திங்கள், 14 ஏப்ரல், 2014

சுனாமி 2004(ஆறாம் அத்தியாயம்)


சுனாமி 2004(ஆறாம் அத்தியாயம்)

ஏழெட்டு நிமிடங்களுக்கு பந்து கால் மாறிக்கொண்டிருந்ததே தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் நிகழவில்லை. வீமண்ணாவும் வியூகங்களை மாற்றி மாற்றி எங்களை அங்கே போ இங்கே போ என்று விரட்டிக் கொண்டிருந்தாலும் பறக்கும் பருந்துகள் பேற்றுக் காவலனின் கைகளுக்குப் பந்து போகவில்லை. எதிர்ப்பக்கமும் அதே நிலைமை தான். இப்படியே சற்று மந்தமாகப்போய்க்கொண்டிருந்த விளையாட்டை மாற்றியது பறக்கும் பருந்துகள் கடுகு தான். மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து கொஞ்சம் முன்னால் கடுகின் கால்களுக்குப் பந்து கிடைத்ததும் வெட்டி விளையாடாமல் ஒரே அடி. என் வலது காதுக்குப் பக்கத்தில் பந்து கூவிக்கொண்டு போனது. மோகன் அண்ணாவுக்கு பிடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போக, அவர் தட்டிவிட்ட பந்து துரதிஷ்டவசமாக அடித்த வேகத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த கடுகின் கால்களிலேயே தஞ்சம் புக, மீண்டும் ஒரு கிண் என்ற அடி. பார்வையாளர்களின் ஆரவாரத்தையும் மீறிக்கொண்டு பந்தைப்பிடிக்கப்பாய்ந்து முடியாமற்போய் மோகன் அண்ணா விழுந்த சத்தம் கேட்டது. “ என்னடா கேசவா, பந்தைத் தலையால் முட்டியிருக்கலாம் தானே “ என்று வீமன் அண்ணா என்னைக் கடிந்து கொண்டார்.

எனக்கென்றால் பந்தைத் தலையால் முட்டுவது என்றாலே அலர்ஜி. நெற்றிக்குச் சற்று மேற்பட்ட பகுதி தான் இதற்குப் பாவிக்க வேண்டுமென்றாலும்  அந்தப் பகுதியைப் பாவிக்கும் போது கண்கள் இறுக மூடிக்கொண்டு விடும். அதன் பின் பந்து எங்கே போகிறது என்றும் தெரியாது. உச்சி மண்டையைப் பாவித்தாலோ வேறொரு பிரச்சனை. தலை சற்று நேரத்துக்குக் கிறுகிறுப்பதோடு ஒவ்வொருத்தரும் இரண்டிரண்டு  பேராய்த்தெரிவார்கள். என்னடா, இவ்வளவு பேர் மைதானத்துக்குள் என்ன செய்கிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருக்கும்.

அதன் பின்பு இடைவேளைக்கு முன்னர், வீமன் அண்ணா இலாவகமாக வெட்டிக்கொண்டு வந்து வினோத்தின் கால்களுக்கு அனுப்ப வினோத்தின் மிக வேகமான அடி பறக்கும் பருந்துகள் பேற்றுக் காவலனால் மிக அனாயசமாகப்பிடிக்கப்பட்டது. கண்ணனின் மட்டையடிக்கும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லை.

இடைவேளையின் போது தண்ணீரைக் குடிக்கும் போது  தலையை  அண்ணாந்து கடைக்கண்ணால் நளினியின் வீட்டைப் பார்த்தேன். கொடிகள் ஒன்றும் தெரியவில்லை. பின்னே, எனது விளையாட்டுக்குப் போய் யாராவது கொடி காட்டுவார்களா என்று நினைத்துக்கொண்டேன். அருகில் வந்து தண்ணீர்ப்போத்தலை வாங்கிக் கொண்ட கண்ணன் கொடி அசைந்ததும் நினைப்பு வந்ததா, நினைப்பு வந்ததும் கொடி அசைந்ததா?’ என்று பாடி விஜயகாந்த் மாதிரி நாக்கைக் கடித்துக்கொண்டு கண்ணடித்தான். கண்ணன் ப்ரியாவின் ஒன்று விட தம்பி. ஏற்கனவே எங்களுக்கிடையிலிருந்த ஈர்ப்பு அவனுக்கு லேசாகத் தெரிந்தே இருந்தது. போதாததற்கு ப்ரியா இன்று எனது விளையாட்டை பார்க்கப்போவதாக வேறு அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். இனி இவனின் வெறும் வாய்க்கு இந்த விடயம் மெல்லும் அவலாகத்தான் இருக்கப் போகிறது.

இடைவேளை முடிந்து மீண்டும் விளையாட்டுத் தொடங்கியபோது எங்கள் கழக வீரர்களிடம் அதிகமான சுறுசுறுப்பைப் பார்க்க முடிந்தது. அந்த சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொள்ள  இரண்டு எதிர்த்தரப்பு வீரர்களை இலாகவமாகத் தவிர்த்துக்கொண்டு முன்னேறி கண்ணனுக்கு வாய்ப்பாகப் பந்தைத்தட்ட, கண்ணனின் மட்டையடி தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் பேற்றுக்காவலனின்  கால்களுக்கு இடையில் அற்புதமாகப் புகுந்தது. எல்லோரும் சந்தோஷத்துடன் கண்ணனைக் கட்டிக்கொண்டோம். அவன் என் முதுகில் தட்டி ”பந்த நல்ல வழமாத் தந்தீங்கள் கேசவனண்ணா..எல்லாரும் கவனிச்சு வையுங்கோ. பந்த மேலால் அடிச்சு கோல் போடுறத விட இது தான் சரி போல இருக்கு என்றான்.

அதன் பின் இன்னும் சற்று உற்சாகத்துடன் நாங்கள் விளையாடினோம். ஆனாலும் வீமண்ணாவின் நுணுக்கமான அடி, வினோத்தின் முரட்டுத்தனமான அடி எல்லாமே பெற்றுக் காவலனின் கைகளுக்குள் தான் தஞ்சம் புகுந்தது.அதேபோல் எதிர் வீரர்கள் அடித்த பந்தும் மோகன் அண்ணாவின் கைகளிலிருந்து தப்பவில்லை.. விளையாட்டு முடிவதற்கு ஓரிரண்டு நிமிடங்கள் இருக்க, வீமண்ணா தூக்கியடித்த பந்து என்னை நோக்கி வந்தது. “ Head பண்ணுடா கேசவா” என்று வீமண்ணாவின் குரலும் கேட்டது. என் மூலமாக எங்கள் அணி வெல்வதற்குக் கடைசி நேரத்தில் நேரத்தில் கிடைத்த வாய்ப்பு என்று என் மனதுக்குள் பட்சிகள் கூவ, அந்த நேரத்தில் எனக்குக் காட்டப்பட்ட பச்சைக்கொடியும் ஞாபகத்துக்கு வர என் வாழ்வில் முதல்முறையாக கண்ணைத்திறந்து கொண்டு பந்தை அப்படியே நெற்றியால் உள்வாங்கி திசையை மாற்றி பேற்றுக்கம்பத்தின் மூலையினுள் செலுத்தினேன். பறக்கும் பருந்துகள் பேற்றுக் காவலன் பெயருக்கேற்றாற்போல் பறந்து பிடிக்க முயற்சி செய்தும் அவனை ஏமாற்றி விட்டு பந்து வலையினுள் நுழைய என்னுடலில் சிலிர்ப்பு, புல்லரிப்பு, ரோமாஞ்சணம், புளங்காகிதம் என இன்னபிற உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் ஏற்பட்டன.  நான் எங்கள் கழகத்துக்கு  விளையாடத்தொடங்கிய பின் எனக்குக் கிடைத்த முதலாவது பேறு. பந்து வலையினுள் சிக்கிக்கொள்ள, நான் எனது கழக வீரர்களின் அன்புப்பிடியினுள் சிக்கிக் கொண்டேன். எங்கள் பேற்றுக் காவலனான மோகன் அண்ணா கூட ஓடி வந்து முதுகைத் தட்டி தலையைத்தடவி விட்டுப்போனார்.

ஒருவாறு எல்லாம் ஓய்ந்து, பந்தைத் தட்டுவதற்கு, தீப்பிடித்தாற்போல் நின்ற  பறக்கும் பருந்துகள்வீரர்களுக்கு வாய்ப்புக்கொடுக்கப்பட்டது. எங்கள் முன்னணி வீரர்களை  இலாவகமாத் தவிர்த்துக்கொண்டு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஓங்கி அடித்த பந்து பேற்றுக்கம்பத்திற்கு இரண்டு அடிகள் மேலால் பறக்க, சரியாக அந்தக்கணத்தில் விசிலும் ஊதப்பட்டது.

அதுவரை காத்திருந்த ரவி, நாதன், உதயன், மகேஷ் எல்லோரும் ஓடி   வந்து கட்டிக் கொண்டது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வீமனண்ணா வந்து முதுகைத்தட்டி விட்டு “கேசவன், வாய்ப்புக்கிடைக்கக்குள்ள  பயன்படுத்தினாத்தான் hero. இல்லாவிட்டால் zero. நீ இண்டைக்கு hero” என்று சொல்லி விட்டுப்போனார். மகேஷ் “டேய் கேசவா, நீ உன்ன நோக்கி வந்த பந்த வேணாம் என்று தலையாட்ட அது எதேச்சையாக உன்ட தலையில பட்டு goal post க்குப் போனது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனா நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்” என்று வெறுப்பூட்ட, நான் செய்ய நினைத்ததை விமலன் செய்தான். “ஆ”   என்று கத்திய மகேஷ் “ டேய் குண்டா,உனக்கு என்னடா?” என்று கேட்க மீண்டும் ஒரு அடி விழுந்தது.

“டேய், உங்கட சண்டய பிறகு வச்சுக் கொள்ளுங்கோடா . கேசவன் அடிச்ச முதல் goal அ கொண்டாட வேணும். இண்டைக்கு இரவு என்ட செலவில எல்லார்க்கும்  கொத்து ரொட்டி’’ என்று ரவி அறிவிக்க  “ இண்டைக்கு  வெள்ளிக்கிழமடா. நாளைக்கு கடல்ல நீந்தி விட்டு ஒரு change க்கு மத்தியானம் கொத்துச்சாப்பிடுவம்” என்ற உதயன்  ஒரு கடல் விலங்கு.ஒரு நாள் முழுவதும் கடலில் நீந்தி விட்டு சரி இப்ப போவமா?’ என்று கேட்டாலும்   இன்னும் கொஞ்ச நேரம் நீந்துவமா என்று கேட்கும் ஒரு கடல் பிசாசு. அவனைப்பொறுத்தவரை என்ன கொண்டாட்டம் என்றாலும் அன்று கடலில் நீந்தினால் தான் கொண்டாட்டம் முழுமை பெறும். எங்களில் வினோத்தைத்தவிர மற்ற எல்லோருக்குமே நீச்சலில் ஓரளவு விருப்பம் என்றாலும் அவனளவுக்கு வெறி கிடையாது. 

இதற்கிடையில் கலைந்து சென்று கொண்டிருந்த பார்வையாளர்களும், ஆதரவாளர்களும் எங்கள் வெற்றிக்கு வாழ்த்தியவாறும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த கண்ணனையும் என்னையும் பாராட்டியவாறும் சென்று கொண்டிருக்க கடுகு என்று அழைக்கப்படும் விஜயன் தன்னுடைய நண்பனையும் என்னிடம் அழைத்து வந்தான். அவன் தான் ப்ரியாவுடன் சேட்டை விட்டதாக ரவி முன்பே காட்டியிருந்தான். “ super head பண்ணின  மச்சான். இவனும் உன்னப் பாராட்டோணுமாம் எண்டு வந்தவன்.. இவன் கமல்” என்று கடுகு அறிமுகப்படுத்தினான். இருவரும் கை கொடுத்துக்கொண்டோம். “ நல்லா விளையாடுறீங்கள். உங்கட முதல் goal எண்டு கதச்சவங்கள். அதான் வாழ்த்திட்டுப் போக வந்தனான்” என்றான். அவனது வாழ்த்தில் உண்மையாகப் பாராட்டும் தொனி தெரிந்தது. “யார, இவனையோ நல்லா விளையாடுற எண்டு சொல்ற? வெறும் பெட்ட விளையாட்டு. முட்டாம, மோதாம விளையாடுறதுக்கு இது என்ன கிரிக்கெட்டோ?கை பந்தத்தொடக்கூடாதே தவிர மற்றப்படி ரக்பி மாதிரி விளையாடோணும்” என்று முரட்டுக்குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன். வினோத்தின் அப்பா.அவர் கிட்டே வர முன்பே சாராய நெடி அடித்தது. கமலின் முதுகில் தட்டி “ Thanks, நீங்களும் நல்லா விளையாடுறீங்கள் என்றேன். “ சரி,பிறகு சந்திப்பம்” என்று அவர்கள் புறப்பட “தம்பி, நான் இப்படி வெளிப்படையாச் சொல்லுறன் என்று கோபப்படுறியோ?” என்று என்று என் கையைப் பிடித்துக்கொண்டு வினோத்தின் அப்பா கேட்டார். “ இல்ல ஐயா ,நீங்க சொன்னா அது சரியாத்தானிருக்கும். எனக்குக் கோபம் இல்ல” என்றேன். 20 வருடங்களுக்கு முன்னர் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். உயிரைக் கொடுத்து விளையாடுவார். என்றும் அவர் விளையாடியதை விட கால் கை முறித்து கிடந்த நாட்கள் தான் அதிகம் என்றும்  என்று அனேகர் சொல்லி அறிந்திருக்கிறேன். தான் நேசித்த ஒரு விளையாட்டு சம்பந்தமாக கருத்து வெளியிட, அறிவுரை சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்பது எனது கருத்து.. அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு மேலும் கதைக்க முயற்சிக்க “அப்பா, வீண் பிரச்சன வேணாம். உடனே வீட்ட போங்கோ” என்று வினோத் வெருட்ட அதோடு உதயனும் ரவியும் “ஓம் அங்கிள். நீங்க வெளிக்கிடுங்கோ” என்று சொல்ல உடனே பெட்டிப்பாம்பாக அடங்கி அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.   

“ஏண்டா, இப்படிப்பேசிக்கலைக்கிற? அவர் என்னிலல அக்கற இருக்கிறதால தானே அறிவுர சொன்னவர்.” என்றேன்.  இவர்களுக்கெல்லாம் அப்பா இருப்பதால் அப்பாவின் அருமை தெரியாது என்று நினைத்துக்கொண்டேன்.

“ சரிடா, நான் வெளிக்கிடப்போறன். நாளக்கு எத்தன மணிக்கு கடல் குளிப்பம்?” என்று கேட்க உதயன்   “கடல் குளிக்க எண்டு சொல்லக்கூடாது. கடல்ல நீந்த எண்டு சொல்லோணும்” என்று திருத்தினான். “ போடா இவனே. நாங்கள் எல்லாரும் கடல் குளிக்கத் தான் நீ மட்டும் தான் நீந்த” என்று மகேஷ் அவனைத் திருத்தினான். எல்லோரும் ஏக மனதாக 9 மணி என்று முடிவெடுத்ததும்  நான் கிளம்ப ரவியும் என்னுடன் புறப்பட்டான். நளினி வீட்டைத் தாண்ட முன்பு திரும்பிப் பார்க்க,  வாசலில்  நளினி நிற்பது தெரிந்தது. துவிச்சக்கர வண்டியை நிறுத்துவோமா என்று யோசிக்கும் போதே “ கேசவன் கொஞ்சம் நிக்கிறீங்களா?” என்று நளினியின் குரல் கேட்க நான் ரவியைத் திரும்பிப்பார்க்க “ நல்லதே நடக்கும் மச்சான். நாளக்குச் சந்திப்பம்.” என்றவாறு போய் விட்டான். “ஆக்கள் போய்வாற இடம். உள்ள வாரீங்களோ? எங்கட வீட்ட ஆக்கள் இல்ல” என்று நளினி  மீண்டும் அழைக்கவும் என் தயக்கம்  விலகாமல் தயங்கி நின்றேன். இப்ப நீங்கள் உள்ள வரப்போறீங்களோ இல்லையோ? என்று உள்ளேயிருந்து ப்ரியாவின் குரல் கேட்டது.

(தொடரும்)                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக