தொண்டைமானாற்றுப் பாலத்தின் பொறியியலாளருடன் ஒரு
நேர்காணல்.
தொண்டைமானாறு.....கல்கியின் பிரசித்தி பெற்ற “பொன்னியின் செல்வன்”
நாவலிலேயே இடம்பெற்ற(கதையின் முக்கிய
பாத்திரங்களுள் ஒன்றான வந்தியத்தேவன் தொண்டைமானாற்றில் வந்து கரையிறங்குவதாக
கதையின் ஒரு பகுதியில் வருகிறது) ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற நகரத்துக்கும்
கிராமத்துக்கும் இடைப்பட்ட ஒரு பிரதேசம். அந்தப் பிரதேசத்திற்குரிய முக்கிய
அம்சங்களில் ஒன்று தொண்டைமானாற்றுப் பாலம். இலங்கையின் தலைப்பகுதியான வடமராட்சியை
வல்லைவெளிப் பாலம் வலிகாமத்துடன் இணைப்பது போல் தொண்டைமானாற்றுப் பாலமும்
வடமராட்சியை வலிகாமத்தின் இடைக்காடு, பத்தைமேனி, வளலாய், தம்பாலை
போன்ற கிராமங்களுடன் முக்கிய நகரங்களில் ஒன்றான அச்சுவேலியையும் இணைக்கிறது.
இந்தப் பாலம் 1987 ஆம் ஆண்டு இடம் பெற்ற ராணுவ நடவடிக்கையான ‘Operation Liberation’ இன் போது விடுதலைப் புலிகளால் பகுதியாளவில் தகர்க்கப்பட்டு
பின்னர் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 1990 ஆம்
ஆண்டில் அடியோடு தகர்க்கப்பட்டதோடு இதனூடான போக்குவரத்து முற்றாகத்
தடைப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினரின் விநியோக வேலையை இலகுவாக்குவதற்காக
இந்தப் பாலம் அவர்களாலேயே கட்டப்பட்டு, அவர்களால் மட்டுமே 2010 இன் நடுப்பகுதி வரை போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டு
வந்தது.
மக்களின் வேண்டுகோளை அடுத்து 2010 ஆவணி மாதம் 7ஆம் திகதி இப்பாலம் போது மக்களின் போக்குவரத்துக்கு
அனுமதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தப் பாலம் பாவனையில் இருக்க 2011 ஆம்
ஆண்டு வைகாசி மாதத்தில் இந்தப்
பாலத்திற்குச் சமாந்திரமாக இன்னொரு பாலம் ஐக்கிய நாடுகளின் அலுவலக வேலைத் திட்ட
சேவைகள் நிறுவனத்தினரால்(UNOPS) கட்டப்பட்டு
வந்தது. இப்போது அதன் கட்டுமாணப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
கட்டுமாணப் பணிகள் முழுமையாக நிறைவுற்றதும் இது வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்(RDA) ஐக்கிய நாடுகளின் அலுவலக வேலைத் திட்ட சேவைகள்
நிறுவனத்தினரால் கையளிக்கப்படவிருக்கிறது.
வேகமாக முழு வீச்சில் நடைபெறும் கடைசி நேரப் பணிகள் கழுத்துக்கு மேல்
இருந்தும் என்னைச் சந்திப்பதற்குச் சம்மதம் தந்த இந்தப் பாலத்தின் பொறியியலாளரும், எனது முன்னாள் அலுவலக சகபாடியுமான திரு
என்று அழைக்கப்படும் திரு.திருக்குமரனுடன் தொண்டைமானாற்றுப் பாலத்தின் சூழலிலேயே ஒரு
பேட்டி.
1.
பாலம்
கட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் அலுவலக வேலைத் திட்ட சேவைகள் நிறுவனத்தினரால்
தொண்டைமானாறு ஏன் தெரிவு செய்யப்பட்டது? ஏற்கனவே இராணுவத்தினரால் கட்டப்பட்ட பாலம் பாவனையில்
இருக்கும் போது இதன் தேவை என்ன? இந்தப் பாலம் கட்டப்பட்ட
பின் இராணுவத்தினரால் கட்டப்பட்ட பாலம் பிரிக்கப்பட்டு விடுமா?
சுனாமியினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நான்கு பாலங்கள் கட்டுவதற்கு ஸ்பெய்ன் நாட்டு அரசாங்கம்
நிதியுதவி வழங்கியது. நான்கு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் இதற்கென
வழங்கப்பட நிதி எஞ்சி விட்டதானால்(நாணய மாற்று விகிதம் காரணமாக) இன்னும் இரண்டு
பாலங்கள் கட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றுவதற்குத்
தீர்மானிக்கப்பட்டதும் ஏற்கனவே வீதி
அபிவிருத்தி அதிகார சபையிடம் கட்டுவதற்குப் பிரேரிக்கப்பட்டிருந்த பாலங்கள் கருத்திலெடுக்கப்பட்டு அவற்றின் தேவை அடிப்படையிலும், ஏற்படக்கூடிய செலவின்
அடிப்படையிலும் தொண்டைமானாற்றுப் பாலமும், திருகோணமலையில்
சலப்பையாற்றுப் பாலமும் தெரிவு செய்யப்பட்டன.
உங்கள் அனுமானம் சரி தான். நிரந்தரமான இந்தப் பாலம் கட்டப்பட்ட பின்னர், இராணுவத்தினரால் கட்டப்பட்ட
இந்தப் பாலம் அகற்றப்பட்டு விடும். இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில்
இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இந்த வகையான பெய்லி பாலங்கள் ஏராளமாகப் பாவனையில்
உள்ளன. இவை உறுதியான அத்திவாரம் இல்லாமல் தற்காலிகத் தேவையை நிறைவேற்றுவதற்காகக்
கட்டப்படும் பாலங்களாகும். இங்கு அகற்றப்படும் பாலங்கள் மக்களின் அல்லது
இராணுவத்தினரின் தேவையைப் பொறுத்து வேறு எங்காவது பொருத்தப்படும்.
2.
இரண்டு
பாலங்களும் ஆகக் கூட எவ்வளவு நிறையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன? இப்பாலங்கள் அடிப்படையில் எவ்வாறு
வேறுபடுகின்றன?
பெய்லி பாலங்கள் தற்காலிகத் தேவையை
நிறைவேற்றுவதற்காக வேகமாகக் கட்டப்படுவதால் இவை அதிகளவு நிறையைத் தாங்குவதில்லை.
இவை கிட்டத்தட்ட 200 மெட்ரிக் தொன் (ஒரு தொன்=1000 kg) நிறையை மட்டுமே தாங்கக் கூடியன.
ஆனால் நிரந்தரமாக அமைக்கப்படும் இந்த கொன்கிரீட்
பாலம் கிட்டத்தட்ட 2880 மெட்ரிக் தொன் நிறையைத் தாங்கக் கூடியன. அதாவது உச்ச
பட்சமாக நிறை ஏற்றப்பட்ட (அதாவது 50 மெட்ரிக் தொன்) 57 லொறிகளை இந்தப் பாலம்
தாங்கும். ஆனால் பாலத்தின் நீளத்தின்படி கிட்டத்தட்ட 32 லொறிகள் தான் இந்தப்
பாலத்தில் நிற்கலாம். ஆகவே தனது நீளத்திற்கேற்பத் தாங்கக் கூடிய நிறையை விட
அதிகமான் நிறையைத் தாங்குமாறே இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் என்று பார்த்தால் இராணுவத்தால்
அமைக்கப்பட்ட பாலம் தற்காலிகமானது. நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் பாலம்
நிரந்தரமானது. இராணுவத்தால் அமைக்கப்பட்ட பாலம் 3 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். நிரந்தரமான
இந்தப் பாலத்திற்கு கிட்டத்தட்ட 2 வருடங்கள்
எடுத்திருக்கிறது. இராணுவத்தினரின் பாலம்
ஒரு வகை உலோகத்தால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுக் கட்டப்பட்டது.பொதுவாக
எல்லா நாடுகளிலும் இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் பெய்லி எனப்படும்
பாலங்களைப் பெருமளவில் கட்டுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது
இங்கிலாந்தில் Donald Bailey என்பவரால் இந்தப் பாலம்
வடிவமைக்கப்பட்டதால் அவரின் பெயரே வைக்கபட்டு விட்டது. நாங்கள் கட்டும் பாலம் கொன்கிரீட்
ஆல் அமைக்கப்பட்டுள்ளது. பெய்லி பாலங்கள் மிக வேகமாக உருவாக்கப் படுவதால் சரியாக
அத்திவாரம் இடப்படுவதில்லை. ஆனால் நாங்கள் உருவாக்கிய பாலம் ஆற்றில் 16 இடங்களில் 3 அடி விட்டத்தில் தோண்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள 80 அடி தூண்கள் பாலத்தைத் தாங்கியுள்ளன. நீரினுள் தோண்டுவது
எப்படி என்ற சந்தேகம் பொதுவாக
எல்லோருக்கும் வரக் கூடியது தான். இதற்கு ‘Soilmec 40’ எனப்படும் ஒரு வகை நவீன இயந்திரம் பாவிக்கப்படுகிறது. இந்த
இயந்திரம் ஆற்றுப்படுகையைத் துளையிடும் போது தண்ணீர் உள்ளே உட்புகாமலிருக்க Bentonite எனப்படும் ஒருவகைத் திரவம்
பாவிக்கப்படுகிறது. பெய்லி பாலத்தில் ஏதும் சேதம்
ஏற்படுமாயின் பிரதியீடு செய்ய வேண்டிய மூலப்பொருட்கள் இங்கிலாந்திலிருந்து தான்
வரவேண்டும்.ஆனால் நாங்கள் கட்டும் பாலத்தில் ஏதேனும் சேதங்கள் ஏற்படுமாயின் அதனை
இங்கேயே திருத்திக் கொள்ளலாம். அதுவும், ஒரு வருடத்திற்குள்ளாயின்(defects liability period ) அதனை UNOPS செய்து கொடுக்கும். அதன் பின்னர் ஏற்படும்
திருத்த வேலைகளுக்கு RDA பொறுப்பேற்கும்.
3.
இந்தப்
பாலத்தின் கட்டுமாணப் பணிக்கு UNOPS
தவிர வேறு தனியார்
ஒப்பந்த நிறுவனம் சேவையாற்றுகிறதா? உங்களைத் தவிர வேறு யாரும் பொறியியலாளராகக் கடமையாற்றுகிறார்களா? உங்களது சக பணியாளர்கள் எத்தனை பேர் என்னென்ன பதவிகளில்
கடமையாற்றுகிறார்கள்? திறனுள்ள(skill), திறனற்ற(unskill) தொழிலாளிகள் இது வரை எத்தனை பேர் தங்கள் உடலுழைப்பை இந்தப்
பாலத்திற்கு வழங்கியிருப்பார்கள்.?
முதலில் இதன் கட்டுமாணப் பணி தனியார்
ஒப்பந்தக்காரரான HAG இடம் கையளிக்கப்பட்டு அதனை ஆளுமைப்படுத்தும்
பொறுப்புத் தான் UNOPS இடம்
ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் செயல் வேகம் குறைவாக இருப்பதாக
அவதானிக்கப்பட்டதால் 2012 கார்த்திகை மாதமளவில் அவர்களின் பணி இடைநிறுத்தப்பட்டு முழுப்
பொறுப்பும் UNOPS இடம்
கையளிக்கப்பட்டிருந்தது.
என்னைத் தவிர ஷெய்க் முகமட் ஹுசைன் என்றொரு
பொறியியலாளரும் 2012 இன் இறுதி வரை இங்கு கடமையாற்றினார்.
இங்கு என்னைத் தவிர தொழில் நுட்ப அலுவலர் ஒருவர், மேற்பார்வையாளர் ஒருவர், நிதி நிர்வாக
அலுவலர் ஒருவர், களஞ்சியசாலைப் பொறுப்பாளர் ஒருவர் ஆகியோர்
கடமையாற்றுகின்றனர்.
திறனுள்ள, திறனற்ற தொழிலாளிகள் குழுவாகத் தான் வேலை செய்வார்கள்.அதாவது
வரும் போது ஒன்றாக வந்த போகும் போது ஒன்றாகப் போய் விடுவார்கள். இது வரையில் 3 அல்லது 4 குழுக்கள் பணி
புரிந்திருக்கின்றன. தற்போது திறனுள்ள வேலையாளர்கள் 15 பேரளவிலும் திறனற்ற வேலையாளர்கள் 20 பேரளவிலும் வேலை செய்கிறார்கள்.
4.
இதன்
கட்டுமாண வேலைக்கு உங்கள் மேலதிகாரியாக இருப்பவர் யார்?அவர்களின் பெயர், நாடு, வகிக்கும் பதவி போன்ற விபரங்களைக் குறிப்பிட முடியுமா?
எனக்கு மேலதிகாரியாக இருப்பவர் இருப்பிடத்
திட்ட முகாமையாளராவார்.(Resident Project Manager) இவரின் பெயர் இப் கிடே ஹன்சன் (Ib Kidde Hansen).இவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்.
5.
இதன்
கட்டுமாணப் பணி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டது எப்போது? எப்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்
கையளிக்கப்படவிருக்கிறது? ஏற்கனவே திட்டமிடப்பட்ட கால
வரையறைக்குள் தான் முடிக்கப்படவிருக்கிறதா? அல்லது
தாமதமாகியிருக்கிறதா? அப்படியாயின் தாமதத்திற்குக் காரணம்
என்ன?
இந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டது 2011 வைகாசி மாதம் 19ஆம் திகதி. முடிப்பதற்குத் திட்டமிட்டது 2012 ஆவணி 19 ஆம்
திகதி.(1வருடமும் மூன்று மாதங்களும்)
அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவிருப்பது
இன்னும் இரண்டு, மாதங்களில் அதாவது ஆவணி மாதத்தில்.
இந்தப் பிரதேசத்தில் பாலம் கட்டுவதற்குரிய
திறனுள்ள தொழிலாளர்கள் இல்லாமை காரணமாகவும், 2012 இன்
இறுதிப் பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகவும் இத்திட்டம் சற்றுத்
தாமதமாகியிருக்கிறது.
பாலத்தின்
வேலை இந்த மாதம் இறுதிப் பகுதியில் அதாவது ஆனி மாதம் 31ம் திகதிக்குள்
முடிவடைந்தாலும், பாதை பாலத்தோடு இணைக்கப்படும் இரு பகுதியிலும் இன்னும் வேலை முடியவில்லை.
ஆவணி மாதமளவில் பாலத்தின் பணிகள் முழு அளவில் நிறைவடைந்து விடும் என்று எதிர்
பார்க்கிறோம்.
6.
இது
முழுக்க முழுக்க ஐக்கிய நாடுகளின் அலுவலக வேலைத் திட்ட சேவைகள் நிறுவனத்தினரால்
மட்டுமா அல்லது வேறு ஏதாவது அரசசார்பற்ற நிறுவனங்கள் இதற்கு அனுசரணை
வழங்கியிருக்கின்றனவா? இதற்கான
நிதிப் பங்களிப்பை வழங்கிய நிறுவனம்/நிறுவனங்கள் அல்லது நாடு/நாடுகள் என்னென்ன?
இந்தத் திட்டத்திற்கு ஸ்பெய்ன் அரசாங்கம் நிதிப் பங்களிப்புச் செய்ய, கட்டுமாணப் பணியில்
ஈடுபட்டிருப்பது UNOPS மட்டுமே.
7.
இதன்
கட்டுமாணப் பணிக்கு என்னென்ன மூலப்பொருட்கள் என்னென்ன அளவுகளில் பயன்படுத்தப்பட்டன?
கம்பி- 300 மெட்ரிக் தொன், சீமெந்து- 550 மெட்ரிக் தொன், பிலைவூட்(8’,4’,1/2’)- 700
8.
இந்தப்
பாலத்திற்குத் திட்டமிடப்பட்ட செலவு
எவ்வளவு? உண்மையான செலவு எவ்வளவு?
இதற்குத் திட்டமிடப்பட்ட செலவு 129 மில்லியன் (1m இற்கு 1 மில்லியன் என்ற
கணக்கில்). இது வரையில் கிட்டத்தட்ட 90 மில்லியன்
முடிந்திருக்கிறது.
9.
இதன் கட்டுமாணத்தில் உள்ள விசேட அம்சங்கள்
பற்றிக் குறிப்பிட முடியுமா?
பாலத்தைத் தாங்கும் தூணின் மேற்பகுதி ‘Neoprene rubber pads” எனப்படும் மிகவும் விலையுயர்ந்த ,வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு வகை ரப்பரினால்
செய்யப்பட்டுள்ளது. இதை யாரும் விஷமிகள் சேதமாக்கினால் விபரீதம் நிகழ
வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இது பாலத்தில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும்
வகையிலும், வெப்பத்தினால் ஏற்படும் விரிவுகளைத் தாங்கும்
வகையிலுமே இது பொருத்தப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கருகில், ஆற்றின் குறுக்காகப் பொருத்தப்பட்டுள்ள வான் கதவுகளின் (sluice gate ) நீளத்தை, இந்தப் பாலத்தின்
நீளத்திற்கேற்ப அதிகரித்தால், அதாவது தற்போது இதன் நீளம்
கிட்டத்தட்ட 100 m .இன்னும் கிட்டத்தட்ட 30 m அதிகரித்து அகழ்வு வேலைகளை மேற்கொண்டால் (அதாவது வான் கதவுகள்
அமைக்கப்பட்டும், நீரோட்டம் அற்ற பகுதியை ஆழமாக்கி, நீர் ஒடுமாறு செய்தால்) எதிர் காலத்தில், யாழ் குடா
நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இதைத் திறந்து விடும் பட்சத்தில் மிகவும்
குறுகிய நேரத்திலேயே வெள்ளம் கடலோடு சேர்ந்து விடும்.
இந்தப் பாலத்தின் பணிகள் முடிவடைந்து
இராணுவத்தின் பெய்லி பாலமும் அகற்றப்பட்ட பின்னர், பாலத்தின் அடிப்பகுதிக்கும், நீர் மட்டத்திற்கும் இடையில் 8 அடிகள் இடைவெளி காணப்படுவதால் சாதாரணமாக ஒரு வள்ளம் போய்
வரக் கூடியதாகக் காணப்படுவதால் எதிர்காலத்தில் இது ஒரு சுற்றுலா மையமாகத் திகழக்
கூடிய வாய்ப்புக்கள் அதிகமென நான் கருதுகிறேன்.
10.
எங்கள்
ஊரிலேயே நிறைய வேலையாட்கள் இருந்தும், இதன் கட்டுமாணப் பணிகளின் போது பெரும்பான்மையினருக்கே அதிக வாய்ப்புக்கள்
வழங்கியதாக இந்த ஊர் மக்கள் மனக் கிலேசம் கொள்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இந்தப் பகுதி வேலையாட்களையே அமர்த்தி வேலை
செய்த போது அவர்கள் வேலை முடியும் நேரத்திற்கு முன்பே, அல்லது முடிந்த நேரத்துடனே
வீட்டுக்குப் புறப்படுவதை அவதானிக்க முடிந்தது. ஆனால் தூரப் பிரதேசத்திலிருந்து
வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வார்கள்.
அதையும் விட முக்கிய காரணம் என்னவென்றால்
இங்கேயுள்ள தொழிலாளிகள் சாதாரண கட்டுவேலைத் தொழிலாளிகள் தான். பாலம் கட்டுவதற்குரிய விசேட திறன்
அவர்களிடம் இல்லை.
பேட்டி:ஆ.தீபன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக