வியாழன், 6 ஜூன், 2013

பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்.


                                           பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்.
 

 

பிரமிட்டுக்கள்..... இவை எப்போதுமே சக்தி வாய்ந்த,எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட  மர்மங்களைத் தன்னகத்தே கொண்டனவாகவும்  உலகின்  மிகவும் புராதனமான இராட்சத  ஞாபகச்சின்னங்களாகவும் கருதப்படுகின்றன. ஏறத்தாழ 5,000 வருடங்கள் கடந்தும் எத்தனையோ இயற்கைச் சீற்றங்களுக்கு உட்பட்டும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பிரமிட்டுக்கள்  பிரமிப்பின் உச்சம் தான். யார் இதைக் கட்டினார்கள், ஏன் இதைக் கட்டினார்கள், எவ்வாறு இதைக் கட்டினார்கள், இந்தச் சின்னம் எதனை வெளிப்படுத்துகிறது போன்ற கேள்விகளுக்கெல்லாம் மனிதன் விடை தேடிப் புறப்பட நிறையத் தத்துவங்கள் கிடைத்திருக்கின்றன. அவை ஒரு புறமிருக்க புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்  என்றாலும் சரி, அசாதாரண நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் பிரமிட்டுக்களை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுவதன் காரணம் தான் என்ன?
எகிப்தின் பிரமிட்டுக்கள் வெளிப்படுத்திய விடயங்களுள் கிட்டத்தட்ட பத்து வீதமானவையே நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள தொண்ணூறு வீதமானவை ஊகங்களின் அடிப்படையில் தான் உலாவுகின்றன. பிரமிட்டுக்களின் முக்கிய மர்மங்களாகக் கருதப்படுவன அவை என்னென்ன உபகரணங்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்பதும், அவற்றின் நிறமும், அவற்றினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் பாடம் செய்யப்பட்ட உடல்களும் தான். 21ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் தொழில்நுட்பங்களின் உதவியாலும் கூட அவற்றின் மர்மங்களின் முடிச்சவிழ்க்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான். அங்கே ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அனேகமான ஆராய்ச்சியாளர்கள் பிரமிட்டுக்கள் வெறுமனே அரசர்களின் கல்லறையாக மட்டுமே இருக்கின்றன என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட போது அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரமிட்டுக்களில் பாடம் செய்யப்பட்ட சடலங்கள் காணப்படவில்லை. ஆனால் அவை கல்லறைத் திருடர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கருத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கவில்லை.
 பிரமிட் என்றாலே எகிப்து தான் அனேகமானவர்களுக்கு ஞாபகம் வரும். ஆனாலும் எகிப்தைத் தவிர மெசொபத்தேமியா, நைஜீரியா ,சூடான், கிறீஸ், இந்தோனேஷியா, ஸ்பெயின், சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுக்கள் உண்டு என்ற விடயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.
பிரமிட்டுக்களை பொறியியல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, கணிதம் ஆகியவற்றில் மிகவும் மேன்மையான நிலையில் இருந்தவர்களே கட்டியிருப்பார்கள் என்று கருத இடமுண்டு. ஏனென்றால்  பிரமிட்டுக்களைத் தாங்கியிருக்கும் தளங்களின் நீள அகலங்கள் அங்குலத்திற்கும் குறைவான வித்தியாசத்தையே காட்டுகின்றன. 
நிறைய புத்திஜீவிகள் பிரமிட்டுக்களுடன் எண்சாஸ்திரத்துக்கும், வானசாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நம்புகிறார்கள். வியக்கத்தக்க வகையில் பிரமிட்டுக்களின் தளத்தின் சுற்றளவு, பூமி சூரியனைச் சுற்றி வர  எடுக்கும் நேரத்துக்குச் சமனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். புராதன எகிப்தில் வாழ்ந்த மக்கள் ஏழாம் எண்ணைப் புனித எண்ணாகக் கருதினார்கள். பிரமிட்டுக்களின் அடிப்பக்கம் நான்கு பக்கங்களைக் கொண்டிருப்பதாகவும் அதன் முகப்பக்கம் மூன்று பக்கங்களைக் கொண்டிருப்பதாகவும்  ஆக மொத்தம் ஏழு பக்கங்களைக்  கொண்டிருப்பதாகவும் எண் ஏழு போலவே பிரமிட்டுக்களையும் மிகவும் புனிதமாகக் கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் மாவீரனான நெப்போலியன் ஒரு நாள் இரவு தனியே ஒரு பிரமிட்டில் தங்கியதாகவும் அடுத்த நாள் காலை வெளியே வந்து “உள்ளே என்ன நிகழ்ந்தது என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்” என்று மட்டுமே தெரிவித்ததாகவும் நெப்போலியனைப் பற்றி உள்ள குறிப்புக்களில் ஒன்று தெரிவிக்கிறது.
பிரமிட்டுக்கள் பிரபஞ்சக் கட்டமைப்பையும்,பிரபஞ்சக் கோட்பாட்டையும்  விளக்குவனவாகவும் மனிதனாகப் பிறந்து ஆற்ற வேண்டிய கடமையை ஞாபகப்படுத்துவனவாகவும் இருக்கின்றன  என்பது சிலரின் கருத்து. என்னதான் இரத்தமும் சதையுமாகப் பிறந்திருந்தாலும் கூட, இரத்தமும் சதையுமுள்ள உடலை விட்டு நீங்கி முடிவில்லாத சாசுவதமான நிலையை  அடைவதே மனிதனின் இறுதிக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று பிரமிட்டுக்களில் உள்ள எகிப்திய எழுத்துக்களும் சித்திரங்களும் எடுத்துக் காட்டுகின்றன.  
 
இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவெனில் நேரத்தைக் கணிப்பதற்கு கணிதத்தைப் பாவித்தவர்களும், அத்துடன்  வானசாஸ்திரத்தைக் கொண்டு பிரமிட்டுக்களின் அமைவிடத்தைக் கணித்தவர்களும் எகிப்தியர்கள் தான் என்பது தான்.கிஷா பிரமிட் உள்ளடங்கலாக எல்லாமாக ஒன்பது பிரமிட்டுக்களில் வானசாஸ்திரம் பற்றி நிறைய உபயோகமான தகவல்கள் உள்ளன அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரமிட்டுக்கள் எந்தக் கற்களின் மூலம் கட்டப்பட்டனவோ அவற்றிலும் மர்மம் தான். பிரமிட்டுக்களில் கட்டட வேலையை மேற்கொண்டவர்கள் உட்பக்கமாகவா அல்லது வெளிப்பக்கமாகவா வேலையை மேற்கொண்டனர், கற்கள் மேலிருந்து கீழாகவா அல்லது கீழிருந்து மேலாகவா  வைத்துக் கட்டப்பட்டன, கற்கள் வைத்துக் கட்டப்படுவதற்கு முன்பு மெருகேற்றப்பட்டனவா அல்லது வைத்துக் கட்டப்பட்ட பின் மெருகேற்றப்பட்டனவா,இயந்திரங்கள் ஒன்றும் இல்லாத அந்தக் காலத்தில் எவ்வாறு இவ்வளவு அழகாக கற்கள் செதுக்கியது போல் உடைக்கப்பட்டன, எங்கே வைத்து உடைக்கப்பட்டன, எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்ற மர்மங்களுக்கெல்லாம் இன்னும் விடை கிடைத்தபாடில்லை. எவ்வாறாயினும் பிரமிட்டுக்கள் எவ்வளவுக்கெவ்வளவு  பெரிதாக உள்ளனவோ அவ்வளவுகவ்வளவு கீர்த்தி வாய்ந்த அரசர்களுக்காகவே அவை கட்டப்பட்டிருக்கின்றன  என்று ஆராய்ச்சியாளர்கள் நிச்சயமாக நம்பினார்கள்.               
புராதன எகிப்தியர்கள்,  உடலை விட்டு உயிர் பிரிந்த பின் உயிரானது வேறோர் பரிமாணத்தில் தனது வாழ்க்கையைத் தொடர்கின்றது என்று நம்பினார்கள். இதனாலேயே உயிர் நீத்த தங்கள் அரசர்களின்  பாடம் செய்த உடல்களின் கல்லறையாகக் கட்டப்பட்ட  பிரமிட்டுக்களில் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையும் எல்லாவிதமான செல்வங்களையும், பொக்கிஷங்களையும் இட்டு நிரப்பியிருந்தார்கள் என்று நிலவிய நம்பிக்கை இன்றும் தொடர்கிறது. இதனாலேயே கல்லறைத் திருடர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து  அந்தச் செல்வங்களைத் தமதுடமையாக்கிக் கொள்ளத் துடித்தார்கள்.
 
 
 
பெரும்பாலான பிரமிட்டுக்கள் கி.மு 2800 க்கும் கி.மு 2200 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே கட்டப்பட்டிருக்கின்றன என்று கட்டிடக் கலைஞர்கள் நம்புகிறார்கள். பிரமிட்டுக்களில் முதலாவது பிரமிட் என்று நம்பப்படுவது மெம்பிஸ் என அழைக்கப்படும் இடத்திற்கு அருகிலுள்ள சக்குவாரா எனும் இடத்தில் சோசர் என அழைக்கப்படும் மன்னனுக்காக அவனது பூதவுடலையும் அவனுக்காக வைக்கப்பட்ட பொருட்களையும் வைத்துக்  கட்டப்பட்ட பிரமிட்டாகும்.இது முதலாவது பிரமிட் ஆகையால் சரியான பிரமிட்டின் வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப் பின் வந்த நூற்றாண்டுகளில் செனவிரு என்ற அரசனால் மூன்று பிரமிட்டுக்கள் கட்டப்பட்டன. முதலாவது கட்டுமாணத்தில் உள்ள பலவீனம் காரணமாக அது இடையிலேயே நிறுத்தப்பட்டது. அடுத்ததும் கூம்பு வடிவத்தில் அமைப்பதற்குப் பதிலாக மிகவும் சரிவாக அமைந்து விட்டதனால்   இது வளைந்த பிரமிட் என்ற பெயரைப் பெற்றது. மூன்றாவதாகக் கட்டப்பட்டது தான் சரியான பிரமிட்டின் வடிவத்தைப் பெற்றிருந்தது.இது வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டதால் செனவிருவின் வட பிரமிட் என்றழைக்கப்பட்டது. இது வளைந்த பிரமிட்டுக்கு அருகிலேயே கட்டப்பட்டிருக்கிறது.    
பிரமிட்டுக்களிலேயே மிகவும் பிரபலமானதும் அற்புதமானதும்  மர்மம் நிறைந்ததாகவும் கருதப்படுவது கிஷாவின் மேற்குப் பகுதியில் உள்ள கைரோவில் அமைந்துள்ள 'சியோப்ஸ்' எனப்படும் பிரமிட்டாகும். அதன் கட்டட வடிவமைப்பானது மிகவும் எளிமையானதாகவும் அதே சமயம் அபாரமானதாகவும் இருந்ததோடு மனித நாகரீகத்தின்  முக்கியம் வாய்ந்த இரகசியங்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இது பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் இராட்சதக் கற்களைக் கொண்டு கிட்டத்தட்ட 30 ஏக்கர் பரப்பளவில் 481 அடி உயரத்தில்  (அதாவது இவற்றின் மொத்த எடை 6 மில்லியன் ) முப்பது வருடத்திற்கும் அதிகமான காலப்பகுதியில் இந்தப் பிரமிட் கட்டப்பட்டிருக்கிறது என்று கட்டிட வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வளவு மனித உழைப்பைச் செலவழித்து இதைக் கட்டி முடிக்க வேண்டிய தேவை தான் என்ன என்பற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
அத்துடன் இந்தக் கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதும் மர்மமாகத்தான் இருக்கிறது .ஒரு பக்கம் பாலைவனமும் இன்னொரு பக்கம் கடலும் காணப்படுகிறதே தவிர அவ்வளவு இராட்சதப் பாறைகள் தோண்டி எடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் பல நூற்றுக் கணக்கான மைல்களுக்கு இல்லவே இல்லை. சக்கரங்கள் கூடக் கண்டு பிடிக்கப்படாத அந்தக் காலத்தில் இந்தக் கற்களை எவ்வாறு கொண்டு வந்து சேர்த்திருப்பார்கள்  என்று நினைக்க நினைக்கப் பிரமிப்புத்தான்
.அத்துடன் ஏனைய பிரமிட்டுக்களைப் போல் இல்லாமல் , 345 அடி நீளமான நடைபாதையும் அதன் முடிவில் ஒரு பெரிய மண்டபமும் ஒரு பெரிய பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்வதாகத் தான் தோன்றும். ஆயினும் கி.பி 820 இல் கலிப் அப்துல்லா என்பவரால் இந்த பிரமிட் கண்டு பிடிக்கப்பட்ட போது மண்டபத்திற்கும் மன்னரின் உடல் வைக்கப்பட பேழைக்கும் இடையில் 3 இராட்சதக் கற்களால் அடைக்கப்பட்டு(இந்த இடத்தில் தான் பேழையைக் காவல் காத்து நின்ற காவலாளிகள் நின்றதாகக் கருதப்பட்டது.) ஒரு பெரிய எதிர்பார்ப்பைத் தந்த போதும் கூட அங்கு வெற்றுப் பேழை மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது.
 
 
 
 
பிரமிட்டின் தோற்றம் பற்றி ஒவ்வொரு விதமாகக் கூறப்பட்டது.சிலர் கிறீஸ்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் பைபிளின் கல் வடிவான பதிப்பே பிரமிட் என்றும் இதனைக் கட்டியது கடவுள் என்றும் இதில் இறந்த கால, நிகழ் கால, எதிர் கால சம்பவங்கள் பற்றிய பதிவுகள் உள்ளன என்றும் கருதுகின்றனர். பிரமிட்டின் உள்ளே செல்லும் பல்வேறு பாதைகளும் ஒவ்வொரு சரித்திர காலத்திற்கு இட்டுச் செல்பவை என்றும் அந்தப் பாதைகளின் குறுக்கே செல்லும் சந்திகள் ஒவ்வொரு முக்கிய சம்பவங்களையும் குறிக்கிறது  என்றும் உதாரணமாக கிறிஸ்துவின் பிறப்பு ,உலகமகா யுத்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் கருதினார்.
சிலர் பிரமிட்டீன் தோற்றமானது பை(22/7) என்பதான் சரியான பெறுமதியைக் குறிக்கிறது என்றும் இது வெளியுலகத்திலிருந்து வருகை தந்த வேற்றுக் கிரகவாசிகளால் தங்களது அடுத்த வருகையின் போது அடையாளமாக கொள்ளப்படுவதற்காகக் கட்டப்பட்டது என்றும் கருதினர். செவ்வாய்க் கிரகத்தின் சைடோனிக் என்று விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்ட ஒரு பகுதியில் காணப்படும் பிரமிட் போன்ற அமைப்புக்கும் எகிப்தில் காணப்படும் பிரமிட்டுக்களுக்கும் உருவ ஒற்றுமை காணப்படுகிறது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்ததும் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.   
பிரமிட்டின் தோற்றம் பற்றி ஓரியன் எனப்படும்  பிரபலமான தத்துவம் உண்டு. வான்வெளியிலுள்ள ஓரியன் நெபுல்லா எனப்படும் நட்சத்திரக் கூட்டத்திலுள்ள  3 நட்சத்திரங்களின் அமைவிடத்தை ஒத்ததாகவே  எகிப்தின் கிஷாவிலுள்ள 3 பிரமிட்டுக்கள் காணப்படுகின்றன  என்றும் கருதியவர்கள் உண்டு. தங்கள் மன்னர்கள் நட்சத்திரங்களிலிருந்து வந்தவர்கள் என்று கருதியதால் இறந்த பின் அவர்களது ஆத்மாக்கள் அந்த நட்சத்திரங்களைச் சென்றடைவதற்காகவே அவற்றின் அமைவிடத்தை ஒத்ததாகக் கட்டினர் என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

 
உலகிலுள்ள அனேகமான வெளிப்படுத்தப்படாத மர்மங்களுக்கும் அட்லாண்டிசுக்கும் முடிச்சுப் போடுவது வழக்கமாகியிருப்பது உங்களில் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கும். பறக்கும் தட்டு மர்மம், பெர்முடா முக்கோணப் பிரதேசம், நாஸ்கா வரை கோடுகள், ஈஸ்டர் தீவு இராட்சதச் சிலைகள் என்ற வரிசையில் பிரமிட்டுக்களும் சேர்க்கின்றன. கி.பி 10,000 இற்கு முன்னே வாழ்ந்த அட்லாண்டிஸ் தேசத்தவர்களே பிரமிட்டுக்களைக் கட்டினார்கள் என்று  தூங்கும் தீர்க்கதரிசியாகக் கருதப்பட்ட எட்கர் கேய்ஸீ என்றொரு எழுத்தாளர்  தெரிவித்தார். அவர் தன்னையே ஒரு அட்லாண்டிஸ் தேசத்தவன் என்றும், தான் தூங்கும் போது தன்னுடன் ஆவிகள் பேசுகின்றன என்றும் தன்னுடைய இந்த அளப்பரிய தீர்க்கதரிசனத்தின்  வெளிப்பாட்டுக்குக் காரணம் அட்லாண்டிஸ் தெய்வங்களும் ஆவிகளும் தான் என்றும் உறுதியாக நம்பினார்.
என்ன தான் மனிதன் அண்டவெளி, நிலவு, செவ்வாய் கிரகம் என்றெல்லாம் தனது தேடலை விரிவுபடுத்தியிருந்தாலும் பூமியிலேயே அவனால் கண்டுபிடிக்கப்படாத சில மர்மங்கள் தொடரத் தான் செய்கின்றன. அவற்றிலொன்று  பிரமிட் என்று கூறுவதில் மிகையில்லை. மனித குலம் வாழ்ந்து அழியும் வரையில் இந்த மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கப்படப் போவதில்லையா என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்தக் கட்டுரைக்குரிய தகவல்கள்  http://www.world-of-lucid-dreaming.com/unexplained-mysteries.html, http://communities.washingtontimes.com/,
neighborhood/egypt-pyramids-and-revolution/2011/sep/14/endless-mysteries-pyramids/
, http://astromic.blogspot.com/2010/06/whats-mystery-about-pyramids-of-giza.html, http://www.atlanteanconspiracy.com/2008/06/greatpyramid-mystery.html
ஆகிய இணையத்தளங்களிலிருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்டு இடையிடையே சொந்தச் சரக்கும் சேர்த்துப் பரிமாறப்பட்டுள்ளது .
 
 
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக