எங்கள் டிக்ஸன்
“டிக்ஸன்” என்றொரு
பெயரை வைத்து விட்ட போதிலும் உன்னை நாங்கள் பெரும்பாலும் அழைப்பது “டிச்சு”,”டிச்சுப்பயல்”,டிச்சுக்குட்டி”
என்று தான்.
நீ வீட்டுக்கு வந்து
சேர்ந்த நாள் கூட நன்றாக ஞாபகமிருக்கிறது. பக்கத்து வீட்டிலிருந்த கண்ணு Aunty சுவர் மேலாக, ஒரு மாதக் குட்டியொன்றைத் தூக்கித்தர வாங்கிக் கொண்டு, “ “அட, இவனும் ஒரு கறுவாப்பயல் தான்” என்று சொல்லி
வாங்கிக் கொண்டேன். (இதற்கு முன்பு நாங்கள் இரண்டு தரம் வைத்திருந்த நாய்களின்
பெயரும் கூட டிக்ஸன் தான். இரண்டாவதாக வைத்திருந்த நாயைப் போல இதுவும் முழுக்
கறுப்புத் தான். ஆக....... ‘டிக்ஸன் 3’
டிக்ஸன் வந்து சேர்ந்த
ஒரு சில நாட்களில் தான் நாங்கள் ஆரம்பித்திருந்த புது வியாபாரத்துக்குத் தேவையான
கொன்கிரீட் கற்களை உற்பத்தி செய்யும் இயந்திரமும் வந்து சேர்ந்தது (2012 பங்குனி
மாதம்) கூட ஞாபகமிருக்கிறது.
அப்போது எங்கள் மகள்
ஓவியாவுக்கு இரண்டரை வயது. டிக்ஸனை ஆசையோடு தூக்கி நசுக்குகின்ற ஓவியாவிடமிருந்து
டிக்ஸனை காப்பாற்றப் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆனாலும் கூட சில நாட்களில்
தன்னைச் சுதாகரித்துக் கொண்ட டிக்ஸன், ஓவியா வாசல்
படியை விட்டு இறங்கியதும் எங்காவது ஓவியாவின் பார்வைக்கு அகப்படாமல் ‘சொய்ங்’ என்று ஓடி விடுவான்.
டிக்ஸனுடன்
எங்கள் மகள் ஓவியா
“கட்ட வா. போவம்”
என்று அழைத்ததும் சற்றுக் கூடத் தயக்கமின்றி பின்னால் வந்து, அல்லது நான் சொல்லி விட்டுப் போனாலும் கட்டும் இடத்திற்குச் சென்று கட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும்
அருமையான பண்பு டிக்ஸனுக்கே உரியது.
பொதுவாக எல்லா
நாய்களும்,வாசல் கதவைத் திறந்ததும் தெருவுக்குச்
செல்லத்தான் முனைப்புக் காட்டும். ஆனால் எங்கள் டிக்ஸன் அப்படியல்ல. எங்களுடனே
சேர்ந்து நின்று தெருவை எட்டிப் பார்ப்பதோடு சரி. சரி,
அப்படியே ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வெளியே வந்தாலும் கூட “சரி டிக்ஸன் உள்ளே
போவம்”என்ற எங்கள் குரலுக்குக் கட்டுப்பட்டு உள்ளே வந்து விடுவான்.
வளர்ந்து பெரியவன் ஆகி
விட்ட பின்பு கூட விளையாட்டுப்புத்தி விட்டுப்போகவில்லை. அவனுக்கு விளையாட
வேண்டும் போலிருந்தால் அருகில் வந்து தன்னுடைய காலால் என்னுடைய காலைச் சுரண்டுவது
அவனுடைய பழக்கம். அந்த நேரம், ஒன்று அவனைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது
அவன் கவ்விக் கொண்டோடும் பொருளை அவனது வாயிலிருந்து பறிக்க வேண்டும்.
அவன் வந்து சேர்ந்த
நாட்களில் எங்களோடு (இன்னொரு நாயான)
ரோசிக்குட்டியும் இருந்தாள். (அவளைப் பற்றி இதற்கு முதல் வெளியான “வல்வை
அலையோசை”யில் எழுதியிருக்கிறேன். சிலருக்கு ஞாபகமிருக்கலாம்) டிக்ஸன் குட்டியாக
இருக்கும் போது அவனோடு விளையாடினாலும் கூட பின்பு அவன் அருகில் வரும் போது சற்றே
உறுமி அவனைத் துரத்தி விடுவாள். ஒழுங்காக நடக்க முடியாத அவளது வளைந்த
பின்னங்கால்கள் தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம்.
என்ன தான், தானாகவே போய், கடலில் இறங்கி நீந்துபவனாக
இருந்தாலும் கூட அவனைக் குளிப்பாட்ட வேண்டுமென்று
அழைத்தால் வர மாட்டான்.சங்கிலியால் கட்டி ‘தரதர’ வென்று இழுத்துச் செல்ல வேண்டும். (ஆனால் ரோசி அவனுக்கு நேர்மாறு.
“குளிப்பம், வா” என்று அழைத்து விட்டு டிக்ஸனை அழைத்துக்
கொண்டு கடற்கரைக்குப் போய் பத்து நிமிடங்களில் ஒருவாறு ஏழெட்டு இடங்களில்
இருந்திருந்து வந்து சேர்ந்து விடுவாள்.)
எங்கள் வீட்டுக்கு
சற்றுத் தள்ளி இருந்த அப்புக்குட்டி அண்ணா ஆட்கள் ‘டொங்க்லீ’ என்றொரு முரட்டு நாயை இந்த நாட்களில் வளர்த்து வந்தார்கள். அதற்கும்
டிக்ஸனுக்கும் சிறு வயதிலிருந்தே ஒத்து வராது. வாசல் கதவுக்கு இந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இருந்து பயங்கரமாகக் குரைத்துக் கொண்டதைத் தவிர நாங்கள்
அறிந்தவரை மூன்று தடவைகள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
திகிலடைத்து போகுமளவுக்கு கொடூரமாக சண்டை போட்டும் இருக்கின்றன. இரண்டு பெரும்
மாறி மாறி சண்டை பிடித்துக் கொண்டாலும் கூட அந்த சந்தர்ப்பங்களில் டொங்லீயின் கை
(கால்?) ஓங்கியிருந்ததை மறுக்க முடியாது. டொங்லீ டிக்சனின்
கழுத்தில் வாயால் கவ்விப் பிடித்தால் அதன் பிடியிலிருந்து டிக்ஸனைக் காப்பாற்றுவது
ஒரு சிரமமான காரியம். தடியால் அதனை அடித்தாலும் கூட தான் மேற்கொண்ட காரியத்தில்
கண்ணாக இருப்பதில் டொங்லீ கெட்டிக்காரன்.
டிக்ஸன் இறப்பதற்கு
ஓரிரு மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டுக் காணிக்கு டொங்லீ வந்து டிக்சனுடன்
சண்டை பிடிக்க, அதனை பலத்த சிரமத்துக்கு மத்தியில் துரத்தியது
ஒரு மறக்க முடியாத சம்பவம்.
2018 மார்கழி மாதம்
இரண்டாம் திகதி இரவு. முன்பக்கக் கதவைப் பூட்டப் போன போது அருகில் வந்து நின்ற
டிக்ஸனைப் பார்க்க, உடலின் சில பகுதிகளில்
காயங்கள் இருப்பதைப் பார்த்து விட்டு மருந்து போட்டுத் தடவி விட்டு “கொஞ்ச
நாளைக்கு வெளியில் போகாம வீட்டுக்குள்ளேயே இரு” என்று சொன்னதும் எழுந்து நின்று வாலாட்டினான்
பின்பு கவி (என் மனைவி) டிக்ஸனை சாப்பிட
அழைக்கவும், சாப்பிடப் போகாமல் கடற்கரைக்குப் போன போது தான் டிக்ஸனைக்
கடைசியாக உயிருடன் பார்த்தது.
நான்காம் திகதி
ஆகியும் டிக்ஸனைக் காணாமல் கடற்கரையில் அவனைத் தேடிக் கொண்டு போக அவனுடைய
பிணத்தைத் தான் பார்க்க முடிந்தது. நாங்கள் செல்லமாக வளர்த்த டிக்ஸன் தண்ணீரில் கிடந்து ஊறி, தோல் உரிந்து இறந்து கிடந்தது வாழ்நாளில் மறக்க முடியாத கோரமான காட்சி.
அழுது, அழுதவாறே அவனுக்குக் கிடங்கு கிண்டி அவனைக் கிடங்கில்
போட்டு மூடியதை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது.
டிக்ஸனைக் கொன்றது
பெரும்பாலும் டொங்லீயாகத் தான் இருக்க வேண்டுமென்று அனுமானித்தாலும் கூட அதற்கு
ஆதாரம் இல்லாததால், டொங்க்லீயின் தலையில் பெரிய
கல்லைப் போடுவதற்கும், உந்தூர்தியால் அதனை மோதித்
தள்ளுவதற்கும் வாய்ப்புக்கள் கிடைத்தாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த மனம்
வரவில்லை.
டிக்ஸன், உனக்கு மிகவும் பிடித்த இடம் எங்கள் வீட்டோடு உள்ள கடற்கரை தான். குளிரான
நாட்களாயின் என்னோடு சேர்ந்து கடற்கரையில் ஓடுவதும்,
வெப்பமான நாட்களாயின் நான் ஓடிக்கொண்டிருக்கும் போது கடலில் இறங்கி, குரைத்துக் குரைத்து என்னையும் கடலுக்கு இறங்குமாறு அழைப்பதைக் கற்பனை
செய்ய முடிந்தாலும் கூட நிஜத்தில் இனிமேல் நாங்கள் உன்னைப் பார்க்கவோ, உன் குரலைக் கேட்கவோ போவதில்லை என்ற உண்மை மனதை சுடுகிறது.
சிறந்த பதிவு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குசிறந்த பதிவு டிக்ஸனின் நினைவுகளுடன்
பதிலளிநீக்குடிக்ஸன் பற்றிய பதிவு சுவாரஸ்சியமாக, சிறப்பாக இருத்தது. உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.
பதிலளிநீக்குManathai urukkividdathu.
பதிலளிநீக்கு