அக்கரை என்பது தொண்டைமானாறு பாலத்தைத் தாண்டி அச்சுவேலி நோக்கிச்செல்லும்போது வலப்பக்கத்தில், பிரதான வீதியிலிருந்து கிட்டத்தட்ட 250 மீற்றர் தொலைவில் மண்பாதையின்
முடிவில் அமைந்துள்ள கிராமமாகும். இரண்டு மாதங்களுக்கு முன் அந்தப்பகுதியிலிருந்து
இராணுவம் வெளியேறிய பின்பு தான் அவர்களின் குடியேற்றம் பற்றி ஏனையவர்கள்
அறியக்கூடியதாக இருந்ததெனினும் 2013 ஆடியிலேயே அந்தக்கிராமம் அவர்களிடம்
கையளிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மிக மிக அடிப்படையான வசதிகள் எதுவுமற்ற
நிலையிலேயே அவர்கள் அந்தப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
அக்கரையின் சூழலிலேயே அவர்களின் பூர்வீக வாழ்க்கை ஆரம்பமானதெனினும் இப்போது
இந்த மக்கள் வாழ்ந்து வரும் இடம் ஒரு வீட்டுத்திட்டம் மூலமாக 1978 இலேயே அவர்களிடம் கையளிக்கப்பட்டதாகக்
கூறுகிறார்கள். 1978 இல்
வல்வெட்டித்துறை சிவன் கோவிலுக்குச் சொந்தமாக இந்தப்பகுதியில் இருந்த 16 ஏக்கரில் 9
ஏக்கர் அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு 1983 இல் 50
வீடுகள் அந்தக் கிராமத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
1986 மாசி மாதம் 19ஆம் திகதி. அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள்.
இராணுவத்திற்கு உதவியதாக இந்தக்கிராமத்தவர்கள் இருவர் சுடப்பட்ட சம்பவமே அவர்கள்
முதன்முதலில் அந்தக்கிராமத்தை விட்டு வெளியேற்றியதாகவும் . ஆனாலும் அந்த நாட்களில், தாம் அடிக்கடி வந்து தங்கள் இருப்பிடங்களை
பார்த்துச்சென்றதாகவும் அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.
அதன் பின்பு வடமராட்சியில் இடம்பெற்ற “Operation
Liberation” இராணுவ நடவடிக்கையின் பின்,
இவர்களின் இருப்பிடங்களை இந்தியா இராணுவம் ஆக்கிரமித்திருந்தது. அதன் போது
இவர்களின் இருப்பிடங்களைப் பார்த்துச்செல்ல அவர்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் 1989 இன் இறுதிப்பகுதியில் இந்தியா இராணுவத்தின்
வெளியேற்றத்தைத் தொடர்ந்து, 1990 தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை 10 குடும்பங்கள் வரை தற்காலிகமாகக் குடியேறியதாகவும்,
ஆனி மாதம் பலாயிலிருந்து இராணுவம் முன்னேறியபோதே தாங்கள் அந்த இடத்தை விட்டு
நிரந்தரமாக வெளியேறியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதன் போது இவர்கள் தொண்டைமானாறு, கெருடாவில், உடுப்பிட்டி,
அச்சுவேலி ஆகிய இடங்களில் குடியேறியிருக்கிறார்கள்.
சொந்த இடத்தை விட்டு வெளியேறி இன்னொரு இடத்தில் இருக்கும் போது எத்தனை வகையான
இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை
இலங்கையின் வடபகுதியிலுள்ள சில விதிவிலக்கானவர்களைத் தவிர ஏனையோர்
அறிந்திருந்தாலும் கூட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சொந்த இடத்தைப் பார்க்கக்கூட முடியாமல் இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமை
தான்.அந்தக் கொடுமையை இந்த மக்கள் தாராளமாகவே அனுபவித்திருக்கிறார்கள்.
2011 கார்த்திகை இறுதிப்பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்
உள்ளடக்கப்பட்டிருந்த வளலாய் பகுதியில் மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட போது தான்
மீண்டும் இந்த மக்கள் தங்கள் வீடுகளைப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உடனே அந்த இடத்தில் முழுமையாகக் குடியேற முடியாதவாறு மிதிவெடிகள் அவர்களை
அச்சுறுத்தியபோதும் தங்கள் இடத்தின் மேலுள்ள பற்று காரணமாக உயிரைப் பணயம் வைத்து
அங்கு திருத்தவேலைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் விடுத்த தொடர்ச்சியான வேண்டுகோளின் பின் அந்தப் பிரதேசம்
2012 ஆவணியில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக ‘Halo
Trust’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்நிறுவனப்
பணியாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பான
சேவையின் மூலம் 2013 தை 13 ஆம் திகதி தைப்பொங்கலுக்கு முதல் நாள் (சரியாக ஒரு
வருடத்துக்கு முன்பு) இந்த இடம் மிதிவெடிகள் இல்லாத பிரதேசமாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடம் உத்தியோகபூர்வமாக வைபவரீதியாக இந்த
மக்களிடம் கையளிக்கப்பட்டது 2013 ஆடி மாதம் 11ஆம் திகதி தான். அந்த நிகழ்வின் போது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,வட மாகாண ஆளுனர் சந்திரசிறி, வடமாகாண கட்டளைத்தளபதி ஹத்துருசிங்க ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள்.
1986 இல் அந்த வீட்டுத்திட்டத்திலுள்ள 50 குடும்பங்களும், அது தவிர அந்த சூழலில் தங்கள் சொந்த இடத்தில்
வாழ்ந்து வந்த 26 குடும்பங்களுமாக மொத்தமாக 76 குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு
வெளியேறியிருக்கின்றன. பின்னர் அந்தக்குடும்பங்களில் நிகழ்ந்த பிறப்பு , இறப்புக்களின் அடிப்படையில் 96 குடும்பங்கள்
மீண்டும் குடியேறியிருக்கின்றன. ஆண்கள் 175
பேரும், பெண்கள் 181 பேருமாக மொத்தமாக 356 பேர். 96 குடும்பங்கள் குடியேறியிருக்கின்றன என்று
ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் கூட
அவர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டோர் மாலை நேரத்தில் தாங்கள் வசித்து
வந்த தற்காலிக இடங்களுக்குச்சென்று காலை நேரத்தில் திரும்புபவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
குடிநீர் சந்நிதியிலிருந்து உழவியந்திரம் மூலம் கொண்டுவரப்படுகிறது கழிப்பிடம் ஒன்றுமே இல்லை. 96 குடும்பங்களும் கை, கால் கழுவுவதற்கும், துணி தோய்ப்பதற்கும், குளிப்பதற்கும் ஒரேயொரு கிணறு
இவர்களின் குடியிருப்பிற்கும் கடற்கரைக்குமிடையில் 50 மீற்றர் தூரத்தில்
அமைந்திருக்கிறது. மிக மிக அடிப்படை
வசதிகளான குடிநீர், கிணறு, கழிப்பிடம்
என்பன இல்லாத நிலையில் எப்படித்தான்
இவர்கள் நிரந்தரமாகக் குடியேறுவது?
இது போக, 50 குடும்பங்கள் இந்த
வீட்டுத்திட்டத்திலும் அதாவது வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம்
அரசாங்கத்தால் வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 9 ஏக்கரிலும், 16 குடும்பங்கள் அயலில் தங்கள்
சொந்தக்காணியிலும் வசிக்க, எஞ்சியுள்ள 30 குடும்பங்களும்
மிதிவெடிகள் அகற்றப்பட்டதாக இன்னும் அறிவிக்கப்படாத,
அத்துடன் வல்வெட்டித்துறை சிவன் கோயில் நிர்வாகத்திடம் அரசாங்கத்தால் வாங்கப்படாத
காணியில் பற்றைகளைத்துப்பரவு செய்து, குப்பைகளை எரித்து குடியேறியிருக்கிறார்கள். ‘Halo Trust’ பணியாளர்கள் அந்தக் குறிக்கப்பட்ட 9 ஏக்கர் காணியில் மிதிவெடிகளை அகற்றிய
போது இந்த 6 ஏக்கர் காணியிலும் 3 இடங்களில் மிதிவெடிகள்
அகற்றப்பட வேண்டுமென்று குறித்து வைத்திருப்பதாகத் தெரிவித்ததோடு இப்போது
அவர்களுக்குத் தாங்கள் தாங்கள் அதில் குடியேறியிருப்பதாக அறிவித்திருப்பதாகவும்
விரைவில் அந்த 3 மிதிவெடிகளும் அகற்றப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் மக்கள்
தெரிவித்தார்கள்.அதோடு அந்தக்காணி சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் இன்னும் நிறைவு
செய்யப்படாததால் அதன் காரணமாகவும் ஏதேனும் பிரச்னைகள் உண்டாகுமோ என்று
அஞ்சுவதாகவும் தெரிவித்தார்கள்.
அக்கரை மக்களின் கிராமசேவகர் பிரிவு J/283. கிராமசேவகரின் பெயர் திரு சாந்தரூபன். அச்சுவேலி வடக்கு, வளலாய், இடைக்காடு ஆகிய 3 பகுதிகள் அவர் பொறுப்பில்
இருப்பதாகவும், இடைக்காடு என்ற பிரிவிலேயே அக்கரை
அடங்குவதாகத் தெரிவித்த மக்கள் அவர் மூலம்
கோப்பாய் பிரதேச செயலரிடமும், பிரதேச செயலர் மூலம் யாழ்.
அரசாங்க அதிபரிடமும் தங்கள் பிரச்சனைகள் பற்றிக் கதைத்ததாகவும் அவர்கள் தங்களுக்கு
மூன்றாவது கட்ட இந்திய வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படும் என்று
உறுதியளித்ததாகவும் தெரிவித்ததோடு தற்போது இரண்டாம் கட்ட வேலைகள் நடைபெற்று
வருகின்றன என்றும் கூறினார்கள். அத்துடன்
தொண்டைமானாற்றின் பிரதான நீர்த்தாங்கியிலிருந்து குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக
குழாய்கள் பொருத்தும் வேலைக்காகவும், அக்கரைக்கு மின்சாரம்
பெற்றுக்கொடுப்பதற்காகவும் பெருந்தொகைப்பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா இவர்களிடம் கூறியிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம்(UNHCR) கடந்த வருடம் மார்கழி மாத இறுதிப்பகுதியில் தங்கள் யாழ்ப்பாண அலுவலகத்தை
மூடிக்கொண்டு கிளிநொச்சிக்கு தங்கள் அலுவலகத்தை மாற்றுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள்
இருக்கும்போது அக்கரை மக்களுக்கு பாத்திரம்,குவளை, பாய், படுக்கை விரிப்பு,
துவாய், கத்தி, அலவாங்கு, குப்பைவாரி, சுத்தியல் முதலானவற்றை
வழங்கியிருக்கிறார்கள். இது தவிர மீள்குடியேற்ற அமைச்சினால் ஒரு வீட்டுக்கு 12
தகரங்கள், 8 சீமெந்துப்பைகள், மற்றும்
50 வீடுகளுக்குமாக 5 நிலையிடும் சாதனத்துடன் கூடிய நீர்த்தாங்கிகளையும்
விநியோகித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும்
புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அக்கரையில் குடியேறுவதற்கு முன்னர்,அதனை
மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும், அக்கரை இவர்களிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட போது ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்திற்கும்
அவர்கள் தான் செலவுகளைப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இந்த மக்களின் வாழ்வாதாரங்களாக மீன்பிடித்தொழில், விவசாயம் கட்டுவேலை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக்கூறலாம். என்ன தான் இவர்கள்
அக்கறையில் குடியேறினாலும் தொழில் நிமித்தம் அதாவது மீன்பிடி, விவசாயம், கட்டுவேலை எல்லாவற்றுக்கும் இவர்கள்
தொண்டைமானாற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் உழவியந்திரம்
வைத்திருக்கும் திரு ஸ்ரீஸ்கந்தராசா என்பவரின் சொந்த செலவிலேயே இவர்களுக்கான
குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த 356 பேரில் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள் ஏறத்தாழ 60 முதல் 70 பேரளவில்
இருப்பதாகவும், அவர்களில்
அனேகமானவர்கள் தனியார் வகுப்புக்களும் செல்வதாகவும்,சிலர்
தனியார் வகுப்புக்களுக்குச் செல்வதற்கு ஆர்வமிருந்தும் வசதியில்லாத காரணத்தால்
செல்வதில்லை என்றும் அறியக்கூடியதாக இருந்தது.
ஒரு வாரத்துக்கு முன்பு தொண்டைமானாற்று ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடத்திய
சிறுவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில்
முதலாவது இடமும் ஏழாவது இடமும் பெண்களுக்கான மரதன் ஒட்டப்போட்டியில் முதலாவது
இடமும் நான்காவது இடமும்
கிடைக்கப்பெற்றிருக்கிறது. இவ்வளவு இடர்களுக்கு மத்தியிலும்
விளையாட்டுக்களில் இவ்வளவு ஊக்கம் இருப்பது பாராட்டுதற்குரியது. அது தவிர இனிமேல்
நடைபெறவிருக்கும் கயிரிழுத்தல்,
கட்டுமரம் வலித்தல், நீச்சல் ஆகிய போட்டிகளிலும் ஆர்வத்துடன்
கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்றும்
அக்கரை மக்கள் தெரிவித்தார்கள்.
புத்தூர் பிரதேச சபையால் தொண்டைமானாற்றுப் பாலத்தின் மின்சாரச்செலவுகள் பொறுப்பேற்கப்படும் என்று
உறுதியளிக்கப்பட்டு,
விளக்குகள், ஆளிகள் என்பன பொருத்தப்பட்ட நிலையிலும் இன்னும்
இதற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதும் இவர்களுக்கு ஒரு குறை தான். பாலம்
உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பாலத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டால் பாலம் ஒளிமயமாகும். பிறக்கவிருக்கும்
வருடத்தில் தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகாவிட்டாலும், தங்கள் வாழ்வைப் பீடித்துள்ள இருள் சற்றேனும்
விலகாதா என்பதே இங்குள்ள மக்களின்
ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.
......ஆ.தீபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக