செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நிலாவறைக் கிணறு

                                                            நிலாவறைக் கிணறு
இந்த முறை வெளியீட்டில் நிலாவறைக் கிணறைத் தெரிந்தெடுத்த பின்,அதற்கான படத்தையும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் போது எடுத்த பின் சில இணையத் தளங்களுக்குப் போய் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன்.முக்கியமான எத்தனையோ விடயங்கள் இருக்க,அதையெல்லாம் விட்டு விட்டு அனுமான், இராமனின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பெய்து  உண்டாக்கிய பொய்கை என்றும்,இராமன், சீதையின் தாகத்தைத் தணிப்பதற்காக அம்பெய்து உண்டாக்கிய பொய்கை என்றும்,இராமன் தனது தாகத்தைத் தானே தணிப்பதற்காகத் தானே அம்பெய்து உண்டாக்கிய பொய்கை என்றும் ஆளாளுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.அதெல்லாம் இல்லை.தாடகை, லட்சுமணனுக்காக அம்பெய்து உண்டாக்கிய பொய்கை..இல்லை.அதுவும் இல்லை.(இவர்கள் எங்கே இலங்கை வந்தார்கள்  என்ற logic ஐ ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு) கர்ணன், துரியோதனனுக்காக “நன்பேன்டா “ என்று கூறியபடி அம்பெய்து உண்டாக்கிய பொய்கை என்றெல்லாம் சொன்னால் என்ன என்ற எண்ணம் தான் வந்தது.  
     யாழ்ப்பாணம்,பருத்தித்துறை நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியிலிருந்து  கிட்டத்தட்ட 3 km உள்ளே நவக்கிரி என்ற கிராமத்தில் தான் இந்தக் கிணறு உள்ளது.வடக்கே அச்சுவேலி;கிழக்கே புத்தூர்;தெற்கே யாழ்ப்பாணம்;மேற்கே புன்னாலைக்கட்டுவன் என்று திசை ரீதியாகக் குறிப்பிடலாம். இந்தக் கிணறு சதுரமாகக் கேணி போன்று  அமைந்திருப்பதும்,பார்ப்பதற்குப் பயத்தைத் தரக் கூடிய கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரையும் இதன் சிறப்புத் தன்மைகளாகக் கொள்ளலாம்.அதெல்லாவற்றையும் விட யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய இடங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதற்கும் ,தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கும் காரணமாக இருப்பது ஆழம் காணாத கிணறு என்ற பெயர் தான்.
     நிலத்தின் கீழ் இரகசியமாக அமைக்கப்படும் அறைக்கு நிலவறை என்று கூறுவார்கள்.இந்தக் கிணற்றின் கீழ்ப் பகுதி மூலம் வேறு எத்தனையோ இடங்கள் தொடர்பு படுவதால் இதற்கும் இந்தப் பெயர் உண்டானது என்றும் இந்தப் பெயர் மருவி கடைசியில் நிலாவறை என்ற பெயர் நிலைத்து விட்டது என்றும் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த ஒரு முதியவர் தெரிவித்தார்.இந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவரின் பிணம் கீரிமலைக் கேணியில் மிதந்தது என்ற கதையெல்லாம் தான் சிறுவனாக இருந்த போது கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.நிலாவறைக் கிணற்றின் மேற்பகுதியில் நல்ல தண்ணீராக இருந்தாலும் கூட சற்றுக் கீழே உப்பு நீராக இருப்பது இந்தக் கிணறு ஏதோ ஒரு இடத்தில் கடலுடன் சங்கமிக்கிறது என்பதற்கு ஆதாரம் என்று அவர் கூறிய போது “அட,இதை மட்டுமாவது உண்மையா அல்லது பொய்யா என்று அனுபவபூர்வமாக அறியலாமே” என்ற ஆவல் தோன்றினாலும் கூட கிணற்றைப் போய் பார்த்த போது வயிற்றிலிருந்து உருண்டு வந்து வாயை அடைத்த ஏதோவொன்று அப்படிச் செய்ய என்னை அனுமதிக்கவில்லை.உயிர் நண்பர்கள் எத்தனையோ பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் தானே.அவர்கள் வரும் போது வேண்டுமென்றால் அவர்களோடு வந்து குதித்துப் பார்க்கலாமென்று தோன்றியது.என்ன.....சில வேளைகளில் அவர்களுக்கு முன்னால் கொடுக்கப்பட்ட அடைமொழி தான் இல்லாமற் போய் விடும்.
         கோடை காலத்தில் நவக்கிரியைச் சுற்றியுள்ள எத்தனையோ கிராமங்களின் வயல்களுக்கும் நிலாவறைக் கிணற்றிலிருந்து தான் நீர் எடுக்கிறார்கள்  என்பதும் எவ்வளவு தான் எடுத்தாலும் இந்தக் கிணற்றின் நீர் வற்றுவதில்லை என்பதும் இதன்  பெருமைகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக