கடல் நீச்சல் என்றதும் நீச்சல் தெரிந்தவர்களின் மனதில் கூட இலேசாக அச்சம் தோன்றுவது இயற்கையானதே. இதற்குக்
காரணம் பெரும்பாலானவர்கள் நீச்சல் பழகுவது பாதுகாப்பான நீச்சல் குளங்களிலும் மற்றும் ஆழம் குறைந்த குளங்களிலும் தான். அதுவும்
நீச்சல் குளங்களில் மட்டும் நீந்தியிருந்தால் அச்சம் இன்னும் சற்று அதிகமாகவே
தோன்றக்கூடும். ஏனெனில் சுற்றிவர சுவர்கள், கடமையிலுள்ள உயிர்க்காவலர் (நீச்சல் குளங்களில்
நீந்துபவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் பாய்ந்து காப்பாற்றுபவர்), அனேகமான நீச்சல் குளங்களில் காணப்படும் கயிறு போன்ற மிதக்கும் பிளாஸ்டிக்
பொருட்கள், அடிப்பகுதி துல்லியமாகத் தெரியும் தெளிவான நீர்,
முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பகுதி நெஞ்சளவுக்கும் கீழான நீர்
மட்டம், நீந்திக்கொண்டிருக்கும் போது பயம் தோன்றினால்
பக்கத்திலுள்ள சுவரைப் பிடித்துக் கொள்ளக் கூடிய தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நீச்சல்
பழகுபவருக்கும் கூட நீச்சல் குளம் மிக
மிகப் பாதுகாப்பாகத் தோன்றக்கூடும். இந்த வசதிகள் எல்லாமே கடல் நீச்சலில் இல்லை.
தூரத்தில் தெரியும் கட்டிடங்கள், உயிர்ப்பாதுகாவலர் ஒருவருமே இல்லாத நிலைமை,
களைத்துப் போனால் ‘கப்’பென்று
பிடித்துக்கொள்ள தோதாக ஒன்றுமே இல்லாமை, சில நேரங்களில் எவ்வளவு ஆழமென்றே தெரியாத தன்மை,
நாங்கள் நீந்திக் கொண்டிருக்கும் இடத்தின் நீரினடியில் என்ன இருக்கிறது என்று
வெளிக்காட்டாத நீரின் நிறம், (அப்படியே சிரமப்பட்டுப்
பார்த்தாலும், ஏதாவது கறுப்பாகத் தெரிந்தால் முதலையாகவோ சுறாமீனாகவோ,குட்டித் திமிங்கிலமாகவோ கற்பனை பண்ணிக்கொண்டு பதறியடித்துக் கொண்டு நீந்திய
அனுபவம் எனக்கு உண்டு. அது சரி, கடலில் முதலை இல்லையென்று உனக்குத் தெரியாதா என்று நீங்கள் நினைக்கக்
கூடும். எனக்குத் தெரியும்.ஆனால்
முதலைக்குத் தெரியுமா? ) போன்ற எல்லாமே கடல் நீச்சல் என்றால்
மனதில் பீதியை உண்டாக்கும் காரணிகள். முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு நீந்தி விளையாடுபவர்கள் எனக்குக் கடலென்றால்
பயமே இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவன் பாவி, ஏற்கனவே
எங்களுக்கு உள்ள பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறான் என்று நீங்கள் நினைக்கக்
கூடும். ஆனால் அதுவல்ல என் நோக்கம். அதற்காக கடல் நீச்சல் என்றால் அல்வா
சாப்பிடுவது போல். மிகவும் சுலபம். பயப்படவே தேவையில்லை என்றெல்லாம் பொய்
சொல்லப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான,
அட்டகாசமான, அருமையான, அலாதியான
அனுபவம். ஆனால் அப்படியானதொரு அனுபவத்தை நீங்கள் பெறுவதற்கு நீங்கள் தகுதியாக
இருப்பதோடு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்பது அவசியமல்லவா? அதற்காக உங்களுக்குச் சில யோசனைகள்.
எல்லாவற்றுக்கும் முதலில், மிக
மிக அவசியமானது பயிற்சி தான். உங்களுக்கு எட்டும் கடல் நீரில் நின்று கொண்டு
நீந்திப்பழகி, நீர்
அச்சம் உங்களுக்கு இருந்தால் அதைப்படிப்படியாகப் போக்கிக் கொள்ள வேண்டும். நீச்சல்
குளத்தில் அடிப்பகுதியில் இருப்பது போல் தடிப்பான கறுப்புக்கோடு, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று வழி காட்டாது. ஆகையால் எங்கே
போகிறீர்கள் என்ற அவதானம் தேவை. தலையைத்தூக்கி வைத்துக்கொண்டு நீந்துபவர்கள்(இரண்டு
கைகளால் தலையைத் தூக்குவது போல் கற்பனை செய்ய வேண்டாம். நான் சொன்னது நீர்
மட்டத்திற்கு மேல் தலை தெரியுமாறு நீந்துபவர்கள்) என்றால் பிரச்சனையில்லை.ஆனால் தலையை
தண்ணீருக்குள் அமிழ்த்தியவாறு நீந்துபவர்களுக்கு சற்றுக்கூடிய அவதானம் தேவை.
நீச்சல் நன்கு கை வரும்
முன்பு உங்களை மூழ்கடிக்கக்கூடிய அளவு இடத்திற்குப் போக வேண்டாம். கடலில் நிகழ்ந்த
அனேக அவச்சாவுகளுக்கு இதுவே பிரதான காரணம். விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும்.
உங்கள் நீச்சலுக்குத் தக்க ஆழத்தில் நீந்திப் பழகுங்கள்.உதாரணமாக நீங்கள்
கிட்டட்டதட்ட 20 மீற்றர் களைக்காமல் நீந்தப் பழகி விட்டீர்கள் என்று வைத்துக்
கொள்ளுங்கள்.கடலில் உயரப்போக விரும்பினால் 10 மீற்றரை விடக் குறைவாகத்தான் போக
வேண்டும்.ஏனென்றால் திரும்பி வர வேண்டுமல்லவா?
என்ன தான் கடல் நீர் உங்களுக்குப் பரிச்சயமாகி விட்டாலும், அபரிதமான தன்னம்பிக்கை இருந்தாலும் உங்களோடு ஒரு படகோ அல்லது கட்டுமரமோ
வந்தாலேயொழிய தனியே நீந்த வேண்டாம். அதாவது உங்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை
மூட்டை கட்டி கரையில் வைத்து விட்டுத்தான் கடலில் இறங்க வேண்டும். உங்களோடு
எப்போதுமே ஓரிருவராவது நீந்துவது அவசியம்.ஆனால் அப்படி வருபவர்கள் “ டேய், முதலையிண்ட வால் மாதிரி ஏதோ என்ட கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குது” என்றோ
அல்லது “ஏண்டா, தூரத்தில ஏதோ கறுப்பாத்தெரியுது. சுறாமீனா
இருக்குமோ?” என்று பேதியைக் கிளப்பாதவர்களாக இருப்பது
அவசியம். உங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் உங்களை ஒரு கையில் ஏந்தியவாறு ஒரு கையால்
நீந்துமளவிற்கு அவர்கள் மிகுந்த பலசாலிகளாகவோ நீச்சலில் படு சூரர்களாகவோ இருக்க
வேண்டிய அவசியமில்லை. மனதுக்குத் தெம்பூட்டுபவர்களாக இருந்தாலே போதுமானது. “என்ட
கால்ல ஏதோ பட்ட மாதிரி இருக்குதடா” என்று நீங்களே வெருண்டாலும் கூட “ சும்மா இருடா
கோமாளி. அது என்ட கால் தாண்டா” என்று சொல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
கடலில் காற்று கடுமையாக அடித்து அலைகள் ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்
போது நீந்த வேண்டாம். கடலன்னைக்கு நாங்கள் எப்போதுமே ஒரு அற்பத்தூசு என்பதை மறக்க வேண்டாம். உங்கள் அம்மா கோபமாக
இருக்கும் போது நீங்களும் கோபமாக எதிர்த்து வாக்குவாதம் செய்வீர்களா அல்லது அந்த
நேரம் பேசாமல் இருந்து விட்டு அம்மா சாந்தமாக இருக்கும் போது கதைப்பீர்களா? நான் உவமான உவமேயத்துக்கு எடுத்துக்கொண்ட
விடயம் பொருத்தமானதில்லை என நினைக்கிறேன். ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத்தவிர அனேகமானவர்கள்
அம்மா சத்தம் போட்டால் அதற்கு மேலால் சத்தம் போடுபவர்களாகத்தான் தான்
இருப்பார்கள். ஆனால் கடலன்னையுடன் அந்த விளையாட்டு வேண்டாமே. சின்னமலையில், அராபிய நாடொன்றில் வேலை செய்து விட்டு விடுமுறையில் வந்த இளைஞன் ஒருவன்
2009 மார்கழி மாதக் காற்றுக்கடலில் நீந்தப்போய் அவனது உடல் கூடக்
கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறான கடலில் நீந்துவது நீச்சலில் உங்களைப்
படுசூரனாக்கும் என்று தப்புக்கணக்குப் போட வேண்டாம். நீச்சல் போட்டிக்குப் பயிற்சி
எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட அப்படியான சந்தர்ப்பங்களில் யாருமே
நீச்சல் போட்டிகள் வைப்பதில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் சிறந்ததொரு குடிமகனாக இருப்பது அவசியம் தான். ஆனால் அதற்காக ‘குடி’மகனாகக் கடலில்
இறங்க வேண்டாம். அதாவது தண்ணியில் இருக்கும் போது தண்ணியில் இருப்பது கூடாது
என்கிறேன். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படியொரு பழக்கம் இருப்பதை
அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறேன். வெளிநாடுகளில் குளிர்க்கடலில் இறங்குவதற்கு
முன்னர் அப்படியான குடி வகைகள் மூலம் உடலைச்சூடேற்றுவது ( உண்மையில் சூடேறுமா
என்று அனுபவபூர்வமாக அறிந்ததில்லை)
ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் எங்கள் ஊரைப்போன்ற ஒரு
வெப்பபூமிக்கு அது தேவையில்லை. குடித்து விட்டு நிதானம் தவறி, அவதானமில்லாமல் நடந்து கொள்ளும்
நிறையப்பேரைப்பார்த்திருக்கிறேன். நீச்சலுக்கு, அதுவும் கடல்
நீச்சலுக்கு நிதானம் மற்றும் அவதானம் நிரம்பவே தேவை. “வீதிகளில் ‘Drink and drive’ செய்தால் போக்குவரத்துப்பிரிவு காவல்துறையிடம்
மாட்டுவோம்.ஆனால் ‘Drink and swim’ செய்தால் ஒருவரிடமும் மாட்டிக்கொள்ள மாட்டோம் தானே” என்று நினைக்க வேண்டாம்.
யமதர்ம ராஜனின் எருமைமாடு நீரிலும் நீந்தி வரும் ஆற்றல் படைத்தது.
இனி வரும் பகுதிகள் நீச்சல் கை வந்து(அத்துடன் கால் வந்து) நீந்தத்
தொடங்கியவர்களுக்கானது. உங்களுக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு நான் இல்லை என்றாலும்
கூட அவை சில வேளைகளில் நீங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்களாக இருக்கக்கூடும்.
சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் தானே.
கரையிலிருந்து விலகி சற்றுத்தூரம் நீந்துவதில் பரிச்சயமாகி விட்டீர்களா? மிகவும் நல்லது. ஆனால் நீங்கள் நீந்தத்
தொடங்கும் போது கரையில் ஏதாவது ஒரு தெளிவான அடையாளம் ஒன்றை நினைவில்
நிறுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ஏதாவதொரு கோபுரத்துக்கு நேரே நீங்கள் நீந்தத்தொடங்குகிறீர்கள்
என்றால் நீரோட்டத்தின் காரணமாக நீங்கள் சற்று விலகிப்போயிருந்தாலும் திரும்பி
வரும் போது அதை நோக்கியவாறே நீந்தி வரலாம்.
கறுப்பாக ஏதாவது பார்த்து விட்டு அதை இலக்காகக் கொண்டு நீந்தும் போது ‘என்ன தான் நீந்தினாலும் அந்தக்கறுப்பு
தள்ளிப் போகிறதே,ஒருவேளை நீரோட்டம் என்னை இழுத்துப்போகிறதோ
என்று பதற வேண்டாம். அந்த கறுப்பு ஒரு
மாடாக இருக்கக்கூடும். அது அதன் பாட்டுக்கு புல் மேய்ந்து கொண்டிருக்கக்கூடும். ஏன்
இதைச் சொல்கிறேன் என்றால் அசையும் பொருட்களை அடையாளமாகக் கொண்டு நீந்த வேண்டாம்.இதை
நான் தட்டச்சும் போது 1992 இல் ஒரு முறை எனது நண்பர்களுடன் கடலில் நீந்திய ஞாபகம்
வருகிறது. நாங்கள் கடலில் கட்டுமரத்துடன் இறங்கியது வல்வெட்டித்துறை சுங்க
வீதிக்கு நேரே. அப்போது சுங்க வீதிக்கு நேரே தான் நவீன சந்தைக் கட்டிடத்தின்
கீழ்ப்பகுதியில் ‘கலைச்சோலை’
புத்தகக்கடை இயங்கி வந்தது. நாங்கள் கட்டுமரத்தில் போய் குதித்து விளையாடி நீந்தி
விட்டு திரும்பி வரும் போது, கலைச்சோலையை இலக்காகக்கொண்டு
தான் துடுப்பை வலித்தோம். ஆனால் நீரோட்டத்தின் அதிக வேகம் காரணமாக அடிக்கடி ‘கலைச்சோலை’ தெரிவதும் மறைவதுமாக இருந்தது. ’வலிப்பது’ என்பதன் சரியான அர்த்தம் அப்போது தான்
புரிந்தது. துடுப்பு வலிப்பதில் அனுபவம் இல்லாததால் எல்லோருக்கும் கைகள் முழுவதும்
வலி. அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் வாசன், சின்னன்,
டொப்பன், கருணா, அரவிந்தன்,
சேகர் என்று ஞாபகம்.
மழை காலங்களில்,
குளிர்காலங்களில் கடலில் இறங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படியில்லாமல்
இறங்கத்தான் போகிறீர்கள் என்று தீர்மானித்து விட்டால் இலேசாக உடற்பயிற்சி செய்து,உடலின் வெப்பநிலையை சற்று அதிகரித்து விட்டு இறங்குங்கள். இது உடலின்
வெப்பநிலை குறைவடைந்து நீங்கள் பாதிக்கப்படுவதைத் தடை செய்யும்.உடல் வெப்ப நிலை
குறைவடைந்து பலவீனமடைவதை ஹய்போதேமியா(hypothermia) என்று
சொல்வார்கள். எங்களது வெப்ப நாட்டில் அதற்கான சாத்தியம் இல்லையென்றாலும் கூட
இலேசான உடற்பயிற்சியோடு இறங்குதல் சிறப்பாகும். அதற்காகக் கடும் உடற்பயிற்சி
நிச்சயமாகச் செய்யக்கூடாது.
சிலர் என்ன தான் நீந்தத்தெரிந்தவர்களாக இருந்த போதும் தலையை நீர் மட்டத்திற்கு
மேல் உயர்த்தியே வைத்திருப்பார்கள். இதில் சக்தி சற்று அதிகமாக விரையமாகி விரைவில்
நாங்கள் களைப்புக்குள்ளாவது சில வேளைகளில் நீங்கள் அறிந்திராத விடயமாக
இருக்கக்கூடும். அதற்குப் பதிலாக உங்களால் மூச்சுப்பிடிக்கக்கூடிய அளவுக்கு அதாவது
‘தம்’ பிடிக்கக்கூடிய
அளவுக்கு தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு
துடுப்பு போட்டு…… சுவாசிப்பதற்குத் தலையைத்தூக்கி.....
பின்பு மீண்டும் தலையை நீருக்குள் அமிழ்த்தி......இவ்வாறே மாறி மாறிச்செய்து கைகளால்
வலித்து நீந்திப்பார்த்தால் உங்கள் வேகம் சற்று அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள்.
நீச்சல் போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு இது அவசியம் தெரிந்திருக்க வேண்டிய
ஒன்று. என்றாலும் இதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதைல் பிரதான பிரச்சனை தலையைத் தண்ணீருக்குள்
அமிழ்த்தி வைத்திருப்பதால் எங்கு போய் முட்டிக்கொண்டு விடுவோமோ என்ற பயம்
எழக்கூடும். கடல் போன்ற பரந்த இடத்தில் எங்கேயும் போய் முட்டிக்கொண்டு விடுவோமோ
என்ற பயம் தேவையில்லை. என்ன தான் பக்கத்தில் ஆட்கள் இருந்தாலும் எவ்வாறு அவர்களை
விலக்கிக்கொண்டு நீந்துவது எப்படியென்று சில நாட்கள் பயிற்சியின் போதே
உங்களுக்குத் தெரிய வந்துவிடும். அது தவிர தண்ணீருக்குள் மூச்சடைத்துக்கொண்டு
நீந்துவதில் சிரமம், மற்றும் கண் எரிவு என்பன
இருக்கக்கூடும். இது தவிர சிலர் இதனை முயற்சி செய்து பார்க்கும் போது கடல் தண்ணீரை
மடக்குமடக்கென்று குடித்து விட்டு அவஸ்தைப்படக்கூடும்.இந்த நீச்சலின் போது வாய்
மூடியிருக்க வேண்டுமென்பது இதன் பாலபாடம். ஆனால் கண் எரிவு மற்றும் ‘தம்’ பிடிப்பதில் உள்ள சிரமங்களை போக்கிக்கொள்ள முடியாது. ஆனால் பழகிக்கொள்ள
முடியும்....தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம். இந்த நீச்சல் உங்களுக்குக் கை
வந்து விட்டால் உங்கள் வேகம் இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரித்திருப்பதைக்
காண்பீர்கள் அதன் பின்பு நீங்கள் தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு ஐந்து முதல் ஏழு
துடுப்புகள் வரை போடக்கூடியதாக இருக்கும். நீச்சல் போட்டிகளின் போது இதை விட
இரண்டு மடங்கிற்கும் மேலாக தலையை நீருக்குள் அமிழ்த்தியவாறு துடுப்புப்போடுவதைக்
கண்டிருபீர்கள்.அதற்குக் காரணம் தீவிர பயிற்சி தான்.
சிலர் குறுந்தூரமாயின் தலையைத் தண்ணீருக்குள்
அமிழ்த்தாமல் ஒவ்வொரு துடுப்புக்கும் முகத்தில் நீர் மோதுவதைத்தவிர்க்க தலையை இரு
பக்கமும் வெடுக்குவெடுக்கென்று திருப்பியவாறு நீந்துவதைக் கண்டிருப்பீர்கள்.
குறுந்தூரத்திற்கு இது ஏற்புடையதாயினும் சிலர் ஏதாவது ஒரு பக்கம் தலையைத்
திருப்பும் போது மட்டுமே சுவாசித்துக் கொள்வார்கள். இது சில வசதியீனங்களை
ஏற்படுத்தும் என்பதால் இரண்டு பக்கமும் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது
தவிர இந்த நீச்சல் நீந்தும் போது கழுத்துப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள்
அதிகம். அதனால் நீங்கள் ஒரு பக்கம் திருப்பிய தலை, மீண்டும் அடுத்த பக்கம் கொண்டு
வருவதற்கு அல்லது சாதாரணமாக நடுப்பகுதிக்குக் கொண்டு வருவதற்குச் சிரமமாகலாம்.
இனி நீச்சல் போட்டிகளின் போது நீந்துபவர்களுக்கு ஒரு இணையத்தளத்தில் ‘Swimming Tips To
Triatletes’ என்ற
பகுதியில் கொடுக்கப்பட்ட சில அறிவுரைகளைத் தருகிறேன். Triathlon என்பது முப்போட்டியாகும். அதாவது நீச்சல், ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம் என்பன அடங்கிய போட்டியாகும். அதில்
ஈடுபடுபவர்களைத்தான் டிரயத்லெட்டீஸ் (Triatletes) என்று அழைப்பார்கள். வல்வெட்டித்துறையில் கடந்த வருடம் ‘உதயசூரியன்’ விளையாட்டுக்கழகத்தின்
பொன்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட
விளையாட்டுப்போட்டிகளில் முதன்முறையாக இந்த விளையாட்டுப்போட்டி
நடத்தப்பட்டிருந்தது.
நீங்கள் சற்றுக்கூடிய தூரம் தலையை
அமிழ்த்தியவாறு நீந்தப் பழகி விட்டீர்களெனில் நீங்கள் கூட்டமாக நீந்தும்
வேளைகளில்..... முக்கியமாக நீச்சல் போட்டிகளில், முன்னே செல்லும் நீச்சல் வீரனின் மூச்சுக்குமிழ்களைப் பின்
தொடர்ந்து சற்றுத்தூரம் தலையைத் தூக்காமலே நீந்திச்செல்லலாம். அதாவது போகும் திசை
பற்றிய கவலை தேவையில்லை. ஆனால் அதற்கு நீங்கள் அந்தக்கூட்டத்தில் முன்னுக்குச்
செல்லும் நீச்சல் வீரனாய் இல்லாமலிருத்தல் அவசியம். ஆனாலும் ஒரு சின்ன அறிவுரை.
முழுக்க முழுக்க அவர்களை நம்பியிராது போட்டிகளின் போது கடலில் போடப்பட்டிருக்கும்
மிதவைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் முன்னால் நீந்துபவர்கள் திசை
மாறினால் நீங்களும் திசை மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
நீச்சல் போட்டிகளின் போது முன்னே போகும் நீச்சல் வீரர்களைத் தொடரும் போது மூச்சுக்குமிழ்களைப் பின் தொடர்ந்து
சிரமப்படாமல் திசையறிந்து போகும் நன்மையை விட இன்னொரு முக்கியமான நன்மை
இருக்கிறது. அதாவது நல்ல வேகமாக நீந்தும் ஒரு நீச்சல் வீரனுக்குப் பின்னால்
நீந்துபவர் அதிக சிரமப்படாமல் நீந்தலாம் என்று சொல்லப்படுகிறது. அதாவது முன்னால்
நீந்துபவரின் துடுப்பு வலிப்பின் போது நீர் முன்னுக்கு இழுக்கப்படுவதால் பின்னால் நீந்துபவரின் உடலும் சற்று
இழுக்கப்படுவதால்(pulling effect) அவர் அதிகச் சிரமப்படத் தேவையில்லை கடலில் நீங்கள் நீந்திக்கொண்டிருக்கும்
போது ஒரு வேகப்படகு உங்களுக்கு அருகால் சென்றால்
நீங்கள் அதனை நோக்கி இழுக்கப்படுவதை இன்னும் தெளிவாக உணரலாம். நீங்கள் கடைசியாகச்
சொல்லப்பட்ட இரண்டு விடயங்களையும் நான் அனுபவபூர்வமாக அறிந்ததில்லை. ஆரம்பத்தில்
ஒன்றாக நீந்தினாலும் சற்று நேரத்தின் பின், நல்ல நீச்சல் வீரர்கள் எல்லோருமே வேகமெடுத்து இந்த இரண்டு நன்மைகளையுமே
நான் பெற முடியாத தொலைவுக்குச் சென்று விடுவது இதன் காரணமாக இருக்கலாம்.
கடல் நீச்சல்..... என்னைப் பொறுத்தவரை அதுவொரு அற்புதமான, அட்டகாசமான, அருமையான, அலாதியான அனுபவம். ஏற்கனவே அதில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர
ஏனையவர்களுக்கு இந்தக்கட்டுரைஒரு தூண்டுகோலாக அமைந்தால் அது எனக்கு
மகிழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக