ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வல்வை மக்களை ஒன்றிணைத்து உருவாகவிருக்கும் ஒரு புதிய அமைப்புக்கான அபிப்பிராயம் அறிந்த கூட்டம்

வல்வை மக்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி, நிதியைத் திரட்டி, அம்மக்களுக்கே தேவையான பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றுதல்” என்ற கருவை மையமாகக் கொண்டு ஏற்கனவே 15/08/2012 அன்று கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்களின் தலைமையில்  11 பேர் கொண்ட கூட்டமொன்று கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக 26/08/2012 அன்று பார்வதி இலவச ஆங்கிலக் கல்வி நிலையத்தில் மீண்டும் இது சம்பந்தமான  கிட்டத்தட்ட முப்பது பேர் கொண்ட கூட்டமொன்று கூடியது.
“வல்வை மக்களுக்கு இரண்டு விதமான சிறப்பான வளங்கள் இருக்கின்றன. ஒன்று இங்குள்ள மக்களின் திறமை. மற்றையது வெளிநாட்டிலுள்ள வல்வை மக்களின் நிதிவளம். இவ்விரண்டையும் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் கல்வி, விளையாட்டு, தொழில் எல்லாவற்றையும் உலகத் தரத்துக்கு உயர்த்தலாம் என்று தனது உரையை ஆரம்பித்த கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள்  இவ்வாறானதொரு அமைப்பை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு உருவானது, எவ்வாறு இதற்கான மக்கள் ஆதரவையும் நிதியையும்  திரட்டுவது, எவ்வாறு இதனைச் செயற்படுத்துவது என்றெல்லாம் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்த அறிவித்தலை வாசித்தார்.

வேம்படி
  வல்வெட்டித்துறை
    16-08-2012

அன்புள்ள வல்வை மக்களின் பார்வைக்கு,

அடுத்து வரும் ஆண்டுகளில் வல்வையைச் சிறப்பாகச் செழித்தோங்க வைப்பதற்கான ஒரு திட்டத்தை உங்கள் முன் வைத்து உங்களின் கருத்துக்களையும் ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.

  1. கடந்த பல வருடங்களாக ஊரிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் வல்வையர் பலர் தனிப்பட்ட முறையிலும், நலன்புரிச் சங்கங்கள் மூலமும் வல்வையின் நலனிற்காகப் பண உதவியும் சரீர உதவியும் செய்து வந்துள்ளார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
  2. இப்படியான உதவிகளில் பெரும்பான்மையானது கேளிக்கை, கொண்டாட்டங்கள், வசதி குறைந்தோருக்கு உதவுதல் என்பதிலேயே செலவழிக்கப்பட்டன.
  3. மேற்படி விடயங்கள் முக்கியமானவைகள் என்ற போதிலும், நிரந்தரமான அபிவிருத்தித் திட்டங்கள் அதிகமாகச் செயல் படுத்தப்படவில்லை. அதற்குப் போதுமான நிதிவசதிகள் இருக்கவில்லை.
  4. வெளிநாடுகளில் வசிக்கும் தனிப்பட்ட சிலரின் முயற்சியாலும், வல்வை நலன்புரிச் சங்கங்களின் மூலமும் கடந்த பல ஆண்டுகளாக நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களுடைய சேவைகள் பாராட்டப்படவேண்டியன. இவர்கள் தொடர்ந்தும் தங்கள் சேவைகளைச் செய்யலாம். ஆனாலும், வெளிநாட்டு வல்வையர்களில் பெரும்பான்மையோரின் பங்களிப்புகள் வல்வைக்குக் கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
  5. வல்வையர் பெரும்பாலோரின் பங்களிப்புகளை அவர்களை நோகடிக்காமல் எப்படிப் பெற்று வல்வையை அபிவிருத்தி செய்யலாமென்பது பற்றியதுதான் இத்திட்டம்.
  6. 4000 குடும்பங்களுக்கு மேலாக வல்வையர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் குறைந்தது 1000 குடும்பங்களையாவது ஒரு குடும்பத்தவருக்கு ஒரு நாளைக்கு ஒரு டொலர் ( ஒரு coco cola tin இன் விலை) வீதம் வல்வை அபிவிருத்திக்குத் தருவதற்கு வைத்தோமானால், வருடத்திற்கு 365000 அமெரிக்க டொலர் கிடைக்கும். இது கிட்டத்தட்ட 400 லட்சம் ரூபா.
  7. வெளிநாடுகளில் வசிப்பவர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு ஒரு நாளைக்கு ஒரு டொலர் என்பது பெரிய விடயமில்லை. நிச்சயமாக 1000 பேருக்கு மேற்பட்டோருக்கு இந்தத் தொகையை விருப்பத்துடன் தருவதற்கான மனப்பாங்கும் உள்ளது.
  8. ஆனால், தரவிரும்புகிறவர்கள் மத்தியில் எழும்பும் பெரிய கேள்வி என்னவென்றால், “யாரை நம்பி, எந்த அமைப்பை நம்பி இந்தளவு பெரிய தொகையைத் தரலாம்?”.
  9. நியாயமான கேள்வி. எமது கடந்த கால அனுபவங்கள் சொல்லும் பாடமென்னவென்றால், சிறிதளவு பணத்துடன் செயலாற்றும் அமைப்புக்கள் பெரும்பான்மையானவற்றில் உட்பூசல்கள் நிரம்ப உள்ளன.
  10. ஆனாலும், கடந்த காலங்களில் உட்பூசல்கள் இருந்தன என்ற காரணத்திற்காக, அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது புத்திசாலித்தனமாகாது. எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையை அந்தரத்தில் விடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லை.
  11. கடந்த காலங்களில் ஏற்பட்ட பூசல்களுக்கான காரணங்களை அறிந்து, பெரிதளவான பணத்தைக் கையாண்டு செயலாற்றக் கூடியதான அமைப்பை உருவாக்குவதற்கான வழிமுறையை முன்வைக்கிறோம். ( அதே நேரத்தில், ஒருவித பூசலுமில்லாமல் 100% திறமையாகச் செயலாற்றும் அமைப்பு ஒன்றுமே உலகத்தில் இதுவரை இருந்ததுமில்லை, இருக்கப்போவதுமில்லை என்பதைப் புரிந்திருக்கவேண்டும்)
  12. வெளிநாட்டில் வாழும் வல்வையரைக் கேட்குமுன்பு வல்வையில் வசிக்கும் நாங்கள் எங்கள் பங்காக எம்மால் முடிந்த பண உதவியைச் செய்யவேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 10 ரூபா ( ஒரு plain tea விலை) வீதம் கொடுக்கவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு பெரிய தொகை இல்லை. பெரும்பான்மையினரால் முடிந்த தொகை. ஊரில் ( இலங்கையிலும் இந்தியாவிலும் வசிப்பவர்கள் உட்பட) வசிப்பவர்களில் குறைந்தது 300 இலிருந்து 500 பேர் வரை எதிர்பார்க்கிறோம். இங்குள்ளவர்கள் செய்து காட்டினால்தான் வெளியூரில் வசிபவர்களும் செய்வார்கள்)
  13. அடுத்ததாக, பணம் தருபவர்கள் மாத்திரமே செயற்குழுவில் அங்கம் வகிக்கலாமென்றும், அவர்களுக்கே செயற்குழுவைத் தெரிந்தெடுக்கும் வாக்குரிமை உண்டு என்ற வழிமுறையைப் பின்பற்றினால் பலவித பூசல்களுக்கு இடம் இல்லாமல் இருக்கும். அமைப்பு சிறந்த முறையில் நடைபெறவேண்டுமென்ற ஆர்வம் நிச்சயமாகப் பணம் தருபவர்களுக்கு இருக்கும். சிற்சில பிழைகள் ஏற்பட்டாலும் இலகுவாகத் திருத்தி அமைக்கமுடியும்.
  14. மேலே கூறியவாறு பெருமளவில் பணம் திரட்டிச் செயலாற்றக்கூடிய அமைப்பை நாம் ஏற்படுத்தினோமானால் எம்மால் செய்து முடிக்கக்கூடிய சில திட்டங்களைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

தொழில்
-   கடற்தொழிலை மேம்படுத்துவதற்காக jetty கட்டுதல், கடலை ஆழப்படுத்துதல் போன்ற பல வேலைகளைச் செய்யலாம்.
-   பல தொழில் கற்பிக்கும் மையம் (Vocational Training Institute) ஆரம்பிக்கலாம்
-   ஐஸ் வாடி அமைக்கலாம்
கல்வி    
-   பாடசாலைகளுக்குத் தேவையான நவீன வசதிகளைச் செய்து கொடுக்கலாம்.
-   உலகத் தரத்திற்கு ஈடுள்ள கல்வி மையம் (Study Centre) அமைக்கலாம்.
-   எல்லா வசதிகளுமுள்ள கணினி கற்பிக்கும் மையம் ( Computer Training Centre) அமைக்கலாம்.

விளையாட்டு
-   Football, Cricket, Athletics விளையாடக்கூடிய மைதானம் அமைக்கலாம்
-   Volleyball, Badminton, Table Tennis போன்ற விளையாட்டுகள் விளையாடக்கூடிய உள்ளரங்கை (Indoor Sports Centre) கட்டலாம்.
-   தேசிய அளவிலும் உலகத்தரத்திலும் விளையாடக்கூடிய வீரர்களை உருவாக்கலாம்.

பொது
-   பொதுப்பூங்கா, சிறுவர் பூங்கா
-   நீச்சல் தடாகம்
-   விருந்தினர் விடுதி
-   கலைக்கூடம்
-   கடற்கரை அழகுபடுத்துதல்
-   இன்னும் பல


எமது திட்டத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டு எழுதியுள்ளோம். வல்வையில் வசிப்பவர்களின் ஆர்வத்தையும், பங்கேற்பையும் பொறுத்தே இத்திட்டம் வெற்றிபெறும். அனைவரும் வந்து தமது கருத்துக்களைக்கூறி, அடுத்து செய்யப்போவதுபற்றித் தீர்மானிப்பதற்காக 26-8-2012 ஞாயிற்றுக்கிழமை 3;30 மணிக்கு ஒரு கூட்டம் ஒழுங்கு செய்துள்ளோம்.
இடம்: பார்வதி இலவச ஆங்கிலக் கல்வி நிலையம்

ஆர்வமுள்ள அனைத்து வல்வையர்களையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விபரங்களுக்கு:

சபா இராஜேந்திரன் :  0778675686 / asrajendran@hotmail.com
M. மயூரன்         :  0774162692
சீ. சாரூபன்        :  0755776266 / saaruban@v4edu.com
பொ. வெங்கடேஸ்வரா:  0774683320

இந்த அறிவித்தலை வாசித்த பின் அங்கு கூடியிருந்தோரின் கருத்துக்களைக் கோரினார்.
தனது கருத்துக்களை எழுத்துக்களாகப் பதிவு செய்திருந்த திரு தர்மலிங்கம் அவர்களின் கடிதம் முதலில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் பின்வரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தார்,
1.   இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கும் வல்வைப் பிரதேசத்தின் அமைவிடம்.
2.   வெளிநாட்டில் வாழும் வல்வை மக்களின் எண்ணிக்கை
3.   இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தடையாக அமையக்கூடிய வல்வை மக்களின் ஒற்றுமையின்மை.
4.   இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் போது எழக்கூடிய காணி நிலம்  சம்பந்தப்பட்ட பிரச்சனை.
5.   இதனை நிறைவேற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய சட்டம் சம்பந்தப்பட்ட தேவைப்பாடுகள்.
6.   இதனை நிறைவேற்றுவதாயின் அதற்காக வல்வையில் நிரந்தரமாக வாழ்பவர்கள் நியமிக்கப்படல்.
இதற்குப் பதிலளித்த கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் அதற்குரிய பிரதேசம் சரியாக வரையறுக்கப்படவில்லையாயினும் தற்போதைக்கு நகர சபையின் எல்லையாகக் கருதலாம் என்றும்,வெளிநாட்டில் வாழும் 4000 குடும்பங்கள் என்ற வல்வை மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாமே தவிர குறைவதற்கான வாய்ப்பில்லை என்றும், பிரச்னைகளின் போது ஒன்றாகும் வல்வை மக்கள் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது இரண்டுபடும் இந்த நிலை மாற வேண்டும் என்றும், காணி நிலங்களுக்கு சரியான சந்தை விலை நிர்ணயிக்கப்படுமாயின் அவற்றை விற்பதற்குப் பலர் முன் வருவார்கள் என்றும், (உதாரணத்துக்கு கிடப்பில் போடப்பட்டிருக்கும் வல்வை விளையாட்டரங்கம் காணிக்கு 4 கோடியே 90 லட்சம் கொடுக்கப்படுமாயின் அந்தக் காணி வாங்கப்படலாம் என்று வல்வை நகர சபை உப தலைவர் திரு சதீஷ் அவர்கள்  தெரிவித்தார்.)இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுமுன் சட்டம் சம்பந்தப்பட்ட தேவைகள் நிறைவேற்றப்படுமென்றும், மற்றும் இதற்கென நியமிக்கப்படுபவர்கள் நிரந்தரமாக வல்வையில் வசிப்பவர்களாகவே இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
திரு ஜெயப்பிரதாபன் அவர்கள் , ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் வல்வை ஒன்றியத்தை விட்டுத் தனியாக இந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று வினாவியதோடு இதன் மூலம் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
 இதற்குப் பதிலளித்த கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள்  ஏற்கனவே உள்ள அமைப்புக்களிருந்து பிரிந்து தான் கட்டாயம் செயற்பட வேண்டும் என்று தான் கருதியதில்லை என்றும் இவ்வாறான திட்டங்களை வேறு அமைப்புக்கள் முன்னெடுத்தால் அவற்றுக்கு ஆதரவு வழங்குவதற்குக் கூட தான் தயாராக இருப்பதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்ட VEDA தலைவர் திரு அரவிந்தன் அவர்களிடமும் இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும்  வல்வை ஒன்றியத் தலைவர் திரு மயிலேறும் பெருமாள் இத்திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், வேறாக ஆரம்பிப்பதால் ஏற்கனவே உள்ள அமைப்புக்களை முடக்குவது அன்று அர்த்தமாகாது  என்றும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் சில ஒழுங்கு முறைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருப்பதாலும் அத்தோடு அவற்றின் செயற்பாடுகள் சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதாலும், வல்வையின் அபிவிருத்திகளை சற்றுப் பெரிய அளவில் முன்னெடுக்கும் ஆர்வம் இருப்பதனால், புதிய அமைப்பு அதற்கேற்ற சட்டங்களை வகுத்து தனியாகவே  இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பதாகவும் விளக்கினார்.
ஆனாலும் திரு ஜெயப்பிரதாபன் அவர்கள் இந்தப் பதிலில் திருப்தியடையாமல்,  மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட வண்ணமிருந்தார். அப்போது இது சம்பந்தமாக தனது நிலையைத் தெளிவு படுத்துவதற்காக எழுந்த  திரு சாரூபன் அவர்கள், எத்தனை அமைப்புக்கள் இருந்தாலும்  புதிதாக ஒரு அமைப்பு வரும் போது ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போடாமல்  அதனது செயற்பாடுகளில் திருப்தியடையும் பட்சத்தில் அதற்கு ஆதரவு தெரிவிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அதன் பின்னர் பேசிய திரு தணிகைச்செல்வன் அவர்கள் சாரூபனுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதோடு, தனது ஒத்துழைப்பைக் காட்டுவதற்கு முதலாவதாகவே தனது நிதிப்பங்களிப்பைச்  செய்வதற்குத் தயாராக இருப்பதாகக் கூறிப் பலத்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்.  
அதன் பின்னர் எழுந்த திரு கிருஷ்ணா அவர்கள், கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் அமைத்துக் கொடுத்த உதைபந்தாட்ட மைதானத்துக்கு ஊர் மக்கள் அனைவருமே நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் ஆனாலும் அந்த மைதானத்தின் விதிமுறைகள் சரியாகத் தெரியாமல் விளையாடியதால் 4 பேர் கால்களை முறித்துக் கொண்டு விட்டனர்  என்று தெரிவித்தார். இதற்குப் பதில் கூறிய கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் அந்த மைதானத்தின் விதி முறைகள் தன்னால் வகுக்கப்படவில்லையென்றும் அவை சர்வதேச உதைபந்தாட்ட விதிகளுக்கமைவாகவே வகுக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார். ஐக்கிய ராச்சியத்திலிருந்து உதைபந்தாட்டப் பயிற்சியை வழங்குவதற்காக வருகை தந்திருந்த திரு ஜெயக்குமார் அவர்கள் உதைபந்தாட்டத்தின்  போது விபத்துக்கள் ஏற்படுவதென்பது மிகவும் சகஜமானது  என்று கூற ஏனைய சிலரும் அதனை ஆதரித்தனர்.
அதன் பின்பு பேசிய திரு சிவஞானசுந்தரம் அவர்கள், என்னதான் எத்தனையோ அமைப்புக்கள் இருந்தாலும் கூட அவை அந்தந்த விடயங்களில் ஈடுபட்டால் அதாவது கல்வி சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் கல்வியிலும் விளையாட்டு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் விளையாட்டுக்களிலும்  ஈடுபட்டால்  சர்ச்சைகள் உருவாவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
திரு தர்மலிங்கம் அவர்கள் இந்த அமைப்பு உருவாக்கப்படுமாயின் அது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகளான அலுவலக அமைவிடம், பதிவு, கணக்குகள் பேணல், கணக்காய்வு, இதற்கான வாங்கிக் கணக்கொன்றைத் திறத்தல் போன்ற நடவடிக்கைகள் யாவும் மிகச்சரியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்பு தெரிவித்த கருத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறினார். இலங்கை அரசாங்கத்தால் கணக்குகள் முடக்கப்பட்டுத் தடை செய்யப்பட்ட TRRO வின் நிலைமையை இதற்காக உதாரணமாக எடுத்துக் காட்டினார். இதற்குப் பதிலளித்த கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள்  இத்திட்டத்தை முன்னெடுக்கும் பட்சத்தில் சகல சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், அரசாங்கத்தின் அனுமதியும் பெற்றே ஆரம்பிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
திரு சோதிமயம் அவர்கள், இப்போதுள்ள சந்ததிக்குப் பின் வெளிநாட்டிலுள்ள சந்ததியினர்  இதற்கு நிதியுதவி செய்வதற்குத் தயாராக இருப்பார்களா என்ற தனது சந்தேகத்தை வெளியிட்டார். இதன் போது கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள், வருங்கால சந்ததியினரைத் தொடர்ந்தும் வல்வையோடு தொடர்புடையவர்களாக வைத்திருத்தல் உங்களின் கையில் தான் தங்கியுள்ளது என்று கூட்டத்திற்கு வருகை தந்திருந்த இளைஞர்களைப் பார்த்துக் கூறினார். மேலும் “மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது” என்ற சீனப் பழ மொழியைக் கூறிய திரு சோதிமயம் அவர்கள் அதற்கேற்ப பெரிய அளவில் தொழிற்பயிற்சி நிலையமொன்றை இந்தத்  திட்டத்தின் மூலம் ஆரம்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் பேச வந்த திரு ஜெயராஜ் அவர்கள் மக்களின் அபிப்பிராயத்தை வென்று உருவாகும் அமைப்பொன்று இங்கே திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும், அவை அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறினார்.அது தவிரவும் கழிவுகளை அகற்றுவதற்குரிய கழிவு நீர் வாய்க்கால்களை சரியான முறையில் திட்டமிட்டு அமைக்க வேண்டுமென்றும், கழிப்பறைகளுக்கும் கிணறுகளுக்குமான  தூரங்கள் பேணப்பட வேண்டுமென்றும் தொண்டைமான் ஆற்றை சுற்றுலாத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்றும்  உதாரணமாக மிதக்கும் விடுதிகள் என்பனவற்றை அமைக்கலாம் என்றும்  அமைப்பு உருவான பின் பேணப்படும் கணக்குகளில் உண்மைத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும் என்றும் கலவையாகத் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரு சிவாஜிலிங்கம் அவர்கள் தான் இப்போது திருகோணமலையில் இருப்பதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்காக வருந்துவதாகவும் கூறி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஏற்கனவே கூறியது போல் வேறும் சில அமைப்புக்கள் இருந்தாலும் அவற்றுக்கான பொது மக்களின் பங்களிப்பு மிகவும் குறைவு  என்றும் பலவிதமான அரச சார்பற்ற அமைப்புக்கள் திட்டங்களோடு வந்தாலும் கூட அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான  நிலம் வாங்குவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் உருவாகவிருக்கும் இந்த அமைப்பு அரசியல் கலப்படமற்றதாக  இருக்க வேண்டும் என்றும் தனது எண்ணத்தைத் தெரிவித்தார். அரசியல் இல்லாமல் அபிவிருத்தியில்லை என்று இதற்குத் தனது கருத்தைத் தெரிவித்த கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் ஆனால் அரசியல் பூசல்கள் தான் தவிர்க்கப்படவேண்டியன என்று கூறினார்.
அதன் பின்னர் கூட்டத்திற்கு வருகை தந்த ஒரேயொரு பெண்மணியான திருமதி  கைலாஜினி அவர்கள் கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது கருத்தைத் தெரிவித்த போது இந்தத் திட்டத்திற்குத் தன்னாலான உதவியை வழங்கத் தயாராக  இருப்பதாகக் கூறினார்.
அதன் பின்னர் ஐக்கிய ராச்சியத்திலிருந்து உதைபந்தாட்டப் பயிற்சியை வழங்குவதற்காக வருகை தந்திருந்த திரு ஜெயக்குமார் அவர்களைக் கருத்துத் தெரிவிக்குமாறு கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்ட போது அவர் அங்கிருந்து வந்த போது அவ்வளவு மனமில்லாமல் வந்ததாகவும் இப்போது இங்குள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்த பின் அவர்களை விட்டுப் போக மனமில்லாமல் இருப்பதாகவும் பெரியவர்கள் ஆக்கபூர்வமாக விடயங்களை ஆரம்பித்தாலும் கூட இந்தத் திட்டம் வெற்றி பெறுவதென்பது அவர்களைப் போன்ற இளைஞர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். 'வல்வை ப்ளூஸ்' என்று புகழ் பெற்ற உதைபந்தாட்ட அணியை ஐக்கிய ராச்சியத்திலிருந்து அழைத்து வருமாறு கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்ட போது அதற்குரிய நிதியைத் திரட்டும் பொறிமுறையொன்றைக் கண்டுபிடித்த பின் அது பற்றி பின்னர் அறியத் தரப்படும் என்று திரு ஜெயக்குமார் தெரிவித்தார்.
 இன்று இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட  வேண்டும்  என்ற கருத்தைத் தெரிவித்த திரு சோதிமயம் அவர்கள் ஏற்கனவே மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குப் பாவித்த அறிவித்தலின் அடுத்த பக்கத்தில் இந்தக் கூட்டம் சம்பந்தமான  தகவல்கள் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறிய போது   அக்கருத்தைத்  திரு சாரூபன் அவர்களும் ஏற்றுக் கொண்டார்.
இதற்கான மக்களின் கருத்தை அறிவது எப்படியென்ற கேள்வி பொதுவாக எழுந்த போது வாய் வழி மூலமாகவே மக்களின் கருத்தை அறிவதெனவும் இனி 08.09.2012 அன்று  கூட்டப்படவிருக்கும் கூட்டத்தில் இன்று பங்கு பற்றியோர் மூலம் ஆகக் குறைந்தது 200 குடும்பங்களாவது  நிதியைத் தருவதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதெனவும்  இல்லாவிடின் கை விடுவதெனவும்  கலாநிதி திரு ராஜேந்திரன் தெரிவித்ததற்கு ஒருவரும் ஆட்சேபனை தெரிவிக்காததைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுறுத்தப்பட்டது.

 சென்ற மாதம் 31ம் திகதி கலாநிதி திரு ராஜேந்திரன் அவர்கள் அனுப்பிய குறிப்பும் இறுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பின்குறிப்பு:
கூட்டம் முடிந்து இப்போது 5 நாட்களாகி விட்டன. அடுத்த கூட்டத்திற்கு இன்னும் 8 நாட்களேயுள்ளன. ஊரவர்களை அங்கத்தவர்களாகச் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. ஆகவே ஒரு திருத்தத்தை முன் வைக்கிறேன். தயவு செய்து உங்கள் கருத்தைத் தெரியப்படுத்தவும்.
08.09.2012 அன்று கூட்டத்தைக் கூடுவதற்குப் பதிலாக 200 அங்கத்தவர்களைச் சேர்த்த பின்பு கூட்டத்திற்கான நாளைக் குறிக்கலாம். 13.10.2012  அன்று வரை அங்கத்தவர்களைச் சேர்க்கும் முயற்சி திருப்திகரமாக இல்லாவிடின் கூட்டம் கூடி எமது முயற்சியைப் பின்னொரு காலத்திற்குத் தள்ளிப்  போடலாம்.  
 - சபா இராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக