இரணை தீவுக்கொரு இரகசியப் பயணம்
நல்ல
வெயிலடித்துக் கொண்டிருந்த வானிலை, முதலை போன்ற சங்குப்பிட்டிப்
பாலத்தின் தோற்றம் தூரத்தில் தெரியத் தொடங்க நெருங்க ‘சட்’டென்று மாறியது. சூரியனை மறைத்துக் கொண்டு கருமுகில்கள் கூட, ஐந்து நிமிடங்களுக்குள் இருட்டி மழை பொழியத் தொடங்கியது. காலை பத்து மணி போல்
இல்லாமல் இருட்டுவதற்கு சற்று முன்னதான அந்திமாலை நேரம் போல் தோற்றமளித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. மழையில் நனைவது
சின்ன வயதிலிருந்தே மிகவும் விருப்பமான விடயங்களுள் ஒன்று என்பதால் “வாரணம்
ஆயிரம்” படத்தில் சூர்யா, “சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை.” என்று சமீரா ரெட்டியைக் குற்றம் சாட்டியது போல் ஒருத்தரையும்
குற்றம் சாட்டாமல், மனமும்
உடலும் நனைவதில் லயித்தது.இப்படியான ஒரு வெட்ட வெளியில் நல்ல வேகத்தில்
உந்தூர்தியில் செல்லும் போது நனைவதும் ஒரு அருமையான அனுபவம் தான். அந்தப்பாடலில் வந்த வரிகள் போல்
“நில்லாமல் பெய்யும் மாமழை”யாக
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் சங்குப்பிட்டிப் பாலத்தில்
(“ஜிவ்”வென்று) ஏறி (“சொய்ங்”கென்று) இறங்கி
பூநகரி நகரத்தை அடைவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் மழை நின்று விட்டது. ‘அட மழை இன்னும் சற்றுப் பெய்திருக்கலாமே’ என்ற
ஏக்கம் ஏற்பட்டாலும் கூடஇப்படியே நனைந்த கோழியாகப் போகாமல் முழங்காவில்லை
அடைவதற்கு முன் ஈரம் காய்ந்தால் தான் நல்லது என்ற எண்ணம் தோன்ற, திருப்தி ஏற்பட்டது.
பூநகரிச் சந்தியிலிருந்து வலப்பக்கமாக திரும்பி மன்னார்
செல்லும் பெருந்தெருவில் திரும்பவே சூரியன் “சுள்”ளென்று சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. ஏற்கனவே மைக்கேல் கைதொலைபேசியில் “கிட்டத்தட்ட
நீங்க முப்பத்தஞ்சு கிலோமீற்றருக்குக் கிட்ட வரவேண்டியிருக்கும்” என்று சொன்னது
ஞாபகத்துக்கு வந்தது. அவர் குறிப்பிட்ட தூரம்
குத்துமதிப்பாகச் சரி தான். அவர் குறிப்பட்டது போல் நாச்சிக்குடா கடந்து
முழங்காவில் சந்திக்கு முன் வலப்பக்கம் வந்த தேவாலயத்தின் அருகே இருந்த
ஒழுங்கையில் திரும்ப, முப்பது மூன்று கிலோமீற்றர் ஆகியிருந்தது. அடித்த வெயிலில் ஆடைகளும்
காய்ந்து விட்டிருந்தன.அந்த இடத்தில்
நின்று மைக்கேலுடன்கைத்தொலைபேசியில்
கதைத்து விட்டு மீண்டும் புறப்பட, கிட்டத்தட்ட ஒரு
கிலோமீற்றருக்கு முன்பே மைக்கேலின் ஏழெட்டு வயதான மகன் அடையாளத்திற்காக கை காட்டிக் கொண்டு நின்றான்.
மைக்கேலின் வீட்டில் நுழைவதற்கு முன் ஒரு சிறு அறிமுகம்.
இங்கிலாந்து,கனடா, மற்றும் அவுஸ்திரேலிய நண்பர்கள் இந்த முறை
கடலட்டை வளர்ப்பு வாழ்வாதார உதவி செய்வதற்குத் தெரிவு செய்திருந்த இரணைமாதா நகர், முழங்காவிலைச் சேர்ந்த முன்னாள் போராளியான கில்பெர்ட்டின் மூத்த சகோதரன் தான் மைக்கேல். முந்தைய
நாள் முழுவதும் கில்பேர்ட்டின் கைத்தொலைபேசி வேலை செய்யாததால் இந்த
உதவித்திட்டத்தை முன்மொழிந்த நண்பன் அரவிந்தன் மூலம் கிடைத்தது தான்
மைக்கேலின் தொடர்பு. கில்பேர்ட்
இரணைதீவுக்குப் போயிருப்பதால், தான் படகில் இரணைதீவுக்கு
அழைத்துச் செல்வதாக அவர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் இந்தப் பயணம்
மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரும் ஒரு முன்னாள் போராளி தான்.
மைக்கேலின் வீட்டில்
கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கே மைக்கேலைச் சந்தித்து உரையாடிய போது, கில்பேர்ட்டின்
கைத்தொலைபேசி, இரணைதீவில் குறைவாகக் கிடைக்கும்
தொலைத்தொடர்பு சமிக்ஞை காரணமாவோ அல்லது மின்னேற்றம் தீர்ந்திருந்ததாலோ கைத்தொலைபேசி அணைக்கப்பட்டிருப்பதனாலோ தொடர்பு கொள்ள முடியாமற் போயிருக்கலாம் என்று
குறிப்பிட்டார். அவரது இளைய சகோதரன் என்று இன்னொரு நபரை அறிமுகப்படுத்தினார்.
கிலரி என்ற பெயருடைய அவரும் முன்னாள் போராளிதான் . அவரது குடும்பத்தில் நான்கு
பேர் போராளிகள் என்றும் இன்னொரு போராளியான அவர்களது மூத்த சகோதரி இறுதிப்போரில்
வீரமரணம் அடைத்து விட்டதாக அவர்கள் சொன்ன போது நெழ்வாக இருந்தது. மேலும்அவர்களிருவருடனும்
கதைத்துக் கொண்டிருந்த போது தான் இரணைதீவு
நோக்கி மேற்கொள்ளவிருக்கும் பயணத்தில் ஒரு சிக்கல் இருப்பது தெரிய வந்தது. அந்தச்
சிக்கல் கடற்படையின் அனுமதி தான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தான்
கடற்படை இரணைதீவுக்குப் பொதுமக்களை அனுமதித்தது என்றும் ஆனாலும் இப்போதும் கூட
படகுக்கான வழித்தட அனுமதி, தனிப்பட்ட நபர்களுக்கான பயண
அனுமதி, மற்றும் இரணைதீவில் தங்குவதற்கான அனுமதி என்று
கடற்படை கெடுபிடியாகத்தான் இருப்பதாகக்
கூறி அண்மையில் கூட வெளியிடத்திலிருந்த வந்த ஒரு நபருக்கு இரணை தீவுக்கான
பயண அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறினார்கள். அனுமதி கேட்டால் பெரும்பாலும்
மறுக்கப்படும் என்றும் அதை விட அனுமதி எடுக்காமலே பயணிக்கலாம் என்பாடு அவர்களின்
கருத்தாக இருந்தது. இவ்வளவு தூரம் வந்து
விட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளியையும், அவர் கடலட்டை
வளர்ர்க்கத் தெரிவு செய்திருக்கும் இடத்தையும் பார்க்காமல் போக மனம் ஏற்காததால்
அவர்களுடைய கருத்துடன் உடன்பட வேண்டியேற்பட்டது.
சாதாரணமாக கடற்தொழிலாளர்
போலத் தோற்றமளிக்க வேண்டுமென்பதால்
சட்டையிலிருந்து உள் மேலாடைக்கும் நீளக்காற்சட்டையிலிருந்து சாரத்துக்கும் ,சப்பாத்திலிருந்துசெருப்புக்கும், மாறவேண்டியிருந்தது. அத்துடன் வாயில் கொஞ்சம் வெற்றிலையும் மென்றவாறே ஒரு துண்டுபீடியையும் செருகிக்
கொண்டால் அசலாக இருக்கும் என்று அவர்கள் சொன்னாலும் கூட நல்ல வேளையாக அதை
செய்யுமாறு வற்புறுத்தவில்லை. முதலில்
மைக்கேல் கடற்கரைக்குப் போய் நிலவரத்தைப்
பார்த்து நிலவரம், கலவரம்
இல்லை என்ற செய்தியை அனுப்ப, கிலரி,
மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த ஒரு காட்டுப்பாதையின் வழியே கடற்கரைக்கு அழைத்துப்
போனார். கடற்கரைக்கு மிகவும் அருகிலிருந்த கிலரியின் மாமி வீட்டில் தனது உந்தூர்தியை நிறுத்தி விட்டு, படகின்
இயந்திரத்தைப் பொருத்தி விட்டுக் காத்திருந்த மைக்கேலுடன் படகில் ஏறிக்கொள்ள
சற்றுத்தூரம் மெதுவாகப்போன படகு இடஞ்சுழியாகத் திரும்பி ஒரு வட்டம் அடிக்க, மைக்கேலும் கிலரியும் தூரத்தில் தெரிந்த தேவாலயத்தைப் பார்த்து வாயிலும் நெஞ்சிலும் தொட்டு “ஏசுவே”என்று முணுமுணுத்துக்
கொள்ள படகு வேகமெடுக்க,
இரணை தீவை நோக்கிய எங்களுடைய பயணம்
ஆரம்பித்தது.
![]() |
நாச்சிக்குடா
மீனவர்களின் கடலட்டைப் பண்ணைகள் |
படகு புறப்பட்ட இடத்துக்கு வலப்பக்கமாக கடலில்
கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 200-300 மீற்றர் தூரத்தில் சில குடிசைகளைக் காணக்
கூடியதாகஇருந்தது. அவை என்னவென்று விசாரிக்க அவை நாச்சிக்குடா மீனவர்களின்
கடலட்டைப்பண்ணைகள் என்று தெரிய வந்தன. ‘அப்படியானால் ஏன் இவர்கள் இவ்வளவு தூரம் இரணைதீவு வரை போய் கடலட்டைப்பண்ணை
அமைக்க வேண்டும்?’ என்று மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்து
கொண்ட கிலரி “கடலட்டை வளர்ப்புக்கு நாச்சிக்குடாவை விட இரணைதீவு தான் திறமான இடம்.
அங்கை கடலட்டைப் பெருக்கம் கூட.. அதோட எங்கட பூர்வீகமும் அங்க தானே. எங்களுக்கு
அரசாங்கம் தந்த கடற்பகுதியும் அங்க தானே இருக்குது.” என்று சொன்னார்.
இந்த வருட இரண்டாம் மாதத்தின் நடுப்பகுதியில் திருகோணமலை
புறாமலைக்கு நண்பர்களுடன் மேற்கொண்ட
படகுப் பயணத்தின் பின் மேற்கொள்ளும் கடற்பயணம். நண்பர்களும் கூட இருந்தால்
எப்படியிருக்கும் என்ற கற்பனையில் மனம் சற்று நேரம் லயித்தது.
கடற்தாவரத்தின் இலைகள் நீரோட்டம் காரணமாக ஒன்றுகூடி ஒரே
நேர்கோட்டில் ஊர்வலம் போவது போல் பயணித்தது பார்க்க அழகாக இருந்தது. இப்படியான
நிறைய ஊர்வலங்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
நீச்சல் போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் முன்னே செல்லும்
போட்டியாளன் செல்லும் அதே தடத்தில் நீந்தினால்
நீரின் எதிர்ப்புவிசை குறைவாக இருப்பதுடன்
வேகமாக நீந்தக் கூடியதாக இருக்கும் என்று இணையத்தில் வாசித்த தகவல் ஒன்று ஞாபகம் வந்தது. அந்தத்
தகவலுக்கும் இந்த ஊர்வலத்துக்கும் ஏதாவது
தொடர்பு இருக்குமா என்று மனதில் எழுந்த கேள்வியைத் தொடர்ந்து படகிலிருந்து
குதித்து நீந்தும் ஆசை உண்டானது. வேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பது
மிகவும் விருப்பமானதொரு விடயம் மைக்கேல்,கிலரியிடம் கேட்டால் நிச்சயம் அனுமதிக்கப்போவதில்லை. அலையின் எழுச்சியும்,படகின் ஆட்டமும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாகத் தானிருந்தன. உயர்ந்து
வரும் அலைக்காக படகை மைக்கேல் சற்றுத் திருப்பஃப் படகு சற்று ஆடிய போது இது தான் சாட்டென்று பின்பக்கமாக தலைகீழாக தடுமாறி
விழுவது போல் நடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. படகின் பாதையிலிருந்து
சற்று விலகிக் கொள்வதற்கு படகின் அடிப்பகுதியில் பாதங்களால் ஒரு சின்ன உந்துதல்
கொடுக்கவும் மறக்கவில்லை.
வித்தியாசமான அனுபவம் தலைகீழாக பின்பக்கமாக விழுந்ததாலோ
என்னவோ விழுந்த வேகத்தில் கண்கள் இருட்டி புரையேறிக்கொள்ள , சாரத்தின் கட்டும்
அவிழ்ந்து விட தண்ணீரில் சமநிலையில் நின்று கொண்டு இருமி,
தலையில் தட்டி நிதானப்படுத்திக் கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது. இதற்கிடையில் 20, 30 மீற்றர்கள் வரை தள்ளிப் போய்விட்ட படகை மைக்கேல் பதறிப்போய்த் திருப்பிக் கொண்டு வந்தார். படகிலிருந்து பாயத்
தயாரான கிலரியைத் ‘தேவையில்லை’ என்று இருமலின்
மத்தியில் சைகை காட்டி விட்டு அலைகளையும், படகின் இயந்திரம் எழுப்பிய நீரின் ஆட்டத்தையும் சமாளித்துக் கொண்டு
சாரத்தைக் கொடுக்குக் கட்டிக் கொண்டு, படகின் பக்கவாட்டில்
கைகளின் உந்தலால் எம்பி சற்றுப் பிரயாசையுடன் ஏறிக்கொண்டு படகில் அமர்ந்து, பதறிப்போன இருவரின் முகத்தையும் பார்க்க இலேசான குற்றவுணர்ச்சி
ஏற்பட்டது. “நல்லாப் பயப்படுத்திப் போட்டிங்கள். எங்களுக்கு நெஞ்சில தண்ணியே
இல்லாமப்போட்டுது,புரக்கேறிக் கஷ்டப்பட்டுட்டீங்களோ ”என்று
கிலரியும் “எப்பிடி விழுந்தனீங்கள்? அவ்வளவுக்கு நான் போட்ட
(படகை) வெட்டிட்டனோ?எங்கையும் அடிகிடி பட்டதோ?” என்று மைக்கேலும் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே மனதில் தயார்படுத்தி
வைத்திருந்த பதில்களைச் சொல்லி, தலையைத் துவட்டி மாற்று
ஆடைகளை மாற்றிக் கொள்ள, மீண்டும் படகு தனது பயணத்தைத் தொடங்க, கைத்தொலைபேசியில் நேரத்தைப் பர்ர்த்த போது பன்னிரெண்டு இருபத்தைந்து
ஆகியிருந்தது.
கொஞ்ச நேரத்தில்
படகு பயணிப்பதற்கு நேரே தூரத்தில் இரண்டு தீவுகள் புலப்பட ஆரம்பித்தன. “அந்த ரெண்டு தீவும்
கிட்டக்கிட்டஇருக்கிறதால தான் இரணைத்தீவு
எண்டு பேர் வந்தது. ஒண்டாப்ப பிறக்கிற
பிள்ளைகல இரணைப்பிள்ளைகள் எண்டு சொல்றது மாதிரி. நாங்கள், பெரியதீவு, சின்னத்தீவு எண்டு தான் சொல்றநாங்கள். நாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம்
இஞ்ச தான். 90ஆம் ஆண்டோட சண்டையால இந்த
இடத்த விட்டுப் போக வேண்டியதாப் போட்டுது. சரி, சண்ட
முடியும் வர தான் பாதுகாப்புக் காரணம் எண்டு சொல்லி எங்கள மறிச்சுப்போட்டு, சண்ட முடிஞ்சாப்பிறகும் எங்கள வர
விடாம மறிக்கிறது எந்த விதத்தில நியாயம்?2017 இல இருந்து
2018 வர ஒரு வருஷம், எங்கள இரணைதீவுக்குள்ள விடச்சொல்லி
போராட்டம் நடத்தினம். எங்களுக்கு நல்ல பதில் கிடைக்கல்ல. பொறுமை இழந்து போய் ஒரு
நாள் வெள்ளக்கொடியக் கட்டிக் கொண்டு ஒரு அம்பது அறுபது போட்டில வெளிக்கிட்டுப்
போயிட்டம்” ” என்று மைக்கேல் தங்கள் கதையைச் சொல்லிக்
கொண்டு வர, இரணைதீவுக்கு கிட்டத்தட்ட 200 மீற்றர்கள்
தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடலட்டைப் பண்ணைகளையும் பண்ணைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த
குடிசைகளையும் நெருங்கி விட்டோம்.பெரும்பாலான குடிசைகளுக்கு அருகில் ஓடங்களும்
மிதந்து கொண்டிருந்தன. . கண் மட்டமாகப் பார்த்த போது ஒரு இருபது, இருபத்தைந்து குடிசைகள் இருக்குமென்று தோன்றியது. எல்லாக் குடிசைகளும் பார்க்க ஒரே மாதிரி
இருந்தாலும் அனுபவத்தால் தங்களுடைய
குடிசையை அடையாளம் கண்டு கொண்ட மைக்கேல் படகை அதற்கு அருகே ஒதுக்கினார்.
குடிசைக்குக்குள்ளிருந்து இரண்டு பேர் எட்டிப்பார்த்தனர்.மைக்கேல்
ஒருவரைக் காட்டி “இவன் நெல்சன்-என்ட தம்பி” என்றும் மற்றவரைக் காட்டி “இவன்
வில்சன்-தம்பியின்ட சிநேகிதன்” என்று
அறிமுகப்படுத்தினார். முதலில் படகில் கொண்டு வரப்பட்டிருந்த சிறிய நல்ல தண்ணீர்
பீப்பாய்களை குடிசைக்குள் ஏற்றி விட்டு அந்த இரண்டு பேரின் உதவியோடு குடிசையில் ஏறினோம் .நான்கு உறுதியான
தடிகளைக் கடலில் ஊன்றி நட்டு, அவற்றுக்குக் குறுக்காகத் தடிகளைக் கட்டி அவற்றின் மேல் பலகைகளைப் பரவி,வேயப்பட்ட ஓலைகளைக் கூரையாக வேய்ந்து எளிமையாக,
அழகாகக் குடிசை அமைக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக
நீரில் ஊன்றப்பட்டிருந்த தடிகளை அதன் மேல் மேடை போல் அமைக்கப்பட்டிருந்த
குடிசையில் நாங்கள் சாதாரணமாக நிற்கக் கூடியதாக இருந்தது சற்று வியப்பாக இருந்தது.
“தடிய எப்பிடி ஊண்டி நட்டிருக்கிறீங்கள்?” என்று கேட்டதற்கு ‘இரும்புக்குழாய், ட்ரில்லர் (துளைப்பான் கருவி) எல்லாம்
பாவிச்சு ஆழமாக் கிண்டி விட்டுத் தடிய
வச்சு லேசா மூடினாலே இந்தக் கடல் மண்ணிண்ட
சேற்றுத் தன்மைக்குத் தடி அப்படியே இறுகிக் கொண்டிரும்”என்று வில்சன் சொன்னார். “மாரி
காலத்தில தண்ணி மட்டம் கூடி குடிசைக்குள்ள தண்ணி வராதோ?”
என்ற அடுத்த கேள்விக்கு “எங்கட அனுபவத்தக் கொண்டு தான் கட்டியிருக்கிறம். எவ்வளவு
பெரிய மாரிக்கும்..”நடப்பட்டிருந்த தடியில் அரையடிக்குக் கீழே தொட்டுக்காட்டி
“...இதுக்கு மேல வராது”என்று நெல்சன் கூறினார்.”சரி, காலை
வேளையில மலசலம் கழிக்க என்ன செய்வீங்கள்?” என்று கேட்க வில்சன்
சிரித்துக்கொண்டே “ஓடத்தில சின்னத்தீவுக்குப் போயிருவம்” என்று சொன்னார். மலசலம்
கழிக்க ஓடத்தில்போகவேண்டியிருக்கும் என்று நினைக்க வேடிக்கையாகத்தான்
இருந்தது. இதற்கிடையில் பக்கத்துப்
பண்ணைக்குப் பயணம் போயிருந்த கில்பெர்ட்டுக்குத் தொலைபேசி அழைப்பு மைக்கேலால் மேற்கொள்ளப்பட்டது. “லண்டன்ல
இருந்து உதவி செய்யப்போற அண்ணான்மாரிந்த சினேகிதன் வந்திருக்கிறேர்.கெதியா வா”
![]() |
இடமிருந்து
வலமாக கிலரி, தீபன், (தண்ணீரில் ) மைக்கேல், கில்பேர்ட், நெல்சன் |
“கிட்பேர்ட்டுக்குப் பாத்துக் கொண்டிருக்கிற நேரத்தில அண்ணைக்குக்
கடலட்டையைக் காட்டுவம், என்ன?” என்று சொல்லி விட்டு மைக்கேல் கடலில்
இறங்கினார். வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட அளவில் தான் தண்ணீர் இருந்தது.
குடிசைக்கு அருகிலேயே தடிகள் நட்டு வலையிடப்பட்டிருந்த வேலியைத் தாண்டிக் கடலட்டைப் பண்ணையில் இறங்கிய
மைக்கேல் முகத்திற்கு நீர்க்கண்ணாடியை
மாட்டிக் கொண்டு நீரில் மூழ்கி சில கடலட்டைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு நெகிழிப்(plastic)பெட்டியில் அவற்றைக் கொண்டு வந்தார். அவற்றைப் பார்த்தபோது ‘தன்னைப் பிடிப்பவனிடமிருந்து தப்பியோட முடியாத,
குறைந்தபட்சம் ஒரு சின்ன எதிர்ப்பைக் கூட
வெளிப்படுத்த முடியாத ஒரு உயிரினம்’ என்று மனதில் பச்சாதாபம்
ஏற்பட்டது. “இப்ப என்ட கையில இருக்கிறது
எல்லாம் 350 தொடக்கம் 400 ரூவா வரைக்கும் விக்கக்கூடிய கடலட்டைகள். இதுகளைப்
பாதுகாக்கிறதுக்குத் தான் நாங்கள் கடல்ல குடிசை போட்டு இருக்கிறம் ” என்று கூறி மீண்டும் அவற்றைக் கடலில்
விட்டுவிட்டு வந்தார்.
கடலட்டைகளைக் காட்டும் மைக்கேல்
இதற்கிடையில் கில்பேர்ட் வந்து சேர்ந்து கொள்ள அறிமுகங்கள்
முடிய” இப்ப நான் எங்கட அண்ணா கில்பேர்ட்டிட்ட சம்பளத்துக்கு நிக்கிறன். ஒரு
சொந்தப் பண்ணை வைக்கிறதுக்குத் தான் உங்கள்ட்ட உதவிய எதிர்பார்க்கிறன்” என்று கூறிய அவர் “கடலட்டயப் பற்றி
எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் விபரமாச் சொல்லுவீங்களோ?” என்று கேட்க கடலட்டை சமபந்தமாக மேலும் சில தகவல்களைக் கூறினார். சாதாரணமாக
எங்களது நடுவிரல் அளவு உள்ள, சிறிய கடலட்டைகளை, அட்டைகள் பிடிக்கும் தொழிலைச்
செய்பவர்களிடம் 40 முதல் -50 ரூபா
கொள்வனவு செய்து பண்ணைகளில் விடுவதாகவும் ஆறு முதல் எட்டு மாதங்களில் கிட்டத்தட்ட
எங்கள் எங்கள் மணிக்கட்டு அளவில் வளர்ந்து அவை அறுவடைக்குத் தயாராகி விடுவதாகவும்
அதற்கிடையில் அவை இனப்பெருக்கம் செய்து , பல மடங்காகப் பெருகியும் இருக்கும் என்றும் இந்தக் கடலட்டை அறுவடையின்
பின் கொதிநீர் விட்டு அவிக்கப்பட்டுப் பின்பு காயவைத்துக் கருவாடாக்கி சீனா,
தாய்வான், சிங்கப்பூர், ஹொங்காங்
ஆகிய நாடுகளுக்கு இங்கு வாங்கப்பட்ட விலையின் மூன்று, நான்கு
மடங்கு விலையில் (1200-1500 ரூபா) ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அறிந்து கொள்ள
முடிந்தது. கடலில் உள்ள கழிவுகளையும் சேற்றையும் இவை உண்டு வாழ்வதால் இவற்றுக்கு
உணவு இட வேண்டிய தேவையும் இல்லை என்றும் அவர் கூறினார். அவருக்கு
அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு ஏக்கர் கடற்பிரதேசத்தில் வலை, தடி ஆகியவற்றைப் பாவித்து வேலி போடுவதற்கு ஏறத்தாழ ஒன்றரை லட்சம்
ரூபாவும் 2000 கடலட்டைக்குஞ்சுகள் வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாவும் ஒரு நல்ல
குடிசை அமைப்பதற்குரிய மூங்கில்கள்,பலகைகள் மற்றும் இதர
பொருட்களை வ வாங்குவதற்கு ஐம்பதினாயிரம்
அளவில் தேவைப்படும் என்றும் முதற்தடவை இடப்படும் மூலதனத்தைக் கொண்டு எதிர்பாராத
விதத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலொழிய, ஐந்து வருடங்களுக்கு அதாவது கிட்டத்தட்ட வருடத்திற்கு இரண்டு தடவைகளாக
பத்துத் தடவைகள் அறுவடை செய்ய முடியும் என்பதையும் அவர் மூலம் அறிந்து கொள்ள
முடிந்தது.
![]() |
அருகிலிருந்த
கடலட்டைப் பண்ணையிலிருந்து வந்து சேர்ந்த கில்பேர்ட்
இந்த உதவித்திட்டத்திற்குத் தயாரிக்கப்பட்ட திட்ட
முன்மொழிவில் குறிப்பிடப்பட்ட பணம் நண்பர்களிடமிருந்து இன்னும் வந்து சேரவில்லை
என்றும் வந்து சேர்ந்ததும் அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு பணம்
அனுப்பப்படும் என்றும் நிகழும் செலவினங்களுக்குரிய ரசீதை மற்றும் கடற்பண்ணை
அமைக்கும் போது படங்கள் எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்
என்றும் அறிவுறுத்த கில்பேர்ட் அதற்கு
சம்மதம் கூறினார்.
‘கடலட்டைகளைப் பார்த்தாயிற்று, படங்களை எடுத்தாயிற்று,தேவையான அளவு தகவல்களைப் பெற்றுக் கொண்டாயிற்று, இனி
என்ன? போக வேண்டியது தானே’ என்று நினைத்தது
தான் தாமதம் மைக்கேலும் “சரி அண்ண, நான் மாறிக் காவலுக்கு நிக்கப்போறன். கில்பேர்ட்டும், கிலரியும், நெல்சனும் உங்களோட வருவினம். உங்களுக்கு இறங்கின உடனே
கோழிக்கறியோட சாப்பாடு ஆயத்தமா இருக்கும். தயவு செய்து சாப்பிட்டிட்டுப் போங்கோ.
இப்ப ஒண்டே முக்கால் ஆகிது, ரெண்டரைக்கெல்லாம் போயிடுவீங்கள்.
” என்று கூறி விட்டு கிலறியைப் பார்த்து “போகக்குள்ள அண்ணய வடிவாப்
பிடிச்சுக் கொண்டு போ, கடல்ல விழுந்திடாம.” என்று
கூறினார்.
கடலட்டைப் பண்ணைகளைத் தாண்டி வரும் வரை நெல்சன்
படகிலிருந்த நீளமான தடியைக் கொண்டு ஊன்றி, ஊன்றி படகை நகர்த்தினார். அவை தாண்டியதும் படகு இடஞ்சுழியாக இறைவட்டம்
அடித்து மீண்டும் இரணை தீவை நோக்கித் திரும்ப மூன்று பெரும் வாயிலும், நெஞ்சிலும் கையை வைத்து “ஏசுவே” என்று சொல்லிக்கொள்ள படகு வேகமெடுக்கத்
தொடங்கியது.
அரைவாசித்தூரத்திற்கு மேல் போயிருப்போம். இன்னொரு இயந்திரப் படகின் உறுமல் கேட்க, எல்லோரும் சத்தம் வந்த
திசையைப் பார்க்க வலது புறத்தில்
கடற்படைப் படகொன்று வருவது தெரிந்தது. திடீரென்று எல்லோரும் பதட்டமாகினர். “பாஸ்
கேட்டானோ துலஞ்சம். அண்ணயோட எங்களையும் சேர்த்துப் பிடிச்சுப் போடுவான்”என்று நெல்சன்
பீதியைக் கிளப்ப, கிலரி “ அண்ண டக்கெண்டு அணியத்துக்குள்ள
போங்கோ” என்று கூறினார். அதற்குள் நுழைந்ததுதான் தாமதம்,
பின்னால் வைக்கப்பட்டிருந்த வலையைக் கொண்டு மூச்சுத் திணறும் அளவுக்கு மூடி
விட்டார்கள்.
எங்கள் படகுக்கு முன்னால் கடற்படைப்படகு குறுக்காகக்
கடந்து போவது சத்தத்திலிருந்து புரிந்தது. நொடிப்பொழுதிலேயே சத்தம் தொலைவுக்குப் போய்விட்டதிலிருந்து
அவர்களது படகின் வேகம் எப்படிப்பட்டது என்று புரிந்தது. அந்தப்படகு எழுப்பிய அலைகள் எங்களது படகைத் தள்ளாட வைக்க, கொள்ள, அதற்கு மேல்
அணியத்தில் இருக்க முடியவில்லை. அணியத்திலிருந்து எழுந்து பார்க்க, அந்தக் கடற்படைப்படகு கிட்டத்தட்ட 150, 200 மீற்றர்கள் போய்விட்டிருந்தது. படகின் பின்னால்
திரும்பிப் பார்க்க தூரத்தில்புள்ளியாக இரணைதீவு தெரிந்தது. நண்பர்களின் வேலையைச்
செய்து முடித்த திருப்தியில் தீவுக்குக் கிட்டத்தட்ட 200 மீற்றர்கள் முன்னாலேயே
கடலட்டைப் பண்ணையோடு திரும்பி விட்டதும் இரணைதீவின் அழகை ரசிப்பதற்கு அருகில் செல்லவில்லை என்பதும் ஞாபகத்துக்கு
வந்தது.’அட இனி மேல் இரணைதீவை அருகில் சென்று பார்க்கும்
வாய்ப்புக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மீண்டும் இரணைதீவைப் பார்க்க, முதலில் தெரிந்த புள்ளியும் மறைந்து விட்டிருந்தது.
தீபன் ஆவலைத் தூண்டும் வகையில் உங்கள் எழுத்து அமைந்துள்ளது
பதிலளிநீக்கு