திங்கள், 14 ஏப்ரல், 2014

சுப்த வஜ்ராசனம்

 


சுப்த என்றால் மல்லாந்து படுத்தல் என்று பொருள்படும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். அதாவது இந்த ஆசனத்தில் இருக்கும் போது கிடையாக வைக்கப்பட வைரம் போல் தோன்றுவதால் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் எய்த அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்து அவர் அம்புப்படுக்கையில் சுப்த வஜ்ராசனத்திலேயே 59 நாட்கள் இருந்ததாகவும்  பாண்டவர்களும் கௌரவர்களும் அந்த அம்புகளை அகற்ற முனைந்த போது பீஷ்மர் அவர்களை,அதனைச் செய்ய விடாமல் தடுத்து இந்த நிலையில் மரணம் எய்துவது ஒரு சுத்த வீரனுக்கு அழகு என்று கூறியதாகவும்  புராணங்கள் கூறுகின்றன. தான் நினைத்த போது தனது உயிரைப் போக்கிக் கொள்ளும் ஆற்றல் பீஷ்மரிடம் இருந்ததால் மகாபாரதப் போருக்குத் தேவையான ஆலோசனைகளை  பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வழங்கிய பின்னரே உயிரைப் போக்கிக் கொண்டார் என்றும் புராணங்கள் மேலும் கூறுகின்றன.

செய்யும் முறை

கடைசியாக வெளி வந்த “வல்வை அலையோசை”யில் வஜ்ராசனம் பற்றிப் பார்த்திருந்தோம்.அதாவது பாதங்களின் மேற்பகுதி தரையில் படுமாறு, முழங்காலிட்டபடி அமர்ந்திருப்பது வஜ்ராசனம். அப்படியே பின்னுக்குச் சரிந்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டோ அல்லது கைகளை முடிந்த அளவு பின்னால் நீட்டிய நிலையில் படுத்திருப்பது சுப்த வஜ்ராசனம் எனப்படும். சாயும் போது வெளி மூச்சும் நிமிரும் போது உள் மூச்சும் வாங்குதல் சிறப்பு. கழுத்துப் பிடிப்புள்ளவர்கள், மூட்டுப் பிடிப்புள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.


இதன் நன்மைகள்
1.   தொடை, இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதையைக் கொழுப்பைக் குறைக்கும்.
2.   கூன் முதுகு நிமிரும்.
3.   வயிறு,இடுப்பு என்பன நன்கு நீட்டப்பட்டு உரம் பெறும்.
4.   வாயுத்தொல்லை,மலச்சிக்கலுக்கு நல்ல ஆசனம்.
கால்களை மடக்கி அமர்ந்து பின்னால்  முழுமையாகச் சரிய முடியாதவர்கள், கைகளை ஊன்றி அல்லது முழங்கையை ஊன்றி படிப்படியாகச் செய்து பார்க்கலாம்.

 
மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்ய வேண்டாம். பின்பு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி கதையாகி விடும். “ஏதோ கொஞ்சம் சள்ளையாக இருந்தாலும் கூட ஒரு நோவும் இல்லாமல் இருந்தேன். இந்தப் பாவியினுடைய கதையைக் கேட்டு,சள்ளையைக் குறைப்பதற்காக இந்த யோகாசனத்தைச் செய்யப் போய் இப்படியாகி விட்டேன்” என்றோ அல்லது “எப்படி இருந்த நான் இப்படியாகி விட்டேன்” என்றோ வருந்தும்படி இல்லாமல் முயற்சி செய்வது உங்கள் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக