ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சுனாமி 2004-நான்காவது இதழ் தொடர்ச்சி

                                             சுனாமி 2004-நான்காவது இதழ் தொடர்ச்சி
ப்ரியாவக் கல்யாணம் முடிக்கிறதுக்கு அடுத்தவருஷம் அவண்ட அத்தான் வர்றதா ஒரு கதை” என்றவள் என் முகத்தைப் பார்த்து விட்டு “நீ அவள விரும்புறதும் அவள் உன்ன விரும்புறதும் உண்மையெண்டா நீ கனக்க யோசிக்காத. அந்தச் செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனா ஒண்டு...” என்று இடைவெளி விட “ஆனா ஒண்டு, ஆவன்னா ரெண்டு. கேதீயாச் சொல்லுங்கோ” என்று அவசரப்படுத்தினேன். “உனக்கு புண்ணாக்குக்கோ,பொரிவிளாங்காய்க்கோ, எள்ளுருண்டைக்கோ, எள்ளுப்பாகுக்கோ குறைவிருக்காது. நீயும் அதெல்லாம் சாப்பிட்டு சும்மா கும்மெண்டு வந்திருவ. உன்ட புண்ணியத்தால நாங்களும் கொஞ்சம்...” என்று சொன்னதும் கடுப்பேறியது.
“எப்பவும் தின்னுறதிலேயே இருங்கோ. எவ்வளவு serious ஆ ஒரு பிரச்சனயச் சொல்லியிருக்கிறான் .அதுக்கு ஒரு தீர்வச் சொல்லுவம் எண்டு இல்லாம......”
“தீர்வு தானே..” என்று அக்கா தொடங்க சரியாக அந்த இடத்தில் “அம்மா” என்று அதிசயாவின் குரல் கேட்டது. சரி தான் இனித் தீர்வு கிடைத்த மாதிரி தான் என்று மனதில் நினைத்துக் கொண்டு “இஞ்ச,அதிசயாவத் தேடி யார் வந்திருக்கிறது எண்டு பாருங்கோ”என்று சொல்லிக் கொண்டு போன அக்காவுக்குப் பின்னால் நானும் போனேன்.
அக்காவைக் கண்டதும் “அம்மா” என்று கையை நீட்டியவள் பின்னால் போன என்னைக் கண்டதும் என்னிடம் தாவினாள்.தாவிய அதிசயாவைப் பிடித்த போது தான் எனது கைவலி ஞாபகம் வந்தது. வலியால் எழுந்த முனகல் ஒலி அக்காவுக்குக் கேட்டு விட்டது. “Sorryda, கை நோவப் பத்தி சொன்னனீ தான். பிரியாவிண்ட கதை எடுபட்டதில பிறகு மறந்து போய்ட்டன். அதிசயா கொஞ்ச நேரம் கீழ இருக்கிறீங்களோ? மாமாண்ட கையில இருக்கிற ஊவாவுக்கு மருந்து போடுறன்” என்று கேட்க அவள் மாட்டேன் என்று தலையாட்ட “மாமாவக் கண்டுட்டா நானும் ரெண்டாம் பட்சம் தான். சரி மாமாவோடேயே இருங்கோ” என்று கூறி விட்டு ஒரு பாயைப் போட்டு என்னை அதில் இருக்கச் சொன்னாள். அதிசயாவை மடியில் வைத்துக் கொண்டே வலது கையை நீட்ட அதில் தைலம் தேய்த்து விட்டாள். நேற்றை விட வலி குறைந்து தானிருந்தாலும் அக்கா தேய்த்த தேய்ப்பில் கண்ணீரே வந்து விட்டது. “மாமாவ, மாமிய நினச்சு அழ வேண்டாம் எண்டு சொல்லுங்கோ அதிசயா” என்று கூறியவாறே அக்கா மீண்டும் குசினிக்குள் நுழைந்தாள். 
அதிசயாவும் மாமா என்று என்னுடனே ஒட்டிக் கொண்டாள்.அதன் பின் அவளுடனேயே பொழுது போனது.என்றாலும் இடைக்கிடை எனது பிரச்சனை பற்றி அக்காவுடன் கதைக்கத் தவறவில்லை. “அக்கா, பிரியாண்ட பிரச்சனை ஒரு பக்கமிருக்க,அம்மா ஒரு குண்டப் போட்டிருக்கிறதப் பத்தி என்ன நிணக்கிறீங்கள்?” என்று கேட்டேன். “ எனக்கு ஜானகி மாமியையும் தெரியும். அவண்ட மகனுக்கு என்னக் கட்டி வக்க சாடமாடயா எண்ணம் இருந்ததும் தெரியும். அது முடியாம போனதால உன்ட விஷயத்தில தீவிரமா இருப்பா என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் அம்மா இடத்தக் கொடுத்தாத் தானே அவ மடத்த....அதாவது இந்த மடையனப் பிடிப்பா” என்று என் தலையைச் செல்லமாகத் தட்டினாள்.
மதிய உணவின் பின் தொலைக்காட்சியைப் போட்டேன். அதில் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உதைபந்தாட்டப்போட்டி நடை பெற்றுக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனது உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை ஏதோ சுறுசுறுவென்று ஏறுவதை உணர்ந்தேன். மணியைப் பார்த்தேன். இரண்டு நாப்பது ஆகியிருந்தது. எதிக்காற்றில் சைக்கிள் உழக்கி ஊருக்குப் போவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது தேவை. ஊர் வழக்கப்படி 4 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட போட்டி நடப்பதற்கு 5 மணியாகும்  என்ற போதிலும் இப்போதே புறப்பட்டால் நல்லது என்று தோன்றியது. என்னோடு வருவதாகச் சிணுங்கிய அதிசயாவுக்கு நாளை வருவதாகப் பொய் கூறி, அக்காவிடமும் சொல்லிக்கொண்டு அத்தான் எனக்கு வாங்கி வைத்திருந்த சாரம் சட்டையையும் வாங்கிக் கொண்டு அக்கா அம்மாவுக்குச் சுட்டு வைத்திருந்த வடைகளையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.
காற்றின் வேகம் சற்றுக் குறைவாக இருந்ததனாலும், நடக்கப் போகும் போட்டியை நினைத்து எனக்குள் வேகம் அதிகமாகியிருந்ததானாலும் 45 நிமிடங்களுக்குள் ஊரை அடைந்து விட்டேன். அதற்குள் மனதுக்குள் நடந்த போட்டியில் மைதானத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒவ்வொரு goal அடித்தேன்.
என்னைப் பார்க்க நண்பர்கள் வந்து சென்றதாகச் சொன்ன அம்மா அதிசயாவைப் பற்றி ஆவலுடன் விசாரித்தாள். “ அவள் கொஞ்சம் கூடக் குழப்படி இல்ல அம்மா. எப்படித்தான் அக்காண்ட மகளாப் பிறந்தாளோ தெரியல்ல..” என்று தொடங்கி அதிசயா என்னுடன் விளையாடியதைப் பற்றி சொல்லச் சொல்ல அம்மாவின் கண்கள் மினுங்குவதைக் கண்டேன். அம்மா நாளைக்கு அனேகம் புத்தூருக்குக் கிளம்புவாள்  என்று நினைத்துக் கொண்டு அக்கா கொடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் அம்மாவிடம் எடுத்துக் கொடுத்து விட்டு எங்கள் கழக ஆடையை மாற்றிக் கொண்டு கிளம்பினேன். “டேய், இந்தக் கையோட விளையாடப் போறியோடா?” என்று அம்மா கேட்டதற்கு “ நீங்க யோசிக்காதீங்கோ அம்மா. நான் காலால தானே விளையாடப் போறன்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டே தலைவாசலுக்கு வர கை கவனமடா” என்ற அம்மாவின் கரிசனைக்குரல் கேட்டது.  
                     (தொடரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக