No Man’s Land (மனிதர்கள் இல்லாத தேசம்)-பொஸ்னியத் திரைப்படம்
கண்ணிவெடி பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன? A9 வீதியால் போகும் போது, வடமராட்சிக் கிழக்குப் பக்கம் போகும் போது ‘வினை
விதைத்தவன் வினை அறுப்பான்’என்ற பழமொழியைப் பொய்யாக்கிக்
கொண்டு கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருக்கும் மனிதநேயப் பணியாளர்களைப்
பார்த்திருப்பீர்கள். அவை இலங்கை ராணுவத்தால்,
விடுதலைப்புலிகள் தங்கள் எல்லைக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக அல்லது விடுதலைப்புலிகளால், இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக
நிலத்தில் புதைக்கப்படும் ஆட்கொல்லிகள். பின்பு எதிரி,
அல்லது பொது மக்கள், அல்லது சில வேளைகளில் கண்ணிவெடியை
விதைத்தவர்களே அப்பகுதியினுள் நுழையும் போது
அழுத்த விசையால் தானாகவே
தூண்டப்பெற்று வெடித்து அங்க சேதங்களை(பெருப்பாலும்) அல்லது உயிர்ச்
சேதங்களை(மிகச் சில வேளைகளில்) விளைவிக்கும் குண்டுகள். இதெல்லாம் தெரிந்தது தானே
என்று அனேகர் நினைப்பீர்கள். சரி, ‘கால்
வைத்தவுடன் கண்ணிவெடி வெடிக்குமா?’ என்று கேட்டால் உங்களில்
சிலர் ‘பின்னே வெடிக்காமல் என்ன செய்யும்?’ என்று கேட்பீர்கள். அப்படியாயின் நீங்கள் கண்ணிவெடி பற்றிப் பிழையாக
அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்றாகிறது. ஆமாம். கால் வைக்கும் போது கண்ணிவெடி
வெடிக்காது. வைத்து விட்டு எடுக்கும் போது தான் வெடிக்கும். ‘சரி தான். வைக்கும் போது வெடித்தால் என்ன, எடுக்கும்
போது வெடித்தால் என்ன? வைத்தவன் எடுக்காமல் இருக்க முடியுமா? எப்படியோ சாவது நிச்சயம் தானே.’ என்று அலட்சியமாக
நினைக்க வேண்டாம். கண்ணிவெடியைக் கையாண்டவர்களுக்கும்,
களத்தில் நின்றவர்களுக்கும் தான் இந்தத் தகவல் எவ்வளவு முக்கியமானது என்று
தெரியும். மிகவும் நுண்ணிய, அதே சமயம்
மிக முக்கியமான இந்த விடயத்தை மையமாக வைத்து பொஸ்னியர்களுக்கும் சேர்பியர்களுக்கும்
இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரின் பின்னணியில் பொஸ்னியாவில் எடுக்கப்பட ஒரு
திரைப்படம் தான் ‘No man’s
land’
மிகவும் மோசமாகப் பனி சூழ்ந்திருக்கும் ஒரு பிரதேசத்தில் எதிரியை நோக்கிச்
செல்லும் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இதற்கு மேல் செல்ல
வேண்டாமென்று நினைத்து இரவு அந்த இடத்தில் தங்குகிறார்கள். அடுத்த நாள் காலை, மெல்ல மெல்லச் சூரிய ஒளி பரவும்போது தான்
எதிரிகளுக்கு மிகவும் அருகில் இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் சுதாரித்துக்
கொள்வதற்குள் எதுரிகளின் துப்பாக்கிகள் அவர்களை நோக்கி ரவைகளை உமிழ்கின்றன. சூடு
பட்டவர்கள் செத்து விழ ஏனையவர்கள் தங்கள் நாட்டுப் பகுதியை நோக்கி ஓட அவர்களை
நோக்கி பீரங்கிகளும் முழங்குகின்றன. இந்தத் தாக்குதலில் இருவரைத் தவிர ஏனையோர்கள் மடிய, அவர்களிருவரும் அருகிலுள்ள நீண்ட கால்வாயை நோக்கித் தூக்கி
வீசப்படுகிறார்கள்.
யாரேனும் உயிரோடு இருந்தால் அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக நினோ என்ற
எதிரி வீரனும் இன்னொருவனும் அனுப்பப்படுகிறார்கள். எதிரிகள் வருவதை அறிந்து சிக்கி
என்ற வீரன் ஒளிந்து கொள்ள சீரா என்ற வீரன் காயமடைந்து சுயநினைவிழந்து கிடக்கிறான்.
சுயநினைவிழந்திருக்கும் சீராவின் உடலுக்குக் கீழே கண்ணிவெடியை வைத்து விட்டு
இருவரும் எழும் போது ஒளிந்திருந்த சிக்கி அவர்களை நோக்கிச் சுடுகிறான். நினோ
காயம்பட்டு விழ மற்றவன் இறந்து விடுகிறான்.
நினோவைப் பணயக் கைதியாக வைத்துத் தப்பிக்க நினைக்கும் சிக்கி அவனைக் கொல்லாமல்
விடுகிறான். இதற்கிடையில் நினைவு திரும்பும் சீரா எழ முயற்சிக்கும் போது சிக்கி
கண்ணி வெடி ஆபத்தைப் பற்றி எச்சரித்து அவனைத் தொடர்ந்து படுத்திருக்குமாறு
சிக்கி கூறுகிறான்.
அதன் பின்னர் இரண்டு எதிரிகளும் ஒரு முடிவுக்கு வந்து கால்வாயை விட்டு வெளியேறி
வந்து தங்கள் பனியனைக் கழற்றி தங்கள் தங்கள் பகுதிகளை நோக்கி அசைத்துக் காட்டுகிறார்கள். இரண்டு எல்லையில்
இருப்பவர்களும் அவர்களைப் பார்த்து விட்டு ஐக்கிய நாடுகள் சபைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.
சற்று நேரத்தில் அங்கு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கவச வண்டியில் நீல்
என்றொரு அதிகாரி வருகிறார். அங்கிருக்கும் நிலைமை பற்றி மேலிடத்திற்கு
அறிவித்ததும், வீரர்கள் மூவரையும்
அப்படியே விட்டு விட்டு உடனே கிளம்பி
வருமாறு அவருக்கு உத்தரவு கிடைக்கிறது. அவர் புறப்படும் போது அவரோடு கிளம்பிச்
செல்ல முனையும் நினோ மீண்டும் சிக்கியால் காலில் சுடப்படுகிறான்.
நீல் செல்லும் வழியில் அவரது வாகனத்தை ஒரு பெண் நிருபர் வழிமறித்து நீல்
மேலிடத்துடன் தொலைத்தொடர்புக் கருவி மூலம்
நடத்திய உரையாடலை ஒட்டுக் கேட்டதாகவும் வீரர்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்காததைப்
பற்றித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவிக்க நீல் மீண்டும் மேலிடத்துடன்
தொடர்பு கொண்டு நிருபரை மேலிடத்துடன் கதைக்கச் சொல்கிறார். நிறுபரின்
மிரட்டலுக்குப் பண்ணியும் மேலதிகாரி கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் நிபுணரோடு சில
ஐ.நா வீரர்களையும் அனுப்புவதாகக் கூறி நீலை மீண்டும் அவ்விடத்திற்குப் போகுமாறு
பணிக்கிறார்.
இதற்கிடையில் பெண் நிருபர் அனுப்பிய தகவல் மூலம் அங்கு நிறைய நிருபர்கள் வந்து
சேர்க்கிறார்கள். இதன்போது சிக்கியின்
கவனம் கவனம் திசை திரும்பி விட அதனைப் பயன்படுத்தி தன்னைச் சுட்டதற்குப் பழி
வாங்குவதற்காக நினோ அவனைக் கத்தியால் குத்துகிறான். ஐ.நா வீரர்கள் அவர்களைச்
சமாதானம் செய்து பிரிக்கிறார்கள்.
நிலைமையின் தீவிரம் அறிந்து காண்ணிவெடி அகற்றும் நிபுணருடன் ஐ.நா
மேலதிகாரியும் அங்கு வருகிறார். கால்வாயின் ஏனைய பகுதிகளிலும் கண்ணிவெடிகள்
இருக்கலாம் என்பதால் ஒருத்தரும் கால்வாயினுள் இறங்க வேண்டாமென்று கட்டளையிடும்
அவர் அந்த இடத்தை விட்டுத் தூர விலகிப் போகுமாறு கூறுகிறார். ஐ நா வீரர்கள்
சிக்கியையும் நினோவையும் கூட அங்கிருந்து வெளியேற்றுகிறார்கள். சீராவுக்குத் தான் மேலே
இருப்பதாகவும் நிலைமை விரைவில் சீராகி விடும் என்றும் கூறி சிக்கி தான்
சிக்கியிருந்த கால்வாய்க்கு வெளியே வருகிறான்.
கண்ணிவெடி நிபுணர் கவச உடையுடன் கால்வாயினுள் இறங்குகிறார். அசையாமற்
படுத்திருக்கும் சீராவுக்கருகில் குனிந்து கண்ணிவெடியைப் பற்றிப் பரிசோதிக்க
முயற்சிக்கிறார். அருகில் படுத்திருக்கும் சீராவைச் சற்றுக் கூட அசைக்காமல்
கண்ணிவெடியைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கு முடியாமற் போகிறது
வெளியே வரும் நிபுணர் முதலில் அது என்ன மாதிரியான கண்ணிவெடி என்று முதலில்
அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, நீல் அது போன்ற ஓர் கண்ணிவெடியைக் காட்டுகிறார். அதனைப் பார்த்ததும்
நிபுணர் மனம் தளர்ந்து ‘இது போன்ற கண்ணி வெடிகளை ஒரு முறை வைத்தால்
பின்பு அதனைச் செயலிழக்கச் செய்வது இயலாத காரியம் என்று சொல்கிறார்.
இதற்கிடையில் நிலைமையின் தீவிரம் அதிகமாகியதால் ஐ.நா அமைதிப் படையின் தலைவர் ஹெலிகாப்டரில்
வந்து இறங்குகிறார். அவரிடம் விஷயம் சொல்லப்படுகிறது. சீராவைக் காப்பாற்ற முடியாது
என்று நிருபர்களிடம் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ஒரு
நாடகமாடத் திட்டமிடுகிறார்கள். அதன்படி
மீண்டும் கண்ணிவெடி நிபுணர் ஐ.நா அமைதிப்படையின் தலைவரின் கூற்றுப்படி
கால்வாயினுள் இறங்கி சீராவின் அருகில் போய் அமர்கிறார்.
ஐ.நா அமைதிப் படைத் தலைவர் அந்த இடத்தை விட்டு சற்று விலகி வரும் பொது அவரைச் சூழ்ந்து
கொள்ளும் நிருபர்கள் கண்ணிவெடியின் மேல் படுத்திருக்கும் சீராவைப் பற்றிச்
சரமாரியாகக் கேள்விகள் கேட்கிறார்கள். அவரும் சீராவை மீட்கும் பணிகள் நடந்து
கொண்டிருப்பதாகவும் காப்பாற்றிய பின் தானே அவர்களுக்கு அறிவிப்பதாகவும்
சொல்கிறார். எல்லோரதும் கவனம் அவரில் இருந்த நேரம் தன்னைக் கத்தியால் குத்திய
நினோவைப் பழி வாங்குவதற்காக சிக்கி அவனைச் சுடுகிறான். ஐ.நா படை வீரர்கள்
பாதுகாப்புக்காக சிக்கியைச் சுட இருவரும் இரண்டு விடுகிறார்கள்.
சற்று நேரத்தில் கண்ணிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
காப்பாற்றப்பட்ட சீராவைப் பார்க்க விரும்புவதாக நிருபர்கள் கேட்க, சீராவின் உடல்நிலை மிகவும் மோசமாக
இருப்பதால் உடனே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியிருப்பதால் இப்போது அவர்களிடம்
காட்ட முடியாது என்றும் இது சம்பந்தமாக விரைவில் ஓர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு
ஏற்பாடு செய்வதாகவும் அப்போது எல்லாச் சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்து
கொள்ளுமாறு கூறி அவர் ஹெலிகாப்டரில் ஏறிச் செல்கிறார். போகும் போது பொஸ்னிய ,சேர்பிய தரப்பினர்களுக்கு தொலைத்தொடர்புக் கருவி மூலம் அந்தக் குறிப்பிட்ட
இடம் அன்றிரவு கைப்பற்றப்படவிருப்பதாக ஒரு பிழையான தகவலையும் கூறி
விடுகிறார். அன்றிரவு அந்த இடம் பலத்த
பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில் அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான தடயங்கள்
இல்லாமற் போய் விடுமென்ற எண்ணத்தில்.
இருட்டி விட்டால் அங்கிருந்து கிளம்புவது கடினம் என்று கூறி ஐ. நா படை
வீரர்கள், நிருபர்கள் எல்லோரையும் அங்கிருந்து
கலைந்து செல்லுமாறு கூறுகிறார்கள். எல்லோரும் சென்றதும் கடைசியாக இது வரை ஒன்றும்
பேசாமல் இருந்த நீல் புறப்பட்டுச் செல்கிறார்.
எல்லா வாகனங்களும் கிளம்பிச் சென்று கொண்டிருக்க உலகின் பார்வையில்
காப்பாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட சீரா கண்ணீர் வழியும் முகத்துடன் தனது மனைவியின்
புகைப்படத்தைப்ப பார்த்துக் கொண்டிருக்க மனதைக் உருக்கும் இசையுடன் திரைப்படம்
நிறைவடைகிறது.
2001 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த
திரைக்கதைக்கான விருது பெற்றதுடன் சிறந்த அயல்நாட்டுப் படத்திற்கான ஒஸ்கார்
விருதும் பெற்றது. இதன் இயக்குனரும், இசையமைப்பாளருமான டணிஸ் டனோவிக், ‘இந்தப் படத்தில் கதாநாயகன் யாருமில்லையே’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் “சாதாரணமான நடைமுறைச் சாத்தியமான
இந்தக் கதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாத, குதித்துப்
பாய்ந்து பறந்து சண்டையிடும் கதாநாயகன் தேவையில்லை. நிஜ வாழ்க்கையில் அப்படி
யாருமே செய்வதில்லை.” என்று பதிலளித்திருந்தார்.
இந்தக் கதையில் சீராவைக் காபாற்றுவது சாத்தியமில்லை என்று தான் அவனை விட்டு
விட்டுப் போகிறார்கள்.அது பரவாயில்லை. ஆனால் எங்கள் நடைமுறை வாழ்வில் போர், சாலை விபத்து, இயற்கை
அனர்த்தம் என்று காப்பாற்றக் கூடிய நிகழ்வுகளிலிருந்து எத்தனை பேரைக் காப்பாற்றத்
தவறுகிறோம், தயங்குகிறோம் என்று சற்றே சிந்தித்துப்
பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக