செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

நண்பனின் பிரிவு

                                                   நண்பனின் பிரிவு

அன்பின் நண்பன் சுரேஷ்,
இது நான் உனக்கு வரையும் முதலாவதும் கடைசியுமான மடல்.ஆனாலும் இதைப் படிக்க, நீ இப்போது எங்களோடு இல்லை.திரும்பி வர முடியாத இடத்திற்குப் போய் விட்ட உனக்கு நான் ஏன் மடல் வரைகிறேன் என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.
உனது சிரிப்பையும் கலகலப்பான கதைகளையும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் இனி மேல் காண முடியாது என்ற உண்மையை மூளை ஏற்றுக் கொண்டாலும் இதயம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.ஆனாலும் இதயத்தில் ஏற்பட்டுள்ள வலி இது தவிர்க்க முடியாத உண்மை என்று வலியுறுத்துகிறது.மறைவு என்பது மனிதனால் தவிர்க்கப்படக் கூடியதல்ல.மனதளவில் தெரிந்த உண்மை தான்.ஆனாலும் உன் விடயத்தில் இவ்வுண்மையை ஜீரணிக்க முடியவில்லை.
    உனக்குத் தெரிந்தவர்கள்,நண்பர்கள்,சக பணியாளர்கள் எல்லோரது கஷ்டங்களைத் தீர்க்கவும் முன்னின்று தோளோடு தோள் நின்று நேரக் காலம் பார்க்காமல் உதவி செய்வாய்.அவையெல்லாம் நீ மனமறிந்து செய்த உதவிகள்.பிறருக்குதவும் உன் பிறவிக்குணம் உன் மறைவின் போதும் உன்னையறியாமல் வெளிப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சு நெகிழ்கிறது.பாவிகள் உன்னை துப்பாக்கியால் சல்லடை போட்ட பொது ஏற்பட்ட சத்தம் ,ஏனைய பணியாளர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உதவியிருக்கிறது.”உயிர் காப்பான் தோழன்” என்பதை உன் உயிர் கொடுத்து உண்மையாக்கியிருக்கிறாய்.
          “உதயனே என்னுயிர்” என்று நீ அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.ஆனால் அப்போதெல்லாம் நீ உதயனுக்காக  உயிரையே கொடுப்பாய் என்று சற்றேனும் நினைத்திருக்கவில்லை.
       எனது அலுவலக விடயங்கள் காரணமாக உன்னைச் சில நாட்கள் மறந்திருந்தால் அல்லது பார்க்காதிருந்தால் என்னைத் தேடி வருவாய் “என்ன பார்க்கவே முடிவதில்லை இப்போதெல்லாம்” என்றவாறே.இனி அவ்வாறு என்னைத் தேடி வரப் போவதில்லை என்று நினைக்கும் போது  இதயத்தின் ஆழம் வரை வலி சென்று தாக்குகிறது.
      லீவு எடுப்பதற்கு ஒரு காரணம் கிடைக்காதா என்று நாங்களிருக்க,தேடி வந்த லீவுகளையே ஒதுக்கி வைத்து விட்டு,வேலைக்கு வந்து நிற்கும் உன்னைப் பார்க்க எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்திருக்கிறது. நீ ஓரிடத்தில் சற்று நேரம் தரித்திருந்து நான் பார்த்ததில்லை.உனது வேலையும் அப்படி.இறுதிக் கிரியைகளுக்காக உன்னை  இரண்டு  நாட்கள் வைத்திருந்தார்கள்.அன்று தான் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஓய்வெடுத்துக் கொண்டாய்.அந்த இரண்டு நாட்களும் மூச்சு விடாமல் ஓரிடத்திலேயே அமைதியாக நீ துயின்றதைப் பார்த்த போது ஏற்படும் வேதனையை விபரிக்க முடியவில்லை.
          உன்னை,சக பணியாளர்களிடம் வேலை வாங்கும்,உன் ஆளுமையை,மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னிற்கும் உன் குணத்தை,உன் கலகலப்பான பேச்சுக்களை நான் எவ்வளவு நேசித்தேன் என்று உன்னிடம் சொல்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.பொதுவாக நண்பர்களுக்குள்  அப்படி ஒரு பழக்கம் இல்லை.ஆனாலும் உன்னைச் சந்தோஷப்பட வைத்த சில குணங்கள் என்னிடமும் இருந்தன என்று மற்றவர்கள் மூலம் அறிந்த போது  பெருமையாக இருந்திருக்கிறது.நான் வசித்த ஊரில் ,நான் படித்த பாடசாலையில் எனக்குக் கிடைத்த உற்ற நண்பர்கள் எல்லாம் நாட்டுப் பிரச்சனை காரணமாக நாடு விட்டு நாடு சென்றிருக்க எனக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்வதற்கு நீ மட்டும் தான் இருந்ததாலோ என்னவோ உன்னை அதிகமாக நேசித்தேன்.  
      கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின்பு  சிறிது வித்தியாசத்துடன் உன்னை மீண்டும் பார்த்தேன் மைனா படத்தில் நேர்மையான, இரக்கமுள்ள காவல் அதிகாரியாக.நேர்மையும் இரக்கமும் சரி தான்.ஆனாலும் உனது கலகலப்பு அவரிடம் இல்லையென்றாலும் கூட தோற்றத்தில் என்ன ஒரு ஒற்றுமை.அந்தப் பாத்திரத்தில் உன்னை நினைத்தவாறே மனம் நெகிழ,கண்கள் கலங்க மைனா படத்தைப் பார்த்தேன்.அவுஸ்திரேலியாவில் உன் மனைவி சுவேந்தினியும் உன் பிள்ளைகள் அல்ரினும் சேஷாவும் கூட அந்தப் படத்தைப் கண்கள் கலங்கப் பார்த்திருப்பார்கள்.    
    உன் பிரிவு என்னை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்........மறு பிறவி உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது.ஆனால் அப்படி ஒன்றிருந்தால் அடுத்த பிறவியில் நாமிருவரும் ஏதாவதொரு விதத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும்;பழைய பிறவி ஞாபகம் வர வேண்டும் என்று முட்டாள்தனமாக ஏங்கும் அளவுக்கு......     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக