ஞாயிறு, 30 டிசம்பர், 2012

பஸ்சிமோத்தாசனம்

யோகாசனம்(தொடர்ச்சி)
இதற்கு முந்தைய இதழில் யோகாசனத்தின் வரலாறு, பின்னணி, யோகாசனத்துக்கும் பதஞ்சலி மாமுனிவருக்கும் உள்ள தொடர்பு, அஷ்டாங்க யோகங்கள் ,யோகாசனத்துக்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடுகள் ஆகியன பற்றிப் பார்த்தோம். இனி ஒவ்வொரு வெளியீட்டிலும்  ஒரு யோகாசனம் என்ற ரீதியில் வரும் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த வெளியீட்டில் பஸ்சிமோத்தாசனம்.
                                                                              பஸ்சிமோத்தாசனம்.
செய்யும் முறை
சாதாரணமாக அமர்ந்து கால்களை நன்றாக நீட்டி கைகள் மூலம் கால்களைப் பிடித்துக் கொண்டு வெளிமூச்சு வாங்கியவாறே சிறிது சிறிதாகக் குனிய வேண்டும். புதிதாகப் பழகுபவர்களுக்கு இது உடனே கை வராது. வயிறு சற்று அதிகமாக உள்ளவர்களுக்கு இன்னும் சற்று அதிகமாகவே கடினமாக இருக்கும். அதற்காகத் தளர்ந்து விடாமல் உங்களால் முடிந்த அளவு, உங்களால் risk எடுக்கக் கூடிய அளவு குனிந்து முயற்சி செய்யுங்கள்.(இது தாண்டா உன் limit என்று உங்கள் மனதுக்குள் மணியடித்தால் அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.) ஆசனத்தில் இருக்கும் பொது சாதாரண மூச்சும் நிமிரும் போது உள்மூச்சும் வாங்க வேண்டும். (அவற்றை எங்கே நாங்க வேண்டு என்று கேட்கும் அளவுக்கு இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.) வயிற்றை எக்கிக் கொண்டு கால்களைத் தாண்டி கைகளைக் கொண்டு செல்ல முயற்சித்து வந்தால் என்றாவது ஒரு நாள் இந்த ஆசனத்தைச் செய்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாவதை உணர்வீர்கள். குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் நாங்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு இது ஒரு இலகுவான ஆசனமாகத் தானிருக்கும். முற்றியிருக்கும் எங்கள் எலும்புகளும், வயிற்றிலுள்ள சள்ளையும் அதாவது கொழுப்பும் எங்களை இந்த ஆசனத்தை இலகுவாகச் செய்ய விடாது. முற்றியிருக்கும் எலும்புகளை ஒன்றும் செய்ய முடியாது. (நீராவியால் வேக வைத்து இளக்கலாம் என்று யாரும் விபரீதமாக முயற்சி செய்ய வேண்டாம்). ஆனால் வயிற்றிலுள்ள சள்ளையைக் குறைப்பதற்கு நீச்சல், நடை, ஓட்டம், சைக்கிளோட்டம், கையிறடித்தல் என்று உங்களாலான முயற்சியைச் செய்யலாம் தானே.
இதனால் கிடைக்கும் நன்மைகள்
வாகனங்களுக்கு wheel alignment செய்வது அதாவது சக்கரத்தை நேராக்குதல் பற்றி  அறிந்திருப்பீர்கள். இந்த யோகாசனத்தைச் செய்வது vertebra alignment செய்வது போலாகும். அதாவது முள்ளந்தண்டை நேராக்கிக் கொள்ளலாம். சள்ளை குறையும். (சள்ளை இல்லாதவன் என்ன ஆம்பிளை என்று நண்பன் ஞானி சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது) இந்த ஆசனத்தின் போது வயிற்றிலுள்ள உறுப்புக்கள் அழுத்தப்படுவதால் புது இரத்தம் கிடைக்கப்பெற்று சமிபாட்டுத்தொகுதி ஆரோக்கியமடையும்.அது தவிர மலச்சிக்கல் இடுப்புப்பிடிப்பு, வாயுப்பிடிப்பு, மூலநோய், அஜீரணம்  ஆகியவற்றுக்கும் இந்த ஆசனம் நல்லதொரு மருந்தாக அமைகிறது. ஆனால் அதிக நேரம் செய்தால் இது அஜீரணக் கோளாறுகளுக்கு வழி வகுத்து விடுமாகையால் குறைந்தளவு நேரமே இதனைச் செய்ய வேண்டும். ஒன்றிரண்டு நிமிடங்கள் செய்தாலே போதுமானது.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக