அண்டவெளியில் உள்ள கருந்துவாரங்கள் பற்றி நீங்கள் சில வேளைகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதன் பெயர் உங்களை வேறு மாதிரி நினைக்கத் தூண்டினாலும் இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு வெற்று வெளியாகும். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரிய பொருள் ஒரு சிறிய வடிவமாக ஒடுக்கப்பட்ட பிரதேசமாகும். உதாரணத்துக்கு சூரியனைப் போல பத்து மடங்கு அளவிற் பெரிதான ஒரு நட்சத்திரம் ஏதோ ஒரு காரணத்தினால் அமுக்கத்துக்கு உள்ளாகி அழிவடைந்து அதன் நடுப்பகுதி யாழ்ப்பாண மாவட்டம் அளவு கோளமாக இருக்கும் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். சரி அப்படியானால் ஏன் அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை என்று கேட்பீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் ஒரு சிறிய வடிவமாக ஒடுக்கப்படும் போது அதிலிருந்து வெளிப்படும் அளவிட முடியாத புவியீர்ப்பு விசையிலிருந்து ஒன்றுமே .....ஏன் ஒளி கூடத் தப்ப முடியாது என்பது தான் இதன் சிறிய தத்துவம்.இந்த நிகழ்வின் போது பல்வேறு சக்திகள் தோன்றினாலும் அவை எல்லாவற்றையும் விட மேலோங்கும் புவியீர்ப்பானது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு விடும். அதாவது தனது ஒளியைத் தானே விழுங்கிக் கொண்டு அரூபமாக நிற்கும் ஒரு மர்ம சமாச்சாரம் தான் இது. அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு நட்சத்திரத்தின் முடிவு ஒரு கருந்துவாரத்தின் ஆரம்பம் எனக் கொள்ளலாம். விளங்குகிற மாதிரியும் இருக்கும். விளங்காத மாதிரியும் இருக்கும். இது வரை உங்களுக்கு சுருக்கமாகச் சொன்னது அண்டவெளியில் உள்ள கருந்துவாரங்கள் பற்றி. நாங்கள் பார்க்கப் போவது கடலின் கருந்துவாரங்கள் பற்றி. ஏற்கனவே ‘வல்வை அலையோசை’யின் முதலாவது இணைய இதழில் ‘பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் தீர்க்கப்படாத மர்மம்’ என்ற பகுதியில் இந்தக் கருந்துவாரங்கள் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கருந்துவாரங்கள் கடலிலும் குறிப்பாக தெற்கு அட்லாண்டிக் சமுத்திரத்தில்
இருப்பதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வயிற்றில் புளியைக்
கரைத்திருக்கிறார்கள். தெற்குப் பக்க இவை அதிகம் ஏற்படுவதாலேயே வடக்கு அண்டார்டிக்
கடலில் இளஞ்சூடான உப்புத்தன்மையுள்ள நீர் இடம் மாற்றப்பட்டிருக்கிறது என்றும்
அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் செல்லமாக ‘எடி’ என்று பெயரும்
இட்டிருக்கிறார்கள். ‘எடி’ என்பது
நீர்ச்சுழலுக்கு ஒப்பானது. அதன் மையப் பகுதியே கருந்துவாரம் என்று அழைக்கப்படும்.
இறுக்கமான நீர்ப்பாதைகளால் சூழப்பட்ட இதிலிருந்து ஒன்றுமே தப்பமுடியாது என்பது ஒரு
புறமிருக்க இந்த நீர்ச்சுழல் சூழ்ந்த கருந்துவாரங்கள் சில வேளைகளில் மாதக்கணக்கில்
நீடிக்கும் என்பதும் அப்போது அந்த நீர்ச்சுழலில் கோடிக்கணக்கான தொன் எடையுள்ள நீர்
சுற்றிச் சுழலும் என்பதும் வியக்கத் தக்க, நினைத்துப்
பார்த்தால் திகில் தரக் கூடிய விடயங்களாகும்.
இவை சிறிய கடல்களிலோ நீரிணைகளிலோ அல்லது கால்வாய்களிலோ ஏற்படுவதில்லை.பெரிய
சமுத்திரங்களிலேயே ஏற்படும். இந்த எடிக்கள் சமுத்திரச் சூழலின் சீதோஷ்ணத்தையே
மாற்றக் கூடியன. தென் துருவங்களில் பனிக்கட்டிகள் உருகுவதால் ஏற்படும் தீய
விளைவுகளை இவை கணிசமாகக் குறைக்கின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால்
எடிக்களின் எல்லைகள் தெரியாததால் இவை எவ்வளவு தூரம் பாதிப்பைக் குறைக்கின்றன
என்றுஅவர்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
கணித ரீதியில் இவை அண்டவெளியின்
கருந்துவாரங்களுக்கு ஒப்பானவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது
அண்டவெளியில் ஒளிக்கு ஏற்படும் கதியே இங்கு இந்த இராட்சத நீர்ச்சூழலில் அகப்படும் நீருக்கும் ஏற்படும்.
இவை எவ்வாறு உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மூலம் கிடைத்த
படங்களைக் கொண்டு ஆராய்ந்த போது இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கில் நகரும்
“அகுலாஸ்” எனப்படும் நீரோட்டமானது ஆபிரிக்காவின் கிழக்குப் கரையோரப் பகுதியில்
பலமாக நெருக்கப்பட்டு சாதாரண கடர்சுழியாகத் தோற்றம் பெற்று தெற்கு அட்லாண்டிக்
நோக்கி நகரும் போது ராட்சச ‘எடி’க்களாக மாறுகின்றன என்று தெரிய வந்திருக்கிறது.
இது சம்பந்தமாக மேலதிகத் தகவல்கள் திரட்டுவதற்காக விஞ்ஞானிகள் இராட்சத
நீர்ச்சுழல் ஒன்றினுள் பெரிய ஒளிக்குமிழ் ஒன்றை விட்டு செயற்கைக்கோள் மூலம் அவதானித்தனர். இதன் போது
சுழலின் உள்ளே சற்றுத் தூரம்சென்ற அந்த
ஒளிக்குமிழ் மீண்டும் வெளியே வந்து ஒரு வட்டமான சுற்றுப் பாதையில் தொடர்ந்து
சுற்றக் கண்டனர். ஐன்ஸ்டீனின்
‘போடோன்’ கோளத் தத்துவத்தின்படி ஒரு
சக்தி, நீரை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு ஏனைய கடினமான
பொருட்களை வெளித்தளளுவதாகவும், சில இராட்சத எடிக்களில்
ஒரேயளவு நீர், சூழலை விட்டு வெளியே செல்லாமல் ஒரு
வருடத்திற்கும் மேலாகச் சுழன்று
கொண்டிருப்பதாகவும் அவதானித்தனர்.
இவ்வாறாக நீரை சுழலுக்கு வெளியே விடாத ‘எடி’க்களே கணித சூத்திரத்தின்படி அண்டவெளியின்
கருந்துவாரத்துக்கு ஒப்பிடப்படுகின்றன. உதாரணத்துக்கு ஆறு மாத காலமுடைய
எடிக்களில் ‘போடோன்’ கோளங்களைக் காண முடியும் என்றும் இன்னும் சிறிது காலத்தின் பின் உதாரணமாக
ஒன்பது மாத காலமுடைய ‘எடி’க்களில் ‘போடோன்’ கோளங்களைக் காண முடியாது என்றும் ஏனெனில் அவை நீரை சுழலுக்கு வெளியே விட
ஆரம்பித்திருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றுள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது
சிரமமானதும் ஆபத்தான பணியுமாக இருப்பதால்
மந்த கதியியிலேயே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியின்
முடிவில் கடல் காலநிலை,
கடற்சூழல் மாசடைதல் பற்றிய அறிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக