சுனாமி 2004( 8ஆம் பாகம்)
நினைவுலகத்தில் இருந்த நான் புகையிரத்தத்தின்
“கூ” என்ற சத்தத்துடன் மீண்டும் நனவுலகத்துக்குத்
திரும்பினேன். புகையிரதம் ஒரு இடத்தில் நின்றது. வெளியே எட்டிப் பார்த்தேன்.
அங்குலானை! எனது அசைவுகள், என்
தோளில் சாய்ந்திருந்த ப்ரியாவையும், ப்ரியாவின் மடியில்
படுத்திருந்த சுவாதியையும் கூட எழுப்பி விட்டன. “வடே.வடே”,டீ, கோப்பி, டீ, கோப்பி”,”ரட்ட கஜூ, ரட்ட கஜூ” (கச்சான்)
“தம்பப்பு இருங்கு, தம்பப்பு இருங்கு”(அவித்த
சோளன்) “கறி பனிஸ்,கறி பனிஸ்” மற்றும் இன்ன பிற சத்தங்கள்
எங்கள் காதுகளை நிறைத்தன. நேரத்தைப் பார்க்க 7:55 ஆகியிருந்தது
. புறப்பட்டு ஒரு மணித்தியாலம் தான் ஆகியிருக்கிறது.
“சுவாதிக்குட்டி பனிஸ் சாப்பிறீங்களோ?” என்று சுவாதியைக் கேட்க அவள் வடையைக் காட்டினாள். “ப்ரியாக்குட்டி என்ன சாப்பிர்றீங்கள்?” என்று
ப்ரியாவிடம் கேட்க அவள் வெட்கப்பட்டுக் கொண்டே”என்ன, நீங்க,
ஆக்கள் பாத்துக் கொண்டிருக்கினம்.நீங்க வாங்குறதையே எனக்கும் ஒண்டு
வாங்குங்கோ” என்று சொல்ல நான், “பின்னால சாராயம் வருகுது.
எனக்கொரு போத்தல் வாங்குவம்” எண்டு நினச்சன்”
என்று சொல்ல ப்ரியா செல்லமாக
முதுகில் ஒரு அடி அடித்தாள் . “ம்ம், உங்களுக்கெண்டே டிரெயினில
இல சாராயம் எல்லாம் விப்பாங்கள் என்ன?” என்று
கேட்டுக்கொண்டே.
வடை மற்றும் பனிஸ் வியாபாரிகளிடம் வடையையும்
பணிஸ்சையும் வாங்கிக் கொண்டு “மாத்தர....
வெலாவ(நேரம்) கீயத (எவ்வளவு)?” என்றுஎனக்குத் தெரிந்த
சிங்களத்தில் பனிஸ் வியாபாரியிடம் கேட்டேன். ‘மாத்தறைக்குப்
போக எத்தனை மணியாகும்’ என்பதே அதன் பொருள்.அவரும் அதை
புரிந்து கொண்டு பத்து விரல்களையும் காட்டி மேலதிகமாக இன்னொரு விரலைக் காட்டினார்.
“எனக்கும் சிங்களம் தெரியும், பாத்தீங்களோ ப்ரியா?பதினொரு மணிக்கு மாத்தறைக்குப் போயிருவமாம் ” என்று
சட்டையின் கழுத்துப்பட்டையைத் தூக்கிக்கொள்ள ப்ரியா “அப்பிடித்தான் சொன்னவரோ இல்ல,’இப்படி உடஞ்ச சிங்களத்தில கதச்சியோ இரண்டு கையாலயும் அடிச்சு, ஒண்டுக்குப் போக வச்சிருவன்’ எண்டு சொன்னாரோ
தெரியல்ல” என்று வாரினாள்.
“நான் சினேகிதர்மாரோட கதைக்கிற கதையக் கேட்டுக், கேட்டு நல்லாக் கதைக்கத் தொடங்கிட்டீங்கள், என்ன?” என்று நான் சொன்னதற்கு “அது சரி, அதுக்கு முதல்
நான் கதைக்கத் தெரியாமத்தானே இருந்தனான்!” என்று உடனே பதில் வந்தது.
சரியாக அப்போது புகையிரதம் புறப்பட,இறங்கும் அவசரத்தில் கூடையுடன் ஓடி வந்த சோள வியாபாரியின் கூடை எனது வலது
கையில் இடித்துக் கொள்ள “ஆ!” என்று என்னையுமறியாமல் கத்தினேன். “என்ன, உங்களுக்குக் கண் தெரியேல்லையோ?” என்று ப்ரியா அவரைப் பார்த்துச் சத்தம் போட்டதற்கு “சொறி மல்லி(தம்பி)”
என்று திரும்பிப் பார்த்தபடியே சொல்லிக் கொண்டு ஓடிப்போய் இறங்கி விட்டார்.
“குரங்கு, கழுதை” என்று
அவரைத் திட்டிக் கொண்டு “கைய ஒருக்காத் தாங்கோ” என்று
வாங்கிப் பார்த்தாள். கையில் கட்டியிருந்த துணிக்கட்டையும் மீறிக்கொண்டு மீண்டும்
இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது. ப்ரியா துணிக்கட்டையை கழற்ற முயற்சிக்க “இல்ல, வேணாம் விடுங்கோ. இறங்குறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால மாத்தி
விடுங்கோ” என்று சொன்னேன். “மாமா,நல்லா நோகுதோ?நான் தடவி விடவோ?” என்று சுவாதி மழலையாகக் கேட்டுக்
கொண்டே தடவ முயற்சிக்க “இல்ல, சுவாதிக்குட்டி, வேணாம் மாமாண்ட கை ஊத்த” என்று
நான் மறுக்க அவள் அதை கேளாமல் ப்ரியாவிடமிருந்து இறங்கி வந்து என்னருகில் அமர்ந்து
எனது கையைத் தனது மடியில் வைத்துத் தடவ எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
எங்களது இருக்கைக்குப் பின்னாலிருந்த
இருக்கையில் இருந்து ஒரு தமிழ்ப்பாடல் ஒலிப்பது கேட்டது. இசையை வைத்துத்
தமிழ்ப்பாடல் என்று கண்டு பிடித்தாலும் கூட புகையிரத்தத்தின் சத்தத்தில் என்ன
பாடல் என்று சற்று நேரம் புரியாமலிருந்தது. வேகமெடுக்க ஆரம்பித்திருந்த புகையிரதம்
திடீரென்று “கிறீச்ச்” என்ற ஒலியுடன் நிறுத்தப்பட (நிறுத்துமாறு சமிக்ஞை
கிடைத்திருக்கலாம்)பாடல் தெளிவாகக் கேட்டது. உடுக்கு ஒலியைத் தொடர்ந்து “பாடாப்
படுத்தும் காடா, கறுப்பா! வாடா நீயும் இறங்கி வாடா. வந்திடு
வந்திடு, தானா வந்திடு, வந்திடு
வந்திடு, தானா வந்திடு. இல்லேன்னா ,
பாட்டுப் படிப்பேன், உடுக்கை அடிப்பேன். சாத்தானோட கூட்டில்
அடைப்பேன். வந்திடு வந்திடு, வந்திடு வந்திடு” என்று கேட்டதும் ‘ஒரு நாள், நாதன் சைக்கிளில் வந்து இறங்க
முன்பு, ரவி இந்தப் பாட்டப் பாடினவன் தானே ’ என்று நினைத்ததும் எனது நினைவுகள் மீண்டும் பின்னோக்கி நகர்ந்தன.
ஒரு நாள் காலை பத்துமணியளவில் நாங்கள் வழமையாகக் கடல் குளிக்கும் இடத்தில்
ஒன்று கூடினோம். மற்ற எல்லோரும் வந்து சேர்ந்து விட்டாலும் நாதனுக்காக மட்டும்
கிட்டத்தட்டக் கால் மணித்தியாலமளவில் காத்திருக்க வேண்டி வந்தது. “என்னங்கடா டேய்!
நேத்து அவனுக்கு பத்து மணிக்கெண்டு கடல் குளிக்கப் போறமெண்டு சொன்னீங்கள் தானே?” என்று நான் கேட்க உதயன் “நேத்தென்ன, இப்ப ஒரு அரை
மணித்தியாலத்துக்கு முன்னுக்குக் கூட அந்த படிப்பாளிக்கு ஞாபகப்படுத்திப் போட்டுத்
தான் வந்தனான்.ஆனா கடல் குளிக்க எண்டு சொல்லேல்ல. கடல்ல நீந்தப் போறம் எண்டு தான்
சொன்னனான்” என்று சொல்ல விமலன் “ஓ.....கோ” என்று கேலியாகக் கூச்சலிட்டான். ரவி “டேய், அது நீ மட்டும் தானே, நாங்களெல்லாம் குளிக்கத்தானே வந்தனாங்கள்” என்று சொல்ல “இவர் பெரிய
ஆழிக்குமரன் ஆனந்தன் . போடா டேய்” என்று
நான் உதயனை வார, அவனும் பதிலுக்கு “ஆழிக்குமரன் ஆனந்தனில்லடா, குற்றாலீஸ்வரன்!” என்று திருத்தினான். “நினைப்புத் தாண்டா பிழைப்பக்
கெடுக்கும். உந்த பிழைப்பே நினைப்பில தாண்டா” என்று வினோத்தும் தன்னுடைய பங்குக்கு
உதயனை வாரினான். “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி, பூத்திருந்து பூத்திருந்து பூ விழி நோகுதடி” என்று சந்தர்ப்பத்திற்கேற்ப
பாட்டெடுத்து விடுவதில் கெட்டிக்காரனான மகேஷ் பாட நானும்,விமலனும் அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த
படகில் தாளம் போட்டோம். நாதன் துவிச்சக்கர
வண்டியில் வருவதைப் பார்த்து விட்டு சாதாரணமாக அமைதியாக இருக்கும் ரவி அன்று
குஷியில்” “பாடாப் படுத்தும் காடா, கறுப்பா! வாடா நீயும்
இறங்கி வாடா. வந்திடு வந்திடு, தானா வந்திடு, வந்திடு வந்திடு, தானா வந்திடு. இல்லேன்னா , பாட்டுப் படிப்பேன், உடுக்கை அடிப்பேன். சாத்தானோட
கூட்டில் அடைப்பேன். வந்திடு வந்திடு, வந்திடு வந்திடு”
என்று பாட கடற்கரைத் தெருவில் உள்ள தனது வீட்டிலிருந்து இறங்கி வந்த
கடற்றொழில்சங்கத் தலைவரான விநாயகமூர்த்தி ஐயா “டேய்,
சாத்தானோடே கூட்டில அடைக்க வேண்டியது நாதன இல்லையடா. உங்கள எல்லாரையும் பிடிச்சுத்
தான் அடைக்கோணும். படிக்கிற பிள்ளைய படிக்கவும் விடாம.........அது சரி, உங்களுக்குத் தாளம் தட்டுறதுக்கு என்ட போட்டோ (படகு)கிடைச்சுது ,நீங்க பண்ணுற கூத்து! ” என்று சொன்னார். விமலன் “இல்ல
ஐயா, எங்கட ரவி நாதனுக்கு இந்தப் பாட்டப் பாடேல்ல. நீங்க
வீட்டில இருந்து இறங்கி வாறதப் பாத்துட்டுத் தான் படிச்சவன்” என்று அவர் கையில்
அகப்படாமல் ஓடிப்போய் சற்றுத்த் தொலைவில் நின்று கொண்டு சொன்னான். “கிட்ட வாவென், உனக்கு இருக்கு, இனி யாரும் என்ட போட்டத்
தொட்டீங்களோ, தோட்ட கைய முறிச்சு அடுப்பில போட்டிடுவன் “
என்று கடுப்போடு சொன்னார்.
இதமான வெயிலுக்குக் கடலில் இறங்க நன்றாகத் தான்
இருந்தது.கிட்டத்தட்ட 75 மீற்றர் தூரத்தில் நங்கூரமிடப்பட்டு இருந்த வள்ளத்தை
நோக்கி உதயன் நீந்தத் தொட்ங்கினான். “டேய், கொஞ்சம் மெதுவாப் போடா, நானும் வாறன்” என்றபடி ரவியும் நாய் நீச்சல் (கையை நீர் மட்டத்துக்கு வெளியே எடுக்காமல்
நீருக்குள்ளேயே வலித்து நீந்துதல்) நீந்திக் கொண்டு அவனுக்குப் பின்னால் போக
ஆரம்பித்தான். நானும் இதுவரை இவ்வளவு தூரம் போனதில்லை தான். ஆனாலும்
போக வேண்டும் என்ற ஆவலும், இயற்கையாகவே நீரைக் கண்டால்
ஏற்படும் பயமும் போட்டிபோட்டு பயத்தை ஆவல்
ஜெயிக்க நானும் ரவியின் பின்னால் நீண்ட ஆரம்பித்தேன். விமலன் “கேசவா,நீ இது வர இவ்வளவு தூரம் நீந்தினது இல்லடா.கவனம்!” என்றான். “சரிதாண்டா, எதுக்குமே ஒரு தொடக்கம் இருக்கத்தானே வேண்டும்” என்று நான் சொல்ல வினோத்
“தத்துவம் நம்பர் வன்.கரை ஏறுற வர எத்தின தத்துவம் சொல்றியோ எண்டு பாப்பம்”
என்றான். “ரவி, கேசவன், ரெண்டு பேரும்
தலைய உள்ள விட்டுத் தண்ணிக்குள்ள பார்க்க வேண்டாம். இப்பிடியே நாய் நீச்சல்லயே
நீந்துங்கோ” என்றபடி வேகமாகப் போன உதயன் சற்றுப் பின் தங்கி எங்களுடனே நீந்தினான்.
அவன் அருகில் நீந்தும் தைரியத்தில் ஒரு மாதிரி நீந்தி வள்ளத்தை அடைந்து விட்டோம்.
வள்ளத்தில் ஏறிப் பார்க்க ‘அட இவ்வளவு தூரம் நீந்தி வந்து
விட்டோமா’ என்று நினைக்குமளவுக்கு மற்ற நண்பர்கள் நான்கு பேரும்
தூரத்தில் தெரிந்தார்கள். ஆசைதீர வள்ளத்தில் இருந்து பல்டி அடித்தோம். ரவி
பல்டியில் கெட்டிக்காரன். உதயனும் நானும் முக்கால் பல்டி அடித்து முதுகு நீரில்
அடிபடத்தான் விழுந்தோம். ஆனால் ரவி மிக அழகாக ஒரு முழு வட்டமிட்டுக் காலால்
குதிப்பது போல் விழுந்தான்.
பல்டி தந்த பரவசத்தில் ரவி வள்ளத்தின் மேலேறி
“டேய். நல்லா இருக்கடா! நீங்களும் வாங்கோவெண்டா.” என்று கத்த பதிலுக்கு “போடா எரும,எங்களக் கொல்லுற பிளானோ?”என்று மகேஷ் கத்தினான். “இல்லடா, இந்த
விஷயத்தில ஒருத்தரையும் வற்புறுத்தக் கூடாது. உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு
நீங்க ரெண்டு பெரும் என்னோட வந்ததே பெரிய நெஞ்சிடியா இருந்துது.” என்று உதயன்
சொன்னான். “டேய் ரவி, எங்களாலேயே நல்ல நீந்த முடியாது, இதில அவங்கள வேற கூப்பிடுற.கடலம்மா, தன்ன நோக்கி வர்ற ஆக்களை வர விடுவாவாம். ஆனா தன்ன விட்டுப் போற ஆக்கள
அதாவது கரைய நோக்கிப் போற ஆக்கள லேசில விட மாட்டாவாம்.” என்று நான் சொல்ல, உதயன் “அதெண்டா உண்ம தான். என்ன தான் கரைய நோக்கி அலையடிச்சாலும், உள்ளுக்குள்ளால நீர் விசையொண்டு கடல நோக்கி இழுக்கும்.: என்றான். “டேய், துலைவாங்களே, ஏண்டா பேதியக் கிளப்புறீங்கள்?” என்று ரவி இருவரையும் முதுகில் அறைந்தான். கரையைப் பார்த்த உதயன்
“வேறையும் யாரோ வந்திருக்காங்களடா. எங்கட ஆக்களத் தவிர இன்னும் நாலு தல
எக்ஸ்ட்ராவாத் தெரியுது.சரி போவம். போய் அவங்களோட பம்பல் அடிப்பம், நீங்க ரெண்டு பேரும் முன்னுக்குப் போங்கோ. நான் பின்னால வாறன்”
என்று உதயன் சொல்ல “என்னடா, ரெண்டு கன்(gun) போட்டுக்கு ஒரு தாய்க்கப்பல் பாதுகாப்போ” என்று
சொன்னவாறு ரவி குதிக்க, அவனைத் தொடர்ந்து நான் குதித்தேன்.
கையை நீருக்கு வெளியே அடித்து நீந்திய ரவி
சற்று நேரத்திலேயே “கேசவன், நல்லாக் களைக்குதடா, போய்ச் சேருவனோ எண்டு பயமா இருக்குதடா” என்று சொல்ல எனக்குத் திகிலாக இருந்தது. ஆனால் உதயன் “நாய்
நீச்சல் நீந்தடா நாயே, கைய அடிச்சு நீந்தினாக் களைக்கும்
தானே, பயப்படாத, உன்ட ரெண்டு
பக்கதிலயும் நாங்க ரெண்டு பெரும் வாறம்
இன்னும் கொஞ்சத்தூரம் தான், போயிரலாம்.” என்று தைரியம் கொடுத்தான்.
நாங்க இரண்டு பெரும் அவனுக்கு இரு பக்கத்திலுமாக நீந்தி ஒருமாதிரி நண்பர்களிடத்தில்
போய்ச் சேர்ந்தோம்.
அங்கு நண்பர்களுடன் இருந்த மற்றவர்கள், எங்களை விட இரண்டு வயது குறைந்த தம்பிமார். உயர்தரம் படிக்க ஆரம்பித்திருப்பவர்கள். அவர்களில் ஒருவன் சொன்ன விளையாட்டை எல்லோரும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். விளையாட்டு இது தான். புகையிரதப் பெட்டி போல் எல்லோரும் அடுத்தடுத்ததாக கொஞ்சம் இடைவெளி விட்டு காலை விரித்துக் கொண்டு நிற்க ஒவ்வொருத்தராக எல்லோரதும் கால்களுக்கு இடையே சுழியோடிச் செல்ல வேண்டும். எல்லோரையும் சுழியோடித் தாண்டினால் அவர் கடைசியாக நின்று கொள்ள, அடுத்த எல்லையில் நிற்பவர் சுழியோட ஆரம்பிக்க வேண்டும். அவர் இடையிலேயே எழுந்து விட்டால் அவர் அந்த இடத்தில் நிற்க, மற்றவர்கள் கொஞ்சம் தள்ளித்தள்ளி நின்று கொள்ள, ஆரம்பித்த பக்கத்தில் இருக்கும் மற்றவர் சுழியோட ஆரம்பிக்க வேண்டும். கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஒரே மூச்சில் பத்துப் பேரின் கால்களுக்கு இடையால் அவர்களை இடிக்காமல் நளினமாக நீந்தியது எங்கள் மகேஷூம், மற்ற நால்வரில் ஒருவனான இந்திரனும் தான். எங்கள் நீச்சல் வீரனான உதயனுக்குக் கூட ஏழு பேருக்கு மேல் தாண்ட முடியவில்லை. “எனது முறை வர விமலன் “கேசவா, நீ ஒருநாளும் கோச்சியில போனதில்ல எண்டு ஏங்கிறனீ தானே ? கோச்சி மாதிரி நிக்கிற எங்கள் எல்லாரையும் தாண்டிப் போனா கொஞ்ச நாளுக்குள்ள நாங்கள் எல்லோரும் ஒரு நாள் கோச்சியில போகலாம்” எண்டு நினச்சிக் கொண்டு சுழியோடத் தொடங்கு” என்று சொல்ல “எங்களோட எண்டா அவன் ரெண்டாவது ஆளத் தாண்டுறதுக்கு முதலே எழும்பிடுவான். பிரியாவோட எண்டு சொல்லு.”என்று நாதன் சொல்ல “பாத்தியோ, உன்ட ரொமான்ஸப் பாத்து, கதைக்காத நாதனே கதைக்க வெளிக்கிட்டுட்டான்” என்று ரவி சொன்னான். எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவும், எங்களை விட வயது குறைந்தவர்கள் இருக்கும் இடத்தில் இப்படிக் கதைக்கிறார்களே என்று இன்னொரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது. நான் நீருக்குள் மூழ்க விமலன் “கூ” என்று என்று புகையிரதம் ஒலியெழுப்புவது போல் ஒலி எழுப்பினான்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக