வியாழன், 6 ஜூன், 2013

தொண்டைமானாறு, அச்சுவேலி பாதையின் அவலம்........... தொடர்கிறது.


       தொண்டைமானாறு, அச்சுவேலி பாதையின் அவலம்........... தொடர்கிறது.  

முன்பு வெளிவந்த வல்வை அலையோசை நான்காவது இதழிலும் இதே அவலம் தானே என்று போன முறை வாசித்தவர்கள் யோசிப்பீர்கள். ஆம். அவலம் தொடர்கிறது.

2012  ஐப்பசி மாதமளவில் இந்தப் பாதை மோசமாக இருந்தது பற்றி வல்வை அலையோசை படங்களுடன் உங்களுக்கு அறியத் தந்திருந்ததோடு இவற்றின் ஒரு பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், பிரதேச செயலருக்கும் மின்னஞ்சல் செய்திருந்தேன். காகம் இருக்கப் பனம் பழம் விழுந்ததோ அல்லது பனம் பழம் விழப்போன நேரம் பார்த்து காகம் போய் இருந்ததோ தெரியவில்லை. எப்படியோ பனம்பழம் விழுந்தது. 2012 ஐப்பசி, புரட்டாசி மாதங்களில் இவ்வீதி திருத்தப்பட்டது. 2012 கார்த்திகை மாதத்தில் எடுக்கப்பட சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
 

 
ஆனால் இந்த நிலைமை நீடித்தது ஒன்றிரண்டு மாதங்களுக்குத் தான். பின்பு 2012 மார்கழியில் பெய்த மழையில் வீதியை மேவி வெள்ளம் பாய, அந்த வெள்ளத்தால் வீதி கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டு வீதி கீழே உள்ள படங்களின் நிலைமைக்கு வந்து விட்டது. 2013 பங்குனியில் எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.........
 
மழைக்காலம் முடிவடைந்து மூன்று மாதங்களின் பின்னரான காலப்பகுதியிலேயே வீதியின் இரு மருங்கிலும் வெள்ளம் இந்தளவுக்கு நிற்கிறதென்றால் மழைக்காலத்தில் எப்படியிருக்குமென்று நினைத்துப் பாருங்கள். ஆனால் இந்தப் பாதை சாதாரணமாகத் திருத்தினால் மட்டும் போதாது என்பதோடு கீழே கற்கள் போடப்பட்டு வீதி ஒன்றிரண்டு அடிகள் உயர்த்தப்பட வேண்டுமென்பது என்னுடைய தாழ்மையான கருத்து.அதாவது மற்ற வீதிகளுக்குச் செய்யப்படும் சாதாரணப் பூச்சு வேலைகள் இதற்குச் சரி வரப் போவதில்லை.
தொண்டைமானாற்றின் ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் வான் கதவுகள் முழுமையாகப்    பயன்படுமாறு ஆற்றுக்கு வடக்குப் பக்கக் கரை இன்னும் ஆழமாகத் தோண்டப்பட்டால் இந்த வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்து விடும் என்று  பொறியியலாளர் திருக்குமரன், தொண்டைமானாற்றுப் பாலம் சம்பந்தமான கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டது கவனிக்கப்பட வேண்டிய விடயம்  என்று நான் நினைக்கிறேன்.
கடைசியாக வைகாசி மாத இறுதிப்பகுதியில் பாதையின் நிலைமை.
 
பேரூந்துகள் செல்லும் ஒரு முக்கியமான வீதி மிக மோசமாகச் சேதமடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் திருத்தப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடப்பது ஏன்? அழகான ஒரு வீடு கட்டினால் கண்ணூறு படாமல் பயங்கரமான முகம் வரையப்பட்ட பூசணிக்காய் ஒன்றைக் கட்டித் தொங்க விடுவது எங்கள் பழக்கமல்லவா? அதைப் போல்  கட்டுமாணப் பணிகள் முடியும் தருவாயிலிருக்கும், கம்பீரமான தொண்டைமானாற்றுப் பாலத்திற்குத் திருஷ்டிப் பூசணிக்காயாக இந்தப் பாதை இருக்கட்டும் என்று நினைத்து விட்டு வைத்திருக்கிறார்களோ?    

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக