திங்கள், 14 ஏப்ரல், 2014

பையின் வாழ்க்கை –Life Of Pi




கனடாவில் வாழும் ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த போது நிகழ்ந்த சம்பவத்தை எழுத்தாளர் ஒருவருக்கு விபரிப்பதாகக் கதை ஆரம்பிக்கிறது.

சிறு வயது முதலே கடவுள் யார் என்ற தேடலை உடைய பை எனப்படும் பிஸ்ஸின் என்ற சிறுவன் தனது அம்மா,அப்பா,அண்ணாவுடன் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறான். அவனது அப்பா பாண்டிச்சேரியில் சிறிய அளவிலான ஒரு மிருகக்காட்சி சாலையை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு நல்ல விடயத்தைக் காணும் பை எல்லா மதங்களையும் தனது வாழ்வில் பின்பற்றத் தொடங்குகிறான். மாமிச உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளையே உட்கொள்கிறான்.

ஒரு நாள் பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்கள் எல்லாவற்றையும்  ஒரு சிறிய கப்பலில் ஏற்றிக் கொண்டு கனடாவுக்குக் குடிபெயர்கிறார்கள். கப்பலில் உள்ள சமையல்காரன் அந்தக் குடும்பத்தின் மீது துவேஷத்தைக் காட்டுகிறான். இன்னொரு சீன நாட்டுக்காரன் அந்தக் குடும்பத்தில் குறிப்பாக பையின் மீது அன்பையும் நட்பையும் காட்டுகிறான்.

இவ்வாறாக இருக்க ஒரு நாள் இடி மழையுடன் மாறத் தொடங்கும் வானிலை சூறாவளி என்ற உச்சக் கட்டத்தை அடைகிறது. பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் கப்பலின் கீழ்த்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க பை மட்டும் சூராவளியைப் பார்த்து ரசிக்க மேல் தளத்துக்கு வார அந்த சமயம் பார்த்து ஒரு ராட்சச அலை அந்தச் சிறிய கப்பலைப் புரட்டிப் போட்டு விடுகின்றது.அந்த அனர்த்தத்துக்குப் பையின் குடும்பத்தவர்கள் அனைவரும் பலியாகி விடுகின்றனர். பை மட்டும் ஒரு சிறிய படகில் தப்பிக்கொண்டு விட அவனோடு சேர்ந்து கொண்டு ஒரு காயமடைந்த வரிக்குதிரையும்,ஒரு குரங்கும் ஒரு ஓநாயும்(ஓநாய்ப்புலி?) கடைசி நேரத்தில் அவனோடு சேர்ந்து தொற்றிக் கொள்கின்றன.


கடலின் ஆக்ரோஷம் தணிந்த பின் ஓநாய் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்குகிறது.முதலில், காயமடைந்த வரிக்குதிரையையும் பின்பு குரங்கையும் கடித்துக் கொல்கிறது. ஓநாய் பை மீது பாய முற்பட தரப்பாளுக்கு அடியில் படுத்துக் கிடக்கும் புலி பாய்ந்து ஓநாயைக் கொல்கிறது. அப்போது தான் புலி அந்தப் படகில் இருப்பதே தெரிய வருகிறது.
இப்போது அந்தப் படகில் பையும் புலியும் மட்டும் தான். இறந்து கிடக்கும் ஒவ்வொரு மிருகமாகச் சாப்பிட்டு முடித்து விட்டு புலி ஒரு கட்டத்தில் பை மீது பாய முற்பட கடலில் குதித்து விடும்  பை, கடலில் மிதக்கும் மரங்களைச் சேர்த்து ஒரு மிதவை தயாரித்துக் கொண்டு அதைப் படகோடு இணைத்துக் கொண்டு அதிலேயே தங்கி விடுகிறான். இடைக்கிடை  புலியின் கவனம் வேறெங்காவது திரும்பியிருக்கும் அல்லது புலி தூங்கும் கணங்களில் அந்தப் படகுக்குப் போய் தனக்குத் தேவையான உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொள்கிறான். மாமிச உணவு இல்லாவிட்டால் தன்னை வேட்டையாடிவிடுமென்ற பயத்தில் புலிக்கு மீன் பிடித்துக் கொடுக்கிறான்.

ஒரு நாள் ஒரு ராட்சசத் திமிங்கிலத்தின் பாய்ச்சலில் படகில் இருந்த  எல்லா உணவுகளுமே கடலில் விழுந்து விடுகின்றன. வேறு வழியில்லாமல் பையும் மீன் பிடித்துச் சாப்பிடத் தொடங்குகிறான். மிதவையில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாகப் புலியைப் பழக்கிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டதும் படகிலேயே தங்கி விடுகிறான்.  
வினாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி,மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பரந்து கிடக்கும் கடலில் ஒரு சிறிய படைகையேனும் காணாமல் சில நாட்களாக மீன்களும் ஒன்றும் பிடிபடாமல் பசி மயக்கத்தின் உச்சத்தில் மரணத்தை வரவேற்கத் தொடங்கும் தருவாயில் ஒரு நாள் ஒரு தீவை அடைகிறார்கள். அங்கே அவர்களுக்குத் தேவையான கிழங்கு வகைகள்,நல்ல தண்ணீர் எல்லாமே கிடைக்கின்றன. ஆனால் இரவு வேளைகளில் நல்ல தண்ணீர் இரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு விஷமாகி விடுவதுடன், அங்கே உள்ள தாவரங்களும் மாமிச பட்சணிகள் ஆகி விடுகின்றன என்பது தெரிய வந்ததும் அந்தத் தீவை விட்டு பை ஒடித்தப்பி படகில் ஏறிக்கொள்ள புலியும் கூடவே ஏறிக் கொள்கிறது  

இன்னும் சில மாதங்களுக்குப் பயணம் நீடிக்கிறது. கடைசியாக 227 நாட்களின் பின் ஒரு வழியாக கரீபியன் தீவொன்றில் கரை ஒதுங்குகிறார்கள். கரையில் களைத்து விழும் பை ஏக்கத்தோடு புலியைப் பார்க்க, அது அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் காட்டுக்குள் நுழைகிறது.   

அங்குள்ள மக்கள் அவனை ஒரு வைத்தியசாலையில் சேர்க்கிறார்கள். வைத்தியசாலையில் என்ன நிகழ்ந்தது என்று அவனை விசாரிக்க அவன் தனது கதையைச் சொல்கிறான். அதனை அவனை நம்ப முடியாது என்று சொல்ல அவன் வேறொரு கதை சொல்கிறான்.
அந்தக் கதையில்  கப்பல் விபத்தின் பின் பையும் அவனது அம்மாவும், துவேஷமுள்ள சமையல்காரனும், நட்பான சீனாக்காரனும் படகில் தப்புகிறார்கள். தப்பும் போது காயமடைந்த சீனாக்காரனைக் கொன்று அவனையே தூண்டிலாகப் பாவித்து மீன் பிடிப்பதோடு சீனாக்காரனைச் சாப்பிடவும் செய்கிறான்.. இதைப் பார்த்து விட்டு  பையின் அம்மா அவனைத் தப்பச் சொல்லி விட்டு அந்த சமையல்காரனோடு சண்டை போட அவன் அவளைக் கொன்று விட ஆத்திரமடைந்த பை பாய்ந்து சமையல்காரனைக் கொன்று விடுகிறான்.
இந்த இரண்டு கதைகளையும் கேட்ட எழுத்தாளர் முதலாவது கதையை ஏற்றுக் கொள்ள திரைப்படம் நிறைவுறுகிறது.
இதில் காயமடைந்த சீனக்காரன் வரிக்குதிரைக்கும்,சமையல்காரன் ஓநாய்க்கும்,பையின் அம்மா குரங்குக்கும் பை புலிக்கும் ஒப்பிடப்படுவதை ஊகிப்பதில் சிரமமில்லை. அப்படியானால் முதலாவது கதையில் வரும் பை யாரென்று மனதில் எழும் கேள்விக்கு நாஸ்திகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் விடையாகக் கிடைக்கிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக