ஞாயிறு, 30 டிசம்பர், 2012

இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்

                    இப்போது சொர்க்கம்-பாலஸ்தீனத் திரைப்படம்
ஒருவரின் அதியுயர் தியாகமாக எதைக் கருதலாம் என்று நினைக்கிறீர்கள்? தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை விட்டுக் கொடுத்தல், நட்பை விட்டுக் கொடுத்தல், பதவியை விட்டுக் கொடுத்தல், காணி நிலத்தை விட்டுக் கொடுத்தல், மனைவி பிள்ளைகளை விட்டுக் கொடுத்தல்......இவற்றில் ஏதாவது ஒன்றை நினைக்கிறீர்களா? தற்கொலைப் போராளிகளை மறந்து விட்டீர்களா? ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் தாய் நாட்டின் விடிவுக்காக எதிரிகளோடு சேர்த்து தன்னையும் அழித்துக் கொண்ட வீர நிகழ்வுகளை மறந்து விட்டீர்களா? “கண்ணே, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்று வசனம் பேசுபவர்களைப் போலல்லாது, உண்மையாகவே உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள். என்ன தான் உலகத்திலேயே அது உயர்ந்தது, இது உயர்ந்தது என்றெல்லாம் கதைத்துக் கொண்டாலும் ஒருவனுக்குத் தனது உயிரை விடப் பெறுமதியானது ஏதாவது இருக்க முடியுமா? அப்படிபட்ட உயிரைக் கொடுக்கத் துணிவதை விட உயர்ந்த தியாகம் இருக்க முடியுமா? தாய் நாட்டிற்காகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் துணிந்த இரு பாலஸ்தீனப் போராளிகளின் கதை தான் இது.
சையத், காலத் இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். கார்கள் திருத்தும் கடையில் இயந்திர தொழில் நிபுணர்களாக வேலை செய்கிறார்கள்.அவர்கள் பகுதி நேரமாக அந்த வேலை செய்தாலும் உண்மையில் அவர்கள் பாலஸ்தீனப் போராளிகள். ஒரு நாள் அவர்களைத் தேடி அவர்களது இயக்கத்திலிருந்து ஜமால் என்று ஒருவன் வருகிறான். அடுத்த நாள் அவர்களிருவரையும் வைத்து ஒரு தற்கொலைத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அதற்காக இருவரையும் அனுப்பும் வரை சையத் வீட்டில் தங்கியிருக்கப் போவதாகத் தெரிவித்து அவனோடு வருகிறான். அவரை இஸ்ரேலில் வேலை எடுத்துத் தரும் நபராக சையத் அவரைத் தனது தாயிடம் அறிமுகப்படுத்துகிறான். அன்றிரவு அவனுக்கு தூக்கமில்லாமல் கழிகின்றது.
மறுநாள் தாய்,தங்கை,தம்பியிடம் விடை பெற்றுக் கொண்டு ஜமாலோடு கிளம்புகிறான். இருவரும் போராளிகள் இரகசியமாகத் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள்.அங்கு சையத்தின் நண்பன் காலத் ஏற்கனவே  வந்திருக்கிறான்.இருவரும் கட்டிக் கொள்கிறார்கள்.தற்கொலைப் படையாக மாறப்போகும் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வதை ஏனைய போராளிகள்  புகைப்படம் எடுக்கிறார்கள். ஒளிப்பதிவும் செய்கிறார்கள். அதன் பின் இருவரின் முடியையும் ஒட்ட வெட்டி, மீசை தாடியைச் சவரம் செய்து குளிப்பாட்டுகிறார்கள். குரான் ஓதி இருவருக்கும் கோட்சூட் அணிவித்து கடைசியாக சக்தி வாய்ந்த வெடிகுண்டைப் பொறுத்துகிறார்கள். அவர்கள் கிளம்பு முன் போராளிகளின் தலைவர் வந்து அவர்களைச் சந்திக்கிறார்.
“வெகு சிலருக்குக் கிடைக்கும் கெளரவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. உங்கள் தியாக உணர்வும் வீரமும் பாராட்டுதலுக்குரியது.உங்களுக்கு ஏதாவது எங்களால் ஆக வேண்டியிருக்கிறதா?” என்று கேட்கிறார். “எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதனால் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது.எங்களது சுவரொட்டிகள் இந்த நகரம் முழுவதும் இருக்க வேண்டும்” என்று சையத்தும் காலித்தும் சொல்ல போராளிகளின் தலைவர் ஏற்றுக் கொள்கிறார். “மிகப்  பெரிய தாக்குதல் திட்டம் இது. முழு உலகமுமே இதைக் கண்டு பிரமிக்கப் போகிறது.” என்று கூறி இருவரையும் கட்டிப் பிடித்து வாழ்த்தி விட்டுக் கிளம்புகிறார்.அவர் போனதும் அருகில் வரும் ஜமால் “இந்த வெடிகுண்டை உடம்பில் பொருத்தி இயக்கிய பின் நாங்கள் தான் அதை எடுக்க முடியும்.நீங்கள் எடுக்க முயற்சி செய்தால் வெடித்து விடும்” என்று எச்சரிக்கிறான்.
இருவரையும் ஏற்றிக் கொண்டு ஒரு கார் கிளம்புகிறது. “எல்லைக்கு உள்ளே அபு சபாப் என்றொருவர் உங்களைச் சந்தித்து சரியான இடத்துக்கு அழைத்துப் போவார். ஒருவர் முதலிலும் அடுத்தவர் 15 நிமிடங்களுக்குப் பின்னரும் குண்டுகளை வெடிக்க வையுங்கள். அப்போது தான் இராணுவம், காவல்துறைக்கு நிறைய இழப்புக்கள் ஏற்படும்.” என்று கூறுகிறார்.பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடைப்பட்ட யாருமற்ற மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் கார் நிற்கிறது.அவர்களை நிற்கச் சொல்லி விட்டு வேவு பார்ப்பதற்காக ஜமால் போகிறான். “நாம் சரியானதைத் தான் செய்கிறோமா?” என்று சையத் கேட்க, “ அதிலென்ன சந்தேகம்,இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம் சரித்திரம் படைக்கப் போகிறோம்.ஏன் பயமாக இருக்கிறதா? என்று காலத் கேட்க சையத் “இல்லை” என்று சொல்கிறான்.
சற்று நேரத்தில் ஜமால் திரும்பி வந்து “கிளம்பலாம்.உறுதியாய் இருங்கள்.பலவீனமாக இருந்தால் குரான் எடுத்துப் படியுங்கள்.” என்று கூற இருவரும் புறப்படுகிறார்கள்.எல்லையை கடந்து அவர்களுக்காகக் காத்திருக்கும் காரை நோக்கி நடக்கையில் வேறோர் திசையிலிருந்து இன்னொரு கார் வருகின்றது. துப்பாக்கிகள் வெடிக்கின்றன.இருவரும் ஆளுக்கொரு திசையில் ஓடுகின்றனர்.காலத் வேகமாக ஓடி எல்லையைத் தாண்டி தனது நாட்டுக்குள் ஓடி வருகிறான்.ஹெலிகாப்டர் சத்தமும் கேட்க நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜமால், சையத் இல்லாமலே காரைக் கிளப்புகிறான்.சற்றுத் தாமதமாக அங்கு வந்த சையத் அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.
ஜமாலும் காலத்தும் போராளிகளின் இடத்திற்கு வருகிறார்கள். காலத்தின் உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டு அகற்றப்படுகிறது. திட்டம் தோல்வியடைந்ததால் போராளிகள் இடத்தை மாற்றுகிறார்கள். காலத் சையத்தைத் தேடி காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்.
தனியே இஸ்ரேலுக்குள் நுழையும் சையத் ஒரு இடத்தில் வெடிகுண்டை வெடிக்க வைக்க முனையும் பொது ஒரு குழந்தையைக் கண்டு மனம் மாறுகிறான்.மீண்டும் பாலஸ்தீனத்திற்குள் நுழைகிறான். போராளிகள் அங்கிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் சையத் அவர்களைத் தேடி அந்த இடத்திற்கு வந்து, அவர்களைக் காணாமல் கோபமடைந்து காலத்தைத் தேடி கார்கள் திருத்தும் கடைக்குப் போகிறான். அங்கு தற்செயலாக காரைத் திருத்துவதற்கு வந்த அவனின் காதலி சுஹாவைச் சந்திக்கிறான்.அவன் அணிந்திருக்கும் ஆடை, சவரம் செய்யப்பட்ட முகம்,வாடிய முகத்தோற்றம் எல்லாவற்றுக்கும் காரணம் கேட்கிறாள். சையத் “ஒன்றுமில்லை” என்று சமாளிக்கிறான். அவனையும் ஏற்றிக் கொண்டு சுஹா காரில் கிளம்புகிறாள்.  சுஹாவை முத்தமிட்டு விட்டு ஒரு இடத்தில் இறங்கிக் கொள்கிறான்.

சுஹா வீட்டை அடைந்ததும் தனக்காக காலத் காத்துக் கொண்டு நிற்பதைக் காண்கிறாள். “சையத்தைக் கண்டாயா?” என்று வினாவுகிறான். அவனின் ஒருசில கதைகளிலிருந்து நடக்கவிருப்பதைத் தெரிந்து கொண்டு ஆவேசமாகிறாள். சையத்தைத் தேடி இருவரும் கிளம்புகிறார்கள். “ஏன் இப்படியெல்லாம் செய்ய நினைக்கிறீர்கள்?” என்று சுஹா கேட்க “அநீதிக்கு எதிராக யாராவது தியாகியாகத் தான் வேண்டும்” என்று காலத் சொல்கிறான். “நம்மை நாமே அழித்துக் கொண்டு மற்றவர்களைப் பழி வாங்குவதை விட இதை நாம் ஏன் ஒரு நீதிப்போராக மாற்றக்கூடாது?” என்று சுஹா மீண்டும் கேட்க “ஒரு நீதியும் இல்லாத இஸ்ரேலுக்கு எதிராக அது எவ்வாறு சாத்தியம்?” என்று காலத் கேட்கிறான்.
இருட்டான ஒரு இடத்தில் சையத் படுத்திருப்பதைப் பார்த்து விட்டு  காரை நிறுத்திவிட்டு அவனை நோக்கி ஓடி வருகிறார்கள். காலத் சையத்தை இறுகக் கட்டிக் கொள்கிறான்.மனம் வெறுத்துப் போன நிலையில் இருக்கும் சையத் காலத்தைத் தள்ளி விட்டு ஓடத் தொடங்குகிறான்.அவனை விரட்டிப் பிடிக்கும் காலத் போராளிகளின் இடத்திற்கு அழைத்து வருகிறான்.
திட்டத்தைப் பாழடித்து விட்டதாகப் போராளிகளின் தலைவர் குற்றம் சாட்டுகிறார். அதை ஏற்றுக் கொள்ளும் சையத் “ஆக்கிரமிப்புக் காரணமாக மக்கள் பலவீனமாக இருக்கிறார்கள். அந்தப் பலவீனம் காரணமாகத் தான் எனது அப்பா காட்டிக் கொடுத்தார். அதற்காக நீங்கள் அவருக்கு மரண தண்டனை கொடுத்த போது எனக்குப் பத்து வயது. அவர் அப்படிச் செய்ததற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர் செய்ததற்குப் பிராயச்சித்தமாக நான் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவேன்.” என்று கூறுகிறான்.
அடுத்த நாள் மீண்டும் தாக்குதலுக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்பவன் இஸ்ரேலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டு  ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னை அழைக்குமாறு கூறி ஒரு கைத்தொலைபேசியைக் கொடுக்கிறான். இருவரும் இறங்கி நடக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கையில் சுஹா சொன்னதை நினைக்கும் காலத் மனம் மாறுகின்றான். “ இந்த வழியில் அழிவு தான் அதிகரிக்குமே தவிர எங்களுக்கு வெற்றி கிடைக்காது. நாங்கள் திரும்பிப் போவோம்.” என்று காலத் சொல்ல “நாங்கள் செய்ய நினைத்ததைச் செய்து முடிப்போம். மற்றதைக் கடவுள் தீர்மானிக்கட்டும்” என்று சையத் சொல்கிறான்.அதைக் கேட்காமல் கைத்தொலைபேசி மூலம், அந்த இடத்தில் விட்டு விட்டுப் போனவனை அழைக்கிறான். யோசித்துக் கூறுமாறு அவன் சொல்ல “இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.உடனே வந்து எங்களை அழைத்துப் போ” என்று காலத் சொல்கிறான்.
கார் வந்து நிற்கக் காலத் முதலில் ஏறுகிறான்.அவன் ஏறியதும் கதவைச் சாத்தும் சையத் “கிளம்புங்கள்” என்று சத்தமாகக் கூற கார் கிளம்பி விடுகிறது. காலத் காரின் பின் கண்ணாடி வழியே பார்த்து “ சையத், சையத் “ என்று கத்துகிறான். சையத் உறுதியுடன் திரும்பி நடக்கிறான்.காலத் காருக்குள் அழுகிறான்.
பாலஸ்தீனத்தில் சுஹா சையத்தின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சையத்தின் அம்மாவும் அவனைக் காணாமல் சோகத்துடன் அமர்ந்திருக்கிறாள்.போராளிகள் ஒருபுறம் தாக்குதல் செய்தியறிய ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலில் ராணுவ வீரர்களும் பொது மக்களும் நிரம்பிய பேரூந்து.அந்தக் கூட்டத்தினுள் சையத் கோட் சூட்டுடன் அசைவற்றுத் தீர்க்கமான பார்வையுடன் அமர்ந்திருக்கிறான்.ஆழ்ந்த மெளனத்துடன் திரை வெண்ணிறமாக மாறி இருள்கிறது.
ஒரு நாடு விமானம், கப்பல், பீரங்கி மூலம் தன் மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. அதில் தனது குடும்பத்தை இழந்த ஒருவன் தனது உடலில் குண்டைக் கட்டித்  தன்னையும் மாய்த்துக் கொண்டு சிலரைக் கொல்கிறான். முன்னதை அமைதிக்கான முயற்சி என்கிறார்கள். பின்னதைத் தீவிரவாதம் என்கிறார்கள். உயிரைக் கொல்லும் எதுவுமே தீவிரவாதம் தானே. அது ஆரம்பிப்பது ஆட்சியாளர்களின் ஆணவத்திலும் அலட்சியத்திலும், பிடிவாதத்திலும் என்பதற்கு மாற்றுக் கருத்து உங்களிடம்  உண்டா?                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக