வணக்கம்.
ஏழாவது
வெளியீட்டுக்கும் எட்டாவது வெளியீட்டுக்கும் இடைவெளி கூடி விட்டது. அதாவது நான்கு
வருடங்களும் ஒரு மாதமும் ஆகிறது கொரோனாவா ல் இந்த வருடத்தின் மூன்றாம்
நான்காம் மாதங்களில் விடுமுறை கிடைத்தும் அதனை
‘வல்வை அலையோசை’க்கு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த விடுமுறை என்ற மகிழ்ச்சியில் வீண் பொழுதாகவே
கழிந்து விட்டது.
எழுதுவதற்கான
கற்பனைகளும்,எண்ணங்களும், கருத்துக்களும் மனதில் ஏராளமாக ஊற்றெடுத்தாலும் உட்கார்ந்து
அவற்றைத் தட்டச்சி எழுத்து வடிவம் கொடுப்பதற்குத் தான் சோம்பலாக
இருக்கிறது. ‘குணா’ திரைப்படத்தில் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலில் “உன்ன நெனச்சிப் பார்க்கும் போது, கவிதை மனசில அருவி மாதிரி கொட்டுது. ஆனா அத எழுதனும்ணு உட்கார்ந்தா, இந்த எழுத்துத் தான்....வார்த்த...”என்று சொன்னது மனதில் ஞாபகத்துக்கு
வருகிறது. எதிர் காலத்தில் அதற்கும் ஒரு தீர்வைக் கண்டு பிடித்து விடுவார்கள்.
பத்தாவதாக
வெளியிடவிருக்கும் ‘வல்வை அலையோசை’ யில் கொஞ்சம் விசேஷமாக, நண்பர்களின் ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.
அந்த விருப்பம் நண்பர்களுக்கு இடைக்கிடை தெரியப்படுத்தப்பட்டும் இருக்கிறது.
அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.
இனி
ஆக்கங்களுக்குப் போகலாம்.
முதலாவது
ஆக்கம் எங்களது வளர்ப்பு நாயைப் பற்றியது. இப்போது அது இல்லை. என்னதான் நாங்கள்
போட்ட மிச்சம் மீதியைப் உண்டு விட்டு வீட்டுக்கு வெளியே இருந்தாலும் கூட, பொதுவாகவே
இயந்திரமயமாக நகர்ந்து கொண்டு இருக்கும் எங்களது வாழ்க்கையில் விதிவிலக்காக இருக்கும் சில விடயங்களில் அவற்றுடன் பேசுவது,
விளையாடுவது எல்லாமே அடங்கும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா,மாட்டீர்களா? ஆட்களுக்கு மட்டும் தான் நினைவஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டுமா? அது வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கும், மகிழ்ச்சிக்கும்,மன நிம்மதிக்குமாக நன்றியுள்ள அந்த ஜீவனுக்கு எங்களது நன்றி
உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இந்தக்
கட்டுரை.
இரண்டாவது
ஆக்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான
யோகா பயிற்சியாளர் ‘யோகரத்தினா’திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு
நேர்காணல். ஒரு உன்னதமான, எல்லோருக்கும் அவசியமான ஒரு கலையை
இலவசமாகக் கற்றுக் கொடுக்கின்ற ஒரு அரிய சேவையைச் செய்கின்ற அவரது நேர்காணல், யோகா
சம்பந்தமான, உங்களில் சிலருக்கு இருக்கின்ற சில
சந்தேகங்களைத் தீர்த்து, இதுவரை யோகாவில் ஈடுபடாதவர்களுக்கு
ஒரு உந்துதலை வழங்குமா?
மூன்றாவது
ஆக்கம் இரண்டாவது ஆக்கத்துடன்
சம்பந்தப்பட்ட ஒரு வகை ஆசனம்.. ‘வல்வை அலையோசை ‘யின் ஒவ்வொரு வெளியீட்டிலும் ஒவ்வொரு
ஆசனம், அதைச் செய்யும் முறை, அவற்றின்
நன்மைகள் ஆகியவற்றை யோகாவில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த முறை ‘கோமுகாசனம்’
நான்காவது
‘சுனாமி-2004’ தொடர்கதையின் எட்டாவது பாகம். என்ன தான் இப்போது நடுத்தர வயதைத் தாண்டி
அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாலும் கூட,
அடிமனதில் உள்ள நண்பர்களுடன் பழகிய
ஞாபகங்கள்,அவர்களுடன் கதைத்த கதைகள், வயிற்றுக்கும்
தொண்டைக்கும்இடையில் உருளுகின்ற உருவமில்லாத உணர்ச்சி (நன்றி கவிஞர் வைரமுத்து)
தந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கின்ற போது வயது மறந்து போய் விடுகிறது. அதற்காகவே, அந்த இனிய அனுபவங்களோடு கொஞ்சம் கொஞ்சம் கற்பனையையும் கலந்து ஒரு
உண்மைச்சம்பவத்துடன் கதையை இணைத்து எழுதப்படுகின்ற தொடர்கதை தான் இது. என்ன தான்
உண்மையில் நாங்கள் நகைச்சுவைக்
கதாபாத்திரமாகவோ, குணச்சித்திரக்
கதாபாத்திரமாகவோ அல்லது வில்லன்/வில்லிக் கதாபாத்திரமாகவோ இருந்தாலும் கூட அடிமனதில் நாங்கள்
ஒவ்வொருத்தரும் எங்களைக் கதாநாயகனாகவோ,\ கதாநாயகியாகவோ நினைத்துக்
கொள்ளத் தானே எங்களுக்கு விருப்பம். அந்த விருப்பம் தான் இந்தக் கதையில்
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கதைக்கு வைக்கப்பட்ட தலைப்புக்கும் கதை
செல்கின்ற போக்கையும் வைத்து எப்படியானதொரு உச்சக்கட்டத்தை (climax) நோக்கி நகர்கிறது என்பதை உங்களுக்கு இலகுவாக ஊகித்துக் கொள்ளக்
கூடியதாகவிருக்கும்.
ஐந்தாவது
ஆக்கம்-முன்பு கி.மு, கி.பி என்று காலத்தைப் பிரித்தது போல் இப்போது கொ.மு, கொ.பி என்று பிரிக்கலாம் என்று நினைக்குமளவுக்கு அந்தக் கிருமி எங்கள்
வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கம்
செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மரியாதை (?) செலுத்தும்
முகமாகவும் அது எவ்வாறு தோன்றியது என்பதை அனுமானித்துக் கொள்வதற்குமான கட்டுரை. இந்தக்
கட்டுரைக்கான தகவல்கள் ‘த காடியன்’ (The Guardian)
இணயத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
ஆறாவது ஆக்கம், ஐந்தாவது ஆக்கத்துடன்
தொடர்புடையது தான். தற்போது உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் நிலைமைக்கு ஒத்த நிலைமை
2011 இலேயே அமெரிக்காவின் ஸ்டீவன் சொடெர்பெர்க் (ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற பெயர்
சாதாரணமாக எங்களுக்குப் பரிச்சயம் )என்ற திரைப்பட இயக்குனரால் ‘Contagion’(தொற்றுநோய்)
என்ற திரைப்படம் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரது தீர்க்க தரிசனத்தை
மெச்சுவதற்காகவும், அந்தக் கதையை நீங்கள் அறிந்து கொள்வதற்குமாக அந்தத்
திரைப்படத்தின் கதை ஆறாவது
ஆக்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வழமையாக
‘வல்வை
அலையோசை’யின் ஒவ்வொரு வெளியீட்டிலும் உலகளாவிய ரீதியிலான ஒரு மர்மம், அல்லது ஒரு வினோதமான விடயம் பற்றி ஒரு ஆக்கம் வருவதுண்டு. பெர்முடா முக்கோணப் பிரதேசம், நாஸ்கா வரைகோடுகள், இறப்பின் பின் வாழ்வு, அட்லாண்டிஸ், பிரமிட்டுக்கள்,
கடலின் கருந்துவாரங்கள், யானைகளின் இடுகாடு ஆகிய கட்டுரைகள்
கடந்த வெளியீடுகளில் இடம்பெற்றிருந்தன. இந்த முறை
ஏழாவது ஆக்கமாக இடம் பெற்றிருப்பது ‘புராதன எகிப்தின்
மர்மங்கள்’ இந்தக் கட்டுரை “லிஸ்ட்வெர்ஸ்(Listverse) எனும்
இணையத்தளத்தில் மார்க் ஒலிவர் (Mark
Oliver) என்பவரால் 16/05/2018 அன்று பதிவிடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின்
தமிழாக்கமாகும்.
இலங்கை
வடபகுதியில் உள்ள ஏதாவது சரித்திரப் பின்ணணியுள்ள அல்லது சுவாரசியமான இடம் பற்றி
எழுதுகின்ற விதத்தில் இந்த முறை எட்டாவது ஆக்கமாகத் தெரிவு செய்யப்பட்டது ‘பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்’ ஆனாலும் ஒரு கட்டுரை எழுதும் அளவுக்குக் கனதியான விடயங்களைச் சேகரிக்க
முடியவில்லையாகையால் பொதுவாகக் கலங்கரை வெளிச்சம் உருவான வரலாறு, என்னென்ன விடயங்களுக்கு அவை உதவியாக இருந்தன,
அவற்றின் பயன்பாடு குறைந்த விதம், இலங்கையிலுள்ள கலங்கரை
விளக்கங்கள் என்று என்று சுற்றி வந்த கட்டுரை கடைசியாகத்தான் பருத்தித்துறை வெளிச்ச வீட்டைத் தொட்டுச் சென்றிருக்கிறது. இந்தக்
கட்டுரைக்கான சில தகவல்கள் நிகழ்நிலை (online)கலைக்களஞ்சியமான
‘விக்கிபீடியா’விலிருந்து அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
வெளிநாடுகளிலுள்ள
எங்களது நண்பர்கள், குறிப்பாகச் சொல்வதானால் இங்கிலாந்து,
அவுஸ்திரேலியா,கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள்
கருணைநிதி (charity)அதாவது வறிய மக்களுக்கு அடிப்படை மற்றும்
வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் தெரிவு செய்த பயனாளிக்கு இரணைதீவில்
கடலட்டைப்பண்ணை ஒன்றை வைத்துக்
கொடுப்பதற்கான உதவியை வழங்கத் தீர்மானிக்க, அது சம்பந்தமாகக் குறித்த பயனாளியைக் கண்டு கதைக்கவும், அந்த இடத்தைப் பார்வையிடுவதற்குமாக இரணைதீவுக்கு ஒரு பயணம் செய்ய வேண்டி
வந்தது. அந்தப் பயணக் கட்டுரை தான் ஒன்பதாவது ஆக்கம்.
இறுதியாக
ஆனால் முக்கியத்துவத்தில் இறுதி அல்லாத, பத்தாவது ஆக்கமாக ‘விடுதலைப்புலிகளின் விமானத்
தாக்குதல்கள்’. போராளிகள்
தரையிலும், கடலிலும் மேற்கொண்ட தாக்குதல்கள் சம்பந்தமாக
பொதுவாக அந்த விடயங்களில் ஆர்வமுள்ளவர்கள் அறிந்து வைத்திருந்தாலும்
விமானத்தாக்குதல்கள் சம்பந்தமாக அவர்கள் அறிந்து வைத்திருப்பது ஒப்பீட்டு ரீதியில்
குறைவாகவே இருக்கும் என்பதாலும், எங்கள் மாவீர நண்பர்களுக்குச்
சமர்ப்பணமாகவும் இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது. இந்தக் கட்டுரைக்கான சில திகதிகளை மற்றும் நிகழ்வுகளை அறிவதற்காக
‘விக்கிபீடியா’ ‘தமிழ்நெட்’ ஆகிய இணையத்தளங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கூட வசனங்கள் சுயமாக எழுதப்பட்டவை தான்.
வல்வை அலையோசை -8
1. எங்கள் டிக்ஸன்
2.
யோகாசனப்
பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
3. கோமுகாசனம்
4. சுனாமி
2004 தொடர்கதை –பாகம் 8
5. கொரோனா கிருமியின் ஆதிமூலம்
6. Contagion (தொற்றுநோய்) ஆங்கிலத் திரைப்படக் கதை
7.புராதன
எகிப்தின் மர்மங்கள்
8.பருத்தித்துறைக்
கலங்கரை விளக்கம்
9. இரணை
தீவுக்கொரு இரகசியப் பயணம்
10. விடுதலைப்
புலிகளின் விமானத் தாக்குதல்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக