செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அட்வகேட் வீதியின் அவலம்

                                          அட்வகேட் வீதியின் அவலம்

வல்வெட்டித்துறை காங்கேசன்துறை பிரதான வீதிப் பக்கமிருந்து  அட்வகேட் வீதியின் தோற்றம்
அடடா,இந்த ஒழுங்கையைக் குறுக்கறுத்து ஒரு சிற்றாறு பாய்கிறதே என்று யோசிக்கிறீர்களா?அல்லது மொஹெஞ்சாதாரோ,ஹரப்பா போல் பாதைகளோடு கூடிய நீர்ப்பாசனத் திட்டங்கள் உண்டாக்கப்பட்டுள்ள மிகவும் முன்னேற்றமான இடம் என்று நினைக்கிறீர்களா?இரண்டுமே இல்லை.வல்வெட்டித்துறைக் காவல் நிலையத்தின் பின் பக்கத்தில் கழிவு நீர் ஓடும் வாய்க்கால் தான் இது.
அட்வகேட் வீதி எங்கே இருக்கிறது என்று சிலர் யோசிக்கக் கூடும்.பேச்சு வழக்கில் இது அட்வகேட் வீதி என்று அழைக்கப்பட்டாலும்  இதன் உண்மையான பெயர் வைகுண்டப்பிள்ளையார் வீதி.சிலர் இதனைச் சடையாண்டி கோயில் வீதி என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு.இந்த வீதியானது தீருவில் வீதியின் குறுக்கே ஆரம்பமாகி(ஆரம்பமாகும் இடத்தில் அவ்வளவாகப் பிரபல்யம் இல்லாத வைகுண்டப்பிள்ளையார் ஆலயம் உள்ளது),சிவபுர வீதியையும்,(இந்த இடத்தில் தான் இந்திய இராணுவத்தின் வல்வைப் படுகொலைக்கான முதல் அத்தியாயம் எழுதப்பட்டது-ரோந்து போன இந்திய இராணுவத்தினரில் கடைசியாகப் போன படை வீரர் ஒருவர் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரால் சிவபுர வீதியும் வைகுண்டப்பிள்ளையார்  வீதியும் சந்திக்கும் இடத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தான் இந்திய இராணுவம் ருத்திர தாண்டவமாடி பொது மக்களைப் படுகொலை செய்தன என்பது ஒரு உதிரியான தகவல்.)சடையாண்டி கோயில் வீதியையும் குறுக்கறுத்து வல்வெட்டித்துறை மீன் சந்தை வீதிக்கு முன்னாலுள்ள வல்வெட்டித்துறை காங்கேசன்துறை பிரதான வீதியில் முடிவடைகின்றது.
சடையாண்டி கோயில் வீதிப் பக்கமிருந்து  வீதிப் பக்கமிருந்து  அட்வகேட் வீதியின் தோற்றம்
வல்வெட்டித்துறையில் வளைவுகளும் நெளிவுகளுமாக  சில வீதிகளை சில குறுக்கொழுங்கைகள் இணைத்தாலும் கூட மூன்று முக்கியமான வீதிகளை குறுக்கே நேராக இணைக்கும் ஒரே ஒரு ஒழுங்கை இது தான் என்று நினைக்கிறேன்.இப்படிப்பட்ட ஒரு பெருமை மிக்க ஒழுங்கை இன்று பொலிவிழந்து இருப்பதன் முக்கியமான காரணம் இந்தக் கழிவு வாய்க்கால் தான். இதனூடாக துவிச்சக்கர வண்டியால் போனால் இந்த இடத்தில் இறங்கி காவல்துறைக் கழிவு வாய்க்காலுக்கு மரியாதை செய்து தான் போக வேண்டும். 
முன்பு, அதாவது இராணுவமும் காவல் துறையினரும் 1996 இல்  வல்வெட்டித்துறைச் சந்தியைச் சுற்றி நிலை கொள்ள முன்னர் சன நடமாட்டமிக்க பகுதியாக இருந்தாலும் அதன் பின்னர் காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள ஒழுங்கைகள் எல்லாம் அடைக்கப்பட்டு(அழுக்கடவை வீதியில் பொதுக் கழிப்பிடத்திற்கு சற்று அப்பாலிருந்தும்,சடையாண்டி கோயில் ஒழுங்கை முழுவதுமாகவும்,சிவபுர வீதியிலிருந்து வல்வெட்டித்துறை காங்கேசன்துறை பிரதான வீதி வரையுமான பகுதியும்)முழுக்க முழுக்க காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிலேயே 14 வருடங்களுக்கு மேல் இருந்து 2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே பொது மக்களின் பாவனைக்கு விடப்பட்டது.
இந்த ஒழுங்கையில் குடியிருப்புக்கள் இல்லாததாலும்,போக்குவரத்துக்காக இந்த ஒழுங்கை  பெரும்பாலான மக்களால் பாவிக்கப்படாததாலும் தான்  காவல் நிலையத்தினரும்,வல்வை நகர சபையினரும்  இந்த சுகாதாரச் சீர்கேட்டையும்,போக்குவரத்து இடைஞ்சலையும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை போலும்.ஆனாலும் இதனைச் சீர் செய்தால் இதனூடான போக்குவரத்து அதிகரிக்கும் என்று நினைத்தால் என்ன?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக