செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

சர்மா என்றால் சும்மாவா?

                                 சர்மா என்றால் சும்மாவா?
எனது தம்பி அந்த விடயத்தைச் சொன்ன போது நம்புவதற்குச் சிரமமாகத் தான் இருந்தது.இந்த வயதிலாவது,அரசாங்க வேலையாவது,தேடி வருவதாவது......இப்படி ஆவது,ஆவது என்றே தோன்றியது.சரி ஆவது ஆகட்டும் என்று நினைத்தவாறே தம்பி sms இல் அனுப்பிய அனுப்பி வைத்த கைத்தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.தொலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது.ஒருத்தரும் எடுக்கவில்லை.சரி தான்....ஞாயிறு வீரகேசரியில் பத்திரிகையில் போடப்பட்ட அப்பாவின் அந்தியேட்டியின் பின்னான நன்றி நவிலல் விளம்பரத்தைப் பார்த்து விட்டு அப்பாவைத் தெரிந்த,நீண்ட காலமாகத் தொடர்பில்  இல்லாத யாரோ ஆறுதல் கூறுவதற்காக அம்மாவைத் தொடர்பு கொண்டு,அப்படியே வாய் தடுமாறி ஏதோ சொல்லிருக்கக் கூடும்.கதைத்தவுடன் ன் கடமை முடிந்தது என்று பேசாமலிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.ஒருவாறு நிலைமையை ஊகித்திருப்பீர்கள்.என்றாலும் தெளிவாகச் சொல்கிறேனே.
அப்பாவின் மரணத்திற்காக வருகை தந்திருந்த மாமியையும்,அண்ணாவையும் பயணம் அனுப்புவதற்காகவும்,ஒரு நேர்முகத் தேர்வில் தோற்றுவதற்காகவும் கொழும்பு வந்திருந்தேன்.வந்த நாளன்றே நள்ளிரவில் பயணம் என்பதால் அன்றே  கொழும்பில் அண்ணா போக வேண்டிய நான்கு உறவினர் வீடுகளுக்கும் அழைத்துப் போய் வந்து மதிய உணவை பின்னேரம் ஆறு மணி போல் உட்கொண்டு விட்டு  அக்கடா என்று Aunty வீட்டில் ஆறியிருந்த போது தான் தம்பியின் தொலைபேசி அழைப்புக் கிடைத்தது.அப்பாவுடன் வேலை செய்த ஜெயச்சந்திர சர்மா என்றொருவர்  அம்மாவுடன் தொடர்பு கொண்டு கதைத்ததாகவும்,அம்மாவுக்கு ஆறுதல் கூறி முடிந்ததும்,உங்களுக்கு நன்றாகத் தெரிந்த யாரும் O.L,A.L எடுத்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார்களா?அப்பாவுக்காக அவர்களுக்கு நான்  அரசாங்க வேலை எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.அப்போது அம்மா என்னைப் பற்றியும், நேர்முகத் தேர்வில் தோற்றுவதற்காகக் கொழும்பு போயிருக்கிறேன் என்ற விடயத்தையும் கூறியதைத் தொடர்ந்து அவர் தனது கைத்தொலைபேசி இலக்கத்திற்கு என்னை எடுத்துக் கதைக்குமாறு கூறியிருக்கிறார்.இது தான் நடந்தது.
சற்று நேரத்தில் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புக் கிடைத்தது.நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.அவரும் தன்னை அப்பாவுடன் ஒன்றாக வேலை செய்ததாகவும் அப்பாவுடன் வேலை செய்த நாட்களில் கணக்காளராக இருந்ததாகவும்,இப்போது பொது நிர்வாக அமைச்சில் துணை இயக்குனராக இருப்பதாகவும் அப்பாவின் நல்ல மனதுக்காகவும் அப்பாவுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருப்பதால் எப்படியாவது எனக்கு வேலை எடுத்துத் தருவதாகவும் உறுதியளித்தார்.நானும் அவரது நல்ல எண்ணத்திற்கு நன்றி கூறி O.L,A.L எடுத்து விட்டு வேலையில்லாமல் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டிருக்கிறீர்கள்.ஆனால் நான் A.L எடுத்ததும் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆகியிருந்தால்(ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.) இப்போது அந்தக் குழந்தையும் A.L எடுத்திருக்கும்.அதனால் எனக்கு அந்த வேலை சாத்தியமாகுமா?” என்று கேட்டேன்.(இதை வாசிக்கும் எனது சக நண்பர்கள் கணக்குப் பார்த்து விட்டு அட, சரி தான்..ஆனா இதெல்லாம் தெரியப்படுத்தி ஏன் எங்களையும் வயதானவனாக்குகிறான்.பாவிப்பயல் என்று நினைக்கக் கூடும்)அவரும் சிரித்து விட்டு “சாத்தியம் தான்.Permanent என்றில்லாமல் casual என்ற வகையில்உங்களைச் சேர்ப்பார்கள்.Pension உதவுதொகைக்குத் தான் நீங்கள் தகுதி இல்லாமற் போவீர்கள்.மற்றபடி லீவுகள்,பதவி உயர்வு,சம்பள அதிகரிப்பு,வேலை விடும் போது லம்பாகக் கிடைக்கும் பெரியதொரு தொகை எல்லாவற்றுக்கும் நீங்கள் உரித்தாவீர்கள்” என்று கூறி விட்டு “உங்கள் மனைவி  ஏதும் வேலை செய்கிறாவா?” என்று கேட்டார். “குழந்தை கிடைக்கும் வரை சுய தொழிலாக மணப்பெண் அலங்காரம் செய்தவ. இப்போது பிள்ளையைப் பார்க்க வேண்டியிருப்பதால் வீட்டில் இருக்கிறா” என்று கூறினேன். “தேவையென்றால் உங்கள் மனைவிக்கும் கூட அரசாங்க வேலை ஒன்று எடுத்துத் தரலாம்” என்று அவர் கூற, “இல்லை வேண்டாம் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா.” என்று கூறினேன்.”பிள்ளையை உங்கள் மனைவியின் தாய் தகப்பனோ இடைக்கிடை உங்கள் அம்மாவோ பார்த்துக் கொள்ள மாட்டார்களா?எத்தனையோ இடங்களில் அப்படித் தானே நடக்கிறது.” என்று அவர் சொல்ல அதுவும் சரி தானே என்று தோன்றியது. “சரி ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் வரும் போது வேலையை விட வேண்டி வந்தால் பரவாயில்லையா?” என்று கேட்க “ஏன் அப்படியெல்லாம் நினைக்கிறீர்கள்?சரி,அப்படி வேலையை விட வேண்டி வந்தாலும் பரவாயில்லை.உங்கள் இருவரின் முழுப் பெயர்,பிறந்த திகதி,நிரந்தர விலாசம்,NIC Number எல்லாவற்றையும் எனக்கு sms இல் அனுப்பி வையுங்கள்.மிகுதி எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி வைத்து விட்டார்.
அவர் வைத்தவுடன் மீண்டும் ஒரு சந்தேகம். ஏதோ ஒரு சினிமாவில் “வேலை கொடு முருகா,வேலை கொடு முருகா” என்று விவேக் கேட்க முருகன் தோன்றி கையில் ஒரு வேலைக் கொடுப்பது போல் இவர் அரசாங்க வேலை என்று கூறி கையில் ஒரு தும்புக்கட்டையையோ,விளக்குமாற்றையோ கொடுத்து “இது தாண்டா வேலை” என்று சொல்லி விடுவாரோ என்று தோன்றியது.சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் முகமாக உடனே அவரைத் தொடர்பு கொண்டு “என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன்.அவரும் அதற்கு “பொது நிர்வாக அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அந்த வேலைக்குரிய சுற்று நிருபத்தை அனுப்பி வைத்தார்.தங்கள் வேலைகளைச் செய்து கொள்வதற்கு அரச அலுவலகங்களுக்கு வரும் முன்னனுபவமில்லாத பொது மக்களை சரியான முறையில் வழி நடத்தி அதாவது என்னென்ன படிவங்களை நிரப்ப வேண்டும்,எந்தெந்த அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அவர்களின் வேலையைச் செய்து முடிக்க முழு ஒத்துழைப்புக் கொடுப்பது தான் உங்கள் வேலையாக இருக்கும்.அலுவலகங்களில் ஏற்கனவே அந்த வேலையைச் செய்த போதிலும் தங்கள் வேலைக்கு மேலதிகமாகத் தான் அதனைச் செய்தார்கள்.இப்போது அதற்கெனவே ஆட்களை நியமிக்கவுள்ளோம்.பொது நிர்வாக அமைச்சர் சுற்று நிருபம் அனுப்பப்பட்ட  பின்னர் பொது நிர்வாக இயக்குனரையும் துணை இயக்குனரான என்னையும்  தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு உங்களுக்குத் தெரிந்த, தகுதியான யாரையும் நீங்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்.வட பகுதியில் 17 நியமனங்கள் செய்யப்படவுள்ளன.15 நியமனங்களுக்கு தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இன்று வீரகேசரியில் உங்கள் அப்பாவின் படத்தைப் பார்த்த போது தான் அப்பாவுக்காக இந்த உதவியைச் செய்யலாமென்று தோன்றியது.தகுதிகாண் காலத்தில் (probation period) உங்கள் சம்பளம் 21, 22 அளவு வரும். அதன் பின் 28, 29க்கு மேல் கிடைக்கும்.” என்று தெளிவாகச் சொல்லி முடித்தார்.இவ்வளவு விளக்கமாக அவர் சொன்னது எனக்கும் நல்ல திருப்தியாக இருந்தது.இருந்தாலும் “இன்றிரவு  யோசித்து நாளை காலை உங்களுக்கு முடிவு சொல்கிறேன்” என்று கூறினேன்.
அவருடன் கதைத்த விடயத்தை Aunty,சித்தப்பா,அண்ணாவிடமும் சொல்ல அவர்களுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.அண்ணாவும் “தீமையான ஒரு சம்பவதைத் தொடர்ந்து நன்மையான சம்பவம் நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்” என்று கூறினார்.வீரகேசரியில் அந்த விளம்பரத்தைப் பிரசுரித்தது சித்தப்பாவும்,Aunty யும் தான்.தாங்கள் பிரசுரித்த விளம்பரத்தின் மூலம் எனக்கு அரசாங்க வேலைக்கான சந்தர்ப்பம் கிடைத்ததில் என்னை விட அவர்களுக்குத் தான் அதிக மகிழ்ச்சியென்று சொல்ல வேண்டும். “இந்த வேலைஉங்களுக்குக்  கிடைத்தால் அதற்கான புண்ணியம் எங்களைத்தான் வந்து சேரும்” என்று  Aunty சொல்ல நான் “நிச்சயமாக” என்று சொன்னேன்.மனதுக்குள் S.P. பாலசுப்ரமணியம் வந்து “வேலை மீது வேலை வந்து என்னைச் சேரும்.அதை வாங்கித் தந்த புண்ணியம் எல்லாம் உங்களைச் சேரும்”என்று பாடினார்.
ஜெயச்சந்திர சர்மாவுடன் கதைத்த விடயத்தை அம்மாவுடனும்,மனைவியுடனும் விளக்கமாகக் கதைத்தேன்.அவரை ஞாபகமிருக்கிறதா என்று அம்மாவிடம் கேட்க “ஞாபகமில்லை,கல்முனையில் தான் ஒன்றாக வேலை செய்திருக்க வேண்டும்”என்று அம்மா சொல்ல “இவ்வளவு காலம் தொடர்பே இல்லாமல் அப்பாவை ஞாபகம் வைத்திருப்பதே பெரிய விடயம்” என்று நான் சொன்னேன்..மனைவியுடன் இருவரும் வேலைக்குப் போவது பற்றிக் கதைத்த போது “சின்னவளைச் சமாளிக்கலாமா?” என்ற கேள்வி வர “பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்ப்போம்.சமாளிக்க முடியாமற் போனால் வேலையை விடுவதாக அவரிடம் சொல்லியிருக்கிறேன் தானே” என்று சொன்னேன்.
அதன் பின் அண்ணாவை அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் அனுப்ப சித்தப்பாவுடனும்,தம்பியுடனும்(ஒன்று விட்ட) போன போது கூட எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பற்றித் தான் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. பார்வையாளரை அனுமதிக்காத பகுதியினுள் அண்ணா விடை பெற்றுக் கொண்டு போய் ,பின்னர் திரும்பி வந்து அனுமதிக்கப்பட்ட சுமையை விட அதிகமாக இருப்பதாகக் கூறி ஒரு பயணப்பையை அப்படியே தந்து விட்டுப் போன போது கூட எனக்குக் கிடைக்கவிருக்கும் நியமனம் போல் இந்த விமானநிலையத்திலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்தப் பயணப்பையை வேறு எந்த விதமாகக் கொண்டு போகலாம் என்று அறிவுறுத்தியிருப்பார்கள் என்று தான் தோன்றியது.
அடுத்த நாள் காலை அரசசார்பற்ற நிறுவனமொன்றின் நேர்முகத் தேர்வுக்கும் தோற்றினேன்.திடீரென்று கிடைத்த ஒரு சந்தர்ப்பதிற்காக,எனது சுய விபரங்களை அனுப்பி அதன் பின் கிடைத்த இந்த வாய்ப்பைத் தவற விட விரும்பாதது தான் காரணம்.எனது முன் அனுபவத்தைப் பற்றியே கேள்விகள் அமைந்ததால் நேர்முகத் தேர்வும் திருப்தியாகவே அமைந்தது. அதன் பின் அடிப்படைக் கணனி அறிவு பற்றியும் ஒரு செய்முறைப் பரீட்சை வைக்கப்பட்டது.அதுவும் மிக இலகுவாகவே இருந்தது.நிறுவனத்தின் பொறுப்பதிகாரியும்,மனித வள முகாமையாளரும் தங்களை ஏதும் கேட்க வேண்டியிருக்கிறதா என்று கேட்க,நான் அந்த நிறுவனத்தின் வேலைத்திட்டம் பற்றியும்,இதன் காலப்பகுதி பற்றியும்,அதற்கு நிதியுதவி செய்யவிருக்கும் அமைப்புப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன்.வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களா என்று மீண்டும் கேட்க, "செய்ததைப் பற்றி நான் சொன்னேன்.செய்ய வேண்டியதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்று புத்திசாலித்தனமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாகச் சொல்லி வைத்தேன். "இப்போது ஒன்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.என்றாலும் இந்த நியமனத்திற்காகக் கருத்தில் கொள்ளபப்படுவோரில் உங்கள் பெயரும் இருக்கும்.இன்னும் சிலருக்கு நேர்முகத் தேர்வு நடத்தவேண்டியிருக்கிறது.அதோடு வேலைத்திட்டம் ஆரம்பமாவதற்கும் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கிறது தானே.நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் சிறிது நாட்களில் உங்களுக்கு அறிவிப்போம்” என்றார்கள். 
நான் வெளியில் வந்ததும் செய்த முதல் விடயம் ஏற்கனவே அடித்துத் தயாராக வைத்திருந்த எங்கள் இருவரினதும் விபரங்களை ஜெயச்சந்திர சர்மாவுக்கு  sms இல் அனுப்பியது தான்.அனுப்பி விட்டு அவரைத் தொடர்பு கொண்டு எனது சம்மதத்தைத் தெரிவித்து விட்டு எந்த மாதிரியான அலுவலகங்களில் வேலை கிடைக்கும் என்றும் வினாவினேன்.அதற்கு அவர் “கச்சேரி,பிரதேச செயலகம்,பிரதம தபாற்கந்தோர்,அரச  வங்கிகள் என்று நிறையத் தெரிவுகள் இருந்தாலும் கூட கடைசியாக இப்போது மிஞ்சியிருக்கும்  இரண்டு நியமனங்களும் பிரதேச செயலகத்திற்குத் தான் இருக்கின்றன.உங்களுக்கு அண்மையில் இருக்கும் பிரதேச செயலகம் எது?” என்று கேட்டார். “பருத்தித்துறை பிரதேச செயலகம்” என்று கூறினேன்.உங்களுக்கு முகாமையாளர் தரத்தில் பணி புரிந்த அனுபவம் இருக்கிறதா? என்று மீண்டும் ஒரு கேள்வி. “உள்ளூர் விமான சேவை நிறுவனமொன்றில் நிர்வாக முகாமையாளராகவும்,பத்திரிகை நிறுவனமொன்றில் விளம்பரப் பகுதியின் நிறைவேற்று அதிகாரியாகவும்,மொழிக்கற்கை நிறுவனமொன்றில் இணைப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறேன்” என்றும் கூற “அப்படியாயின் கவலைப்படத் தேவையில்லை.நான் ஆக வேண்டியதைக் கவனித்து விட்டு பின்னேரம் தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்.
அதன் பின்னர் மத்தியானத்திலிருந்து பின்னேரம் வரை வெள்ளவத்தையில் நிறைய இடங்களில் திரிந்து courier service செய்யும் நிறுவனங்களின் கட்டண விபரங்களை அறிந்து, குறைவாகக் கட்டணம் அறவிடப்படும் நிறுவனத்தின் மூலம் அண்ணா விட்டு விட்டுப் போன பயணப் பொதியை அவுஸ்திரேலியா அனுப்புவதற்கு ஒப்படைத்து விட்டு 141 இலக்கப் பேரூந்தில் ஏறும் போது 7 மணியிருக்கும்.ஜெயச்சந்திர சர்மாவைத் தொடர்பு கொள்வோமா என்று நினைத்த மாத்திரத்தில் அறிமுகம் இல்லாத கைத்தொலைபேசி இலக்கமொன்றிலிருந்து ஒரு அழைப்புக் கிடைத்தது.அது அவர் தான்.நான் சற்றே யோசிக்க “ அலுவலகத்தில் எனது கைத்தொலைபேசியை விட்டு விட்டு வந்து விட்டேன்.பிறகு அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு வேறொருவர் மூலம் உங்கள் கைத்தொலைபேசி இலக்கத்தை எடுத்துத் தான் இப்போது கதைக்கிறேன்.எல்லாம் வெற்றியாக முடிந்து விட்டது. இருவருக்கான நியமனக் கடிதங்களும்  தயாராகி விட்டன.பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் தான் இருவருக்கும் வேலை.நீங்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டிய இடம் பருத்தித்துறை பிரதேச செயலகமாக இருந்தாலும் வெறும் சில அரச அலுவலகங்களுக்குப் போய் உங்களுடன் நியமிக்கப்பட்ட ஏனையவர்கள் தங்கள் கடமைகளைச் சரி வரச் செய்கிறார்களா என்று கண்காணித்து அவர்களுக்கிடையில் தொடர்புகளைப் பேணும் ஒரு இணைப்பாளராக நீங்கள் செயற்படுவீர்கள்.மற்ற விடயங்கள் சிரமமில்லாது போனாலும் கூட உங்களுக்கு இணைப்பாளர் பதவியை எடுப்பதற்குத் தான் நிறையப் பேரைச் சமாளிக்க வேண்டியிருந்தது. 6 மாத தகுதிகாண் காலத்தின் பின் இருவரது நியமனங்களும் நிரந்தரம் ஆக்கப்படும்.அதனால் 25 வருடங்கள் பணி புரிந்தால் இருவரும் ஓய்வூதியத்திற்கு உரித்துடையவராவீர்கள்.தை மாதம் 25ம் திகதியிலிருந்து உங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.ஒரு வாரம் யாழ்ப்பாணம் கச்சேரியில் உங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு நீங்கள் தயார்ப்படுத்தப்படுவீர்கள்.மாசி மாதம் 1ம் திகதியிலிருந்து உங்கள் பணியை ஆரம்பிப்பீர்கள்.நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உங்கள் மனைவியை வரச் சொல்லி அலைக்கழிக்க விருப்பமில்லாததால் சுகவீனமாக இருப்பதாகக் கூறி ஒரு மருத்துவரிடம் கடிதம் வாங்கி வைத்துள்ளேன். நாளை காலை 9 மணிக்குப் பின் எனது தொலைபேசி அழைப்புக் கிடைத்ததும் உடனே புறப்பட்டு பத்தரமுல்லையிலுள்ள செத்சிரிபாயவுக்கு(நிறைய அரச அலுவலகங்கள் தொகுதியாக அமைந்திருக்கும் ஒரு இடம்) வாருங்கள்.உங்களைத் தவிர நெல்லியடியிலிருந்து இரண்டு பெண்களும்,பருத்தித்துறை,கரவெட்டி,மந்திகையிலிருந்து 3 ஆண்களும் கூட நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்ள வரவென்றிருக்கிறார்கள்.உங்கள் எல்லோரையும் ஒன்றாக ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்வித்து,மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் செத்சிரிபாயவுக்குத் திரும்பி வந்து நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் வரை எனக்குத் தூக்கம் வராது. முடியுமான வரை சீக்கிரமாக உங்கள் எல்லோரையும் அனுப்ப முயற்சிப்பேன்.என்றாலும் கூட அரச அலுவலகங்களின் தாமதம் பற்றித் தெரியும் தானே.அப்படி,இப்படியென்று எப்படியும் 6 மணியாகிவிடும் என்று தான் நினைக்கிறேன்.இப்போதே மனைவிக்குத் தகவல் சொல்லி மனைவியின் கல்வி மற்றும் தகமைச் சான்றிதழ்களை fax மூலமாகவோ அல்லது scan செய்து உங்கள் e.mail மூலமாகவோ எடுப்பிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.அவற்றையும் உங்கள் சான்றிதழ்களின் பிரதிகளையும் நாளை என்னைச் சந்திக்க வரும் போது மறக்காமல் எடுத்து வாருங்கள். நீங்கள் உங்கள் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக உங்கள் மனைவியின் மருத்துவச் சான்றிதழை அனுப்பி வையுங்கள். உங்கள் மனைவியின் நியமனக் கடிதம் தயாரிப்பதற்கும் சிறிது risk எடுக்க வேண்டியிருந்தது.என்றாலும் கூட அதனையும் சமாளித்து விட்டேன்.சரி, ஏனையவர்களுக்கும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. ” என்று S.P.பாலசுப்ரமணியம் “மண்ணில் இந்தக் காதலன்றி” பாடலின் சரணத்தைப் பாடியது போல் சொல்லி முடித்து அவர் சொன்னதைக் கிரகித்து நன்றி சொல்வதற்கு முன்னரே தொடர்பைத் துண்டித்து விட்டார்.
சிறிது நேரத்தில் நாராம்பிட்டி வந்து விட்டது.அவரின் கதையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்ததால் நடத்துனருக்குக் காசு கோடுத்தேனா என்பது கூட ஞாபகமில்லை.அவசரப்பட்டு இறங்காமல் இருக்கையில் அமர்ந்தவாறே அவர் சொன்னது முழுவதையும் கிரகிக்க முயன்றேன்.என் மனதிலுள்ள tape recorder ஐ நிறுத்தி rewind  பண்ணி  மீண்டும் on பண்ணி அவர் சொன்னதை மனதில் பதித்துக் கொண்டேன்.(டேய்,நீ ஒரு tube light என்பதை எவ்வளவு கௌரவமாகச் சொல்கிறாய் என்று மனசாட்சி சொல்கிறது) கிரகித்ததன் பின் வியப்பும் அவர் மேலுள்ள மரியாதையும் அதிகரித்தது.முப்பது வருடங்களுக்கு முன் சந்தித்துப் பழகிய நபரின் மேலுள்ள மதிப்பின் காரணமாக அவரின் மகனுக்கு இவ்வளவு உதவி செய்யும் நல்லவர்கள் இந்தக் காலத்தில் இருப்பார்களா என்று மனதில் எழுந்த கேள்விக்கு அது தான் இருக்கிறாரே ஜெயச்சந்திர சர்மா.....எப்படிப்பட்ட ஒரு மனிதன்...சர்மா என்றால் சும்மாவா என்று எதுகையோ மோனையோ ...ஏதோ ஒன்று தோன்றியது.
அதன் பின் Aunty  வீட்டுக்குப் போனது,அவர் என்னுடன் கதைத்த விடயத்தை முதலில்  Aunty,சித்தப்பாவுக்கும் ,பின்பு அம்மாவுக்கும், பின்பு மனைவிக்கும் சொன்னது,மனைவி தனது சான்றிதழ்களை ஒரு தம்பியிடம் கொடுத்து விட்டது,இன்னொரு தம்பி அவற்றைக் கொண்டு ஊரிலுள்ள net cafe எல்லாம் திரிந்து அவை பூட்டப்பட்டிருந்ததால் net cafe நடத்தும் ஒருவரிடம் அவசரத் தேவை பற்றிச் சொல்ல அவர் ராவோடு ராவாக அவற்றை scan பண்ணி அனுப்ப ஒப்புக் கொண்டது பற்றியெல்லாம் விரிவாகச் சொன்னால் இவன் ராவு ராவென்று ராவுகிறானே என்று நினைப்பீர்கள்.அதனால் அன்றைய நாளுக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி.
அடுத்த நாள் காலை Aunty யின் அனுமதியோடு தம்பியின் கணனியை இயக்கி எனது மின்னஞ்சலைப் பார்த்து, வந்திருந்த சான்றிதழ்களை அச்சடித்து எடுத்துக் கொண்டேன்.காலையுணவை முடித்துக் கொண்டு,Aunty யின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு கிளம்ப,மனைவியின் அழைப்புக் கிடைத்தது.எல்லாம் நன்றாக நடந்தால் சந்தோஷம் தான் ஆனால்,ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள் என்பதால் கவனமாக இருக்கவும் என்ற செய்தியை எனது மைத்துனன் மனைவி மூலம் தெரிவித்திருந்தார்.. “நானும் அந்தக் கோணத்தில் யோசித்துப் பார்த்தேன் தான். ஆனால் காசைப் பற்றி இன்னும் அவர் கதைக்கவில்லை தானே” என்று கூறி விட்டுக் கிளம்பினேன்.நாராம்பிட்டி சந்தியில் ஒரு தொலைத்தொடர்பு நிலையமொன்றில் எனது சான்றிதழ்களின் பிரதியெடுத்துக் கொண்டிருந்த போது சர்மாவின் அழைப்பு வந்தது.நான் அரசாங்க ஊழியன் ஆவதற்குரிய அச்சாரம் தானிந்த அழைப்பா என்று கவிதைத்தனமாக நினைத்துக் கொண்டு அழைப்பை எடுத்தேன். “சான்றிதழ்கள் எல்லாம் தயாரா?”என்று என்று அவர் கேட்டதற்கு “இதோ இன்னும் 5 நிமிடங்களில்  தயாராகி விடும்” என்று கூறினேன்.”ஆ,இன்னுமொன்று சொல்ல வேண்டும்.உங்கள் இருவரின் மருத்துவச்  சான்றிதழ்கள் செலவுகளுக்காகவும் அலுவலகச் செலவுகளுக்காகவும் ஒரு ஆளுக்கு 3,000 ரூபா வீதம் இருவருக்குமாக 6,000 ரூபா நீங்கள் செலுத்த வேண்டியுள்ளது” என்று கூறினார். “அதற்கென்ன Uncle உங்களைச் சந்திக்கும் போது அதைத் தந்து விடுகிறேனே” என்று கூறினேன்.அதற்கு அவர் “இல்லையில்லை.நான் சொல்லும் பொது  நிர்வாக அமைச்சுக்குரிய   Seylan வங்கிக் கணக்கிலக்கத்திற்கு தனித்தனியாக 3,000 ரூபா வீதம் 6,000 செலுத்தி அதற்கான வைப்புத் துண்டினைக் காட்டினால் தான் உங்களுக்கான நியமனக்கடிதம் வழங்கப்படும்.” என்று கூறினார். “அதற்கென்ன செத்சிரிபாயவில் உங்களைச் சந்தித்து விட்டு பின்பு அருகிலுள்ள வங்கியில் பணத்தை வைப்புச் செய்கிறேனே.” என்று நான் சொல்ல அவர் அதை மறுத்து “இங்கிருந்து 103 இலக்கப் பேரூந்து எடுத்து,பொரளைக்குப் போய் அங்கிருக்கும் Seylan வங்கியில் பணத்தைச் செலுத்தி விட்டு அதன் பின் என்னைத் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விடயத்தை அறிவித்து விட்டுத் தான் பொரளையிலிருந்து 171 இலக்கப் பேரூந்தினை எடுக்க வேண்டும்” என்று சொன்னதும் யாரோ மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தார்கள்.சாதாரண மணியல்ல.அபாய மணி.அதற்கென்ன Uncle அப்படியே செய்து விட்டாற் போகிறது.வங்கி இலக்கத்தைக் கூறுங்கள்” என்று சொல்லி,பணம் செலுத்த வேண்டிய வங்கி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு தொடர்பைத் துண்டித்தேன்.சர்மா நேர்மையானவரோ இல்லையோ,அவரைச் சந்திக்கும் முன் பணத்தைச் செலுத்துவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன்.நேர்மையானவராக இருந்து விட்டால் மன்னிப்புக் கேட்டு விட்டாற் போகிறது என்றும் நினைத்துக் கொண்டேன்.என்றாலும் கூட எனது முடிவில் முழுத்திருப்தி ஏற்படாமல் அம்மாவையும்,மனைவியையும் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்ட போது  அவர்களுக்கும் அதையே தான் சொன்னார்கள்.
135 இலக்கப் பேரூந்தில் பொரளைக்குப் போனேன்.,பின்பு பொரளை அரசமரச் சந்தியிலிருந்து 171 இலக்கப் பேரூந்தில்  பத்தரமுல்லைக்குப் புறப்பட்டேன்.அரை மணித்தியாலத்திற்குள் செத்சிரிபாய வந்து விட்டது.முன்பு அந்தப் பக்கம் போன ஞாபகம் இல்லையென்றாலும் கூட “செத்சிரிபாய எல்லாம் இறங்குங்கள்” என்று நடத்துனர் சொன்னதால் இடத்தைக் கண்டுபிடிக்கும் சிரமம் ஏற்படவில்லை.
அரசாங்க அலுவலகங்கள்,திணைக்களங்கள்,கூட்டுத்தாபனங்கள் என்பன ஒரு தொகுதியாக ஒரே இடத்தில் அமைந்திருக்கும் இடம் தான் செத்சிரிபாய..எத்தனை மாடிக் கட்டிடம் என்று நான் இருந்த மனநிலையில் எண்ணிப் பார்க்கவில்லை.சாதாரணமாக உள்ளே போனேனா ,வெளியே வந்தேனா என்று முடியாது.யாரைச் சந்திக்கப் போகிறேன் ஏன் சந்திக்கப் போகிறேன் என்ற விபரங்களை ஒரு படிவத்தில் நிரப்பி,அந்தப் படிவத்துடன் அடையாள அட்டையைக் கொடுத்து பார்வையாளர் அனுமதி அட்டையைப் பெற்றுக்கொண்டு தான் போக வேண்டும்....போனேன்.
கட்டிடத்திற்குள் நுழையும் போதே சர்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது,”இதோ உங்கள் இடத்திற்கே வந்து விட்டேன்.நீங்கள் எத்தனையாவது மாடியில் எங்கே இருக்கிறீர்கள்?” என்று நான் கேட்டதும் “என்ன?” என்ற அவரது குரலில் திடுக்கிடல் தெரிந்தது.பின்பு சமாளித்துக் கொண்டு தொடர்ந்து “என்ன,பணம் வைப்புச் செய்து  விட்டீர்களா?”என்று கேட்டார்.நானும் சொல்வதற்குத் தயாராக வைத்திருந்த பொய்யை எடுத்து விட்டேன். “இல்லை.எனது நண்பன் ஒருத்தனை வழியில் கண்டேன்.அவனுக்கும் செத்சிரிபாயவில் அலுவல் இருந்ததால் அவனோடு வந்து விட்டேன்.உங்களைச் சந்தித்து விட்டு வெளியே வந்து பணத்தை வைப்புச் செய்கிறேன்.” என்று சொன்னேன். “அதெல்லாம் முடியாது.உங்களுக்காக எவ்வளவு risk எடுத்து வேலை எல்லாம் செய்திருக்கிறேன்.நீங்கள் என்னவென்றால் நான் சொல்வதைக் கேளாமல் உங்கள் மனம் போன போக்கில் வந்திருக்கிறீர்கள்.என்னவென்றாலும் செய்து கொள்ளுங்கள்.”என்று ஆத்திரத்துடன் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இப்போதும் கூட ஆள் போக்கிரியா அல்லது நேர்மையானவரா என்று என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.சரி,ஆளை விசாரித்துப் பார்ப்போம் என்று அங்கே receptionist ஆகக் கடமையாற்றும் 3 பெண்கள்,மற்றும் அங்கே இருந்த காவலாளிகள் எல்லோரிடமும் விசாரித்துப் பார்த்தேன்.இந்த இடத்தில் பொது நிர்வாக அமைச்சுக்குரிய அலுவலகம் ஒன்றும் இல்லை என்பதே அவர்களின் பதிலாக இருந்தது.ஜெயச்சந்திர சர்மா என்ற பெயரும் அவர்களுக்குப் பரிச்சயமானதாக இல்லை.கிட்டத்தட்ட  இந்தக் கதையின் climax  விட்டது என்ற நிலையில் மீண்டும் அவரின் அழைப்பு வந்தது.சாயம் வெளுத்து விட்ட நிலையிலும் அவர் பாட்டுக்கு வெளுத்து வாங்கினார். “பழைய நண்பன் ஒருவனின் மகனை,வேலை தருவதாக அழைத்து விட்டு வெறுங்கையோடு அனுப்ப மனமில்லை.நான் சொல்வதைக் கேளாமல் நீங்கள் நடந்து கொண்டதால் கோபம் வந்து விட்டது.மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்.இனி என்ன செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அவர் கேட்க “உங்களைப் பற்றித் தான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.ஒருத்தருக்கும் உங்களைத் தெரியவில்லை” என்று பதிலளித்தேன். “அப்படியா?நான் இப்போது செத்சிரிபாயவில் இல்லை.நீங்கள் வரத் தாமதமாகியதால் ஏனையவர்களை  ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு ஒரு van இல் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன்” என்று சமாளிப்பதற்குக் கூட ஒரு தனித் திறமை வேண்டும் தான்.அது அவரிடம் இருந்தது. “தாமதமா?நீங்கக் சொன்ன நேரத்திற்கு முன்பே அல்லவா வந்து விட்டேன்?இன்னும் எத்தனை பொய்கள் தான் என்னிடம் சொல்வதாக இருக்கிறீர்கள்? என்று நான் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அழைப்புத் துண்டிக்கப்பட்டது.துண்டிக்கப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் அழைப்பு வந்தது.இந்த முறை என்ன புளுகு மூட்டையை அவிழ்த்து விடப் போகிராரோ என்று நினைத்தவாறே  அழைப்பை எடுக்க ......அது எனது தம்பி.நடந்ததைச் சுருக்கமாகக் கூறி விட்டு மீண்டும் பொரளைக்குக் கிளம்பினேன்.
Seylan வங்கியைத் தேடிக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தேன்.Counter இல் மணியாக நின்ற பெண்ணிடம்(கவுண்ட்டர் மணி?) “பொது நிர்வாக அமைச்சுக்கு ஒரு வைப்புச் செய்ய  வேண்டியிருக்கிறது.நான் சொல்லும் இலக்கம் இந்த அமைச்சுக்குரியதா என்று தயவு செய்து சொல்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஏன் இல்லாமல்..நிச்சயமாக” என்று சொன்னதும் இலக்கத்தைச் சொன்னேன்.கணனியில் அந்த இலக்கத்தை அடித்துப் பார்த்து விட்டு “இல்லையே.இது சுந்தரமூர்த்தி என்ற தனிப்பட்ட ஒருவரின் பெயரில் அல்லவா இருக்கிறது” என்று சொன்னதும் “நன்றி” என்று கூறி விட்டு வெளியே வந்தேன்.
சர்மா(அல்லது சுந்தரமூர்த்தி) என்னோடு தொடர்பு கொண்ட இரு கைத்தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். “நீங்கள் தொடர்பு கொண்ட எண்ணுக்குத் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.சற்று நேரம் பொறுத்து மீண்டும் முயற்சிக்கவும்” என்ற பதிவு செய்யப்பட்ட குரல் எனக்கு வேறொரு நினைப்பை ஏற்படுத்தியது. “நீங்கள் தொடர்பு கொண்டவர் உஷாராகி விட்டார்.சற்று நேரம் பொறுத்து மீண்டும் வேறொருவரை (வேறொரு sim card மூலம்)  ஏமாற்ற முயற்சிக்கவும் என்று சர்மாவின் அல்லது சுந்தரமூர்த்தியின் உள்மனது எச்சரித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
பெரிதாகத் திருப்பம் எதுவும் இல்லாத மிகச் சாதாரணமான கதை தான்.ஆனாலும் எனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவம்.நேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.அதோடு இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் காரணம் நீங்களும் உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவதற்குத் தான்.அரசாங்க வேலை  என்றால் pension என்ற மந்திரச் சொல் காரணமாக பொதுவாக எல்லோருக்குமே ஒரு மயக்கம் இருப்பது அறிந்த விடயம் தானே. மேலும் புலன் விசாரணையில் இறங்குவதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு சர்மாவின் கைத்தொலைபேசி எண்களையும் அவர் எனக்குத் தந்த Seylan வங்கி இலக்கத்தையும் தருகிறேன்.
Airtel எண்             : 0758175526
Etisalat எண்           : 0723363843
Seylan வங்கி இலக்கம்  :058032551154-101
 
 
 யாரது,மிஸ்டர் சர்மாவா?ஆ....என்ன, எனக்கு அரசாங்க வேலையா?அதுவும் நாளைக்கேவா?”         
 யாரது,மிஸ்டர் சர்மாவா?ஆ....என்ன, எனக்கு அரசாங்க வேலையா?அதுவும் நாளைக்கேவா?”         
 யாரது,மிஸ்டர் சர்மாவா?ஆ....என்ன, எனக்கு அரசாங்க வேலையா?அதுவும் நாளைக்கேவா?”         
 யாரது,மிஸ்டர் சர்மாவா?ஆ....என்ன, எனக்கு அரசாங்க வேலையா?அதுவும் நாளைக்கேவா?”         




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக