விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்கள்.
விடுதலைப் புலிகளே இப்போது இல்லை. பழைய
விடயங்களைக் கிளறுவது அவசியம் தானா என்று இந்தக் கட்டுரையை வாசிக்கும் பெரும்பாலானவர்கள் நினைக்க மாட்டார்கள்.
விடுதலைப்புலிகள்......2009 வரை தமிழர்களின் மாபெரும் சக்தியாக விளங்கியவர்கள்.
இன்று அவர்கள் இல்லை என்பதற்காகவும், அவர்களின்
சில செயல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியன அல்ல என்பதற்காகவும் அவர்களை மறப்பது ஏற்றுக்
கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அவர்கள் தாய்
நாட்டிற்காகவும் , தமிழ் மக்களுக்காகவும் செய்த வீரச்செயல்கள்,
தியாகங்கள், அர்ப்பணிப்புகள், அவர்கள்
எதிர்கொண்ட இன்னல்கள், அடைந்த துயரங்கள், அந்த அமைப்பில் இருந்ததற்காக இன்னும் அடைந்து கொண்டிருக்கும் துயரங்கள்
எல்லாம் மறக்கக் கூடியன அல்ல.
1972 இல் பிறந்து, வல்வெட்டித்துறையிலும் அதனை அண்டியுள்ள பொலிகண்டி,
உடுப்பிட்டி, கம்பர்மலை,கெருடாவில்,தொண்டைமானாறு, ஆதிகோவில் ஆகிய இடங்களிலும் பிறந்து, வசித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, போராட்ட வாழ்வுக்கு தங்களின் மகத்தான பங்களிப்பையும், இறுதியில் தங்கள் உயிரையும் வழங்கி மாவீரர்களான எங்களது வகுப்புத் தோழர்கள்,தோழிகள்
அனைவருக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.
1990 இல் அல்லது 1991 இல் என நினைக்கிறேன்
....எங்கள் ஊரின்(வல்வெட்டித்துறை) அம்மன் கோயில் முற்றத்தில் ரகுபதி (என்று
ஞாபகம்) என்று அழைக்கப்பட்ட ஒருவரால்
விடுதலைப்புலிகளின் உலங்கு வானூர்தி என அழைக்கப்பட்ட ஒரு வகை இயந்திரம்
ஒன்று பரீட்சார்த்தமான பறப்பு முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டது. ஒரே புகை மண்டலம்.
“ம்டக், ம்டக்” என்றொரு வித்தியாசமான சத்தத்தினால் அந்த இடமே அதிர்ந்தது. அந்த
இரவு நேரத்தில் சும்மா தெருவில் உலாவிக் கொண்டிருந்த நாங்கள் விடயத்தைக்
கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்த போது எப்படியோ அந்த விபரத்தை அறிந்த எங்கள்
ஊரவர்கள் நிறையப் பேர் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். உலங்கு வானூர்தி என்று
குறிப்பிடப்பட அந்த இயந்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்று இப்போது எனக்கு
ஞாபகமில்லை. ஆனாலும் அருகில் இருந்த நண்பன் பாலனிடம் நான் முணுமுணுத்தது
ஞாபகமுள்ளது. “என்னப்பா, இதப் பாக்க ஹெலிகொப்டர் மாதிரியே இல்ல” அருகிலிருந்த ஒருவர் “இதப்
பேசாம தேங்காய் புடுங்கிற மெஷினா மாத்தினா நல்லது” என்று சொல்ல, அதற்கு இன்னொருவர் “அதுக்கு
கொஞ்சமாவது மேல போனாத் தானே” என்று கிண்டலாகக்
சொன்னார்.
அன்று அந்தப் பறப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதைப்போல இன்னும் எத்தனையெத்தனை முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கும்.
ஆனாலும் “தன் முயற்சியில் சற்றும் தளராத
விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி அங்கு தொங்கும் உடலை விழுத்தினான்” என்று நாங்கள் சின்ன வயதில்
ஒவ்வொரு அம்புலிமாமா கதையிலும் படித்தது போல் “ தங்கள் முயற்சியில் சற்றும் தளராத
விடுதலைப் புலிகள், இறுதியில் வானில் பறந்து, தங்களின் பறப்புப் பற்றி எதிர்மறையாகவும் கேலியாகவும் கதைத்தவர்களின்
கதைகளை எல்லாம் கீழே விழுத்தினர்.
விடுதலைப்புலிகளின் சொந்த முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட விமானமல்ல
என்றும் செக்கோசிலவாக்கியா நாட்டிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமானமாக
நம்பப்பட்டாலும் கூட அவற்றின் பாகங்களைத் தனித்தனியாகக் கடல் வழியாக இலங்கை, இந்தியக் கடற்படைகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்
கெடுபிடிகளையும் தாண்டி கொண்டு வந்து அவற்றைப்
பொருத்திப் பறப்பதென்பது சாதாரண விடயமல்ல. வான்புலிகள் பயன்படுத்தினார்கள் என்று
நம்பப்பட்ட செக்கோசிலவாக்கியா நாட்டின் Z-143
என்ற தயாரிப்பு தனித்ததொரு இயந்திரத்தையும்,
நான்கு இருக்கைகளையும் கொண்ட பயிற்சிக்குப் பயன்படுத்தும் விமானமாக இருந்த
போதிலும் கூட விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லுனர்கள் அதன் அடிப்பகுதியில்
குண்டுகள் தாங்கிச் செல்லக்கூடியவிதத்தில் மாற்றி வடிவமைத்திருந்தார்கள்.Z-143
இலகுரக விமானங்களை இராணுவத் தேவைகளுக்குப் பாவித்தது
விடுதலைப்புலிகளின் அமைப்பு மட்டும் தான். வான்புலிகள் விடுதலைப்புலிகளின்
மிகப்பெரும் சக்தியாக விளங்கினார்கள்’ என்று சொல்ல முடியா
விட்டாலும் கூட 2007 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும்
பெருத்ததொரு அச்சுறுத்தலாக விளங்கினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
1998 பதினோராம் மாதம் 19ஆம் திகதி மாவீரர்
வாரத்தில் முள்ளியவளை மாவீரர்களின் துயிலுமில்லத்திற்கு விடுதலைப்புலிகளின்
விமானமொன்று பூக்கள் தூவியது என்று அவர்களின் இணையத்தளமான ‘தமிழ்நெட்’ மற்றும் அவர்களது ஒலிபரப்பு சேவையான ‘புலிகளின்
குரல்’ தெரிவித்த செய்தி தான் விடுதலைபுலிகளிடம் விமானம்
இருப்பதை உலகுக்கு வெளிப்படுத்தியிருந்தது.
அந்த மாதத்தின் ஆரம்ப நாட்களில் இலங்கைக்
கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று தொண்டைமானாற்றுக் கடற்பரப்பில், ஒரு அடையாளம் காணப்படாத சிறிய விமானமொன்றைக் கண்டு,
அது விடுதலைபுலிகளின் விமானமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்திருந்தது.
மேலும் 1996 இல் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்த முல்லைத்தீவு இராணுவ
முகாமின் ஓடுபாதை மூலம் அது தன்னுடைய பறப்பை மேற்கொண்டிருக்கலாம் என்றும்
தெரிவித்திருந்தது.
1998 பதினோராம் மாதம் 27ஆம் திகதி விடுதலைப்புலிகள் தங்களிடம் விமானம் இருப்பதாகத் தெரிவித்த
செய்தியை மறுத்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த இது இலங்கை
இராணுவத்தின் மீதான விடுதலைபுலிகளின் ஒருவகை உளவியல் தாக்குதல் என்று கூறினார்.
ஆனால் இதற்கு மூன்று நாட்களின் பின் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட படங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சன்டே டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரும், இராணுவப் பகுப்பாய்வாளருமான இக்பால் அத்தாஸ் முல்லைத்தீவு விமான
ஒடுபாதையில் சிறிய ரக உலங்கு வானூர்தி இருப்பதை தன்னுடைய புகழ்பெற்ற ‘களநிலை அறிக்கை’யில் உறுதிப்படுத்தியிருந்தார். இது ஆஸ்திரேலியத்
தயாரிப்பான, “ரொபின்சன் உலங்கு வானூர்தி” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட R-44 வகையைச் சேர்ந்த
நான்கு இருக்கைகளைக் கொண்ட இராணுவத் தரப்பு அல்லாதாரால் (civilians) பாவிக்கப்படும் உந்து தண்டு இயந்திரத்தைக் கொண்ட (piston engine) இலகு ரக உலங்கு வானூர்தியாக இருக்கலாம் என்று இலங்கை விமானப்படை
தெரிவித்திருந்தது. அந்த நாட்களில் இந்த வகை உலங்கு வானூர்தி மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளிலும் கூட அவதானிக்கப்பட்டு இருந்தாலும் கூட அது
விடுதலைப்புலிகளின் விமானமா என்று உறுதிப்படுத்தப் பட்டிருக்கவில்லை.
அதைத் தொடர்ந்து இலங்கையின் ஆங்கில,சிங்கள செய்திப்பத்திரிகைகள் விடுதலைப்புலிகளுக்கு அவுஸ்திரேலியாவுடன்
ஏற்பட்ட தொடர்புகள் இந்த வகையான இலகு விமானங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்
என்று ஊகம் தெரிவித்தன.
மேலும் வன்னியின் பல பிரதேசங்களிலும் வாழ்ந்த மக்கள் விமானங்களைப் பல
சந்தர்ப்பங்களில் அந்தக் காலப்பகுதியில் கண்டுள்ளனர். அவர்கள் வெளியுலகத்துடன்
தொடர்புகளை மேற்கொண்டு, தங்கள் உறவினர்கள்,
நண்பர்களிடம் கதைத்துக் கொண்ட போது இது பற்றி அவர்களிடம் தெரிவித்திருந்தார்கள்.
2005 இல் வன்னிக்கு விஜயம் செய்த, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைச்சேர்ந்த நோர்வே நாட்டினரும்
இரணைமடுப் பகுதிக்கு அருகில் விமான ஓடு பாதையைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார்கள்.
இது 1990 இல் இலங்கை விமானப்படையினரின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கைவிடப்பட்ட
விடுதலைப்புலிகளின் முகாமுக்கு மிக அருகில் இருந்தது.
மூன்றாம் மாதம் 16 ஆம் திகதி 2007 இல் “டெய்லி
மிரர்” பத்திரிகையின் இராணுவ செய்திப் பகுப்பாய்வாளரான சுனில் ஜயஸ்ரீ
புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்ட ஒடுபாதை 1250 மீட்டர்கள் நீளமானது எனவும்
இதனால் இலகு ரக விமானங்கள் மட்டுமல்ல பெரிய விமானங்கள் கூட விடுதலைப்புலிகளின்
கைவசமிருக்க வாய்ப்புண்டு அல்லது விரைவில் அவை தங்களிடம் வந்து சேருமென்று
எதிர்பார்க்கிறார்கள் என்று தனது செய்தி அறிக்கையில் தெரிவித்து இலங்கை
அரசாங்கத்துக்கும், அதன் படைகளுக்கும் கிலியை
ஏற்படுத்தியிருந்தார். இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு உதவிகள்
மூலமாகவே விடுதலைப்புலிகள் இந்த அளவுக்கு வளர்கிறார்கள் என்று வெளிநாடுகளைச்
சாடியிருந்தது.
இது தவிரவும் வன்னிப்பிரதேசத்துக்கு மேலால்
பறந்த இலங்கை விமானப்படையின் ஆளில்லா
விமானங்கள் மூலமாகவும் விமான ஒடுபாதைகள் கண்காணிக்கப் பட்டு விமானத் தாக்குதல்கள்
நடத்தப்பட்டிருந்தன. ஆனாலும் விடுதலைப்புலிகள் தங்களுடைய திறமை மற்றும் அனுபவம் அடிக்கடி விமானங்கள் நிறுத்தி
வைக்கப்படும் இடங்களை மாற்றிக் கொண்டிருந்ததால் ஒன்றுமே தாக்குதலுக்கு
உள்ளாகியிருக்கவில்லை. அத்துடன் விடுதலைப்புலிகள் தந்திரோபாய யுக்தியாக, போலியாக விமானங்கள் போன்ற தோற்றங்களை (dummies)
உருவாக்கி அவற்றை இலங்கை விமானப் படையினரின் பார்வையில் விழுத்தி. தாக்குதலுக்குத்
தூண்டி தங்களது விமானங்கள் இடைக்கிடை தாக்குதலுக்கு உள்ளாவதாக ஒரு மாயையை
ஏற்படுத்தியிருந்தார்கள்.
ஆனாலும் கூட விடுதலைப்புலிகள் விமானத்தை ஒரு
தாக்குதல் ஆயுதமாகப் பாவித்தது 2006 இல் தான். 2006 முதல் 2009 வரை இலங்கை
விமானப்படைக்குத் ‘தண்ணி காட்டி’ அந்த இலகு ரக விமானங்களை அவர்கள் கையாண்ட விதம்,
இடைப்பட்ட அந்த ஒன்பது(1998-2006) வருடங்களில் அவர்கள் சிறப்பாகப் பயிற்சி
பெற்றிருப்பார்கள் என்பதை சொல்லாமற் சொல்லியது.
பலாலி இராணுவ முகாம்
2006 எட்டாம்
மாதம் 11ஆம் திகதி ‘தமிழ்நெட்’ இணையத்
தளம் ஒரு பரபரப்பான தகவலைத் தெரிவித்திருந்தது. வன்னிப்பகுதியை நோக்கி கடுமையான
எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த பலாலி இராணுவ முகாமின் மீது பறந்த
அடையாளம் காணப்படாத சிறிய ரக விமானமொன்று அந்த முகாமின் மீது ஏவுகணைத் தாக்குதலை
நடத்தியதைத் தொடர்ந்து எறிகணைத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டது என்ற தகவல்
தான் அது. இதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரான
இராசையா இளந்திரையனின் பேட்டியையும் ஒலிபரப்பியிருந்தது. அதில் அவர் “நாங்கள்
தாயகத்தையும், தாயகத்தின் மக்களையும் காப்பதற்கு நாங்கள்
தரைப்படை, கடற்படை மட்டுமல்ல விமானப்படையையும்
பயன்படுத்துவோம்” என்ற அவரது பேச்சை இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான கெஹலிய
ரம்புக்வல “அப்படியானால் அவர்கள் கயிறுகளில் தொங்கிக் கொண்டு வந்து தான் தாக்குதல்
நடத்த வேண்டும்” என்று கேலி செய்திருந்த
போதிலும் இராணுவப் பகுப்பாய்வாளரான இக்பால் அத்தாஸ் பலாலி இராணுவ முகாமில் இருந்த
இராணுவத்தினரின் தனிப்பட்ட தொடர்புகள் மூலம் அந்தச் செய்தி உண்மையாக இருப்பதற்கான
வாய்ப்புக்கள் உண்டு என்று தெரிவித்திருந்தார்.
இது தவிர, அந்தத்
தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு வன்னியில் கொண்டாடப்பட்ட கரும்புலிகள்
தினத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் சில கரும்புலிகளுடன்
எடுத்துக் கொண்ட படமொன்றின் பின்னணியில் ஒரு விமானமொன்று தெரிந்ததுடன், விமான ஓட்டி அமரும் பகுதியிலிருந்து பொறிகள் பறப்பதும் தெளிவாகத்
தெரிந்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம்
மறுத்ததானாலும் புலிகளும் மிகத் தெளிவாக இதைப் பற்றி சொல்லாததானாலும் புலிகளின் அதிகாரபூர்வமான
முதலாவது விமானத் தாக்குதல் என்று சொல்லப்படுவது 2007 மூன்றாம்
மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலைத் தான். 2001 ஏழாம் மாதம் ஏற்கனவே இவ்விமான நிலையம்
தாக்குதலுக்குள்ளானது குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டிய விடயம்.
கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை
விமானப்படைத் தளத்தின் மீது அன்று நள்ளிரவு விடுதலைப் புலிகளின் விமானங்கள்
தாக்குதல்களை நடத்தியதில் 3 விமானப் படை வீரர்கள் பலியானார்கள். 17 பேர்
காயமடைந்து நீர்கொழும்புவைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.
விடுதலைப் புலிகளின் இலகு விமானம்
ஒன்று விமானப் படைத்தளம் மீது வெடிபொருள்களைக் கொட்டியதாகவும், அதனால் இரண்டு
தடவைகள் பெரும் குண்டு வெடிப்பு நடைபெற்றதாகவும் விமானப்படைப் பேச்சாளர் கப்டன்
அஜந்த டி சில்வா தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளின் விமானங்கள் விமானத்
தளத்தின் மீது பறந்ததை அவ தானித்ததும் அங்குள்ள பிரதான கட்டமைப்புகள் தெரியாதவாறு
வெளிச்சத்தை அணைத்துவிட்டதாக அரச தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலின்போது
இரண்டு உலங்கு வானூர்திகள் சேதமடைந்ததாகவும் பின்பு அரசாங்கத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின்
இரண்டு விமானங்கள் தாக்குதல்களை நடத்திவிட்டு பத்திரமாக வன்னிக்குத் திரும்பியதாக
இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் தெரிவித்திருந்தார். இலங்கை விமானப்படையின்
கிபிர் மற்றும் மிக் 27 ரக விமானங்களை இலக்கு வைத்து
அவற்றின் தரிப்பு நிலையங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர்
தெரிவித்தார். இதேவேளை நேற்றைய நள்ளிரவுத் தாக்குதல்கள் போன்று இனிமேலும் தாக்குதல்கள்
தொடரும் என்றும் இது ஒரு பரீட்சார்த்த தாக்குதல் என் பது மட்டுமன்றி,தமிழ் பொதுமக்களை இலங்கைப் படைகளின் வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்றும் இளந்திரையன் ரொய்ட்டருக்கு பின்பு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள சர்வதேச
விமான நிலையம் அடுத்த நாள் காலை 8.30 மணிவரை மூடப்பட்டது. வேறு நாடுகளில் இருந்து வந்தடைய வேண்டிய பயணிகள் விமானங்கள் இந்தியா,
துபாய், அபுதாபி, ஆகிய
நாடுகளுக்கு வழி மாற்றப்பட்டன.
இத்தாக்குதல் புதிய அத்தியாயம் ஒன்றைத்
தொடக்கி வைத்திருப்பதாக இரா ணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் அதன் பின்பு உதயனுக்குத்
தெரிவித்திருந்தார்.
பலாலி இராணுவ முகாம்
ஏற்கனவே ஒரு உரிமை கோராத தாக்குதல் ஒன்று
இங்கு நடத்தப்பட்டது (2006, எட்டாம் மாதம் 11ஆம் திகதி) குறிப்படத்தக்கது. 2007 நான்காம் மாதம் 23ஆம்
திகதி பலாலிப் பிரதேசத்தின் அதியுயர் பாதுகாப்புப் பகுதியில் ஊடுருவிய இரண்டு விடுதலைப்புலிகளின் விமானங்கள்
அங்கிருந்த பதுங்கு குழிகள், பொறியியல் பிரிவு, மற்றும் இராணுவக் களஞ்சியங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஆறு
இராணுவத்தினர் கொல்லப்பட்டு முப்பதுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து
மணித்தியாலங்களின் பின்பும் தொடர்ந்து இராணுவக் களஞ்சியத்தில் வெடிப்புக்கள் இடம் பெற்றுக்
கொண்டிருந்ததும், யாழ் குடாநாட்டுக்கான மின்சார விநியோகம் கிட்டத்தட்ட மூன்று
மணித்தியாலங்களுக்குத் தடைப்பட்டிருந்ததும்,
கைத்தொலைபேசிகளின் வலையமைப்புச் சேவைகள் சில மணித்தியாலங்களுக்கு
இடைநிறுத்தப்பட்டு இருந்ததும், சில உலங்கு வானூர்திகள் பலாலி
இராணுவ முகாமில் அவசரமாக தரையிறங்கி மேலேறியதும், ரத்மலானை
விமான நிலையத்துக்கும் கொழும்பிலிருந்த
இராணுவ மருத்துவமனைக்குமாக எச்சரிக்கைச் சங்கொலியுடன் விரைந்த மருத்துவ வண்டிகளும், தாக்குதலுக்குள்ளான முகாமின் வெடிப்புச் சத்தம் ஓய்ந்த பின் அங்கிருந்து
வன்னிப்பகுதி நோக்கி கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட எறிகுழல் தாக்குதல்களும், பலாலி இராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின்
தீவிரத்தன்மையை எடுத்துக் காட்டுவதாக இருந்தன.
கொலன்னாவை,முத்துராஜவெல
எண்ணெய்த் தாங்கிகள்
பளைத்தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று
நாட்களின் பின் அதாவது 26ஆம் திகதி
கொழும்பிலுள்ள விமானப்படையினரின் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கின. அடையாளம்
காணப்படாத விமானத்தை நோக்கியே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இராணுவப்
பேச்சாளர் தெரிவித்த போதும் கூட அன்று விமானத் தாக்குதல்கள் ஒன்றும் இடம்பெறவில்லை.
ஆனால் அதற்கு மூன்று நாட்களின் பின் அதாவது 2007, நான்காம் மாதம்
29ஆம் திகதி நள்ளிரவு, கொழும்பின் பெரும்பாலானவர்கள், இலங்கை அணியினருக்கும், அவுஸ்திரேலிய
அணியினருக்கும் இடம் பெற்றுக் கொண்டிருந்த துடுப்பாட்டத்தின் இறுதிப் போட்டியை
பார்த்துக் கொண்டிருந்த போது விடுதலைப்
புலிகளின் விமானப் பிரிவினர் கொலன்னாவை, முத்துராஜவெல
எண்ணெய் தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைநகரில் ஏற்பட்ட
பதற்றம் காரணமா மின்சாரம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தடைப்பட்டிருந்தது. ஒரு
சிறிய விமானத்தைத் தாக்கி வீழ்த்தக் கூட முடியவில்லை என்ற பலமான குற்றச்சாட்டு
பொது மக்களாலும் அரசியல்வாதிகளாலும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக புலிகளின்
ராணுவப் பேச்சாளரான ராசைய்யா இளந்திரையன் இலங்கை அரசாங்கத்தின் கேந்திர
சொத்துக்களான இலக்குகளைத் தாக்கியளித்த பின் இரண்டு விமானங்களும் பத்திரமாக
இருப்பிடம் திரும்பி விட்டன என்று ‘புலிகளின் குரல்’ ஒலிபரப்பில் தெரிவித்தார். இந்தத் தாக்குதலின் போது மிகக் குறைந்தளவு சேதமே
ஏற்பட்டது என்று இலங்கை அரசாங்கம் அடக்கி வாசித்த போதிலும் கூட “ஷெல்” எரிவாயு
நிறுவனத்தின் பணிப்பாளரான ஹாசன் இங்கு நிறுவப்பட்டிருந்த தீயணைக்கும் வசதியுடன்
நிறுவப்பட்டிருந்த இயந்திரங்களின் சேதம் 75 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று
ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அந்த நாளின் மாலை நேர வேளையில்
கிளிநொச்சியில் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதல் நடத்தியதாகக்
கருதப்படும் புலிகளின் ஒரு விமானம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை
அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதன் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிய வரவில்லை.
அனுராதபுரம்
தற்காலத்தை வரலாற்றுப் பின்னணியுடன்
தொடர்பு படுத்தும் முயற்சியாக தலைவர் பிரபாகரனால் “எல்லாளன் நடவடிக்கை” என்று
பெயரிடப்பட்ட அனுராதபுர வான்படைத்தளத்தின் மீது 2007 பத்தாம் மாதம் 22ஆம் திகதி
ஓர் கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது. வன்னியிலிருந்து புறப்பட்ட 27 விடுதலைப்புலிகள்
வில்பத்து காட்டினூடாக ஊடுருவி அனுராதபுர வான்படைத்தளத்துக்கு அருகிலுள்ள
நுவரவாவியில் காத்திருந்து தாக்குதலை நடத்தி சில
இலகு ரக விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் தாக்கியளிக்க, இந்தத்
தாக்குதலுக்கு உதவியாகவும் எதிரிகளைக் குழப்பும் நோக்கிலும்,
அவர்களது கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலும் இந்த விமானத்தாக்குதல் இடம்
பெற்றிருந்தது. இந்த விமானத்தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் இரண்டும்
விளைவித்த சேதம் பற்றி உறுதியாக சரியாகத் தெரியாத போதும்,
“புலிகளுக்கு உதவியாக அவர்களின் விமானமும் வந்து விட்டது’
என்ற எண்ணம் அனுராதபுர விமானப்படையினரின்
தைரியத்தைச் சிதைத்து அதிக சேதத்தை
ஏற்படுத்துவதற்கும் போதுமானதாக இருந்தது. இதன் போது 10 வானூர்திகள் (இலகு
ரக விமானங்கள், உலங்கு வானூர்த்திகள்) முற்றாக அழிக்கப்பட்டும் 16 வானூர்திகள்
பகுதியாளவில் சேதமாக்கப்பட்டும் இருந்தன. இந்தத் தாக்குதலின் போது 6 போராளிகள் உயிர் தப்பி மீண்டும் பத்திரமாக
வன்னி திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மணலாறு விமானத்தாக்குதல்
அதன் பின்பு இலங்கை இராணுவம்,இலங்கை விமானப்படை
என்பன அதி உஷார் நிலையில் ‘கண்ணுக்கு எண்ணெய் விட்டுக் கொண்டு’
காத்திருக்க, ஆறு மாதங்களின் பின்பு அவர்களின் உஷார் நிலை
தளர்வடைய 2008, நான்காம் மாதம் 27ஆம் திகதி மணலாறு முன்னரங்க
நிலைகள் இரண்டின் மீது விடுதலைப்புகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. இதனால் உண்டான
சேதங்கள் புறக்கணிக்கத்தக்கதாக இருந்த போதிலும் கூட முன்னரங்க நிலைகளில் இருக்கும்
இராணுவ வீரர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் முக்கிய
நோக்கமாக இருந்தது.
திருகோணமலை கடற்படைத்தளம்
2008 எட்டாம் மாதம் 26ஆம் திகதி இரவு
9 மணியளவில் திருகோணமலையின் அதியுயர்
பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் கடற்படைத்தளம் மீது வான்புலிகளின் விமானம்
குண்டுகளை வீசியது. உடனே பதிலுக்கு வான்பரப்பை நோக்கி அரை மணித்தியாலத்துக்கும் மேல் தாக்குதலை நடத்தியது. பதறிப்போன மக்கள்
வீடுகளுக்குள் முடங்க நகரமே வெறிச்சோடியது. எவ்வாறெனினும் வான்புலிகளின் விமானத்தை
சுட்டு வீழ்த்தக் கடற்படையினரால் முடியவில்லை. தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி
விட்டு விமானம் தனது தளத்துக்குப் பத்திரமாகத் திரும்பியது. இந்தத் தாக்குதல்
4 கடற்படையினரைப் பலியெடுத்து 11 கடற்படையினருக்குப்
படுகாயத்தை ஏற்படுத்தியதாகப் பின்பு
இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா இராணுவத்தளம்
2008 ஒன்பதாம் மாதம் ஒன்பதாம் திகதி
நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல் 2007
பத்தாம் மாதம் அனுராதபுர விமானப் படைத்தளம் மீதான தாக்குதலை ஒத்ததானாலும் இவற்றின்
நோக்கங்கள் வேறுபட்டிருந்தன. முதலாவதன்
நோக்கம் வானூர்திகளை சிதைப்பது. ஆனால் இரண்டாவதின் நோக்கம் இந்தியாவால் இலங்கைக்கு
வழங்கப்பட்டிருந்த மின் காந்த இலை கருவி அமைப்பைச்(Radar) சிதைப்பது தான். அந்த
நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த விடுதலைப்புலிகளின் விமானம் அந்த இராணுவத்தளம் மீது
8 குண்டுகளை வீசின. இதன் போது 3 குண்டுகள் வெடிக்காமல் விட்டாலும் ஏனைய
குண்டுகளின் வெடிப்பினால் ஆயுதக் களஞ்சியக் கூரையும் , சில
வாகனங்களும் சேதமடைந்தன. தங்கள் சகாக்களின் வான்வழித்தாக்குதல் தந்த மனோவலிமையுடன்
உக்கிரமாகச் சண்டையிட்ட புலிகள் மின்
காந்த இலை கருவி அமைப்பை அழிக்கும் நோக்கத்தை, தோளில்
வைத்துத் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் மூலம் இரண்டு போராளிகள் நிறைவேற்ற, ஒரு காவல்துறை மற்றும் 11 இராணுவத்தினரைக் கொன்று, மின் காந்த இலை
கருவி அமைப்பைப் பராமரித்து வந்த இரண்டு இந்தியர்களைக் காயத்திற்குள்ளாக்கிய பின்
3 பெண்புலிகள் தற்கொலை அங்கியைத்தூண்டி வெடிக்க வைத்தும்,
ஒருவர் சயனைட் குப்பியைக் கடித்தும் தற்கொலை செய்து கொள்ள ஏனையவர்கள் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தனர். இதன் போது தரையில்
சண்டையிட்ட விடுதலைப்புலிகளுக்கு
உதவியாகத் தாக்குதல் நடத்திய விமானம் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது
என்று இராணுவத்தரப்பால் தெரிவிக்க, விடுதலைப்புலிகளால்
மறுதலிக்கப்பட்ட போது இரண்டு தரப்பும் தத்தம் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் ஏதும்
வழங்கவில்லை.
தள்ளாடி(மன்னார்)
இராணுவமுகாம் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்
இந்த இரட்டைத்தாக்குதல்
நடத்தப்பட்டது 2008 பத்தாம் மாதம் 28ஆம் திகதி. அதாவது வன்னி பெருநிலப்பரப்பை
நோக்கி முன்னேற இராணுவம் பல பகுதிகளாலும் முயன்று கொண்டிருந்த,காலப்பகுதியில்
வன்னியிலிருந்து விமானத்தைக் கிளப்பிக் கொண்டு,
இராணுவத்தினருக்கு மேலாகப் பறந்து சென்று போய் தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும்
இராணுவத்தினருக்கு மேலாகப் பறந்து வந்து வன்னியை அடைவதென்பது மிகவும்
அசாத்தியமானதாகவும்,ஆபத்து மிக்கதாகவும் ஏனைய தளபதிகளும்
போராளிகளும் கருதினாலும் கூட தலைவர் பிரபாகரன் அதனை முயற்சித்துப் பார்க்க
விரும்பினார். தாங்கள் இன்னும் பலவீனமடையவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்குத் காட்டி, பொருளாதார ரீதியாக ஒரு அழிவை ஏற்படுத்துவதற்கும் ,
முன்னேறிக் கொண்டிருக்கும் இராணுவத்தினரின் மனோவலிமையைக் குலைப்பதற்கும் அதாவது
இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ள இரட்டைத்தாக்குதலைத் திட்டமிட்டார்.
அதன்படி அன்றிரவு இரவு 10:30 மணியளவில் ஆட்டிலறி பற்றும் பல்குழல் பீரங்கித் தளமான
தள்ளாடி இராணுவநிலைகள் மீது பறந்த விடுதலைப்புலிகளின் விமானம் 3 குண்டுகளை
வீசியது.
சுதாரித்துக் கொண்ட இலங்கை
விமானப்படை நான்கு விமானங்களை அரை
மணித்தியாலத்துக்குள் மன்னாரை நோக்கி அனுப்ப அவை அதி உச்சஅவதானிப்புடன்
கொழும்புக்கும் வன்னிக்கும் இடையில் விடுதலைப்புலிகளின் விமானத்தைத் தேடியலைய, அந்த விமானமோ
தாழ்வாகப் பறந்து நான்கு விமானங்களுக்கும் ‘தண்ணி காட்டி’ விட்டு கொழும்பை நோக்கிப் பறந்து சென்று இரவு 11:45 அளவில் மின்னுற்பத்தி நிலையமான
களனிதிஸ்ஸ மீது இரண்டு குண்டுகளை வீசியது . அதன் பின் பத்திரமாக இவ்விமானம்
வன்னியைச் சென்றடைந்தது வியக்கத்தக்க விடயம் தான். அதாவது “முத்துக்கு முத்தாக, சொத்துக்குச் சொத்தாக’ அருமையாக நான்கைந்து
குண்டுக்களைச் சுமத்து சென்று வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி விட்டு கொத்துக் கொத்தாக குண்டுகளை வீசக்கூடிய இலங்கை
விமானப்படையின் விமானங்களின் ஊடாக ‘கெத்தாகப்’ பறந்து வருவதென்ன சாதாரண விடயமா? இந்த இரட்டைத்தாக்குதல் மூலம் பாரிய சேதம் ஒன்றுமில்லை என்று இலங்கை
அரசாங்கம் கூறினாலும் கூட அந்தத் தாக்குதலால் சேதமடைந்த இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களையும்
முழுமையாகத் திருத்த 6 மாதங்களுக்கு மேல் எடுக்கும் என்று களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி
நிலையம் தெரிவித்திருந்தது. இது இவ்வாறிருக்க இலகு ரக விமானத்தில் அதிக
குண்டுகளைச் சுமந்து செல்லவோ, அதிக தூரம் பறப்பதற்குத்
தேவையான எரிபொருளைக் கைவசம் வைத்திருக்கவோ முடியாது என்று கருதப்படுவதால் இரண்டு
விமானங்களைக் கொண்டே இவ்விரு தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற ஊகத்துக்கு
விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து பதில் கிடைக்கவில்லை.
கட்டுநாயக்க விமானப்படைத்தளம், கொழும்பு
உள்நாட்டு இறைவரித்திணைக்களம்
வன்னிப்பகுதியைக் கைப்பற்றுவதற்கான
இறுதிப்போர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அந்தப்பிரதேசத்தைச் சுற்றிவளைத்து முப்படைகளும் தொடுத்திருந்த
தாக்குதல்கள் உக்கிரமாக ஆரம்பித்திருந்த நேரம் அந்தப் பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த
விடுதலைப்புலிகளினதும் மக்களினதும் அடுத்த கண நிலை, வாழ்வா சாவா என்று தெரியாத நிலையில், வீணாக எதிரியின் கையில் விமானங்களைப் பறிகொடுப்பதை விட இது வரை மக்களுக்குப் பெரிய அழிவைத்
கொடுத்திருந்த விமானப்படைக்கு அந்த அழிவைத் திருப்பிக் கொடுப்பதற்காக 2009
இரண்டாம் மாதம் 20ஆம் திகதி இரவு 8:30 அளவில் இரணைப்பாலைப் பகுதியிலிருந்து இரண்டு விமானங்கள் வன்னியிலிருந்து புறப்பட்டன.
அவற்றின் இலக்கு கொழும்பு விமானப்படைத் தலைமையகமும்,கட்டுநாயக்கா
விமானப்படைத்தளமும். திரும்பி வந்து தரையிறங்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் அவற்றை இயக்கிய விமானிகள் இது
தங்களுடைய இறுதிப்பயணம் என்பதை உணர்ந்தே
இருந்தார்கள்.
அந்த நேரம் புதுக்குடியிருப்பில் நிலை
கொண்டிருந்த இராணுவம் இதனைக் கவனித்து விட்டுக் கொழும்புக்கு இது சம்பந்தமாக உடனடியாக
அறிவித்தது. இதனால் கொழுப்பிலுள்ள விமானப்படைத்தளங்கள் இது சம்பந்தமாக உஷார்ப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டு, அப்பிரதேசங்கள் அதி உச்சக்
கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. ஆகவே, இதுவரை
வான்புலிகளின் விமானத்தாக்குதலுக்கு சாதகமான இரகசியத்தன்மை,
இதில் இல்லாததால் அவர்களுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்தது. வவுனியா
இராணுவத்தினரின் மின் காந்த இலை கருவி அமைப்பில் (radar)
இரண்டு விமானங்களும் தென்பட்டதும் புதுக்குடியிருப்பிலிருந்து அனுப்பப்பட தகவல்
உறுதிப்படுத்தப்பட்டு கொழுப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு இருளில் மூழ்கடிக்கப்பட்டது.
ஒன்றன் பின் ஒன்றாக மேலெழுந்து
ஒன்றாகவே பயணித்த விமானங்கள் 9:20 போல் கட்டுநாயக்கா பிரதேசத்தை அடைந்தன. ஒன்று தனது
இலக்கைத் தேட, மற்றது தொடர்ந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது. விமான எதிர்ப்புத்
துப்பாக்கிகள் தயார்ப்படுத்தப்பட்டன. வரும் வரை காத்திருந்த விமானப்டையின் சண்டை
விமானங்கள் சடுதியாக மேலெழுந்தன. இவற்றுக்கு உதவியாக வானத்தில் வெளிச்சம்
பாய்ச்சப்பட்டது. ஆனாலும் அவற்றின் அதிக
வேகம் வேகம் காரணமாக மெதுவாகப் பறக்கின்ற வான்புலிகளின் விமானத்தைக் குறி வைத்துத்
தாக்குதலை மேற்கொள்வது கடினமாக இருந்தது. தாக்குவதற்காகச்
சுற்றிதிரிக்கின்ற சண்டை விமானங்களுக்குப் போக்குக் காட்டி சரியான இலக்கை அடையாளம்
காணுகின்ற பதட்டமான சூழலில் வீசிய
குண்டுகள் சரியான இலக்கைத் தாக்கவில்லை. ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் போக்குக்
காட்டிய விமானம், 10:45 அளவில் கட்டுநாயக்க சதுப்பு
நிலப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதற்குக்
காரணம் சண்டை விமானங்களின் தாக்குதலா, தொழில்நுட்பக் கோளாறா
அல்லது எரிபொருளின்மையா என்று சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை.விமானியின் உடல்
சேதமாகாமல் கிடந்ததால், முதலாவது காரணமாக இருக்க
வாய்ப்பில்லை என்று அனுமானிக்கப்பட்டது.
இதற்கிடையில் கொழும்பை நோக்கிப்
பறந்த விமானம் ஒரு குண்டை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது வீசி விட்டு
மீண்டும் தனது இலக்கை உறுதிப்படுத்துவதற்காகவும், தன்னைத் தாக்குவதற்குச்
சுற்றிக் கொண்டிருந்த சண்டை விமானங்களுக்கு போக்குக் காட்டுவதற்காகவும் மீண்டும்
ஓரிருமுறைகள் சுற்றி விட்டு உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் மேல் மாடியில் மோதி
நொறுங்கியது. இதற்குச் சரியாக முன்னால் உள்ள விமானப்படைத்தளம் தான் இதன் இலக்காக
இருந்திருக்க வேண்டும் என்ற அனேகரின் யூகம் தவறாகப் இருப்பதற்குரிய வாய்ப்பு
இல்லை.
இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டு
வீரமரணம் அடைந்தவர்கள் கேணல் ரூபன் மற்றும் லெப்டினட் கேணல் சிரித்திரன் என்று விடுதலைப்புலிகளின் தரப்பிலும், விடுதலைப்புலிகளிடமிருந்த 3 இலகுரக விமானங்களில்
ஒன்று, 2008 ஒன்பதாம் மாதம் வவுனியாத்தாக்குதலின் போது
விழுத்தப்பட்டு, எஞ்சியிருந்த இரண்டும் இப்போது
விழுத்தப்பட்டு விட்டதால் இனி
வான்புலிகளின் அச்சுறுத்தல் இல்லை என்று இராணுவத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக