சனி, 2 ஜனவரி, 2021

யோகாசனப் பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

 யோகாசனப் பயிற்சியாளர் “யோகரத்தினா”திருமதி சியாமளா சிவனேசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

உடலை நெறிப்படுத்தி அதன் மூலமாக மனதையும் நெறிப்படுத்தும்  உன்னதக் கலையான யோகாசனம் பற்றி அனேகமானவர்கள் கொஞ்சமேனும் அறிந்திருப்பீர்கள். இந்த நேர்காணல், அது சம்பந்தமான  சில சந்தேகங்களை நீக்கி மேலதிகத் தகவல்களையும்  வழங்கி, இதுவரை யோகாவில் ஈடுபடாதவர்களுக்கு அதில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தையும், ஏற்கனவே ஈடுபட்டவர்களுக்கு மேலதிகத் தூண்டுதலையும் வழங்குமாக இருந்தால் மகிழ்ச்சி. 



மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான யோகாசன வகுப்புக்களை வல்வெட்டித்துறையில் நடத்தி வரும் யோகாசனப் பயிற்சியாளரான திருமதி சியாமளா சிவனேசனுக்கு யோகக்கலையில் பல சிறப்புக்கள் உண்டு. “யோகரத்தினா” பட்டம் பெற்ற இவர் “ஆனந்தயோகாலயா”அமைப்பின் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் பொதுச்செயலாளர் மற்றும் ஆசிரியர், இந்தியாவிலுள்ள “உலக தெய்வநெறி மன்றம்” என்ற அமைப்பின்  அண்ணாநகர் கிளையில் சிவானந்தா முறைப்படி திரு சூர்யா சந்திரானந்தா அவர்களிடம் யோகம் பயின்று பட்டயம் பெற்றவர்.  அதே இடத்தில் மகளிருக்கான யோகாசனப் பயிற்சியை 2015 வரை அளித்து சேவை புரிந்தவர். கடந்த நான்காண்டு காலமாக வல்வெட்டித்துறையில் யோகாசனப் பயிற்சிகளை இலவசமாக வழங்கி சேவை புரிந்து வருகிறார். இவரது பயிற்சியில் சில மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் யோகாசனப் போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரிடம் சில கேள்விகள்.

1.‘யோகா என்றால் ஆகா’, ஓகோ” என்கிறார்கள். அப்படி என்ன அதன் சிறப்பு என்று சுருக்கமாகச் சொல்வீர்களா?

யோகா என்பது ஓர் வாழ்வியல் கலை. இது வெறும் உடம்பு மட்டும் செய்யும் பயிற்சி அல்ல. மனதும் சேர்ந்து அனுபவித்து செய்யும் ஓர் உணர்வு. அத்தோடு மூச்சுக் காற்றையும் சரியான முறையில் உள்ளே, வெளியே விடுவதால் யோகப்பயிற்சியை முறையாகச் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே இலேசாவதை நன்கு உணர முடியும். இந்தச் சிறப்பு யோகாசனத்துக்கு மட்டுமே உரியது.

 

2.யோகக்கலையைப் பயிற்றுவிப்பதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?

சரியாகச் சொல்வதானால் நான் கற்றுக் கொள்ள மட்டும் தான் யோகா வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்தேன். காலப்போக்கில் கற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்புத் தானாகவே அமைந்தது. 2007இல் அந்த வருடத்திற்கான  சான்றிதழ் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் எனக்கான செய்முறைத்தேர்வைச் செய்து முடித்து விட்டு அடுத்துத் தேர்வினைச் செய்பவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு விளக்கங்களையும் செயல்முறைகளையும் அவர்களுக்குச் சொல்லியும் செய்தும் காட்டிக் கொண்டிருந்தேன். எங்கள் நிலையத்தில் பயிற்றுவிப்பாளராக  இருந்த் ஒருவர் அதைக் கவனித்து விட்டு மிக விரைவிலேயே அடுத்தடுத்த வகுப்புக்களில் என்னை முன்னே நிறுத்தி  வகுப்பு எடுக்கும்படி உற்சாகப்படுத்தினார்.

மிகுந்த தயக்கத்துடன் ஆரம்பித்த பயிற்றுவிப்பு வகுப்பு பின்னர் வெகு இயல்பாக சரளமாக  ஒவ்வொருவரின் உடலின் இயல்பு, அதன் நெகிழ்வுத்தன்மை இவற்றுக்கு ஏற்ப அவர்களைத் தயார்படுத்தும் முறை என ஓர் ஆசிரியரின் பொறுப்பைப் புரிய வைத்தது. அந்தப் புரிதலை நானே ரசிக்க ஆரம்பித்தேன். முழு மனதோடும் ஆர்வத்தோடும் செயல்பட ஆரம்பித்தேன்.

     

3.இதற்காக நீங்கள் பெற்ற ஆசிரியப் பயிற்சிகள் பற்றி வாசகர்களுக்குக் கொஞ்சம் சொல்வீர்களா?

ஆசிரியருக்கான பயிற்சி என்று தனியாகச் சொல்லிக் கொள்ள முடியாது. எங்கள் உலகத் தெய்வநெறி மன்றத்தைப் பொறுத்தளவில் வழக்கமாக மூன்றாம் நிலைத் தேர்வான யோகரத்னாவில் சித்தி பெற்ற பின்னரே ஆசிரியராகக் கடமையாற்றுவார்கள். ஆனால் முதலாம் நிலைச் சித்தியான யோகவல்லபா கிடைத்தபோதே எனக்கு அந்த வாய்ப்பு அமைந்து விட்டது. யோகரத்னா தேர்வை பின்னர் செய்து முடித்தேன். நல்ல நட்புகளும் முன்னேறிச் செல்வதற்கான அறிமுகங்களும் கிடைத்ததால் என்னுடைய யோகப்பயணம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் முறையாக ஒரு வருடம் பயின்று, யோகா & இயற்கையியல் என்ற சான்றிதழ் பெறும் வரையில் நீண்டது. (C.Y.N Certificate of Yoga & Naturopathy) முறையான பல்கலைக் கழகச் சான்றிதழோடு ஆசிரியர் பணியைச் செய்கிறேன் என்பதும் திருப்தியான விடயம்.

 

4.யோகக்கலையை எவ்வாறு நீங்கள் நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்துகிறீர்கள்?

சமீபத்தில் யோகி. சாண்டில்யன் என்பவரின் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன். அதிலோன்றில் அவர் குறிப்பிட்டிருந்த விடயம், இந்தக் கேள்விக்குச் சரியான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். உடல் ஒரு அற்புதமான அமைப்பு. ஆண்டவன் அதனைப் படைக்கும் போதே  சில பொறிமுறைகளை, சில இயக்கங்களை, சில அசைவுகளை இயல்பாக தினமும் பல தடவைகள் செய்யக்கூடிய விதமாகத் தான் நெறிப்படுத்தியுள்ளான்.  சுழற்றுதல், மடக்குதல், நீட்டுதல், சாய்த்தல், திருப்புதல், வளைத்தல், உயர்த்துதல் இந்த ஏழு இயக்கங்களும் சரியாக நடந்து கொண்டிருக்குமானால்  உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய வாழ்க்கை முறையில் பல இடங்களில், பல விதங்களில் இவை தடைப்படுகின்றன. நடைமுறையில் அவை செய்யப்படாமல் போவதாலேயே நாம் பயிற்சியாக அதனைத் தனியே செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த இயக்கங்கள் இயல்பாக நடைபெறுகின்றனவா என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே போதும். உதாரணமாகக் காலை எழுந்தவுடன் கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி, விரல்களைக் கோர்த்து, உள்ளங்கை மேலே இருக்கும்படியாக மூச்சை இழுத்து விட்டபடி, உடலை மேல்நோக்கி இழுத்துச் சோம்பல் முறிப்போம். அத்துடன் உடல் சுறுசுறுப்பாகி விடும். இது இயல்பானது. யோகாசனத்தில்  இதற்குப் பெயர் தடாசனம். இதனால் தான் யோகாவை வாழ்வியல் கலை என்கிறோம்.

  

5.வயது முதிர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள், சில நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோர்களுக்கு யோகாவில் ஈடுபடுவதற்கு மனதளவில் ஆர்வம் இருந்தாலும் கூடவே தயக்கமும் இருக்கும் . இவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரைகள் என்ன?

இங்கே அறிவுரைகள் என்பதை விட சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். யோகாசனம் என்பது உடலை வருத்திச் செய்யும் விடயமல்ல. ஒவ்வொருவரும் அவரவர் உடலின் தன்மைக்கு ஏற்ப, உடல் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு ஏற்ப,அதன் பிரச்சனைகளுக்கு ஏற்பச் செய்வதே போதுமானதாக இருக்கும். முறையாகத் தொடர்ந்து பயிற்சிகளைச் செய்யும் போது உடல் இலேசாகி ஆசனங்களை முழுமையான அளவில் செய்யக் கூடியதாகத் தன்னாலேயே வந்துவிடும். அறிவுரை என்று சொல்வதானால் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. சரியாகச் செய்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று கணக்குப் பார்க்கக் கூடாது. இயல்பாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வளவு தான். இது எல்லோருக்குமே பொருந்தும். ஆகவே தயக்கத்தை விடுத்து  பயிற்சியில் மெதுமெதுவாக ஈடுபடுங்கள்.  

 

6.அகில இலங்கை ரீதியில் யோகாசனப் போட்டிகளில் பங்கு பற்றி திறமையை வெளிப்படுத்திய உங்கள் மாணவர்கள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

நல்ல ஆசிரியர் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். அதே நேரம் .... நல்ல மாணவர்கள் கிடைப்பதற்கும் கொடுத்து வைக்க வேண்டும் என்பது என் கருத்து. 2019 இல் முதன்முதலில்  அகில இலங்கை ரீதியில் யோகாசனப்போட்டியில் ஆனந்த யோகாலயாமாணவர்கள் பங்குபற்றியபோது எங்கள் நிலையம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தது. உயர்நிலை ஆசனங்களில் பெரியளவில் பரிச்சயம்  இருக்கவில்லை. அடிப்படையான ஆசனங்களில் மட்டுமே தேர்ச்சி  பெற்றிருந்தார்கள். போட்டிக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் மிகக் குறுகிய காலத்தில் முழு ஈடுபாட்டுடன் தினமும் பயிற்சி வகுப்புக்களுக்கு வந்து உயர்நிலை ஆசனங்கள் கற்று 7 பேர் கலந்து கொண்ட போட்டியில் 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 4  பதக்கங்களைப் பெற்றார்கள். போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்  கேட்ட தாய்”என்ற குறளின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தேன்.

2020இல் அகில இலங்கை ரீதியிலான போட்டிகள் இணைய தளத்தினூடாகக் காணொளி முறையில்   நடைபெற்றது. பல இடையூறுகள் இருந்த போதும் 17 பேர் பயிற்சி வகுப்புக்கு வந்து ஆசனங்களைக் கற்றுக் கொண்டு போட்டியில் பங்கு பற்றினார்கள் இம்முறை போட்டியானது மிகவும் சவாலானதாக இருந்தது. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து  450 பேருக்கு மேல் கலந்து கொண்ட போட்டியில்  ஒரு தங்கப் பதக்கம் உட்பட 4 பதக்கங்களை  மீண்டும் பெற்றுக் கொண்டார்கள்.

பாடசாலைப்பருவத்தைத்  தாண்டிய வயதில் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர்  குடும்பத் தலைவிகள் எனப் பல தரப்பினரும் தாமாகவே முன் வந்து இந்தப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தியமை மனதை நெகிழ வைத்தது.

2019, 2020 ஆகிய இரண்டு போட்டிகளிலுமே 28-34 வயதுப்பிரிவில் முதற்பரிசை வென்ற மதுமினா, அதே போல் இரண்டு போட்டிகளிலுமே 51 வயதுக்கு  மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற 73 வயது பத்மலோசனா அதிரூபசிங்கம் இருவரையும்  எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்னும் 2019 போட்டியில் 21-27 வயதுப்பிரிவில் முதற் பரிசை வென்ற ரம்யா, அதே போட்டியில் 51 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்  இரண்டாம் பரிசை வென்ற விமலாதேவி, 2020 போட்டியில் 8-13 வயதுப்பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற ஜெயந்தினி, அதே போட்டியில்  42-50 வயதுப்பிரிவில் மூன்றாம் பரிசை வென்ற தீபன் எல்லோரையும் அவர்களது உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றிக்காகப்  பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரம் பதக்கம் பெறா விட்டாலும்  முழு அர்ப்பணிப்போடு பயிற்சியில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களையும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

   

2020 இல் யோகாசனப்போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்கள் 


7.சிலர் இதனை உடலுக்கான பயிற்சியாக மட்டும்தான் கருதுகிறார்கள். இது மனதை நெறிப்படுத்தும் பயிற்சியும் கூட என்று எவ்வாறு  வாசகர்களுக்கு விளக்குவீர்கள்?

ஆசனப் பயிற்சியில் உடலின் அசைவுகளோடு மூச்சையும் கவனிப்பது முக்கியமாக விளங்குகிறது. ...ஸ்திரம்... சுகம்....ஆசனம் என்ற வாக்கியத்துக்கு ஏற்ப சுகமான ஒரு நிலையில் உடலை நிறுத்தும் போது மனமானது உடலில் இழுக்கப்படும் பாகங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறது. இயல்பான மூச்சில் மனதின் இந்தக் கவனிப்பானது எண்ணங்களை வேறு இடத்திற்குச் செல்ல விடாமல் இந்த இடத்திலேயே குவிக்கிறது. பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற ஆசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது எண்ணங்கள் குறைந்து மனது இலேசாகி வருவதை அனுபவபூர்வமாக உணர முடியும். காலப்போக்கில் தெளிவான மனம் நிச்சயம் கிடைக்கும்.

 

8.உங்களுக்குப் பிடித்த யோகாசனம் என்ன? அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

ஆசனங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொருத்தரின் உடல்வாகுக்கு ஏற்ப சில ஆசனங்களைச் சுலபமாக,செளகரியமாகச் சிரமமின்றி செய்ய வரும். அவ்வாறாக  எனக்குச் செய்வதற்கு எளிதான ஆசனங்களை எனக்குப் பிடித்த ஆசனங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். என்னைப் பொருத்தவரையில் ஆரம்ப நாட்களிலேயே விபரீதகரணி, சர்வாங்காசனம் ஆகியவற்றை இலகுவாகச் செய்ய முடிந்தது. சிரமமின்றி நீண்ட நேரம் நிற்கவும் பின்னாளில் பயிற்சி பெற்றேன். சர்வம் +அங்கம் +ஆசனம். உடலின் எல்லா உறுப்புக்களும் தூண்டப்படும் ஓர் அற்புதமான ஆசனமே சர்வாங்காசனம். இது தோள்ப்பட்டையில் உடலை நிறுத்தி, கால்களை மேலே செங்குத்தாகத் தூக்கி நிறுத்தும் இந்த ஆசனத்தின் மூலம்  உடலின் சகல பகுதிகளுக்கும் இரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. முதுமையைக் கட்டுப்படுத்தி அதன் அடையாளங்கலான நரை,திரை ஏற்படுவதைக் குறைக்கிறது. சூர்ய நமஸ்காரத்துடன் இந்த ஒரு ஆசனத்தையும் மாற்று ஆசனமான மச்சாசனத்தையும் செய்து வந்தாலே ஆரோக்கியம் நிலைக்கும் என்பார்கள். 

    


9.உங்களுக்கு யோகக்கலையைப் பயிற்றுவித்த யோகக்குருக்கள்  பற்றி வாசகர்களுக்குக் கொஞ்சம் சொல்வீர்களா?

நான் யோகாசனப்பயிற்சியை ஆரம்பித்த நாட்களில் ஒரு குடும்பத்தலைவிக்கே உரிய நடைமுறைச்சிக்கல்கள் எனக்கும் இருந்தது. அதனால் வகுப்புக்களுக்குத் தொடர்ந்து போவது இயலாத காரியமாக இருந்தது. 5-6 வருடங்களின் பின்னர் குடும்பப் பொறுப்புக்கள் குறைந்து விட்ட நிலையில், அப்போது நான் வசித்து வந்த சென்னை அண்ணாநகரில் என் வீட்டுக்கு அருகிலிருந்த உலகத் தெய்வ நெறி மன்றத்தில் அங்கத்தவராகச் சேர்ந்தேன்.  அதன் நிறுவனர், சூர்ய சந்திரானந்தா என்று அழைப்பப்படுகின்ற திரு. வெ. ராமச்சந்திரன் யோகக்கலையின் முதலிரண்டு படிகளான இயமம், நியமம் என்பதை இப்போதும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆசிகள் என்னுடன் எப்போது இருப்பதாகவே உணர்கிறேன். இன்றளவும் அந்த நிலையத்துடன் தொடர்பில் இருக்கிறேன்.

அங்கே தான் இன்றைய ஆனந்த யோகாலயாவுக்கு வித்திட்ட திரு மணிகண்டன் வாசுதேவன் அறிமுகமானார். அவர் ஒரு இளைஞர். ஆனால் யோகமகாரத்னா’, யோகக்கலாநிதி’, யோகக்கலைமாமணிஇன்னும் பல பட்டங்களைப் பெற்றவர். அவர் ஆசனங்களை அற்புதமாகவும் இலகுவாகவும்  செய்வதை நாங்கள் பிரமிப்புடன் பார்ப்போம். யோகக் கலையை எல்லா இடமும் பரப்ப வேண்டும் என்ற அவரது நீண்ட தொலைநோக்கு சிந்தனை அவரைப் பின்பற்றத் தூண்டியது. இன்று இந்த ஆசிரியை உருவாக அவர் தான் காரணம். அவர் கொடுத்த பயிற்சிகளும், விளக்கங்களும் இப்போதும் என் மனதில் அழியாமல் இருக்கிறது.  திரு. மணிகண்டன் அவர்கள் என்னை முறையான பல்கலைக்கழக சான்றிதழ் பெறும் வகையில் தன்னுடைய குருவான யோகி. தி.ஆ.கிருஷ்ணன் அவர்களிடமும் ஒரு வருடம் பயிற்சி பெற வைத்தார். யோகி கிருஷ்ணன் அவர்கள் யோகக் கலைக்காகத் திருமணமே செய்து கொள்ளாத பிரம்மச்சாரி. இயற்கை உணவு முறையில் 50 வருடங்களுக்கு மேல் வாழும் ஓர் மகத்தான மனிதர்.

இவர்களிடம் எல்லாம் யோகக்கலையின் ஒரு துளியையாவது கற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன்.  

    

10.யோகக்கலையை இன்னும் விஸ்தரிப்பது சம்பந்தமாக நீங்கள் மனதில் கொண்டிருக்கும் திட்டங்கள், அதற்கு முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசனப்பயிற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,யோகக்கலையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட தருணத்தில் நான் மறுபடியும் இலங்கைக்குத் திரும்புவேனா என்று கூடத் தெரியாத நிலையில்,மனதில் என்றாவது ஒரு நாள் நான் மறுபடியும் ஊருக்குத் திரும்பினால் இந்தக் கலையை என் மக்களிடம் இலவசமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆண்டவனுக்கு நன்றி!

மிகச் சாதாரணமாக 2017இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக்கள் 4 ஆண்டுகளில் திரு மணிகண்டன், அவரது பிரதான சிஷ்யை செல்வி ஷாலினி  பாலசுப்ரமணியம் ஆகியோருடைய ஆலோசனைகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் இப்போது ஆனந்த யோகாலயா என்ற பெயருடன் நான்கு தரங்களாக வகுக்கப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள்,தேர்வுகள், சான்றிதழ்கள் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன் சென்னையின் முக்கிய பயிற்றுவிப்பாளர்கள் இங்கு வருகை தந்து விசேட வகுப்புக்களும் நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட திட்டமிடப்பட்ட ஒரு யோகா பாடசாலையாக எங்கள் ஆனந்த யோகாலயா உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு படியாக மேலே ஏறிய நிலையில் அடுத்த படியாக இந்த யோகா பயிற்சிக் கூடத்துக்கு ஓர் இடம், கட்டிடம் வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்துள்ளது. தற்போது வல்வை றோமன்  கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் மாலை நேரங்களில் எங்கள் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமக்கான சொந்த இடத்தில் ஆனந்த யோகாலயாமேலும் பல ஆசிரியர்களுடன், யோகக்கலையை  ஆர்வத்துடன் கற்கும் மானவர்களுடன் முழு அளவில் மிளிர வேண்டும் என்பது என் அவா. நியாயமான ஆசைகள் தாமதமாகலாம்.ஆனால் தடைப்படாது என்பது என் நம்பிக்கை. காலமும் கடவுளும் கருணை புரிந்தால் இது நிச்சயம் நடக்கும்.

 

11.இந்த நேர்காணலின் இறுதியாக நீங்கள் சொல்ல விரும்புவது.......

இளைஞர்களே!யுவதிகளே!யோகப்பயிற்சியை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள்.

உடல் பிரச்சனை உள்ளவர்களே!உங்களால் முடிந்தவரை முயற்சியுங்கள்.

முதியவர்களே!மூச்சுப் பயிற்சியை எளிமையான உடற்பயிற்சிகளோடு செய்யுங்கள். 



3 கருத்துகள்:

  1. சொல்ல வார்த்தைகள் இல்லை..
    உங்கள் மாணவி என்பதில் பெருமை
    அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சொல்ல வார்த்தைகள் இல்லை..
    உங்கள் மாணவி என்பதில் பெருமை
    அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. 🙏🙏🙏💐💐💐💐💐உங்கள்யோகாபயணம்தொடராகடவுளைகடவுளைவேண்டிக்கொள்ளுகிறேன். மணிக்கண்டன்சார்க்குஎண்நன்றி
    Rajendranகொராட்டுர்பதஞ்சலிநன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு