Thanks for your message;
I'm
feeling a little bit better for the past few days. Going for chemotherapy
tomorrow.
Love Pathma Aunty
அன்புள்ள பத்மா Aunty, தவம் சித்தப்பா,
மேலே உள்ள ஒன்றிரண்டு வசனங்களும் நீங்கள்
எனக்குக் கடைசியாக Facebook மூலமாக அனுப்பிய தகவல். நீங்கள் மறைந்து விட்ட செய்தி
அறிந்து நான் அழுது ஓய்ந்ததும் Facebook இற்குப் போய் இதை எடுத்துப் பார்த்தால் கவலை
சற்றுக் குறையும் என்று நினைத்து எடுத்துப் பார்த்தேன். இதைக் கணனியில் அடித்து
அனுப்பிய விரல்கள் ஓய்ந்து விட்டன என்று நினைத்த போது வேதனை இன்னும் அதிகமானதே
தவிர குறையவில்லை.
உங்களிடமிருந்து வந்த தகவலைப் பார்த்ததும் முதலில் உங்களுக்கு
அனுப்பிய நீண்ட கடிதத்தைப் போல் இன்னுமொரு நீண்ட கடிதம் அனுப்பினேன். அதை நீங்கள்
வாசித்தீர்களா இல்லையா என்று கூடத் தெரியாது. உங்களுக்குச் சொல்ல நினைத்ததை, உங்களுக்குச் சொல்ல
நினைப்பதை இந்தக் கடிதம் மூலமாக சொல்லி விட நினைக்கிறேன். இது முட்டாள்தனமென்று
புத்தி சொன்னாலும் மனதுக்குத்
தெரியவில்லை.
உங்களது தகவலைப் படித்ததும் மனதில் மிகுந்த
சந்தோஷமும் நம்பிக்கையும் தோன்றியது. அப்போது தோன்றிய நம்பிக்கை நீங்கள் தவம்
சித்தப்பா, அபியுடன் கடைத்தெருவுக்குப் போனதை,
நீண்ட நாட்களாக நீராகாரத்துடன் இருந்த நீங்கள் இடியப்பம் சாப்பிட்டதை, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் 2 மணித்தியாலங்கள் வேலை செய்ததை, அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்ததை எல்லாம் அறிந்து கொண்ட போது மனதிலிருந்த
நம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. போதாததற்கு புற்று நோய் வந்த பின்னரும்
சிகிச்சையின் பின் பத்து, இருபது வருடங்களுக்கும் மேலாக சுகமாக வாழ்ந்து வருபவர்களின் கதையைக்
கேட்ட பின்னர் இன்னும் கொஞ்ச நாட்களில் எங்கள் பத்மா Aunty வழமைக்குத் திரும்பி விடுவா
என்றே உறுதியாக நம்பத் தொடங்கி விட்டேன்.
நீங்கள் சுகவீனமாக இருந்த போது உங்களுடன்
கதைக்க வேண்டும், உங்களது மென்மையான குரலைக் கேட்க வேண்டுமென்ற ஆவல்
இருந்தாலும் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால் ஆவலை அடக்கிக் கொண்டு
கடிதம் அனுப்பி விட்டு இருந்து விட்டேன். ஆனால் நேற்று இந்திரா மாமி கதைத்த போது, இன்று செல்வம் மாமி கதைத்த போது தங்களுடன் நீங்கள் நீண்ட நேரம் கதைத்ததாக
அவர்கள் சொன்ன போது கடைசி நாட்களில் உங்கள் குரலைக் கேட்காமல் போய் விட்டேனே என்ற
எண்ணம் என்னை வாட்டுகிறது.
அப்பாவின்
மரணச் செய்தி அறிந்ததும், இரண்டு நாட்களிலேயே
இங்கே வந்து சேர்ந்து, எங்கள் துயரத்தில் பங்கு கொண்டீர்கள். உங்கள் மரணத்தின் போது அங்கே போய்
தவம் சித்தப்பா, ஹரன் தரனுக்கு ஆறுதல் சொல்ல எங்களால் முடியவில்லை.
எங்களுக்குப் பதிலாக அம்மா இருப்பதாகத் திருப்திப்பட்டாலும்,
அம்மாவுக்கும் கடைசி நேரம் உங்களை உயிருடன் பார்க்க முடியாமற் போனது மனதுக்கு
மிகவும் வேதனையாக இருக்கும்.
உங்கள் உயிர் பிரிந்த அன்று காலை, வைத்தியர் தவம் சித்தப்பாவை
அழைத்து நீங்கள் எங்களை விட்டு மீள முடியாத தூரத்திற்குப் போய்க்
கொண்டிருப்பதாகவும், விரைவிலேயே உங்கள் உயிர் பிரிந்து
விட்டால் நல்லது என்று சொன்னதாகவும் அறிந்த போது அந்த நேரம் உங்கள் உடல் அடைந்த
வேதனையையும், தவம் சித்தப்பாவின் உள்ளம் அடைந்த வேதனையையும்
நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் அடைத்துக் கொள்கிறது.
அப்பா எங்களை விட்டுப் பிரிந்த போது நீங்கள்
எங்களுடன் வந்திருந்த நாட்களில் நீங்கள்
இனிமையாக நல்ல இசையுடன் ஓதிய சிவபுராணம், கடைசியாக ஊரிலிருந்து
யாழ்ப்பாணம் புறப்பட்ட போது தவம் சித்தப்பா சொன்ன பகிடிக்கு நீங்கள் சிரித்த
சிரிப்பு, ஓவியாவுடன் கதைத்த கதைகள் எல்லாம் என் காதுக்குள்
கேட்டுக் கொண்டேயிருப்பது போல் ஒரு பிரமை.
நீங்கள் எங்களோடு வந்து நிற்கும் நாட்களில் நாங்கள் எல்லோருமே எங்களின்
ஏதாவதொரு மருத்துவப் பிரச்சனையைச் சொல்லிக்
கொண்டு உங்கள் முன் வரிசையாகப் போய் நிற்கும் நாட்கள் ஞாபகத்துக்கு
வருகையில், இனி எங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ல நீங்கள் வரப்
போவதில்லை என்ற உண்மை உறைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது.
நாங்கள் சாதாரணமாக எங்கள் வழமையான கடமைகளில்
ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். என்றாலும் உங்கள் நினைவு வந்ததும் மனம்
இடிந்து போய் விடுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு உங்கள் நினைவுகள்
மனதைப் பாதித்திருக்கின்றன. சற்று நாட்களில் நாங்கள் எங்களைச் சமாளித்துக் கொண்டு
விடுவோம். ஆனால் தங்கள் மனைவியில் எங்கே குற்றம் காணலாம் என்று அனேகமான ஆண்கள்
சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும்
இப்போதைய நாட்களில், எப்போதுமே உங்களை உயர்வாகச்
சொல்லிப்பெருமைப்பட்டுக் கொண்ட (உண்மையிலே நீங்கள் அப்படித்தான் என்பது
ஒருபுறமிருக்க) தவம் சித்தப்பா எப்படி உங்கள் பிரிவைத் தாங்கிக் போகிறார் என்பது
எங்கள் எல்லோருக்கும் உள்ள கேள்வி. அதற்கான
மனதைரியத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
தவம் சித்தப்பாவுக்கு அடுத்ததாக, நீங்கள் நீண்ட காலம்
இருக்கப் போவதில்லை என்ற உண்மையை வேதனையோடு மனதில் சுமந்து கொண்டு உங்களைக்
கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்ட கமலா Aunty க்கும் காலம் தான் மருந்தாக வேண்டும்.
பத்மா Aunty, நான் உங்களுடன் கதைக்க நினைத்ததெல்லாம்
எழுதி முடித்து விட்டேன். போய் வாருங்கள் பத்மா Aunty. ஒருத்தருக்கும் உங்களுக்கு
விடை கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் மனம் நிறைந்த வேதனையுடனும், விழிகள் நிறைந்த கண்ணீருடனும்
உங்களுக்கு விடை தருகிறோம். உங்கள் ஞாபகங்கள் என்றும் எங்கள் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.
அன்புடன்
தீபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக