செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நாஸ்கா வரைகோடுகள் கூறும் செய்தி என்ன?

                               நாஸ்கா வரைகோடுகள் கூறும் செய்தி என்ன?
பேரு நாட்டின் தென்பகுதியில் ஒரு காய்ந்த சமவெளிப்பிரதேசத்திற் காணப்படும்,1500 வருடங்களுக்கு முன் நாஸ்கா இந்தியர்களால் வரையப் பட்டிருக்க  வேண்டுமென நம்பப்படும்  நாஸ்கா வரை கோடுகள் வெளிப்படுத்தும் செய்தி என்ன என்று யாரும் அறியார்கள்.இந்தப் பிரதேசமானது பசுபிக் சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள பேரு நாட்டின் தென் பகுதியில் அந்தீஸ் மலைத்தொடரினருகே காணப்படுகின்றது.பயன்படுத்தப்படாத பரந்த அந்த நிலம் முழுவதுமே வித்தியாசமான கோடுகளாலும்,வளைவுகளாலும் ஆக்கப்பட்டுள்ள பறவைகள் ,மிருகங்கள்,பூச்சிகள்,ஊர்வன மற்றும் கேத்திர கணித உருவங்களால் நிரம்பியுள்ளது.சில நிபுணர்கள் இதனை உலகின் மிகப்பரிய வானசாஸ்திர நாட்காட்டி எனக் கருதுகிறார்கள்.இதன் அளவையும் வரையப்பட்டுள்ள பாணியையும் நோக்கும் போது கணிதத்தில் பிரியமுள்ள இராட்சதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.மனதை வியப்படையச் செய்யும் இந்த விடயத்திற்கான திருப்திகரமான விடை இன்னும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்படவில்லை.




 பறவையின் உருவம்




எத்தனையோ ஆராய்ச்சிகள் இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் உண்மையான காரணமெனத் தோன்றக் கூடிய எந்த விதமான விளக்கங்களும் அளிக்கப்படவில்லை.ஒரு புறத்தில் இவை உத்தேச அனுமானக்களுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  வழி வகுத்தன.சிலர் இவை வேற்றுக் கிரகவாசிகளால் வரையப்பட்டிருக்க வேண்டுமென்றும்,வேறு சிலர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பேருவியன் பாலைவனமானது வேறு நட்சத்திர மண்டலங்களிலிருந்து வருகை தரும் பறக்கும் வாகனங்களின் தளமாகவும் இருந்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.





குரங்கின் உருவம்




இதில் ஒரு வியத்தகு விடயம் என்னவெனில் அவற்றில் சில கோடுகள் 1000  அடிக்கு மேலிருந்து பார்த்தால் மட்டும் தான் பார்வைக்குப் புலனாகின.ஆக மொத்தத்தில் ஒரு விஞ்ஞானப் புனை கதைக்குரிய மிகப் பொருத்தமான கரு அங்கே காணப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 10,000 வருடங்களுக்கும் மேலாக, வருடத்திற்கு அரை மணித்தியாலம் மட்டுமே மழை பெறும் பிரதேசம் என்பதும்  ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். அதற்குத் தகுந்த காரணம் உண்டு.அப்பிரதேசத்தில் வீசும் குளிர்த்தன்மை நிரம்பிய காற்று,கடலில் குளிர் நீரின் ஈரப்பதனை உறிஞ்ச முடியாமை தான் அதற்குரிய காரணம்.இவ்வாறு அங்கே மழை வீழ்ச்சி மிகமிகக் குறைவாக இருப்பதினால் தான் அக்கோடுகள் இன்னும் பேணப்பட்டு வருகின்றன.பேரு பகுதியின் சரிவுகளிற் காணப்படும் அரிப்புப் போன்ற அம்சம் செவ்வாய்க் கிரகத்திலும் காணப்படுவது இன்னொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.





சிலந்தியின் உருவம்







இம்மர்மக் கோடுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது 1941இல் தான்.Long Island பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr.Paul Kosak என்பவர் விமானத்தில் பறந்து அச்சமவெளியை ஆராய்ந்து உலகிலேயே மிகப் பெரிய வானசாஸ்திரப் புத்தகம் என்று கருத்துத் தெரிவித்தார்..இவரால் ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சி ஜேர்மன் கணித மாமேதையும்,வானசாஸ்திரவியலாளரான Maria Reiche என்பாரால் தொடரப்பட்டது.அவர் இப்பிரதேசத்தில் காணப்பட்ட உருவங்களைச் சமாந்திரமாக,குறுக்குவெட்டாகக் காணப்படும் முக்கோணிகள்,நாற்கோணிகள் என வகைப்படுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியை மேற்கொண்டார்.தனது இடைவிடாத முயற்சியின் பலனாகப் பின்வரும் முடிவினை வெளிப்படுத்தினார்.இந்த உருவங்கள்,கோடுகள் என்பன தொன் கணக்கில் உள்ள சிறிய கற்களைக் கொண்டோ அல்லது கடும் நிறமுடைய கற்களை அகற்றி வெண்மையான தரையைத் தெரியும்படி செய்தோ  ஆக்கப் பட்டிருக்கின்றன.ஒவ்வொரு உருவங்களும்,கோடுகளும் மிகவும் துல்லியமான அளவு திட்டத்தின்படி வரையப்பட்டிருக்கின்றன.கம்பங்களை இணைத்தே கோடுகள் வரையப்பட்டிருப்பதும்,அந்தக் கம்பங்கள் இன்னும் அங்கே காணப்படுவதுடன் அவை கி.பி 500 க்கு முற்பட்டவையென்று கணிக்கப்பட்டிருப்பதும் ஒரு விசேட அம்சமாகும்.








நாயின் உருவம்










வேறு சில ஆராய்ச்சியாளர்கள் பரகாஸ் பிரதேசத்திலுள்ள நெக்ரோபொலிஸ் எனும் இடத்திற் காணப்பட்ட கல்லறையின் மர்மத்தோடு முடிச்சுப் போட முயற்சித்தார்கள்.பேரு பகுதியிற் காணப்பட்ட கம்பங்களின் காலப்பகுதியும் இக்கல்லறையின் காலப்பகுதியும் ஒத்துப் போனது தான் இதற்குரிய காரணம். நெக்ரோபொலிஸ் பிரதேசமானது கனவான்களினதும் சமயப் பெரியார்களினதும் புதைகுழிகளாகக் கருதப்பட்டிருந்தன.இக்கல்லறையில் 400 மம்மிகள் அதாவது பாடம் செய்யப்பட்ட உடல்கள் தனித்துவமாகத் தயாரிக்கப்பட்ட துணியினால் சுற்றப்பட்டிருந்தன.
பேரு பிரதேசத்தில் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் Paul Kosak ,Maria Reiche ஆகிய இருவரினதும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள்.நாஸ்கா வரைதல்கள் ஒரு பெரிய வானசாஸ்திர நாட்காட்டி என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.கடற் பறவையொன்று  பறக்கும் விதத்தைக் கொண்டு காலநிலையின் வித்தியாசமான  அறிகுறிகள்  இவ்வரைபடத்தில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.பேரு பிரதேசத்தில் வாழும் இந்தியர்கள் சில மிருகங்கள் மந்திர சக்தி வாய்ந்தவை என்று இன்னும் நம்புகிறார்கள்.அம்மந்திரசக்தி வாய்ந்த மிருகங்கள் இந்த நாஸ்கா வரைபடத்திற் காணப்படுவதாகவும்,இவ்வாறு காணப்படுபவை வானத்திலுள்ள சில நட்சத்திரத் தொகுதிகளோடு ஒத்திசைந்துள்ளன என்றும் தெரிவித்தார்கள்.நாஸ்கா வரைதல் தொடர்பாக மாயமந்திர சக்திகளும்,சமயரீதியான நம்பிக்கைகளும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து காணப்பட்டன.இப்பிரதேசங்கள் ஆட்கள் ஒன்று கூடுவதற்குரிய இடங்களாகப் பயன்படுத்தப்பட்டன என்றும்,வானசாஸ்திர அவதானிப்பு மையங்களாக உபயோகப்படுத்தப்பட்டன என்றும்,ஆவிகளின் நடமாட்ட மிக்க பிரதேசம் என்றும்,கடவுள்கள் வாழ்ந்த பிரதேசமென்றும் எத்தனையோ விதமான கதைகளும் யூகங்களும் நிலவி வருகின்ற போதிலும் எந்தவொன்றையும் உறுதியாக எடுத்தியம்புவதற்குரிய அடிப்படையான ஆதாரங்கள் இது வரை கிடைக்கவில்லை.
வேற்றுக் கிரகத்திலிருந்து வருகை தந்த,கடவுள்கள் என்று அக்கால மக்களால் பிழையாக விளங்கிக் கொள்ளபட்ட வேற்றுக் கிரகவாசிகளுக்கு பூமியில் என்னென்ன உயிரினங்கள் உண்டு என்று காட்டுவதற்காக மட்டுமன்றி விமானத் தளமாக அல்லது பறக்கும் கலங்களின் தளமாகவும் கூட இவ்வரைபடங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் ஒதுக்குவதற்கில்லை.ஆனால் நேரான ஒடுபாதையை உடைய தளத்திற்குப் பதிலாக இவ்வாறு குழப்பமான அமைப்பின் மூலம் எவ்வாறு சாத்தியமாகியிருக்கலாம் என்ற கேள்வியை ஒதுக்கி வைத்தோமானால் 37 மைல்கள் நீளமுடைய இப்பிரதேசம் ஒரே தடவையில் நிறைய விமானங்கள் அல்லது பறக்கும் கலங்கள் வருவதற்கும் போவதற்குமான மும்முரமான நடமாட்டமிக்க பகுதியாக விலங்கியிருக்கலாம் என்று கருத இடமுண்டு.ஆனாலும் அவற்றின் வருகை வரைகோடுகளில் எந்தப் பாதிப்பையும் உண்டாக்காதது எவ்வாறு என்ற கேள்விக்கு விடையில்லை.  
வானசாஸ்திரவியலாளரான Gerald S.Hawkins என்பவர் 1960ஆம் ஆண்டு பேரு பிரதேசத்தில் காணப்பட்ட நாஸ்கா வரைக்கொடுக்களை ஆராய்வதற்கு கணினியைப் பயன்படுத்தினார்.ஆனால் அதன் போது வெளிப்பட்ட முடிவானது இத்தனை வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களையெல்லாம் பொய்யாக்கின.நாஸ்காவின் கோடுகள் வானசாஸ்திர நாட்காட்டியைக் குறிக்கவில்லை என்று கணினி மூலம் நிரூபிக்கப்பட்டது.
புதைபொருள் ஆராய்ச்சியாளரான Christina Conlee  ஒரு அபூர்வ கண்டுபிடிப்பைச் அண்மையில் செய்திருந்தார்.அவர் கண்டு பிடித்தது ஒரு எலும்புக் கூட்டை.இதில் ஆச்சரியம் என்னவெனில் இது சடங்கு ரீதியாக உரிய மரியாதைகளுடன் புதைக்கப்பட்டிருந்தாலும் அக்காலத்திலும் சிரச்சேதத் தண்டனை இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு பயங்கரமான ஆதாரமாக இருந்தது.தலை இருக்கும் இடத்தில் தலைக்குப் பதிலாக களி மண்ணால் செய்யப்பட்ட ஒரு சாடி வைக்கப்பட்டு அதில் ஒரு தலை வரையப்பட்டிருந்தது.அந்தத் தலையிலிருந்து கிளைகளுடன் கூடிய மரமொன்றும் வரையப்பட்டிருந்தது.சிரச்சேதம் செய்யப்பட்டு மரியாதைகளுடன் புதைக்கப்பட்ட இந்த நபர் யார்,போரின் போது பிடிக்கப்பட்ட கைதியா,அல்லது நாட்டின் நலனுக்காகத் தன் தலையை இழக்கத் துணிந்தவனா,அந்த நபருக்கும் இந்தக் கோடுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா என்றெல்லாம் இன்னும் அறியப்படவில்லை.

சிரச்சேதம் செய்யப்பட்ட எலும்புக் கூட்டின் தோற்றமும்,தலைக்குப் பதிலாக வைக்கப்பட்டிருந்த சாடியும்

என்ன தான் இப்பிரதேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேல் மாற்றமுறாத பகுதி என்று பொதுவாகக் கருதப்பட்ட போதிலும் மாற்றமுறாத ஒன்றே ஒன்று மாற்றம் ஒன்று தான் என்ற தத்துவத்திற்கமைய பின்வரும் காரணிகள் இப்பிரதேசத்தின் மாற்றத்திற்கு அல்லது பாதிப்புகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
1.காற்று,மழை போன்ற காலநிலை மாற்றங்கள்.
2.புதையல் வேட்டையர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
3. தங்கம்,செம்பு போன்றவற்றுக்காக அகழப்படும் சுரங்கங்கள்.
4. கடந்த பத்தாண்டுகளுக்குள் விளம்பரதாரர்களும்,அரசியல் கட்சிகளும் தங்கள் நோக்கங்களுக்காக இப்பிரதேசத்தின் பாறைப்பகுதிகளையும் தரைப்பகுதிகளையும் பயன்படுத்தியமை.
5.1998 இல் ஏற்பட்ட வெள்ளமும் மண்சரிவும்.
6. சனத்தொகை அதிகரிப்பால் மின்னிணைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இப்பகுதியின் தரைப்பகுதி தோண்டப்படும் நடவடிக்கைகள்.
இவற்றின் காரணமாக ஒரு புராதன நாகரீகத்தின் மதிப்பு மிக்க அடையாளங்கள் அழிக்கப்படுவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பட்டிருக்கிறோம் என்று புதைபொருள் ஆர்வலர்கள் தெரிவித்தாலும் பேரு அரசாங்கம் அந்தக் கோடுகளைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கையாகச் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அவற்றின் மேல் நடக்கவோ,வாகனங்கள் செலுத்தவோ தடை செய்யப்பட்டுள்ளது.ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்களுக்கு விதி விலக்களிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகள் இக்கோடுகளைப் பார்ப்பதற்கு பாதையோரங்களில் உயரமான கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.         
       
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக