ஞாயிறு, 30 டிசம்பர், 2012

தொலைந்த நகரம்- அட்லாண்டிஸ்

                                                        தொலைந்த நகரம்- அட்லாண்டிஸ் 
அட்லாண்டிசின் சகாப்தம் மிகப் பழமையானதும்,உலகின் வெளிப்படுத்தப்படாத மர்மங்களுள்  மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவதுமாகும். இதன் புதிர், இதனை நம்புபவர்களையும் சரி நம்பாதவர்களையும் சரி குழப்பத்தில் ஆழ்த்தத் தவறியதில்லை.உண்மையில் இந்தத் தொலைந்த நகரம் எங்கே இருந்தது? இப்போது எங்கே இருக்கிறது? இதன் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்ன? உண்மையில் அங்கே (எங்களோடு ஒப்பிடும் போது) சற்று முன்னேற்றமான மனித இனம் வாழ்ந்துள்ளதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்றாவது ஒரு நாள் ஒரு நிச்சயமான பதில் கிடைக்கத் தான் போகிறது.
கி.மு 428- கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த  தத்துவ அறிஞரான சோக்ரடீசின் மாணாக்கனாக இருந்த பிளேட்டோ தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டார். சோக்ரடீசிடம் தனது கல்வியை முடித்துக் கொண்டு தத்துவப் பள்ளியை ஆரம்பித்த பிளேட்டோ சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்றாக  அட்லாண்டிசின் கட்டிடக்கலை, பொறியியல் துறை, அங்கு கொண்டாடப்பட்ட விழாக்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இது பிளேட்டோவின் கற்பனைக் கதை என்றே ஏனையோர் இதைக் கருதிய போதும் இது உண்மை எனக் குறிப்பிட்ட பிளேட்டோ யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு சிறந்த இடமாக  அட்லான்டிஸ் விளங்கியது என்று தெரிவித்தார்.
அட்லாண்டிசில் ஏற்பட்ட மிகப்பெரும் வெள்ளம் அங்கு வாழ்ந்த மனித இனம் முழுவதையும் அழித்தது என்ற கதை பொதுவாக எங்கள் மத்தியில் கூறப்படும் ஒன்று. இவ்வாறாக அழிக்கப்பட்ட ஒரு ராஜ்ஜியம் அல்லது ஒரு நாகரீகத்தின் பெயரானது சற்றே வெவ்வேறுபட்ட உச்சரிப்புக்களுடன் உலகம் முழுவதுமே பரந்து காணப்பட்டது எவ்வாறு என்பது இன்னுமே புரியாத ஒன்று. கனரி தீவுகளில் அடாலயா என்றொரு புராணம் உண்டு. வட ஸ்பெயினில் அட்லாண்டிகா என்றொரு இடமுண்டு. வைக்கிங்குகள் அட்லி எனப்படும் கதையொன்றைக் கூறுவார்கள். அதையே வட ஆபிரிக்காவில் ஆட்டாலா என்று கூறுவர். அஸ்டெக் நாகரீகத்தவர்கள் அஸ்ட்லான் என்ற சொல்லைப் பாவித்தார்கள். வட அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் தங்களை அசட்லான் என்றழைத்துக் கொண்டார்கள்.
பிளேட்டோ  புவியியல் ரீதியாக அட்லாண்டிசின் இருப்பிடம் பற்றிக் குறிப்பிடுகையில், இந்தக் கண்டம் (கிட்டத்தட்ட  லிபியாவையும் ஆசியாவையும் ஒன்று சேர்த்தால் வரும் அளவுக்கு அதாவது 5 முதல் 10 மில்லியன் சதுர கிலோ மீட்டர்)  அட்லாண்டிக் கடலில் ஜிப்ரால்டர் பாறைக்கு (இங்கிலாந்தின் முடிக்குரிய சொத்தாகக் கருதப்படும் ஜிப்ரால்டர் பாறை ஸ்பெயினின் எல்லைக்கருகே அமைந்துள்ளது) அருகே இருந்தது என்று கூறியிருந்தார். இவரின் இந்த விளக்கம் அட்லான்டிஸ் தீவானது எரிமலையின் சீற்றம் காரணமாகக் கடலில் மூழ்கிய ஏஜியன் தீவுகளில் ஒன்றான சன்டோரிணி என்றே பெரும்பாலோனோரை நினைக்க வைத்தது. சிலர் இதனை அட்லாண்டிக் கடலையும் பசுபிக் கடலையும் இணைக்கும் பாலம் போல் நேர்கோட்டில் அமைந்திருந்த தீவுகளில் ஒன்றாகக் கருதினார். சிலர் ஸ்பெயினில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றாக இதனை நினைத்தார்கள். இன்னும் சிலர் பெர்முடா முக்கோணப் பிரதேசத்தில் விமானங்களும் கப்பல்களும் மறையத் தொடங்கிய மர்மம் ஆரம்பித்தது அட்லாண்டிசின் அழிவோடு தான் என்று  இரண்டு மர்மங்களையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தார்கள். இன்னும் சிலர் இன்னும் ஒன்றிரண்டு படி மேலே போய் அட்லான்டிஸ் பூமியிலேயே இல்லை, வேறொரு கிரகத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
கண்டங்கள் நகரும் கொள்கைக்கு ஏற்ப உலகின் அனைத்துக் கண்டங்களுமே  சிறுவர்கள் பொருத்தி விளையாடும் ‘jigsaw puzzle’ போல் பொருந்தினாலும் வட அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக அட்லாண்டிஸ் விளங்கியிருக்கலாம் என்றும் சில புவியியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பிளேட்டோ அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிடுகையில் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில்  மையப் பகுதியில் சுற்றுச் சுவரோடு மூன்று கால்வாய்களை  ஊடறுத்து அமைந்திருந்த அதன் தலைநகர் பற்றிக் குறிப்பிடுகிறார். அட்லாண்டிசை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசனும் தனக்கு முன்பு ஆட்சி செய்த அரசனை மிஞ்சும் வகையில் அந்த நகரை அழகுபடுத்தும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினான். அந்த இடத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் தகரத்தால், பித்தளையால், செம்பால்  செய்யப்பட்ட சுவர்களைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது. அத்துடன் கறுப்பு, வெள்ளை, சிவப்புக் கற்களும் இடையிடையே பொருத்தப்பட்டு அதன் அழகுக்கு இன்னும் மெருகூட்டின. மேலும் பிளேட்டோ அட்லாண்டிஸின் செல்வச் செழிப்புப் பற்றிக் குறிப்பிடுகையில்  வேறு எந்த ராஜ மாளிகையிலும் காண முடியாத அளவிட முடியாத  அளப்பரிய செல்வம் அங்குள்ள ராஜ மாளிகையில் குவிந்து கிடந்தது எனவும் அதுவே அட்லாண்டிஸின் அழிவுக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் ஏனைய மனிதர்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு அழகாலும் அறிவாலும் செல்வத்தாலும் மேம்பட்டிருந்தாலும், இறையால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவர்கள் சேர்த்த செல்வம் அவர்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கியது. அளவு கடந்த செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் அவர்கள் ஆசைப்படத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் சேர்த்த செல்வம் இறையிடமுள்ள செல்வத்தை விட மேலானது என்று கருதினார்கள். அதுவே அவர்களின் அழிவுக்கு வித்திட்டது என்று கூறினார். அவர்களிடமிருந்த இறை  நம்பிக்கை மங்கத் தொடங்க இறப்பவர் தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. நில நடுக்கம், பூகம்பம், சூறாவளி, வெள்ளம், எரிமலைச் சீற்றம்  என்று பல விதத்தாலும் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஒரு துக்ககரமான நாளில் ஏற்பட்ட பெரும் சுனாமியால் அட்லாண்டிஸ் முழுவதுமே கடலால் விழுங்கப்பட்டது.  அதோடு அந்த இடமும் ஒருவராலும் தேடிக் கண்டு பிடிக்க முடியாத, ஒருவராலும் கடக்க முடியாத இடமாக ஆகி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரின் கூற்றை ஆதாரமாக வைத்துத் தான்  பெர்முடா முக்கோணப் பிரதேசத்தின் மர்மம் இதிலிருந்தே ஆரம்பித்திருக்கலாம் என்று சில  ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறாக மூழ்கிய அட்லாண்டிசிலிருந்து  ஒருவரும் தப்பவில்லை என்று தான் நம்பப்பட்டது. ஆனாலும்  ஒரு வித மயக்கத்தில் ஆழ்ந்ததும் என்ன கேட்டாலும் பதிலளிக்கக் கூடிய எட்கர் கேய்ஸீ என்பவர் அட்லாண்டிஸ் பற்றிக் கேள்வியெழுப்பப் பட்ட போது அட்லாண்டிஸ் நீரில் மூழ்கிய போது அதிலிருந்து பறக்கும் இயந்திரம் மூலம் தப்பி வெளியேறிய  அட்லாண்டிஸ்  தேசத்தவர்களே  இப்போது யுகட்டான் நாகரீகம் என அழைக்கப்படும் மாயா நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்று தெரிவித்தார்.
தூங்கும் தீர்க்கதரிசியாகக் கருதப்பட்ட எட்கர் கேய்ஸீ தன்னையே ஒரு அட்லாண்டிஸ் தேசத்தவன் என்றும், தான் தூங்கும் போது தன்னுடன் ஆவிகள் பேசுகின்றன என்றும் தன்னுடைய இந்த அளப்பரிய தீர்க்கதரிசனத்தின்  வெளிப்பாட்டுக்குக் காரணம் அட்லாண்டிஸ் தெய்வங்களும் ஆவிகளும் தான் என்றும் உறுதியாக நம்பினார். சில விடயங்களில் இவரது தீர்க்கதரிசனம் வெளிப்பட்டாலும் கூட அட்லாண்டிஸ் விடயத்தில் இவரது தீர்க்கதரிசனம் சரி வரவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் 1968 இல் அல்லது 1969 இல் அட்லாண்டிஸ் தேசம்  பெர்முடா தீவுகளில் ஒன்றான பிமினி தீவுக்கு அருகில் கடலிலிருந்து வெளிப்படும் என்று இவர் கூறியிருந்தார்.
ஈஸ்டர் தீவிலுள்ள மிகப்பெரும் சிலைகள், மற்றும் எகிப்திலுள்ள பிரமிட்டுக்களில் என்பனவும் கூட அட்லாண்டிசின் அடையாளங்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அட்லாண்டிசின் இராணுவம்  ஒரு மில்லியனுக்கும்  மேற்பட்ட  நபர்களைக் கொண்டிருந்தது என்று பிளேட்டோ நம்பினார். வீரர்களைச் சுமந்து செல்லும் ரதங்களும் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டன என்றும், காட்டு மிருகங்களான குதிரைகளை வீட்டு மிருகங்கள் ஆக்கிய  நாகரீகம் இங்கிருந்தே ஆரம்பித்திருக்கலாம்  என்றும் அவர் தெரிவித்தார். இது எந்த காலப்பகுதியில்  நிகழ்ந்தது என்று என்று இது வரை தெரியாததால் அட்லாண்டிஸின் காலப்பகுதியும் தெரியவில்லை. மமோத் என்று அழைக்கப்பட்ட இப்போதுள்ள யானகளை விட அளவில் பெரிய யானைகளும் அட்லாண்டிஸில் இருந்தன என்றும் அட்லாண்டிஸின் அழிவுடனே அவைகளும் அழிவடைந்திருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது  ஒரு குறை தான். என்றாலும் அந்தக் குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே  கருதுவது  ஏற்புடையதாகாது என்று புவிச்சரிதவியலாளர்கள்  கருதுகின்றனர். அட்லாண்டிஸ் மர்மத்தில் ஈடுபாடு உடையவர்களின் மனதில் உள்ள முக்கியமான கேள்வி இது தான் எப்போதாவது, எங்கிருந்தாவது, எப்படியாவது அட்லாண்டிஸ் மீண்டும் தோற்றம் பெறுமா?
 

1 கருத்து: