திங்கள், 14 ஏப்ரல், 2014

சதுரங்கத்தை ஒரு குழுவாக விளையாடுதல் சாத்தியமா?


அண்மையில் எனது மாமா ஒருவருடனும் அத்தான் ஒருவருடனும் கதைத்துக்கொண்டிருந்தேன். இப்போது பெரும்பாலான பாடசாலைகளில் சதுரங்க விளையாட்டுப்பயிற்சிகள், போட்டிகள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன என்ற ரீதியில்  கதை போய்க்கொண்டிருந்த போது தான்  அந்த எண்ணம் எனக்கு உதயமானது. இதை நான் எனது மாமாவிடமும் அத்தானிடமும் சொல்ல அது முடியவே முடியாது என்று அடித்துக் கூறி விட்டார்கள். தலையங்கத்தை வாசித்ததும் அனேகமானவர்கள் நான் அவர்களுக்கு என்ன சொன்னேன்,உங்களுக்கு என்ன சொல்லப்போகிறேன் என்று யூகித்திருப்பீர்கள்.

சரி ,யூகிக்காதவர்களுக்கு......நீங்கள் சதுரங்கம் விளையாடியிருக்கிறீர்களா? இதற்கு உங்களில் அனேகம் பேர் ஆமாம் என்று தான் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒன்றிரண்டு விதிவிலக்கானவர்களும் கூட அதன்  விதிமுறைகள்,காய்களை நகர்த்தும் முறைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

சரி எனக்கு ஏற்பட்ட எண்ணத்தை அல்லது சந்தேகத்தைச் சொல்கிறேன். குழுவாக சதுரங்கம் விளையாடுதல் சாத்தியமா? அதாவது சோடி சோடியாக அல்ல. இரு மூளைகள் தானே சதுரங்கத்தில் மோதிக்கொள்ளும். அதற்குப் பதிலாக ஒரு பக்கம் பதினாறு மூளைகளும், அடுத்த பக்கம் பதினாறு மூளைகளும் மோதிக்கொள்ளுதல் சாத்தியமா? அதாவது காய்களுக்குப் பதிலாக மனிதர்கள், கட்டங்களில் இருந்து நகர்ந்து தங்களுக்குள் மோதிக்கொள்ளுதல் சாத்தியமா?

சிறு வயதில் எனது நண்பன் சந்திரகுமாரிடம் வாங்கிப்படித்த சித்திரக்கதைகளுள் சதுரங்க வெறியன் என்று ஒரு புத்தகம் படித்ததாக ஞாபகம்.அதில் Spider என்றழைக்கப்படும் சிலந்தி மன்னனும் அவனது எதிரி ஒருவனும் தங்கள் படைவீரர்களை சதுரங்க விளையாட்டில் ஈடுபடுத்தி மோதிக்கொள்வது எனது ஞாபகத்துக்கு வருகிறது.
இதை நடைமுறைப்படுத்தப் புறப்பட்டால் எக்கச்சக்கமான பிரச்சனைகள் வருமென்பது திண்ணம். ஆயினும் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தீர்வும் இருக்குமென்பது எனது எண்ணம்.
உதாரணத்துக்கு யார் நகர்வது என்று தீர்மானிப்பது யார்? ஒவ்வொருத்தரும் தம்பாட்டில் நகரப் புறப்பட்டால் சில சமயங்களில் ஒரே சமயத்தில் பல நகர்வுகள் வருமே?  சதுரங்க விளையாட்டில் மிகவும் திறமையானவர்களைக் கொண்டு விளையாடும் போது அதாவது தங்களின் தவறான ஒரு நகர்வே விளையாட்டின் போக்கை மாற்றிவிடும் என்று அவர்கள் உணர்ந்திருக்கும் பட்சத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கப்போவதில்லை என நான் நினைக்கிறேன்.


அப்படியில்லாமல் எல்லோரையும் ராஜாவோ அல்லது ராணியோ கட்டுப்படுத்துவதாக வைத்துக்கொள்ளலாம். அல்லது வெளியிலிருந்து ஒருவர் அனைவரையும் இயக்குவதாகவும் வைத்துக்கொள்ளலாம்.

இதை வாசிப்பவர்கள், இதில் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன, என்னென்ன அசாத்தியங்கள் இருக்கின்றன அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன என்று உங்கள் மனதில் தோன்றும் பெறுமதியான எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக