வியாழன், 5 ஏப்ரல், 2012

உள்ளடக்கம்

                             வல்வை அலையோசை
                                                  உள்ளடக்கம்
 
1.யோகாசனம்
2.வல்வை நகர சபையின் கோரிக்கை
3. கேள்வி ஒன்று பதில் இரண்டு வல்வையில் வளர்ந்து வரும் இரு இளம் தொழில் முயற்சியாளர்களுடன் ஒரு பேட்டி
4.ஓடு லோலா ஓடு  
5.தொடர்கதை –சுனாமி 2004
6.சில விசேட சொற்றொடர்கள்
7.இறப்பின் பின் வாழ்வு
8.தனியுடமை வியாபாரப் பெயர்ப்பதிவு
9.மந்திரிமனை
10. 751 வழித்தட நேர அட்டவணையும்,வெளிமாவட்டங்களுக்கான இ.போ.ச சேவை நேரமும்  
250x250 Chat Live - Get Lucky

யோகாசனம்

                                                                                       யோகாசனம்
  
யோகாசனம் என்பது ஒரு புராதன விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது.அதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? விஞ்ஞானம் என்றால் என்ன?பயிற்சியின் மூலம் அல்லது படிப்பின் மூலம் பெறப்பட்ட அறிவே விஞ்ஞானம் எனப்படும் போது யோகாசனத்தை விஞ்ஞானம் என்று சொல்வதில் தவறில்லை தானே.இதன் ஆரம்பகர்த்தா யார்,எப்போது ஆரம்பிக்கப்பட்டது போன்ற முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பழைய புராண,இதிகாசங்களிலும்,சமய நூல்களிலும் விடை இல்லை.ஆயினும்  யோகப்பயிற்சிகளை முறையாகச் செய்பவர்களை யோகிகள் எனக் குறிப்பிடும் வகையில் முதலாவது யோகியாகக் கருதப்படுபவர் இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவனே.
காலத்திற்குக் காலம் யோகக்கலை எத்தனையோ முனிவர்களாலும் யோகிகளாலும்  பின்பற்றப்பட்டு வந்திருப்பதற்கான ஆதாரங்கள் புராதன நூல்களில் வாசிக்கக் கூடியதாக இருப்பது மட்டுமன்றி புராதன சிற்பங்களில் காணக்கூடியதாகவும் இருக்கிறது.இவர்கள் யோகிகளாக இருந்தாலும் கூட  குழந்தைமனதைக்  கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒளிரும் நட்சத்திரங்கள்,நெடிதுயர்ந்த மலைகள்,பெருக்கெடுத்தோடும் ஆறுகள்,பயங்கரமான மிருகங்கள்,அழகான பறவைகள்…. ஏன் சிறிய வெட்டுக்கிளிகளைக் கூட இவர்கள் ரசித்திருக்கிறார்கள்.இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.உண்மை,அஹிம்சை,நேர்மை,சுய கட்டுப்பாடு,எளிமை….இவையே இவர்களின் தாரக மந்திரமாக இருந்திருக்கிறது.
இவ்வாறாக எத்தனையோ பேர் யோகக் கலையைப் பின்பற்றினாலும் இந்த யோகப் பயிற்சிகளை தொகுத்து நெறிப்படுத்தியவராக பதஞ்சலி மா முனிவர் கருதப்படுகிறார். இவர் வாழ்ந்த காலம் கி.பி 200.இவர்  பின்வரும் மூன்று துறைகளில் மிகச் சிறந்து விளங்கினாரென பழைய இதிகாசங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிக்கின்றது.சமஸ்கிருத இலக்கணம்,ஆயுர்வேத மருத்துவம்,யோகாசனம் என்பனவே அவையாகும்.
யோகம் என்ற சொல்லுக்கு இணைத்தல்,ஒருங்கிணைத்தல் என்று பொருள்படும்.அதாவது முதலில் உடலையும் மனத்தையும் இணைத்து அதன் பின் அவ்விரண்டையும் உண்மைப்பொருளோடு ஒருங்கிணைத்தலே யோகக்கலை எனலாம். யோகக்கலையை முறையாகப் பயில்வதன் மூலம்   மூலம் நிலையான,அமைதியான,தீய எண்ணங்களில் திசை திரும்பாத மனம் உங்கள்  வசமாகும்.இப்படியான மனதோடு தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டால் மோட்சம் உங்கள் வசமாகும்.(இதெல்லாம் எங்களுக்குக்  கொஞ்சம் over தான் என்று நீங்கள் நினைக்கக் கூடும்.ஆனாலும் யோகக்கலையைப் பற்றி எழுதும்போது இதனைத் தவிர்க்க முடியாது) மோட்சமே யோகக்கலையின் இறுதி இலக்காகும்.மோட்சம் என்றால் நிறையப் பேருக்குப்  புரியாது.கொஞ்சம் இலகுவாகச் சொல்வதென்றால் சமாதி நிலை என்று சொல்லலாம்.
யோகக்கலையைக் கற்பவர்கள்  மிகவும் அர்ப்பணிப்புடனும்  கவனத்துடனும் செயற்பட வேண்டியவர்கள் என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார்.அதோடு வெற்றி தோல்வியைச் சமனாகக் கருதுபவர்களாகவும்,கோபத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும்,இரக்க உணர்ச்சி உள்ளவர்களாகவும்   ,மற்றவர்களை சந்தோஷப்படுத்தக் கூடியவர்களாகவும்,எப்போதும் மற்றவர்களில் குறை காணாமல் தன்னைத் திருத்திக் கொள்பவர்களாகவும்  இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறுகிறார். அலட்சிய மனப்பான்மை,சுயநலம்,கோபம் வெறுப்பு ,சோம்பல்,சந்தேக மனப்பான்மை,கவனமின்மை  போன்ற குணங்கள் யோகாக்கலையின் தடைகளாக அமையலாம் எனவும் இவர் குறிப்பிடுகிறார்.
பதஞ்சலி முனிவரின் “யோக சூத்திரம்” எனும் நூலில் அஷ்டாங்க யோகம் பற்றி அதாவது எட்டுப் படிகள் உள்ள வாழ்க்கை முறை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.இதில் மூன்றாவது படியே யோகாசனமாகும்.
84 லட்சம் உயிர்கள் இருப்பதாகவும்,ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் என்ற வகையில் 84 லட்சம் ஆசனங்கள் இருப்பதாகவும் அதில் 250 ஆசனங்களே பழக்கத்தில் உள்ளதாகவும் அதிலும் 18 ஆசனங்களே மிக முக்கியமானவை எனவும் அவற்றைப் பழகினாலே ஏனையவை கைகூடி வந்து விடும் எனவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதஞ்சலி முனிவர் குறிப்பிடும் அஷ்டாங்க யோகங்கள் பின் வருமாறு
1.இயமம்: இயமம் என்பது பிரபஞ்ச ஆணைகளைக் குறிக்கும்.அவ்வாணைகளுள்  முக்கியமானவை
     1.அஹிம்சை:துன்பம்,வேதனை ஏற்படுத்தாதிருத்தல்.
     2.சத்யம்:நாம் அறிந்தவற்றை அறிந்தவாறு கூறுதல் .                                           
     3.அஸ்தேயம்:களவு தவிர்த்தல்
     4.பிரம்மச்சார்யம்: சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறை
     5 .அபரிக்ரஹாம்:பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை

2.நியமம்:நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள்படும்.நெறிமுறைகள்  5 வகைப்படும்.
     1.சௌச்சம்:தூய்மை.எங்கும் தூய்மை,எதிலும் தூய்மை.
     2.சந்தோஷம்:உள்ளத்தில் மனநிறைவு
     3.தபஸ்:ஒரு செயல் அல்லது எண்ணம் நிறைவடையும் வரை சொல்,செயல்
       சிந்தனை மூன்றிலும் இருக்கும் விடா முயற்சி.
     4.ஸ்வாத்யாவம்: தன்னைத் தானே அறிதல்,சுய தேடல்.
     5.ஈஸ்வரப்ரனிதானம்:இந்த உலகிலுள்ள அனைத்துமே ஏதோவொரு அளப்பரிய
       சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம்.

3. ஆசனம்:நமது உடலை,அதிலுள்ள உறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் அசைவின்றி வைத்திருத்தல்.
4. பிராணாயாமம்:மூச்சுப் பயிற்சி
5. பிரத்தியாதாரம்:ஐம்புலன் கட்டுப்பாடு
6. தரணம்:ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் கூடிய கவனம்,
7.தியானம்:மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மைப்பொருளை நினைத்தல்
8.சமாதி :உண்மைப்பொருளோடு ஐக்கியமாதல்.
சரி,இனி விஷயத்துக்கு வருவோம்.அப்படியானால் இவ்வளவு நேரம் சொன்னதில் விஷயமே இல்லையா என்று இடக்காக நினைக்கக் கூடாது.நான் சொல்ல வந்தது மூன்றாவது அஷ்டாங்க யோகமான யோகாசனம் தான்.ஆனால் எடுத்தவுடன் மொட்டையாக யோகாசனம் என்று ஆரம்பிக்கவும் விருப்பமில்லை.யோகாசனத்தின் வரலாறு,அதன் பின்னணி  பற்றியும் சொல்ல விரும்பினேன்.(Yoga For Children என்ற ஆங்கில நூலிலிருந்தும் இந்தியாவில் வெளிவரும் தினமலர் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையிலிருந்தும் சில பகுதிகளை எடுத்திருந்தேன்.)என்னடா, இவன் O.L சமய பாடம் எடுக்கிறானா அல்லது A.L இந்து நாகரீகம் பாடம் எடுக்கிறானா? சரியான அறுவையாய் இருக்கிறதே” என்று கூட நீங்கள் நினைத்திருக்கக் கூடும்.சரி, உங்களுக்கு திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக சண்டைக்காட்சிகள் மட்டும் பார்ப்பீர்களா?.(ஏன் அடிக்கிறார்,யாருக்கு அடிக்கிறார் என்றாவது தெரிய வேண்டும் தானே) முழுப்படத்தையும் பார்ப்பீர்கள் தானே. அப்படி நினைத்துக் கொள்ளுங்களேன்.
யோகாசனம்
நமது உடலை,அதிலுள்ள உறுப்புக்களை ஒரு குறிப்பிட்ட நிலையில் அசைவின்றி வைத்திருத்தலே யோகாசனம் எனப்படுகிறது.
சில வேளைகளில் ஒரு முக்கியமான சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும்.யோகக் கலையின் மூன்றாவது படிநிலை தானே யோகாசனம்.முதலிரண்டு படிநிலைகளையும் சரியாகக் கடைப்பிடிக்காதவர்கள்(அதாவது அந்நிலைகளில் குறிப்பிடப்படும் சில தகமைகள் உங்களுக்கு இல்லை எனக் கருதுவீர்களாயின்) மூன்றாவது படி நிலையான யோகாசனத்தைப் பழகலாமா  என்ற சந்தேகம் தான் அது.நியாயமான சந்தேகம் தான்.அதற்கு நியாயமான விளக்கம் சொல்கிறேன்.சில தொழில்நிலைப் பரீட்சைகள் இருக்கின்றன.அதில் முதல் பகுதி சோதனையில் சில பாடங்கள் சித்தியெய்தாத போதும் இரண்டாவது பகுதி சோதனைக்கும் தயார் செய்து கொண்டு சித்தியெய்தாத பாடத்தையும் சேர்த்துப் படிக்கலாம்.அதனை Referred என்று சொல்வார்கள்.அல்லது பல்கலைக்கழகத்தில் செய்வதைப் போல் எடுக்கக் கூடிய சோதனைகளை எடுத்து விட்டு கடைசியாக நீங்கள் தேறாத பாடங்களை எடுத்துக் கொடுக்கலாம். அதனை Arrears என்று சொல்வார்கள்.இவற்றில் ஒன்றாக நீங்கள் இதனையும் நினைத்துக் கொள்ளலாம்.
சிலர் உடற்பயிற்சியையும் யோகாசனத்தையும் ஒன்றாக நினைப்பதுண்டு.அடிப்படையில் இரண்டுமே முழுக்க முழுக்க வித்தியாசமானவை.
உடற்பயிற்சி
யோகாசனம்
அசைவுள்ள செயற்பாடு
அசைவற்ற செயற்பாடு
சக்தி பயன்படுத்தப்படுகிறது
சக்தி சேமிக்கப்படுகிறது.
உடல் தசையமைப்பை மேம்படுத்துகிறது.
நரம்பு மண்டலத்தைப் பேணுகின்றது.
உடலைப் பணிக்குத் தயார்ப்படுத்துகின்றது.
உடலுக்கு ஓய்வளிக்கிறது.
திட உணவு அவசியம்.
திட உணவின் அவசியத்தைக் குறைக்கும்.
நோய்வாய்ப்பட்டிருப்போர் செய்ய முடியாது.
நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்.
வயதானவர்கள் செய்ய முடியாது.
வயதானவர்களும் சில ஆசனங்களைச் செய்யலாம்.
போட்டிமனப்பான்மையும் அதனால் பிணக்கும் வரலாம்.
தனக்குள் ஆழ்வதை ஊக்குவிக்கிறது.
உடலை உஷ்ணப்படுத்துகிறது
உடலைக் குளிர்விக்கிறது.
உடலைப் பேணும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
உண்மைப் பொருளை அறியும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
உடலின் புறத் தசைகளை மட்டும் இயக்குகிறது
தசைகளோடு சேர்த்து நாடி நரம்புகளையும் இயக்குகிறது.
இதயத்தின் ரத்த ஓட்டம் அதிகமாகும்.
இதயத்திற்கு ஓய்வு கிடைக்கும்.
மன அழுத்தம் அதிகமாகலாம்.
மன அழுத்தம் நீங்கும்.


அட,யோகாசனத்தில் இவ்வளவு அனுகூலங்கள்  இருக்கும் போது அதைச் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு மனநிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்களா?இனி யோகாசனத்துக்குரிய சில தேவைப்பாடுகளைச் சொல்கிறேன்.
நல்ல சுத்தமான, காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள  அறையை யோகாசனம் செய்வதற்குத் தெரிவு செய்யுங்கள்.அறையின் நிலம் உயர வித்தியாசம் இன்றி ஒரே மட்டமாக இருக்க வேண்டும்.வீட்டுக்குள்ளே செய்ய முடியாவிடின் வெளியே சமதரையுள்ள ஒரு நல்ல இடத்தைத் தெரிவு செய்யலாம்.யோகாசனம் செய்வதற்கு உங்களுக்குத் தேவையான உபகரணங்கள் ஒரு பாயும் ஒரு தடிப்பான போர்வையும் தான்.இறுக்கமில்லாத தளர்வான ஆடைகள் அணிந்திருத்தல் அவசியம். உகந்த நேரம் காலை நேரம் தான்.உங்களுக்கு அது உகந்ததல்லதாயின் மாலை நேரத்தைத் தெரிவு செய்யலாம்.உணவாயின் உட்கொண்டு இரண்டு முதல் நான்கு மணித்தியாலங்கள் இடைவெளியும்,தேநீர்,சிற்றுண்டியாயின் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளல் அவசியம்.இயலுமாயின் நீராடி காலைக்கடன் முடித்த பின் செய்தல் உசிதம்.
.உங்கள் உடல்நிலை சரியில்லாவிடின் நீங்கள் ஓய்வில் இருப்பதே நல்லது.இருப்பினும் தடிமல்,இருமல்,தலையிடி போன்ற சிறிய சுகவீனங்களாயின் யோகாசனத்தை முறையாகப் பயிற்றுவிப்பவரின் ஆலோசனையோடு செய்யலாம்.பெண்களாயின் மாதவிடாய் உள்ள நேரங்களில் தலைகீழாக நிற்கும் ஆசனங்களைத் தவிர ஏனையவற்றைச்  செய்யலாம்.சிறுவர்களுக்கு உடல் இலகுவில் வளையக் கூடியதாக இருப்பினும் சில ஆசனங்கள் செய்வதற்கான உடற்பக்குவம் வராதவர்களாகத் தான் கணிக்கப்படுகிறார்கள்.
ஆசனங்களைச் செய்யும் போது ஆழமாக மூச்சிழுக்கவோ,அல்லது மூச்சை இழுத்துப் பிடித்தவாறோ செய்ய வேண்டாம்.சாதாரணமாக மூச்சு விட்டாலே போதுமானது.யோகாசனம் செய்யும் போது மனதை அமைதியாகவும்,கவனத்தை ஒருமுகப்படுத்தியும் வைத்துக் கொள்வது சிறந்தது.
கடைசியாக மிக முக்கியமான ஒரு விடயம்.என்ன தான் நூல்களில் யோகாசனம் செய்யும் முறைகள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும்,உங்களுக்கு வரும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொண்டு பழகுவதற்கு ஒரு ஆசான் அவசியம்.கொஞ்ச நாட்களுக்காவது ஒரு ஆசானிடம் அடிப்படை ஆசனங்களையும் அவற்றைச் செய்யும் முறைகளையும் தெரிந்து கொண்டு,உங்கள் மனதில் ஒரு நம்பிக்கை  வந்த பின் தனியாகச் செய்வது நலம்.
இனி வல்வை அலையோசையின் ஒவ்வொரு வெளியீட்டிலும் ஒவ்வொரு ஆசனங்களையும் அவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும் பார்ப்போம்.     
125x125 Get Lucky

வல்வை நகர சபையின் கோரிக்கை

                             வல்வை  நகர சபையின் கோரிக்கை

வடமராட்சி வல்வெட்டித்துறைக்கென  தேசிய ரீதியில் தரம் வாய்ந்த பொது விளையாட்டரங்கம் ஒன்றை அமைப்பதற்குக் காணியை அன்பளிப்பாக அல்லது சகாய விலையில் பெற்றுக் கொள்வதற்காகப் பொது மக்களிடம் நிதி உதவியை வல்வெட்டித்துறை நகர சபை கோரியுள்ளது.
வல்வெட்டித்துறைக்கென  தேசிய ரீதியில் தரம் வாய்ந்த பொது விளையாட்டரங்கம் ஒன்று அமைக்கப் பட வேண்டும் என்ற வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் தீர்மானத்தைச் செயற்படுத்தும் வகையில்-
தற்போது நெற்கொழுவில் அமைந்துள்ள காணியை விளையாட்டரங்கத்துக்காக அன்பளிப்பாக அல்லது சகாய விலையில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவர்களும், பொது அமைப்புக்களும்,புலம் பெயர்ந்த உறவுகளும்; பிரதேச வேறுபாடுகளின்றி  இதற்கான நிலப்பரப்பைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை வழங்க முன்வருமாறு வல்வெட்டித்துறை நகர பிதா நடராஜா அனந்தராஜ் அழைப்பு விடுத்துள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையில் இவற்றைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வளம் இல்லாத நிலையில் எமது உறவுகள் இதற்குக் கைகொடுக்க முன்வருமாறும் அவர் கேட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையில் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் மட்டுமே தங்கள் நிதி உதவிகளைச் செய்யுமாறு நகரபிதா மேலும் கேட்டுள்ளார்.
அதேவேளை நகராட்சி மன்றத்தினால் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டரங்கத்தை வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்டவர்கள் மட்டுமல்லாது,வடமாகாணப் பாடசாலைகளும்,விளையாட்டுக் கழகங்களும் பயன்படுத்திப் பயன்பெற இருப்பதால், அந்தப் பிரதேசத்தில் உள்ள தமது நிலப்பரப்புக்களை எவரேனும் அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வந்தால் அவற்றை நன்றியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இது உதயன் செய்திப் பத்திரிகையில் 28.03.2012 அன்று வெளியான ஒரு செய்தி.செய்திப் பத்திரிகையின் வெட்டுத்துண்டை மட்டும் போட்டால் வாசிக்கச் சிரமமாக இருக்கும் மீண்டும் செய்தியைத் தட்டச்சுள்ளேன்.இதற்கான வங்கிக் கணக்கிலக்கம் செய்தியில் வரவில்லை.இதனை வல்வை நகர சபைத் தலைவரிடம்  பெற்றுக் கொண்டேன்.     .
வங்கிக் கிளையின் பெயர்      : இலங்கை மக்கள் வங்கி,வல்வெட்டித்துறை
கணக்கின் பெயர்                             : வல்வெட்டித்துறைப் பொது விளையாட்டரங்க நிதி
                                                                                  (Valvettiurai Urban Council(Netkolu)Public Stadium Fund)
சேமிப்புக் கணக்கு இலக்கம் :141-2-001-0-0009871
இதனை இங்கு  பிரசுரித்ததன் மூலம் தேசியத்  தரம் வாய்ந்த மைதானம் ஒன்று வல்வையில் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் வல்வை அலையோசையும் பெருமையுடன் பங்கெடுத்துக் கொள்கிறது.இதற்கான யோசனையைத் தெரிவித்த சாரூபனுக்கு எனது நன்றிகள்.
வல்வை நகர சபை விலைக்கு வாங்க எண்ணியிருக்கும் நெற்கொழுவில் அமைந்துள்ள காணி.
250x250 Chat Live - Get Lucky

கேள்வி ஒன்று பதில் இரண்டு

கேள்வி ஒன்று பதில் இரண்டு –வல்வையில் வளர்ந்து வரும் இரு இளம் தொழில் முயற்சியாளர்களுடன் ஒரு பேட்டி
சிவரட்ணம்சாரூபன்    சிவபாலசிங்கம் ஜெயகாந்த்                                                            
வல்வை நகர பிதா,அனாதைகள் ஆச்சிரம முகாமையாளர் இந்த வரிசையில் நான் மூன்றாவதாகப் பேட்டிக்குத்  தேர்ந்தெடுத்தது வல்வையில் வளர்ந்து வரும் இரு இளம் தொழில் முயற்சியாளர்களை.சாரூபன்-சந்தைப்படுத்தல் பணிப்பாளர் V2,V4,&VEx, ஜெயகாந்த்-செயற்பாட்டுப் பணிப்பாளர் V2,V4,&VEx. இவர்கள் தங்கள் நிறுவனம் மூலம் எவ்வளவு விரிவான சேவைகளை வழங்குகிறார்கள் என்பதை அவர்களின் வியாபாரப் பெயர்ப்பலகையினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இப்படியொரு நிறுவனம் வல்வெட்டித்துறை நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியினுள் இயங்கி வருவது புலம் பெயர்ந்த எமது உறவுகள்,நட்புகளுக்குத் தெரியாமல் இருக்கலாம். வெளிப் பார்வைக்குத் தெரியாமல் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியின் உட்பகுதியினுள் அமைந்திருப்பதனால் சில ஊரவர்களுக்குக் கூடத் தெரியாமலிருக்கலாம்.வல்வை அலையோசையில் பிரசுரமாகும் இந்தப் பேட்டியின் மூலம் தான் V2(பிரயாண ஒழுங்குகள்),V4(கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும்), &VEx(பொதியனுப்பும் சேவை) பற்றியெல்லாம் அறிந்து கொள்கிறீர்கள் எனில் அது எனக்கு சந்தோஷம் தான்.( “மூஞ்சூறுக்குத் தான் போக வழியைக் காணோம்.விளக்குமாற்றையும் கொண்டு போனதாம்” என்று நீங்கள் நினைக்கக் கூடாது.அதாவது வல்வை அலையோசையே பிரபலமாகவில்லையே! அதற்குள், அதில் பிரசுரமான பேட்டி வழங்கிய நிறுவனத்தை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்று நீங்கள் யோசிக்கக் கூடாது.இராமர் பாலம் கட்டிய போது அணிலும் தன்னால் முடிந்த சேவையை வழங்கியது போல, வல்வை அலையோசையால் V2,V4,VEx இற்கு முடிந்த ஒரு சேவையாக நினைத்துக் கொள்ளுங்கள்.)
  சொந்தமாகத் தொழில் முயற்சி ஆரம்பிப்பது என்பது பொதுவாக எல்லோருக்கும் ஒரு கனவு போன்றது.அதை நனவாக்கியது மட்டுமன்றி அதை துணிகரமாக நடத்திச் செல்லும் சாரூபன்,ஜெயகாந்த்  போன்றவர்களின் பேட்டி அதை வாசிப்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தையும், உந்துதலையும் நிச்சயமாக அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.அந்த உத்வேகமும்,உந்துதலும் இரட்டிப்பாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் தரப்படுகின்றன. (Double Impact?) 
  
1.உங்கள் தொழில் முயற்சிக்கான கருப்பொருள் உதயமானது எவ்வாறு?எவ்வளவு காலத்தில் அதைச் செயல்படுத்தினீர்கள்?எப்போது உங்கள் தொழில் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது?எவ்வளவு மூலதனத்துடன் உங்கள் தொழில் முயற்சியைத் தொடங்கினீர்கள்?
சாரூபன்:முதலாவது காரணம் எனது அப்பா ஒரு கடும் உழைப்பாளி.இலங்கை வங்கியில் பிரதேச பொது முகாமையாளராக வேலை செய்தவர்.அப்பா வேலைக்காகத் தன்னைக் கடுமையாக அர்ப்பணித்தாலும்,அப்பா ஓய்வு பெற்ற பின் வங்கி அவருக்குச் செய்த மரியாதையை மிகவும் குறைவாகத் தான் நினைக்கிறேன்.அவரது உழைப்புக்குக் கிடைக்காத அங்கீகாரம் தான் என்னுள் சுயமாக ஏதேனும் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கிளப்பியிருக்கிறது என்று நினைக்கிறேன்.சின்ன வயதிலிருந்தே, இன்னொருவரின் கீழ் வேலை செய்வது எனக்குப்  பிடிக்காதது இன்னொரு காரணம்.
கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்த காரணம் எனக்கு நேர்ந்த நிலைமை அடுத்தவர்களுக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தில் தான்.க. பொ.த உயர்தரத்தில் நான் கணிதத்துறையில் ஈடுபாடு இல்லாத போதும் அதைத் தேர்ந்தெடுத்த காரணம், தன் மகனை ஒரு பொறியியலாளராக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற அப்பாவின் ஆசையில் தான்.அந்தத் துறையில் ஆர்வம் இல்லாததால் பெறுபேறுகள் திருப்திகரமாக அமையவில்லை.அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்தியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பைத் தொடர நேரிட்டது.அங்கே எனக்கொரு வழிகாட்டி இல்லாததால் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிட்டது.கல்லூரியின் குறைபாடுகளைப் பற்றி கல்லூரிப் பணிப்பாளருடனும்,என்னை அந்தக் கல்லூரிக்கு அனுப்பிய முகவருடனும் கதைத்த பொது எனக்குக் கிடைத்த அவமானமும்,புறக்கணிப்புமே கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்ற ரீதியில் என்னைத் தூண்டியது எனலாம்.
பிரயாணத்துறையைத் தேர்ந்தெடுத்த காரணம்,கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்ததும், மாணவ மாணவிகளின் கல்லூரி அனுமதி காரணமாக எத்தனையோ தடவைகள் இந்தியாவிற்குப் போக நேரிட்டது.எங்களுக்குத் தெரிந்தவர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் கூட அடிக்கடி பறப்பை மேற்கொள்பவர்களாக  இருந்தார்கள்.ஆகையால் அவர்களுக்காகவும் எங்களுக்காகவும்  பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொடுக்கும் முகவர் தொழிலைச் செய்தால் என்ன எண்ணம் உருவாகக் காரணமாக இருந்தது.
2006 நடுப்பகுதியில் எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டது 2006 இன் கடைசிப்பகுதியில்.ஆக மொத்தம் ஆறு மாதங்கள்.
2006 மார்கழி மாதம் எங்கள் தொழில் முயற்சி ஆரம்பமானது.
தொழில் முயற்சி ஆரம்பித்த போது மூலதனமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனாலும் நிறையவே மூளைதனம் இருந்தது.
ஜெயகாந்த்: க.பொ.த உயர்தரம் படிக்கும் நாட்களில் நாங்கள் நான்கு நண்பர்கள் கூடிக் கதைக்கும் பொழுதுகளில் தான் சுயதொழில் முயற்சிக்கான எண்ணம் உருவானது எனலாம்.நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து, செய்தால் சுயதொழில் முயற்சி தான் என்று முடிவெடுத்தோம்.என்றாலும் அந்த நேரம் கல்வி சம்பந்தமான அல்லது பிரயாணம் சம்பந்தமான சுயதொழில் தான் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை.
2002 இல் இவ்வாறு கதைத்துக் கொண்ட பின் நான் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும், சாரூபன் உயர்கல்விக்காக இந்தியாவிற்கும்,சஞ்சய் உயர்கல்விக்காகக் கொழும்புக்கும்,கீதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் போனதால் பிரிந்து விட்டோம்.பின்பு 2006 நடுப்பகுதியில்  சாரூபனின் அக்காவின் திருமணத்தின் போது நானும் சாரூபனும் சந்தித்துக் கொண்ட போது இது பற்றி உறுதியாக முடிவெடுத்தோம்.முடிவெடுத்ததை செயற்படுத்தியது 2006 கடைசிப்பகுதியில்.அதாவது ஆறு மாதத்தில் அதை நடைமுறைப்படுத்தினோம்.
பண ரீதியாக ஒன்றுமில்லை.மன வலிமை,உடல் வலிமை என்பன தான் அந்த நேரம் எமது மூலதனமாக இருந்தன.                 
2. தொழில் முயற்சியை ஆரம்பித்த போது நீங்கள் முகம் கொடுத்த சவால்கள் என்னென்ன?எவ்வாறு அவற்றை முறியடித்தீர்கள்?ஏதேனும் சவால்கள் உங்களை முடக்கியதாகக் கருதுகிறீர்களா?
சாரூபன்:
1.பண வசதியுள்ள,படிக்க ஆர்வமுள்ள,இந்தியாவிற்குப் போய் படிப்பைத் தொடரக் கூடிய  ஆட்களைத் தேடியறிந்து ,அவர்களின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து அவர்களோடு கதைத்து அவர்களைத் திருப்திப்படுத்தி கல்லூரி அனுமதிக்கு அவர்களை உள்வாங்குவது  சிரமமான பணியாக இருந்தது.
2.நாங்கள்  பணத்தட்டுப்பாடு காரணமாக சிறிய விளம்பரங்களைப் பிரசுரித்த போது இதே துறையிலுள்ள ஏனைய நிறுவனங்கள் பெரிய விளம்பரங்களைப் பிரசுரித்திருந்தன.அதனால் அதையும் தாண்டி மாணவர்களை எங்களிடம் வர வைப்பதும் சவாலாக இருந்தது.
3.சொந்தத் தொழில் தொடங்கிய போது எங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கூட அதனை ஊக்குவிப்பதாக இல்லை.அது தவிர போது மக்களும் எங்களைக் காசு பறிக்கும் கும்பலாகத் தான் பார்த்தார்கள்.ஆகையால் அந்த உறுத்தல்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
4.கல்லூரி அனுமதியை சேவை நோக்கமாகக் கருதி  நாங்கள் முதலாவது அனுமதிக்கு முற்பணம்  வாங்காமல் விட, அந்த மாணவன் எங்களை ஏமாற்றியதும்,முதற்கோணல் முற்றும் கோணல் என்று கருதாமல் மனதை சமாளித்துக் கொண்டது கூட ஒரு சவால் தான்.
5.இதெல்லாவற்றையும் விட  வேறு கல்லூரிக்கு நாங்கள் ஆட்களைச் சேர்ப்பது தெரிந்ததும் என்னைக் கல்லூரியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது ஒரு பெரிய தாக்கமாகத் தான் இருந்தது.நான் அந்த நிறுவனத்திலிருந்து விலகுவதாகச் சொல்லி ஒருவாறாக அதைச் சமாளித்தாலும் கூட இதைத் தான் மிகப் பெரிய சவாலாகக் கருதுகிறேன்.    
ஜெயகாந்த்:இவை இரண்டு வழிகளில் வந்திருக்கின்றன
1.தொழில் ரீதியாக
2.தனிப்பட்ட ரீதியாக
தொழில் ரீதியாக: நாங்கள் தொழில் செய்வதை விரும்பாதோர் மூலம் இந்தியாவில் சாரூபன் நெருக்குதல்களுக்கு ஆளாக நேரிட்டது.அந்த நேரத்தில் வெளியே எங்கள் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டாலும் கூட எங்களுக்கு இடையேயான தொழில் ரீதியான தொடர்பு இருக்கவே செய்தது.
2010 இலும் கூட ஒரு பெண் நீங்கள் இந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டினார்.நாங்கள் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.கடைசியில் அந்த மிரட்டலும் புஸ்வாணமாகப் போய் விட்டது.
.தனிப்பட்ட ரீதியாக: நான் சொந்தத் தொழில் செய்வதில் எங்கள் குடும்பத்தில் உடன்பாடு இல்லாததால் நிறையவே எதிர்ப்பு இருந்தது.எனது நன்மைக்காகத் தான் சொல்கிறார்கள் என்பதால் நான் அதைக் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை.
3.உங்கள் போட்டியாளர்களிடமிருந்து எவ்வாறு நீங்கள் வேறுபடுகிறீர்கள்?அதாவது உங்கள் தனித்துவத்தை எவ்வாறு பேணிக் கொள்கிறீர்கள்?
சாரூபன்:எனது தொழிலை இன்னும் சிறப்பாக எவ்வாறு செய்யலாம் என்று யோசிக்கிறேனே தவிர யாரையும் நான் போட்டியாகக் கருதுவதில்லை.இதே தொழில் செய்பவர்களிடம் நல்ல விடயங்கள் இருப்பின் அதைப் பின்பற்றவும் தயங்குவதில்லை.இதே தொழில் செய்பவர்களிடம் இருந்து பின்வரும் வழிகளில் நாம் வேறுபடுகிறோம்.
1.நானும் இந்தியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்ததால்,எங்களிடம் அனுமதி பெற்றுப் போகும் மாணவர்கள் என்னென்ன பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்று அறிந்து அதற்கேற்ப அவர்களைத் தயார்ப்படுத்த முடிதல்.
2.அடிக்கடி கல்லூரிகளுக்குப் போய் கல்லூரிகளுடனான இணைப்பைப் பலப்படுத்தல்.
3.மாணவர்களின் மீது தனிப்பட்ட விசேட கவனம்.சில வேளைகளில் நாம் இந்தியா போகும் போது மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் கொடுத்து விடும் பொருட்களைக் கூடக் கொண்டு போவதுண்டு.
4.ஒரு பாடநெறிக்கு ஒரேயொரு கல்லூரியை மாத்திரம் சிபாரிசு செய்தல்.
5.எங்களிடம் ஆலோசனைக்கு வரும் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டலைக் கொடுத்தல்.
ஜெயகாந்த்:
1.உதாரணமாகக் கல்வியை எடுத்துக் கொண்டால் எங்களிடமுள்ள கல்லூரிகளை மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் திணிக்க முற்படுவதில்லை.படிக்க வருபவர்களின் கருத்தை உள்வாங்கி  அவர்கள் என்னென்ன கல்லூரிகளில் படிக்கலாம் என்று ஆலோசனை கூறுவோம்.
2.எங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எங்களிடம் உள்ள கல்லூரிகளில் அனுமதி பெறுமாறு பலவந்தப்படுத்துவதில்லை.
3.அனுமதி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மாணவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதினால் அவர்களுக்காக வாதாட நாங்கள் தயங்குவதே இல்லை.
4.மாணவர்களுக்கு சரியான வழிகாட்டலைக் கொடுப்பதோடு அவர்களின் பெற்றோர்களுடன் நாங்கள் அந்நியோன்னியமாக நடந்து கொள்வதால் பெற்றோர்கள் எங்களை முழுமையாக நம்புகின்றனர்.மாணவர்களின் தனிப்பட்ட பிரச்ச்னைகளிலும் கூட  எங்களைத் தலையிட்டு அறிவுரை கூறுமாறு  எங்களைக் கேட்டுக் கொள்கின்றனர்.
5.படிக்கவிருக்கும் துறையைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்களுக்கும்,மாணவர்களுக்கும் முரண்பாடுகள் இருக்கும் போது, படித்து முடித்த பின் இரண்டு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புக்கள் பற்றி ஒப்பிட்டு அவர்களை முடிவெடுக்குமாறு கூறுவோம்.
முதல் குழுவில் அனுமதி பெற்ற 7 பேருமே தாங்கள் தேர்ந்தெடுத்த பாடங்களில் சித்தியெய்தி கொழும்பில் நல்ல வேலையில் இருப்பதும் நாங்கள் எங்கள் தனித்துவத்தைப் பேணிக் கொள்கிறோம் என்பதற்கு அடையாளமாக நான் கருதுகிறேன்.    
    





4.எவ்வாறு உங்கள் சேவைகளுக்கான தரத்தை அதிகரித்து வியாபாரத்தில் உங்கள் நிலையை உயர்த்திக்  கொள்கிறீர்கள்?அதற்கு நீங்கள் கையாளும் திட்டங்கள் என்னென்ன?
சாரூபன்:எந்த ஒரு வியாபாரத்திற்கும் மிக முக்கியமானவர்களாக இருப்பவர்கள் அதன் வாடிக்கையாளர்கள் தான்.வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை யோசிக்காமல் அவர்களை  மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விதத்தை அறிந்து கொண்டீர்கள் என்றால் வியாபாரத்தின் நிலை உயர்வதை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.நான் யாரையும் போட்டியாகக் கருதாத போதும் நாங்கள் எங்கள் தொழில் முயற்சியை விரிவு படுத்தத் திட்டமிடும் போது,அதை நாசமாக்கும்  திட்டமொன்று கூட யாரிடமிருந்தாவது வரக் கூடும்.அத்திட்டங்களை முறியடித்து வியாபாரத்தில் உயர்வதற்கு சேவையின் தரத்தை உயர்த்திக் கொள்ளல் மிகவும் அவசியம்.  
சொந்தமாக எங்களிடம் இருக்கும் அறிவும் அனுபவமும் கொஞ்சம் தான். மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அறிவும் அனுபவமும் தான் அதிகம்.எனக்குள் எப்போதும் இருக்கும் தேடலும்,தெரிவும் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் ஆர்வமும்,(எந்த விடயத்தைச் செய்யக் கூடாது என்பதாகக் கூட இருக்கலாம்)எந்த ஒரு விடயத்தினதும் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளல்(updation),ஒரு விடயத்தைப் பல கோணங்களிலும் ஆராயும் தன்மை,இவை எல்லாவற்றையும் விட மேற்கூறிய எல்லாவற்றையும் தொழில் ரீதியாகப் பிரயோகிக்கும் தன்மை,மனதை எப்போதும் ஊக்கமாக வைத்துக் கொள்ளும் தன்மை.............இவற்றின் மூலம் சேவையின் தரத்தை அதிகரித்துக் கொள்ளும் உபாயத்தை வகுத்துக் கொள்ள முடிக்கின்றது.
ஜெயகாந்த்:கல்வித்துறையை எடுத்துக் கொண்டால்,இந்தியாவில் கல்வியை அளிக்கும் முறையிலும்,ஏனைய வசதிகளிலும் முன்னணியில் இருக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் எங்கள் தரத்தை அதிகரித்துக் கொள்ள முடிக்கின்றது.
பிரயாண அனுமதிச் சீட்டு வழங்குதல்,பொதி அனுப்பும் சேவையை வழங்குதல் போன்ற போன்ற ஒன்றோடு ஒன்றாகத் தொடர்பு பட்ட பிரதான சேவைகளையும்,விசா பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்,விமான நிலையத்திலிருந்து உரிய கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்கான பயண ஒழுங்குகள் போன்ற உப சேவைகளையும் வழங்குவதன் மூலம் ஒரு முழுமையான சேவையை  வழங்கி வியாபாரத்தில் எங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முடிக்கின்றது.  
5.உங்கள் பணியாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதற்கு அவர்களிடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன?
சாரூபன்:எடுக்கப் போகும் வேலைக்கு இவர் பொருத்தமானவரா என்று அவருடன் பேச்சுக் கொடுக்கும் போதே ஓரளவு தெரிந்து விடும்.அதன் பின்பு அவர்களிடம் அர்ப்பணிப்பும்,உண்மைத்தன்மையும் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள விரும்புவேன்.ஆனால் அதனை உடனே அறிந்து கொள்ள முடியாது என்பதால் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தை நிர்ணயித்து அதன் பின்பு தான் உங்கள் சம்பளம் நிச்சயம் செய்யப்படும் என்று கூறுவேன்.அந்தக்க் காலப்பகுதியில் சிலவேளைகளில் மிகவும் அதிகமான வேலை கொடுப்பேன்.சில சமயங்களில் வேலையே கொடுக்க மாட்டேன்.இந்த நேரங்களில் அவர்கள் செயற்படும் விதத்தைக் கொண்டு அவர்களின் உண்மைத்தன்மை,அர்ப்பணிப்பு பற்றி அறிந்து கொண்டு விடுவேன்.ஆரம்பத்தில் வேலையில் சேரும் போது எந்த வேலையையும் கேவலமாக நினைக்கக் கூடாது என்பதற்காக கூட்டுதல்,கழுவுதல்,துடைத்தல் போன்ற வேலைகளையும் செய்ய விடுவேன்.அதை அவர்கள் தரம் குறைந்த வேலையாகக் கருதுவார்களாயின் எதிர்காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருக்க மாட்டார்கள் என்றும் எனக்கும் உகந்த பணியாளர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் முடிவெடுத்து விடுவேன்.ஏனெனில் கெளரவம் பார்க்கும் தன்மை உண்மையான அர்ப்பணிப்பைக் கொண்டு வராது.எதற்கும் தயாரான ஒரு பணியாளர் எந்தவொரு நிலைமைக்கும் உயர முடியும்.அந்த எண்ணம் தானாகவே வர வேண்டியது தான் என்றாலும் அப்படியில்லை என்றால் அப்படியொரு எண்ணத்தைக் கொண்டு வர முயற்சிப்பேன்.பெற்றோர்களின் செல்வாக்கினாலும்,கெளரவத்தினாலும் நாம் வேலை எடுத்துக் கொள்ள முடிந்தாலும்,நாம் அந்த வேலையில் நிலைத்து நிற்பதற்கும்,இன்னும் உயரத்திற்குப் போவதற்கும் முயற்சி என்பது அவசியம் என்பது எனது கருத்து.
மேற்கூறிய தகுதியுடையவர்கள் என்னிடம் தொடர்ந்து வேலை செய்யலாம் .அப்படியான தகுதியுடையவர்கள் கூட, தொடர்ந்து வேலை செய்வது என்பது அவர்களின் முடிவிலேயே தங்கியுள்ளது.என்னிடம் வேலை செய்யப் பிடிக்காவிடின் அவர்களை முடிந்தளவு சந்தோஷமாக செய்ய வேண்டியதைச் செய்து அனுப்பி விடுவேன்.வேறோர் வாய்ப்பைத் தேடிப் பயணிப்பவர்களைத் தடுத்து வைப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஜெயகாந்த்:நேர்முகத் தேர்வில் நான் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு.நேர்முகத் தேர்வை சாரூபன் செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.சாரூபன் எனில் பலதரப்பட்ட விடயங்களையும்,அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் ஒரே சந்திப்பில்  கதைத்துப் பேசி முடிவெடுத்து விடுவான்.நானெனில் அவர்களை வேலைக்கு எடுத்த பின் தான் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டியிருக்கும் எனக் கூறுவேன்.ஆகையால் தான் இந்த வேலைக்கு சாரூபனே பொருத்தம் எனக் கூறுகிறேன்.கடைசியாக இன்னாரை வேலைக்கு எடுக்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு மாத்திரம் எனது கருத்தைக் கூறுவேன்.
பணியாளர்கள் என்னிடம் நின்று நிலைப்பதற்கு நான் எதிர் பார்ப்பது இரண்டே விடயங்கள் தான்.அர்ப்பணிப்பும்,நம்பகத்தன்மையும் இருந்தால், அவர்கள் விரும்பினால் இந்த நிறுவனம் இருக்கும் வரை அவர்களும் தொடர்ந்து இருக்கலாம்.     
6.உங்கள் பணியாளர்கள் உங்களின் போட்டியாளர்களாக வர மாட்டார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள்?அப்படி அவர்கள் வந்தால் அந்த நிலைமையை எப்படி சமாளிப்பீர்கள்?
சாரூபன்:.ஒரு தொழிலில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் அதே தொழிலை போட்டியாகத் தொடங்குதல் சாதாரணமானது தான்.ஏனெனில் இது நாள் வரை அந்தக் குறித்த தொழிலுக்குரிய அனுபவத்தையும்,அறிவையும் தான் அவர்கள் பெற்றிருப்பார்கள். வியாபாரத்தில் நான் நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் நான் மட்டும், நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்ற  எண்ணம் என்னிடமில்லை. எல்லோருமே சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் நான்.ஆகையால் என்னிடம் பணி புரிபவர்களுக்குக் கூட அவர்களின் தகுதிக்கேற்றவாறு பதவி உயர்வுகள் வழங்கி,ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் தனித் தொழில் ஆரம்பிக்கும் தகுதியைப் பெற்று விட்டார்கள் என்று கருதுவேனாயின் எனது தொழிலில் அடுத்த பதவி வேண்டுமா அல்லது தனித் தொழில் ஆரம்பிக்கப் போகிறீர்களா என்ற கேள்வியை அவர்களிடம் முன் வைத்து தனித் தொழில் ஆரம்பிக்க விரும்புவார்களாயின் அவர்களுக்கு என்னால் முடிந்தளவு உதவிகளைச் செய்வேன்.என்னை விடவும் சிறப்பாகச் செய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்துவேன்.ஆனால் அதற்கு முக்கியமாக, அவர்கள் என்னைப் பாதிக்காத வகையில் வேலையிலிருந்து நின்றிருக்க வேண்டும்.அதோடு அவர்கள் என்னை எதிரியாகப் பார்க்கும் வரை என்னால் அவர்களுக்கு உதவிட முடியும்.தன்னை முழுமையாக நான் வழங்கிய பதவிக்கு அர்ப்பணித்த பணியாளர்களுக்கு நான் இந்த குறைந்த பட்ச உதவியைக் கூட வழங்கா விட்டால் எப்படி?   
ஜெயகாந்த்:பணியாளர்கள் எங்கள் போட்டியாளர்களாக  வரக் கூடாது என்று நாங்கள் ஒரு போதும் யோசிப்பதில்லை.இன்னும் கூறுவதானால் அப்படியொரு நிலைமையை நான் வரவேற்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.அப்படி அவர்கள் வரும் போது எங்களிடம் கற்றுக் கொண்ட விடயங்கள்,எங்களிடம் பெற்றுக் கொண்ட பயிற்சிகள் போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதுவேன்.கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை வேண்டும் என்று கருதுபவர்கள் நாங்கள்.ஆனாலும் என்ன விடயத்துக்காக எங்களிடமிருந்து போக நினைக்கிறார்கள் என்று அறிந்து எதிர்காலத்தில் அந்த நிலைமையைத் தவிர்க்க முயற்சிப்பேன்.மற்றபடி அவர்கள் எங்களை நல்ல நோக்கத்தோடு அணுகினால் அவர்களுக்குத் தேவையான,எங்களால் இயலுமான உதவிகளைச் செய்து கொடுப்பேன்.நாங்களும் சொந்தத் தொழில் தொடங்க ஆசைப்பட்டவர்கள் தானே.ஆகவே எங்கள் பணியாளர்களுக்கும் அந்த நோக்கம் இருந்தால் நான் நிச்சயம் வரவேற்கத் தான் செய்வேன். 
7.எல்லாத் தொழில் முயற்சிகளிலும் சரிவுகளும்,தற்காலிகத் தோல்விகளும் அதைத் தொடர்ந்து வரும் மனச்சலிப்பும் சகஜமே.அதையும் தாண்டி உங்கள் தொழில் முயற்சியில் உங்களை உற்சாகமாக இருக்க வைப்பது என்ன?
சாரூபன்:வியாபாரத்திலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி.உற்ற துணை ஒன்று வேண்டுமென்று நான் கருதுகிறேன்.அனேகமானவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருப்பார்கள்.ஆனால் தொழிலிலும் அவர்கள் ஒன்றாக இருப்பது வெகு அபூர்வமாகத் தானிருக்கும்.சொந்தத் தொழில்,தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்குமே எனக்கு ஜெயகாந்த் உற்ற துணையாக  இருப்பதால் எனக்கு சலிப்பு வருவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை.நான் என்னை விட அவனை நம்புகிறேன்.அவன் தன்னை விட என்னை நம்புகிறான்.அதே போல் அவன் சொல்லாமலே அவனது தேவையைப் பூர்த்தி செய்ய நான் முயற்சிப்பேன்.அவனும் நான் சொல்லாமலே எனது தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பான்.இந்தப் பிணைப்பு இருக்கும் வரை சலிப்பு என்னை அண்டப் போவதில்லை.  
ஜெயகாந்த்:சரியாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு வெறி; செய்ய வேண்டுமென்ற ஒரு உத்வேகம்.அதுவும் கல்வித்துறையைப் பொறுத்தவரை தோல்வி என்று ஒன்றுமில்லை.ஆனாலும் கல்லூரிகள் எதிர்பார்க்கும் மாணவர் எண்ணிக்கையை சில வேளைகளில் கொடுக்க இயலாமல் இருக்கும்.அவர்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையைக் கொடுக்க இயலாமல் இருக்கிறதே என்ற குற்றவுணர்வை வேண்டுமானால் தற்காலிகத் தோல்வி எனக் கூறலாம்.சில வேளைகளில் பொறியியல் படிப்பை முடித்து விட்டு இதற்குள் இறங்கியிருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழும் போது இலேசான மனச்சலிப்பு  வருவதுண்டு.ஆனாலும் எனக்கு நானே மேலதிகாரி என்ற எண்ணமும்,நான்கு பேருக்கு வழியைக் காட்டக் கூடிய நிலைமையில் இருக்கிறேன் என்ற எண்ணமும் எனக்குள் எழும் மனச் சலிப்பைப் போக்கி விடும்.   
8.உங்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாக எதைக் கருதுகிறீர்கள்?இவ்வளவு நாட்களாக உங்களின் கடின உழைப்புக்கு அந்த அங்கீகாரம் கிடைத்ததில் திருப்தியடைகிறீர்களா?
சாரூபன்:நீங்கள் இப்போது என்னிடம்  பேட்டி எடுப்பதைத் தான் நான் சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். ஆனாலும் என்னைப் பேட்டி எடுக்குமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை என்றே நினைக்கிறேன்.என்னை விட எவ்வளவோ திறமை உள்ளவர்கள் சொந்தத் தொழிலில் நம்பிக்கை இல்லாமல் தங்கள் திறமையை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.சொந்தத் தொழில் ஆரம்பிக்காதவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது என்பதே எனது கருத்து.எனது பேட்டியை வாசிப்பவர்கள் யாரேனும் ஒருவருக்காயினும் சொந்தத் தொழில் தொடங்கும் உத்வேகம் கிடைக்குமாயின் அதனையே அங்கீகாரம் கிடைத்ததற்கான  திருப்தியாகக் கருதுவேன்.  
ஜெயகாந்த்:இரண்டு விதத்தில் எனக்குரிய அங்கீகாரம் கிடைத்ததாகக் கருதுகிறேன்.
சொந்தத் தொழில் தொடங்குவதற்கு எனது குடும்பத்திலிருந்து வந்த எதிர்ப்பு சிறிது சிறிதாக விலகியதை தனிப்பட்ட ரீதியில் எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும்.இந்தியாவிலுள்ள கல்லூரிகளுக்கு மாணவர் அனுமதி வழங்கும் வர்த்தக சேவையை நாம் திருப்தியாகச் செய்து வருவதனால் ஏனைய கல்லூரிகளும் எம்மை அணுகுவதை தொழில் ரீதியான அங்கீகாரமாகவும் நான் பார்க்கிறேன்.   
9.உங்கள் கனவு/எதிர் கால லட்சியம் என்ன?அதற்காகக் கைவசம் வைத்திருக்கும் திட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றமடைகின்றனவா?
சாரூபன்:என் கனவு மிகப் பெரியது.அதைப் பற்றி பேச ஆரம்பித்தால் நீங்கள் ஓடியே விடுவீர்கள்.அதோடு வாசிப்பவர்களுக்கும் கடுப்பாகி விடும்.அதனால் ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன்.
எதேனும் ஒரு விதத்தில் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு நான் உதவ விரும்புகிறேன்.அது சரீர உதவியாகவோ அல்லது மன ரீதியான ஆலோசனையாகவோ இருக்கலாம்.இளம் தலைமுறையினருக்குத் தேவையான கல்விச் சேவையை வழங்கி, அவர்களை எதிர் காலத்தில் ஆளுமை மிக்கவர்களாகவும்,நம்பிக்கை மிக்கவர்களாகவும்,புது விதமான கண்டுபிடிப்பை மேற்கொள்பவர்களாகவும் ஆக்குதலே எனது லட்சியமாகும்.எண்ணிலடங்கா தொழில் முயற்சிகள் இருந்தாலும் குறிப்பிட்ட  ஒரு சில தொழில்களையே எல்லோரும் நாடுகின்றனர்.அந்தப் போக்கை மாற்றி எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டும் ஒரு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன். எனது ஆலோசனைகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பது தவறு.ஆனாலும் அவற்றை நானே வெற்றிகரமாகச் செய்து காட்ட ஆசைப்படுவேன். ஏனெனில் அது வெற்றிகரமாக அமையும் போது ஏனையவரும் அவற்றைச் செய்வதற்கு ஆசைப்படுவர்.சுருக்கமாகச் சொல்வதானால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக, இருக்க ஆசைப்படுகிறேன்.அதே சமயம் “ நிறைவாகும் வரை  மறைவாக இரு” என்பதற்கேற்பவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
இவற்றைச் செய்வதற்கு நான் கைவசம் வைத்திருக்கும் திட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றமுறலாம்.ஏனெனில் மாற்றமே இல்லாதது மாற்றம் ஒன்று மட்டும் தான்.
ஜெயகாந்த்:நான் ஆகா ஓகோ என்று வாழ ஆசைப்படுபவன் இல்லை.போதுமான அளவில் உழைத்து தொழில் ரீதியாகவோ,அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ  மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ ஆசைப்படுகிறேன்.
நிச்சயமாகத் திட்டங்கள் மாற்றமடையும் என்று தான் நினைக்கிறேன்.சொந்தத் தொழில் செய்ய யோசித்த போது  மாணவர்களுக்குக் கல்லூரி அனுமதி பெற்றுக் கொடுப்பது எங்கள் எண்ணத்தில் இருக்கவில்லை.பின்பு அதனோடு தொடர்புடையதாக பயணச்சீட்டு பெற்றுக் கொடுப்பது அதற்கடுத்ததாக அதனோடு சம்பந்தப்பட்டதாக பொதியனுப்பும் சேவை என்றெல்லாம் ஆரம்பித்தாலும் கூட அவை எங்கள்  ஆரம்ப காலத் திட்டங்களில் இருக்கவில்லை.ஆகையால் எதிர்காலத்திலும் திட்டங்கள் காலத்திற்கேற்ப  மாற்றமடையலாம்.அதோடு இன்னின்ன தொழில்கள் தான் செய்வது என்று எங்களை ஒரு வரையறைக்குட்படுத்திக் கொள்வது இல்லை என்பதால் நிறைய மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
10.உங்கள் முயற்சியை  ஆரம்பத்திலிருந்தே தொடங்குவதாக வைத்துக் கொண்டால் அதாவது மூலதனம்,வியாபாரச் சொத்துக்கள்,வியாபாரத் தொடர்புகள் ஒன்றுமே இல்லாமல் உங்கள் அறிவையும் அனுபவத்தையும்  மட்டும் கொண்டு தொழில் முயற்சியை ஆரம்பிப்பது சாத்தியமா?
சாரூபன்: அது சாத்தியம் தான்.நான் வியாபாரம் சம்பந்தமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியையும், இந்த முயற்சி சரி வராவிடின் சமாளித்துக் கொள்வது எப்படி,அடுத்த முயற்சியை  தொடங்குவது எப்படி  என்ற முன்யோசனையுடன் தான் எடுத்து வைக்கிறேன்.அதை விட முக்கியமான விடயம் தன்னம்பிக்கை..என்ன தான் நடந்தாலும் பழைய நிலைமைக்கோ அல்லது பழைய நிலைமையை விட முன்னேற்றமான நிலைமைக்கோ வந்து விடுவேன் என்ற நம்பிக்கை. எல்லாச் சொத்துக்களும் போனாலும் இந்தத் தொழிலில் பெற்ற பெயரைக் கொண்டு மீண்டும் வியாபார முயற்சியை ஆரம்பிப்பது சாத்தியமே.அப்படி வியாபாரத்தில் எனது நன்மதிப்பு போனாலும் கூட எனது பெயரைச் சொல்லித் தேடி  வரும் ஒன்றிரண்டு பேராவது இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.எனது அப்பாவும் கூட முதலில் எனது தொழிலை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் கூட இப்போது அதனை அங்கீகரித்து விட்டார்.நான் வியாபாரத்தில் தோற்று விட்டாலும் கூட இந்த அங்கீகரிப்புத் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அந்த நம்பிக்கை இருக்கும் வரையிலும் விழுந்த எனக்கு மீண்டும் எழுவதற்கு அதிக அவகாசம் தேவைப்படப் போவதில்லை.இந்த தொழில் முயற்சியானது நியாயமில்லாத வகையில் என்னிடமிருந்து பறிக்கப் பட்டாலும் கூட  நான் அதனை எண்ணிச் சோர்ந்து போகப் போவதில்லை.மாறாக அது இன்னும் உயரத்துக்குப் போவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும்.
ஜெயகாந்த்:யதார்த்தமாக யோசித்தால் இதற்கு ஆம் என்ற பதிலும் அளிக்கலாம்.,இல்லை என்ற பதிலும் அளிக்கலாம்.
நாங்கள் இதுநாள் வரை இந்தத் தொழிலில் பெற்ற அனுபவம் அதாவது எப்படி ஒரு கல்லூரியை அணுகுவது,கதைப்பது,மாணவர்களின் தேவையை அறிந்து உரிய கல்லூரியை சிபாரிசு செய்வது என்று எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆம் என்ற பதிலை தயக்கமில்லாமல் வழங்கலாம் என்று ஊக்கப்படுத்துகின்றது.இந்தத் தொழிலை ஆரம்பித்த போது இந்தியாவில் பொறியியல் படிப்புக்கு உயர்தரத்தில் கணிதத் துறையில் சித்தியெய்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் மாணவர்களை உள்வாங்கினோம்.ஆனால் இப்போதோ அந்த நிபந்தனை இல்லாமலே மாணவர்களை எடுக்கிறோம்.இது நாள் வரையிலும் நாம் பெற்ற அனுபவம் தான் இதற்குக் காரணம்.
எங்கள் சேவையில் திருப்தியின்மை காரணமாக,எங்கள் நிறுவனம் நன்மதிப்பிழந்து நிறுத்தப்பட்டிருந்தாலோ  அல்லது எங்களால் விரும்பி நிறுத்தப்பட்டிருந்தாலோ மீண்டும் நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.
தங்கள் மும்முரமான வேலைகளுக்கு மத்தியிலும் எனது பேட்டிக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்த சாரூபன்,ஜெயகாந்த் இருவருக்கும் வல்வை அலையோசையின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.
பேட்டி:ஆ.தீபன்