செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சுனாமி 2004


                                     சுனாமி 2004


                             
“டேய்,கோபாலா,என்ன காரியமடா செய்து போட்ட “ என்று ப்ரியாவின் தாய் பதறியவாறே பக்கத்து வீட்டிலிருந்து ஓடி வருவது தெரிந்தது. “நீ சும்மா இரு அக்கா.இவன் தான் ப்ரியாவ சைக்கிள்ல துரத்திக் கரைச்சல் கொடுக்கிறவன்.இவன ....”என்றவாறே என்னை மிதிக்கக் காலைத் தூக்கியதும் சுறுசுறுவென்று கோபம் தலைக்கேறியது.என்னை மிதிக்க வந்த காலைப் பிடித்து பாதத்தைப் பிடித்து திருகி அதே வேகத்தில் வலக் காலைத் தூக்கி அந்த முரட்டு  ஆசாமியின் மர்ம ஸ்தானத்தில் உதைக்க நினைத்து கணப் பொழுதில் மனம் மாறி அதற்குச் சற்றுக் கீழாக ஓங்கி ஒரு உதை விட்டேன். ஐயோ” என்ற படுபாவி என் மேல் தான் விழப் பார்த்தான்.வேகமாக என் உடலை நகர்த்திக் கொள்ள முயற்சித்த போதிலும் வலது கையை விலக்கிக் கொள்வதற்குள் கிட்டத்தட்ட 80 கிலோ அந்த சரீரம் அப்படியே என் கை மேல் விழுந்தது.மணிக்கட்டில்  மிகுந்த வலி ஏற்பட்டது.ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அந்த சரீரத்தை என் காலால் தள்ளிக் கொண்டு எழும்ப அதற்குள் ப்ரியாவின் தாயும் வந்து என் கையைப் பிடித்து “கோபித்துக் கொள்ளாதீங்கோ  ராசா.இவன் என் தம்பி தான்.கொஞ்ச நாளாய் யாரோ பெடியள் தன்னைச் சுத்தி வந்து தொந்திரவு  பண்ணுராங்கள் நேற்றுத் தான் என்னிடமும் இவனிடமும் சொன்னவ.இவன் குடிபோதையில உங்கள அப்படி நினைச்சுப் போட்டான் போல இருக்கு.” என்று என்னிடம் கூறியவாறே “கோபாலா,நீ முதல்ல எழும்பு.இந்தத் தம்பி எள்ளுருண்டை எடுக்க வந்திருக்குது.இது நல்ல தம்பி!” என்று என்னைச் சிபாரிசு செய்தாள். “ம்‌ம்,பார்க்கத் தெரியுது” என்றவாறே இடுப்பைப் பிடித்துக் கொண்டு‌  எழுந்த அவளின் மாமன் தலைவாசலில் உட்கார்ந்தான்.நான்  சைக்கிளைத் தூக்க முயற்சிக்க, வலது மணிக்கட்டில் ஏற்பட்டிருந்த வேதனை என்னைத் தூக்க விடவில்லை. அதைக் கவனித்து விட்டு ப்ரியாவின் தாய் சைக்கிளைத் தூக்கி நிறுத்தி விட்டு “கொஞ்சம் பொறுங்கோ தம்பி.எள்ளுருண்டையை எடுத்துக் கொண்டு வாறன்.” என்று சொல்லிக் கொண்டு ஓடினாள்.நம்பியார் எம்ஜியாரைப் பார்ப்பது போல  பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மாமனின் பார்வையை அலட்சியப்படுத்தியவாறே காசை எடுத்துத் தயாராக வைத்திருந்து .ப்ரியாவின் தாய்  கொண்டு வந்ததை வாங்கிக் கொண்டு காசைக் கொடுத்து விட்டு “கோபப்பட வேண்டாம் தம்பி”என்று சொன்னதற்கு லேசாகத் தலையாட்டி விட்டு உறுத்தும் கேள்வியோடு வீடு வந்து சேர்ந்தேன்.இவ்வளவு நடந்தும் ஏன் ப்ரியா வெளியில வரவேயில்ல? நிச்சயமாக அவள் வீட்டில் இருந்திருக்க மாட்டாள் என்று எனக்கு நானே சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.
அம்மாவிடம் எள்ளுருண்டையைக்கொண்டு போய்க் கொடுக்கும் பொது என் கையைக் கவனித்து விட்டாள்.என்னடா, மணிக்கட்டில வீங்கிக் கிடக்குது”என்றவாறே கையைப் பிடித்துத் தடவிப் பார்த்தாள். “சைக்கிளால விழுந்து போட்டன்.”என்று சொல்லிச் சமாளித்தவாறே கையை எடுக்க முயல அம்மா விடவில்லை.இழுத்துக் கொண்டு போய் சித்தாலேப தேய்த்து விட்டாள்.வலியில் மட்டுமல்ல அம்மாவின் அக்கறையிலும் கண்ணீர் வந்தது.        
அடுத்த நாள் காலை பத்து மணியிருக்கும். வாசலில் சைக்கிள் மணியடித்துச் சத்தம் கேட்க ,தபால்காரராக இருக்கும் என்று நினைத்து வெளியே வந்தேன்.வெளியே கண்ட காட்சி இது நிஜமா என்று என்னைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றியது.கையில் ஒரு குழந்தையுடன் ப்ரியா.தனது மாமாவுடன் சண்டை போட்டதற்காக  என்னை ஏசுவதற்கு வந்தாளோ என்ற எண்ணம் தான் முதலில் வந்தது.ஆனால் நீண்ட நாட்களாக அவள் முகத்தில் இல்லாத கனிவு மீண்டும் தெரிந்தது.வந்த காரணம் என்ன என்ற கேள்விக் குறியோடு அவளைப் பார்த்துக் கொண்டே “வாங்கோ....” என்று இழுத்தேன். “ஆன்டி இல்லையா?” என்று கேட்டதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. “அம்மாவத் தானே கேக்குறீங்கள்,அம்மா, மாமி வீட்டுக்குப் போயிருக்கிறா.பத்தரை போல வந்து விடுவன் எண்டு சொல்லிக் கொண்டு தான் போனவ.போய் ஒரு அரை மணித்தியாலத்தில வாங்களென்” என்றேன். “ “இல்ல,உங்களத் தான் பாக்க வந்தனான்.நேத்து நீங்க வந்த நேரம் நான் கம்ப்யூட்டர் கிளாசுக்கு நெல்லியடி போயிருந்தனான்.வீட்டில நடந்ததப் பத்தி அம்மா சொன்னவ.உங்கட வலக்கை நல்ல நோப்பட்டிருக்கும் எண்டும்  சொன்னவ” என்று சொன்னவறே நெருங்கி வந்து என் கையைக் கவனித்து விட்டாள். “ஐயோ,கை நல்ல வீங்கியிருக்குதே” என்று பதறியவாறே என் கையைத் தொட்டுப் பார்க்ககத்  தன் கையை நீட்டியவள் சட்டென மனதை மாற்றி கையில் வைத்திருந்த குழந்தையின் கையால் என் கையைத் தொட்டுத் தடவினாள்.இது யார் உங்கட பிள்ளையா?”என்று ஏதோ நினைவில் கேட்டு விட்டு ப்ரியாவின் “என்ன?”என்ற கேள்வியுடன் கூடிய  கோபமான பார்வையைப் பார்த்து விட்டு “கோபப்படாதீங்கோ,உங்கட சொந்தக்காரப் பிள்ளையோ எண்டு கேக்கிறதுக்கு மாறிக் கேட்டுட்டன்.” என்றேன். “கோபம் லேசாகத் தணிந்த பார்வையுடன் “ம்ம்,அண்ணாவின் மகள்-உங்களுக்குக் கை எப்படியிருக்கு?” என்றாள். “உங்களுக்கு அண்ணா இருக்கா?நீங்க உங்கட அம்மா அப்பாவுக்கு ஒரே  பிள்ளை தானே? என்று நான் மீண்டும் கேட்க “முதல்ல நான் கேட்டதுக்குப் பதிலச் சொல்லுங்கோ.பிறகு நான் என்ட குடும்ப விபரங்களச் சொல்லுறன்” என்று மீண்டும் கோபத்துடன் கேட்டாள்.இந்தக் கோபம் என் மீது உள்ள அக்கறையால் வந்தது என்று நினைக்கச் சந்தோஷமாக இருந்தது. “பெரிசா ஒண்டுமில்ல.கொஞ்சம் வீக்கம்.கொஞ்சம் நோ.சரி,இப்ப சொல்லுங்கோ.” என்றேன். “என்ட குடும்ப விஷயங்கள் உங்களுக்கு என்னத்துக்கு?” என்று ப்ரியா சிரித்தவாறே கேட்க என் மனதில் முள்ளொன்று சுருக்கென்று தைத்த  மாதிரி இருந்தது. “மன்னிச்சுக் கொள்ளுங்கோ.இனிக் கேக்க மாட்டன்.” கோபம் வார்த்தையாக வெளி வந்தது. “இப்ப ஏன் கோபப்படுறீங்கள்? கொஞ்ச நேரம் பிள்ளயப்  பிடியுங்கோ வாறன்” என்று சொல்லிக் கொண்டே நான் மறுப்பதற்குள் என் கையில் குழந்தையைத் தந்து விட்டு தனது சைக்கிளை நோக்கிப் போனாள்.சைக்கிளின் முன் கூடையிலிருந்து ஒரு Horlicks போத்தலை எடுத்துக் கொண்டு வந்தாள். “இதுக்குள் கொஞ்சம் முட்டை மா உங்களுக்காகச் செய்திருக்கிறன்” என்றவாறே விறாந்தையில் இருந்த மேசையில் போத்தலை வைத்தாள். “எனக்கு இதெல்லாம் செய்து தாறதுக்கு நீங்கள் யார்?” என்றேன் சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியில். “நான்.... நான்.....நீங்கள்” என்று ப்ரியா தடுமாறியவாறே ஏதோ சொல்ல முனைந்த போது வீடு வாசலில் சில சைக்கிள்கள் வந்து நிறுத்தப்பட்டு stand போடும் சத்தங்கள் கேட்டது. “டேய்,என்னடா நடந்தது உனக்கு?” என்று கேட்டவாறே வந்த விமலனின் தலைமையில் நாதன்,மகேஷ்,உதயன்,வினோத்,ரவி எல்லோரும் உள்ளே வந்தார்கள்.ப்ரியாவையும் என் கையில் குழந்தையையும் பார்த்து விட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததையும் கவனித்தேன். விமலன் என்னையும் குழந்தையையும் ப்ரியாவையும் மாறி மாறிப் பார்த்தவாறே “அடேய் கேசவா,நீ சொல்லவே இல்லையே என்றான்.ப்ரியா ஏதும் சொல்லுவாள் என்று நான் அவளைப் பார்க்க,அவள் முகம் சிவந்து கீழே பார்ப்பதைக் கண்டேன். “ இது ப்ரியாண்ட குழந்தை....இல்ல..இல்ல. ப்ரியாண்ட சொந்தக்காரக் குழந்தை...”என்று நான் தடுமாறி கொண்டிருக்க நல்ல வேளையாக அம்மா உள்ளே நுழைந்தாள்.
ப்ரியா,குழந்தை,இந்தக் கசுமாலங்கள் எல்லாரையும் ஒன்றாகக் கண்டு விட்டு அம்மா என்ன நினைக்கப் போகிறாளோ என்று நினைத்தவாறே “அம்மா” என்று நான் சொல்லத் தொடங்குவதற்குள் “வந்து கொஞ்சம் உங்கட பேரப் பிள்ளயப் பிடியுங்களன்.ரெண்டு பெரும் கொஞ்சம் ஆறுதலாக் கதைக்கவும் விட மாட்டுதாம்.....என்ன சரி தானே!அதத் தானே சொன்ன நினைச்சனீ”  என்ற உதயனைப் பிடித்து உதைக்கத் தோன்றியது. “இல்லையம்மா,இது எள்ளுருண்டை ஆன்டியிண்ட மகள்.அவண்ட அண்ணாண்ட குழந்தை ...என்ட கை நோ......ஹார்லிக்ஸ் போத்தல்...முட்டை மா” என்று நான் ஏகத்துக்கும் தடுமாற நிலைமையை ஓரளவு ஊகித்துக் கொண்ட அம்மா “ சரி,சரி,பிள்ள நீங்க உள்ள வாங்கோ” என்று பிரியாவை அழைத்தவாறே வீட்டுக்குள் நுழைந்தாள்.என்னிடம் குழந்தையை வாங்குவதற்கு வந்த ப்ரியா கை நீட்டியதும் அவளிடம் போக மறுத்த குழந்தை என்னைக் கட்டிக் கொண்டது. “என்ன செய்ய?அம்மாவ விட அப்பாவில தான் கூட விருப்பம்.” என்ற மகேஷை முறைத்தவாறே ப்ரியா குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“என்னடா?ரெண்டு பேரும் முறைச்சுக் கொண்டு திரிஞ்சீங்கள்.இப்ப குலாவுறீங்கள்?என்ன நடந்தது?”என்ற வினோத் அவளுக்கு ஒன்று விட்ட அண்ணன்.அவன் கேட்ட விதத்தில் அவள் மேல் உள்ள பாசம் காரணமாக எனக்கு ஒன்று விட்டாலும் விடுவான் போலிருந்தது. “நீ சொன்ன முதல் பாதி சரி தான்.ரெண்டாம் பாதி இன்னும் நடக்கேல்ல” என்ற எனது பதிலால் எனது நண்பர் பட்டாளம் திருப்தி அடைந்தது மாதிரித் தெரியவில்லை.“ இன்னும் நடக்கேல்ல எண்டா......இனிமேல தான் நடக்கப் போகுது எண்டு சொல்ரியோ?”என்ற மகேஷைப் பிடித்து மொத்தினால் என்ன என்ற எண்ணத்தை அடக்கிக் கொண்டு “நான் எங்க சொன்னனான்?நீ தான் சொல்லுற.” என்று அவனை மடக்க,ரவி “டேய்,நேற்று நான் நெல்லியடியால வர்ர வழியில ரெண்டு உடுப்பிட்டிப் பெடியங்கள் ப்ரியாவோட சேட்டை விட்டதப் பார்த்தனான்டா,அதில ஒருத்தன் பறக்கும் பருந்துகள் க்கு விளையாடுறவன்” என்றான். “பேரப் பார்.பறக்கும் பருந்துகளாம்.ஏண்டா..தாவும் குரங்குகள்,கனைக்கும் குதிரைகள்,கரையும் காக்கைகள் இப்படியெல்லாம் கூட கழகங்களுக்குப் பேர் வைப்பார்களா?”என்ற நாதன் விளையாட்டுக்குக் கூட விளையாட்டுக்கள் பக்கம் போகாதவன்.இன்னும் சிறிது நாட்களில் வெளியாகவிருக்கும் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் சாதிக்கப் போகிறவன் என்று எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளவன். “டேய்,நாளைக்கு 4 மணிக்கு பறக்கும் பருந்துகளோட match.ஞாபகம் இருக்குத் தானே.” என்ற விமலனனின் கேள்வியோடு பேச்சுத் திசை மாறி விட்டது என்று நான் சந்தோஷப்பட “அப்படியெண்டா,அங்க கேசவன் தன்ட வில்லனச் சந்திப்பான்.நீ அவன என்ன செய்யப் போற?” என்ற  என்னை நோக்கிய மகேஷின் கேள்வியோடு மீண்டும் பழைய கதைக்கே திரும்பி விட்ட எரிச்சலில் “நான் என்ன செய்யுறது,அடியாட்கள் நீங்கள் எல்லாம் இருக்கேக்குள்ள” என்றேன். “இந்த முறை  பறக்கும் பருந்துகள் கடுகை(அவனது உருவத்திற்காகக் கொடுக்கப்பட்ட அடைமொழி.)வடிவா mark பண்ணி விளையாட வேண்டும்.போன முறை வினோத் அவனுக்குப் பின்னால ஓடித்திரிஞ்சும் 3 goal போட்டவன் என்ற விமலனின் ஆதங்கத்தோடு மீண்டும் கதை திசை மாறியது.நாதன் மட்டும் முற்றத்தில் நின்ற பூக்கன்றுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மற்ற எல்லோரும் நாளை நடக்கவிருக்கும் match பற்றித் தான் வாயாலேயே goal அடித்துக் கொண்டிருந்தோம்.
கிட்டத்தட்ட ஒரு அரை மணித்தியாலத்தின் பின் ப்ரியா குழந்தையுடன் வெளியே வந்தாள்.அவளின் முகம் வாட்டமுற்று  இருப்பதைக் கவனித்தேன். “டேய்,கொஞ்சம் இருங்கோடா.ப்ரியாவ அனுப்பிட்டு வாறன்” என்று நான் சொல்லிக் கொண்டு வெளியே வர ஆ...ஆ” என்ற நண்பர்களின் சத்தத்தோடு “போகுதே போகுதே,என் பைங்கிளி வானிலே” என்ற மகேஷின் பாட்டுச் சத்தமும் கேட்டது.
“என்னை பாக்க வந்ததுக்கு thanks.உங்கட கோபால் மாமாவுக்கும் thanks சொல்லி விடுங்கோ” என்று நான் சொன்னதை ப்ரியா காதில் போட்ட மாதிரியே தெரியவில்லை..குழந்தையை முன் இருக்கையில் அமர்த்த அவள் சிறிது சிரமப்பட நான் உதவி செய்ய முனைய,என் உதவியையும் ஏற்றுக் கொள்ளவில்லை.என்னிடம் ஒன்றும் சொல்லாமலே புறப்பட்டாள்.
நான் உள்ளே வந்து நண்பர்களின் கதையில் உற்சாகமாகக் கலந்து கொள்ளாததைக் கவனித்து விட்டு வினோத் “என்னடா ஏதும்...” என்று ஆரம்பிக்க முன் விமலன் அவனைத் தடுத்து “கை நோவோட வேற இருக்கிற.வீட்டில ஓய்வா படுத்திரு.நாளைக்கு உண்ண பாக்க வாறம்.கை வீக்கமும் நோவும் குறைஞ்சிருந்தா நாளைக்கு விளையாடலாம்.என்ன..?”என்று சொல்லிக் கொள்ள எல்லோரும் எழுந்தார்கள்.அம்மா தேனீர் கொண்டு வர “என்ன Aunty,நாங்க இவனைப் பாக்க வரேக்குள்ள எல்லாம் நீங்க தேத்தண்ணி போடோணுமா?எங்கள அன்னியப்படுத்திற மாதிரி இருக்கு என்று  உதயன் உரிமையாகக் கடிந்து கொள்ள “Aunty,என்னடா தேத்தண்ணி ஒண்டும் வர்ற மாதிரித் தெரியெல்ல எண்டு சொல்லிக் கொண்டு தான் எழும்பினவன்.இவன நம்பாதீங்கோ” என்று மகேஷ் அவனைப் போட்டுக் கொடுக்க,ஒரே சிரிப்பும் கும்மாளமுமாயிருந்தது.
நண்பர்களை அனுப்பி விட்டு ஏதோ நினைவில் உள்ளே வந்த என்னை  “அவள் உன்னை விரும்புற மாதிரித் தெரியுது.அதெல்லாம் சரி வராது என்றதை நானும் சாடை மாடையாச் சொல்லிட்டன்” என்ற அம்மாவின் கண்டிப்பான குரல் நனவுலகத்திற்குக் கொண்டு வந்தது.
                                                                               (தொடரும்)

              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக