சேது என்றால் அணை அல்லது பாலம். பந்தம் என்றால்
தொடர்பு. பாரதியாரின் “சிந்து நதியின்மிசை நிலவினிலே” என்ற பாடலில் சிங்களத்
தீவினிற்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற வரிகள்
ஞாபகத்துக்கு வருகிறதா? கழுத்தையும் முழங்காலையும்
இடைப்பட்ட பகுதிகளான நெஞ்சு, வயிறு, இடுப்பு
ஆகியவற்றின் பாலத்தை நினைவூட்டுவதனால் இந்த ஆசனத்துக்கு இப்படியொரு பெயர்
வந்திருக்கலாம். இதனை அரைச்சக்கர ஆசனமென்றும் அழைப்பர்.( ஆனால் காற் சக்கரத்தின்
தோற்றத்தைத் தான் ஒத்திருக்கிறது) மேலே
படத்திலுள்ள முறையை விட இன்னும் இரண்டு விதமாக சேது பந்த சர்வாங்காசனத்தைச்
செய்யலாம். இதே முறையில் கைகளைக் கோர்த்துக் கொள்ளலாம். அல்லது கைகளைத்
தாங்கியாகப் பாவித்து இடுப்பைப் பிடித்துக் கொள்ளலாம். இந்த நிலையிலிருந்து சற்று
மாறி இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக் கொண்டு இரு கால்களையும் மேலே வானத்தை நோக்கி உயர்த்தினால்
அது சர்வாங்காசனமாகும்.
சரி, இனி இதனைச்
செய்யும் முறையைப் பார்ப்போம். சாதாரணமாக மேல்நோக்கியவாறே படுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முழங்கால்களை
மடித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தலையை அப்படியே வைத்துக் கொண்டு நெஞ்சு, வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளை நிலத்தை விட்டுத்
தூக்க வேண்டும். இறுதியாக கைகளை அப்படியே கால்கள் இருக்கும் பக்கம் தரைக்குச்
சமாந்திரமாக நீட்டி, சாதாரணமாக வைத்துக்கொள்ள வேண்டும்
அல்லது கைகளைக் கோர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கைகளைத் தாங்கியாகப் பாவித்து
இடுப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தான். சிலருக்குக் கழுத்துக்கும்
முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியைத் தூக்குவது பெரும்பாடாக இருக்கும்.
அப்படியானவர்கள் யாராவது ஒரு ஆளை வைத்துத் தூக்கச் சொன்னால் என்ன என்று நினைக்கக்
கூடும்.. கொஞ்சமாவது நீங்கள் அந்த நபருக்கு உங்கள் உடலை உயர்த்திக் கொடுக்கா
விட்டால் அந்த நபர் முகம் குப்புற உங்கள் மேல் விழ வேண்டி வரும் விழுந்தால்
நீங்கள் தரையோடு தரையாக நசுங்க வேண்டி வரும். நிலைமை சற்றுத் தீவிரமானால் அடுத்த
கட்டம் சவாசனம் தான். ஆகையால் தனித்துச் செய்வதே உசிதம்.(சும்மா உங்களைப்
பயமுறுத்தினேன்.) உண்மையில் இது மிகவும் இலகுவான ஆசனமாகும். நீங்கள்
நித்திரையிலிருந்து எழும் போதே இதைச் செய்து கொண்டே எழும்பலாம்.( ‘செய்யலாம் ..... சரி. எழும்பலாமா?’ என்று கேட்டால், ‘உங்கள் உடல்
நிலையைப் பொறுத்துத் தான்’ என்று தான் பதில் சொல்ல வேண்டும்)
இந்த ஆசனத்தைச் செய்தால் இடுப்புப் பிடிப்பு
நீங்கும். (மற்றவர்களின் இடுப்பின் மீது உள்ள பிடிப்பைச் சொல்லவில்லை) இடுப்புப்
பலம் பெறும். மேலும் முள்ளந்தண்டின் இயக்கத்தை இலகுவாக்குவதற்கும், கேடயச் சுரப்பியைத் தூண்டுவதற்கும் இந்த ஆசனம் உதவி செய்கிறது என்று ஒரு
புத்தகத்தில் படித்திருக்கிறேன். கேடயச் சுரப்பியின்(Thyroid
gland) தொழிற்பாடுகள் என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில்
எங்கள் உடலின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நெறிப்படுத்துவதுடன் கல்சியம்
சமநிலையைப் பேண உதவும் என்று இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக