்தி ஒருமாதிரி நண்பர்களிடத்தில் போய்ச் சேர்ந்தோம்.



அங்கு நண்பர்களுடன் இருந்த மற்றவர்கள், எங்களை விட இரண்டு வயது குறைந்த தம்பிமார். உயர்தரம் படிக்க ஆரம்பித்திருப்பவர்கள். அவர்களில் ஒருவன் சொன்ன விளையாட்டை எல்லோரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். விளையாட்டு இது தான். புகையிரதப் பெட்டி போல் எல்லோரும் அடுத்தடுத்ததாக கொஞ்சம் இடைவெளி விட்டு காலை விரித்துக் கொண்டு நிற்க ஒவ்வொருத்தராக எல்லோரதும் கால்களுக்கு இடையே சுழியோடிச் செல்ல வேண்டும். எல்லோரையும் சுழியோடித் தாண்டினால் அவர் கடைசியாக நின்று கொள்ள, அடுத்த எல்லையில் நிற்பவர் சுழியோட ஆரம்பிக்க வேண்டும். அவர் இடையிலேயே எழுந்து விட்டால் அவர் அந்த இடத்தில் நிற்க, மற்றவர்கள் கொஞ்சம் தள்ளித்தள்ளி நின்று கொள்ள, ஆரம்பித்த பக்கத்தில் இருக்கும் மற்றவர் சுழியோட ஆரம்பிக்க வேண்டும். கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஒரே மூச்சில்  பத்துப் பேரின் கால்களுக்கு இடையால் அவர்களை இடிக்காமல் நளினமாக நீந்தியது எங்கள்  மகேஷூம், மற்ற நால்வரில் ஒருவனான இந்திரனும் தான். எங்கள் நீச்சல் வீரனான உதயனுக்குக் கூட ஏழு பேருக்கு மேல் தாண்ட முடியவில்லை. “எனது முறை வர விமலன் “கேசவா, நீ ஒருநாளும் கோச்சியில போனதில்ல எண்டு ஏங்கிறனீ தானே ? கோச்சி மாதிரி நிக்கிற எங்கள் எல்லாரையும் தாண்டிப் போனா கொஞ்ச நாளுக்குள்ள நாங்கள் எல்லோரும் ஒரு நாள்  கோச்சியில போகலாம்” எண்டு நினச்சிக் கொண்டு சுழியோடத் தொடங்கு” என்று சொல்ல “எங்களோட எண்டா அவன் ரெண்டாவது ஆளத் தாண்டுறதுக்கு முதலே எழும்பிடுவான். பிரியாவோட எண்டு சொல்லு.”என்று நாதன் சொல்ல “பாத்தியோ, உன்ட ரொமான்ஸப் பாத்து, கதைக்காத நாதனே கதைக்க வெளிக்கிட்டுட்டான்” என்று ரவி சொன்னான். எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும், எங்களை விட வயது குறைந்தவர்கள் இருக்கும் இடத்தில் இப்படிக் கதைக்கிறார்களே என்று இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது. நான் நீருக்குள் மூழ்க விமலன் “கூ” என்று என்று புகையிரதம் ஒலியெழுப்புவது போல் ஒலி எழுப்பினான். 

                       (தொடரும்)

         


கொரோனா கிருமியின் ஆதிமூலம்

 

கொரோனா கிருமியின் ஆதிமூலம்

தற்போது உலகளாவிய ரீதியில் பொதுவாக எல்லா நாடுகளும் , விதிவிலக்கில்லாமல் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை என்னவென்று கேட்டால் அனேகமாக எல்லோருக்கும் தெரியும், அது  கொரோனா என்ற செல்லப்பெயரும் கொவிட் 19 என்ற பதிவுப்பெயரும் கொண்ட ஒரு கிருமி  என்று. சரி, எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும் தானே? கொரோனா வைரஸின் ஆரம்பப்புள்ளி எது? இது எங்கிருந்து வந்தது? இதன் மிகச்சரியான விடை ஒருவருக்குமே தெரியாது ஊடகங்கள் மூலம் அனுமானிக்கப்பட்டது சீனாவின்  வுஹான் என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள இறைச்சிக் கடையிலிருந்து என்று தான்.



ஊடகங்கள் மூலமாக , கொரோனா வைரஸின் மூலக் கதை பொது மக்களுக்கு  ஓரளவுக்கு வெளிச்சம் போடப்பட்டு இருப்பதாகத் தான் நம்ப வேண்டியிருக்கிறது.   2019 இன் பிற்பகுதியில் வுஹானின் கடல் உணவுச் சந்தையிலிருந்து வாங்கிய  விலங்கொன்றின் இறைச்சியில் இருந்த  வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அது மிகச் சிறியதொரு  சம்பவம் தான். ஆனால் அந்தச் சிறிய சம்பவமானது  உலகத்திலுள்ள முழு நாடுகளையும் புரட்டிப்போட்டதொரு நிலைமைக்குக் காரணமாக அமைந்தது என்றால் எங்களுக்கு நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும்.  கோவிட் -19 சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரில் உள்ள முதல் கொத்தணியிலிருந்து இதுவரை 1.41 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோயாக இது உருவெடுத்திருக்கிறது.  

பாங்கோலின்களின் என்று அழைக்கப்படும் ஒரு எறும்பு உண்ணி போலத் தோற்றமளிக்கும் பாலூட்டி ஒன்றின் இறைச்சியிலிருந்து தான்  இந்தக் கிருமி தோன்றியிருக்கிறது என்று தான் நம்பப்படுகிறது.



 

ஆனால் கோவிட் -19 மூலக் கதையில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. இதனால் விஞ்ஞானிகள் எவ்வாறு இது உருவானது அதாவது எந்த விலங்கினத்திடம் இருந்து இது தொற்றியது  என்று அறியக்  கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் ஒரு தொற்றுநோய் எவ்வாறு தொடங்குகிறது என்பதை அறிவது அடுத்ததை நிறுத்துவதற்கு மற்றும் அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதற்கு  முக்கியமானதாகும்.

மெல்போர்னின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் டர்னர் இந்த வகைக் கிருமியானது  வெளவால்களில் இருந்து  தோன்றியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார். உணவுச்சங்கிலியில் மனிதனுக்கும் வெளவால்களுக்கும் இடையில் காணப்படுவது தான் பாங்கோலின் என்ற விலங்கு. இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம், அவற்றின் வேட்டைக்குத் தடை விதித்திருந்தும் கூட அவற்றின் இறைச்சியால் சில நோய்கள் குணப்படுத்தப்படும் என்று மனிதன் நம்புவதால்  அவை தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டே வருகின்றன. அவ்ற்றின் வேட்டை சட்டவிரோதமானது என்பதால் தான் வுஹானில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலில் பாங்கோலின்கள் இல்லை.



இப்போது தான் அது மனிதனுக்குத் தொற்றினாலும் கூட  இந்த வகைக் கிருமிகள் விலங்குகளுக்குள் ஏற்கனவே பரவி வந்திருக்கின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்தக் கிருமிகளின் வீச்சு எல்லை அதாவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரதேசம், தொற்றக்கூடிய விலங்குகளின் தன்மை ஆகியவற்றை அறிந்துகொள்வது இந்தக்கிருமி எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதைக் கணித்துக்  கொள்ள உதவியாக இருக்கும் என்றும் இவர் கூறுகிறார். 

 இந்தக் கிருமியின்  மரபணுவின் தோற்றத்தை ஆய்வு செய்த நேச்சர் என்ற ஆய்வுக்கூடத்தின்  இணை ஆசிரியராகவும்  சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எட்வர்ட் ஹோம்ஸ்,  இந்த வகைக் கிருமிகள் தொற்றக்கூடிய உயிரினங்களின் அடையாளம் இன்னும் நிச்சயமற்றதுஎன்று சமூக ஊடகங்களில் கூறியுள்ளார்.

ஒரு புள்ளிவிவர ஆய்வு, இந்த வகை அதாவது கோவிட் 19 கிருமிகளின் குணாதிசயத்தை மனித உயிரணுக்களுடன் இணைக்க உதவும் வகையில் உருவானது. பாங்கோலின்களின்  உயிரணுக்களுடன் இவை பொருந்தியது.   ஆனால் அதே போல்  பூனைகள், எருமைகள் , மாடுகள் , ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் புறாக்களின் உயிரணுக்களுடன் கூட  இவை பொருந்திப் போனது தான் இவை எவ்வாறு தோன்றின என்று வரையறுத்துக் கூறுவதில் சிக்கலை   உண்டாக்கின

மற்றொரு ஆய்வு, பாங்கோலின்களிடமிருந்து உருவாகியிருக்கலாம் என்ற கருத்தை நிராகரித்ததாகக் கூறியது.  ஏனென்றால் பாங்கோலின்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒத்த கிருமிகளின் மாதிரிகளில் மனிதர்களில் இப்போது பரவி வரும் கோவிட் 19 கிருமிகளில்  காணப்படும் அமினோ அமிலங்களின் சங்கிலி இல்லை. ஆகவே இது ஒரு நிச்சயமான  விடயம் அல்ல, ஆயினும் சாத்தியமான விடயம் என்றே கருதலாம். 

ஹோம்ஸ் பணிபுரிந்த ஆய்வு, இந்தக் கிருமியின்  வழித்தோன்றல்கள்  மனிதர்களுக்குள் தொற்றி , பின்னர் அது மனிதனிடமிருந்து மனிதனுக்கு அனுப்பப்படுவதால் இவை பெரிய அளவில் வேகமாக பரவக்கூடிய கிருமி என்று தெரிவிக்கிறது. அதாவது மெதுவாகப் பரவக்கூடிய கிருமிகளின் தோற்றத்தைக் கண்டு பிடிப்பதில் உள்ள இலகுதன்மை இவற்றில் இல்லை.   

மருத்துவ இதழான லான்செட்டில் முதல் 41 கோவிட் -19 நோயாளிகளின் பகுப்பாய்வில், அவர்களில் 27 பேர் வுஹான் சந்தையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டறிந்தனர். ஆனால் அந்த நோயாளிகளில் முதலில் அறியப்பட்ட கொரோனா நோயாளி இல்லை என்பதால் வுஹான் சந்தையிலிருந்து தான் இது தோற்றம் பெற்றது என்பதைச் சந்தேகிக்க இது மற்றொரு காரணமாக இருக்கலாம்.

அயோவா பல்கலைக்கழகத்தின் முன்னணி நோயெதிர்ப்பு நிபுணரும், விலங்குகளிடமிருந்து தோன்றிய  கொரோனா கிருமிகள்  பற்றி ஆராயும்  நிபுணருமான பேராசிரியர் ஸ்டான்லி பெர்ல்மன், வுஹான் சந்தைக்கான இணைப்பு தற்செயலானது என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்றும் ஏனெனில் அந்தக் கிருமியின் மரபணு  சந்தைச் சூழலில் கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கிறார்.

ஆக மொத்தத்தில் இறுதியாக இவற்றின் தோற்றம் பற்றி உறுதியும் அறுதியுமாகக் கூற முடியா விட்டாலும் வெளவால்களிடமிருந்து  பாங்கொலிங்களுக்கும் பின்பு பாங்கோலிங்களிடமிருந்து மனிதர்களுக்கும் என்று தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து அனுமானிக்க வேண்டியிருக்கிறது.