சனி, 2 ஜனவரி, 2021

பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்

 பருத்தித்துறைக் கலங்கரை விளக்கம்

தரையில் நாங்கள் பயணம் செய்யும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காண  கட்டிடங்கள், நிலக்குறிப்புக்கள், மரங்கள், நீர்நிலைகள் என்று எத்தனையோ விடயங்கள் இருக்கும். ஆனால் கடலில்.....?கரையோடு அண்டி பகல் நேரங்களில் பிரயாணம் செய்வதில் பிரச்சனைகள் இல்லை. ஆனால் ஆழ்கடல் பகுதிகளில், இரவு நேரங்களில்....... சற்றே கற்பனை செய்து பாருங்கள்....கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும்  கடல், கடல், கடல். அந்த அச்சத்தைத் தரும் சூழ்நிலையில்  ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி சரியான  திசையில் செல்வதென்பது மிகக் கடினமான பணியாகும். ஏன் நட்சத்திரங்களை அடையாளம் வைத்துப் பயணம் செல்லலாம் என்று சிலர் நினைப்பீர்கள். எல்லா நேரமும் அது சாத்தியமாகுமா? உதாரணமாக நாங்கள் வீட்டிலிருந்தே அவதானிக்கும் போது ஒரு இடத்தில் காணப்படும் நட்சத்திரம் இன்னொரு  நாள் அதே இடத்தில் இருப்பதில்லை.  இதற்குக் காரணம் பூமியின் சுழற்சி. அது தவிர இருண்ட மேகங்கள் நிறைந்த அல்லது மழை அல்லது புயலடிக்கும் நேரங்களில்.......? இப்போது கடலில் வழி கண்டுபிடிக்க எத்தனையோ நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது திசையறி கருவிகள் கூடக் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர்.  இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தான் கலங்கரை விளக்கங்களின் சேவை மகத்தானதாக அமைந்தது.  கலம் என்றால் கடலில் பயணிக்க உதவும் சாதனங்கள் அல்லது வாகனங்களைக் குறிக்கும். அதாவது கலம் கரையைக் கண்டுபிடிப்பதற்கு விளக்கமாக அமைந்த உயரமான கட்டிடங்களே கலங்கரை விளக்கங்களாகும். இரண்டு வகையான கலங்கரை விளக்கங்கள் உள்ளன: நிலத்தில் அமைந்துள்ளவை, மற்றும் கடற்பகுதிகளில் அமைந்துள்ளவையே அவையாகும். 


தெளிவாக வரையறுக்கப்பட்ட துறைமுகங்களின் வளர்ச்சிக்கு முன்னர், கடற்படையினர் மலையடிவாரத்தில் உண்டாக்கப்பட்ட  தீ மூலம் தாங்கள் போக வேண்டிய திசையை அறிந்து கடற்பயணம் மேற்கண்டனர்.  தெளிவுநிலையை மேம்படுத்துவதற்காக நெருப்பை உயர்த்துவது அக்காலப் பழக்கமாக இருந்தது.  இவ்வாறாக நெருப்பை ஒரு மேடையில் வைத்துக் கப்பல்களுக்கு வழிகாட்டியதே கலங்கரை விளக்கத்தின் தோற்றத்துக்கு வழிகோலியது எனலாம்.
ஆனால் கடுங்காற்று, மழை ஆகிய வானிலை அம்சங்கள் நெருப்பை உண்டாக்குவதற்குத் தடையாக அமைந்ததால்  காலப்போக்கில் விளக்குகள் மற்றும் கண்ணாடி வில்லைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி  ஒளியை உண்டாக்கி , கடலில் அல்லது உள்நாட்டு நீர்வழிகளில் மாலுமிகளுக்கு பயணிப்பதற்கு உதவியாகவும்  ,ஆபத்தான கடற்கரைகள், ஆழங்குறைந்த பகுதிகள் , திட்டுகள், பாறைகள் மற்றும் துறைமுகங்களுக்குள் பாதுகாப்பாக நுழையும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு உதவியாகவும் மிகவும் உயரமான கோபுரங்கள் கட்டப்பட்டன  .மூடுபனியால் கடற்பகுதி முழுவதும் மூடப்பட்டுத் திக்குத்திசை தெரியாத இடங்களிலும் இவற்றின் பயன்பாடு மகத்தானதாக இருந்தது.   நிலத்திலிருந்து பல மைல் தொலைவில் அமைந்துள்ள பவளப்பாறைகளை அல்லது நீரில் மூழ்கிய தீவுகளை  அடையாளம் காண்பதற்கும் கலங்கரை விளக்கங்கள் உதவியாக அமைந்தன.  முன்னொரு காலத்தில் அவை வான்வழிப் பயணத்துக்கும்  வழிகாட்டியாக அமைந்தன என்றால் உங்களுக்கு அது ஆச்சரியமாக இருக்கும். சாதாரண விளக்குகளை விடப் பன்மடங்கு பிரகாசமான விளக்குகளுடன் கூடிய உயரமான பல மைல்களுக்குத் தெரியும் கோபுரம் என்பதாலேயே இது சாத்தியமாயிற்று.


இப்போது கடற்கொள்ளைகள் மிகவும் அருகி விட்டாலும் கூட இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு கப்பல் புறப்படும் இடத்திலிருந்து போய்ச்சேரவிருக்கும் துறைமுகத்திற்குப் போவதற்குள் கடற்கொள்ளையரிடம்‌ சிக்காமல் போனால் அதிஷ்டம் தான் என்று கருதப்படும் அளவுக்கு கடற்கொள்ளையரின் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.  செல்லும் பாதையறிந்து போகும் கப்பல்களை விட திசையறியாமல் கடலில் அலையும் கப்பல்களே எளிதாகக் கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்காகின. இதனால் கலங்கரை விளக்கங்களின் உருவாக்கமும்  பயன்பாடும் கடற்கொள்ளையரின் பிரசன்னத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றின.     


கலங்கரை விளக்கங்களின் நவீன சகாப்தம் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது, அட்லாண்டிக் வர்த்தகத்தின் வளர்ச்சி,கட்டடக்கலையின் வளர்ச்சி, பொறியியல் துறையின் வளர்ச்சி  மற்றும் புதிய மற்றும் செயற்திறன் மிக்க  ஒளி வழங்கும்  கருவிகளின் முன்னேற்றங்கள் என்பன  கலங்கரை விளக்கங்களின் படிப்படியான வளர்ச்சிக்கு வழிவகுத்தன.  இவ்வாறாகக் கலங்கரை விளக்கங்கள் படிப்படியான வளர்ச்சிக்கு உட்பட்டிருப்பினும்  பாறைகள் அல்லது திட்டுகள் போன்ற கப்பல் அபாயங்களுக்கு எதிராக ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்கும் அதன் பிரதான நோக்கம் மாறவில்லை. .

கடலில் வழிகாட்ட உதவும் நவீன சாதனங்களின்  வருகையின்  காரணமாகவும், அதிகரித்த பராமரிப்புச்செலவு காரணமாகவும்  இப்போது செயற்படுகின்ற  கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரும்பாலான  கலங்கரை விளக்கங்கள்  சுற்றுலாப்பயணிகள் சென்று வருகிற இடங்களாக மாறி விட்டனவே தவிர  கடற்பிரயாணத்துக்கு எந்த வகையிலும்  உதவவில்லை என்று இணையத்தளங்கள்  மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் எல்லாமாக 23 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.இவற்றில் பெரும்பாலானவை துறைமுக அதிகார சபையால் இயக்கிப் பேணப்பட, சில கடற்படையின்  கட்டுப்பாட்டில் உள்ளன. இன்னும் சில முழுமையாகக் கைவிடப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட  நிலையில் இருக்கின்றன. 


இலங்கையில் உள்ள 23 கலங்கரை விளக்கங்கள் உள்ளன.  கிழக்கு மாகாணத்தில் ஒலுவில்(24m),வட்டத்தீவு-திருகோணமலை-கெவுலியா(21m),மிகவும் உயரம் குறைந்த,இயங்காத நிலையிலுள்ள  சங்கமன்கந்தை முனை(8m),மட்டக்களப்பு(28m)சப்பல் ஹில் திருகோணமலைக்குடா(தரவுகள் இல்லை) ஃபவுல் முனைத்தீவு(21m)  இயங்காத நிலையிலும் . தென் மாகாணத்தில் பெரிய பசெஸ் பவளப்பாறை(37m),சிறிய பசெஸ் பவளப்பாறை(37m), காலி(26.5m) அம்பாந்தோட்டை (14m)கைவிடப்பட்ட நிலையிலும், இலங்கையிலுள்ள கலங்கரை விளக்கங்களிலேயே மிகவும் உயரமான டொன்றா முனை(49m) ஆகியனவும் மேல் மாகாணத்தில்  பார்பேரின் –பேருவில(தரவுகள் இல்லை), கொழும்பு(34m), இயங்காத நிலையிலுள்ள பழைய கொழும்பு(29m), கொழும்புத்தீவு வடஎல்லை(12m), கொழும்புத்தீவு தென்எல்லை(12m) வட மாகாணத்தில் முல்லைத்தீவு(20m)-இது 1996/1997 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையில்  இடம்பெற்ற யுத்தத்தின் போது அழிக்கப்பட்ட நிலையிலும், , புங்குடுதீவு(தரவுகள் இல்லை) காங்கேசந்துறை(22m), தலைமன்னார்(19m), உருமலை-மன்னார்(19m),கோவிலான் முனை-காரைதீவு(30m), பருத்தித்துறை(32m)  என்பன இயங்கும் நிலையிலுமாக  இலங்கையிலுள்ள கலங்கரை விளக்கங்களாகும். 

  2013 இல் ஓவியா, தீபன், - பின்னணியில் தென் மாகாணத்திலுள்ள  26.5 மீற்றர் உயரமான, காலி             கோட்டையில் அமைந்திருக்கும்  கலங்கரை விளக்கம் 


சரி, கதை ஒன்று.......  ஐந்தாம் வகுப்பு மாணவனொருத்தன் புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாமரம் என்ற கட்டுரையைப் பாடமாக்கிக் கொண்டு போனானாம். ஆனால் பரீட்சைக்கு வந்ததோ எங்கள் வீட்டு மாடு கட்டுரை.  கலங்காத அவன், பாடமாக்கி வைத்திருந்ததை முழுமையாக எழுதி விட்டு கடைசியில் எழுதினானாம் “இந்த மாமரத்தில் தான் எங்கள் மாட்டைக் கட்டுவார்கள்.”

சரி, இந்தக் கதை ஏன் இடையில் வந்தது என்று யோசிக்கிறீர்களா?

எழுத விரும்பியது பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தைப் பற்றி. ஆனால் ஒரு கட்டுரையாக எழுதும் அளவுக்கு அதனைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை.  ஆனால் பொதுவாக கலங்கரை விளக்கங்களைப் பற்றி நிறையத் தகவல்கள் சேகரிக்கக் கூடியதாக இருந்ததுடன் சொந்தச்சரக்கையும் சேர்த்து எழுதக் கூடியதாக இருந்தது. சரி, பொதுவாகக் கலங்கரை விளக்கங்களைப் பற்றி  வாசகர்களுக்கு அறியத் தந்து விட்டு கடைசியாக பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தைப் பற்றி அறியத்தரலாமே  என்று தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. 



 இலங்கையின் வடக்கின் உச்சமாகக் கருதப்படும் பருத்தித்துறையின் கிழக்கு  முனைப்பகுதியில்   அமைந்திருக்கும் கலங்கரை விளக்கம் 1916 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, 32 மீட்டர் (105 அடி) உயரமானதாகும்.  இந்தக் கலங்கரை விளக்கமானது  விளக்கு மற்றும் சுற்று உப்பரிகை அல்லது  சுற்று  மேல்மாடத்தைக் கொண்டுள்ளது. உயரமான இடத்திலிருந்து கடற்பகுதியைப் பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் இப்போது அந்த அனுபவத்தைப் பெற முடியாத வகையில் கடற்படையினரால் அந்தப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வேலியிடப்பட்டு, புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டு, அவர்களின் பிரத்தியேக  பாவனைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகில் இலங்கை கடற்படைக்காகக் கட்டப்பட்டிருக்கும் அதனை விட உயரமான  தகவல் தொடர்பு கோபுரத்தால் கலங்கரை விளக்கம் குள்ளமாகக் காட்சியளிக்கிறது. 


எங்கள் முன்னோர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், கடற்பயணத்துக்கு உதவும் எந்தவிதமான கருவிகளுமன்றி தனியே,( இரவெனில்) வானத்தில் தெரியும் நட்சத்திரங்களையும், (பகலெனில்) சில நிலக்குறிப்புக்களையும் வைத்துப் பயணத்தை மேற்கொண்டதை நினைக்க வியப்பாகத்தான் இருக்கிறது. அதுவும் வாழ்வாதாரத்துக்கான மீன்பிடிப்பயணம் மட்டுமல்லாமல் வியாபார நிமித்தமாக கிழக்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் மறுகோடியிலிருக்கும் அமெரிக்காவுக்குக் கூட, மோசமான காலைநிலை, கடற்சீற்றங்கள்,வேகமான நீரோட்டங்கள்,திமிங்கிலங்கள்  ஆகிய எத்தனையோ தடைகளைத் தாண்டி  வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட  அன்னபூரணி என்ற கப்பல் மூலம்  போய் திரும்பி வந்தனர் என்ற வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய நிகழ்வு வியப்பின் உச்சம்.  வடமராட்சிப் பகுதி மீனவர்கள் மற்றும் கடல் வாணிபத்தை மேற்கொண்ட வர்களின் நலன் கருதி இந்தக் கலங்கரை விளக்கம்  1916 ஆம் ஆண்டில் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. கலங்கரை விளக்கத்தின் கதவுக்கு மேலே பொறிக்கப்பட்ட தேதி 30-6-1931 ஆகும்.

இடமிருந்து வலமாக  சின்னன் என்று அழைக்கப்படும் சிவமனோகரன், அரவிந்தன், ஆசுகன், தீபன், சேகர்,கர்ணா

இப்போது தான் அதற்குள் நுழையத் தடை செய்யப்பட்டிருக்கிறது எனினும் இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன், எல்லோரும் போய்வரக் கூடிய  மாதிரித்தான்தான் இருந்தது. அதாவது பொது மக்களுக்கான நுழைவு அந்தக் காலத்தில் தடை செய்யப்படவில்லை. அதற்கு பருத்தித்துறை கலங்கரை விளக்கத்தில் எடுத்துக் கொண்ட,  மேலேயுள்ள இந்தப் படமே சாட்சி.  இதில் உள்ளவர்கள் ஆகியோர். . பெரும்பாலும் இந்தப்படம்  உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு அவிழ்த்து விட்ட மாடுகளாய்த் திரிந்த 1992/1993 காலப்பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படத்தை இவ்வளவு காலமும் பத்திரமாக வைத்திருந்து  அனுப்பி வைத்த அரவிந்தனுக்கு நன்றி. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக