வஜ்ராசனம்

வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். வஜ்ராசனத்தைச் செய்பவரின் உருவம்
வைரத்தின் அமைப்பில் தோன்றுவதாலும், இதைச் செய்பவர்களுக்கு வைரமான அதாவது உறுதியான உடலமைப்பு கிடைக்கும்
என்பதாலும் இந்த ஆசனத்திற்கு வஜ்ராசனம் என்ற பெயர் உண்டாகியிருக்கலாம். புராண
காலப் பாத்திரங்களுள் இந்திரனின் மிகப் பெரிய பலமாக விளங்கியது வஜ்ராயுதமாகும்.
அமர்ந்தவாறே செய்யக்கூடிய ஆசனங்களுள் ஒன்று வஜ்ராசனம். மிகுந்த சிரமப்பட்டுச்
செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும்.
அவற்றில் ஒன்றாக வஜ்ராசனத்தைக் கருதலாம். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் எந்த
நேரமும் செய்யக் கூடிய அதாவது சாப்பிட்ட பின்னரும் கூடச் செய்யக் கூடிய ஆசனம்
இதுவாகும்.
செய்யும் முறை
இந்த ஆசனத்தைச் செய்யக்கூடிய முறை பற்றி அகத்திய முனிவர் பின்வருமாறு
விளக்குகிறார்.
"சாரப்பா வஜ்ஜிர ஆசனத்தைக் கேளு
சங்கையுடன் பரடுமேல் பரடு போட்டு
சேரப்பா புட்டத்தில் கூடி கால் வைத்து
செம்மையுடன் தானிருக்கத் திறந்தானாமே."
இதனை வாசித்து விளங்காதவர்கள் ......
யாரப்பா அகத்தியன்? நீ
சொல்லப்பா விளங்குகிற மாதிரி.
என்று கேட்க நினைக்கக் கூடும்.
அதாவது இரண்டு கால்களிலும் முட்டி போட்டு அமர்ந்து, இரண்டு கால் பாதங்களின் மேற்பக்கமும்
தரையில் படுமாறு, இரண்டு காற் பெருவிரல்களும் ஒன்றையொன்று
பார்க்குமாறு வைத்துக் கொண்டு பின் பக்கங்களை குதிக்கால்களால் தாங்கியவாறு கைகளைத்
தொடையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்திலோ அல்லது சாதாரணமாகவோ
இருக்கலாம்.இதைச் செய்யும் போது முள்ளந்தண்டும் பார்வையும் நேராக இருத்தல்
வேண்டும்.
இதன் நன்மைகள்.
1.
தட்டையான
பாதங்கள் சரியான வடிவத்தைப் பெறும்.
2.
விரல்களில்
வலி, குதிகால்வலி, தசைச்சுளுக்குக்கு
அற்புதமான மருந்து.
3.
முழங்கால்
நெகிழ்வுதன்மையானதாகவும், அதே
சமயம் வலிமையானதாகவும் மாறும்.
4.
சமிபாட்டுக்கு
உதவி செய்யும்.
5.
மனோதிடம்
உண்டாகும்,
6.
உடலில்
தேங்கும் கழிவு நீரை வெளியேற்றும்.
7.
காலில்
நரம்பு சுருண்டிருந்தால் அது நீங்கும்.
8.
பிறப்பு
உறுப்புக்களுக்குக் கூடுதலான குருதி பாய்வதால் அவற்றிலுள்ள சில குறைபாடுகள்
நீங்குவதற்கான வாய்ப்புண்டு.
இது ஒரு மிகச் சாதாரணமான யோகாசனம் என்ற போதும் கூட
ஆண்கள்... அதுவும் இளம் வயதைத் தாண்டியவர்களுக்குச் சற்று சிரமமானதாகவே இருக்கும்.
பொதுவாகப் பெண்களுக்கு அப்படியல்ல. எங்கள் நடைமுறை வாழ்வில், மங்கள அமங்கல வைபவங்களின் போது ஆண்கள்
கதிரைகளில் அமர்ந்து சளசளத்துக் கொண்டிருப்பதையும் பெண்கள் வஜ்ராசனத்திலிருந்து சற்றே வேறுபட்டு
இரண்டு பாதங்களையும் ஏதாவது ஒரு பக்கமாக வைத்துக் கலகலத்துக் கொண்டிருப்பதையும்
காணலாம். “நாங்க ஆசனங்களில மட்டுமில்ல, வஜ்ராசனத்தில கூட
அமர்வோமில்ல” என்று முயற்சிக்கும் ஆண்களில் அனேகம் பேர் முறிவு, நெரிவு சிகிச்சைக்குப் போக வேண்டியிருக்கும். இதை வாசிக்கும் போது கூட
“இவன் கிடக்கிறான். நான் செய்து காட்டுகிறேன் பார்” என்று சிலருக்கு வெறியே வரக்
கூடும். இதனைச் சடாரெனச் செய்ய முயற்சித்தால் படாரெனக் கால் முறிந்து தடாரென
வைத்தியரிடம் போக வேண்டியிருக்கும்.
சரி, அப்படியாயின் இதனைச் செய்வதற்கு என்னதான்
வழி என்று நீங்கள் நினைக்கக் கூடும். கதிரையில் அமர்ந்து கொண்டே கூட இதற்கான
ஆரம்பப் பயிற்சியைச் செய்யலாம். கதிரையில் அமர்ந்து கொண்டே பாதத்தைச் சற்று
வளைத்து நகப்பக்கம் தரையில் படுமாறுகொஞ்சம் கொஞ்சமாக வளைத்து வந்தாலே சிறிது
காலத்தில் இந்த ஆசனம் கைகூடி வந்து விடும். ஆனால் அதற்காக வஜ்ராசனம் செய்கிறேன்
பேர்வழி என்று வைபவங்களில் பெண்களுடன் போய் இருந்து விடாதீர்கள். அதன் பின்பு
விழும் தர்ம, அதர்ம அடிகளில் இருந்து தப்புவதற்கு கைவசம்
ஆசனங்கள் எதுவுமில்லை. யோகாசனத்தை அப்படியே மெய்வல்லுனர் நிகழ்வாக மாற்றி நீளம்
பாய்தல், அகலம் பாய்தல், ஓடுதல், தடை தாண்டி ஓடுதல் ஆகியவற்றைச் செய்து தான் தப்பிக்க வேண்டி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக