சனி, 2 ஜனவரி, 2021

புராதன எகிப்தின் மர்மங்கள்

புராதன எகிப்தின் மர்மங்கள்
புராதன எகிப்து என்றாலே எங்கள் மனதில் பிரமிட்டுக்களின் ஞாபகம் வருவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாது . இந்த எகிப்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும் வரலாற்றாசிரியர்களையும் ஆட்டிப்படைக்கும் ஒரு விடயமாக இருந்து வருகிறது. எகிப்து பல சுவாரசியமான மர்மங்களை உள்ளடக்கிய , பரந்த மணல் வெளிகளைக் கொண்ட நாடாகும். ஏற்கனவே வெளிவந்த மர்மங்கள் ஒருபுறம் இருக்க, சில மர்மங்கள் இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் பல வெளிவரக் காத்திருக்கின்றன. அதாவது இவ்வளவு காலம் கடந்தும் கூட, இன்னும் வெளிப்படுத்தப்படாத விடயங்கள் ஏராளம் இருக்கின்றன . பண்டைய உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் சில இன்னும் எகிப்தின் மணலுக்கு அடியில் மூடப்பட்டு, வெளிப்படுத்தப்படக் காத்திருக்கின்றன. அவை வெளிப்படுத்தப்படும் வரை பதிலளிக்கப்படாத கேள்விகள் ஏராளம் இருந்து கொண்டே தானிருக்கும். 

  எகிப்தின் தொலைந்த லாபிரிந்த்
2,500 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் ஒரு பெரிய தளம் இருந்ததாக நம்பப்படுகிறது, இங்கு இது சம்பந்தமாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் பிரமிட்டுகளைக் கூட மிஞ்சிவிடும் விசாலமான, சிக்கலான கட்டிட அமைப்பைக் கொண்டதாக அந்தத் தளத்தைக் குறிப்பிடுகிறார்கள். ." அது ஒரு பெரிய கட்டிடம், இரண்டு மாடிகள் உயரம். உள்ளே, நம்பமுடியாத 3,000 வெவ்வேறு அறைகள் இருந்தன. மிகவும் சிக்கலான கட்டிட அமைப்பின் மூலமாக இணைக்கப்பட்டுள்ள இந்த அறைகளுக்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும் , ஒரு சரியான வழிகாட்டி இல்லாமல் வெளியேற முடியாது. கீழே, நிலத்தடி மட்டத்தில் ,மன்னர்களின் கல்லறையும் , மற்றும் மேலே ஒரு பிரம்மாண்டமான கல்லால் செய்யப்பட்ட ஒரு பெரிய கூரையும் இருந்தது.” இவ்வாறாக சில பண்டைய எழுத்தாளர்கள் இதை நேரில் பார்த்ததாக விவரித்தும் கூட , 2,500 ஆண்டுகளுக்குப் பிறகு, அது எங்கிருக்கிறது என்பது இன்னும் தெரியவரவில்லை . 300 மீட்டர் அகலமுள்ள (1,000 அடி) பிரம்மாண்டமான இந்த கல் பீடபூமியைக் கண்டறிவதற்காக 2008 ஆம் ஆண்டில், புவி-மின்காந்த நிபுணர்களின் குழுவொன்று பீடபூமியை ஊடுகதிர் (scan) ஊடாக நுட்பமாகப் பரிசோதனை செய்ததில், மண்ணுக்கடியில், பண்டைய எழுத்தாளர்கள் விவரித்ததைப் போலவே ஒரு நிலத்தடித் தளம் காணப்படுவதைக் கண்டறிந்தாலும் கூட இதுவரை, யாரும் அடுத்த கட்டமாக அதனைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்ததில்லை. யாரோ ஒருவர் அந்தச் சிக்கலான இடத்திற்குச் செல்லும் வரை, எகிப்தின் மிகப் பெரிய தொல்பொருள் அதிசயத்தை நாங்கள் உண்மையில் கண்டுபிடித்திருக்கிறோமா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது. 

  எகிப்தின் அறியப்படாத ராணி
2015 ஆம் ஆண்டில், அகழ்வாராய்ச்சியின் மூலம் காண்டுபிடிக்கப்பட்ட பெரிய பிரமிடுகளுக்கிடையில், ஒரு கல்லறையில் "ராஜாவின் மனைவி" மற்றும் "ராஜாவின் தாய்" என்று அழைக்கப்படும் கல்வெட்டுகள் இருந்தன. 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பெண் உயிருடன் இருந்தபோது, அவர் இந்தக் கிரகத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் என்றும் தேசத்தின் வேறு எந்தப் பெண்ணையும் விட அவளுக்கு அதிக சக்தி இருந்தது என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவள் யார் என்று யாருக்கும் தெரியாது. அவர் இரண்டாம் கெந்தகாவேஸ் மகாராணியின் மகள் என்ற அனுமானத்தின் கீழ் வரலாற்றாசிரியர்கள் அவளை “கெந்தகாவெஸ் III” என்று பெயரிட்டுள்ளனர். அவர் பார்வோன் நெஃபெரெஃப்ரேயின் மனைவியாகவும், பார்வோன் மெகாஹூரின் தாயாகவும் இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள் - ஆனால் அது ஆதாரங்கள் இல்லாத வெறும் யூகம் தான். எகிப்தின் புராணங்கள் மற்றும் வரலாறுகளில் , கெந்தகாவெஸ் III பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அவள் யாராக இருந்தாலும், கல்வெட்டுக்களின்படி அவள் ஒரு காலத்தில் நம்பமுடியாத சக்திவாய்ந்த பெண்ணாக இருந்திருக்கிறாள் , ஆனால் இன்று, அவள் எல்லோருக்கும் ஒரு புதிராக இருக்கிறாள். 

  இஸ்ரேலின் சிங்க்ஸ்
2013 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் டெல் ஹாசோரில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திலிருந்து இதுவரை கண்டுபிடிக்க எதிர்பார்க்காத ஒன்றைக் கண்டுபிடித்தனர்: அவை 4,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய சிஹின்க்ஸ் என்று அழைக்கப்படும் சிங்கச் சிலையின் பெரிய பாதங்களாகும். அந்த சிங்கச் சிலையின் பாதங்கள் தவிர்ந்த மீதமுள்ள உடற்பாகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமென்றே அழிக்கப்பட்டன என்றும் யாரோ, அதைக் கவிழ்ப்பதற்கு முன்பு, அது 1 மீட்டர் (3.3 அடி) உயரமும் அரை டன் எடையும் இருந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு எகிப்திய சிலை எவ்வாறு இஸ்ரேலில் காணப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. கிமு 2500 இல் எகிப்தை ஆண்ட ஒரு பார்வோனின் பெயரான "கிங் மைசெரினஸ்" என்ற பெயரைக் கொண்ட அரசனின் கல்லறையில் காணப்பட்ட ஒரு கல்வெட்டு மட்டுமே மீதமுள்ள துப்பு. டெல் ஹஸோர் எகிப்தியர்களால் கைப்பற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. மைசெரினஸின் (அகா மென்காரே) ஆட்சியின் போது, டெல் ஹஸோர் கானானில் ஒரு வர்த்தக மையமாக இருந்தது, இது எகிப்துக்கும் பாபிலோனுக்கும் இடையில் இருந்தது. இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய சக்திகளின் பொருளாதார நல்வாழ்வுக்கு டெல் ஹஸோர் முக்கியமானதாக இருந்தது. அது ஒரு பரிசு என்பதும் கிங் மைசெரினஸ் அதை இஸ்ரேலுக்குஅனுப்பினார் என்பதும் வரலாற்றாசிரியர்களின் ஊகமாக இருந்தாலும் கூட, யாராவது ஏன் அதை சிதறடிக்கும் அளவுக்கு ஏன் கோபமடைந்தார்கள் என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. 

  கிங் டுட்டின் மர்மமான மரணம்
துட்டன்காமுன் மன்னர் இறக்கும் போது அவருக்கு 19 வயதுதான். என்ன நடந்தது என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. அவரது மரணம் ஒரு மர்மமாகவே இருந்தது. . அவருடைய இளம் வயது மரணத்துக்குக் காரணம் அவர் எகிப்து நாட்டின் முக்கியமானவராக இருந்தது மட்டுமல்ல, அவரிடம் சில உடல்நலக் குறைபாடுகள் இருந்ததும் தான். அவருக்கு மலேரியா இருந்தது மட்டுமல்ல. வளைந்த பாதங்கள் போன்ற பல மரபணு குறைபாடுகளும் இருந்தன. இதற்குக் காரணம் அவரது பெற்றோர், சகோதரர் சகோதரியாக இருந்தது தான் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அவருடைய மண்டை ஓடு உடைந்திருந்ததால் அவர், தலையில் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். அவரது உடல் பாடம் செய்யப்படும் போது அவரது தலை சேதமடைந்திருக்க வாய்ப்புண்டு என்று நம்பப்பட்டாலும் கூட , அவர் கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை. அவர் இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு கூட தனது முழங்காலை உடைத்துக் கொண்டிருந்தார். இதனால் அவரது மரணத்துக்குக் காரணம் ஒரு தேர் விபத்து என்று கூட அனுமானம் நிலவியது. ஆனாலும் அப்படிபட்ட உடல்நிலையுடன் இருந்த ஒருவர் , தேரில் செல்ல நினைத்ததும் ஒரு விந்தையான விடயம். எப்படியாயினும் ஒன்றுக்கு மேற்பட்ட பல காரணிகள் அவருடைய மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அவர் தனது இறுதிக் கட்டத்தில் பல மோசமான விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்பது அனேகமான வரலாற்றாசிரியர்களின் முடிவாக இருந்தது. 

  பெரிய பிரமிட்டின் மறைக்கப்பட்ட அறை
அவை அனைத்திலும் மிகப் பெரிய பிரமிடு 4,500 ஆண்டுகளுக்கு முன்பு பரோரா கப்ரா வுக்காகக் கட்டப்பட்டது. இது கிட்டத்தட்ட 150 மீட்டர் (490 அடி) உயரமுள்ள மிகப்பெரிய கட்டமைப்பாகும், இது 2.3 மில்லியனுக்கும் அதிகமான கல் தொகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கே சமீபத்திய காலம் வரை வரை, உள்ளே மூன்று அறைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. நிச்சயமாக இன்னும் பல அறைகள் இருக்கும் என்று நம்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குழுவொன்று 2017 ஆண்டின் இறுதிப்பகுதியில் ஊடுகதிர் ஊடாக நுட்பமாகப் பரிசோதனை செய்து அவர்கள் தவறவிட்ட ஏதாவது இருக்கிறதா என்று பார்த்த போது பிரமிட்டின் பெரிய கூடத்திற்குக் கீழே முழு பிரமிட்டின் அளவில் மறைக்கப்பட்ட அறை இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தனர். விசித்திரமான விஷயம் என்னவென்றால், இதனைக் கட்டிய எகிப்தியர்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட அறையை முற்றிலும் அணுக முடியாத வகையில் கட்டினர். அதனுடன் இணைக்கப்பட்ட தாழ்வாரங்களோ அல்லது பாதைகளோ என்று எதுவும் இல்லை. இதனால் மறைக்கப்பட்ட அறையின் உட்புறத்தை இன்னும் ஒருவரும் பார்த்ததில்லை. இதன் காரணமாக அவர்கள் அந்த மறைக்கப்பட்ட அறையின் உள்ளே மிகப் பெறுமதியான ஒன்றை வைத்திருக்கலாம் அல்லது அதனைக் கட்டுவித்தவர்கள் பகல் ஒளியைக் காண விரும்பாமலிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  கைத்தறிப் பக்கங்களால் போர்த்தப்பட்ட ஒரு மம்மி (பாடம் செய்யப்பட்ட உடல்)
1848 ஆம் ஆண்டில், ஒரு நபர் அலெக்ஸாண்டிரியாவில் ஒரு கடைக்காரரிடமிருந்து ஒரு பண்டைய எகிப்திய மம்மியை அதாவது பாடம் செய்யப்பட்ட உடலை வாங்கினார். பல ஆண்டுகளாக, அவர் அதை ஒரு அலங்காரப் பொருளாகக் கருதிக் காட்சிக்கு வைத்தார்,அவர், தான் கண்டுபிடித்த ஒரு கலைப்பொருளின் விசித்திரத்தை உணரவில்லை. சில தசாப்தங்களுக்குப் பிறகு அந்த மம்மியின் கட்டுகளை உரித்தபின், விஞ்ஞானிகள் மிகவும் அசாதாரணமான ஒன்றைக் கண்டார்கள். மம்மி ஒரு புத்தகத்தின் கைத்தறி பக்கங்களினால் மூடப்பட்டிருந்தது. இன்னொரு முக்கியமான விடயம் அது எகிப்திய மொழியில் எழுதப்படவில்லை. அது என்ன மொழி என்பதைக் கண்டுபிடிக்க நடைபெற்ற பல ஆண்டுகால விசாரணையின் பின்னர் , அது, இத்தாலியில் வாழ்ந்த ஒரு பண்டைய நாகரிகத்தின் மொழியான எட்ருஸ்கனில் எழுதப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது இது எங்களுக்கு அதிகம் தெரியாத மொழி. இந்த மம்மியைச் சுற்றியுள்ள சொற்கள், நாம் இதுவரை கண்டிராத மிக நீண்ட எட்ரூஸ்கான் உரையை உருவாக்கியிருந்தன. அந்த உடல் ஒரு பெண்ணின் உடலென்று தெரிகிறது. உரை என்ன சொல்கிறது என்பது இன்னும் தெரிய வரவில்லை. தேதிகள் மற்றும் தெய்வங்களின் பெயர்கள் என்று தோன்றும் சில சொற்களை மட்டுமே எங்களால் புரிந்து கொள்ள முடியும், அதையும் மீறி, இதன் பொருள் என்னவென்று யாருக்காவது புரிந்தாலும் கைத்தறி பக்கங்களினால் ஆக்கப்பட்ட எட்ருஸ்கன் புத்தகத்தை ஏன் ஒரு இறந்த உடலைச் சுற்றிக் கொள்ளப் பயன்படுத்தினார்கள் என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும். அவள் இத்தாலியைச் சேர்ந்தவளா? அப்படியானால், அவள் எகிப்தில் என்ன செய்து கொண்டிருந்தாள்? அவள் உலகிற்கு தனது இறுதி செய்தியில் என்ன சொன்னாள்? இது போன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்குப் பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. 

  டெண்டெரா ஒளி
எகிப்தின் டெண்டெராவில் உள்ள ஒரு கோவிலின் சுவரில் மிகவும் விசித்திரமான உருவத்தைக் காட்டும் பெரிய சித்திரமொன்று உள்ளது . மனிதக் கரங்களினால் பிடிக்கப்பட்டிருக்கும் ஒரு தாமரை மலரிலிருந்து கிளம்பும் ஒரு வெளிச்சம் ஒரு பாம்பைக் காட்டுவதாகவும், அந்தப் பாம்பு ஒரு தூணிலிருந்து வெளிக்கிளம்பும் இரு கைகளினால் பிடிக்கப்படுவது போலவும் சுவரில் செதுக்கப்பட்டுள்ள அந்தச் சித்திரத்தில் காட்டப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான படம் - தாமரை மலர் போன்ற தோற்றம் ஒரு ஒளி விளக்கைப் போல தோற்றமளிக்கிறது, இது எவ்வாறு ஒளியை உருவாக்குவது என்பதைக் காட்டும் வரைபடமாக இருக்கலாம் என்றும் புராதன எகிப்தில் காணப்பட்ட ஒரு முன்னேற்றமடைந்த மின் தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டுவதாகவும் சிலர் நினைக்கிறார்கள். முழு கோவிலிலும் தீ எரியும் விளக்குகள் இல்லாத ஒரே அறை டெண்டெரா லைட்டைக் காட்டும் அறை. எகிப்தியர்கள் கட்டிடத்தின் மற்ற எல்லா பகுதிகளிலும் விளக்குகளை எரித்ததைக் காட்டும் எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவே, அந்த அறையில் முன்னேற்றமடைந்த மின் தொழில்நுட்பமொன்று பாவிக்கப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் அனுமானமாக இருக்கிறது.

  அழிக்கப்பட்ட பிரமிடு
அண்மையில் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தின் டாக்டர் மைக்கேல் பாட் அபு ரவாஷில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள்டிஜெடெஃப்ரே பிரமிடு உண்மையில் கட்டி முடிக்கப்படவில்லை என்று கூறுகின்றன. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்டிருந்தால் பிரமிடுகளில் மூன்றாவது பெரிய மென்கேரின் பிரமிடு போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பிரமிடுகளில் மிகவும் அழகாக இருந்ததாகவும் வெளிப்புறத்தின் அழகை மெருகூட்ட, இறக்குமதி செய்யப்பட்ட கிரானைட், சுண்ணாம்பு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் நம்பப்படுகிறது. டிஜெடெஃப்ரேயின் பிரமிட் அவரது முன்னோர்களிடமிருந்து கட்டடக்கலை ரீதியாக வேறுபட்டது, அதில் அறைகள் உள்ளே இல்லாமல் பிரமிட்டுக்கு அடியில் இருந்தன. அத்துடன் பிரமிட் ஒரு இயற்கை மேட்டின் மீது கட்டப்பட்டுருந்தது. ஏதோ சில காரணங்களால், எகிப்தின் மற்ற அனைத்து பிரமிடுகளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும்அழியாமல் நிலைத்து நிற்கும்போது, டிஜெடெஃப்ரேயின் பிரமிடு மட்டும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பது அடிப்படைக் கட்டுமாணம் தான் அதற்கு என்ன நடந்தது என்பது பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில அனுமானங்கள் உள்ளன. வேலைகளைச் முடிப்பதற்கு முன்பே டிஜெடெஃப்ரே இறந்துவிட்டார் என்று சிலர் நினைக்கிறார்கள். ரோமானியர்கள், ஒரு மடாலயத்தைக் கட்ட ஆரம்பித்த போது இந்தப் பிரமிட்டை அழித்து இதன் கற்களை அந்த மடாலயத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தினர் என்று இன்னும் சிலர் நினைக்கின்றனர். இன்னும் சிலர் எகிப்து மக்கள் உண்மையிலேயே டிஜெடெஃப்ரே அரசரை வெறுத்தார்கள் என்றும் அதனால் அவர்கள் ஒரு முழு பிரமிட்டையே அழிப்பதற்குத் தயாராக இருந்தனர் என்றும் நம்புகின்றனர். 

  ராணி நெஃபெர்டிட்டியின் (இதுவரை) தேடப்படும் பிரமிட்
எகிப்தை ஆண்ட சில பெண்களில் ஒருவராக ராணி நெஃபெர்டிட்டி புகழ்பெற்றவர். அவர் அரசர் அகெனாடனின் மனைவியாக இருந்தார். மேலும் தனது கணவனின் இறப்பின் பின் இவர் எகிப்தை ஆட்சி செய்ததாக நம்பப்படுகிறது.மற்ற எகிப்திய அரசர்கள் மற்றும் அரசிகளின் கல்லறைகள் இன்றும் எகிப்தில் கோபுரமாக இருக்கும்போது, நெஃபெர்டிட்டியின் இறுதி ஓய்வு இடத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்காததும் கூட ஒரு புதிராகவே கருதப்படுகிறது. அவரது முகத்தின் சிற்பம் மிகப் பிரபலமானது, அவரது கல்லறையைத் தேடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2018 வரை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் டுட்டின் கல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய அறையில் அவள் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பினர். ஆனாலும் பின்பு ஊடுகதிர்கள் மூலமாக நுட்பமாகப் பரிசோதித்த போது செய்தபோது, அங்கே எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். இன்னொரு புதிர் என்னவெனில் எகிப்திய வரலாற்றில் அவரது மரணம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது கணவர் அகெனாடனின் ஆட்சியின் சுமார் 12வருடங்களுக்குப் பின்பு , அவரது குறிப்புகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன . ஏனெனில் அதன் பின்பு நெஃபெர்டிட்டியின் பெயர் பார்வோன் என்று குறிப்பிடப்பட்டதாக சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். 

  தொலைந்த பிரதேசம்
பண்டைய எகிப்திய எழுத்துக்கள் மூலம் பன்ட் என்ற இடத்தைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இது எகிப்தியர்களின் கற்பனைகளை உற்சாகப்படுத்திய தங்கம், தந்தங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த ஒரு பண்டைய ஆப்பிரிக்க இராச்சியமாகவும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் எகிப்தியர்களின் மரியாதைக்குரிய இடமாகவும் வரலாற்றாசிரியர்கள் அதனை கருதினர். "கடவுளின் நிலம்" என்று இது எகிப்தின் வரலாறுகளில் குறிப்பிடப்படுகிறது. பன்ட் இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. பண்டைய எழுத்துக்களில் அதைப் பற்றி எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. ஒரு பண்டைய எகிப்திய கோவிலில் பன்ட் ராணியின் படம் கூட உள்ளது. ஆனாலும் அந்த சக்திவாய்ந்த முக்கியமான இடம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எகிப்தியர்கள் வைத்திருந்த கலைப்பொருட்கள் தான் பண்டின் தடயங்களாகக் கருதப்பட்டன. எகிப்தின் ஏனைய மர்மங்கள் போல் அகழ்வாராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாமல் ,இந்த மர்மத்தில் விஞ்ஞானிகளும் கூட இந்த இராச்சியம் எங்கே என்று கண்டுபிடிக்க ஆசைப்பட்டனர். எகிப்தியர்கள் பண்டிலிருந்து கிடைத்த இரண்டு குரங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களின் எச்சங்களை ஆய்வு செய்து, அவை நவீன கால எரித்திரியா அல்லது கிழக்கு எத்தியோப்பியப் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்று தீர்மானித்தனர். இது, பன்ட்டைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு தொடக்க புள்ளியை நமக்குத் தருகிறது . ஆனாலும் கூட இது தொல்பொருள் தேடலுக்கான மிகப்பெரிய பகுதியாக இருப்பதால் . பன்ட் இராச்சியத்தின் இடிபாடுகளை நாம் எப்போது கண்டறியப் போகிறோமோ என்று தெரியாது. அவ்வாறு கண்டறிந்தால் அது, கடந்த காலத்தை வெளிக்கொணர்வதுடன் மேலும் பல தொடர் மர்மங்களுக்குரிய ஆரம்பப் புள்ளியாகவும் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக