ஞாயிறு, 27 நவம்பர், 2016

மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மங்களும்

இரண்டரை வருடங்களுக்கு முன்பு (2014) மூன்றாம் மாதம் எட்டாம் திகதி மலேசியாவில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற  மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH370 என்ற விமானம் மாயமாகி இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் அதற்கு என்ன நேர்ந்தது என்பது  இன்னும் உலக மக்கள் அனைவரையும் உலுக்கி வரும் கேள்வி. ஆதாரமாக ஒன்றும் கிடைக்காத போதும் அனுமானங்களுக்குக் குறைவில்லை. அத்தகைய சில அனுமானங்கள்,
அந்தமான்

அந்த விமானத்தின் வழமையான பறப்புப் பாதையையும்,அதிலிருந்து கடைசியாகக் கிடைத்த சமிக்ஞையையும் வைத்துப் பார்க்கும் போது அது ஒரு கட்டத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். அந்த நாடுகள் நட்பு நாடுகள் ஆதலால் அவற்றிற்கிடையே ராடார் கருவிகளின் அவதானம் மிகக் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. இதனை வாய்ப்பாகக் கொண்டு அந்தமான் தீவொன்றினுள் விமானத்தை இறக்கியிருக்கலாம். இங்கு விமானங்கள் ஏறிஇறங்கும் ஒடுபாதைகள் நான்கு இருந்தாலும் கூட இந்திய இராணுவத்தின் கண்ணில் படாமல் இறக்குவது என்பது மிகக் கடினமான பணியாகவே இருக்கும். கடினமான பணியே தவிர சாத்தியமில்லாத ஒன்றல்ல.ஏனெனில் 570 க்கு மேற்பட்ட அந்தமான் தீவுகளில் 36 தீவுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர். இந்த மாதிரியான இடங்களில் விமானத்தின் சக்கரங்களை வெளிப்படுத்தி இறக்கும் போது கடற்கரை மணல் பகுதிகளில் விமானத்தின் கீழ்ப்பகுதி புதைந்து அழுத்தம் மற்றும் வேகம் காரணமாக கிழிந்து கொண்டு விட வாய்ப்புண்டு. சக்கரங்களை வெளிப்படுத்தா விட்டால் மோதலோடு கூடிய இறக்கத்தின் போது விமானத்தின் வால்ப்பகுதி சேதமடைந்து அதில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் காரணமாக விமானம் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் மீறி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும் கூட மீள அதைக் கிளப்புவது என்பது சாத்தியமில்லாத விடயம்.
கசகஸ்தான்   


இந்த விமானத்தின் தேடுதல் வடக்குப் பக்கமாக கசகஸ்தான் வரை விஸ்தரிக்கப்பட்டதால் பாலைவனப்பகுதிகள் நிரம்பிய இந்த நாட்டில் தரை இறக்கப்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்க இடமுண்டு.விமானத்தை இறக்குவதற்கு கடற்கரைப் பகுதிகளை விட பாலைவனப்பகுதிகள் பாதுகாப்பானவையே என்று பெரும்பாலான விமானிகள் கருதுகின்றனர். ஆள் நடமாடமில்லாத இடத்தில் விமானத்தை இறக்க வேண்டுமென்று யாரும் கருதியிருந்தால் அவர்களுக்கு இந்த இடம் ஒரு சிறப்பான தெரிவாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த நாட்டில் இறக்க வேண்டுமாயின் ராடார் கருவிகளின் நோட்டமும்,இராணுவ அழுத்தமும் அதிகமுள்ள இந்தியா, பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலால் பறந்திருக்க வேண்டும். ஆயினும் என்ன தான் ராடார் கருவிகளின் நோட்டம் இருந்தாலும் ஆசிய நாடுகளின் ராடார் கருவிகளில் ஏற்படும் வழமையான  சிறு தவறுகள் அல்லது கோளாறுகள் இங்கேயும் ஏற்பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு பெரிய பறவைகள் கூட்டத்தை விமானம் என்று கருதும் ராடார்கள் இருக்கும் பட்சத்தில் இந்த விமானத்தை  பறவைக்கூட்டம் என்று கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ‘Manifest’ என்று அழைக்கப்படும் விமானத்திலுள்ள பொருட்களின் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாததற்கு விமானத்தில் ஏதேனும் மனித குலத்திற்கு ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு ஒரு விஞஞானியாலோ அல்லது ஒரு விலையுயர்ந்த ஒரு பொருள் ஒரு செல்வந்தராலோ எடுத்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும். இதனை மோப்பம் பிடித்த யாரும் விமானத்தைக் கடத்தியிருக்கலாம்.
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்கக் கடல்
செயற்கைக்கோள் மூலமாகக் கிடைக்கப்பெற்ற தகவலிலிருந்து மலேசிய ராடார் கருவிகளிருந்து நீங்கிய பின் 5 முதல் 6 மணித்தியாலங்களுக்கு இந்த விமானம் பறந்திருக்கிறது.இதனை வைத்துப் பார்க்கும் போதும் ஏனைய நாட்டு ராடார் கருவிகளில் இதனை அவதானித்திருக்க முடியவில்லை என்பதை வைத்துப் பார்க்கும் போதும் இது பெரும்பாலும் தெற்கு நோக்கி அதாவது அவுஸ்திரேலியாவின் வடக்குப் பக்க கடலுக்கு மேலாக எரிபொருள் தீரும் வரை பறந்து பின்பு கடலில் மூழ்கியிருக்கலாம்.
வட மேற்கு சீனாவிலுள்ள டக்லமகான் பாலைவனம்
239 பயணிகளில் 153 பேர் சீனர்களாக இருந்தது இன்னொரு அனுமானத்திற்கு வழிகோலியிருக்கிறது. அதாவது சீனாவில் பிரிவினை கோரும் உய்குர் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி சீனா, கிருகிஸ்தான் எல்லையிலுள்ள உலகத்திலேயே மணல் நிரம்பிய பாலைவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும்  டக்லமகான் பாலைவனத்தில் தரையிறக்கியிருக்கலாம் என்பதே அது. ஆனாலும் எத்தனையோ நாடுகளின் ராடார் கருவிகளின் அவதானத்திற்குத் தப்புவதும் சாத்தியக்குறைவான விடயம் தான்.
தீ அல்லது வேறு ஏதேனும் விமானக் கோளாறுகளிலிருந்து தப்புவதற்கு லங்காவி தீவை நோக்கி   
அப்படி ஏதேனும் ஏற்பட்டிருந்தால், போக வேண்டிய பாதையிலிருந்து விலகி இடப்பக்கமாகத் திருப்பி அருகே உள்ள விமான நிலையத்தை அடைய எடுத்த முயற்சி சரியான செயலென்றே அனேகமான விமானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். சரி,அப்படி ஏதும் ஏற்பட்டிருந்தால் கோலாலம்பூருக்கே திரும்பியிருக்கலாமே என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் அப்படித் திரும்பி வரும் போது 8000 அடி உயரமான மலைத்தொடர்களை எதிர் கொள்ள வேண்டிய ஆபத்து உண்டு.  ஆகவே இரவு நேரத்தில் அவ்வாறான ஆபத்தைத் தவிர்த்து பரிச்சயமான, தடைகளற்ற கடற்பரப்பின் மேலே லங்காவி தீவை நோக்கிப் பறப்பது ஒப்பீட்டு ரீதியில் ஆபத்துக் குறைவானது என்று விமானிகள் கருதியிருந்தால் அது சரியானது தான். ஆனாலும் துரதிஷ்டவசமாக போய்ச் சேர நினைத்த இடத்தை அடைவதற்கு முன்னமே அனர்த்தம் நிகழ்ந்து விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம்.
ஆனாலும் இந்த அனுமானத்தில் உள்ள முரண்பாடு என்னவெனில், அப்படியான ஆபத்துக்கள் நேரும் போது விமானிகள் பெரும்பாலும் தானியங்கி மற்றும் கணனிக்  கட்டுப்பாட்டை விடுத்து விமானத்தைக் கைகளால் தான் செலுத்த விரும்புவார்கள். ஆயினும் இங்கே தலைமை விமானிக்கும் முதல் அதிகாரிக்கும் இடையே முழங்கால் அளவு உயரத்தில் இருந்த கணனியின் விசைப்பலகையில் ஏழு அல்லது எட்டு எழுத்துக்கள் தட்டச்சு செய்யப்பட்டு அந்தக் கணனி உத்தரவின் மூலமே விமானத்தின் போக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே இதனை ஒரு சதிச்செயலாகக் கருதவும் இடமுண்டு.
பாகிஸ்தான்
இதுவரை விமானங்கள் கடத்தப்படாமல் விபத்துக்காகாமல் மர்மமாக மறைந்த சம்பவங்கள் எத்தனையோ சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. என்றாலும் பெரும் எண்ணிக்கையில் பயணிகள் மறைந்த சம்பவம் இதனைப்போல் மிகச்சில தான். பின் லாடன் நீண்டகாலம் மறைந்து வாழ்ந்த வடக்குப் பாகிஸ்தானுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு இலேசான அனுமானம், கடத்தப்பட்டிருந்தால் இவ்வளவு காலம் கோரிக்கை எழாமல் இருந்திருக்காது என்ற வாதத்தாலும் இது அதிகூடிய இராணுவ ராடார்களின் அவதானம் இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லை என்பதால் அந்த ராடார்களின் நோட்டத்திற்குத் தப்பி விமானத்தை இறக்கியிருக்க முடியாது என்ற வாதத்தாலும் அடிபட்டுப்போகிறது.
இன்னொரு விமானத்தின் நிழலில்
சாத்தியம் மிகக் குறைந்த அனுமானம். அதாவது சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட SIA68 விமானம் மற்றும் MH370 விமானத்தின் பாதையையும்,நேரத்தையும் அவதானிக்கும் போது கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஒரே நேரத்தில் ஒரே  திசையில் பறந்த அபூர்வமான நிகழ்வைக் அவதானிக்க முடிகிறது. ராடார் கருவியில் இலகுவாக தனது உருவத்தை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் டிரான்ஸ்பொண்டர் கருவியை இயக்காமல் MH370 பறந்திருக்குமாயின்  இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலாக இந்த இரு விமானங்களும் பறக்கும் போது இரு பீப் ஒலி கேட்காமல் ஒரு பீப் ஒலியுடன் விமானம் ஒன்று பறப்பதாக இனங்காணப்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் இரு விமானங்களின் பறப்புப் பாதையும் வேறுபட்ட பின் MH370 சீனாவின் சின்சியாங் அல்லது கிருகிஸ்தான் நாடுகளில் இறக்கப்பட்டிருக்கலாம்.
இதற்கு ஓரளவு சாத்தியம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட சாதாரண பொதுவான ராடார் கருவிகளிலேயே இந்தத் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் அதியுயர் பாதுகாப்புக்காகப் பாவிக்கப்படும் இராணுவ ராடார் கருவிகள் டிரான்ஸ்பொண்டர் கருவிகளை இயக்காமலே விமானத்தை அடையாளம் கண்டு கொள்ளக்கூடியன.1000 மீற்றருக்கும் குறைவான இடைவெளியில் இரு விமானங்களும் பறந்திருக்குமாயின் மட்டுமே இராணுவ ராடார் கருவிகளில் இனங்காணத் தவறியிருக்கலாம்.1000 மீற்றர் என்பது எங்களுக்குப் பெரிதாகத் தோன்றினாலும் விமானங்களைப் பொருத்த வரை இது ஒரு மிகக் குறுகிய தூரமே.  விமானத்தைக் கடத்துபவர்கள் இவ்வளவு கச்சிதமாதத் திட்டமிட்டு செயற்பட்டிருந்தாலும் கூட இப்படியானதொரு ஆபத்தை எதிர் கொள்ளத் துணிந்திருப்பார்களா என்பது மெய் சிலிர்க்க வைக்கும் கேள்வி தான்.
விமானத்தினுள்ளே  கலவரம்.....?  
எப்படிப் பார்த்தாலும் ஒரு விதமான இடையூறுகளும் அல்லது சதித்திட்டமும் இன்றி விமானம் காணாமல் போயிருக்கக்கூடிய சாத்தியம் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் பறக்கக் கூடிய அதியுயர் எல்லையையும் மீறி 13700 மீற்றர்(45,000 அடி) பறந்த விமானம் இன்னொரு கட்டத்தில் மிகத் தாழ்வாகப் பறந்தது கோலாலம்பூரின் விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பதிவாகியிருக்கிறது. விமானிகளின் அறை வெளியே இருந்து திறக்க முடியாதபடி இருந்தாலும் கூட கடத்தல்காரர்கள் வன்முறையைப் பாவித்து உள்ளே நுழைந்ததைத் தொடர்ந்து அவர்களை நிலைகுலையச் செய்ய இந்த உபாயம் கைக்கொள்ளப்பாட்டிருக்கலாம். 45,000 அடி உயரத்தில் பறந்த போது பயணிகளுக்கு உயிர்வாயு தேவைப்பட்டு, உயிர்வாயு முகமூடி பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இவை 12 முதல் 15 நிமிடங்கள் வரை தான் பயன்படுத்தப்படலாம்.அத்துடன் மிக அதிக உயரத்துக்கும், மிகக் குறைவான உயரத்துக்கும் குறுகிய நேரத்தில் போய் வரும் போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழுத்தமும் பயணிகளின் உயிரைக் காவு கொண்டிருக்கலாம்.
9/11 ஒத்த தாக்குதலை நடத்துவதற்குத் திட்டம்...?
 இதுவும் மக்கள் மத்தியில் பரபரப்பாகக் கதைக்கப்பட்ட அனுமானம் தான். அதாவது 2001 ஆம் ஆண்டு அல் குவைதா தீவிரவாதிகள் மூலம்  நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது போல் இன்னொரு இடத்தில் தாக்குதல் நடத்துவதற்கு ஏதாவதொரு தீவிரவாத இயக்கத்தால் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் தான் அது. விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதையும் அதனை மறைத்து வைப்பதையும் சாத்தியக் குறைவான விடயங்கள் என்று கருதினாலும் கூட நடக்க முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் அதே சமயம் விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு மீண்டும் பறப்பதென்பது சாத்தியமே இல்லாத விடயம் என்று விமானிகளும் விமானத்துறை சார்ந்த வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள்.
இராணுவம் சுட்டு விழுத்தியதா...?      
 விமானத்தில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமையைத் தொடர்ந்து அல்லது கடத்தல்காரர்களால் விமானம் கடத்திச் செல்லப்பட்டு பாதை மாறிச் செல்லும் வழியில்  ஏதேனும் ஒரு நாட்டு இராணுவம் சுட்டு விழுத்தியிருக்கலாம்.. இது மற்ற அனுமானங்களைப் போல் சாத்தியக் குறைவான விடயம் அல்ல. தவறுதலாக என்றாலும் பயணிகள் நிறைந்த விமானத்தைச் சுட்டு விழுத்தியிருந்தால் எந்த ஒரு நாட்டு இராணுவமும் பெருமையுடன் உரிமை கோரப் போவதில்லை. ஆனாலும் அப்படிச் செய்திருந்தால் கூட அது ஒருத்தர் மட்டும் சார்ந்த தாக்குதலாக இருக்காது என்பதால் இவ்வளவு காலம் அதனை மறைத்து வைத்தல் சாத்தியமா என்பது ஒரு நியாயமான கேள்வி தான். ஒருவேளை ஏதாவது ஒரு நாடு அப்படித் தாக்குதல் நடத்தியிருந்து பின்பு ஒரு காலத்தில் தெரிய வந்தால் தாக்குதல் நடத்தியதை விட இவ்வளவு காலம் மறைத்து வைத்தது தான் பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அந்த நாடு கடும் கண்டனங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.       
(இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான தகவல்களும் படங்களும் பி.பி.சி இணையத் தளத்திலிருந்தும், டெலிகிராஃப் இணையத் தளத்திலிருந்தும்,விக்கிபீடியா கலைக்களஞ்சியத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக