திங்கள், 14 ஏப்ரல், 2014

தொண்டைமானாற்றுக் கழிமுகப் பகுதி


நீங்கள் கடற்கரையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆற்றங்கரையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். இயற்கையழகு கொஞ்சும் இடங்களைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த மூன்றையும் ஒன்று சேரப் பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா? அட்டகாசமாக  இருக்கும். பார்க்கிறீர்களா? பார்க்கிறீர்களா? பார்க்கிறீர்களா?(சிங்கம் punch dialog இன் பாதிப்பு)


அச்சுவேலியிலிருந்து தொண்டைமானாறு வரும் போது தொண்டைமானாற்றுப் பாலத்தின் இடப்பக்கமாகவும், தொண்டைமானாற்றிலிருந்து அச்சுவேலி போகும் போது தொண்டைமானாற்றுப் பாலத்தின் வலப்பக்கமும் பார்த்திருக்கிறீர்களா?அது தான் தொண்டைமானாற்றுக் கழிமுகப் பகுதி அல்லது ஆற்று முகப் பகுதி. கிட்டத்தட்ட 250 மீற்றர் அல்லது 300 மீற்றர் ஆற்றின் நீரோட்டத்தையும் அதன் பின்பு கடலையும் காணலாம். மாரி காலங்களில் மட்டுமே ஆற்று நீர் கடலுடன் கலக்கிறது.


ஆம். அதாவது வெய்யில் காலங்களில் கடல் கணவனுடன் ஊடல் கொண்டு தள்ளி நிற்கும் ஆற்று மனைவி மழை காலங்களில் ஆவலோடு ஓடி வந்து கடல் கணவனை ஆரத் தழுவிக் கொள்கிறாள். அப்போது சற்று மேட்டுப்பாங்கான ஒரு சின்னப் பகுதி மட்டுமே தீவு போல் இருக்க சுற்றிலும் ஆற்று நீர் கடலை நோக்கிப் பாய்கிறது. மழை மிக அதிகமாகப் பெய்யும் காலத்தில் அந்த மேட்டுப்பகுதியையும் காணக்கிடைக்காது.

ஆனால் கடந்த வருடம் மழை மிகக் குறைவாதலாலும், அத்துடன் தொண்டைமானாற்றின் நிரந்தரமான பாலம் அமைக்கப்படுவதற்கு முன்னர் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த இரும்புப்பாலம் பெயர்த்தெடுக்கப்பட்ட போது உடைந்து ஆற்றுக்குள் விழுந்த கட்டிடச் சிதைவுகளாலும் கடந்த மாரியில் கூட ஆற்று மனைவி கடல் கணவனுடன் ஊடலுடன் தான் இருந்திருக்கிறாள். இனி எப்போது கூடல் நிகழப் போகிறதோ தெரியவில்லை.

தொண்டைமானாறு சந்தியிலிருந்து வல்வெட்டித்துறை நோக்கி வரும் பிரதான பாதையில் 200 மீற்றருக்குள் வரும் எல்லா குச்சு ஒழுங்கைகள் மூலமாகவும் இந்த கழிமுகப் பகுதியை அடையலாம். மனதைக் கவரும் மனோரம்யமான இடம். கசூரினா,சாட்டி போன்ற சுற்றுலாப்பயணிகள் அதிகம் போய்வரும் இடங்களை விட அழகாக இருந்தாலும் கூட இது பிற ஊர் ஆட்களால் அதிகமாக அறியப்படாத பகுதியாக இருப்பது ஆச்சரியம் தான்.

பிரதான பாதையிலிருந்து 50 மீற்றருக்குள் இருந்தாலும் நெருக்கமான மக்கள் குடியிருப்புக்கள் இந்த இடத்தை மறைத்து இருப்பது தான் இது மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்படாத பகுதியாக இருப்பதற்குரிய காரணமாக இருக்கக் கூடும். அதுவும் நல்லதற்குத் தான் .இல்லா விட்டால் இந்தப் பிரதேசமும் கசூரினா,சாடி போன்று பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குப்பைகள் நிறைந்து மாசடைந்து போயிருக்கும்.

வழக்கமாக நாங்கள் கடற்கரைக்குப் போனால் ஒரு பக்கம் கடலும் மூன்று பக்கம் நிலப்பகுதியும் இருக்கும். இங்கே எதிர்மாறாக ஒரு பக்கம் நிலப்பகுதியும் இரண்டு பக்கம் கடலும் ஒரு பக்கம் ஆறும் இருப்பது கண் கொள்ளாக் காட்சி. அங்கே நடமாடுபவர்கள், மீனவர்களின் கால்கள் அடிக்கடி படும் இடங்களைத் தவிர ஏனைய கடற்கரை மண்ணுள்ள பகுதிகளில்  ஒற்றுமையின் உயர்வுக்கு உவமானமாகக் கூறப்படும் அடம்பன் கொடிகள் திரண்டு மிடுக்காகக் காணப்படுகின்றன.


ஆங்காங்கே ஒன்றிரண்டு, பெரும்பாலும் அந்தப் பகுதியிலிருந்தே வந்த குடும்பங்கள், ஆற்றங்கரைப் பக்கமாக விளையாடிக்கொண்டிருக்கும் சில சிறுவர், சிறுமிகளைத் தவிர வேறு பொழுது போக்கிற்காக வந்த ஆட்கள் அங்கு பெரும்பாலும் தென்பட மாட்டார்கள். ஆனால்  தொழிலுக்காக அல்லது வயிற்றுப்பாட்டிற்காக இடுப்பளவு கடல் நீரில் நின்று கொண்டு கரைவலை வீசி மீன் பிடிக்கும்  ஏழெட்டு மீனவர்களையும்,மீன் அதிகமாக மாட்டினால் கட்டு மரத்தைக் தள்ளிக் கொண்டு போய் மீன் ஏற்றி வரக் கரையில் தயாராக இருக்கும் ஒன்றிரண்டு மீனவர்களையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

 
மீன்பிடித்தொழிலைத் தவிர ஆற்றுநீர் வெள்ளம் மேவிப் பாய்ந்த போது அங்கு குறிப்பிடத்தக்க அளவு நன்னீர் றால் வளர்ப்புத் தொழிலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அங்கிருந்த மீனவர்கள் மூலம் அறியக்கிடைத்தது.    
இயற்கையாகவே எங்கள் கடற்கரைப்பகுதிகளில்,அலையின் சீற்றத்தைக் குறைப்பதற்காகக் காணப்படும் முருகைக்கற்களை இந்தக் குறிப்பிட்ட பகுதியில் காண முடியாது. அது ஒரு விதத்தில் ஆபத்துத் தான் என்றாலும், சாதாரணமாக நீந்தக் கூடியவர்களுக்கு இந்த அம்சம் அனுகூலம் தான். ஏனெனில் எங்கள் கடற்கரைகளில் நீந்தத் தொடங்குவதற்கு முன் சற்றுத்தூரம் நடந்து கொண்டு போவதற்கிடையிலேயே எங்கள் பாதங்களைப் பாறைகள் பதம் பார்த்து விடும் வாய்ப்புக்கள் அதிகம். இங்கே அந்த ஆபத்து இல்லை. பாறைகள் தான் இல்லையே தவிர, பொதுவாகக் கடற்கரைகளில் காணப்படும் சிப்பி, சோகி, ஊரிக்கற்கள் என்பன  கால்களை உறுத்தும் அளவுக்கு குறிப்பிட்டளவு தூரம் கடலில் பரவிக் காணப்படுகின்றன. ஆற்றின் நீரோட்டம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அக்கரை என்று தொண்டைமானாற்று மக்களால் அழைக்கப்படும் தொண்டைமானாற்றுப் பாலம் தாண்டிய பிரதேசத்தில் முகாம் அமைத்து வசித்து வந்த ராணுவத்தினர் இந்த வருட மாசி மாத ஆரம்பத்தில் அந்த இடத்தை விட்டு நீங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு அண்மைக் காலத்தில் மிகவும் மகிழ்ச்சியைத் தந்ததொரு விடயமாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். இக்கரைப் பகுதியில் தற்காலிக வீடுகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்கள் மீண்டும் அக்கரைப் பகுதியில் தங்கள் சொந்தக் காணிகளில் தற்காலிகமாகக் கொட்டகைகள் அமைத்துக் கொண்டு தங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்தப் பகுதியில் கரை வலை வீசி மீன் பிடிப்பதும் அவர்கள் தான்.

கடைசியாக இன்னும் ஒரு புராண கால சுவாரசியமான தகவல்.முதலாம் குலோதுங்க  சோழனின் காலத்தில் (கி.பி 1070-1120) அவனது தளபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான் இலங்கை மீது படையெடுத்து வந்து இலங்கையை வென்றதாகவும், இவன் யாழ்பாணத்தில் கரணவாய் என்னும் இடத்தில் உப்பு தேவைக்கு அதிகமாக விளைந்து வீணாவதைக் கண்டு இவற்றை சோழ நாட்டுக்கு அனுப்ப முயற்சி எடுத்ததாகவும்  அதன் பிரகாரமே அந்தக் காலத்திற்கும் முற்பட்ட தொன்மை வாய்ந்த வல்லி நதியினை(வல்லி நதி ஓடிய வல்லிப் பெருவெளியே இப்போது வல்லை வெளி என்று அழைக்கப்படுகின்றது) இன்னும் வெட்டி இன்னும் நீளமாக்கி கடலுடன் இணைத்தான் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக கடற்காற்று மிகவும் உக்கிரமாக வீசும் காலங்களில் கூட அவனது உப்பேற்றும் மரக்கலங்கள் பாதுகாப்பாக தொண்டைமானாற்றுப் பகுதியில் ஒதுங்கி நிற்க முடிந்தது.( கடலதை நாங்கள் வெல்வோம் என்று ஒரு காலத்தில் எம்மால் அடிக்கடி முணுமுணுக்கப்பட்ட பாடலில் வரும் கடாரம்(மலேசியா) வென்ற சோழன் குலோதுங்க சோழன் அல்ல ராஜேந்திர சோழன் என்பது உங்களுக்கு ஒரு உதிரித் தகவல்.)  
இந்தத் தகவல் ஞாபகம் வந்த போது, இந்த இடங்களிலெல்லாம் கருணாகரத் தொண்டைமான் மற்றும் ஏனைய சோழர்களின் பாதங்கள் பட்டிருக்கும் என்று நினைத்த போது என்னுள் லேசான ஒரு சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்புடனே அந்த இடத்தை விட்டகன்றேன்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக