ஒரு காலத்தில் நீங்கள் வாழ்ந்த இடத்திற்கு அருகில் இருப்பதாலும்(அனேகமான
வாசகர்களைக் குறிப்பிடுகிறேன். சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும்), சற்று
வித்தியாசமான பெயராக இருப்பதாலும் பெரும்பாலோனோருக்கு இந்தப் பெயரும் சிலருக்கு
இந்த இடமும் கூடப் பரிச்சயமானதாக இருக்கக் கூடும். இது அமைந்திருப்பது
பருத்தித்துறை நகரப் பகுதியில்,
தும்பளைக்குப் போகும் வீதியில். அதன் பெயரே இந்த மடம் எப்படிப்பட்ட அமைப்பைக்
கொண்டிருக்கிறது என்று சொல்லி விடும். தெருவின் இரு பக்கமும் அமைந்துள்ள மடத்தை
ஒரே கூரை மூடியிருப்பதால் உண்டான காரணப் பெயரே தெருமூடிமடம்.
புராதன இலங்கையில் பருத்தித்துறை புகழ்பெற்ற நகரமாயிருந்ததற்குக் காரணம்
கொழும்பு காலியிலிருந்து மட்டுமல்ல இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து,
பர்மா முதலான நாடுகளிலிருந்தும் பல்வேறுபட்ட பொருட்கள்(பருத்தித்துணி, பட்டுத்துணி தந்தத்தினால் செய்யப்பட்ட பொருட்கள்,
வாசனைத்திரவியங்கள், கோதுமை) அங்குள்ள துறைமுகத்தில் இறங்கியதும்
அதுபோல் பல்வேறுபட்ட பொருட்கள்( அரிசி, வெங்காயம், புகையிலை) அங்கிருந்து ஏற்றப்பட்டதும் தான். அதாவது சரித்திரத்திற்கு
முற்பட்ட காலத்திலிருந்தே பொருட்களை ஏற்றுபவர்களுக்கும், இறக்குபவர்களுக்கும்
பருத்தித்துறையில் நல்ல வேலை வாய்ப்புக் காணப்பட்டது. முக்கியமாக, இலங்கையில் நிலவும் காலநிலைக்கு ஏற்ற துணியாகையால் பருத்தித்துணி
அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது. பருத்தி அதிகளவில் இறக்கப்பட்ட துறை
என்பதாலேயே பருத்தித்துறை என்ற காரணப் பெயர் உண்டாயிற்று என்ற விடயம் அனேகர் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக