வியாழன், 6 ஜூன், 2013

சுனாமி 2004-ஐந்தாம் அத்தியாயம்


                                          சுனாமி 2004 (ஐந்தாம் அத்தியாயம்)
 

நான் மைதானத்துக்குப் போய்ச்சேர்ந்த போது மைதானம் களை கட்டத் தொடங்கியிருந்தது.  “பறக்கும் பருந்துகள்”கழக வீரர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர ஏனையவர்களும், அதே போல் எங்கள் கழகத்தில் ஒன்றிரண்டு பேரைத் தவிர ஏனையவர்களும் பயிற்சியில் ஈடுபட்டு எங்கள் கழக பேற்றுக் காவலனான (goal keeper) மோகன் அண்ணாவைத் திணறடித்துக் கொண்டிருந்தார்கள்.



மைதானத்தின் மூலையில் அமர்ந்து எனது காலணியை அணிந்து கொண்டிருந்த போது ரவி, மகேஷ், உதயன், நாதன் எல்லோரும் வந்து என்னருகே நின்றார்கள். “காலம வீட்ட போனனாண்டா, நீ அக்கா வீட்ட போனதெண்டு Aunty சொன்னவ. கை நோவோட இது அவசியம் தானா?” என்று ரவி உரிமையோடு கேட்டது எனக்குப் பிடித்தது. “மன வேதனைய விட கை வேதன பெரிசில்லடா”  என்றேன். “டேய், உற்சாகமா விளையாட வேண்டிய நேரத்தில சோகக் கதையக் கேட்டுச்  சொதப்பாதடா” என்ற குரல் கேட்ட போது தான் நாதன் அருகில் நிற்பது எனக்கு உறைத்தது. “டேய், நீ என்னடா இந்தப் பக்கம்?” என்று அவனைக் கேட்க “ இவன் மகேஷ் பந்தயம் கட்டுராண்டா, இந்த match இல உன்ட காலில ஒருக்காலும் பந்து படாது எண்டு. ஒருக்கா எண்டாலும் உன்ட கால்ல பந்து பட்டா மகேஷ் எனக்கு நூறு ரூபா தருவான் .அதில அம்பது ரூபா உனக்குத் தாறன். ஒரு முறையாவது பந்த காலில பட வச்சிருடா”என்று கெஞ்சிக் கேட்க “உங்களுக்கெல்லாம் நக்கல் என்ன?” என்றவாறு எழுந்து கொண்டேன். சிறிது காலத்திற்கு முன் எனது நிலைமை அப்படித்தான். ஒரு முறை ‘B’ கழகத்திற்காக உள்ளூர் கழகமொன்றுடன் விளையாடிய போது எனது காலில் பந்து படவேயில்லை. துரத்தித் துரத்தித் திரிந்தது ஒரு சோகக் கதை. அதைத் தான் நாதனும் மகேஷும் கிண்டல் பண்ணுகிறார்கள். இப்போது எனது விளையாட்டுப் பரவாயில்லை என்று தான் என்னை ‘A’ கழகத்திற்கு எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் கூட, ஏதோ கொஞ்சம் களைக்காமல் ஓடித் திரிவேன் என்பதால் தான் center half நிலையில் வைத்திருக்கிறார்கள். எனக்கு மிகவும் விருப்பமான forward நிலையில் விளையாடுவதற்கு இன்னுமே எனது உதையில் வேகம் போதாது.  

“விமலன் ground இல நிக்கிறான். வினோத் எங்கடா?” என்று நான் கேட்க “ நான் இங்க நிக்கிறேண்டா” என்று வினோத்தின் குரல் கேட்டது. சற்றுத் தள்ளி பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்ததால் தெரியவில்லை. “கேசவா,கடுகின் தோளில் கை போட்டு கதைத்துக் கொண்டிருக்கிறானே. அவன் தான் அண்டைக்கு உன்ட பிரியாவோட சேட்டை விட்டவன். பந்த அடிக்கிற மாதிரி அவன்ட காலில அடிச்சு விடு” என்று ரவி என் காதில் முணுமுணுத்தான்.

“ பெடியல் எண்டா பெட்டைகளோட சேட்டை விடுறது வழக்கம் தானேடா. ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் பெடியல்ண்ட சேட்டை பெட்டைகளுக்கும் விருப்பம் தானே. எல்லை மீறினாத் தானே பிரச்சனை” என்று நான் அவனுக்குச் சொல்ல “ உனக்குச் சொன்னதுக்கு நான் சுவர்ல முட்டியிருக்கலாம்” என்று ரவி சொல்ல நான் பக்கத்தில் அமைந்திருந்த கோயிலின் சிதைவடைந்திருந்த சுவரைக் காட்டிக் கொண்டு மைதானத்தில் இறங்கினேன்.

எங்கள் கழகத் தலைவர் வீமன் அண்ணா. “ வாடா கேசவா, போட்டி தொடங்குறதுக்கு பத்து நிமிஷத்துக்கு மேல இருக்கு. கொஞ்ச நேரம் போய் பந்த shoot பண்ணு” என்றார்.  “ஓமண்ணா” என்றவாறே எங்கள் கழக ஆட்கள் எல்லாரும் வந்து விட்டார்களா என்று பார்த்தேன். எங்கள் கழக பெற்றுக் காவலன் மோகன் அண்ணா விலகி நிற்க இப்போது பறக்கும் பருந்துகள்” கழக பேற்றுக் காவலன் பேற்றுக் கம்பத்தில் நின்றான். “என்ன உயரமடா சாமி!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கை, கால்கள் எல்லாமே நீட்டு நீட்டாக இருந்தது. அது மட்டுமில்லாமல் எல்லாரும் வேகமாக அடிக்கும் பந்துகளையெல்லாம் அனாயாசமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். இந்தக் கை கால்களை மீறி எவ்வாறு பந்தை உள்ளே அனுப்பப் போகிறோம் என்று நினைக்கச் சற்று யோசனையாக இருந்தது. எங்கள் மோகன் அண்ணாவும் இலேசுப் பட்டவர் இல்லை தான். என்றாலும் வயது கொஞ்சம் அதிகம். அடுத்ததாக பின்னால்  வலப்பக்கத்தில் விளையாடும் எங்கள் விமலன். வெறும்  காலுடன் தான் விளையாடுவான் என்றாலும் கனத்த காலணிகளுடன் முன்னேறும் எதிரணி வீரர்களின் வியூகங்களை மட்டுமல்ல, வீரர்களைக் கூடத் துவம்சம் செய்யும் வீரன்,   இடப்பக்கத்திற்கு ராகவன். விமலன் அளவுக்கு ஆகிருதி இல்லை. ஆனாலும் புத்தியாக விளையாடுவான். பந்தோடு சேர்த்து ஆளை விழுத்தும் வழுக்கல் அடியில்(slip shot) கில்லாடி. முன்னால்  விளையாடும் மூன்று வீரர்களில் வீமன் அண்ணா நடுவில். அவரின் உதை வேகம் சொல்லுமளவுக்கு இல்லை தான் என்றாலும் ஆட்களை வழி நடத்துவதில்,பந்தை சக வீரர்களுடன் இலாவகமாக மாற்றி விளையாடுவதில், மூர்க்கமாக முன்னே வரும் வீரர்களோடு முட்டி மோதாமல் பந்தை வெட்டிக் கொண்டு முன்னேறுவதில், தலையைப் பாவித்து பந்தைத் பற்றுக் கம்பத்தினுள் செலுத்துவதில் வீமன் அண்ணாவுக்கு நிகர் அவரே தான். முன்னால் வலப்பக்கத்தில் விளையாடுவதற்கு எங்கள் வினோத். எங்கள் கழகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த வேகமான உதை அவனது தான். அடுத்தது முன்னால் இடப்பக்கத்தில் விளையாடுவதற்கு எங்கள் எல்லோரிலும் வயதில் இளைய கண்ணன். மேற் பாதத்தால் அடிக்கும் மட்டையடியில்  மன்னன். அவனை மட்டும் தான் மைதானத்தில் காணவில்லை என்று நினைத்து விட்டுத் திரும்ப கண்ணன் மைதானத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றியவாறு “ கேசவனண்ணா!”  என்று கொண்டே ஓடி வந்தான். “என்னடா?” என்றேன். “ப்ரியா அக்கா ,இண்டைக்கு உங்கட விளையாட்டப் பாக்கப் போறதா உங்களுக்குச் சொல்லச் சொன்னவ” என்று கண்ணடித்தவாறே போக வினோத் அவனை முறைத்தவாறு பின்னால் வந்தான்.

“நேற்று அம்மாவுடன் கதைத்த பின் அவ்வளவு கவலையாகக் போனவள் அதற்குள்  விளையாட்டைப் பார்க்க.... அதுவும் எனது உபயோகமில்லாத விளையாட்டைப்  பார்க்க வந்திருப்பாளா? ஏனையவர்களின் விளையாட்டைப் பார்க்கவென்றாலும் பரவாயில்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் விசேஷமானவர்கள்” என்ற நினைப்பு எனக்குள் ஓடியது . அப்போது தான் இன்னொரு விஷயமும் ஞாபகம் வந்தது. “மைதானத்திற்கு அருகிலிருந்த மைதிலியின் வீடு , ப்ரியாவின் நெருங்கிய தோழியின் வீடு. ஒருவேளை.....”என்று எனது நினைப்புத் தொடர்வதற்கு முன்னர் எனது தலை மைதிலியின் வீட்டுப்பக்கம் தன்னிச்சையாகத் திரும்ப, எனது தலை திரும்பும் வரை காத்திருந்தது போல்,அந்த வீட்டுச் சுவற்றுக்கு மேலால் ஒரு பச்சைத்துணி இடம் வலமாக அசைந்தது.

 “யார் எவ்வளவு விசேஷமாயிருந்தாலென்ன எனது ப்ரியாவைப் பொறுத்தவரை நான் தான் விசேஷம்” என்று கிளம்பிய நினைப்பு, உள்ளங்காலில் ஏதோவொன்றை உற்பத்தி செய்து சுர்ரென்று உச்சந்தலைக்கு அனுப்பியது. “வைரமுத்துவுக்கும், வைரமுத்துவின் வரிகளைப் பாடும் கதாநாயகர்களுக்கும் கூட அடிவயிற்றுக்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பகுதியில் மட்டும் தான் இது நடைபெறும்” என்று நினைத்த போது பச்சைத்துணி இறக்கப்பட்டு சிவப்புத்துணி முன்னும் பின்னுமாக அசைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சிவப்புத்துணி வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டு பச்சைத்துணி காட்டப்பட்டது. சிவப்புத்துணி நிச்சயமாக மைதிலியின் வேலையாகத் தானிருக்கும். இரண்டாம் வகுப்பில் பாலர் பாடசாலையில் என்னுடன் படித்த போது சும்மா இருந்த என்னைப் பின்பக்கத்தில் நுள்ளி விட்டு “சேர், இவன் என்ன பின்பக்கத்தில நுள்ளுறான்” என்று கூறி குமாரசாமி வாத்தியாரிடம் என்னை மாட்டி விட்டு “இந்த வயசில உனக்கு அந்த இடத்தில நுள்ளுத் தேவைப்படுது என்ன?” என்று பிரம்பால் அடி வாங்க வைத்தவள் தானே என்று நினைத்துக் கொண்டேன்.

“கேசவன், எங்க வாய் பாத்துக் கொண்டு நிக்கிற?இருக்கிற கொஞ்ச நேரத்துக்கு அடிச்சுப் பழகினா என்ன” என்ற வீமன் அண்ணாவின் குரல் என்னை நனவுலகத்திற்குக் கொண்டு வந்தது. “ஓமண்ணா” என்றவுடன் பந்தை என் பக்கத்தில் தட்டி விட்டார். ப்ரியா பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பு உச்சந்தலைக்கு ஏறியிருந்த சுர் ஐ மீண்டும் உள்ளங்காலுக்குக் கொண்டு வர நான் அடித்த அடியில்   பந்து, அந்த உயரமான பேற்றுக் காவலனை ஏமாற்றி விட்டு,  வலப்பக்க மூலையில் பேற்றுக் கம்பத்தின் உயரத்துக்குச் சற்றுக் குறைவாக உள்நுளைந்தது.

Super shot டா மச்சான்” என்று விமலன் அருகில் வந்து என் முதுகில் தட்டினான். “டேய், இவன்ட urine செக் பண்ண வேணுமடா” என்று மகேஷ் கத்தியதும் கேட்டது. போட்டி முடிந்ததும் மகேஷின் முதுகில் நான்கு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க போட்டி ஆரம்பத்துக்கான விசில் ஊதப்பட்டது

                    (தொடரும்)               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக